கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 10, 2023
பார்வையிட்டோர்: 2,678 
 
 

வீட்டில் தனது அறையில் படுக்கையறை மீது தனிமையில் அமர்ந்து தேம்பித்தேம்பி அழுதாள் சிறுமி அபி. ‘தனக்கு ஒரு தங்கச்சியோ, தம்பியோ இருந்திருந்தால் அவர்களுடன் விளையாடியிருக்கலாம்’ என கவலை கொண்டாள். அவள் கண் முன் பல விளையுயர்ந்த திண் பண்டங்களும், சுவை மிகுந்த உணவும், விளையாட்டுப்பொருட்களும் வைக்கப்பட்டிருந்தும், ஏஸி அறையில் உடல் குளிர்ந்தாலும் மனம் புழுக்கமாக இருந்தது.

‘பக்கத்து வீட்டுக்குழந்தைகளுடன் கூட விளையாட முடியாத அளவுக்கு பயம் கொண்ட அம்மாவின் பாதுகாப்பு கட்டுப்பாடுகள். தவிர அப்பாவின் எச்சரிக்கை.

அப்பா ஒவ்வொரு நாள் போனில் அழைத்து அம்மாவிடம் பேசும் போதும் ‘பொண்ண வெளில விட்டிடாதே’ என்பார். 

‘அம்மாவாவது வேலைக்குப்போகாமல் வீட்டில் இருந்தால் மடியில் படுத்து தூங்கலாம். அம்மா பார்வையிலேயே வெளியில் விளையாடலாம். அப்பா வெளிநாட்டில் வேலை பார்க்காமல் உள்ளூரில் வேலை பார்த்திருந்தால் அவருடனாவது பைக்கில் ஊரைச்சுற்றிப்பார்க்கலாம். பாட்டியோ, தாத்தாவோ, அத்தையோ, சித்தியோ யாருமில்லாமல் அம்மா அனைவரிடமும் சண்டை போட்டு விட்டு தன்னை விடுமுறையில் கூட வீட்டில் தனியாக வைத்து பூட்டி விட்டுப்போவதால் தொலைக்காட்சியே கதியென, செல்போனே மதியென மனம் இறுகுவதை பத்து வயது சிறுமியானாலும் அபியால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு நாள் விடுமுறையன்று அம்மா வீட்டிலிருந்த போது கெஞ்சி, அழுது ஆர்ப்பாட்டம் செய்ததால் பக்கத்து வீட்டு நவியுடன் விளையாட அனுமதித்தாள்.

“இத பாரு வீட்டுக்கு முன்னாடி தான் விளையாடனம். அவங்க வீட்டுக்கு நீ போக வேண்டாம். நம்ம வீட்டுக்கு நவியை வரச்சொல்லி விளையாடு” என குழந்தையை வாசலில் விளையாட அனுப்பி விட்டு செல்போனில் யாருடனோ பேசச்சென்று விட்ட அம்மாவை கவனித்த சிறுமி அபி பக்கத்து வீட்டான நவியின் வீட்டிற்குள் நுழைந்த போது அவளது தாய் “ஆத்தா மகராசி. நீயெல்லாம் எங்க வீட்டுக்குள்ள வரக்கூடாது. ஏன்னா உன்னோட அம்மாவுக்கு பிடிக்காது” என சொன்ன போது அழுதே விட்டாள் அபி.

அப்போது சிறுமி நவி அருகில் வந்து ” நாங்க இன்னைக்கு எங்க மாமா வீட்டுக்கு போறோம். என்னோட மாமா பையன் கெவினோட பர்த்டே பார்ட்டி ஒரு ஹோட்டல்ல நடக்குது” என கூறியதும் தன் வீட்டிற்குள் வந்தவள் தனது அறைக்குச்சென்று மனச்சோர்வில் படுத்துக்கொண்டாள். அம்மாவோ போனில் சிரித்து, சிரித்து மகிழ்ச்சியாக பேசிக்கொண்டிருந்தாள். திடீரென ஆவேசமாகி சண்டையும் போட்டு கண்ணீரும் விட்டாள். வெளி நாட்டிலிருக்கும் அப்பாவுடன் தான் அம்மா பேசுவதாக புரிந்தது.

திடீரென ஒரு முடிவுக்கு வந்தவளாய் தன் பிறந்த நாளின் போது அப்பா முன்பு கொடுத்திருந்த பணத்தை எடுத்துக்கொண்டு பேருந்து நிலையம் சென்று மாமா வீட்டை மனதில் எண்ணியவளாய் பேருந்தில் ஏறிக்கொண்டாள். உட்கார இடமில்லாததால் வயதான மூதாட்டி சிறுமியை அழைத்து தன் மடியில் அமரவைத்த‌போது இனம்புரியாத சுகம், மகிழ்ச்சி ஏற்படவே வெளியே வேடிக்கை பார்த்தவாறு பயணித்தாள். உலகமே வித்தியாசமாகத்தெரிந்தது.

“முன்னாடியெல்லாம் தனியா பஸ்ல போறதுக்கு வயசுக்கு வந்த பொண்ணுகளே பயப்படுவாங்க. இப்பெல்லாம் காலம் மாறிப்போச்சு. சின்ன வயசுலயே வெவரம் அதிகாமாயி பத்து வயசுக்கொழந்தீகளே பஸ்ல தனியா ஊருக்கு போகுதுக” என சக பயணிகள் பேசிக்கொண்டனர்.

மறு பேருந்து நிலையத்தில் இறங்கிய பின் தான் மாமா வீடு செல்லும் வழியை குழந்தையாக இருந்த போது வந்து சென்றதில் மறந்து போனது நினைவுக்கு வர பதட்டமடைந்தாள். பசி வயிற்றைக்கிள்ளியது. அருகே இருந்த கடைக்குள் சென்று நெய் ரோஸ்ட் சொல்லி வாங்கி சாப்பிட்ட போது தன்னையறியாமல் பயத்தால் உடல் நடுங்க கண்களில் கண்ணீர் பெருகியது. கண்களை பாவாடைத்துணியால் துடைத்துக்கொண்டவள் வெளியேறி பேருந்து நிலையத்தில் பயணிகள் இருக்கையில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்தவள் தன்னையறியாமலேயே படுத்தவாறு உறங்கிப்போனாள்.

மகளைக்காணாமல் பதட்டமடைந்த தாய் மகி பக்கத்தில் ஒவ்வொரு வீடாகப்போய் தேடியவள் எங்கும் மகள் இல்லாததால் பேசி இரண்டு வருடமான நிலையில் பகையை மறந்து தன் பெற்றோருக்கு போன் போட்டாள். அவர்களும் பெண் பாசத்தை கட்டுப்படுத்தி வைத்திருந்ததை பகையை விலக்கி, கோபத்தை மறந்து அன்பு தாகம் அதிகரிக்க அழுது தீர்த்து விட்டு அங்கேயும் தேட உறவுகளை அழைத்தனர்.

இந்த நிலையில் இரவு மணி பத்தாகிவிட பேருந்து நிலையத்தில் தூக்கம் முடித்து எழுந்து யாருமற்ற நிலையில் “ஓ” என அழத்தொடங்கி விட்டாள் அபி. கடைசியாக கடையை மூடிய பழக்கடைக்காரர் அருகில் வந்து விசாரிக்க, அழுதவள் தாயின் செல் போன் எண்களைச்சொல்ல மறுத்து விட்டாள்.

சொன்னால் அம்மா வந்து அடித்து விடுவாள் எனும் பயம் அவளைச்சொல்ல விடாமல் தடுத்தது.

சிறுமியை பாதுகாப்பு கருதி தன் வீட்டிற்க்கே அழைத்துச்சென்று சாப்பிட வைத்து தன் குழந்தைகளுடன் உறங்க வைத்தார் கடைக்காரர்.

காலையில் எழுந்ததும் தனது நண்பரான காவலருக்கு போன் செய்து வரவழைத்தார்.

காவலரும் ” ஸ்டேசனுக்கு கூட்டிட்டு போனா குழந்தை பயப்படுவாள். இங்கேயே பத்திரமா இருக்கட்டும். ஏதாவது புகார் வந்தா நானே வந்து கூட்டிட்டு போயிடறேன்” எனக்கூறிச்சென்றார்.

பழக்கடைக்காரரின் வீட்டிலிருந்த அவள் வயதொத்த இரண்டு சிறுமிகளைப் பிடித்துப் போகவே அவர்களுடன் இணக்கமாகி தன்னையே மறந்து விளையாடினாள். அங்கிருந்த நாய், பூனை, ஆட்டுக்குட்டி என அனைத்தோடும் பழகியதில் பால் மனம் பரவசமானது. 

“ஒரே பொண்ணு நல்லா இருக்கோனும்னு நானும் அவரும் ஒழைச்சு சம்பாறிச்சு ஒரு வீட்டுக்கு நாலு வீடு கடனில்லாம கட்டி வெச்சிருக்கறோமே…இதெல்லாம் அவ ஒருத்திக்குத்தானே… அவரும் நாடு விட்டு நாடு போயி கைநெறையா சம்பாதிச்சு பணம் அனுப்பறதுனால பணக்காரங்க படிக்கிற ஸ்கூல்ல படிக்கவெச்சனே… நானும் வேலைக்குப்போயி கஷ்டப்பட்டு அவ இஷ்டப்பட்டதெல்லாம் வாங்கிக்கொடுத்தனே… நான் ஒரு கொறையும் வைக்கலியே… இப்படி என்னை தவிக்க உட்டுட்டு காணாமப்போயிட்டாளே… ” என ஒப்பாரி வைத்தவாறு அழுத மகியை உறவினர்களும், நண்பர்களும் தேற்றினர்.

அபியின் தந்தைக்கு தகவல் கூற வேண்டாமெனவும், காவல் துறைக்கும் போக வேண்டாமெனவும், வெளியில் தெரிந்தால் பெயர் கெட்டு விடும் எனவும் அபியின் தாய் மகி கூறியும் கணவரின் நண்பர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இச்செய்தியை வெளியிட, அதைப்பார்த்த தந்தை பதற்றத்துடன் வெளிநாட்டிலிருந்து அழைத்ததோடு காவல் துறையிடம் புகார் செய்யச்சொல்லி வற்புறுத்திய பின்பே புகார் செய்ய, பத்திரிக்கை, தொலைக்காட்சி என செய்தி காட்டுத்தீ போல பரவியது.

புகார் அடிப்படையில் காவலர் பழக்கடைக்காரர் வீட்டிலிருந்த அபியை அழைக்க வர, அவள் பிடிவாதமாக வர மறுத்து தான் இந்த வீட்டிலிருந்தே பள்ளிக்குச் செல்வதாகக்கூறிய போது காவலரும் அந்த வீட்டிலிருந்தோரும், அக்கம் பக்கத்தினரும் குழந்தையின் முடிவைக்கேட்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர் தனக்காக எத்தனை சொத்துக்கள் வாங்கியுள்ளார்கள், எவ்வளவு பணம் சேர்த்துள்ளார்கள், எனும் நிலை மகிழ்ச்சியைத்தருவதில்லை என்பது பல பெற்றோர்களுக்கு புரியாமல் குழந்தைகளை தனியாக வீட்டில் அடைத்து வைத்து வளர்த்தும் நிலையானது பால் மனதை பாதிக்கச்செய்து விடுகிறது என்பது புரிவதில்லை. 

அபிக்கும் பள்ளி என்றால் கல்வி, வீடென்றால் தனிமை என கட்டுப்பாடுகள் கட்டிப்போட அணையில் தேக்கிவைத்த நீர் அணையுடைத்த வெள்ளமாக பெருக்கெடுப்பது போல் ஏக்கம் இப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்தியதின் விளைவாக எங்காவது போகலாம் எனும் யோசனையில் உதித்த மாற்று வழி தான் மாமன் வீடு. 

ஐந்து வயது வரை தாயின் பெற்றோரின் அரவணைப்பில் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்த நிலை நினைவில் வரவே இந்த முடிவை அவளது பால் மனம் எடுத்துள்ளது.

காவலர்கள் மூலமாக மகி பழக்கடைக்காரர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்ட போது தாயைப்பார்த்ததும் புலியைக்கண்ட புள்ளிமானாய் வீட்டிற்குள் சென்று கதவைச்சாத்தியது மகி உள்பட அங்கிருந்த அனைவரையும் அச்சத்தின் உச்சத்துக்கே செல்ல வைத்தது. பின் தாயின் பெற்றோர் சென்று சமாதானம் செய்து அன்பாகப்பேசிட அவர்களுடன் செல்லச்சம்மதித்தாள் அபி.

இன்ஸ்பெக்டர் சந்திரமதி மகியை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று அமரவைத்து பேசினார்.

“குழந்தைகளைப்பெத்து படிக்க வைக்கிறதும், சொத்து சேர்த்து வைக்கிறதும் மட்டுமே முக்கியமா நினைக்கிறீங்க. பண வளத்தை விட மன வளம் ரொம்பவும் முக்கியம். உறவுகளும், நட்புகளும் நம்ம மன வளத்துக்கு உதவறவங்க. உங்களப்பத்தி அக்கம் பக்கமெல்லாம் விசாரிக்கச் சொன்னேன். யாரோடையுமே நீங்களும் பேசிக்கிறதில்லைன்னு சொன்னாங்க. முதல்ல பெற்றோர் நல்ல மன வளத்தோட இருந்ததாத்தான் குழந்தைகளும் மகிழ்ச்சியா மன வளத்தோட வளருவாங்க. பணம், சொத்து தேவைதான். அது மட்டுமே வாழ்க்கையில்லை. பணத்த நேசித்த நீங்க குழந்தையோட மனச நேசிக்க மறந்ததோட விளைவு தான் இந்த நிலைக்கு காரணம்.

தாயைப்பார்த்ததும் ஓடிவந்து கட்டியணைக்கிற மனநிலைல குழந்தைகளை பார்த்திருக்கறோமே தவிர இப்படி பயந்து ஓடி ஒளிந்து கொண்டு கதவைச்சாத்திக்கிற குழந்தையை நான் இன்னைக்குத்தான் முதலாப்பார்க்கிறேன். தயவு செய்து உங்களை நீங்க மாத்திக்கங்க. இல்லேன்னா அவ பெரியவளானதுக்கப்புறம் அவளை நீங்க முழுசா இழந்திடுவீங்க” என்ற அறிவுரையைக்கேட்டு வீடு சென்ற மகி முதல் வேலையாக தனது வேலையை ராஜினாமா செய்தாள்.

தான் யாருடைய வீட்டிற்கும் செல்லாமலிருந்தும் அக்கம்பக்கத்தினர் அனைவரும் வேறு வீட்டுக்குழந்தை என நினைக்காமல், தங்கள் குழந்தை காணாமல் போன மனநிலையில் அந்த நகரே சோகத்தில் மூழ்க்கியதைக்கண்டு இப்படிப்பட்ட மனிதர்களின் நட்பைப்பெறத்தவறிய தன்னை ஒரு‌ முட்டாளாக எண்ணி வேதனைப்பட்டாள். 

சொத்து பிரச்சினைக்காக தாய் வீட்டினரை பகைத்திருந்தும் உறவுகள் அனைவரும் வந்து தன் குழந்தையைத்தேட முயன்றதும், அபி வந்தவுடன் அவளுடன் கொஞ்சி மகிழ்வதும் கண்டு இவ்வளவு ஆதரவுடனான அன்பின் வெளிப்பாடுகளைக்கண்டு இதுவரை இப்படிப்பட்ட அன்பு, பாசத்தை இழந்ததை எண்ணி வருந்தினாள். இனிமேல் யார் மீதும் வெறுப்பு காட்டக்கூடாது எனும் மனநிலைக்கு மாறியவளாய் வெளிநாட்டிலிருக்கும் கணவனுக்கு போன் பண்ணிக்கொடுக்க அபி தன் தந்தையிடம்”அப்பா நீங்க இங்கயே வந்து வீட்டிலிருந்து வேலைக்குப்போங்க. உங்க கிட்ட நான் வேற எதுவும் கேட்க மாட்டேன்” என சொன்னதைக்கேட்ட மகி, மகள் அபியின் மனக்காயத்துக்கு மருந்து போடுவது போல் என்றுமில்லாத அளவிற்கு பாசம் பொங்க முத்தமிட்டு, அணைத்து, தானும் மகிழ்ந்து மகளையும் மகிழ்வித்து ஆனந்தம் கொண்டாள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *