(1970ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அவனுக்கு அந்த நோய் எப்படி வந்தது என்பது அவனுக்கே புரியவில்லை. அப்புறம் அல்லவா மற்றவர்களைப் பற்றிச் சொல்லவேண்டும்!
கைலாசத்துக்கு அப்படி ஒரு விசித்திர வியாதி எவ்வாறு வந்து சேர்ந்தது என்பது கடைசி வரை மற்றவர்களுக்கு விளங்கவில்லை.
அவன் நல்லவனாய், சாதுவாய், தான் உண்டு- தனது வேலை உண்டு என்று ஒதுங்கிப் பிழைப்பவனாய் வாழ்ந்து வந்தான். முறை தவறிய காரியங்கள் எதையும் செய்யத் துணியாதவன். தன்னை மறப்பதற்காகவோ, தன்னிலிருந்து தான் வேறாகி விடுதலைப் பெருவெளியிலே இன்பச் சிறகு விரித்து நீந்திச் சுகானுபவம் பெற வேண்டும் என்ற ற எண்ணத்துடனோ அவன் போதைப் பொருள்களின் துணையை நாடியது இல்லை: நாடக்கூடியவனும் இல்லை.
ஆனால், முதலில் அந்த நிலையில் அவனைப் பார்த்தவர் கள், ‘ஏது, பையன் தண்ணி கிண்ணி போட்டிருப்பானோ? என்றும், மயக்கம் தருவன கஞ்சா கோலி அபினி! இதுகளில் ஒன்றைக் கைலாசம் உள்ளே தள்ளியிருப்பானோ?’ என்றும், இன்னும் தங்கள் மனம் போன போக்கிலும் பேச்சுகளை உதிர்த்தார்கள்.
அவ்வாறு பலரது மனசையும் அரிக்கும்படி சந்தேகக் கறையான்களைக் கிளறி விடக்கூடிய நிலையில்தான் இருந்தது அவன் நடவடிக்கை.
அப்போது அந்தி வேளை, ஒளியும் இருளும் கலந்து முயங்கிக்கிடந்தது. கைலாசத்தைப் பார்க்க இரண்டு நண்பர் கள் அவன் அறைக்கு வந்தார்கள்.
அவன் தரையில் எதையோ பரப்பி, இழுத்து, மேலும் இழுத்து இழுத்துப் பரப்பும் முயற்சியில் ஈடுபட்டிருந்தான்.
அவர்கள் தரையையும் அவனையும் பார்த்துவிட்டு, உடனடியாக ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள்.
‘கைலாசம், என்னவே செய்கிறே?’ என்று ஒருவன் குரல் கொடுத்தான்.
அவர்கள் அறைக்குள் வந்ததும், அவனுக்குத் தெரியாததுபோலவே தோன்றியது.
‘சனியன் இந்தச் சமுக்காளத்தைப் பாரேன்; திடீர்னு இது ஏன் கட்டையாப் போச்சு? இல்லே, திடீர்னு நான் எப்படி நெட்டையா வளர்ந்தேன்? நேற்று வரை எனக்குச் சரியாக அளவாகத் தானே இருந்தது? இப்போ இதிலே படுத்தா, என் தலையும் காலும் தரையிலே படுதே!’ என்று முணுமுணுத்தான் கைலாசம்.
அவர்களுக்கு அதை நிரூபிக்க முயல்பவன்போல் படுத் தான். காலையும் தலையையும் தரையில் இடித்துக்கொண்டான்.
நண்பர்கள் திகைப்புடன் பரஸ்பரம் நோக்கினர் அங்கே தரைதான் இருந்தது. விரிப்பு எதுவும் இல்லை. கைலாசம் வெறும் தரையைத்தான் சமுக்காளம் எனக் கருதி யும், அது தனது நீளத்துக்குப் பற்றாமல் தீடீர் மாற்றம் பெற்றுவிட்டது என நம்பியும் செயல்புரிந்துகொண்டிருந் தான்.
‘என்ன கைலாசம் இது? இங்கே துணியோ விரிப்போ இல்லையே? நீ வந்து’. என்று இரண்டாவது நண்பன் பேசினான்.
கைலாசம் அவனை ஒரு மாதிரி உற்று நோக்கினான். அது இயல்பான பார்வை அல்ல. ஏதோ மயக்கவெறியில் இருப்பவனின் குறிப்பற்ற நோக்கு.
‘இல்லையா? சமுக்காளம் இல்லையா? தீடீர்னு எங்கே போயிட்டுது அது?…’
அவன் முழங்கால்களிலும் கைகளிலும் நாய் மாதிரி நின்றும் நகர்ந்தும், மோப்பம் பிடிப்பதுபோல் ‘ஹம்ப் ஹும்ப்ப் என்று மூச்சிழுத்தும் மூச்சை உதறியும், அங்கும் இங்கும் அலைந்தான். பிறகு ஒரு இடத்தில் மவுனமாக உட்கார்ந்துவிட்டான்.
நண்பர்கள் கூப்பிட்டதற்குப் பதில் எதுவும் சொல்லவே இல்லை.
அவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை. என்ன செய்வது. என்றும் தெரியவில்லை. கதவை இழுத்துச் சாத்திவிட்டு, வந்ததுபோல் போய்விடலாமா என்றொரு நினைப்பு, ஐயோ பாவம் என்றொரு அனுதாப உணர்வு. இவனுக்கு என்ன வந்தது. திடீர்னு இப்படி? இதுக்கு என்ன செய்யலாம்? யாரிடம் கேட்கலாம்? இவ்விதமான குழப்பம் வேறு, காலைத் தேய்த்துக்கொண்டு நின்றார்கள்.
அவர்களுக்கு உதவிபுரியவே வந்தவர்போல் வீட்டுக்காரர் வாசுதேவ், ‘என்ன ஸார், உங்க ஃபிரண்டுக்கு என்ன ஆச்சு?’ என்று கேட்டபடி வந்தார்.
‘என்னன்னே தெரியலியே!’
‘பாட் அல்லது ஆஸிட் வேலை செய்யுதோ என்னமோ?
இது என்னவோ புரியாத பாஷையாக இருக்குதே என்று மற்ற இருவரும் முழித்தார்கள்.
வாசுதேவ் ரொம்ப முன்னேறியவர். அப்படிக் காட்டிக் கொள்ள ஆசைப்படுகிறவர். ஏகப்பட்ட புத்தகங்கள், அயல் நாட்டுப் பத்திரிகைகள் படிப்பதில் ஆர்வம் உடையவர். தனது படிப்புவலையில் வந்து சிக்குகிற மீன்கள், முத்துச் சிப்பி கள், கிளிஞ்சல்கள் அனைத்தையும் தாறுமாறாகச் சிதறிக் கொட்டுவதில் ஆனந்தம் கொள்பவர். தன் பேச்சு பிறர்க்குக் குழப்பம் விளைவித்தால் தனக்கு வெற்றிகிட்டிவிட்டதாக மகிழ்ந்துபோகும் சுபாவம் உடையவர்.
கைகளை உவகையோடு தேய்த்துக்கொண்டு சிரித்தார் அவர். ‘பாட் தெரியாது? பி-ஓ-டி. POT. மாரிஜுவானாவுக்கு மறு பெயர் அது. ஆஸிட் என்பது எல்-எஸ்-டி. LSD லைஸெர்ஜிக் ஆஸிட் டைதிலாமைட். இப்போ இளைஞர் உலக முற்போக்குவாதிகள், ஹிப்பிகள், ஹிப்பிகள், மண்ணகத்தில் விண்ணின்பம் பெற விட்டு விடுதலையாகி விண்வெளியிலே பறக்கும் சுகத்தை அனுபவிக்க-இதுகளைத்தான் உபயோகிக்கிறார்கள். அதை உபயோகித்தவர்கள் மாதிரியே நம்ம பிரதரும் நடந்துகொள்கிறார். அது தான் கேட்கிறேன்’ என்று உற்சாகமாகப் பேசினார்.
‘நம்ம கைலாசம் அதுமாதிரிச் சரக்குகள் பக்கத்திலேயே போகமாட்டானே! என்றான் நண்பர்களில் ஒருவனான சோமு.
இன்னொருவன் மூர்த்தி: ‘அப்படியே இருந்தாலும், இங்கே எல் எஸ் டி இவனுக்கு எங்கே கிடைக்கும்?” என்று இழுத்தான்.
வாசுதேவ் துப்பாக்கி மாதிரி வெடித்துச் சிரித்தார். ‘ஏன் கிடைக்காது? இதுவும் தான் பெரிய ஸிட்டி ஆக வளர்ந்துட்டுதே. நம்ம ஸிட்டியிலும் எல்லாம் கிடைக்கும். எத்தனையோ ஹிப்பிகள் வாறாங்க, போறாங்க. எவனையாவது புடிச்சு, டீயும் டிபனும் வாங்கித் தந்தால், அது கிடைச்சிட்டுப் போகுது’ என்றார்.
‘நம்ம கைலாசம் அந்த மாதிரி வழிக்கெல்லாம் போகக் கூடியவன் இல்லையே’ என்று சோமு சொன்னான்.
‘எந்தப் புத்திலே எந்தப் பாம்பு இருக்குமோ? ஒரே ரக வாழ்வு அலுத்துப் போயிருக்கலாம் பிரதருக்கு! லைஃப்லே புது எக்ஸ்பெரிமெண்ட் பண்ணிப் பார்க்கலாமேன்னு துணிஞ்சிருக்கலாம். மனுஷங்களைப்பற்றி திட்டவட்டமாக எதுவும் சொல்ல முடியாது. யாரு எந்த நேரத்திலே எப்படி நடந்துக்குவாங்க? எவன் இன்ன வேளையிலே என்ன செய்வான் அல்லது செய்யமாட்டான் இன்னு எதையுமே கட் அன்ட் ரைட்டா சொல்லிப்போட முடியாது…’
‘ஸார் ஸார், கைலாசத்தைப் பாருங்க’ என்று மூர்த்தி கத்தவும், மற்றிருவரும் அங்கே கண் திருப்பினார்கள்.
அவன் தரைமீது கிடந்து நெளிந்து வளைந்து குறுகி நீண்டு, ஏதோ வேதனையினால் துயருறுபவன் போல், உருண்டு கொண்டிருந்தான். கைகளை உடல் மீது தடவியும் தேய்த்தும் எதையோ அகற்றுபவன்போல் செயல்புரிந்தான்.
‘கைலாசம், உடம்புக்கு என்ன? உனக்கு என்ன செய்யுது? என்று சோமு பரிவுடன் விசாரித்தான்.
கைலாசம் அவனைக் குத்தும் பார்வையால் நோக்கி, சீறினான்; ‘பாம்பு மட்டும்தான் தோலுரித்துக் கொள்ளணுமோ? பாம்பு மட்டும்தான் சட்டையைக் கழற்றிவிட்டுப் புதுசாக இருக்கமுடியுமோ? நானும் என் பழைய தோலை அகற்றிவிட முயற்சி செய்கிறேன். புதுசா, இளமையா, மினு மினுப்பா மாறிவிடுவேன். பார்த்துக் கிட்டே நில்லு!’
மேலும் பேச விரும்பாதவனாய், அவன் தன் உடம்பைத் திருகி முறுக்கி நெளிந்து புரளலானான்.
சோமு பெருமூச்செறிந்தான்.
‘நல்லாயிருந்தானே, இவனுக்கு ஏன் இப்படி…’ என்று இழுத்தான் மூர்த்தி. ‘எப்போதிருந்து ஸார் இது மாதிரி?’ என்று வாசுதேவிடம் கேட்டான்.
‘எனக்கும் தெரியாது’ என்று சொன்ன அவர் விவரித்தார்-
‘இரண்டு நாளா பிரதர் ஆபீசுக்கும் போகலே. ரொம்ப நேரம் படுத்தே தான் கிடந்தாரு. உடம்புக்குச் சரியில் லேன்னு சொன்னாரு. இன்னிக்கு மத்தியானம் நான் ஒட்டலுக்குப் போகிறபோது இவருக்கும் காப்பி கீப்பி தேவைப்படுமா பார்க்கலாமேன்னு எட்டிப் பார்த்தேன். அவரு தானாகவே சிரிச்சுக்கிட்டிருந்தாரு. என்னய்யா ஹ்யூமர் ; எனக்கும் சொல்லுமேன், நானும் சிரிக்கிறேன்னு சொன்னேன். நான் லட்டு, தெரியுமா? லட்டாக்கும், குஞ்சாலாடுன்னு அவர் முணமுணக்கவும் எனக்கு விஷயம் புரியலே. என்ன உமக்கு லட்டு வேணுமா? ஜுரம்னு சொல்றீர், லட்டு தின்னலாமான்னேன். அப்போ பிரதர் ஒரு கூச்சல் போட்டாரு பாருங்க! ஹோய், டெரிபிள்! டே மண்டூ கங்களே, மடச் சாம்பிராணிகளே! ஏன், கவலை பிச்சுப் பிடுங்கும் மனுஷப் பயலுகளாக இருக்கிறீர்கள்? ஆப்பிளாய், ஆரஞ்சாய், மல்கோவாப் பழமாய், குஞ்சாலாடுகளாய், குட மிளகாய்களாய், முட்டகோஸாய், எதுவாகவும் மாறிவிடுங் கள். நீ என்ன நினைக்கிறாயோ அதுவே ஆகின்றாய். நான் லட்டு, இனிப்பான குஞ்சாலட்டு என்று நினைக்கிறேன். அதுவே ஆகின்றேன்னு பிரசங்க தோரணையில் கூச்சலிட்டார்.
‘லட்டாக இருக்கணுமின்னா இருந்துட்டுப் போமேன்; அதுக்கு ஏன் கத்துறீர்னேன். நீரு மட்டும் அந்த இந்திரா லட்டு மாதிரி இருக்கிறா; விஜயா ஆப்பிள்னா ஆப்பிள் தான்; வசந்தா சரியான டொமடோன்னில்லாம் சொல்லலாமோ? அவளுக மட்டும்தான் அப்படி இருக்கமுடியுமோ? நானும் லட்டு ஆகிவிட்டேன், குஞ்சாலட்டு என்று பிரதர் சொன்னார். சீரியஸாகத்தான் பேசினார். இது ஏதடா வம் பாப் போச்சுன்னு பதறினேன். பிரதருக்கு மைண்டு சரி யில்லே! ஸம் திங் ராங்னு என் மனம் சொல்லிச்சு. ஓய், லட்டுன்னா ஜாக்கிரதையாக இரும். யாராவது கடிச்சுத் தின்னுடப் போறாங்க. அல்லது எலி கிலி கடிச்சுப்போடும். அல்லது, உதிர்ந்து போகப் போறீர்னேன். சும்மா தமா ஷுக்குத்தான் சொன்னேன். உடனே பிரதர் அழ ஆரம்பிச் சிட்டார். ‘ஐயோ, இங்கே யாரோ புட்டுப்புட்டுத் தின்றாங் களே; இந்தப் பக்கம் எலி கடிக்குதே; ஐய்யய்யோ நான் உதிர்றேன், உதிர்ந்தே போறேனே’ன்னு பயந்து அலறி மூலைப் பக்கம் போயி ஒண்டிக்கிடவும்தான், சரி, கைலாசமாக இல்லை; அவருக்குள்ள ஸம்திங் புகுந்துக்கிட்டு அவரை பாடாய்ப் படுத்துதுன்னு எனக்குத் தோணிச்சு. நான் வெளியே போயிட்டேன். திரும்பி வந்த பிறகும், ஆளு அப்படியேதான் இருக்கார்ங்கிறது தெரிஞ்சுது..’
வாசுதேவ் விரிவாகவே பேசினார்.
‘ஏன் இப்படி ஆச்சு?’ என்று மற்றவர்கள் குழம்பினார்கள். ஒரு டாக்டரை அழைத்து வந்து காட்டினார்கள். ‘ஏதாவது ஷாக் ஏற்பட்டிருக்கலாம். மென்ட்டல் டிஸ்டர்பன்ஸ் ஏற்பட்டிருக்கும், எதுக்கும் தூக்க மருந்து கொடுக்கிறேன், ஒரு இன்ஜெக்ஷனும் போடுறேன்’ என்றார். அவ்விதமே செய்தார், போனார்.
அவன் கிறங்கிப்போய்க் கிடந்தான். மெது மெதுவாய்த் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவனைப்பற்றியே மற்றவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.
கைலாசம் உணர்ச்சிமயமானவன், உணர்ச்சிவசப்படுகிறவன். உணர்ச்சிகளால் அலைக்கழிக்கப்படுகிறவன். புற நிகழ்ச்சிகளால் எளிதில் பாதிக்கப்படுபவன். அக உளைச்சல் அதிகம் பெறுபவன், மன தைரியம் இல்லாதவன். வேதனை களை, துன்பதுயரங்களை, வறுமையை, வெறுமையைக் கண்டு கண்டு குமைந்தவன். சிறுமைகளை, சிதைவுகளை, சீரழிவுகளைப் பார்த்து, எண்ணி, உளைந்து, விரக்தி கொண்டவன். வாழ் வில் நம்பிக்கை இழந்தவன். சூழ்நிலையிலிருந்து, சுற்றிலும் உள்ள வெறுமை வறுமை வே தனைகளிலிருந்து, விடுபட்டு வெளியேறித் தப்பி ஓடவேண்டும் என்று ஆசை வளர்த்தவன், அவ்வாறு தப்பிப்போக வழியும் வகையும் அறியாது தவித் தவன்.
‘இப்படிப்பட்டவர்கள் தான் பாட்ஐயும் ஆஸிட்ஐயும் இதர ட்ரக் (drug)குகளையும் கைக்கொள்கிறார்கள்’ என்று வாசுதேவ் குறிப்பிட்டார். அவற்றைத் தேடிப்பெறும் திறமையும் உபயோகிக்கும் துணிச்சலும் இல்லாதவன் கைலாசம். அவனுக்கு வசதியாக அமைந்த- கை கொடுத்த நழுவல் மார்க்கம் கனவில் ஆழ்வது ஒன்றுதான். அவன் சுபாவங்களுக்குக் கனவுதல் ஒத்திருந்தது. அவன் மனசுக்கு அது ரொம்பவும் பிடித்திருந்தது.
அப்படி இருந்தால் நல்லாயிருக்கும்; இது நடந்தால் அழகாயிருக்கும்: இப்படி இப்படி நிகழ்ந்தால் ஜோராக இருக்குமே என்று தனித்திருந்து கனவினான். நண்பர்களோடு பேசும்போது கனவுகளாக உதறினான். விழிப்பு நிலையில், தூக்கத்தில், கனவுகளை வளர்த்து, ரசித்து, இன்புற்றான். தன்னை ஒரு ஹீரோவாக, தேவமகனாக, அற்புத வல்லமைகள் பெற்ற அதிமனிதனாக, அரக்கனாக, சித்துகள் புரிவதாகக் கனவுகள் ஆக்கிக் களித்தான். அலாவுதீனின் ‘ஜீனி’ அவனுக்குத் தோழனாய்க் கிடைத்து விட்டதாக – விக்கிரமாதித்தன் வேதாளம் ஏவலாளாக வந்து வாய்த்துவிட்டதாக – தேவ மகள் ஒருத்தி காதலியாக வந்துசேர்ந்ததாக – இனிய தேவதை தனக்கு நற்றுணையாக -வந்து குடிபுகுந்ததாக- இந்தவிதச் சுகமான கனவுகளை ஆக்கி, இனிய நிகழ்ச்சிகளை சித்திரித்து, தன்னுள் தான் சொக்கிக் கிடக்கும் போக்கும் அவனிடம் வளர்ந்து வந்தது. சில சமயம் அவையே நிஜம் போலும், எதிரே காண்பன நடப்பன எல்லாம் வெறும் மாயைகள்போலவும் அவன் எண்ணவும், சில சமயங்களில் நம்பி மயங்கவும் செய்தான்.
இம் மனநிலை நிலைபெற்றுவிடும்படி – மயக்குத் தோற்றத்தையும் நிஜங்களையும் பகுத்துப் பிரிக்கும் உணர்வுத் திறன் சேதமுற்றுப் போகும்படி ஏதோ ஒரு அதிர்ச்சி அவனை தாக்கியிருக்க வேண்டும்.
வாசுதேவின் இந்த விளக்கம் பொருத்தமாக இருப்ப தாகவே மற்றவர்களுக்கும் பட்டது.
மறுபடியும் வந்து பார்த்த டாக்டர், வாசுே தவனது விளக்கத்தைக் கேட்டு விட்டு பெருவிரலாலும் நடுவிரலினா லும் மோவாயை வருடியபடி நின்றார். தீவிர யோசனையில் இருப்பது போல் காட்டிக் கொண்டார். பிறகு நிதானமாகப் பேசினார்
‘இருக்கலாம். எல்லாம் எஸ்கேப்பிஸம் தான்.கனவு களில் வாழ முயல்வது, நீங்கள் குறிப்பிடுகிற போதைச் சரக்குகள் மூலம் அல்லது குடிவகைகள் முலம், தன்னையும் பிரத்தியட்ச உலகையும் அன்றாடத் தொல்லைகளையும் பிச்சுப்பிடுங்கல்களையும் விட்டுவிலகி நிற்க முயற்சிப் பதே எஸ்கேப்பிஸம் தான். வாழும் துணிச்சல் இல்லாத – உண்மைகளை எதிர்கொள்ளும் திராணி குன்றிப்போன- மனோதைரியத்தை இழந்துவிட்ட ஒரு போக்கு தான் இது எல்லாம். பைத்தியம் பிடித்து அலைவது கூட ஒரு வகை எஸ்கேப்பிஸம் தான். அது ஒருவன் தானாக விரும்பி ஏற்றுக் கொள்ளாததாக இருக்கலாம். ஆயினும், ஓர்ரீஸ் அன்ட் பிராப்ளம்ஸினால் திணறிக் குழம்புகிற மனசுக்கு இயற்கையே ஒரு போக்காகக் காட்டிவிடுகிற எஸ்கேப்பிஸம்தான் மென்ட் டல் அபொரேஷன்ஸ் என்று சொல்லவேண்டும். நம்ம யங் ஃபிரண்டுக்கு அப்படித்தான் என்று நினைக்கிறேன்.
அன்றாடச் சிக்கல்களால், நித்தியப் பிரச்சினைகளினால் திணறித் திண்டாடிய – வாட் இஸ் ஹிஸ் நேம்?- திஸ் யங் ஃபெல்லோ-ஓ எஸ், கைலாசம், அமைதியற்று, கனவுகளைப் பின்னியவாறு, சரியாகச் சாப்பிடாமல், நெடுக அலைந்திருக்க வேண்டும். சில தினங்களாக வெயில் கடுமை என்பதுதான் உங்களுக்குத் தெரியுமே. மென்ட்டலி அன்ட் பிஸிக்கலி வீக் ஆன நிலையிலே கடுமையான வெயிலில் திரிந்த இவரை வெயில் பாதிச்சிருக்கு. ஸன் ஸ்ட்ரோக் ஏற்பட்டிருக்க வேண்டியது. நல்ல காலம், தெருவிலே விழுந்து கிடக்கலே, வீட்டிலே வந்து கிறங்கிப் படுத்திட்டார். செத்தவன் மாதிரி சில மணி நேரம் கிடந்திருக்கணும். யாரும் கவனிச்சிருக்க மாட்டாங்க. பிறகு வெறும் காப்பி, மோருன்னு யாராரோ தந்ததைச் சாப்பிட்டிருக்கார். அப்பவே அவர் அவராக இல்லை. மென்ட்டல் ஸிஸ்டம் பாதிக்கப்பட்டு விட்டது. அவருடைய எஸ்கேப்பிஸ நினைவோட்டம் வலிமை உடைய தாகி விட்டது, இவரை மனநோய் மருத்துவ மனைக்கு அனுப்புவதுதான் நல்லது. அதுக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வோம்.
டாக்டர் போய்ச் சேர்ந்தார்.
அவரோ, வாசுதேவோ, நண்பர்களோ கைலாசத்தை மனநல மருத்துவத்துக்காக ஒரு ஸ்பெஷலிஸ்டிடம் அல்லது உரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்க வேண்டிய அவசியமே ஏற்படாமல் போய் விட்டது.
அவனுடைய எஸ்கேப்பிஸம் அவனுக்குத் துணைபுரிந்தது!
கைலாசம் எழுந்து நின்றான். ஒரு சிட்டுக்குருவி உல்லாச மாகத் திரிவதை, கத்திக்கொண்டு துள்ளித் துள்ளிப் பாய் வதை, ஜிவ்வெனப் பறப்பதை வேடிக்கையாகப் பார்த்தான்.
‘விட்டு விடுதலையாகு! சின்னஞ் சிறு சிட்டுக்குருவி போலே!’ என்று கத்தினான். ‘நான் குருவி. ஜாலியான சிட்டுக்குருவி என்று தவ்வித் தவ்வி, மாடிப்படிகளில் குதித்துக் குதித்து மேலே போனான். மொட்டை மாடிக்கே போய்விட்டான்.
அங்கே கைபிடிச்சுவர்மீது ஏறி நின்று கீழே பார்த்தான். வெயில் பளபளத்தது. உலகம் ஒளியில் குளித்தது. பக்கத்து வீட்டில் குளுகுளு என வளர்ந்து நின்ற பூச்செடிகளும் பிறவும் ஜில்லென மிளிர்ந்தன. எல்லாம் இனிமைகளாய், அற்புதங்களாய், அழகுத் துளிகளாய் அவனைத் தாக்கின, சிரித்தன.
‘நட்சத்திர ஜிகினாக்கள் சிமிட்டுகிற பச்சை மெத்தை! அதோ எனக்காக விரித்து வைத்திருக்கிறது. எனக்காகக் காத்திருக்கும் இன்பராணி அங்கே பதுங்கிக்கொண்டு கண்ணா மூச்சி விளையாடுகிறாள்’ என்று அவன் சந்தோஷ மாகச் சொன்னான்.
அவனைக் கண்காணித்தபடி பின்னாலேயே வந்த வாசுதேவ் புன்முறுவல் பூத்தார். அவர் வாய் திறப்பதற்குள், கை நீட்டி எட்டிப் பிடிப்பதற்குள், காரியம் நிகழ்ந்து விட்டது-
கைலாசம் கீழே குதித்து விட்டான். தரையில் அவன் மண்டை மோதி பலத்த காயம். மூக்கில் சரியான அடி. அவன் ஒரே அடியாக ‘நழுவி ஓடி’ விட்டான்.
‘ஐயோ பாவம்!’ சோகமூச்செறிந்து, கண்கலங்கி நின்றார் வாசுதேவ்.
– ‘சிவாஜி’, ஆண்டு மலர் 1970
– அருமையான துணை, முதற் பதிப்பு: நவம்பர் 1991, கிறுஸ்தவ இலக்கியச் சங்கம், சென்னை.