மனைமோகம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 14, 2020
பார்வையிட்டோர்: 5,830 
 
 

மென்வெய்யிலும், காற்றில் சீதளமும் மிதந்திருக்கும் அருமையான மாலை. வாங்கிவைத்திருக்கும் பூவிதைகளையும் பூக்கன்றுகளையும், வீட்டின் பின்கோடியிலமைந்த தோட்டத்தில், நடலாமாவென்று வர்ஷி யோசித்துக்கொண்டிருந்தாள். Bremen இல் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் அவர்கள் சொந்தமாக வாங்கியவீடு அது. யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த மல்லிக்கோப்பியில் ஒன்றைப் போட்டுக்குடித்துவிட்டு தோட்டத்துக்குப் போகலாமென்றிருக்கையில் தொலைபேசி அழைத்தது. அழைப்பு வந்த நேரம், இடத்தைவைத்தே அது அகிலாதான் என்று ஊகித்துக்கொண்டதும் வர்ஷிக்குச் சலிப்பாக இருந்தது, அது தொடர்ந்து அனுங்கி எரிச்சலூட்டவும், அலுத்துக்கொண்டுபோய் ஒலிவாங்கியைத் தூக்கினாள்.

‘ இவ்வளவு நேரமாய் அடிக்கவிட்டன்……… என்ன செய்துகொண்டிருந்தனி’ என்பாளாயின் அடுப்பில சமையல், இல்ல வாஷ்றூமில இருந்தன் ’ என்றேதாவது பொய்யைத் தயார் செய்யவேண்டும், “ இல்லையுங்கோ…… இப்போ யாருடனும் போன் பேசிற மூடில நான் இல்லை” என்றா சொல்ல முடியும்? சரி எம் ஐயனைச் சாட்சியாய் வைச்சுக்கொஞ்சம் பொய் பேசுவம் நன்மை யுடைத்து. அகிலா பேச்சை எப்படி நாடகீயமாகத் தொடங்கினாலும் கடைசியில் ‘காணிக்குக் கையெழுத்து வைச்சுத்தந்திடு’ என்கிற கோரிக்கையோடும், அது உன் தார்மீகக்கக்கடமை என்பதுபோலொரு மென்னழுத்தத்தையும்வைத்தே பேச்சை முடிப்பாள்.

“ ஹலோ……… அக்காதான் பேசிறன்…… கன்நேரம் அடிக்கவிட்டன் ஏதுங் கைவேலையாய் இருக்கிறியோ……… எப்பிடிப் பின்ன சுகமாயிருக்கிறியோ அத்தான் எப்பிடி…… குழந்தைகள் எப்பிடி ”

போனமாதம்வரை வர்ஷி புருஷனை கலாதரன்என்றே அழைத்த அக்கை இப்போ கொஞ்ச நாட்களாக அவனின் மதிப்பையும் கனத்தையுங்கூட்டி ‘அத்தான்’ என்கிறாள்.

“ பரவாயில்லை அக்கா இருக்கிறம்……………… அத்தான், நீங்கள், காப்பியன், தீபிகா எல்லாரும் சுகந்தானே……………”

“ எல்லோரும் ஏதோ இருக்கிறம்………. காப்பியனுக்கு அடுத்த வருஷம் கேம்பிறிட்ஜ் கிடைக்கும்போல இருக்கு……… பிள்ளையை விட்டிட்டு தனிய இருக்கப்போறதை நினைக்கத்தான் கஷ்டமாயிருக்கு…………… உங்க பிள்ளைகள் எல்லாம் ஸ்கூலால வந்தாச்சோ………… ஜெர்மனியில ஸ்கூலுகள் நேரத்துக்கே விட்டிர்றதுபோல.”

‘ஓமோம்…….. ஹிட்லர் அப்பிடி பள்ளிகளை நேரத்துக்கே விடச் சொல்லிவிட்டுத்தான் செத்தவர்” என்று சொல்லலாம்’ போலிருந்தாலும்

“ ஓமோம்……..இஞ்சை பெரிய லெஸர் இல்லைத்தானே………. அதால இரண்டுமணிக்கே விட்டிடும், இவையள் இன்னுமென்ன தவ்வலுகளே………15, 16ம் வயசுகளாகுது…… இப்ப தங்கட பாட்டுக்கே போய்வரத்தொடங்கிட்டினம்.”

“ தங்கடபாட்டுக்கு வருவினம் என்றிட்டு அசண்டையாய் இருக்கப்படாது கண்டியோ…… பொம்பிளைப்பிள்ளைகள். பேப்பருகளில ந்யூஸ்களில கேள்விப்படுகிற நீ தானே எப்பிடி நாதாரியள் ஸ்கூல்ப் பிள்ளைகளைக் கடத்திறதுறாங்களென்று……”

இவள் இப்ப என்ன பிள்ளைகளைத் தனியே வரச்சொல்லுகிறாளா………… இல்லை வேண்டாமென்கிறாளா……… அவளது திடீர் அக்கறை குழப்பமாயிருக்க வர்ஷி விஷயத்தை மாற்ற விரும்பவும் அகிலா அவளாகவே அதை மாற்றினாள்.

“ அப்ப இந்தமுறை லோங் வகேஷனுக்கு சிலோனுக்குப் போகேல்லேயே……”

“ வகேஷன் சீஸனில ஃப்ளைட் டிக்கெட்டுக்கள் ‘நெருப்பு’ விலையாயிருக்கும், அதோட போன வருஷமும் போன்னாங்கள்தானே…….. அதனால இவர் இந்தமுறை சிலோன விட்டுத் தான்ஸானியாவுக்குப் போவம் என்கிறார் ”

“ தான்ஸானியாவில ஆர் இருக்கிறது…………. அங்கே அப்பிடி என்ன விஷேசம்…… என்ன இருக்காம்……………பார்க்க ஆஃபிரிக்காவில……”

“ ஆஃப்ரிகா என்றாலும் அது அவ்வளவு வரட்சியான நாடல்ல……… இலங்கைமாதிரி மலைகள் ப்ளான்டேஷன், எஸ்டேட்டுகள் உள்ள ஒரு நாடுதான்………… அவர் படிச்ச Snows of Kilimanjaro என்றொரு நாவலில அந்த மலைகளைப்பற்றியும், அந்தமலைகளின் பீடத்தில அமைந்திருக்கும் சமதரைகள் தாவரங்களைப்பற்றியும் அழகான விபரிப்புகள் வருதாம்……………… அதனால தான் கையாய்க்காலாய் ஓடும்போதே அதையும் ஒருக்கால் பார்த்துவிடோணும் என்று நிக்கிறார்.”

“ உப்பிடித்தான் முந்தியும் அன்னை மேரி வாழ்ந்த மனையொன்று IZMIR இல இருக்கென்று எதிலயோ படிச்சிட்டுத் துருக்கிக்கே போய்ப் பார்த்திட்டு வந்த மனுஷனல்லே…………………..”

“ம்…”

“ஆனால் திரும்பி வரேக்குள்ளதானாம்……… கொஞ்சம் பிரச்சனைப் படுத்துவாங்கள் ”

“ ஏனாம்……..?”

“ தான்ஸானியாக்காரியளை ஜெர்மனிக்குக் கடத்திறான் என்று என்னையும் பிள்ளைகளையும் மறிப்பாங்களாம்…………”

“ அடடடா………… நாண்டுகொண்டு நின்று கட்டின மச்சானுக்கு இப்பத்தான் நாங்கள் தான்ஸானியாக்காரியள் மாதிரித் தெரியிறமாமோ……”

“அதை விடக்கா……. அது சரியான லொள்ளு, எப்பவும் உப்பிடித்தான்…… எதையாவது சொல்லிக் ‘கடி’ச்சுக்கொண்டேயிருக்கும்.”

“ அது எப்பவெண்டாலும் கடிபடுங்கோ…………… நான் இப்ப முக்கியமாய் எடுத்தது………. இந்தக் காணிப்பிரச்சனையைக் கதைப்பமென்டுதான்.”

“ அதில என்ன கிடக்கு நெடுகக் கதைக்க……”

“ அடி லூஸுப்பெட்டை……….. உன்ர மனுஷன்தான் சமூகசீர்திருத்தவாதி, சீதனவிரோதி என்றாலும் அண்ணையும் நானும் உள்ளதைப் பகிரவல்லே உன்னுடைய ஒப்புதல் கையெழுத்தும் வேணுமாம்.”

“ ஏனப்பிடி”

“ ஏதோ எங்கட யாழ்ப்பாணத் தேசவழமையோ என்னவோ ஒன்றொன்றிருக்காம்……….. பெற்றோர் இல்லாத காலத்தில பிள்ளைகளுக்கு சொத்தை உறுதி எழுதுகில், எல்லாப் பிள்ளையளும் சேர்ந்து கையெழுத்து வைச்சால்த்தான் அது செல்லுபடியாகும்.”

அகிலா கடைசியாகச் சிலோனுக்குப் போய்வந்தபோது அப்பா இருந்த காலத்தில் அவர்களின் குடும்பசொத்து விடயங்களைக்கையாண்ட சட்டத்தரணியிடம் புருஷனோடுபோய்…… எம் தேசவழமைச் சட்டத்தின்படி ஒரு பொம்பிளைபிள்ளைக்கு சீதனம் எழுதுப்படாமல் இருந்தால்…… அந்தப்பிள்ளைக்கும் பெற்றோரின் சொத்தில மற்றப்பிள்ளைகளுக்கான விகிதத்தில் பங்கிருக்கு என்பதையும், சீதனம் எழுதுப்பட்ட பெண்பிள்ளைகளுக்கு பிதுரார்ஜிதத்தில் பங்கில்லை, மற்றும் இதுவன்ன சொத்துகள் சம்பந்தமான தகவல்களையும் திரட்டியும் தெளிந்துமிருக்கிறாள்.

எங்கே எல்லா விபரங்களையும் அனாவசியமாய் வர்ஷிக்கு விளம்பப்போய், அவளும் மனம்மாறி சொத்தில பங்குக்கு வந்திடுவாளோ என்கிற எச்சரிக்கையில் அவற்றையெல்லாம் விழுங்கிவிட்டு “அம்மா ஐயா இருக்கும்போதே எழுதியிருந்திருச்சினம் என்றால் இப்படிச் சிக்கல் ஒன்றும் இருக்காது……… இப்ப உன்னுடைய கையெழுத்தும் வேணுமாம்” என்பதை மட்டும் அழுத்திச் சொன்னாள்.

*

கொக்குவில் சாம்பசிவன்வாத்தியாரின் நான்கு பிள்ளைகளில், மூத்தபிள்ளை வரதராஜன், இந்திய அமைதிப்படையின் பிரசன்னத்தின்போது நேர்முகம் ஒன்றுக்காகக் கொழும்புக்கு வந்தவன், அப்பிடியே கொழும்பில்நின்றபடி சாணக்கியமாய் பிரித்தானிய தூதுவராலயத்தில் ஸ்ரூடென்ட்-விஸா எடுத்துக்கொண்டு இங்கிலாந்துக்கு வந்துபடிச்சுப் பொறியாளனுமாகி இப்போ மனைவி குழந்தைகளுடன் அங்கே Enfield இல் தம்மை நிலைப்படுத்திக்கொண்டும் விட்டான்.

அதையடுத்து 1987 ஜூலை மாதம் 29 இல் ராஜீவ் – ஜே.ஆர். ஜெயவர்த்தன ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு வி.புலிகளும், இ.அ.கா.படையும் தேன்நிலவைக் கழித்துக்கொண்டிருக்கையில் சாம்பசிவன் வாத்தியார் சாமர்த்தியமாக அகிலாவுக்கும் லண்டன் மாப்பிள்ளை ஒன்றைக் கண்டுபிடித்து இந்தியாவில் வைத்து திருமணத்தை முடித்து அவர்களையும் தேன்நிலவுக்கு அனுப்பிவைத்துச் சாதனை புரிந்துவிட்டார். இவ்வாறாக வர்ஷிக்கு மூத்த இருவரும் இப்போ லண்டனில் தம்மை நிலைப்படுத்தியாயிற்று.

ஆனாலும் அக்குடும்பத்தில் வரதராஜன் பிறந்து 10 ஆண்டுகளின் பின் பிறந்த இளையவள் வர்ஷிக்குத்தான் அக்கை அகிலாவைவிடவும் முன்பதாக வரன் குதிர்ந்ததும் ஒரு முக்கிய சாங்கியம். அதுக்கெல்லாம் காரணம் வர்ஷியும் ரப்பர் பொம்மையைப்போல் அம்சமாய் இருந்தாள் என்பதைவிடவும் அவளுடன் கல்லூரியில் இரண்டாண்டுகள் முன்படிமாணவனாகப் படித்த சுயமரியாதைக்காரன் கலாதரன் அவள்மேல் கண்ணைப் போட்டதுந்தான்.

படிப்பைவிடவும் கிரிகெட் ஆட்டத்தால் கல்லூரி முழுவதும் பிரபலமாயிருந்த கலாதரன் ஒருநாள் வர்ஷி வழியில் எங்கேயோ போய்க்கொண்டிருக்கையில் அவளருகில் மிதியுந்தில்போய் “ கட்டக்கடு வெயிலில் இப்பட்டிறகு வண்ணத்து வட்டமடித்தெங்கின பறக்குதோ” என’க்கேட்கவும் முன்படி மாணவன் ஒருவனிடம் இதை எதிர்பார்க்காத வர்ஷி திகைத்துத் திரும்பிப்பார்த்தாள்.

“ வர்ஷி….. ஒரு சின்ன அலுவல் ஒருநிமிஷம் செலவிடமுடியுமா” என்று மறித்து அவள்மீதான தன் தீராத விருப்பையும் தவிப்பையும் நேரிடையாகச் சொல்லிவிட்டான். அவள் பேச்சுமறந்து பதுமைபோல நிற்கவும் “இது ஒன்றும் வற்புறுத்தல் அல்ல…… ஒரு விருப்பத்தின் பகிர்தல்தான்……. உமக்கு இஷ்டமில்லையென்றால் சொல்லிவிடும்………… இப்போ நான் ஒரு ஒன்பது மாதம் இந்தியாவுக்கு ட்றெயினிங்குக்காகப் போகப்போறன்……… உமக்கும் சம்மதமென்றால் திரும்பி வந்ததும் வீட்டில வந்து முறையாகப் பெண் கேட்பன்” என்றான்.

கலாதரனும் தான் தாயகம் திரும்புவதற்கிடையில் குயில் எங்கேனும் தோப்பு மாறிடுமோ என்றொரு பயத்தில் தவித்துக் கிடந்து கடைசியில் கேட்டே விட்டான், அதுவும் ஒரு துணிச்சலான முன்னேற்பாடுதான்.

*

செம்பிரதிகளோடு அம்பேத்காரையும் பெரியாரையும் படிக்கமுதலே இயல்பிலேயே காலாதரன் ஒரு சுயமரியாதைக்காரனாகவும், சமூக அநீதிகளுக்கெதிரான கலகக்காரனாகவும், துணிச்சலும் போர்க்குணமும் உள்ளவனாகவும் இருந்தான்.

யாழ் பல்கலைக்கழகத்தில் அவன் அறிவியல் இளங்கலை முடித்தபின் ஈ.பி.ஆர்.எல்.எஃபின் தூய்மை வாதப்போக்கு பிடித்துப்போய் அதில் இணைந்துகொண்டு அதில் இணையவிரும்பிய / இணைந்த இளவல்களுக்கு அரசியல் வகுப்புகள் எடுத்துக்கொண்டிருந்தான்.

வர்ஷியும் வாழ்வையிட்டான சிந்தனையில் கனவில் இருந்தாளாயினும் கலாதரனின் இயக்க ஈடுபாடுகள் தவிர்த்து அவனை நிராகரிக்கக் காரணங்கள் வேறெதுவும் இருக்கவில்லை.

அதற்கிடையில் கலாதரன் பயிற்சிக்குப் புறப்படமுதலே ஒருநாள் மாலை அவன் தோழர்கள் எவரும் சூழவில்லாத தனிமையில் இணுவில் செகராஜசேகரப் பிள்ளையார்கோவில் ஆலமர விருக்ஷத்தின் கீழ் சாரக்கட்டோடு நிற்கையில்.……………

சாம்பசிவன் வாத்தியார் மளிகைச்சாமானும், மரக்கறிவகைகளும் வாங்கிகொண்டு மிதியுந்தில் மெதுவாக வந்துகொண்டிருப்பதைக் கண்டவன் அவருக்குக் கையைக்காட்டி

“வணக்கம்……….. ஐயா, உங்களோட ஒரு சின்ன அலுவல் கதைக்கவேணும், ஒரு மூன்று நிமிஷம் ………… வசதிப்படுமோ” என்று மறித்தான்.

பெடியன் ஏதோ இயக்கத்துக்கு நிதியோ அல்ல வேறேதோ உதவியோ கேட்கப்போறான் என்று நினைத்தவர் “ அதுக்கென்ன தம்பி பேசுவம் ” என்றபடி விகற்பமில்லாமல் மிதியுந்திலிருந்து இறங்கி நின்றார். இவனும் மடித்துக்கட்டியிருந்த சாரத்தை மரியாதையுடன் கீழே இறக்கிவிட்டபடி அருகில்வந்து

”நான் கோப்பாய் மேற்கு கூட்டுறவு இயக்கச் சமாஜத்தலைவர் சிவசங்கரனின் இரண்டாவது மகன் கலாதரன்.” என்றான்.

அவர் “ சரி……… சொல்லுங்கோ…… ” எனவும்

“ மாஸ்டர்…… எமது சமூகத்தைப் பிணித்திருக்கும் பல மூடநம்பிக்கைகளோட இந்தச்சீதனம் கொடுக்கிறது வாங்கிறதுபோன்ற அநீதிகள் சிறுமைகள் தொடராமலிருப்பதுக்கு எங்களுடைய பங்குக்கு என்ன செய்யலாம் என்று நினைக்கிறியள்” என்றோரு கேள்வியைப்போட்டான்.

அதுவரையில் சீதனம்பற்றி வீறமைவான (சீரியஸ்) கருத்துக்கள் எதுவுமே இல்லாதிருந்த வாத்தியார் ஒரு மாணவனைப்போலக் குழம்பிநின்றார்.

“ சரி……… சீதனம் ஒரு சமூக அநீதி என்கிறதையாவது ஒத்துக்கொள்வீங்கள்தானே………..”

“ நிச்சயமா………அது ஒரு அநீதியான காரியந்தான்……. கண்மூடித்தனமாய் சமூகத்தின் எல்லா மட்டத்திலும் அதைப் பின்பற்றிக்கொண்டு வந்திட்டம் ”

“ அப்ப சந்தோஷம்……..நீங்கள் எங்க பக்கந்தான், இளைஞன் ஒருவன் சீதனம் எதுவும் எதிர்பாராமல் திருமணம் செய்யத் தானே முன்வந்தானாயின் அவனைக் கொள்கையளவில் ஆதரிப்பீங்களா……….”

“ நிச்சயம் அவனுடைய செயலை ஆதரித்து, அந்த முன்மாதிரியையும் போற்றுவேன்……. சந்தேகமில்லை.”

அப்போது நேராக அவரது கண்களைப் பார்த்துச் சொன்னான்:

“ நான் உங்களுடை மகள் வர்ஷியைச் சீதனம் எதுவுமில்லாமல் கல்யாணம்செய்ய விரும்புகிறன் .”

மாஸ்டர் திகைத்து அவனைப்பார்க்கவும்

“ நான் நேரிடையாய்க் கேட்கிறதால நாங்கள் ஏதோ காதலித்துக் கொண்டிருக்கிறம் என்றோ………. மறைவாய்ப் பேசிப்பறைஞ்சு கொண்டிருக்கிறமென்றோ……… முடிவுகட்டிவிடாதையுங்கோ, அது என்னுடைய ஒரு எண்ணம், ஒரு விருப்பம், அதைத்தான் உரியவரிட்டை விண்ணப்பித்திருக்கிறன். நிதானமாய் யோசிச்சு ஒரு நல்ல முடிவைச் சொன்னால் போதும்…… ஒன்றும் அவசரமில்லை” என்றான்.

“ சரி, தம்பி யோசிப்பம்………வரட்டே ” என்றவர் இரண்டு திசைகளிலும் தலையைத்திருப்பி ஏதும் வாகனங்கள் வருகின்றனவா என்று பார்த்துவிட்டு மீண்டும் பெடலை மிதித்து மிதியுந்தில் ஏறி நிதானமாக ஆச்சரியத்தோடு இருக்கையில் அமர்ந்து யோசனையோடு மிதிக்கத்தொடங்கினார்.

‘அக்கை அகிலா இருக்கிறாள்………… தங்கையையைத்தா’ என்கிறானே லூஸுப்பயல்……… இந்தக்காலப்பெடியள் எல்லாத்திலும் வித்தியாசந்தான், கலாதரன் ஏதோவொரு இயக்கத்துக்காக வேலைகள் செய்யிறான் என்பது மாத்திரம் தெரியும். எந்த இயக்கம் என்றுந் தெரியவில்லை, மறுத்தால் தூக்கிக்கொண்டுபோய் கையில ஆயுதத்தைத்திணிக்கிற இயக்கமோ, என்ன கோதாரியோ………’ அவனின் துணிச்சலால் அசந்து போனவர் சிந்தனையோடு தொடர்ந்த வந்துகொண்டிருந்தார்.

வழக்கமாக மாலையில் பொழுதுசாய தோட்டத்தில் மேயக்கட்டிய மாட்டை அவிழ்த்து வந்து கொட்டிலுக்குள்கட்டி அதுக்கு வைக்கோலோ, தவிடு புண்ணாக்கோ கரைத்துவைத்துக் குளித்துவிட்டோ கால்மேல் கழுவிக்கொண்டோ சாமி கும்பிடப்போகிற மனிதன் யோசனையோடு வந்து அமைதியாய் இருப்பதைக் கவனித்துவிட்டு பார்த்திவிதான் “ என்னப்பா……. பேச்சல்பறைச்சல் இல்லாமல் ஏதோ திகைப்பூண்டை மிதிச்சகணக்காய் இருக்கிறியள்…” என்று விசாரிக்கவும் அவருக்கு மெல்ல வழியில் நடந்ததைச் சொன்னார்:

“ கோப்பாய் மேற்குக் கூட்டுறவு இயக்கச் சமாஜத்தலைவர் சிவசங்கரனின் மகன் கலாதரனாம் …… கோவிலடியில என்னை மறிச்சு தனக்கு வர்ஷியைக் கட்டித்தரச் சொல்லிக்கேட்கிறான், சீதனந்தேவையில்லையாம் ”

“ தமக்கை ஒருத்தி இருக்கிறது அவருக்குத்தெரியாதாமோ……… அதையும் வழியில தெருவில வைச்சாமோ கேட்கிறது……… ஒரு வரைமுறை இல்லை, வீட்டில பெரியாட்கள் ஆரும் இல்லையாமோ வந்து கதைக்க, அது சரி………… ஏதும் வேலைவட்டி பார்க்கிற பெடியனோ…… கேட்டியளே. ”

கலாதரன் பெண்கேட்ட திகைப்பிலிருந்தவருக்கு அதுபற்றிய நினைப்புகளே வரவில்லை. சும்மா அளந்தார்:

“ இல்லை………….பெடியன் மிச்சம் மரியாதையாய்த்தான் கதைச்சவன்……… ஆளின்ர தொழில் துறைபற்றிக் கேட்கத்தான் உன்னின்னான், சரி, அதுவே அவனுக்கொரு பிடியாய்ப்போய்விடுமல்லே……. சமயோசிதமாய் அதை நான் எடுக்கேல்ல……விட்டிட்டன். ”

*

கலாதரன் ஈ.பி.ஆர்.எல்.எஃப் இயக்கம் அமைந்தபோது அதிலொரு போராளியாய் வள்ளத்திலேறி இந்தியாவுக்குப் போய் ஆயுதப்பயிற்சி எல்லாம் பெற்றபின்னர், அங்கே அமைப்பில் இவனுக்குப் பயிற்சியாளராய் இருந்த இளவல் ஒருத்தன் இவனையும் செவியில் பிடித்தாட்ட முயற்சிக்கையில், அவர்களுக்கிடையில் முறுகல் வந்தது. ஊரில் இவனது இங்கிலிஷ் வாத்தியாராய் இருந்தவரும் அப்போது இயக்கத் தலையின் மொழிபெயர்ப்பாளராயிருந்தவரின் காதுகளில் விஷயத்தை இரகசியமாய் வைத்துவிட்டு மும்பாய்க்குப்போய் கிரேக்கக் கப்பலொன்றில் பெயின்டராகச் சேர்ந்து பிறீமன் வந்தடைந்து, அகதியாய்ப்பதிந்துகொண்டு கெடுபிடிகள் இல்லாத அச்சமயத்தில் வர்ஷியையும் அழைப்பித்துக் குடும்பமாகித் தம்மை நிலைப்படுத்திக்கொண்டதும் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னான சம்பவம்.

வர்ஷி கலாதரனிடம் ஜெர்மனி சென்றகையோடு இதுக்காகவே காத்திருந்தவன்போலிருந்த அவள் இளைய சகோதரன் சேரலாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைந்து கரும்புலியாகி அதே ஆண்டில் புகைந்து காற்றோடு காற்றாகினான்.

*

சாம்பசிவன் வாத்தியாரும் மெலனியத்தின் ஆரம்பத்தில் எவருக்கும் தொல்லைதராமல் வைகுந்தமேகினார்.

சாம்பசிவன் வாத்தியாரின் இறுதிநிகழ்வுகளுக்கு வெளிநாட்டிலிருந்து வந்தபிள்ளைகள் அனைவரும் திரும்பியதும் வர்ஷி தாயாரைத் தன்னுடன் பிறேமனுக்கு அழைத்துவந்துவிடத் தன்னாலான முயற்சிகள் எல்லாம் செய்து பார்த்தாள். ஆனாலும் பார்த்திவியின் சரீர நிலமை ஒத்துழைப்பதாயில்லை, கீல்வாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தவருக்கு ஜெர்மன் தூதுவராலயத்துக்கே நடந்து செல்லமுடியவில்லை.

சாம்பசிவனுக்குப் பின்னரான இடைக்காலத்தில் அவர்களின் பெரியமனையில் பார்த்திவி சமையலுக்கு, கைவேலைகளுக்கு ஒத்தாசையாய் உடுவிலில் இருந்து ஆதரிப்பாரில்லாமல் ஏதிலியாய் தவித்துவந்த ஒரு மனுஷியையும் சேர்த்து வைத்துக்கொண்டு தனியனாய்த்தான் இருந்தார். சாம்பசிவன் இல்லாத உலகில் அவருக்கு நீண்டநாள் வாழப்பிடிக்கவில்லைப்போலும், அதே ஆண்டில் அவரைக் கடுகிப் பின்தொடர்ந்தார்.

இருவரின் காலகதிக்குப்பின்னர் காலியான அவர்கள் வீட்டில்வாழ தேசியசேமிப்புவங்கியின் முகாமையாளர் ஒருவர் குடும்பத்தோடு வந்து சேர்ந்தார். அவர்களது சாமியறையில் ஆறடி உயரத்தில் வைத்திருக்கும் சாயிபாபா படத்தின் முன் தினமும் ஒருமணிநேரம் நிட்டையிலிருக்குமவர், நாணயஸ்த்தன். அவர் ஒழுங்காகக்கொடுக்கும் வாடகையை மூத்தபிள்ளை என்கிற கோதாவில் அப்பாவின் ஸ்தானத்தில் வரதராஜன் கலாதியாக வாங்கித் தன்னுடைய வங்கிக்கணக்கில் ஏற்றிக்கொண்டிருப்பதுதான் அகிலாவைக் கடுப்பேற்றத் தொடக்கிய முதன்மைச் சாங்கியம். அதை உணரமுடியாத அளவுக்கு அசடு அல்ல வர்ஷி.

*

தாம் தேடாத பிறன் சொத்துக்கள், சம்பத்துக்கள், ஆதனங்கள் வகையில் கணவன் கலாதரனின் கொள்கை-நிலைப்பாட்டில் ‘அறம்’ இருப்பதாக வர்ஷி நம்பினாலும், இதுவரை ‘யாருக்கும் தேவைப்படாத என்னுடைய கையெழுத்து……… இப்ப சொத்தைப் பங்கு பிரிக்கும்போது மட்டும் தேவைப்படுவதை எண்ணி இலேசாகப் பொருமி

“ எதுக்கும் இவரும் வரட்டும் அக்கா கலந்து கதைச்சுபோட்டுச் சொல்லுறன் ”

என்றாள்.

‘நான் ரேஷனலிஸ்ட், சோஷலிஸ்ட்டு, சீதனாதிகளை எதிர்பாராதவன்’ என்கிற மனுஷனோட இனியென்ன கதைக்கப்போறாளாம்…… ஒருவேளை அவனும் இப்போ கொள்கைகளைக் கைவிட்டிட்டானோ…………. என்ர அம்மா அப்பாவின்ர சொத்துக்கு இந்த வடலியடைப்பான்ர சம்மதங்கூட வேண்டியிருக்கு………..ம்ம்ம் எல்லாம் காலந்தான்’ என்று மறுமுனையில் கறுவிக்கொண்டு………

“ சரி… சரி… நீ கதைச்சுப்போட்டுச்சொல்லு, இந்த ஆண்டிலயே பிரச்சனையைச் சுமுகமாய்த் தீர்த்துப்போட்டு நிம்மதியாய் இருக்கவேணும்” என்றுவிட்டுத் தொலைபேசியை நமைச்சலுடன் வைத்தாள் அகிலா.

*

அகிலா ஒன்றைவிட்டு ஓராண்டு பிள்ளைகளின் கோடை நீண்டவிடுமுறைக்கு இலங்கைக்கோ இந்தியாவுக்கோ குடும்பத்தோடு போய் வருகின்றவள். கடைசியாகப் போனபோதுதான் யாழ்ப்பாணத்தில தங்க ஒரு வீடு கிடையாமல் அலைந்துவிட்டுக் கடைசியாக நல்லூர் கந்தர்மடம் குறுக்குக்கு அணித்தாய் அரசடிவீதியில இருபத்தையாயிரம் கொடுத்து ஒரு வாடகை வீட்டிலேயே அவர்கள் தங்கவேண்டி யிருந்தது. அப்போதே ‘அட நான் பிறந்து தவழ்ந்த மண்ணிலேயே சொந்தவீடிருக்க……… வாடகை கொடுத்தொரு வீட்டில் தங்கவேண்டியிருக்கே’ என்ற வெப்பியாரம் அவளுக்குட் கிளரவும் ‘பார் இந்தவீட்டுக்கொரு வேலை பார்க்கிறன்’ என்று கறுவியபடி காய்நகர்த்தத் தொடங்கியிருந்தாள்.

*

நல்ல சமண்டலை, மஹோகனி, வேப்பங்கதவு நிலைகளாலும், ராணி மார்க் சீமை ஓடுகளாலும் வேயப்பட்ட அந்தவீட்டை சாம்பசிவன் தன் வாத்தியார் உத்தியோகத்தில சம்பாதித்து ஒன்றுங்கட்டி நிமிர்த்தவில்லை. 1970 களின் கடைசியில் அவர் பாரதிதாசன் பல்கலையில் தமிழ் முதுகலை படித்துவிட்டு யாழ்ப்பாணத்தில் கால்வைத்ததும், யாழ் இந்துக்கல்லூரியில் உடனடியாக ஆசிரியநியமனம் கிடைத்தது. புகையிலை வியாபாரத்தில் செழுமையாய் வாழ்ந்த அவர் மாமான்காரன்தான் சாம்பசிவன் குடிவெறிப்பழக்கமில்லாத பையன், பிக்கல்பிடுங்கல்கள் இல்லாதகுடும்பம், என்று அவரைத் துரத்திப்பிடித்து பார்த்திவியையும் கையில கொடுத்து அந்த வீட்டையும் சீதனமாகக்கொடுத்துக் குடியிருத்திவிட்டார். இன்னும் அந்த வீட்டோடு சேர்த்து இராசவீதியில இரண்டாயிரம் கன்று (ஏழுபரப்பு) தோட்டகாணியும் அவருக்குச் சீதனமாக எழுதப்பட்டது.

சாம்பசிவனின் தங்கையை வானதியைக் கட்டிக்கொடுக்க வேண்டிய நேரம் வந்தபோது “அது என்ர சீதனமல்லோ அதைத்தொடவும்விடன் என்று கெம்பாமல் ‘அந்தத் தோட்டக்காணியை விற்று அவளுக்கு வேண்டிய நகைநட்டெல்லாம் செய்வித்து மைத்துனியின் சுபகாரியங்களை முதல்ல ஒப்பேற்றுங்கோ’வென்று நிறைமனதோடு சொல்லி வாத்தியாருக்குத் தோள்கொடுத்து நின்ற அம்மா பார்த்திவி ஒரு சராசரிப்பெண்ணல்ல, ஒரு ‘மஹாமனுஷி’ என்று அவரை நினைக்கையில் வர்ஷியின் கண்கள் இப்போதும் நிறையும். அம்மாவின் தயாளகுணத்துக்கு ஈடுகட்டத்தான் தனக்குக் கலாதரன் வாய்த்தான் என்றும் உள்ளூரப்பெருமை கொள்வாள்.

*

சாம்பசிவன் பார்த்திவி இணையர் பொன்னாலைப்பெருமாளுக்கு நேர்ந்து பெற்ற தம் தலைச்சன் பிள்ளைக்கு வரதராஜன் என்று நாமகரணம் சூட்டினர். வளரிளம் பருவத்தின் அலப்பறைகள் ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அமைதியாக இருப்பான், ஆனாலும் தற்காரியக் கெட்டி. தான் முடிவெடுத்தால் சரியாகத்தான் இருக்குமென்கிறதொரு நினைப்பும் அவனுக்கு. அதுவே இப்போது இந்த வீட்டு விவகாரம்வரையில் தொடர்கிறது. தங்கைகள் எவரையும் கலந்தாலோசியாமல் தன்முனைப்பில் வீட்டை வங்கிமுகாமையாளருக்கு வாடகைக்குக் கொடுத்ததன்மூலம் வீடு எனக்கே என்பதான சங்கேதச்செய்தியை சகோதரிகளுக்கு உணர்த்த விரும்பினான்.

சென்ற ஆண்டின் நீண்ட கோடைவிடுமுறையின்போது சிலோனுக்குப்போக அகிலா வெளிக்கிட்டபோது தமையனிடம் ‘கொஞ்சம் காசு தாறியா அண்ணா’ எனத் தட்டிப்பார்த்தாள்.

“ அப்ப என்ன காசில்லாமலே ஹொலிடே வெளிக்கிடுறியள்………………?”

“ கிடந்த காசெல்லாம் தட்டிக்கொட்டி ஒருமாதிரி டிக்கெட் போட்டாச்சு…….. இனி அங்கத்தைச் செலவுகளைச் சமாளிக்கத்தான் கொஞ்சம் ரைற்றாய் இருக்கப்போகுது, புனர்வாழ்வு அமைப்புகளுக்கு , ஏதிலிக் குழந்தைகள் காப்பகங்களுக்கெல்லாம் கொடுக்கவேணும், காப்பியனும் அவன்ர ஃப்றென்ட் ஒருத்தன் சிலோனிலயிருந்து சிங்கப்பூருக்குப் போகிறானாம்……… தானும் அவனோட ஒரு கிழமைக்கென்றாலும் சிங்கப்பூருக்கும் போய்வரவேணுமென்றான்.”

வரதராஜன் மூச்சு வரும் சப்தமே கேளாமல் ‘எப்படி மறுத்தான் போடுகிறது’ என்கிற யோசனையோடு அமைதியாக இருந்தான்.

“ என்னண்ணை பேச்சைமூச்சைக்காணம்……… சொன்னதெல்லாம் கேட்டதோ…..”

“ கேட்டுது கேட்டுது, அட நானே காசில்லாததிலதான் ஒரிடமும் வகேஷனே வெளிக்கிடாமல் இருக்கிறன்………… என்னைப்பிடிச்சுக் கேட்கிறியே……………… அந்த ‘ ஷொக்’கில எனக்கெதுவும் சொல்லத்………………… தெரியேல்லை.”

அகிலாவுக்கு குருதி அழுத்தம் மிகைத்து நடுமண்டையில் ‘விண்’ ‘விண்’ என்று இடித்தது, ஆனாலும் வெப்பத்தைக்குரலில் காட்டாமல் தொடர்ந்த சாந்தசொருபியாகவே வெண்ணெய்க்குரலில் கேட்டாள்:

“ எங்கடவீட்டு வாடகைக்காசை பாங்க் மனேஜர் செபெறேற் எக்கவுன்டிலதானே போடிறவர், அதில ஒரு லட்சத்தை அவரிட்டக் கேட்கட்டே.”

வார்த்தைகள் மூளையில் அமிலத்தைத் விசிறவும் உசாரானான் வரதராஜன்.

“ சச்சச்சச்சாய்ச்சாய் அதில இப்ப அவ்வளவு வராது…… நான் போனபோது எல்லாம் செலவுக்கு எடுத்துப்போட்டன் ” சடைந்து மெழுகினான்.

‘நான் குடும்பத்துக்கு மூத்தவன், இப்போ அப்பா ஸ்தானத்தில இருக்கும் என்னையே கேள்விகேட்கவும், வாடகைக்காசில வாய்வைக்கவும் பார்க்கிறாளே……’ என்ற நமைச்சலில் மெல்லமெல்ல அவன் அஸ்தியில் உஷ்ணமேறத் தொடங்கியது.

*

-இப்போதைக்கு நீங்கள் இளையசகோதரியிட்டை எழுத்துமூலமான சம்மதம் வாங்காமல் சொத்தை ஆட்சிசெய்தோ, வட்டியை வாடகையை அனுபவித்தாலும், நாளைக்கு வர்ஷியின்ர பிள்ளைகள் சீனியராகி அறிவு தெளிந்ததும் எங்களுக்குள்ள பங்கைப்பிரிச்சுத்தா என்றோ சொத்துப்பெறுமதியின் பங்கைத்தா என்றோ உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பலாம்- என்று சட்டத்தரணி மந்திரிச்சி விட்டிட்டார். அதுதான் நெற்றிக்கு நேரே வரும் ‘ஷெல்’லைக்கூட உச்சிப்போட்டுப் பங்கருக்குள் வழுக்கிப் பாயக்கூடிய அகிலாவை இப்போது திடுக்கிடுத்தும் செய்தி. அதனால்த்தான் அவள் வர்ஷிடைய கையெழுத்தையும் சம்மதத்தையும் வாங்கிவிடத் துடிக்கிறாள்.

வரதராஜனும் வெறும் முட்டைக்கோஸல்ல, இப்போது இராப்பகலாக வீறமைவான (சீரியஸான) சிந்தனைகள் அவனையும் தொட்டு ஆட்டுகின்றன. ‘வாடகைக்காசில தாவன் என்று வாய்வைச்சவள் நாளைக்கு வீட்டை எனக்குத்தா, காணிப்பக்கமாய் நீ வேணுமென்றால் பிடியென்று வரத்தயங்கமாட்டாள்’

360 ஆரையன்களிலும் புத்தியை எறிந்து யோசித்துப் பார்த்தவனுக்கு இப்போதைக்கு அகிலாவைக்கொஞ்சம் கூல்பண்ணிப்போனாலே நல்லதென்றுபட தம் குடியிருப்பாளரிடம் தொலைபேசி “ ஐயா………அகிலா அங்கே வாறாள்………… என்னுடைய எக்கவுண்டில ஒரு ஐம்பதினாயிரம் ரூபாய் எடுத்து அவளுக்குக் கொடுங்கோ” என்று சொன்னான். அகிலாவுக்கு இலங்கையில் ஐம்பதினாயிரம் ரூபா கிடைத்தது சின்னச்சந்தோஷம் என்றாலும் “மாதம் ஐயாயிரம் ரூபா வாடகை வாங்குகிற கஞ்சல்பன்னாடைக்கு ஒரு இலட்சமாய்த் தர மனம்பிடிக்கேல்லை” என்று அவனை மௌனத்தில் வசைந்து தீர்த்தாள்.

*

இலங்கையில் சுற்றுலாவை முடித்துக்கொண்டு லண்டன் வந்த அகிலா தமையனிடம் தொலைபேசியில் நேரடியாகப்பேசினாள்.

“அண்ணை நீயும் நானும் நினைச்சுக்கொண்டிருக்கிற மாதிரியில்லை, எங்கட வீட்டு அலுவல். அதுக்குள்ள நுணுக்கமான சில சட்டப்பிரச்சனைகள் இருக்கு, எல்லாம் போனில கதைக்கேலாது, உனக்கு வசதியாய் ஒரு ஞாயிற்றுக்கிழமை, நானே வந்து எல்லாம் விபரமாய்ச்சொல்லுறன்.”

*

ஒரு ஞாயிற்றுக்கிழமை முறுக்கும் பிழிஞ்சு, சூசியம் சுட்டு, மிக்ஸரும் செய்து எடுத்துக்கொண்டு சகுனம் ஓரை சூலம் பார்த்து அண்ணாச்சியுடன் பேச்சுவார்த்தைக்குப் புறப்பட்டாள் அகிலா. அகிலாவின் மனுஷனுக்கு உயர் இரத்த அழுத்தம், இவள் ஏதும் தமையனோட கத்தினால் அவருக்கு இரத்த அழுத்தம் தானாக எகிறிவிடும். “நீ போய் என்னவென்றாலும் பேசிமுடிவெடுத்துக்கொண்டு வா. ”அவர் அவளுடன் போக மடுத்துவிட்டார். ‘இனிமேற் காலங்களில தன்னுடைய பிள்ளைகள் கொக்குவில் வீட்டிலபோய் குடியிருக்கவோ, உரிமைகோரவோ போவதில்லை’ என்பது அவருக்குச் சர்வ நிச்சயமாய்த்தெரியும்.

அகிலா கொண்டுபோன பணியாரங்களை தமையன் குடும்பத்திலுள்ள அனைவருக்கும் பரிமாறி அண்ணிக்காரிகொடுத்த பால்த்தேநீரையும் தொண்டை செழிக்க இறக்கிவிட்டுச் சொன்னாள்:

“ நாங்கள் நினைக்கிற மாதிரி வீட்டையும் காணியையும் நீயும் நானும் பிரிச்சு எடுத்துக்கொள்ள முடியாதாம்.”

“ ஏனாம் முடியாதாம்……..”

“ வர்ஷிக்கு அம்மா அப்பாவை சீதனம் என்று ஒன்றையும் எழுதிக்கொடுக்காததில அவளுக்கும் அதில எங்களுக்கு இணையான பங்கு இருக்குதாம்…….. எனக்கு அம்பலவாணர்ப் பிரக்கிராசியார் எல்லாத்தையும் கிளியர் படுத்திவிட்டார், நொத்தாரிசு மணியும் அது அப்படித்தான் எங்கிறார்.”

அண்ணி சூசியம் அடைந்த வாயுடன்: “ ஒத்தைவீட்டை மூன்றாய் வகுந்தால் ஆர் எங்கை இருக்கிறது…… குறுக்க சுவரல்லோ எழுப்பவேணும்……………..” கல்லை நடுக்குட்டையில் வீசிவிட்டுக் குசினிக்குள் ஒதுங்கினாள்.

அகிலா சொன்னாள் “ வர்ஷி பங்குக்கு வராள், அவளுடைய மனிசன்ர போக்கும் பொலிஸியளும் ஒரு மாதிரி, அவள் எந்தச்சொத்துக்கும் உரிமைகோருவதை அவர் விரும்பமாட்டார். அவளின்ர சம்மதத்தோட அவளிட்டைக் கையெழுத்து வாங்கித்தாறது என்னுடைய பொறுப்பு.”

வரதராஜன் சொன்னான்: “ ஃப்ராங்காய்ச்சொன்னால் வீட்டை இரண்டாய்ப் பிரிக்கிறதுகூட எனக்குச் சம்மதமில்லை………… பத்துப்பரப்புக் காணி இருக்கு…… வீடு காணிக்கான இன்றைய பெறுமதியிலை அரைவாசியை நான் உனக்குத்தாறன் வீட்டை எனக்கு விட்டுத்தா, காவியன்ர படிப்பு முடிஞ்சு அவனும் ஒரிடத்தில செற்றிலாக , நான் ஊரோடதான் போய் இருக்கப்போறன்.”

அவனுக்கு காவியன், தீபிகா என்று இரண்டுபிள்ளைகள், காவியன் கேம்பிறிட்ஜில Civil, Structural and Environmental Engineering என்று ஏதோவொரு படிப்பொன்று படிக்கிறான், தீபிகா இப்போதுதான் பத்தாவது. அகிலாவுக்கு வடிவாய்த்தெரியும் இங்க லண்டனில பொறுத்த பெறுமதியான இடங்களில எரிபொருள் நிரப்பு நிலையங்களும், அடுக்ககங்களுமாய் வாங்கிவைத்துக்கொண்டு இன்னும் சலூன் விற்பனைக்கு வந்தாலும் வாங்கிப்போடுவம் என்றிருக்கிற அண்ணனாவது ஊருக்குப்போய் செற்றிலாவதாவது. அவளுக்கு உள்ளூரச்சிரிப்பும், அதைவிடக் கோபமும் வந்தாலும் அடங்கியிருந்தாள்.

“ஊரில நானும் றியல் எஸ்டேட் செய்யிற ஏஜென்ட்களிட்ட விசாரிச்சுப்பார்த்தனான்…..….. எங்கட ஏரியாவில றோட்டுக்கரைக்காணியள் பரப்பு பன்னிரண்டு லட்சம் போகுதாம்…… எங்கள்ன்ர இரண்டுகாணி உள்ளுக்குள்ளே என்றபடியால குறைஞ்சது பத்துக்குக் கொடுக்கலாமாம். வீடும் பழையவீடென்றாலும் ஒரு குறைஞ்சபட்ச மதிப்பீடாய் ஒரு ஐம்பது லட்சம் போகுமாம்…… நீ, வீட்டுக்கு இருபத்தைந்து லட்சமும், பாதிக்காணிக்கு ஐம்பது லட்சமும் தருவாய் என்றால் நான் வீட்டை விட்டுத்தாறன்.” என்றுவிட்டு அவனது எதிர்வினைய்யைக் கடைக்கண்ணால் ஆய்ந்தாள்.

வரதராஜனுக்கு பட்டென்று கோபம் வரவும்“உன்ர கலியாணத்துக்கும், லண்டனுக்கு ஃப்ளைட்டுக்கும் பவுண்ஸில காசுகள் அனுப்பினது……… நானாக்கும்.”

“ வர்ஷி புருஷன், அவன் மனுஷன்……………. சீதனமே வேண்டாம் என்றிட்டான்………… அண்ணன் என்று இருந்த நீ, ஒரு தங்கைச்சிக்குக் குடுத்ததை ஏதோ உலகத்துக்கே அளந்தமாதிரி பில்டப் பண்றாய்……….. அவனவன் வாழ்நாள் பூராய்க் குடும்பத்துக்கே தேய்ஞ்சு நூலாகிப்போய் இருக்கிறாங்கள்………… அப்படி மனுஷர் உன்ர கண்ணில பட்டிருக்காயினமே…………… சரி இந்தச்சொத்தில நீ என் கலியாணத்துக்கு பவுண்ஸில செலவழிச்சதை கணக்குப்போட்டு எடுத்துக்கொண்டு மிச்சத்தைவிடன்………. நான் பாட்டுக்குப் போய்க்கொண்டே இருப்பன். இப்ப பன்னிரண்டு வருஷமாய் வாடகைக்காசெல்லாம் உன்ர எக்கவுண்டிலதான் இறங்கிக்கொண்டிருக்கு………… இருட்டுக்க கணக்குப்பார்த்தாலும் ஆறேழு இலட்சம் வரும்…… அதிலயும் பாதி எனக்குச் சேரவேண்டியது ……”

“பெற்றோர் வாழ்ந்த வீட்டைத் தத்தமது ஆம்பிளைப்பிள்ளையளுக்குக் கொடுக்கிறதுதான் யாழ்ப்பாணத்து வழமை, எங்கடை அயலுக்க பாரன் தருமலிங்கண்ணைக்குத்தானே தாய் தகப்பன்தான் அந்த வீட்டைக்கொடுத்தவை, பரராசசிங்கம் இருக்கிற அந்தப்பழையவீடு தாய் தகப்பனிடமிருந்து கிடைச்சதுதானே. வாழ்மனை பிதுரார்ஜித சொத்தாக ஆம்பிளைப்பிள்ளையளுக்கு போகிறதுதான் எங்களுடைய சம்பிரதாயமும், தேசவழமையும்………. அம்மாவும் அப்பிடித்தான் என்னட்டைச் சொன்னவ.”

வரதராஜன் வலிந்த புன்னகையை முகத்தில் வைத்துவெளியிட்ட இந்தப் பிரவசன வெளிப்பாட்டுக்கு அகிலா அதிர்ச்சி அடைந்தாள்.

“ சொல்லியிருப்பா…… அம்மா அப்பிடிச்சொல்றதென்றால் பிள்ளைகள் நாலையும் கூட்டிவைச்சுத்தான் சொல்லியிருப்பா……… நல்ல கதை சொல்லிறாய் இப்ப நீ………… நீளந்தான் காணாது.” என்றுவிட்டு நலமடித்த நாம்பன் மாதிரி மூச்செறிந்தாள்.

தீபிகாவுக்கும் காவியனுக்கும் அத்தைக்கு ‘அப்பாவோட ஏதோ காணியோ வீடோ சம்பந்தப்பட்ட முறுகல் முரண்பாடு’ என்று மட்டும் தெரியுது, தமிழ் புரியாததில் விஷயம் முழுக்கப் பிடிபடவில்லை. முழிசியபடி இருவரையும் மாறிமாறிப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

கரும்பை முறித்தாற்போல வந்துவிழுந்த வார்த்தைகள் தடித்திருந்தாலும் தான் சொல்லவேண்டியதை அண்ணாச்சிக்குச் சொல்லிவிட்டேன் என்கிற திருப்தியுடன் மருமக்களுக்குக்கூட ‘குட் பை’ சொல்லாமல் வெளியேறினாள் அகிலா .

*

இவர்களின் சம்வாதங்கள் கடந்து அடுத்தமாதம் அகிலாவின் மகள் பிறந்தநாள் வந்தது.

வரதராஜன் காப்புறுதிக்குழுமம் ஒன்றின் ஏலவிற்பனையில் எடுத்த ‘ஒரு றாத்தல் பாண்’ வடிவிலான SUZUKI வான் ஒன்று வைத்திருக்கிறான், அதன் இருக்கைகள் சாய்வில்லாமல் சாப்பாட்டு மேசைக்கதிரைகள்போல 90 பாகைகளில் நிறுத்திக்கொண்டு நிற்கும், வழமையில் எப்படியும் முழுக்குடும்பமும் பிறந்தநாளுக்கு அதிலேறி நிறுதிட்டமாயிருந்தபடி வந்து சேர்வார்கள்.

இந்தப்பிறந்த நாளுக்கு வரதராஜனோ அவர்கள் வீட்டிலிருந்தோ யாரும் வராததைக் கவனித்து விண்ணானம் விசாரித்தவர்களுக்கு “அண்ணை கொஞ்சம் பிஸி அவருடைய ஒஃபிஸில ஏதோ ஓடிட்டிங் நடக்குதாம்” என்று சொல்லி ஓய்ந்துபோனாள் அகிலா, ஆனால் தொலைபேசியில்கூட வாழ்த்தாததிலிருந்து அண்ணன் கொஞ்சம் முடுக்கிக்கொண்டுதான் நிற்கிறார் என்பதை அவளால் ஊகிக்க முடிந்தது. ஒரேயொரு ஆண்பிள்ளையை வைத்திருக்கிறவருக்கு ஏன் உலகத்துச்சொத்துகள் மேல இவ்வளவு ஆசை வருகுதெண்டதுதான் தெரியவில்லை.

*

அந்த வீட்டைப்பற்றியோ காணியைப்பற்றியோ வர்ஷி இதுவரை நினைத்ததோ ஆசைப்பட்டவளோ அல்ல, ஆனால் இப்போது தன் சகோதரங்களின் சேட்டைகளைப் பார்க்கும்போது இவர்களுக்காகத் தான் எதுக்கு விட்டுக்கொடுக்கவேண்டும் என்ற எண்ணமே அவளுக்கிப்போ வருகிறது.

என்னோடு சம்பிரதாயத்துக்குக்கூட ஒரு வார்த்தை ஆலோசியாமல் ‘ நாங்கள் சொத்தைப் பங்கிடபோறம்…………… நீ கையெழுத்தை மட்டும் வை’ என்று இவை எப்படிக் கேட்பினம்? ஏன் என்ர அம்மா என்னை மட்டும் என்ன வேறு யாருக்கோ பெத்தவவோ……’

*

‘மனுஷன் தன் கொள்கைக்காகச் சீதனம் வேண்டாம் என்றால், எனக்கும் சீதனம் வேண்டாமென்று இவை எப்பிடி முடிவெடுக்கலாம், ஒரு விதத்தில, என்ன முட்டாளாக்க நினைக்கிற இவர்களிடம் என்னுடைய பங்கை வாங்கி குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் பராமரிப்பகங்களுக்குத்தான் கொடுக்கவேணும், இவையிட்டை விடப்படாது.’

‘மனிதரின் உறவுகளைக்கூட ஆப்புவைத்துப்பிரிக்கிற சக்தி இந்த சம்பத்துகளுக்கு இருப்பதை மண்ணுக்குள்ள போகிற மனுஷன் ஏன் கண்டு உசாராவதில்லை……’அல்லது தப்பாக யோசிக்கிறேனோ……

வர்ஷி தர்க்கங்களைத் தனக்குள் எடுத்து அடுக்கிக்கொண்டுபோனாள்.

*

“என்னை ஒன்றுக்குள்ளயும் இழுக்கப்படாது, நீங்களே கடிபட்டு குத்துப்பட்டு முடியுங்கோ, குஸ்தியில யாருக்காவது துண்டற முடியாமல் பாடென்றால் நான் அம்புலன்ஸுக்கு மட்டும் அடித்துச்சொல்லுறன், அம்மட்டும் ஆளைவிடுங்கோ.”

“ சோஷலிஸ்டுக்கு இதெல்லாம் வேடிக்கையா இருக்குப்போல……”

“ இலட்சியவாதிகளாலதான் உலகத்தின் பத்தாம்பசலிப்போக்குகளைத் திசை திருப்பமுடியும்………. ஒராளைப்பார்த்து பத்துப்பேர்மாற அது நூறாகி ஆயிரமாகிறதேயல்லாமல்……… ஒரு இரவிலை மாற்றங்கள் வந்திடாது”

“ இவர் துவங்கிட்டார்…… இதெல்லாந்தான் இயக்கத்தில படிப்பிச்சவையோ…………… ”

“இல்லைக்கண்ணா, இயக்கத்தில இன்னுங்கனக்கப் படிப்பிச்சவை, ஆனால் அதில சேரமுதலே சீதனம்போன்ற மானிட, சமூகவிரோத சமாச்சாரங்களில எனக்கென்று ஒரு உறுதியான கொள்கை இருந்ததாலதான்…… அதிலயிருந்து தடுமாறாமல் வழுக்காமல் சுயமரியாதையோட இருக்க முடிஞ்சுது.”

*

அகிலாவின் மனம் இப்படி விவாதித்தது;

’வீட்டுப்பிரச்சனைக்காக நீங்கள் அத்தையோட கோபிக்கவேண்டாமென்று தீபிகாவும் காப்பியனும் அழுகினம்’ என்று கவலைப்படுகிற அண்ணைக்கு நான்தான் வர்ஷியை ‘எனக்குச் சொத்துப்பங்குக்கு வேண்டாம்’ என்று சொல்ல வைச்சிருக்கிறேனென்ற சூக்குமம் ஏன் விளங்குதில்லை.’

அடுத்தமுறை வரதராஜன் போன்பண்ணினபோது சொன்னாள்:

“ நீ சொல்றபடி தற்போதைய மார்க்கெட் நிலவரத்தில எங்களுடைய வீடு நிலத்தின்ர பெறுமதியை நான் ஏற்றுக்கொள்ளுறன்…… அதில மாறுபாடில்லை……. ஆனால் அதோட இன்னொன்று மனச்சாட்சிப்படிபார்த்தால்…… வர்ஷி புருஷனோட சேர்ந்து தனக்குச் சொத்தொன்றும் வேண்டாம் என்றாலும், அந்தச்சொத்தில எங்கள் ஒவ்வொருவருக்கும் மூன்றிலொரு பங்குதான் பங்கிருக்கு றைட்?”

வேண்டாமென்றவளை…… பிறகுமேன் வலிஞ்சு இதுக்குள்ள இழுக்கிறாய்?

“ That is the just I mean…………… Then why don’t you accept the value of one third ”

“ உன்னளவுக்கு நான் படிக்கேல்லை…………எனக்குச் சரியாய் விளங்கேல்லை, நீ……… தமிழ்ல சொல்லு”

“ அப்ப நீ ஏன் சொத்துப்பெறுமதியின்ர மூன்றிலொன்றை வாங்கப்படாது……”

“ இதைத்தான் இவ்வளவுநாளும் பெண்சாதியோட சேர்ந்து யோசிச்சனியோ………”

சிறிது இடைவெளிவிட்டுக் குயுத்தியாகச்சொன்னாள்:

“ அப்ப இப்படிச்செய்யன்……… நான் ஆதனத்தின் மூன்றிலொன்றுக்கான பெறுமதியை உனக்குத்தாறன்…… நீ எனக்கு வீட்டையும் காணியையும் விட்டுத்தரச் சம்மதமென்று எழுதிவிடன்.”

ஒரு சத்தமும் வராமல் தொலைபேசியில் மூச்சுக்காற்று மட்டும் அம்பிளிஃபை செய்யப்பட்டு வந்தது.

“ நான்தானே ஊரிலபோய் செற்றிலாகப்போறன்………என்றனே, நான் எங்கே யாற்றை வீட்டில போய் இருக்கிறது?”

“தின்னவேலியிலதானே உனக்குப் ப்ளே கிரவுண்ட் மாதிரிச் சீதனக்காணியிருக்கே அதிலபோயொரு குடிலையும் முட்டியையும் வையன்.”

“ இதெல்லாம் நடக்கக்கூடிய காரியங்களே…… ஒரு தங்கைச்சி மாதிரியே பேசிறாய் நீ?”

“ நீ வழிப்பறிகாரன் மாதிரிப்பேசினால்…… நான் எப்படி உன்னோட தங்கைச்சியாய் பேசுவன் ”

“என்றாலும் உனக்குக் கொழுப்படி” என்றுவிட்டு போனைச் சத்தம் எழும்பும்படி வைத்தான்.

2012

* இவ்வேளையில் ஈழவிடுதலைக்கானபோரும் ஆயிரக்கணக்கான உயிரிழப்புகளுடன் முடிவுக்கு வந்தது, முள்ளிவாய்க்கால், ஆனந்தபுரம், மாத்தளன்,உடையார்கட்டு, புதுக்குடியிருப்பு என்று கிழக்கு வன்னிப்பகுதிகளில் அடைபட்டிந்திருந்த மக்களை ஈரநிலங்களில் முள்ளுக்கம்பி, தறப்பாள் முகாம்களில் கைதிகள்போல் அடைத்துவைத்திருந்த இலங்கை அரசாங்கம் பன்னாடுகளின் அழுத்தத்தினால் அவர்களைப் பகுதிபகுதியாக விடுதலைசெய்தது. அதன்பின் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டவர்களின் காணிநிலங்கள் மற்றும் ஆட்சியில்லாமல், புழங்காமலிருக்கும் வீடுகள் மனைகளை ஆய்வுசெய்ய ஆரம்பித்தது.

*

வர்ஷிக்கு இன்று அம்மா அப்பாவுடனும், கரும்புலியாகிப்போன சேரலாதன் உட்பட எல்லாச் சகோதரங்களுடனும் தங்கள் வீட்டிலிருந்து ஏதோவொரு நிகழ்வைக் கொண்டாடிக் களிப்பதைப்போலவும் கனவு வந்தது.

வரதராஜனும் அகிலாவும் கலந்து எதைப்பேசி என்ன முடிவுக்கு வந்தார்களோ, அகிலா மீண்டும் போன்பண்ணினாள்.

“ எடி வர்ஷி…………..வெளிநாட்டில இருக்கிற ஆட்களுக்குச் சொத்துக்களை எழுதிறதில, மாத்திறதில இப்போதைய மகிந்தவின் அரசு பல சிக்கலுகளைக் கிளப்பிக்கொண்டு வருகுது. நாங்கள் இந்த ஆண்டே இந்த வீட்டுப்பிரச்சனையைத் தீர்க்காட்டி விஷயம் மேலும் சிக்கலாகிவிடுமோவென்று பார்க்கிறன். உன்னாணை உந்த கானா, தான்ஸானியாப் பயணங்களை அடுத்த வருஷத்துக்கு வைச்சுக்கொண்டு ஊருக்கு வந்தொருக்கால் அந்தக் கையெழுத்து அலுவலை முடிச்சுவிடு. புண்ணியம் கிடைக்கும். தம்பியின்ர டெத்- சேர்டிஃபிகெற்றும் வேணுமென்டதில அதையும் எடுத்திட்டம், எல்லாத்திலயும் எங்களுக்கும் பயங்கரச்செலவு தெரியுந்தானே…………… ”

“அக்கா டிக்கெட் விலையைக்கண்டுதான் நாங்களே சிலோனுக்குப் போகப் பயந்திருக்கிறம், அவசரமென்றால் நீயும் அண்ணையும் உங்களோட சேர்த்து எனக்குமொரு டிக்கெட் போட்டுத்தாங்கோவன். ”

இதைக்கேட்டவுடன் அகிலா உள்ளுக்கிழுக்கவும்………

“ ஏனக்கா உறுதிப்பாட்டுப் பத்திரத்தை அங்கையுள்ள ஒரு லோயரைக்கொண்டு எழுதுவிச்சுப்போட்டு அதை இங்கே ஒரு லோயரோ, நொத்தாரிஸோ, எம்பாஸி ஒஃபிஷர் முன்நிலையிலோ கையெழுத்து வைச்சி அனுப்பிவிட்டால் போதும் என்கிறார் இவர்.”

“ அதெல்லாம் நனைச்சுச் சுமக்கிற வேலை ……………போனமா கையெழுத்தை வைச்சமா பதிஞ்சமா என்றிருக்கிறதை விட்டுப்போட்டு………”

ஏன் இப்படி அவதிப்படுகிறியள்……………… உங்களுடைய கையில வீடு வளவு வந்தவுடன அதை விக்கிறமாதிரி ஏதும் பிளான் கிளான் வைத்திருக்கிறியளோ……….”

“ விக்கிற பிளான் ஒன்டுமில்லை, லூஸுமாதிரிக்கதைக்காத………… வீட்டு வாடகைக்காசையல்லே வரதராஜன் பிள்ளையர் தொடர்ந்து அமுக்கிக்கொண்டிருக்கிறார்……..”

வாடகைக்காசுக்காகவுந்தான் அகிலா துடிக்கிறாள் என்கிற சங்கதி வர்ஷிக்கு மெல்லப் புரிந்தது. வாடகையை அமுக்குகிற அண்ணாவும் அகிலாவுக்கு வரதராஜனாக மாறிவிட்டிருந்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து ஒரு ஞாயிறன்று மும்முனை உரையாடல் ‘மோட்’டில் போனை வைத்துக்கொண்டு அகிலாவும் வரதராஜனும் திரும்பவும் கையெழுத்துக் காலாட்ஷேபத்தை வர்ஷியுடன் நடத்த வந்தனர்.

வர்ஷி உறுதியான குரலில் பிசிறில்லாமல் சொன்னாள்:

“தரனுக்கு உவப்பில்லாததில எனக்குச் சீதனம் எதுவும் எழுதுப்படேல்லை என்றாலும் சட்டப்படி எங்களின் வீட்டில எனக்குள்ள பங்கு பாக்கியதை என்னவென்று எனக்குத்தெரியும்……… சரி……… ‘கையெழுத்தைவை’ ‘கையெழுத்தைவை’ என்று குதிக்கிற உங்களில் யார்……… ‘வாடி வர்ஷி இந்த வீட்டுவிஷயத்தில உன்னுடைய எண்ணம் நிலைப்பாடு என்னவென்று’ என்னோட கலந்து கதைச்சியள்….. இதுவரையிலான வீட்டிலிருந்து கிடைத்த வாடகையை எனக்கு ஒரு வார்த்தை சொல்லாமல்த்தான் நீங்கள் எடுத்து உங்கள்பாட்டுக்கு அனுபவித்துக்கொண்டிருக்கிறியள்…………………”

“வாடகைக்காசில சல்லிக்காசு நான் எடுக்கேல்லை” அகிலா இடையீடு செய்தாள்.

“ 2014 இல நீ சிலோனுக்குப்போனபோது ஐம்பதினாயிரம் தந்தது வாடகையிலிருந்தென்றது நினைவிருக்கட்டும்.”

“ அதைக்கூட ஒரு லட்சமாய்த்தர உனக்கு முடியேல்லைப்பார்”

“ விடுங்கோ…………….விடுங்கோ……. உங்கட சண்டையை பிறகொருநாளைக்கு வையுங்கோ…”

“ வாடகைக்காசுகள், கனிமரங்களின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் உங்களுக்கு கையெழுத்து வைச்சுத்தரவாற எனக்கொரு டிக்கெட் போட்டுத்தரக் கசக்குது, மனம் வருகுதில்லை, அப்படியான நீங்கள் என்னிடம் ஆதனத்தில் பங்கை எதிர்பார்க்கிறது எந்தவகையில நியாயம்? ”

“ இதுதான் என்னுடைய முடிவு, இப்ப சொல்லுறன் கேளுங்கோ……. கலாதரன் சீதனம் கோரவில்லை அது அவரது பொலிஸி. ஆனால் எனக்கான பிதுரார்ஜித சொத்துரிமையை நான் விட்டுத்தருவதாயில்லை. முழுச்சொத்தினதும் இன்றைய பெறுமதியின் மூன்றிலொரு பங்கு என்ன எங்கிறது உங்களுக்குத்தெரியும், அதை நீங்கள் எனக்குத் தந்தாலே தவிர நான் எதிலேயும் கையெழுத்து வைக்கமாட்டேன்.” என்றுவிட்டு வர்ஷியே தொடர்பைத்துண்டித்தாள். மீண்டும் மீண்டும் அகிலாவும் வரதராஜனும் அழைத்தபோது வர்ஷி போனை எடுக்கவில்லை.

* *

கொக்குவிலில் பிரிடிஷ்காரரின் ஸ்டைலில் அமைந்திருந்த சாம்பசிவன் வாத்தியாரின் வளமனை யாழ்ப்பாணம் Security Forces Headquarters (SFHQ) தலைமைக் கட்டளை அதிகாரி பிரிகேடியர் (இப்போது லெப்டினென்ட் ஜெனெரல்) தயா இரத்தினநாயகவின் கண்களை உறுத்திக்கொண்டிருக்கவும் அது இராணுவத்தினால் கையகப்படுத்தப்பட்டது. அந்தவீட்டுக்கு இறங்கும் கிளைவீதியின் முகப்பில் 2 காவல் அரண்களும், வாசலில் இன்னும் 2 காவல் அரண்களும் அமைக்கப்பட்டு அதனுள் 24 மணிநேரம் இராணுவத்தினர் விறைப்பாகநின்று காவல்காக்கின்றனர். அவ்வளவின் பிரதான நுழைவாசலில் SFHQ தலைமைக் கட்டளை அதிகாரியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலம் என்பதான அறிவிப்புப்பலகை 3 பாஷைகளிலும் டாலடித்துத் தொங்குகிறது

*

கலாதரன் வந்ததும் வர்ஷி நடந்த மும்முனை உரையாடலைப் பற்றிச் சொல்லவும், முழுவதையும் கேட்டவன் சொன்னான்:

“ எங்கடைய அப்பா ஒத்தி வைச்ச காணிகள் ஒவ்வொன்றாய் விலைப்பட விலைப்பட நாங்கள் கொட்டிலைப் பிடுங்கிப் பிடுங்கி நட்டு வாழ்ந்த காலங்களின் அனுபவங்கள் எனக்கிருக்கு. மனுஷனுக்கு வாழுறதுக்குக் கொஞ்சம் நிலந்தேவைதான். உங்கள் மூன்றுபேருக்கும் மனசாரத்தெரியும் சுனாமிபோலொரு பேரலைவந்து லண்டனைக் கடலுக்குக் கீழ கொண்டுபோனாலே தவிர….. நீங்கள் எக்காலத்திலும் யாழ்ப்பாணம்போய் அந்த வீடுவாசல்ல வாழப்போறதில்லை. அதிலயும் பெற்றாரோடு கொஞ்சக்காலம் சந்தோஷமாய் வாழ்ந்தீர்கள்தானே…………. அந்த அனுபவத்தோடு திருப்திப்படுங்கோவன். அதைவிட்டிட்டு நீரும் அவர்களோடபோய் பங்குச் சண்டையில் முட்டுவதைப் பார்க்க எனக்கு அந்தரமாயிருக்கு.”

இல்லை என்னுடைய சிந்தனை என்னென்றால், எனக்குரிய பங்கை வாங்கி ஏதிலிகள் பராமரிப்பு இல்லம் ஒன்றுக்கு வழங்கிவிடலாமென்றுதான் நினைக்கிறன்”

“ அது நல்ல எண்ணமும் தீர்வுந்தான், ஆனாலும் உம்மைக் கட்டிய காலந்தொட்டு தனக்குப் பின்னால ஒரு ஆயுதக்கும்பல் இருக்கிற துணிச்சலில்த்தான் சாம்பசிவன் வாத்தியார் குடும்பத்தை வெருட்டி வர்ஷியைக் கட்டினவன் என்றொரு அவப்பேச்சு என் முதுகுக்குப்பின்னால மிதந்துகொண்டிருக்கு. இப்போ சகோதரங்களோட சண்டைவலித்துச் சொத்தில பங்கையும் எடுத்தமோ எமக்கு இன்னுமொரு அவப்பெயரும் வந்து சேரும்.”

கலாதரனின் கருத்து வர்ஷிக்கும் உவப்பாகப்படவும் திரும்ப அவர்களுக்கு போன் செய்தாள்.

“ வேண்டிய பத்திரங்கள் எல்லாத்தையும் தயார் பண்ணுங்கோ…………… எப்ப எங்கே, எத்தினை இடத்தில வேணுமென்றாலும் நான் கையெழுத்து வைத்துத்தாறன்.”

*

கொக்குவில் மேனாள் சாம்பசிவன் வாத்தியார் வளமனையில் புத்தபிக்குகள் கூடிப் ‘பிரித்’ ஓத அவ்வொலியின் மத்தியில் அங்கே பிரிகேடியர் மனைவி காய்ச்சியபாலையும் , கிரிபத்தையும் குடும்பத்தவர்களுக்கும், வந்திருக்கும் உயர் இராணுவ அதிகாரிகளுக்கும் பரிமாறப்பட்டுக் கொண்டிருப்பதுவும், இரவு நடக்கவிருக்கும் கோலாகல விருந்துக்கான ஆயத்தங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதுவும் லண்டனுக்கும்-, என்ஃபீல்டுக்கும்-, பிறேமனுக்கும் இனித்தான் தெரியவரும்.

*

01.04.2018 வசந்தம். பெர்லின்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *