மனித இயந்திரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 12, 2018
பார்வையிட்டோர்: 8,289 
 
 

விமானம் கீழே இறங்கிக்கொண்டிருந்தது.

`குப்பை! குப்பை!’ என்று கூவியபடி, உதட்டுடன் ஒட்டிய  நிரந்தரமான முறுவலுடன் விமான பணிப்பெண் பயணிகளின் இடையே விரைந்தாள்.

வேலு தன் சட்டைப்பைக்குள் வைத்திருந்த காகிதத்தை எடுத்து அவள் பிடித்திருந்த பெரிய பிளாஸ்டிக் பைக்குள் எறிந்தார். சில வாரங்களாகவே தான் அனுபவித்த குழப்பம் அதனுடன் தொலைந்துவிட்டதாக ஓர் எண்ணம் உதிக்க, சிறு சிரிப்பில் உதடுகள் விரிந்தன.

தானும் அவரது மகிழ்ச்சியில் பங்கு கொள்பவள்போல் அவரைப் பார்த்துப் புன்னகைத்தாள் பணிப்பெண். வெளிநாட்டில் சில காலத்தைக் கழித்துவிட்டு,  தாய்நாடு திரும்பும் எத்தனைபேரை அவள் பார்த்திருக்கிறாள்!

அச்சிரிப்பே அவளுடன் ஒரு நெருக்கத்தை உண்டுபண்ண, “என் மகளுக்குக் கல்யாணம்! அதுக்குத்தான் போறேன்,” என்று தெரிவித்தார். சொல்லும்போதே ஆனந்தமாக இருந்தது.

`வெளிநாடு போனால், கைநிறையச் சம்பாதிக்கலாம்,’ என்று, கல்யாணமாகி ஒரே மாதத்தில் மலேசியாவுக்குச் சென்றிருந்தார். மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் மனைவியைப் பார்க்க முடிந்தது. அவர் ஒவ்வொரு முறை வந்து போகும்போதும் ஒரு குழந்தைக்கு வித்திட்டிருப்பார். சும்மாவா? ஒவ்வொரு முறையும் இரண்டு பவுனுக்குக் குறையாது, சங்கிலி, வளை, தோடு என்று மனைவிக்கு வாங்கிப்போவாரே! மீனாட்சி அவர் அடுத்த முறை வரும்வரையில் நகைகளை எல்லாருக்கும் காட்டிக் காட்டிப் பெருமைப்படுவாள்.

வேலுவால் அவ்வளவு எளிதாக திருப்தி அடைந்துவிட முடியவில்லை. மூத்தவள் ரஞ்சனி பாலுக்காகச் சிணுங்கும்போதும், தளர்நடை பழகும்போதும் பக்கத்திலிருந்து ரசிக்கக் கொடுத்துவைக்கவில்லை. எதிர்ப்படுகிற சிறு குழந்தை ஒவ்வொன்றையும் பார்த்து, `என் ரஞ்சனி இப்போது இவ்வளவு பெரியவளாக இருப்பாளா?’ என்றெழுந்த யோசனையைத் தவிர்க்க முடியவில்லை.

மகள் கையைப் பிடித்து, பள்ளிக்கூடத்திற்கு அழைத்துச் சென்றதில்லை. பூப்படைந்தபோது, `நமக்கு ரொம்பத்தான் வயதாகிவிட்டதோ!’ என்று பெருமையும் கவலையுமாக  அவளருகில் நிற்கவில்லை.

யோசிக்கும்போதே அயர்ச்சியாக இருந்தது. ஆனால், நல்ல தந்தையாக இருந்திருக்கிறோம் என்று திருப்திப்பட்டுக்கொண்டார்.

தான்தான் சிறுவயதில் படிக்கவும் வசதியற்று, ஏழ்மையில் உழன்றுவிட்டோம், தன் குழந்தைகளாவது நன்றாகப் படித்து முன்னேற வேண்டும் என்று உடலை வருத்தி, அடுப்படியில் உழன்றார். ஒரு கெட்ட பழக்கத்திற்கும் இடம் கொடுக்காது, சம்பாதித்ததில் பெரும்பகுதியை மனைவிக்கு அனுப்பினார். வருமான வரி கிடையாது என்பதால் நிறையவே சேமிக்க முடிந்தது.

தன் சம்பாத்தியத்தில் மனைவி வாங்கிய வீட்டை இன்னும் பார்க்கவில்லை. வீடு கிடக்கிறது, வெறும் உயிரற்ற பொருள்! கல்யாணத்தின்போது பூரித்து நிற்கும் மகளைப் பார்க்கவேண்டும் என்ற ஆசை வளர்ந்தது.

கடை முதலாளி, “வெளிநாட்டிலிருந்து சமையல் செய்ய வர்றவங்களுக்கு மட்டும்தான் பர்மிட் கொடுப்பாங்களாம். அப்போ, யார் பரிமாறுவாங்களாம்?” என்று அலுத்தபோது, வேலுவுக்குப் பயம் வந்தது. பரிசாரகர்கள் பற்றாக்குறையால் பல சாப்பாட்டுக்கடைகள் மூடப்பட்டது அவருக்கு மட்டும் தெரியாதா, என்ன?

“உள்ளூரிலே எவனாவது வரமாட்டானா, மொதலாளி?”

“இங்க இருக்கிறவங்க  நாலு பங்கு சம்பளமில்ல கேக்கறாங்க? அப்போ, நாம்ப இட்லி, தோசையோட வெலையைக் கூட்டினாத்தான் கட்டுப்படியாகும். யாரு சாப்பிட வருவாங்க?”

வேலு பதட்டமாக, “நான் பரிமாறிட்டுப்போறேன். என்னோட சம்பளத்தை மட்டும்..,” என்று இழுத்துவிட்டு, “மகளுக்குக் கல்யாணம் வருது,” என்று அசட்டுச்சிரிப்புச் சிரித்தார்.

அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து, காலைப் பலகாரத்துக்கான ஆயத்தங்களை ஆரம்பிப்பார். பத்து மணிக்கு பகல் உணவைத் தயார் செய்யவேண்டும். இரண்டு மணியிலிருந்து ஓரிரு மணி சற்று ஓய்வு. அதன்பின், இரவு ஒன்பது மணிவரை இடைவிடாத உழைப்பு. மகளைக் கல்யாண கோலத்தில் பார்க்கும் இன்பக்கனவில் உடல் இளைப்பும், அடிக்கடி வரும் சளி, காய்ச்சலும் துச்சமாகப்பட்டன.

கல்யாணப் பத்திரிகையுடன், அவரை அதிரவைத்த அந்தச் செய்தியும் வந்தது.

சாப்பாட்டுக்கடைக்கு வந்த அம்மாளிடம் முறையிட்டார்: “தங்கச்சி! என் மகளுக்குக் கல்யாணம். எனக்கு ஊருக்குப் போக ஆசையா இருக்கு,” என்று முறையிட்டுவிட்டு, “`நீங்க வரவேணாம், பிளேனுக்குக் கொட்டி அழற காசில தங்க நகை வாங்கி அனுப்பிடுங்கன்னு!’ மனைவி சொல்றாங்க! என்னா செய்யறதுன்னு புரியலே!” என்றார் அழமாட்டாக்குறையாக.

“குடும்பத்துக்காக இவ்வளவு காலமா உழைச்சிருக்கீங்க. நீங்க போனா, `ஏன் வந்தே?ன்னு          விரட்டிடுவாங்களா, என்ன! சந்தோஷமா போயிட்டு வாங்க!” என்று ஆதரவு வர, உற்சாகம் மீண்டுவந்தது. பக்கத்திலிருந்த அடகுக்கடையில் நான்கு பவுனில் மகளுக்கு ஒரு சங்கிலி, மாப்பிள்ளைக்கு ஒரு கடிகாரம் என்று வாங்கிக்கொண்டார். பிரயாணத்தின்போது பெட்டியில் வைத்தால் யாராவது எடுத்துவிடலாம் என்று பயமெழ, உடனே அவைகளை  அணிந்துகொண்டார். அடிக்கடி தன் பிம்பத்தைச் சிறிய கண்ணாடியில் பார்த்துப் பூரித்தார்.

“விமானம் சென்னையை அடைந்துவிட்டது. பயணிகள்  தத்தம் இருப்பிடங்களிலேயே அமர்ந்திருக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்,” என்ற அறிவிப்பை யாரும் லட்சியம் செய்யவில்லை. பரபரப்புடன் எழுந்தனர்.

நீண்ட காலத்திற்குப்பிறகு சந்திக்கப்போகிறோம்! பெண்டாட்டி பிள்ளைகளுக்கும் தன்னைப்போல்தானே மகிழ்ச்சியாக இருக்கும்!

“எங்கே வந்தீங்க?” எடுத்த எடுப்பில் கேட்டாள் மனைவி மீனாட்சி. “கடுதாசி கிடைக்கலே?”

“டேய்! அப்பா வந்திருக்காருடா!” என்று தொனியைச் சற்று மாற்றினாள், மகனைக் கண்டதும்.

தான் எண்ணிக்கொண்டிருந்ததுபோல் இவன் படித்துப் பெரிய ஆளாக ஆகமாட்டான் என்று அவனைப் பார்த்ததுமே தெரிந்தது. மைனர்போல் இருந்தான். அருகில் வரும்போதே துர்வாடை. அலட்சியமாக அவரை ஒரு பார்வை பார்த்துவிட்டு, எதுவும் பேசாமலேயே அப்பால் நகர்ந்தான்.

`நான் மாடா ஒழைச்சுச் சம்பாதிச்ச காசைக் கரியாக்கிட்டியாடா!’ என்று மனத்துக்குள் அழுதார்.

ஏதோ நினைத்துக்கொண்டதுபோல் திரும்பி, “கடிகாரத்தைக் கொண்டாங்க பாக்கலாம்,” என்று கையை நீட்டினான் மைனர்.

“நீ சம்பாதிச்சு வாங்கிக்க,” என்று கத்திய அப்பா அவனுக்குப் பழக்கமில்லாதவர்.

கடைக்குட்டி யாரோ புதிய மனிதர் வந்திருக்கிறார் என்று பயந்தவனாக, தாயின் பின்னால் ஒளிந்துகொண்டான்.

“பிள்ளைங்களுக்கு என்ன வாங்கிட்டு வந்தீங்க?” மீனாட்சியின் அடுத்த கேள்வி. தனக்கும் ஏதாவது நகை வாங்கி வந்திருக்கமாட்டாரா என்ற ஆசையில் எழுந்தது.

“நீ வேற! பிளேனுக்கே ஆயிரக்கணக்கிலே செலவழிஞ்சுடுச்சு!” என்று முணுமுணுத்தபடி, சட்டைக்காலரை இழுத்துவிட்டுக்கொண்டார். இவர்களுக்கெல்லாம் சங்கிலியும், பரிசுகளும் ஒரு கேடு!

“மலேசியாவிலே பெரிய வேலை பாக்கறே! எங்களுக்கெல்லாம் என்ன கொண்டுவந்தே?” என்ற உறவினர்களிடம், “என்னைத்தான் கொண்டுவந்தேன்,” என்றார். ஆபத்து என்றாலும் மனைவிக்கு எந்த உதவியும் செய்யாதவர்கள்! தான் அயல்நாட்டிலிருந்து மூட்டை மூட்டையாகப் பணத்தைக் கட்டிக்கொண்டு வருவதுபோல் அல்லவா கேட்கிறார்கள்!

கல்யாணம் முடிந்ததும், மாப்பிள்ளை, “ஒங்க கடிகாரம் நல்லா இருக்கு. தங்க செயின் மாட்டியிருக்கீங்க?” என்று நைச்சியமாக விசாரித்தான்.

“இதுவா? கர்ணனோட கவச குண்டலம் மாதிரி. எப்பவும் என் கையிலேயேதான் இருக்கும். குளிக்கிறப்போதான் கழட்டுவேன்னா பாத்துக்குங்களேன்!” என்று அவன் வாயை அடைத்தார்.

திரும்பும்போது, விமானத்தில் அதே பணிப்பெண். தாய்நாட்டுக்குப் போகிறபோது அவரிடம் இருந்த உற்சாகம் வடிந்திருந்தது அவள் கண்களுக்குத் தப்பவில்லை.

“பிடிச்சவங்க எல்லாரையும்விட்டுப் போறோமே அப்படின்னு வருத்தமா இருக்கீங்க போல இருக்கு?” என்று விசாரித்தாள்.

`பிடிச்சவங்களா! அவங்களைப் பொறுத்தவரைக்கும் நான் சம்பாதிச்சுப்போடற ஒரு இயந்திரம். அவ்வளவுதான். நானும் மனுஷன்தான், எனக்கும் உணர்ச்சிங்க உண்டுன்னு யாரும் நினைக்கலே!’

தன்னைப்போன்றவர்களின்  அவல வாழ்க்கை இவளுக்கு எங்கே புரியப்போகிறது என்று நினைத்தவராக, எதுவும் பேசாது, தலையைக் குனிந்துகொண்டார் வேலு.

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *