கடற்கரையில் அமர்ந்திருந்தனர் சூர்யாவும், ராஜேஸ்வரியும்.
ஒரு வயதான தம்பதியினர் மணலில் நடந்து வந்து கொண்டிருந்தனர்.
யாரை யார் தாங்கிப் பிடித்திருக்கிறார்கள் என்பதே தெரியாத அளவிற்கு, ஒருவர் மீது ஒருவர், ஆதரவாக சாய்ந்தபடி நடந்து வந்தனர்.
அந்தப் பெரியவரை, மெதுவாக மணலில் அமர வைத்துவிட்டு, அந்த அம்மாவும் மெதுவாக அமர்ந்தார்!
“அடடா…! வயசாயிட்டா, நானும் இப்படித்தானே இருப்பேன்! இந்த வயசான அம்மாபோல, என் மனைவியும் என்னை கவனிச்சுக்குவாளா…?’ என்று நினைத்த சூர்யா, திரும்பி மனைவியைப் பார்த்தான்.
அதே காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி, “அங்க பார்த்தீங்களா! இந்த வயசுலயும் ஒருத்தருக்கு ஒருத்தர் எவ்வளவு அன்பா, அனுசரணையா இருக்காங்க! நம்ம பசங்களும் வயசானா, இப்படித்தானே இருப்பாங்க…!
அவங்களுக்கும், அந்தம்மா மாதிரி, பொறுப்பா இருக்குற பொண்ணுங்களா பார்த்து கட்டி வைக்கணுங்க…’ என்றாள்.
“அடடா…! “மனைவி’ என்ற இடத்தை விட “தாய்’ என்னும் இடம் எவ்வளவு உயர்ந்தது…!’ என எண்ணி, ஆச்சரியப்பட்டான் சூர்யா.
– ப. உமாமகேஸ்வரி (25-1-12)