மனம் ஒரு குரங்கு!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 3, 2013
பார்வையிட்டோர்: 8,214 
 
 

உடம்பெல்லாம் கோபத்திலும் அவமானத்திலும் பதறியது வரதனுக்கு.

நாலு பேர் எதிர்ல வச்சு எப்படி மட்டமா பேசிட்டாரு இந்த மொதலாளி, அதுவும் ஒரு சின்ன தப்புக்காக?

வார்த்தீங்களா அது? நெருப்புத் துண்டங்களா இல்லே எடுத்து வீசினாரு?

இன்னா சொன்னாரு?

“ஸ்பானரு புடிக்கத் தெரியாத பயலுவளெல்லாம் எதுக்குடா பேண்ட்டை மாட்டிக்கினு வேலைக்கு வர்றீங்க?”

அத்தோடு நிறுத்தியிருந்தாலும் பரவாயில்லையே!

“எந்த எந்த ப்ளட்பாரத்திலேயோ கெடந்த பொறம்போக்குப் பசங்களை வேலைக்கு வச்சிகிட்டேன் பாரு! எம்புத்தியத்தான் எதாலயாச்சும் அடிச்சிக்கணும்னு” சொன்னாரே! அதை நெனைக்கிறப்பவே வரதனுக்கு கோவத்தில இரத்தம் சூடாயிற்று.

‘இவரு இன்னான்னு நெனச்சிக்கினு கீறாரு என்னை? எங்கப்பன் சரியில்லாம நாங்க ப்ளட்பாரக் குடித்தனந்தான் செஞ்சோம், இல்லீங்கிலியே? ஆனா அப்படி பொறம்போக்குப் பயலாட்டம் நா திரிஞ்சிக்கினு இருந்திருந்தா நாலெழுத்து படிச்சிருப்பேனா, இல்லே இந்த வேலைக்குத்தான் வந்திருப்பனா? நாலு பேரு மெச்சறாப்போல நானும் என் குடும்பத்தோட ஒரு ஓட்டு வூட்ல கொடக்கூலிக்கு இருக்கறேன்னா, நா ஒழுங்கா இருந்ததினால தானே? இப்பிடி என்னைய அவமானப்படுத்தி என் வவுத்தெரிச்சலைக் கொட்டிக்கிறாரே, இவுரு என்ன கதி ஆவப்போறார்னு நானு பாக்கத்தானே போறேன்?’

மனசு தாங்காமல் பொறுமிக்கொண்டும் சபித்துக்கொண்டும் வந்தவனை தெரு முனையிலேயே எதிர்கொண்டான் தங்கை மகன் சாரதி.

இவன் தலையைக் கண்டதுமே,

“மாமா, மாமா! அம்மா இருவது ரூவா வாங்கியாரச்சொல்லிச்சு! சாப்பாட்டுக்குக் காசில்லையாம்!” என்றான்.

வரதனுக்கு கோபம் மடை திறந்துக் கொண்டது.

“போடா, போ! ஒங்கப்பன் சம்பாரிக்கிறதையெல்லாம் குடிச்சுப் போட்டுட்டு வருவான். ஒங்கம்மா பெரிய கண்ணகி, நளாயினி பரம்பர! புருஷங்காரன தட்டிக் கேக்க மாட்டா! துட்டு வாங்க மட்டும் கரீக்டா மாமங்காரங்கிட்ட ஒன்னைய அனுப்பி வப்பா! போ! போய்ச் சொல்லு! மாமன் வூட்டுக் கொல்லையில பணம் ஒண்ணும் மரத்தில காய்க்கலேன்னு!” என்றான் எரிச்சலுடன்.

சாரதி பயத்துடன் தயக்கமாய் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டே சென்றான்.

தெருவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சுவாமி வீதி ஊர்வலம் வந்து கொண்டிருந்தது. பெருமாளைப் பார்த்து கன்னத்தில் ஒரு தட்டுப் போட்டுக்கொள்ளக் கூடத் தோன்றாமல் கோபம் கொஞ்சம் கூடக் குறையாமல் விர்ரென்று வீட்டினுள் நுழைந்து நீள வராந்தாவைக் கடந்து தன் போர்ஷனுக்குள் நுழைந்தான்.

எல்லா குடித்தனக்காரர்களும் கையில் அர்ச்சனைத் தட்டை ஏந்தி வாசலில் கும்பலாய் நின்று கொண்டிருந்தனர். செல்வியும் கைக்குழந்தை வீருவை இடுப்பில் இடுக்கியபடி கையில் ஏந்திய அர்ச்சனைத் தட்டோடு நின்றிருந்தாள்.

காக்கி உடுப்பை மாற்றி லுங்கிக்குள் நுழைந்தபோது வாசலில் வீருவின் அலறல் கேட்டது.

வரதன் என்னவோ ஏதோவென்று பதறிப் போய் வாசலுக்கு விரைந்தபோது குழந்தை கண்ணை மூடிக் கொண்டு கதறிக் கொண்டிருக்க, அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு செல்வி குழந்தையை மடியில் போட்டுக்கொண்டு நின்ற இடத்திலேயே உட்கார்ந்திருந்தாள்.

“சினிமா கொட்டாயிக்குப் போனாலும் சரி, சாமி வாசல்ல வந்தாலும் சரி, இந்த பொம்பிளைங்களுக்கு ஒரே ஆத்திர அவசரந்தான்! நெதானமேயில்லே! இப்பப்பாரு! பச்சக்கொழந்த கண்ணில கற்பூரத் தாம்பாள மொனை பட்டு கொழந்த எப்படித் துடிக்குது பாரு!” என்று முதல் போர்ஷன் கேசவ நாயக்கர் பொதுவாக எல்லோரையும் சத்தம் போட்டுக் கொண்டிருந்தார்.

“எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க! கொழந்தைய உடனே டாக்டர் கிட்டே இட்டுக்கினு போவலாம், கௌம்புங்க!” என்றாள் செல்வி அழுகையினூடே.

உள்ளே ஓடி ஒரு சட்டையை எடுத்து மாட்டிக் கொண்டு, கைக்குக் கிடைத்த பணத்தையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்த வரதன், வீறிடும் குழந்தையை தோளில் சார்த்திக்கொண்டு தெருவில் இறங்கினான். டாக்டர் வீடு அடுத்தத் தெருவில் தான். பதட்டத்தில் எதிரே வந்த ரிக்ஷாவை நிறுத்தி ஏறிக் கொண்டார்கள்.

வழக்கமாக அவர்கள் போகும் குழந்தைகள் டாக்டர் கையை விரித்து விட்டார்.

“இது கண் டாக்டர் பார்க்க வேண்டிய கேசு! உடனே எடுத்துக்கிட்டு ஓடுங்க!” என்றார்.

மறுபடி ரிக்ஷா சவாரி!

‘படவட்டம்மா! தாயே! குலதெய்வமே! என் கொழந்த கண்ணைக் காப்பாத்திரும்மா!’

வழியில் ஒரு மாதா கோயில் தென்பட ‘கர்த்தரே! குழந்தையைக் காப்பாற்றும்!’ என்று மதபேதமில்லாமல் பிரார்த்தனை செய்து கோண்டான்.

சின்னக் குழந்தை கண்ணில் தாம்பாள முனை கிழித்து தூக்கிக்கொண்டு வருகிறார்கள் என்றதும், கண் டாக்டர் க்ளினிக்கில் கூடியிருந்த கூட்டம் தானாக வழி விட, டாக்டர் குழந்தையின் கண்களைப் பரிசோதித்தார்.

ரோஸ் நிற திரவம் ஒன்றை குழந்தையின் கண்களில் விட, கண் எரிச்சலிலோ அல்லது பயத்திலோ குழந்தை வீறிட்டது மறுபடி.

“வலது கண்ணில லேசா ஒரு கீறல் விழுந்திருக்கு. மருந்து போட்டிருக்கேன். நாளைக்காலையில பார்த்திட்டுத்தான் எதுவும் நிச்சியமா சொல்ல முடியும். ஆனா ராத்திரி முழுக்க கொழந்த கண்ணைக் கசக்கிடாம பார்த்துக்கிடணும் நீங்க. அப்பத்தான் கொழந்த கண்ணைக் காப்பாத்த முடியும்!” டாக்டர் தீர்மானமாகச் சொல்லி விட்டார்.

குழந்தையின் அழுகை இப்போது சிறு சிறு விசும்பல்களாக மாறியிருக்க, ரிக்ஷாவில் ஏறி வீடு வந்து சேர்ந்தார்கள்.

இரவு முழுவதும் வரதனும் செல்வியும் கண்ணைக் கொட்டாமல் குழந்தையின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார்கள்.

‘அப்பா! வீரகேசவப்பெருமாளே! வைகுண்ட ஏகாதசிக்கு வூடு தேடி வந்தியே? ஒன்னையக் கையெடுத்துக் கூடக் கும்பிடாம தெனாவெட்டா வூட்டுக்குள்ளே போனேனே, அதுக்காவ எனக்கு இந்த தண்டனையைத் தந்தியாப்பா? என்னைய என்ன வேணா செய்யி பெருமாளே! ஆனா ஒன்னைய வேண்டிக்கினு பொறந்த புள்ள, பேரு கூட ஒம் பேரு தானே வச்சிருக்கேன், வீரகேசவன்னு, அத்தக் காப்பாத்திக் கொடுத்திரு பெருமாளே! படவட்டம்மா, தாயே! குலதெய்வமே! என்னைய கை விட்டுராதேம்மா! தை மாசம் குடும்பத்தோட வந்து ஒனக்கு பொங்கல் வக்கிறோம்!’

‘தாய் தகப்பன் சரியில்லாம ப்ளாட்பாம்ல ‘அம்போ’ன்னு அநாதி மாதிரி கெடந்த எனக்கு வேலை கத்துக் கொடுத்து என்னியும் ஒரு மனுஷனா ஆக்கினாரே, அந்த மொதலாளியைப் போய் சாபம் வுட்டேனே! அதுக்குத் தான் இந்த சோதனையா? என்னையை மன்னிச்சிரு பெருமாளே! இனிமே நிச்சியமா மொதலாளி கிட்டே விசுவாசமா நடந்திப்பேன்’.

‘அய்யோ! என்னோட ஒரே தங்கச்சி, எதுக்கும் வக்கில்லாத குடிகாரப் புருஷனோட வாழறவ, சோத்துக்கு கதியில்லாம நேத்திக்கு கொழந்தப் புள்ளையை துட்டு கேக்கச் சொல்லி அனுப்பிச்சாளே, அவனை வெரட்டியடிச்சேனே, அந்த பாவத்துக்கு இப்போ அனுபவிக்கிறேனா தெரியலியே பெருமாளே! அண்ணங்காரன் ஒருத்தன் ஆதரவா இருக்கேங்கிற நெனைப்பில தானே அந்தப் பொண்ணு வாழ்ந்துக்கிட்டிருக்கு? அது மனசைப்போயி நோகடிச்சேனே பாவி!’ வரதன் மௌனமாக அழுதுக் கொண்டிருந்தான்.
பொழுது எப்போ விடியும் என்று காத்திருந்தார்கள் வரதனும் செல்வியும். திரும்ப வீட்டு வாசலில் ரிக்ஷா. குழந்தையைத் தூக்கிக்கொண்டு கண் டாக்டரிடம் போய் பதைக்கும் மனத்தோடு உட்கார்ந்தார்கள் இருவரும்.

‘டாக்டர் நல்ல சேதியா சொல்லணுமே?’

குழந்தையின் கண்ணைப் பரிசோதித்த டாக்டர் புன்முறுவல் பூத்தார்.

“நல்ல வேளை! குழந்தை பார்வைக்கு ஒண்ணும் ஆபத்தில்லே! கீறல்பட்ட எடத்திலே சதை ஒண்ணு சேர்ந்திருச்சு. இந்த ட்ராப்ஸ் ஒரு வாரத்துக்கு……”

மேற்கொண்டு டாக்டர் செல்வியிடம் சொல்லிக் கொண்டிருந்தது எதுவுமே வரதனின் காதுகளில் விழவில்லை.

‘எந்கொழந்த கண்ணு பொழச்சிருச்சா? பெருமாளே! படவட்டம்மா, குலதெய்வமே! எங்களைக் காப்பாத்திட்டியாம்மா!’

நன்றிப் பெருக்கில் கண்களில் நீர் வழிய டாக்டரிடம் விடை பெற்று, அருகேயுள்ள கடையில் அவர் எழுதிக் கொடுத்த மருந்துகளை வாங்கிக்கொண்டு திரும்ப ரிக்ஷாவில் வீடு நோக்கிப் பயணம்!

ராத்திரியெல்லாம் கண் விழித்த அசதியில் கண்கள் தானாக மூடிக்கொள்ள செல்வி ரிக்ஷாவில் தூங்கிக்கொண்டே வந்தாள்.

‘நேத்திக்கும் இன்னிக்குமா ரிக்ஷாவுக்கே எழுவது ரூவா ஆயிருச்சி! டாக்டருக்கு பீசு, மருந்து மாத்திரை, வர்ற வழியில நாஸ்தா எல்லாம் சேர்ந்து மொத்தமா செலவு ஒரு நானூறு ரூவா கிட்ட வந்திருச்சு. மாசத்தில சொச்ச நாளை எப்படி ஓட்டுறது? எவன் கடன் கொடுக்கக் காத்துக்கினு இருக்கான்? அந்த பய மவன் மொதலாளி கிட்டே ‘கடன்’ னு வாயைத் தொறந்து கேட்டுற முடியுமா? ‘வசவு’ தான் அவன் வாயிலிருந்து நிக்காம வந்திட்டிருக்கும்! அவன் பெரிய ஜமீன் வம்சம்! நா பொறம்போக்கு பயலாச்சே! இந்த அழகில பக்கத்துத் தெருவிலேயே இருந்துக்கிட்டு என் உயிரை எடுக்குறதுக்கின்னே பொறந்திருக்கிற என் தங்கச்சி வேற அடிக்கடி கப்பரையை ஏந்திக்கிட்டு வந்துருவா, அண்ணன் பெரிய தர்மதுரைங்கிற நெனைப்புல!’

வீட்டு வாசலில் ரிக்ஷா நின்றபோது, மனதில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் வழக்கம்போல கோபத்தையும் ஆத்திரத்தையும் கிளப்ப, திரும்ப இயல்பாக பழைய வரதனாக மாறி வீட்டுக்குள் நுழைந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *