சிலரைப்பார்த்தவுடன் நம் மனதுக்கு மிகவும் பிடித்துப்போகும். உறவாக, நட்பாக, காதலாக இருந்தால் பேசும் நேரம் அதிகமாகும். அடிக்கடி அவர்களைச்சந்திக்கும் சூழ்நிலைகளை உருவாக்கி சந்திப்போம். அலை பேசி மூலமாகவும் பேசி சாந்தமாவோம். புதியவராக இருந்தால் அவர்களது நட்பைப்பெற, அவர்களுக்கருகாமையில் அல்லது பார்வையில் இருக்கும்படியான சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ள நம் மனம் எத்தனிக்கும்.
இறைவன் படைப்பின் நோக்கமே இது தானென்று பலருக்கும் புரியாமல் வேலை, படிப்பு, பதவி என பணம் சம்பாதிக்கும் காரணிகளையே தேடிப்போவதால் மனம் சலனப்பட்டு, சஞ்சலப்பட்டு, சங்கடப்பட்டு, சலிப்புற்று வாழ்வே நிறைவு பெறாத நிலைக்கு தள்ளப்பட்டு விடுவதாக நினைத்தான் நிகன்.
சிறு வயதில் படிப்பு, படிப்பு என முழு மூச்சாய் இருந்தவனுக்கு வேலை கிடைத்து பணம் வர வீடு, கார் என அனைத்தும் பூர்த்தியாகி விட்டாலும் அவனுக்கென நல்ல நண்பரோ, நண்பியோ உறவுகளிலும், வெளிப்பழக்கத்திலும் கிடைக்காததை துரதிஷ்டமாகவே கருதினான். பலரும் அவனைத்தேடி விரும்பி பழக வந்தாலும் அவர்கள் மீது ஈர்ப்பு வராதது போக அவனது மன வீடு அவர்களை உட்புக அனுமதிக்கவில்லை.
தன் மனம் எனும் வீட்டிற்குள் குடி புக உரியவர்களைத்தேடுவதே வேலையில்லாத நாட்களிலும், வேலை நாட்களிலும் கூட வேலையாகி விட்டது நிகனுக்கு.
நிகன் மேலாளராக வேலை பார்க்கும் தனியார் நிறுவனத்தில் புதிதாக உதவியாளர் வேலைக்கு சேர்ந்திருந்த பெண்ணை முதலாகப்பார்த்ததும் தன் மனம் லேசானதையும், மனக்கதவு தானாகத்திறந்து கொண்டதையும் உணர்ந்தான். அன்று நாள் முழுவதும் எப்பொழுதும் போல் மன இறுக்கத்துடன் இல்லாமல் மிகவும் அமைதியாக இருந்தது அலுவலகத்தில் பணி புரிந்த மற்ற ஊழியர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது.
இதற்கு முன் வேலை பார்த்த உதவியாளருடன் காலை அலுவலகம் வந்தது முதல் மாலை வீடு திரும்பும் வரை சத்தமிட்டு திட்டுவது, அதட்டிப்பேசுவது, அதிகாரமாக நடந்து கொள்வது, ஆணவத்தை வெளிப்படுத்துவது என யாரும் எளிதில் அணுக முடியாதவாறு இருந்தவனுக்கு இன்று அனைவருடனும் கனிவாக, அன்பாக, ஆதரவாக சிரித்துப்பேசும் மாற்றம் புதிய உதவியாளர் சுகியால் தான் என்பதை முதலாளியும், சக அலுவலர்களும் புரிந்து கொண்டார்.
ஞாயிறு விடுமுறை நாளில் வீட்டில் இருப்புக்கொள்ளவில்லை. வெளியில் எங்கு போகவும் விருப்பமில்லை. மனமும் நிலை கொள்ள மறுத்தது. அலைபேசியைத் தொலைத்தவருடைய மனநிலையில் அல்லது அலைபேசிக்கு சிக்னல் கிடைக்காததால், செயல்படாமல் போனதால் ஒருவருக்கு ஏற்படும் மனநிலையில் இருந்தான். ஆம். அவனது உடம்பெனும் போனுக்கு நேற்று பைவ்ஜி அலைவரிசையாக வந்த நெட்வொர்க் தற்போது டூஜி அளவு கூட வேலை செய்யாததால் நிம்மதி இழந்தான். பைவ்ஜி கிடைக்க ஒரே வழி சுகியுடன் இருப்பது தான். விடுமுறை நாளிலும் அலுவலகம் செல்ல முடியாது. சென்றாலும் சுகியை அழைக்க முடியாது. நேராக அவளது வீட்டு முகவரிக்கு காரை இயக்கினான்.
சுகியின் வீட்டின் முன் அழையா விருந்தாளியாக வந்து நின்ற நிகனின் காரைக்கண்டதும் வீட்டிற்குள்ளிருந்து ஜன்னல் வழியாகப்பார்த்த சுகி பதட்டமானாள். ‘ஒரு போன் பண்ணி கேட்டிட்டு வந்திருக்கலாமே…? திடீரென எதற்க்காக நம் வீட்டிற்கு வந்தார்? ஒரு வாரமாகத்தான் வேலைக்கு போகிறோம். நன்றாகப்பேசி பழகிய நட்புமில்லை.. இவரும் மற்றவர்களைப்போல பெண்பித்தன் போல் தான் தெரிகிறது…’ என குழப்பத்துடன் யோசித்தபடி நைட்டியுடன் இருந்ததால் ஒரு ஷாலை எடுத்து கழுத்தில் போட்டுக்கொண்டு கதவைத்திறந்தாள்.
ஒரு பை நிறைய சாக்லேட், கேக், திண்பண்டங்கள், பழங்கள் என வாங்கி வந்தவன் உள்ளேயே கொண்டு சென்று டீபாயின் மீது வைத்து விட்டு ஷோபாவில் அமர்ந்தான். சுகியை மேலிருந்து கீழாக பார்த்தான். சிரித்தான். அவனது செயல்பாடுகள் அவளுக்கு பயத்தை வரவழைத்தது. ‘நான் நீங்க நினைக்கிற மாதிரி பொண்ணு இல்லை’ என முகத்தில் அறைந்தாற்போல் சொல்லிவிடலாம் என நினைத்து பேச முற்பட்டவள், உதட்டைக்கடித்து வார்த்தையை வெளி வராமல் தடுத்தாள். என்ன பேச வேண்டுமென புரியாதவனாக”ஒரு டீ கிடைக்குமா…?” எனக்கேட்டதும் “இதோ….” என கூறி விட்டு சமையலறைக்குள் நுழைந்த சுகி, சற்று நேரத்தில் டீயுடன் வந்தவள் நேராக கொடுக்க கை நடுங்கியதால் டீபாயில் வைத்து விட்டு சற்று தள்ளி நின்று கொண்டாள். டீயை மிகவும் சுவைத்துக்குடித்தவன் சொல்லாமலேயே எழுந்து சென்று விட்டான்.
‘இவனுக்கென்ன பைத்தியமா….? சொல்லாமலேயே வந்தான். சொல்லாமலேயே சென்று விட்டான்…! நான் அவனை சிறிதும் அவமதிக்கவில்லையே…? ஒரு வேளை டீ நன்றாக இல்லையோ…? நாளை அலுவலகத்தில் ஏதாவது தண்டனை கொடுப்பது போல் வேலை அதிகமாகக்கொடுத்து விடுவானோ...?’ பலவாறு யோசித்ததில் சுகிக்கும் உறக்கம் வரவில்லை.
காலையில் அலுவலகம் சென்றதும் தான் வேலை செய்யும் அவனது அறைக்குள் தயங்கி, பணிந்து சென்று குட் மார்னிங் சொன்னாள். பதிலுக்கு அவனும் சொன்னான்.
“சாரி…..” என்று அவன் சொல்வானென்று சுகி எதிர்பார்க்கவில்லை.
“எதுக்கு…?”
“நேத்தைக்கு உங்களைப்பார்க்கனம்னு ஒரு வேகத்துல வெகுளித்தனமா சொல்லாம உங்க வீட்டுக்கு வந்ததுக்கும், அப்புறம் சொல்லாம திரும்பி வந்ததுக்கும் தான். நான் என் மனசு சொன்னத நேத்தைக்கு கேட்டிருக்கக்கூடாது. அதக்கண்டிச்சு அடக்கி வெச்சிருக்கனம்”
“பரவாயில்லைங்க. நான் ஒன்னும் உங்கள தப்பா நெனைக்கலை. நம்மை நேசிக்கிறவங்க நம்மத்தேடி வர்றது நல்லது தானே. நீங்க எப்ப வேணும்னாலும் வாங்க. வரும் போது ஒரு கால் பண்ணிட்டீங்கன்னா வீட்ல இருந்திடுவேன். நேத்தைக்கு மட்டும் நீங்க வந்த போது நான் வீட்ல இல்லாம வெளில போயிருந்தா உங்களுக்கு வருத்தமாயிருக்கும்”
“இந்த ஆபீஸ்க்கு உங்களோட வருகை என்னை தலைகீழா மாத்திடுச்சு. நானும் எனக்கானவங்களை ரொம்ப நாளா தேடிகிட்டிருந்தேன். நீங்க என்னோட வேலை பார்க்கிறது நான் செய்த பாக்யம். எனக்கு சக்தி கொடுக்கிற ஒரு தெய்வமா உங்களை நான் நினைக்கிறேன். உங்களைப்பார்த்ததுல இருந்து ஒரு இனம் புரியாத ஒரு சந்தோசம். அந்த சந்தோசம் ஒரு போதை மாதிரி. அத தடுக்காம விட்டா பாதை மாறவும் வெச்சிடும். நம்ம மனசுக்கு பிடிச்சவங்களை முழுசா நாமே எடுத்துக்கனம்னு அனுபவமில்லாத, பக்குவப்படாத நம்ம மனசு சொல்லும் போது தான், அதைக்கேட்டு செயல்படும்போது தான் நாம முழுசா சறுக்கிடறோம். நம்ம மன வீட்ல ஒருத்தர் மட்டுமே வசிக்கனம்னு நாம நெனைக்கும் போது தான் முதலா தோத்துப்போறோம். உங்க கணவருக்கு, உங்க குழந்தைக்கு குடியிருக்க அனுமதிச்ச உங்க மன வீட்ல இந்த சகோதரனுக்கும் நிரந்தரமா ஒரு பக்கம் இடம் ஒதுக்கிடுங்க” என வெள்ளந்தியாக நிகன் கூறிய போது சுகி அவனைப்பற்றி தவறாக நினைத்திருந்த எதிர்மறையான எண்ணம் சுக்குநூறாக அவளுக்குள் உடைந்து கரைந்தது. நேர்மறை எண்ணம் துளிர்விட நிம்மதி பெருமூச்சு விட்டாள். அப்போது அவள் மனமெனும் வீட்டில் அவனும், அவன் மனமெனும் வீட்டில் அவளும் சகோதர பாசத்துடன் குடியேறியிருந்தனர்.