கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 17, 2023
பார்வையிட்டோர்: 2,486 
 

மாதங்கி: “வினோத் , வினோத் ! எவ்வளவு நேரமா தட்டறேன் ? கதவை திறடா கண்ணா?”

வினோத் : “குளிச்சிண்டிருந்தேன். இரும்மா , இதோ வரேன் !

ஐந்து நிமிடம் கழித்து , அறையை விட்டு வெளியில் வந்தான் வினோத் . அறையை இருட்டடிப்பு செய்திருந்தான்.

மாதங்கி : “ ஏன் வினோத் ! எவ்வளவு நேரமா சாப்பிட கூப்பிடறேன் ? அப்படியென்ன வேலை ?”

வினோத் : “ ஒண்ணுமில்லேம்மா! இவ்வளவு நேரம் படிச்சிண்டிருந்தேன் ! இப்போதான் குளிக்க போனேன் . அது சரி, நீ ஏன், என் வேலை பத்தி  அடிக்கடி கேக்கிறே? நான் ஏதோ பண்றேன் ?  உனக்கென்ன வந்தது ? சாதம் போடு ! பசிக்கிறது !”

வினோத் தட்டிற்கு முன்னே அமர்ந்தான் . இன்னொரு அறையிலிருந்து பாட்டுச்சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. “ அம்மா  ! அப்பா ரூம் கதவை மூடேன்!”. சத்தம் போட்டான். அவனுக்கு அப்பா எது செய்தாலும் எரிச்சல் . செய்யா விட்டாலும் எரிச்சல்.  ஆக மொத்தம் அப்பா பேரிலே காண்டு . வினோத்,  அவனே எழுந்து அப்பா ரூம் கதவை டம் என்று சாத்தினான் .

மாதங்கி  : “வினோத், ஏண்டா இப்படி இருக்கே, யாரோடவும் பேச மாட்டேங்கிறே, எல்லாரோடவும் சண்டை போடறே? உறவு கூட எல்லாம் தகராறு ?

வினோத் : நான் எங்கேம்மா சண்டை போட்டேன் ? அவங்க தான் எனக்கு அட்வைஸ் பண்ணறாங்க!  இவங்க என்னமோ ரொம்ப லக்ஷ்ணம் மாதிரி ? இவங்க வீட்டிலே ஆயிரம் பிரச்னை ? நமக்கு என்ன புத்திமதி கொடுக்கலாட்டம் ?

மாதங்கி  : பின்னே என்னடா ? வேலைக்கு போகமாட்டேங்கிரே ? இவ்வளவு பெரிய படிப்பு படிச்சும் என்ன பிரயோசனம் ? சம்பாதிச்சாதானே உனக்கு மரியாதை ?

வினோத் : இப்போ எதுக்கும்மா வேலைக்கு போகணும் ? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு ? வேணா அப்பாவை வேலைக்கு போகச்சொல்லு .

மாதங்கி  : அது சரி. உன்னோட யாரு மல்லுகட்டறது.?  உன் காசு உன் காலம் முழுக்க வராதுடா. நாளைக்கே உடம்புன்னு வந்தா, உறவு கை கொடுக்காது. தெரிஞ்சுக்கோ. உறவு , பிரண்ட்ஸ் எல்லாரையும் ஒதுக்கற.  இப்படி இருந்தா, சமயத்திலே எல்லாரும் கை விட்டுடுவாங்க . அதை புரிஞ்சுக்கோ

வினோத் : இப்ப மட்டும் என்ன கிழிச்சுட்டாங்க ! எல்லாம் சுய நலம் !

மாதங்கி  : இப்படியெல்லாம் நினைக்க கூடாது வினோத் .

வினோத் : அப்போ நீ வாயை பொத்து !

மாதங்கி  : இல்லேடா ! நீ வேலைக்கு போனாதானே உனக்கு பொண்ணு பார்க்க முடியும் ? எல்லாரும் என்ன சம்பாதிக்கரான்னு கேக்கறாங்க.? உண்மைய சொன்னா யாரும் சம்மதிக்க மாட்டேங்கிறாங்க .

வினோத் : ஏம்மா? உன்னை நான் எனக்கு பொண்ணு பார்க்க சொன்னேனா? நீங்களா எதுக்கு அலட்டிக்கிறீங்க ?

மாதங்கி  : சரிடா ! நான் இனிமே இதை பத்தி பேசலை . நீ கோபிக்காதே . சாப்பிடு .


மாதங்கியும் அவள் கணவன் மணியும் அடிக்கடி தங்கள் புத்திரன் வினோத் பற்றி மிகுந்த வேதனையுடன் பேசிக் கொள்வார்கள். தனக்கும் ரத்த கொதிப்பு,. சர்க்கரை எல்லாம் இருக்கு என்று மணிக்கு வேதனை. எவ்வளவு நாள் இருப்போமோ ? பையன்  இப்படி இருக்கிறானே, வினோத்  கல்யாணம் பண்ணி கொண்டால், நமக்கு அப்புறம் அவனுக்கு ஒரு துணை கிடைக்குமே என்று சதா சர்வ காலமும் அவனும், அவன்  மனைவியும்  வருத்தப் படுவார்கள் . இதில் மாதங்கி கொஞ்சம் ஈசியாக எடுத்துக் கொண்டாள். அது அவள் குணம் .  மணிக்கு இதில் வருத்தம் கொஞ்சம் அதிகமே!.

மணிக்கு,  மாதங்கி தான் அடிக்கடி ஆறுதல் சொல்வாள் .

மாதங்கி: நீங்க ஏங்க இப்படி எப்ப பார்த்தாலும் கன்னத்திலே கை வெச்சுகிட்டு இருக்கீங்க ? கவலையை விடுங்க ! எல்லாம் நல்ல படி நடக்கும் ! தானா நடக்கும்.

மணி: நீ எப்படி இதை சாதாரணமா எடுத்துக்கிறே? என்னாலே முடியலியே

மாதங்கி:  வேறே என்ன பண்றது ? ஏங்க ! பையனை ஒரு நல்ல டாக்டர் கிட்டே அழைச்சிகிட்டு போலாமா ?

மணி :. அவனுக்கே தெரியும் அவன் குறைகள் என்னன்னு . நீயே  அவனை ஒரு மன நல மருத்துவரை பார்க்க சொல்லு .அதுதான் உத்தமம். நான் கூட வந்தா , அவன் வரமாட்டான். முதல்லே அப்பாக்கு வைத்தியம் பாருன்னு நக்கலா சொல்லுவான் .நாம ஒண்ணு செய்வோம் . முதல்லே  நாம ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டை பார்த்து வினோத் பத்தி பேசுவோம் . அவர் என்ன சொல்றாருன்னு கேப்போம். அவர் சொல்றபடி செஞ்சு பார்ப்போம் .

மாதங்கி: சரி , நாளைக்கே போவோம் .

மணி : வேண்டாம் வேண்டாம்  மாதங்கி! எனக்கு என்ன தோணுதுன்னா, நாம இப்போ சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போனா, அவர், இந்த டெஸ்ட் பண்ணணும், அந்த டெஸ்ட் பண்ணணும், பையன் கூட பேசணும்னு நூத்தியெட்டு கண்டிஷன் போடுவார் . இப்பத்திக்கு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போறதை ஒத்தி வைப்போம் . என் பிரன்ட் சேது   இருக்கான் . அவன் எம் ஏ சைக்காலஜி. பழைய பிரன்ட். அவன் கிட்டே அட்வைஸ் கேப்போம் . என்ன சொல்றே ?

மாதங்கி: சரி.  அப்படியே செய்வோம் . நீங்க கவலைப் படாமல் இருந்தால் சரி .   


அடுத்த நாள் .

ரெண்டு பெரும் சேது வீட்டில் . சேதுவிடம் விஷயத்தை ஆரம்பித்தனர். சேது சிரித்தார்.

சேது   : என் கிட்டே ஏன் வந்தீங்க ? சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போகவேண்டியது தானே ? .

மணி : இல்லே சேது, முதல்லே உன்னை கேட்டுகிட்டு செய்யலாம்னு வந்தோம்.

சேது  : . அதுவும் சரிதான் . எனக்கு தெரிந்ததை சொல்றேன் . அப்புறம், சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போலாம் 

மணி தன் மகனை பற்றி முழுதும் சொன்னார் .

சேது   அத்தனையையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தார் . அவர் புன்முறுவல் மாறவேயில்லை .  மணி சொல்லி முடித்தவுடன் அவர் கேட்டார் .

 சேது  : உங்க சன் , வினோத், நிறைய பயப்படுவாரோ ?

மாதங்கி: ரொம்ப பயம் கிடையாது . தனியாகத்தான் படுத்துப்பான். ரூமை விட்டு ரொம்ப வெளியே வர மாட்டான் . ரூமை இருட்டா வெச்சுப்பான் . விண்டோ ஸ்க்ரீன் எல்லாம் இழுத்து மூடி இருப்பான்.

சேது   : நல்ல ஆப்செர்வேஷன் .வேறே ஏதாவது அப்நார்மல் நோட்டீஸ் பண்ணறீங்களா ?

மாதங்கி: காரண காரியம் இல்லாமல் எரிச்சல் அடைவான்.

சேது  :. அப்புறம் ?

மாதங்கி:. வினோத் சில சமயம்  நல்ல மூடில் இருப்பான் . திடீரென சில நாள் , மூட் அவுட் ஆகிவிடுவான். நம்ப முடியாது . அவன் சொல்வதை எல்லாரும் கேட்க வேண்டும் எதிர்த்து சொன்னா,  குற்றம் கண்டுபிடிப்பான், எதற்கெடுத்தாலும் சண்டை . மத்தபடி அவன் நார்மல் .

சேது   : ‘மத்தபடி அவன் நார்மல்’. அம்மா,  என்னிக்கும் பையனை விட்டுக் கொடுக்க மாட்டீங்களே …. சும்மா ! தமாஷுக்கு சொன்னேன்

கொஞ்ச நேரம் சேது அமைதியாக இருந்தார் . அப்புறம் அவர் சொன்னார்

சேது   : மணி, நீங்க சொல்றதை கேட்டா, எனக்கு அவன் குறை பெரிய குறைன்னு தோணலை . இது எல்லாருக்கும் இருக்கும் குறை தான் . சரி பண்ண முடியும்னு தான் தோணறது . ஆனா அதுக்கு மருந்து மாத்திரை தேவை . அதுக்கு நீங்க, சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க வேண்டியிருக்கும். உங்க பையன் மன ரீதியா மாற்றங்கள் ஏற்படுத்திக்க வேண்டியிருக்கும் . அதுக்கு உங்க சப்போர்ட் தேவையாக இருக்கும் நீங்க என்ன பண்ணலாம்னு நான் நாளைக்கு சொல்லட்டுமா? எனக்கு கொஞ்ச அவகாசம் கொடுங்க . இது ஒண்ணும் பெரிய பிரச்னை இல்லே. ஈசியா சால்வ் பண்ணிடலாம் . அதுக்கு நான் காரண்டீ!

மணி : அப்பா! இப்பதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு . சரி, சேது, நாளைக்கு மதியம் வரோம் . அப்போ நாங்க உத்திரவு வாங்கிக்கவா ?

சேது   : உத்திரவு ! ( சிரித்தார் )  


அடுத்த நாள் :

சேது   : வா மணி , நான் நேரிடையா விஷயத்துக்கே வந்திடறேன் . வினோதுக்கு இருக்கிற இந்த மன நலக் குறைவு , ரொம்ப சிம்பிளா, வெறும் depression டிப்ரெஷன் ஆக இருக்கலாம் . அல்லது ADHD- ஏடிஎச்டி யா இருக்கலாம், இல்லே அவனுக்கு  பை போலார் இருக்கலாம் , schizoid- ச்கீஜாஇட் (schizoid personality disorder (SPD)- எஸ் பீ டி  ஆக இருக்கலாம் , Schizotypal personality disorder- ஸ்கீசோட்டிபால் மன நோய், Schizoaffective Disorder அல்லது ஆரம்பகட்ட schizophrenia- ஸ்கீசோபெர்னியா வாக கூட இருக்கலாம் , Posttraumatic Stress Disorder (PTSD- பீடீஎஸ்டி , அதிர்ச்சிக்குப் பிறகான மன அழுத்தப் பாதிப்பு) இப்படி ஏதாவது இருக்கலாம் .

மணி : என்ன சேது, ஏதேதோ சொல்லி பயமுறுத்தறே?

சேது   : இல்லே மணி, இதிலே எது வினோதுக்கு பொருந்துதுன்னு பார்க்கலாம் . முதல்லே டிப்ரெஷனான்னு பாக்கலாம் 

மாதங்கி: டிப்ரெஷனா ? அப்படின்னா என்ன ? நிறைய கேள்விப்பட்டிருகேன். இந்த காலத்திலே சின்ன வயசுக் காரங்க  கூட இதை சொல்றாங்க

சேது   : இது எல்லாருக்கும் வரது தான். வினோதுக்கு நாள்பட இருக்கோ என்னவோ ?மனத்தளர்ச்சி , மனச்சோர்வு . இதுதான் டிப்ரெஷன் கவலையாக, குழப்பமாக, வெறுமையாக, உதவியற்றவர்களாக, எதிர்பார்ப்பற்றவர்களாக, மதிப்பற்றவர்களாக, குற்ற உணர்வுடையவர்களாக, எரிச்சலடைபவர்களாக, அமைதியற்றவர்களாக இருப்பாங்க . எதிலேயும் ஆர்வம் இருக்காது  தற்கொலை எண்ணம் அடிக்கடி வரும் . வினோத் எப்பவாவது தற்கொலை பத்தி அம்மா கிட்டே பேசியிருக்கானா?

மாதங்கி: இதெல்லாம் வினோதுக்கு இருக்கே . ஆனால், தற்கொலை பத்தி அவன் எப்பவும் பேசினது இல்லே .

சேது : ஒருவேளை விநோதுக்கு டிப்ரெஷன் இருக்கலாம் . இது ஆரம்பம்  இப்போ நம்ப ADHD பத்தி பார்ப்போம்..

சுருக்கமாக,  ஏடிஎச்டி (ADHD; attention deficit hyperactivity disorder) என்பது கவனக் குறைவு, அளவுக்கு மீறிய ஆக்டிவிட்டி அப்படின்னு   சிறு வயதில் ஏற்படும் ஒரு உளவியல் நோய்.. இந்த ப்ராப்ளம், வயது போகப்போகச் சீர்நிலைக்குத் திரும்பிடும். ஆனாலும்  சிலருக்கு முதிர்பருவத்திலும் நிலைத்துநிற்க வாய்ப்புண்டு .

இந்த நோயின் அறிகுறி  என்னன்னா, வினோத் , எதையும்  விவரமாகக் கேட்காம,  அடிக்கடி  குறுக்கிடுவான்..ஒரு குறிப்பிட்ட செயலில் கவனத்தைக் செலுத்த மாட்டான் . கவனம் வேறெங்கோ போயிடும் நேரடியாக பேசச்சே, சொல்றதைச் செவிமடுக்காமல் இருப்பான்  கொடுக்கப்பட்ட பணியை ஒழுங்கான முறையில் செயற்படுத்த மாட்டான் . நிறைய தடவை , அப்படியே போட்டுட்டு, அடுத்ததுக்கு தாவிடுவான் .மூளைக்கு வேலையைக் கொடுக்கும் பணிகளில் ஈடுபட மாட்டான்.

பதட்டமாக, படபடன்னு  இருப்பான் . கால் கையை, அல்லது விரல்களை ஆட்டிக்கிட்டே இருப்பான் . இதை பிட்ஜட்டிங்னு சொல்வாங்க  ( fitgetting). இது மாதிரி வினோத் பன்னுவானா? இந்த குறை இருக்கிறவங்க ஒரு வினா கேட்கப்படும் முன்னரேயே விடையைச் சடுதியாகக் கூற முற்படுவாங்க . ஏதாவது சந்தர்ப்பங்களின் போது தனது முறை வரும்வரை காத்திருக்க மாட்டாங்க

சேது  : இந்தமாதிரி அடிக்கடி அல்லது எப்பவும் , வினோத் நடந்துக்கரானா?

மாதங்கி: இல்லியே . எப்பவாவது பண்ணுவான் . ஆனா பண்ணுவான்

சேது   : ஏன்னா, இந்த ADHD இருக்கிறவங்க, மத்தவங்க கூட நெருங்கி பழக மாட்டாங்க, பிரண்ட்ஸ் ரொம்ப இருக்காது, ஜாலியா பேச மாட்டாங்க, எப்பவும் சீரியசா இருப்பாங்க. பொதுவா, இவங்களை ஆண்டி சோசியல் அனிமல் (anti social animal) அப்படின்னும் சொல்லலாம்.

மாதங்கி : அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே  சமூகத்தில் பழகுவது, பேசறது போன்றவற்றை தவிர்ப்பது  என்பது இவனுக்கு ஒரு சில பேரிடம் மட்டும்தான் . வெளி உலகத்திலே தெரியாதவங்க கிட்டே சகஜமா பழகறான் . கையெழுத்து சீராக இருக்கும், எப்பவாவதுதான் கோணல் மாணலாக இருக்கும். நல்லா படம் வரைவான் . கோபம் நிறைய வரும் . . பொறுமை குறைவு கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். அவ்வளவு தான் . அப்படிப் பாக்கபோனா, நீங்க சொல்ற இதெல்லாம் , இவருக்கே பொருந்தும்,

சேது   : (சிரித்தார்)  அப்போ இந்த எ.டி.எச்.டி வினோதுக்கு பொருந்தாது . இதை ஒதுக்கி வைப்போம் .

சேது   :  சரி. . அடுத்ததா பை – போலாருக்கு வருவோம் . பைபோலார் டிஸ்ஆர்டர் என்பதை `இருதுருவ நோய்’ என்று குறிப்பிடுவோம். மனஎழுச்சி, மனஅழுத்தம் உள்ளிட்ட இரண்டும் சேர்ந்ததுதான் பைபோலார் டிஸ்ஆர்டர். சந்தோஷமும், துக்கமும் மாறி மாறி வரும் . வர்ற வேகமும் அதிகமா இருக்கும் . கடுமையாக இருக்கும் இருக்கும்போது தங்களுக்கான தெரிவுகளை சிந்தித்து செயலாற்றும் பொறுமை இருக்காது;

கோபம் வந்தால் ரொம்ப காட்டமா இருப்பாங்க. கையிலே இருக்கிறதை எடுத்து  அடிக்கவும் தயங்க மாட்டாங்க, அது பேனாவா இருந்தாலும் சரி, கத்தியா இருந்தாலும் சரி . ஆனால்,  இது அடிக்கடி நிகழ்வதில்லை. சமயத்திலே ரொம்ப கஞ்சூஸா இருப்பாங்க. சமயத்திலே செலவு பத்தி கவலையே படமாட்டாங்க.

இந்த மன நோய் உள்ளவங்க ஒண்ணு ரொம்ப பிரில்லியண்ட் ஆக இருப்பாங்க . இல்லே அடி முட்டாளா இருப்பாங்க .  மிகவும் உரக்கவும் விரைவாகவும் பேசுவாங்க. . இவை எல்லாமே ஒருவரிடம் காணப்படத் தேவையில்லை; உள நோயில் ஒவ்வொருவருமே வெவ்வேறானவர்கள். ஆனால், சிம்ப்டம்ஸ் கிட்ட தட்ட ஒரே மாதிரி இருக்கும் .

சேது   : இது மாதிரி பிராசாத் கிட்டே ஏதாவது நோட்டீஸ் பண்ணீங்களா?

மணி : அடிக்கடி அவன் கிட்டே இந்த மாற்றங்களை பார்த்திருக்கோம் .. ஆனால், இந்த பிரச்னை நமக்கே அடிக்கடி வருமே . ஆனால், நமக்கு உக்கிரமா இருக்காது . கொஞ்சம் யோசனை பண்ணுவோம் . ஆனால், வினோத் கிட்டே இது கொஞ்சம் அதிகப்படியாக இருக்கும் . கோபம் வந்தால்,. கண்ணு மண்ணு தெரியாம வரும் .

சேது  : அப்படின்னா , வினோதுக்கு பை போலார் இருக்கலாம் . இருக்கட்டும், வேறே ஏதாவது உளநோய் இருக்காங்கரதையும் செக் பண்ணி பாத்துடலாம் .

இப்போ schizoid ஸ்கீஜாட்  எஸ் பீ டி(schizoid personality disorder (SPD)   பத்தி பார்ப்போம் . இதெல்லாம்  Schizoid  (ஆளுமை கோளாறு) மன நோய்  இருப்பதற்கான சிம்ப்டம்ஸ். இதெல்லாம் வினோத் கிட்டே இருக்கான்னு, யோசனை பண்ணி  சொல்லுங்க. வினோத்  சமூக நடவடிக்கைகளை தவிர்க்கிறானா?. கல்யாணம் காட்சி இதுக்கெல்லாம் வர மாட்டேங்கிரானா? . அவாய்ட் பண்ண பாக்கிறானா ? .

இந்த நோய் உள்ளவங்க நெருங்கிய உறவுகளை தவிர்ப்பாங்க . ஒதுங்கி ஒதுங்கி போவாங்க. வாழ்க்கையில்  எந்த விதமான குறிக்கோளும் இருக்காது , அப்புறம் இதை அடையணும்னு ஒரு லட்சியம் இருக்காது  

தங்கள் உணர்ச்சிகளை தங்களுக்குள்ளேயே வெச்சுக்குவாங்க . வெளிப்படுத்த சிரமப் படுவாங்க . ரகசியமா நடந்துக்குவாங்க . அவங்க என்ன பண்றாங்கன்னு சொல்ல மாட்டாங்க .

மாதங்கி:  இதெல்லாம் வினோத் கிட்டே இருக்கே .

சேது   : அப்போ இந்த நோய் இருக்க நிறைய சான்ஸ் இருக்கு. இதுக்கு இந்த காரணங்கள் இருக்கும் .  அப்பா அம்மா வளர்ப்பு . அவங்க புறக்கணிப்பு . உணர்ச்சிபூர்வமான தேவைகளுக்கு பெற்றோர் அனுமதி மறுப்பு காரணமா இருக்கலாம்.   வினோத் அடிக்கடி இதை வெளிலே சொல்றானா?

மாதங்கி : ஆமா ! அடிக்கடி சொல்றான் .

சேது   : இன்னும் சில சிம்ப்டமும் இருக்கு

மரபணு காரணி . அப்பா அம்மாகிட்டேயிருந்து வந்திருக்கலாம் . ஊட்டச்சத்தின்மை,முன்கூட்டிய பிறப்பு,குறைந்த பிறப்பு எடை, இல்லே அல்லது ஸ்கிசோஃப்ரினியா (மனச்சிதைவு) கூட இருக்கலாம் .

சேது   : இதுலே எது காரணம்னு நீங்க நினைக்கிறீங்க?

மாதங்கி : இந்த காரணங்கள்  எல்லாம்னு சொல்ல முடியாது . அவனுக்கு ஊட்டச்சத்தின்மை, முன்கூட்டிய பிறப்பு, குறைந்த பிறப்பு எடை இதெல்லாம் இல்லை . மத்தது பத்தி தெரியலே .

சேது   : அப்போ, வினோதுக்கு schizoid – ச்கீஜாஈட் (ஆளுமை கோளாறு இருக்க வாய்ப்பு இருக்கு . சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போறது நல்லது .

மாதங்கி : போகலைன்னா என்னாகும் ?

சேது   : சிகிச்சையளிக்கப்படாதபோது Schizoid – ச்கீஜாஈட் ஆளுமை கோளாறு சிக்கல்களை ஏற்படுத்திடும்.:ஸ்கிசோடிபல் ஆளுமை கோளாறு வளரும். மனச்சிதைவு அதிகமாகும். ,எல்லாத்துக்கும் பயப்படுவான் பெரும் மன தளர்ச்சி. அடிக்கடி டிப்ரெஷன் வரும்

மணி : ஐயையோ , சரி , அப்போ சீக்கிரமே போகலாம் .

சேது   : இருங்க. மத்த இரண்டையும் பார்த்துடலாம் .

மாதங்கி : அது என்ன ?

சேது   : Schizotypal personality disorder, (ஸ்கீசோட்டிபால்) அல்லது ஆரம்பகட்ட schizophrenia வாக கூட இருக்கலாம். இதேல்லாமே இல்லாமையும் இருக்கலாம் . எதுக்கும், சிம்ப்டம் வெச்சு  வினோதுக்கு என்னன்னு பார்த்துடலாமே .

மணி : சரி , சொல்லு சேது. உனக்கு நேரம் இருக்கில்லே ?

சேது   : schizotypal personality disorder (ஸ்கீசோட்டிபால் மன நோய்)  அப்படின்னா , மிகு மனப்பிளவு ஆளுமைக் கோளாறுன்னு சொல்லலாம் . பதினோரு வகையான மனநோய்களில் ஒன்று. இது இருக்கிறவங்க , மனச்சிதைவு நோயாளிகளுக்கே உரிய சிந்தனையில் இருப்பாங்க  பேச்சில் ஏற்படும் குழப்பம் அல்லது தடுமாற்றம் காணப்படும்.

இது கிட்டதட்ட மனச்சிதைவு போல . அந்த சிம்ப்டம் எல்லாம் இருக்கும் .  

வினோத் அடிக்கடி வேறே யாரவது இருவேறு நபர்கள் உரையாடிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது,  தன்னைத்தான் குறிப்பிட்டுப் பேசுவதாக நினைச்சுக்கரானா ? . இது தான் ஆரம்பம் .

இது தவிர, சந்தேக பயம் இருக்கும் . எப்பவாவது வினோத், தன்னை யாரோ கண்காணிக்கறதாகவும் , தன்னை யரோ தொடர்ந்து பின்பற்றுவதாகவும், தன்னைப்பற்றி பிறர் பொல்லாங்கு பேசுவதாகவும், தான் பலவிதத்திலும் துன்புறுத்தலுக்கு உள்ளாவதாகவும் காரணமின்றி சொல்லியிருக்கானா ?

இல்லே செயலேதும் செய்யாமல் மந்திரத்தில் மாங்காய் காய்க்கும் என்று நம்பறானா? (நப்பாசை, வீண்கனவு, கற்பனா இன்பம்., பகற்கனவு நிலை, மனக்கோட்டை, மாயை, கற்பனை, உருவுபடைக்குந்திறம், கனவுருப் புனைவாற்றல்  இதெல்லாம் இருக்கா ? இயற்கைக்கு மாறுபட்ட, தனிப்போக்குடைய நடத்தை மற்றும் சமூகத்திலிருந்து ஒதுங்கியிருத்தல் (social isolation).  இதெல்லாம் வினோதுக்கு இருக்கா ?

மாதங்கி : அவனுக்கு இந்த மாதிரி மனப்ரமை ஒன்னும் இருக்கிறா மாதிரி தெரியலே .

சேது   : அப்படின்னா, இது இருக்காதுன்னு விட்டிடுவோம். இதெல்லாமே , மனச்சிதைவு நோயின் ஆரம்ப நிலைன்னே சொல்லலாம் . எதுக்கும் நாம இதுக்கு சைக்கியாட்ரிஸ்ட் கிட்டேயே தீர்வு காணுவோம் . அவர் என்ன சொல்றாருன்னு கேப்போம் .  இப்போ சொன்ன மன நோய் எல்லாத்துக்குமே சில அறிகுறிகள் ரொம்ப ஒத்துப்போகும். Schizoaffective  (மனப்பித்து)கோளாறு இருப்பதற்கான அம்சங்களாக சொல்லலாம் இது எல்லாமே முன்னே பேசினோமே , அதுக்குள்ளே அடங்கிடும் .

ஆனால், இது எல்லாத்துக்கும் சிகரம் வெச்சா மாதிரி இருக்கிறது தான் மனச்சிதைவு நோய் , ஸ்கீசோபெர்னியா  (Schizophrenia) .

மாதங்கி :. வினோதுக்கு ஒருவேளை ஸ்கீசோபெர்னியா  இருக்குமோ ?

சேது   : சே ! சே ! அதெல்லாம் இருக்காது . எதுக்கும் பாத்திடுவோமே. இது இருந்தா, வினோத் நடத்தையில் மாறுதல் இருக்கும்.

அவன் தனக்குள்ளே பேசிக்கொள்வான்  அல்லது தனக்குத்தானே சிரிச்சுக்குவான் . அவன் மற்றவர்களுடன் பேசி பழகுவது குறைந்து தனிமையை நாடுவான் . தெளிவில்லாத சிந்தனை, குழப்பமான பேச்சு.

குளிப்பது, உடை மாற்றுவது, சாப்பிடுவது போன்ற தினசரி இயல்பாக செய்யும் செயல்கள் கூட பாதிப்பு இருக்கும் . . ஷேவ் பன்னரானா ? இல்லே எதைப்பற்றியும் கவலைப் படாமல் தாடி, கீடி , வெச்சி , தன்னை பத்தி , தன் டிரஸ் பத்தி கவலை படாமல் இருக்கானா ?

மாதங்கி: ஆமா, தாடி காடு மாதிரி இருக்கும் . கேர் பண்ண மாட்டான் . சொன்னாலும் , போம்மா,. உனக்கு வேறே இல்லேன்னு சொல்லிடுவான். டிரஸ் சென்ஸ் சுத்தமா கிடையாது . எதையாவது போட்டுக்கிட்டு எங்கே வேணாலும், போவான் . சொன்னாலும் கேட்க மாட்டான் .   .

சேது   : இது ஒரு சிம்ப்டம் . வயசுக் காலத்திலே ஸ்மார்ட்டா, ட்ரிம் ஆகத்தான் இருக்க யாருக்கும் பிடிக்கும் ? . அப்புறம் முன்னேயே  பேசினோமே , தனியாக இருக்கும் பொழுது காதில் குரல் கேட்பது. இப்படி எப்பவாவது சொல்லியிருக்கானா ?

மாதங்கி: இல்லியே

சேது   : தேவையற்ற சந்தேக உணர்ச்சி (தன்னை பற்றி எல்லோரும் பேசுகிறார்கள், தன்னை கொல்ல சதி நடக்கிறது, தனக்கு யாரோ சூனியம் வைத்து விட்டார்கள், தன்னை யாரோ எப்பொழுதும் தொடர்கிறார்கள் என்பது போன்ற சந்தேகங்கள்) இருக்கா ? சொல்லியிருக்கானா ?

மணி  : இல்லியே . அப்படி எதுவும் இவகிட்டே  சொன்னதில்லே  ஆனா, கணினி  விஷயத்திலே கொஞ்சம் அதிகப்படி அக்கறை எடுத்துக்குவான் . எல்லாரிடமும் ஜீபே, பேடிஎம் கொடுக்க மாட்டான் . என்னையும் ஜாக்கிரதையா இருக்க சொல்வான் .

சேது   : அது விநோதோட பய உணர்வை காட்டறதா இருக்கலாம் . அல்லது யாரும் டேட்டாவை திருடிட கூடாதுன்னு கூட இருக்கலாமே .

மணி : அப்படியா ?

சேது   : சந்தேக உணர்வினால் உந்தப்பட்டு, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சண்டை போட்டுக்கறானா ? இதே காரணங்களினால் வீட்டை விட்டு வெளியேறி எங்கேனும் போயிடறானா ?  

மணி :  அப்படியெல்லாம் ஒண்ணும் இல்லே . அடிக்கடி போறேன்னு சொல்லி பயமுறுத்துவான்

மாதங்கி: இது எல்லாருக்கும் இருக்கிறது தானே ! சந்தேகப்படறது ஒரு பெரிய தப்பா?

சேது   : தப்புன்னு சொல்லிடமுடியாது . ஒண்ணு ரெண்டு சிம்ப்டம் எல்லாருக்குமே இருக்கும்  ஒரு வேளை ரொம்ப ஓவரா வினோதுக்கு சந்தேகங்கள்  இருந்து,  முத்த விட்டால் அதுவே ஸ்கீசோபெர்னியா (Schizophrenia) ஆகிவிடும், காலம் தாழ்த்த வேண்டாம் . உடனே சைக்கியாட்ரிஸ்ட் கிட்டே போலாம் . உங்க கூட நானும் வரேன் . பயப்பட வேண்டாம். சொல்லப் போனால் ,

சேது   : அதுக்கும் டாக்டர் மருந்து கொடுப்பார். எல்லாம் சரியாகிவிடும் . கவலைப் படாதீங்க .


அடுத்த நாள் . சைக்கியாட்ரிஸ்ட் அலுவலகம் .

வீட்டில் வினோதிடம், அப்பாவுக்கு மெடிக்கல் செக் அப் என்று சொல்லிவிட்டு மணியும் மாதங்கியும் ஆஜர். சேதுவும் கூட இருந்தார் . டாக்டர் கிட்டே  கூட்டம் ரொம்ப இல்லை . யாருக்கு தான், தன்னை  பைத்தியம் என்று சொல்லிக் கொண்டு சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க விருப்பம் ? அழுத்தம் கொடுத்து அழைத்து வந்தால் தான் உண்டு .

டாக்டர் இவர்களை அழைத்தார் . இருவரும் உள்ளே  சென்றனர்

டாக்டர்  : சொல்லுங்க ! என்ன பிரச்னை ? யாருக்கு ?

மணி : எங்க மகன் விஷயமாக பேச வந்தோம் டாக்டர் .

சேது   : அதுக்கு உங்க சன் தானே வரணும் ?

மணி : அவன் வரமாட்டான் டாக்டர் . நாங்க பொய் சொல்லிட்டு வந்திருக்கோம் . அவனுக்கே தன்னுடைய குறை தெரியாது . தெரிஞ்சுக்கவும் விரும்பலை .

டாக்டர்  :  அதுவும் சரிதான் . சொல்லுங்க . என்னன்னு தெரிஞ்சுகிட்டு, தேவைப்பட்டால், உங்க மகனை டெஸ்ட் பண்ணிடலாம் .

சேது   : டாக்டர் சார், நான் ஒரு எம் ஏ சைக்காலஜி. இவங்க பிரன்ட். நேத்து இவங்க கூட பேசினேன்  முழு விவரமும் நான் சொல்லட்டுமா ?

டாக்டர்  : சொல்லுங்க!

சேது   முழுதும் விவரித்தார் .

டாக்டர்  : நீங்க சொல்றது எது வேணா இருக்கலாம் . எதுக்கும் . உங்க மகனை பார்த்து டெஸ்ட் பண்ண பிறகு தான் உறுதியாக சொல்ல முடியும். மெதுவா விஷயத்தை சொல்லி , என் கிட்டே அனுப்பி வையுங்க.. ஆல் தி பெஸ்ட் . என்னோட பீஸ் 1000 . வெளிலே கொடுத்திடுங்க.

மணி : சரி டாக்டர் , அப்படியே செய்யறோம் .

    *****

வெளியே வந்தனர் . மணி முகத்தில் திருப்தி இல்லை .

சேது   : என்ன மணி , கொஞ்சம் வாட்டமாக இருக்கிறே ?

மணி : பின்னே என்ன ! டாக்டர் காசு வாங்கிரதிலே தான் குறியா இருக்கார். சும்மா பயமுருத்தறார்..

சேது   : இதோ பார் . உனக்கு முதலில் நம்பிக்கை வேணும் . வினோத் கிட்டே நைச்சியமா பேசி சைக்கியாட்ரிஸ்ட்டை பாக்க சொல்லு .

மாதங்கி: நான் சொல்லி பாக்கறேன் . நான் சொன்னா கேப்பான் .

மணி : என்னமோ செய்யுங்க . வினோத் உருப்படுவான்னு எனக்கு நம்பிக்கையில்லை.


பத்து நாள் கழித்து :

வினோத் : அம்மா , நீ சொன்னியேன்னு, உனக்காக , நான் சைக்கியாட்ரிஸ்ட்டை போய் பார்த்தேன் . நிறைய டெஸ்ட் பண்ணினார் . நிறைய கேள்வி கேட்டார் . மூணு நாள் கழித்து வரச்சொன்னார். 

மாதங்கி: வேறே என்ன சொன்னார் ?

வினோத் : உங்க ரெண்டு பேரையும் பாக்கணுமாம். நிறைய பேசணுமாம் . சில டெஸ்ட் எடுக்கணுமாம்.  

மணி : மாதங்கி, நாம எதுக்காம் ? அவனை கேட்டுச்சொல்லு!

வினோத் : ஒரு வேளை மரபு சார் நோயான்னு கண்டறிய இருக்கும்னு நினைக்கிறேன்.  

மாதங்கி: சரி, நாளைக்கே நாங்க போய் பார்க்கிறோம்

   ***

அடுத்த நாள் : சைக்கியாட்ரிஸ்ட் அலுவலகம்

மணியும் மாதங்கியும் தனித்தனியாக சைக்கியாட்ரிஸ்ட்டை சந்தித்தனர். அவர் இருவரையும் நிறைய கேள்விகள் கேட்டார் . சில டெஸ்ட்கள் எடுத்தார்.


சைக்கியாட்ரிஸ்ட் அலுவலகம் :  மூன்று நாள் கழித்து

மணி, மாதங்கி, சேது, வினோத் சைக்கியாட்ரிஸ்ட் முன் ஆஜர் .

டாக்டர்  : நான் எல்லா பரிசோதனையும் பண்ணிட்டேன் . உங்க வினோதுக்கு  எந்த பிரச்னையும் இல்லை . அவர் நல்லா இருக்கார் .  கொஞ்சம் ரிசெர்வ் டைப். கொஞ்சம் ஆர்குமெண்டேடிவ். அது அவர் குணம். தன் குறை தெரிஞ்சிருக்கு . . தானா மாறிடும் மாத்திப்பார் , கொஞ்சம் டிப்ரெஷன் இருக்கு . சரி பண்ணிடலாம் . .

மணி : அப்பாடி! தப்பிச்சோம் .

டாக்டர் : ஆனா , மணி சார், உங்களுக்கு தான்  டிப்ரஷன் மற்றும் ஆரம்ப நிலை ஸ்கீசோபெர்னியா சிம்ப்டம்ஸ் நிறைய இருக்கு. ரொம்ப படபடப்பா இருக்கீங்க.(fidgeting). விரலாலே மேஜையை தட்டிக் கிட்டே இருக்கீங்க. காலை ஆட்டிகிட்டே இருக்கீங்க . அது என்ன காரணம்னு கண்டு பிடிக்கணும் .  ஒருவேளை டவுரட் சிம்ப்டமா (tourette சிம்ப்டம்) ஆக இருக்கலாம் . அது இருந்தால், இப்படித்தான் கை காலை ஆட்டிகிட்டே இருப்பாங்க .  பர்கின்சன் டிசீஸ் ஆக கூட இருக்கலாம் . என்னங்கிறதை தரோவா செக் பண்ணிட்டு தான் சொல்ல முடியும் நீங்க நீயோராலோஜிஸ்ட்டை பாக்க வேண்டியிருக்கும் .

இப்போதைக்கு  நான் இந்த சில மாத்திரை எழுதித்தறேன் . சாப்பிடுங்க. நல்லா தூக்கம் வரும் . மன அதிர்வுகள் குறையும்  .முதல்லே உங்களுக்கு  தேவை தூக்கம். ரெஸ்ட் அவசியம்  . மனதில் உங்களுக்கு அனாவசிய பயம் . அது முதலில்  போகணும் . மன பாரம் குறையணும். . இந்த வயதில் உங்களுக்கு எதுக்கு கவலை? அதனால நிறைய நோய் வரும். டயபடிஸ், ரத்த அழுத்தம் மாதிரி . இதை சைகொசொமாடிக் நோய்கள்னு சொல்லுவாங்க. மனம் சார்ந்த உடல் உபாதைகள். அது எதுக்கு உங்களுக்கு? 

எதையும் ஈசியா எடுத்துக்கோங்க .   கவன சிதறல் குறைந்து எதாவது ஒன்றில் நாட்டம் இருக்கணும் . நான் சில மாத்திரை எழுதி தரேன் . அது உங்களுக்கு நல்ல தூக்கம் கொடுக்கும். மூளை அதிர்வுகளை குறைக்கும்.  . மைல்ட் டோஸ்தான். டிப்ரெஷன் முதலிலே குறையட்டும். யோகா பண்ணுங்க. தியானம் பண்ணுங்க . நிறைய வாக் போங்க  மனம் விட்டு பேசுங்க . மனது ஒரு நிலைக்கு வரும்.

ஏதாவது ஒரு வேலைலே ஈடுபடுங்க . எல்லாம் நாளடைவிலே சரியாயிடும் . சரியா ! என்னோட டெஸ்ட், கன்சல்டேஷன்  எல்லாம் வெளிலே ரிசெப்ஷனிஸ்ட் கிட்டே கேட்டு கட்டிடுங்க .  பத்து நாள் கழிச்சி வாங்க. அப்படியே  விட்டா சீரியசாயிடும்  . நான் எல்லாம் செக் பண்ணிட்டு , மருந்து தரேன் .

எல்லோரும் வெளியில் வந்தனர் .

மணியின்  முகம் மட்டும் ‘பே’ என்றிருந்தது . முகத்தில் விளக்கெண்ணை வழிந்து கொண்டிருந்தது . சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பு தடவி புண்ணாக்கியாச்சு!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *