மந்திரம்மாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 25, 2021
பார்வையிட்டோர்: 3,896 
 

மதுரையில் ரயில்வேசில் கார்டாக பணிபுரியும் நானும் தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் என் மனைவி சாந்தாவும் அன்று கந்த சஷ்டி என்பதால் வீட்டிலே பூஜைக்கான ஏற்படுகளை செய்து கொண்டிருந்தோம், வழக்கமாக மாலை ஆறு மணிக்கு வேலை முடித்து செல்லும் வேலைக்காரி முத்தம்மாள் ஐந்து மணிக்கெல்லாம் என் மனைவியிடம் அம்மா நான் இன்னைக்கு சீக்கிரம் வீட்டுக்கு போகணும் என்றாள்.

மனைவி சாந்தா மறுப்புச் சொல்லும் பெண்ணல்ல, இருந்தாலும் ஏதாவது பிரச்சனை என்றால் உதவலாமே என்பதற்காக என்ன விசயம் எதுனா பிரச்சனையா என்றாள், இல்லம்மா என் பொண்ணு எங்கியோ எதையோ பார்த்து பயந்திருக்கா போல ரெண்டு நாளா பித்து பிடிச்சமாதிரி இருக்கா அதான் எங்க வீட்டு பக்கத்துல ஒரு வயசான அம்மா இருக்காங்க அவங்க மந்திரிச்சி விடுவாங்க அங்க கூட்டிகிட்டு போகணும் என்றாள், நல்ல நாளும் பொழுதுமாய் வந்து வேலை செய்திருக்கிறாளே என்று ஒரு இரநூறு ரூபையை அவளிடம் கொடுத்து சரி பார்த்தப்போ என்றாள்.

முத்தம்மாள் மந்திரிச்சு விடுற ஒரு அம்மாகிட்ட போகணும் என்றதும் என் மனைவியை பார்த்து ஒரு நமட்டு ச்சிறுப்பு சிரித்தேன், இதை பார்த்த என் மனைவி, முத்தம்மாள் போனதும் என்ன சிரிப்பு உங்களுக்கு, வயசு ஐம்பதாகுது கொழுப்பு கொஞ்சமாவது குறையுதா பாரு என்று கையில் வைத்திருந்த ஏதோ ஒன்றை வைத்து அடிப்பது போல் பாவனை செய்தாள். ஏய் ஒண்ணுமில்லடி என்று சொல்லிக்கொண்டே என் நினைவுகள் நாப்பது வருடங்கள் பின்னோக்கிச்சென்றது.

அப்போது எனக்கு பத்து வயது இருக்கும், எனக்கு ஒரு அத்தை இருந்தாங்க எங்க அப்பாவுக்கு ரெண்டு வயசு இளையவங்க அவங்க பேரு மந்திரம்மாள் எங்க அப்பா பேரு மந்திர மூர்த்தி எங்க குல தெய்வம் பேரு மந்திர மூர்த்தி அதனால மந்திரம் அப்படிங்கிறது ஆம்பளையா இருந்தாலும் சரி பொம்பளைங்கள இருந்தாலும் சரி அவங்க பேரோட ஒட்டியிருக்கணும் இல்லேன்னா சாமி குத்தம் ஆகிவிடும் என்பது ஐதீகம். எங்க அப்பா இந்த பேரால சின்ன வயசுல ரெம்ப கஷ்ட பட்டிருக்காரு, பசங்க எல்லோரும் டேய் மந்திரவாதி வந்துட்டாண்டா, டேய் மந்திரவாதி எங்கட போறே, டேய் மந்திரவாதி இங்கவாடா என்று கிண்டலடிப்பார்களாம், டேய் மூர்த்தின்னு கூபிடுங்கடா ஏன்டா தொல்லை பண்ணுறீங்க என்று கெஞ்சினாலும் கேக்க மாட்டார்களாம்.

அப்புறம் காலப்போக்குல ஒரு வழியா பேர மாத்திட்டாங்களாம் எங்கப்பா. அப்போதெல்லாம் பள்ளிக்கூடத்தில் பேர மாத்துறது பெரிய விஷயமே இல்ல இப்ப மாதிரி அபிடேவிட்டு ரெண்டு தேசிய செய்தித்தாள் விளம்பரம் அப்படி, இப்படின்னு, வாத்தியாருக்கு நல்ல பிள்ளையா இருந்தா போதும் வாத்தியாரு எல்லோருக்கும் உதவி செய்வாங்க எங்க அப்பா நல்ல பையனா இருந்ததுனால (எல்லா அப்பாக்களும் தன் பிள்ளைங்ககிட்ட இப்படித்தான் பொய் சொல்லிக்கிட்டு திரியுறாங்க) வாத்தியார் மந்திர மூர்த்தி அப்படிங்குற பேருல இருந்த மந்திரம்கிறத தூக்கி போட்டுட்டு மூர்த்தின்னு வச்சிட்டாராம், ஆக மொத்தத்தில் மந்திரவாதியாக இருந்த எங்கப்பா மனுசனா மாறிட்டாராம் பள்ளிக்கூட பதிவேட்டில. ஆனா பசங்ககிட்ட மாத்திரத்துக்குத்தான் ரெம்ப நாளா ஆச்சாம் அப்பா சொல்லுவாரு.

ஆனா எங்க அத்தைக்கு அந்த பேருதான் பிடிச்ச பேராம், அத்தைக்கு கல்யாணமாகி ஒரு பெண் குழந்தை இருந்துச்சி மாமா வேலை வெட்டியில்லாம சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு சுத்திக்கிட்டிருப்பார், அத்தை எப்படி சாமி கொண்டாடி ஆகிட்டா அப்டிங்கிறதெல்லாம் எனக்கு தெரியாது இதெல்லாம் நான் புறக்கிறதுக்கு முன்னாடியே நடந்துட்டு, எனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதிலிருந்து அத்தைய பார்க்கும் போது ஜடை வளத்து மூஞ்செல்லாம் மஞ்சள் பூசி, கழுத்து நெறய ருத்திராட்ச மாலையை போட்டுக்கிட்டு, பெரிய திருநீர் பட்டைய போட்டு அதுக்கு மேல சந்தனம் வச்சி அதுக்கு மேல ஒரு பெரிய குங்கும பொட்டு வச்சி , வெத்தலையை போட்டு வாயெல்லாம் செவப்பா பெரிய கண்ணோட தெருவுல போனாங்கன்னா பொம்பளைங்க, ஆம்பளைங்க எல்லோரும் வாங்க சாமி வாங்க சாமின்னு வணக்கம் சொல்லுவாங்க புதுசா யாரவது குழந்தைங்க பாத்தாங்கன்னா பயந்து அழ ஆரம்பிச்சுடுவாங்க எனக்கு பயமெல்லாம் இருந்தது இல்ல சின்ன வயசுல இருந்து அவங்க மடில விளையாண்டு வளந்ததால, அத்தை என்ன கடைக்கெல்லாம் கூட்டிட்டுப்போயி தின்பண்டம் எல்லாம் வாங்கி கொடுப்பார்கள்.

ஆடி மாசம் வந்துட்டா வீட்டு பக்கத்தில இருக்கிற எல்லா கோவிலுக்கும் பூசாரிக்கு அடுத்த படியா அத்தைதான், கோவில் விழா குழுவெல்லாம் கோவில் திருவிழா பத்தி முக்கிய முடிவுகள் எல்லாம் அத்தையைம் கலந்துக்கிட்டுதான் செய்வாங்க, ஆடி மாசம் முடியும் வரை அத்தை எல்லா கோவில்களிலும் சாமி ஆடி தீர்துருவங்க.

அக்னி சட்டி எடுத்து ஊரெல்லாம் சாமி வலம் வரும்போது அம்மா என்னையும் அத்தை கூடவே கூட்டிக்கிட்டு போவாங்க, ஊர் வலம் முடிஞ்சி கோவிலுக்கு வந்து சாமி மலையேற்றத்துக்கு முன்னாடி ஒரு அருள் வந்து நாக்கை துருத்திக்கிட்டு அடிக்கிற மேளத்துக்கும் கோவிலில் இருக்கிற பல வகையான மணிகள் டங் டங்குன்னு அடிக்கிறதுக்கும் ஏத்தவாறு ஒரு ஆட்டம் போடுவாங்க அத்தை, அதை பார்க்கும் போது கொஞ்சம் பயமா இருக்கும்.

அப்புறம் தீபாராதனை காட்டி முடிச்சி சாமி கொஞ்சம் கொஞ்சமா மலையேறும்போது எல்லோரும் அத்தை சாமி காலுல விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு விபூதி பூசிக்கிறதுக்கு அவங்க முன்னாடி போகும்போது இடது கையை வலது இடுப்பு பக்கமா வச்சிக்கிட்டு வலது கையை தூக்கி வாய பொத்துன மாதிரி மூக்கு மேல வச்சிக்கிட்டு என்ன மாதிரி நல்ல மனுசன் இந்த உலகத்திலேயே இல்லேங்கிற மாதிரி போயி நிப்பாங்க.

அத்தை சாமி உஷ் அஹ்ஹா உஷ் அஹ்ஹா என்று குளிர்ல நடுங்குற மாதிரி கொஞ்சம் கொஞ்சம் விபூதி எடுத்த எல்லோருக்கும் வச்சி விடுவாங்க.

அம்மாவும் நானும் அத்தை காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிட்டு விபூதி வாங்கும்போது மட்டும் கை நிறைய ஒரு நூறு கிராம் விபூதியை அள்ளி அம்மா தலையில போட்டு தாயி மகமாயி எங்க குல கொழுந்துகளை காப்பாத்துமா அப்படின்னு விபூதி பூசி விடுவாள் அம்மா நல்லா தலை சீவி பூவும் பொட்டுமா இருப்பாங்க அம்மா தலை நல்லாயிருக்குறது ஒரு வேலை அத்தைக்கு பிடிக்காதோ என்னமோ, அந்த நேரத்தில அத்தை சாமியாகவும் அம்மா பக்தையாகவும் இருந்தாலும் உறவு முரேலே எப்பவும் மதினியும் நாத்தனாரும்தானே, நாத்தனாரு சண்டை எப்போ முடிஞ்சிருக்கு நம்ம நாட்டுல, ஒரு வேலை அம்மாவை காலில் விழ வைப்பதற்காகவே சாமி கொண்டாடி ஆகிவிட்டாலோ என்னவோ அத்தை, சரி அதை விடுங்க.

ஆடி மாசத்துல எல்லோரும் திருவிழா கொண்டாடுறது விரதமிருந்து அக்னி சட்டி தூக்கி சாமி ஆடுறது அதெல்லாம் நம்ம வழக்கத்துல இருக்கிறது நம்ம கண்டிப்பா பண்ணனும், இது வரைக்கும் எனக்கு அத்தைய ரெம்போ புடிக்கும், புடிக்கும் புடிக்காது அப்படிங்கிற கணக்கெல்லாம் பெரிய பையனா வளர்ந்து நல்லது கெட்டது தெரிய ஆரம்பிச்ச பிறகுதான்.

அரசாங்க மருத்துமனை மருத்துவர்கள் எல்லோரும் வீட்டுலயும் ஒரு க்களினிக் வச்சிருப்பாங்க, வாத்தியார்கள் பள்ளிகூடத்தில் சொல்லிகுடுத்துட்டு, வீட்டிலேயும் டியூசன் எடுப்பாங்க, நல்ல மதிப்பெண் வேண்டுமானால் டியூசன் அவசியம் தான், வீட்டோட கிளினிக்கும், பள்ளிக்கு அப்புறம் டியூசனும் மக்களுக்கும் மாணவர்களுக்கும் அவசியமான ஓன்று. அது மாதிரி அத்தை வீட்டோடையே கோவிலும் வச்சிருந்தாங்க.

கோவில் என்றால் சாமி சிலையெல்லாம் இல்லை உலகத்தில இருக்கிற எல்லா சாமியோட படமும் வீட்டுக்குள்ள இருக்கும் சின்ன வீடுதான் குனிந்துதான் உள்ளே போகணும் ஒரு நாலு பேரு உள்ள உட்க்காரலாம் ஆடி மாசம் முழுவதும் கோவில் திருவிழாவிலேயும், மற்ற நேரங்களில் வீட்டுலயும் பூஜை நடக்கும்.

சிறப்பு பூஜை அப்படினா அருள் வாக்கு சொல்லுவது, பத்தி மற்றும் வேப்பங்குலை வச்சி மந்திரிச்சி விடுவது ஆகியவை வெள்ளி கிழைமைகளில் மட்டும். ஹோம் டெலிவரி சலுகையும் இருந்துச்சி அதாவது யாருக்காவது அம்மை போட்டிருந்தாள் அந்த வீட்டுக்கு போயி வேப்பம்குலை வைத்து மேலெல்லாம் தடவி கொடுத்து, என்னைக்கு முதல் தண்ணி ஊத்தணும், என்னைக்கு ரெண்டாம் தண்ணி ஊத்தணும் வீட்டுல என்ன சமைக்கணும் சாம்பாரை தாளிச்சி ஊத்தலாமா வேண்டாமா என்றெல்லாம், அங்குள்ளவர்களுக்கு ஹெல்த் இன்ஸ்பெக்டர் வேலை பார்து காசு வாங்கிட்டு வந்துருவாங்க.

ஆக வெள்ளிக்கிழமை ஒரு பதினஞ்சு பேருக்கு வெள்ளம், புளி ரெண்டையும் கரைச்சி பனைக்காராம் பண்ணுவாங்க இல்லேன்னா எலுமிச்சை தண்ணி ரெடி பண்ணுவாங்க, தேவையானவங்க பூஜைக்கு வருவாங்க இருந்தாலும் அத்தை காலையிலேயே ஒரு சுத்து அக்கம் பக்கம் இருக்குற இவங்களோட பக்த்தகைகள்கிட்ட போயி ஏ ராக்காயி பூஜைக்கு நீ வந்துரு, ஏ மூக்காயி பூஜைக்கு நீ வந்துரு வரும்போது அவள கூட்டிகிட்டு வா இவளையும் கூட்டிக்கிட்டு வா என்று ஒரு சிறப்பு தகவலையும் குடுத்துட்டு வந்துருவாங்க.

வெள்ளிக்கிழமை விரதம் சாப்பாடு சாப்பிடக்கூடாது அப்படிங்கிற பேருல காலையில இருந்து ஒரு பதினைந்து வாழை பழத்தையும் முழிங்கிருவாங்க பச்சத்தண்ணி பல்லுல படக்கூடாதுன்னு சொல்லிட்டு நாலு தம்ளரு பாலையும் முழிங்கிருவாங்க.

ஆக ஒரு வழியா ஏழு மணிக்கு பூஜை ஆரம்பமாகும் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி ஒரு அட்டெண்டன்ஸ் எடுத்துக்கிடுவாங்க அவ வந்துட்டாளா இவ வந்துட்டாளாண்ணு, விளக்கெல்லாம் ஏத்தி ரெடியா இருக்கும் அத்தை போயி அந்த சாமிகள் படங்கள் முன்னாடி நின்னுட்டாங்கன்னா எல்லாரும் பேச்சை குறைச்சிருவாங்க சிலபேரு சைகையில் பேசுவாங்க சிலபேரு காதுக்குள்ள பேசிக்கிடுவாங்க.

அத்தைக்கு லெப்ட் ரைட்ல ரெண்டு எடுபுடிகள் நிப்பாங்க அத்தை சாமிக்கு என்னவேணும் அப்படிங்கிற பரமரகசியம் அவர்களுக்குத்தான் தெரியும் அதுல ஒருத்தி அத்தை பண்ணுறதை எல்லாம் நல்லா கவனிச்சு புரிஞ்சிக்கிட்டு கொஞ்ச நாளிலேயே அடுத்த ஏரியாவுல போயி ஒரு பிரான்ச் ஓபன் பண்ணிட்டா அது வேற விஷயம்.

ஆக அந்த அமைதியான சூழலில் அத்தை சாமியிடமிருந்து மூச்சை உள்ளிழுத்து உஷ்ஷ்ஷ்ஷ் என்ற சத்தம் வரும் அப்படியே உடம்பு முன்னும் பின்னும் ஆட்டம் காணும் தலை சுத்த துவங்கும் கூடினிக்கும் பெண்கள் குலவை போடுவார்கள் அத்தை சாமி ஒவ்வொருவராக அழைத்து அருள் வாக்கு சொல்ல துவங்குவாள்.

ஒரு பத்து நிமிடத்தில் அருள் வாக்கு சொல்லுவது முடிந்து தீபாராதனை காட்டப்பட்டு விபூதி பிரசாதம் கொடுக்கும்போது பக்தர்கள் தங்கள் காணிக்கையை செலுத்துவார்கள், அப்பத்தான் அத்தைக்கு நிம்மதி வரும், பூஜை பண்ணும்போதே எத்தனை பேர் காணிக்கை கொண்டுவந்திருக்கங்களோ என்று எண்ணிக்கொண்டே பூஜை செய்வார்கள் போல.

அதன்பின் அனைவருக்கும் ஒரு தம்ளரில் கரைத்து வைத்த பானங்கள் வழங்கப்படும், பின் உடல்நிலை சரியில்லாத பிள்ளைகளுக்கு விபூதி போடுவது மந்திரிச்சு விடுவது, அதில் ஒன்று இரண்டு பேர் தானாகவே குணமாவர் சிலர் வியாதி முத்திய பின் மருத்துவமனைக்கு செல்வார்கள் ஒரு சிலர் தங்களின் மெத்தனத்தால் பிள்ளைகளை இழந்திருக்கிறார்கள் எல்லாம் நடக்கும் இது எல்லாம் நான் வாலிபனாக ஆனா பின் புரிந்தது, ஆக இப்படியாக எனது பனிரெண்டாம் வயது வரை பார்த்திருந்தேன்.

ஒருநாள் திடீரென அத்தைக்கு குளிர் காய்ச்சல் வந்து அப்பா மருத்துவ மனையில் சேர்த்துவிட்டார் ஒரு வாரம் அப்பாவும் நாங்களும் மருத்துவமனையும் வீடுமாக இருந்தோம், ஒரு நாள் வீட்டுக்கு வரும்போது அப்பாவிடம் கேட்டேன், அத்தைதான் எல்லோருக்கும் மந்திரிச்சி விபூதி போட்டு சரி பண்ணுவாங்கல்ல அதே மாதிரி அத்தையையும் மந்திரிக்கிறவங்ககிட்ட கூட்டிட்டு போகலாமில்லப்பா ஏன் மருத்துமனையில் சேர்த்திருக்கேங்க என்றேன் புரியாமல், அப்பா ஒன்றும் சொல்லவில்லை என்னை பார்த்து ஒரு சிரி சிரித்தார், எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை என்னப்பா என்று மீண்டும் கேட்டேன் நேரம் வரும்போது நீயே புரிஞ்சுக்கிடுவாய் என்றார்.

அத்தை அடுத்த இரண்டு நாட்களில் இறந்துவிட்டாள், மாமாவும் கொஞ்சநாளில் குடித்து குடித்து இறந்துவிட்டார் அத்தை மகளை அப்பா வளர்க்க ஆரம்பித்தார் எங்கப்பா அந்த காலத்து டென்த் எங்கள் ஊர் நகராட்சி அலுவலகத்தில் கிளார்க் வேலைக்கு சேர்ந்து ஆபீஸ் சூப்பிரென்டன்ட் வரை உயர்ந்து பணி ஒய்யு பெற்றார்.

என்னையும் அத்தை மகளையும் நன்கு படிக்கவைத்தார், பெரிய பையனாக வளர வளர எனக்கு புரிந்தது அப்பா ஏன் மந்திர மூர்த்தி என்ற பெயரில் இருந்து மந்திரத்தை தூக்கியெறிந்தார் என்றும் அத்தை ஏன் மந்திரம்மாள் என்ற பெயரை அப்படியே அணைத்துக்கொண்டாள் என்றும்.

மனைவியின் குரல் கேட்டு திரும்பினேன் பூஜைக்கு நேரமாச்சு வாங்க என்றாள் சரி என்று சாமி கும்பிட துவங்கினோம் வீட்டு பூஜை அறையில் இருக்கும் முருகப்பெருமானிடம் வேண்ட துவங்கினேன் ஆண்டவா என் அத்தையை போல இருப்பவர்களை உன்னால் தடுக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, வேலைக்காரி முத்தம்மாள் போல இருப்பவர்களையாவது காப்பாத்து என்று.

கடவுளோ, அடே முட்டாள் உன் அத்தையைப்போல இருப்பவர்கள் என்னை போல கடவுள்களையே ஏமாற்றிவிடுகின்றனர் முத்தம்மாள் போன்றோர்கள் எம்மாத்தரம் மனிதர்கள் தங்களை சக மனிதர்களிடமிருந்து காத்துக்கொள்ளத்தான் சுய புத்தி என்ற ஒன்றும் கொடுக்கப்பட்டிருக்கிறது அதை சில மனிதர்கள் உபயோகப்படுத்துவதில்லை ஆகவே தான் முத்தம்மாள் போன்றோர் ஏமாற்றப்படுகின்றனர் என்பதுபோல இருந்தது.

சாமிகும்பிட்டுவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்து செய்திகள் கேட்க துவங்கினேன் ஸ்ரீ ஹரிகோட்டாவிலிருந்து ஏதோ ஒரு விஞ்ஞானி மங்கள்யான் மற்றும் இந்தியாவின் பெருமைகளை அடுக்கிக்கொண்டே போனார் அதற்குள் என் மனைவி அருகில் வந்து, சரி அப்பள முத்தம்மா பேசும்போது எதுக்கு சிரிச்சேங்க என்றாள், ஒன்றுமில்லை அவ மகளை கூட்டிக்கிட்டு ஒரு அம்மாகிட்ட மந்திரிக்க போகணுமின்னு சொன்னதுமே செத்துப்போன உங்கம்மா மந்திரம்மாள் தான் உயிரோட வந்துட்டாங்களாக்கும் என்று நினைத்தேன் என்றேன், இதை கேட்டு சிணுங்கல், சிரிப்பு, கோபம் எல்லாம் கலந்த ஒருவித அழகுடன் அடிக்க வந்தவளை அப்படியே கட்டி அணைத்துக்கொண்டேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *