“மொடாக்குடிகாரன்னு அப்பாவ அப்பத்தா சொல்லுதே…? அப்படினா என்னங்கப்பாரு?”
மகன் வழிப்பேரன் மகின் கேட்ட கேள்வியால் பதில் சொல்ல முடியாமல் நெளிந்தார் விவசாயி மாரப்பன்.
தன் மகன் பொன்காசு விடாமல் குடிக்கும் மொடாக்குடிகாரன் ஆகி விட்டதில் மிகுந்த கவலையில் இருந்தார். சிறுவயதிலிருந்து தினமும் குடித்தாலும் திருமணமாகி ஒரு குழந்தை வந்த பின்னும் திருந்தாமல் விருந்து நிகழ்ச்சிகளில் உறவினர்கள் கூடியிருக்கும் போதும் கூட தேடிப்போய் மது குடிப்பதை அனைவரும் ஏற்கவில்லை.
“இப்படியொரு குடிகாரனுக்கு எம் பொண்ணக்கொடுத்து ஏமாந்துட்டனே…. விசாரிச்சப்ப ஆருஞ்சொல்லலியே... பாவி மவன் பாட்டம் பூட்டன் வாயக்கட்டி, வயத்தக்கட்டி சம்பாறிச்சு வெச்சுட்டு போன காட்ட கொஞ்சங்கொஞ்சமா வித்து இப்ப மொத்தமா அழிச்சுப்போட்டு பெத்தவங்களையும், கட்டுனவளையும் வீதில கொண்டு வந்து நிறுத்திப்போட்டானே கசுமால….” கண்ணீர் வடித்தவாறு உறவினரிடம் தன் மனக்குமுறலைக்கொட்டினாள் பொன்ராசு மனைவி பாக்யாவின் தாய் வடிவுக்கரசி.
“அம்மா வாய மூடிட்டு கம்னு இருக்க மாட்டியா…? கட்டுனவ நானே கம்முன இருக்கறேன். நீ குடும்ப மானத்த கப்பலேத்தறே…. உங்கிட்ட என்ற புருசங்குடிக்கிறான், சொத்த வித்துத்தொலைக்கறான்னு எப்பவாச்சும் வந்து எழுதுனனா? என்ற விதின்னு கெடைச்ச வாழ்க்கைல உடக்கூடாதுன்னு கஞ்சியோ , கூழோ குடிச்சுட்டு என்ற வகுத்துல பொறந்த வாரிச நல்லபடியா காப்பாத்தோணும்னு நானும் காட்டுக்குள்ள போயி களை வெட்டி, தண்ணி கட்டி, மாடு மேச்சு , சாணி வளிச்சு காலத்த கடத்தீட்டு இருக்கறேன். நமக்குன்னு ஒரு நல்ல காலம் வராதான்னு கோயிலு, கோயிலா போயி அந்த ஆண்டவங்கிட்ட என்ற புருசனுக்கு ஆயிச மட்டும் கெட்டியாக்கொடு, மத்தத நாம்பாத்துக்கறன்னு வேண்டீட்டு இருக்கறேன்” எனக்கூறிய போது பாக்யாவின் கண்களில் கண்ணீர் கட்டுப்படுத்த முடியாமல் பெருகியது.
வெளியில் கணவனை விட்டுக்கொடுக்காமல் பேசினாலும் பிறர் அவரை ஏசுவதைக்கேட்டுத்தாங்கமுடியாமல் மனதுள் அழுவாள். அதோடு தன் உறவுகளில் உள்ள சம வயது பெண்களின் கணவன்களின் நன்னடத்தை, குடிப்பழக்கம் இல்லாத நிலையை எண்ணி ‘தன் கணவன் அவர்கள் போல் இல்லையே…?’வருந்துவாள்.
பலபேர் சொல்லக்கேட்டு பல ஊர்களுக்கு, பல மாநிலங்களுக்கு கூட கடன் வாங்கி கணவனின் காலைப்பிடித்துக்கெஞ்சி அழைத்துச்சென்று குடியை மறக்க மருந்து வாங்கி கொடுத்துப்பார்த்தாள். அங்கேயே தங்கி சிகிச்சைக்காக ஏற்பாடு செய்தாள். எந்த சிகிச்சையும் பலனளிக்கவில்லை.
ஒரு முறை ஓரிடத்தில் ஒரு மாதம் அடைத்து வைத்து சிகிச்சையளிக்கும் இடத்தில் சேர்த்துப்பார்த்தாள். சிகிச்சை முடிந்து வந்தவன் மறுபடியும் மது குடித்ததோடு தன்னை அடிக்கவும் செய்ததைக்கண்டு மிகவும் கவலை கொண்டாள்.
நெருங்கிய தோழி ஒரு முறை பாக்யாவைப்பார்க்க வந்த போது கண்ணீருடன் தன் கதையைச்சொன்னாள். தோழியோ டைவர்ஸ் பண்ணுமாறு அறிவுரை கூறியதை அவளால் ஏற்க முடியவில்லை.
‘கல்லானாலும் கணவன் , புல்லானாலும் புருசன்’ எனும் பழமொழிக்கேற்ற மன நிலையில் இருந்த பாக்யாவால் அதை ஏற்க முடியவில்லை. மனதார கணவனை நேசிக்கவே செய்தாள். ‘எப்பவாவது திருந்தி விட மாட்டாரா?’ எனும் மனநிலை கொண்ட எதிர்பார்ப்பில் காலத்தைக்கடத்தினாள்.
குடிப்பதால் உடல் நலம் கெடுவதோடு பொருளாதார நிலையும் மிகவும் மோசமாகுமென புரியத்தோன்றுவதில்லை. சில சமயம் வீட்டில் உணவுக்கே பற்றாக்குறை ஏற்பட்டது.
ஒருநாள் அளவுக்கதிகமாக குடித்துவிட்டு வந்த பொன்காசு உணவுப் பாத்திரங்களைத் திறந்து பார்த்த போது உணவில்லாததால் கோபத்தில் பாத்திரத்தைத் தூக்கி வீசியதில் மனைவி பாக்யாவின் தலையில் பட்டு மயங்கி சரிந்தவளை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதும் மருத்துவர் பரிசோதித்து அவசரசி கிச்சைப்பிரிவில் சேர்த்த போது, பாக்யா ஒரே வார்த்தை பேசினாள்.
“வீட்ல வழுக்கி விட்டதால கீழே விழுந்துட்டேன். அதனால தலைல அடிபட்டிடுச்சு” எனும் வார்தையைத் திக்கித்திணறிச் சொன்ன பின் அவளது உடலில் உயிர் பிரிந்து விட்டது.
தன் இறப்பில் கூட தன் கணவனுக்கு பழி சொல் வந்து விடக்கூடாது என நினைத்த பாக்யா போன்ற அன்பு மனைவியை குடிகாரக் கணவன்களால் மட்டும் ஏனோ புரிந்து கொள்ள முடிவதில்லை. குடி குடியைக்கெடுத்து விட்டது.
உன்னை சொல்லி குத்தமில்லை , என்னை சொல்லி குத்தமில்லை காலம் செஞ்ச கோலமடி கடவுள் செஞ்ச குத்தமடி என்று கடவுள் மேல் பழியை சுமத்தி பலர் வாழ்கின்றனர்..
குடிப் பழக்கத்தினால் ஏற்படுகின்ற விளைவுகளை மிகவும் அழகாக
புரிந்து கொள்ள முடிகிறது…