மாரியப்பன் கோபத்தில் அரிசிப்பானையை எட்டி உதைத்தான். பானை உடைந்தது. அதில் அரிசிதான் இல்லை.
“எங்கடி ஒளிச்சு வைச்சிருக்க…’ மனைவி ராகினியை மிரட்டினான். அவனுக்கு இன்னும் கொஞ்ச நேரத்தில் நூறு ரூபாய் இல்லையென்றால்… அவனால் நிற்க முடியாது. உதறல் எடுக்கும். சரக்கு உள்ளே போனால்தான் கம்பீரம்.
“என்னய்யா இருக்கு ஒளிக்க…? நீ என்னாத்த சம்பாரிச்சு கொடுத்த…இங்க ஒளிச்சுவெக்க…? கழுத்துலகூட மஞ்சக் கயிறுதான தொங்குது!’
புலம்பியபடி ராகினி வெளியே வீட்டு வேலைக்குப் புறப்பட்டாள்.
மாரியப்பன் இயலாமையால் பாத்திரங்களை உதைத்தான்.
“அப்பா…’
பிஞ்சுக் குரல் கேட்டு திரும்பினான். அவனது மூன்றாவது படிக்கும் பெண்குழந்தை தன் பென்சில் பாக்சில் இருந்து, கொஞ்சம் சில்லறைகளை எடுத்து கையில் வைத்துக்கொண்டு…
“இந்தா வெச்சுக்கப்பா…’ – மழலையாக வேண்டினாள்.
மாரியப்பன்… தன் பெண்ணையும்… அந்த காசையும் மாறி மாறிப் பார்த்தான்.
உடம்பில் ஏதோ மின்சாரம் பாயும் உணர்வு ஏற்பட… “என் கண்ணு…’ என்று மகளை அப்படியே அள்ளிக்கொண்டான். குழந்தை தலையில் அடித்து சத்தியம் செய்தான். “இனி குடிக்கவே மாட்டேன்!’ என்று.
– ஆனந்த் சீனிவாசன் (ஜூன் 2011)