கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2013
பார்வையிட்டோர்: 12,191 
 

பிரபல தனியார் மருத்துவமனையில், “ஏசி’ ரூமில், காலில் கட்டுடன் படுத்திருந்தாள் கல்பனா.

கீழே விழுந்து, இடுப்பெலும்பு முறிந்து, பிளேட் வைத்து ஆபரேஷன் செய்து, இன்றோடு, மூன்று நாட்கள் முடிந்திருந்தது.

“”அம்மா… இந்தாம்மா சாத்துக்குடி ஜூஸ்… குடிச்சுட்டு படுத்துக்குங்க.”

மகள் ஆர்த்தி, படுத்திருந்த அம்மாவின் தலையை தூக்கி, டம்ளரில் இருந்த பழச் சாற்றை புகட்டினாள்.

மண(ன) முறிவு

“”ஆர்த்தி… நீயும் ஏம்மா என்னோடு சேர்ந்து கஷ்டப்படறே. நீ வீட்டில் ரெஸ்ட் எடு. வேலைக்காரி பாக்கியத்தை, ஆஸ்பத்திரியில் துணைக்கு வச்சிக்குறேன்னு சொன்னா, கேட்க மாட்டேங்கிறே…”

“”என் செல்ல அம்மா. உனக்கு பக்கத்துல இருந்து நான் செய்யாம, யார் செய்வா?”

பதினாறு வயதில், அழகு தேவதையாக ஜொலிக்கும் மகளை கண்கலங்க, பார்த்தாள். வாழ்க்கையில் இவளுடைய அன்பையாவது பெறுவதற்கு கொடுத்து வைத்திருக்கேனே என மனம் நினைத்தது.

“”அம்மா… உனக்கு காலில் அடிபட்டு ஆஸ்பத்திரியில் இருப்பதை அப்பாகிட்டே சொல்லிட்டேன். பார்க்கிறதுக்கு வர்றேன்னு சொல்லியிருக்காரும்மா.”

தயக்கத்துடன் ஆர்த்தி சொல்ல, “”எதுக்கு ஆர்த்தி… ஏன் சொன்னே? அவர் வந்து பார்த்து என்ன ஆகப் போகுது. எப்ப மனசு விட்டுப் போயி, அவர்கிட்ட இருந்து விவாகரத்து வாங்கிட்டேனோ, அதுக்கப்புறம் எனக்கும், அவருக்கும் என்ன உறவு இருக்க முடியும். அவர் உனக்கு அப்பா… அதை மறுக்க முடியாது. நீ அன்பு செலுத்தறதையும் நான் தடை சொல்லலை. ஆனா, தயவு செய்து என்னை அதில் சம்பந்தபடுத்தாதே ஆர்த்தி. எனக்கு பிடிக்காது!”

கண்டிப்பாக பேசும் அம்மாவிடம், என்ன பதில் சொல்வது என்று புரியவில்லை. ஆர்த்தி மவுனமாக இருக்க, “”என்ன ஆர்த்தி… இப்படி பேசிட்டேன்னு கோபமா? அம்மாவை புரிஞ்சுக்கம்மா ப்ளீஸ்… அவரால, நான் வாழ்க்கையில் எவ்வளவு இழந்திருக்கேன்னு உனக்கு தெரியுமா?

“”என்னை ஒரு மனுஷியாகவே மதிக்காத அவரது ஆணவம், மனதை நோகச் செய்த அவரது வார்த்தைகள், எல்லாத்துக்கும் மேல், அவரோட வேலை பார்த்த பெண்ணுடன் தொடர்பு வச்சிருக்காருன்னு தெரிஞ்ச பிறகும், என் பெண்மையை விட்டு கொடுத்து வாழ மனசு வரலை ஆர்த்தி. சட்டபடி பிரிஞ்சுட்டோம்.

“”செல்வந்தருக்கு ஒரே மகளாக பிறந்த நான், வாழ்க்கையில் தோத்து போயிட்டேன். கடலளவு பணம் இருந்து என்ன பிரயோஜனம். என் வாழ்க்கையை சூன்யமாக்கி போன அந்த மனுஷனை நினைக்கக் கூட எனக்கு பிடிக்கலை!”

“”சரிம்மா… நீ ரெஸ்ட் எடு. தேவையில்லாமல் பழைய விஷயங்களை பேசி, மனசை காயப்படுத்திக்காதே!”

ஆர்த்தி ஆறுதலாக சொல்ல, “”ஆர்த்தி… சரண்கிட்டே பேசினியா? நல்லா இருக்கானா?”
குரலில் பாசம் இழையோடியது.

விவாகரத்து கோர்ட்டில் முடிவாகி, சரணை அப்பாவிடமும், ஆர்த்தியை அம்மாவிடமும் வளரும்படி தீர்ப்பு வர, மகனை பிரிய தவித்து போனாள் கல்பனா. முதலில், கோர்ட் உத்தரவுப்படி அம்மாவை தேடி வந்தவன், வளர, வளர அவளிடமிருந்து விலகி போனான். அவளை பார்க்க வருவதே நின்று போனது.

விவாகரத்தாகி இரண்டு வருடம் கழித்து, ஒருமுறை மகனுடன் வந்தவர், “கல்பனா… என்னை மன்னிச்சுடு. என்னால உன்னையும், ஆர்த்தியையும் பிரிஞ்சு இருக்க முடியலை. இளமை வேகத்துல நான் பண்ணினது தப்பு தான்; அதை மறுக்கலை… இப்ப நான் பண்ணின தப்பை உணர்ந்து, திருந்தி, உன்னோடு இணைந்து வாழ விரும்பறேன். எல்லா கெட்ட சகவாசத்தையும் விட்டுட்டு வந்திருக்கேன். என்னை நம்பு கல்பனா!’

சுட்டெரித்து விடுவது போல் அவனை பார்த்தாள்.

“தேவையில்லை. இரண்டு வருஷம் பிரிஞ்சு இருந்த பிறகு தான் என் அருமை உங்களுக்கு தெரிய வருதா? ஏன்… அந்த சாகசக்காரி உங்களை வேண்டாம்ன்னு விட்டுட்டு போயிட்டாளா… உங்களோடு எனக்கு எந்த பந்தமும் கிடையாது. எல்லாத்தையும் துடைச்சு எறிஞ்சுட்டேன். உங்க மகளை பார்க்க வந்தா, அதை மட்டும் செஞ்சுட்டு போங்க. என்னை தொந்தரவு பண்ணினா, நான் திரும்ப உங்க மேல கம்ப்ளைன்ட் கொடுக்க வேண்டி வரும்!’

கல்பனாவின் மனம் இறுகி பாறையாகி இருந்தது.
பத்து வருடங்கள் ஓடிவிட்டன.

கதிரேசனும், தன் வேலையை பெங்களூருக்கு மாற்றல் வாங்கி சென்றுவிட, தன் கவனம் முழுவதையும் மகளிடம் செலுத்தி வாழ ஆரம்பித்தாள் கல்பனா.

வலியின் காரணமாக தூக்கத்திற்கு மருந்து கொடுத்திருக்க, நன்றாக தூக்கி விழித்த கல்பனா. ஆர்த்தி அவளருகில் நின்று கொண்டிருப்பதை பார்த்தாள்.

“”ரொம்ப நேரம் தூங்கிட்டேன் போலிருக்கு. நீ சாப்பிட்டியா? வீட்டிலிருந்து சாப்பாடு வந்துச்சாம்மா?”

“”நான் சாப்பிட்டாச்சும்மா… அப்பா வந்து உன்னை பார்த்துட்டு போக வெளியே காத்திட்டிருக்காரு.”

கல்பனாவின் முகம் சுருங்கியது.

“”வேண்டாம் ஆர்த்தி… நீ பார்த்து பேசிட்டே இல்லே. அப்புறம் என்ன… போகச் சொல்லு ஆர்த்தி…”

“”அம்மா… ப்ளீஸ்… எனக்காக, யாரோ ஒருத்தர் மாதிரி, அஞ்சு நிமிஷம் வந்துட்டு போகட்டும்மா… உன்னை பார்க்கத்தான் பெங்களூருலிருந்து வந்திருக்காரு… ப்ளீஸ்மா…”

“”சரி… வரச் சொல்லு…”

“”கல்பனா… உனக்கு அடிபட்டு ஆபரேஷன் ஆகியிருக்குன்னு ஆர்த்தி சொன்னதிலிருந்து, மனசு தவிப்பா இருக்கு. இப்ப வலி எப்படி இருக்கு… பரவாயில்லையா?”

குரல் தழைத்து பேசும் கணவனை பார்க்காமல், சுவற்றை பார்த்தபடி, “”எனக்கொன்றுமில்லை. நான் நல்லாத்தான் இருக்கேன். பார்த்தாச்சு இல்லையா… நீங்க கிளம்பலாம்.”

“”உனக்கு என் மேல் உள்ள வெறுப்பு இம்மியளவும் குறையலைன்னு, உன் பேச்சிலிருந்து தெரியுது கல்பனா. எத்தனை வருஷமானாலும், அது மாறாதுன்னு புரிஞ்சுக்கிட்டேன். என்னை மன்னிச்சுடு. உடம்பை பார்த்துக்க… நான் வர்றேன்.”

அறையின் வாசலில் நின்றிருந்த ஆர்த்தி, உள்ளே சென்றவர், மறு நிமிடமே திரும்பியதிலிருந்து, அங்கு என்ன நடந்திருக்கும் என்பதை உணர்ந்தவளாய், அப்பாவின் கைகளை பிடித்து, “”சாரிப்பா… அம்மாவை நான் பார்த்துக்கிறேன். நீங்க கிளம்புங்க. சரணை நான் மிகவும் கேட்டதாக சொல்லுங்க!”

“”சரணும் வந்திருக்கான்மா… காரில் உட்கார்ந்திருக்கான்.”

“”என்ன… சரண் வந்திருக்கானா… அம்மாவை வந்து பார்த்துட்டு போகலாமில்லையா?”

“”நான் கூப்பிட்டேன். அவன் வர மறுத்துட்டான்.”

“”வாங்கப்பா… நானே தம்பியை நேரில் பார்த்து கூப்பிடறேன்…”

அவருடன், கார் நிற்கும் இடத்தை நோக்கி சென்றாள்.

காரில் உட்கார்ந்திருந்த சரணை நெருங்கியவள், “”சரண்… எப்படியிருக்கே?”

தம்பியை அணைத்துக் கொண்டாள்.

“”அக்கா… நீ நல்லாயிருக்கியா? அப்பா மட்டும் தனியா வர்றாரேன்னு, நானும் துணைக்கு வந்தேன்…”

“”வந்தது சரி… உள்ளே வந்து அம்மாவை பார்த்துட்டு போ சரண். நீ வந்து எத்தனை வருஷமாச்சு. அம்மா உன்னை பார்த்தா, எவ்வளவு சந்தோஷப்படுவாங்க தெரியுமா? அவங்களுக்கு எப்பவும் உன் நினைப்பு தான். ஆபரேஷன் முடிந்து படுக்கையில் இருக்கிறவங்களுக்கு, ஆறுதலா நாலு வார்த்தை பேசிட்டு போ சரண்!”

“”தேவையில்லை அக்கா… எனக்கு அவங்களை பார்த்து பேசணும்னு தோணலை. நான் அப்பாவுக்காக தான் வந்தேன். நாங்க கிளம்பறோம்…”

“”ப்ளீஸ் சரண்… எனக்காக, இந்த அக்காவுக்காக வாடா…”
கெஞ்சலுடன் கூப்பிடும் அவளைப் பார்த்தான்.

“”போய் பார்த்துட்டு வா சரண். என்ன இருந்தாலும் அவ உன்னை பெத்தவ. அடி வாசல் வரை வந்துட்டு நீ பார்க்காம போனது தெரிஞ்சா, ரொம்ப வருத்தப்படுவா…”
அப்பாவும் சொல்ல, “”சரிப்பா… போயிட்டு வர்றேன்”
ஆர்த்தியுடன் உள்ளே வந்தான்.

கண்மூடி படுத்திருந்த கல்பனாவிடம் வந்த ஆர்த்தி, சந்தோஷ குரலில், “”அம்மா… உன்னை பார்க்க சரண் வந்திருக்கான்மா!”
கண்களில் பாசம் மின்ன, வாசலை பார்த்தாள்.

“”வெளியே நிற்கிறான். இரும்மா வரச் சொல்றேன்…”

“”சரண்… அம்மாகிட்டே ஆறுதலா பேசிட்டு வா… நான் அப்பாவோட காரில் இருக்கேன்.”

உள்ளே நுழைந்த மகனை, கண்ணீர் மல்க பார்த்தாள்.
“என் மகன் எவ்வளவு பெரியவனாக வளர்ந்து இருக்கிறான். இவனை பிரிந்து வாழ வேண்டிய நிலையில் ஆண்டவன் என்னை வைத்து விட்டானே…’

ஆறேழு வருடங்களுக்கு பின் மகனை பார்த்தவள்; உடைந்து போனாள்.

பேசாமல் நின்ற சரணை பார்த்தவள், “”சரண், வாப்பா… நீ வந்ததில் அம்மாவுக்கு எவ்வளவு சந்தோஷம் தெரியுமா? என் மனசில் உன்னை எப்பவும் நினைச்சுட்டே இருப்பேன் சரண். இந்த அம்மாவை பார்க்கணும்ன்னு உனக்கு தோணலையாப்பா… வராமலேயே இருந்துட்டியே?”

“”எதுக்காக இந்த நாடகம், கண்ணீரெல்லாம்… உன்னைப் பத்தி எனக்கு தெரியும். அக்கா வற்புறுத்தியதால் வந்தேன். உன் மேல் உள்ள பாசத்தால் வரலை…”

“”சரண்… அம்மாகிட்டேயா இப்படி பேசற. நான் உன்னை பெத்தவடா…”

“”தெரியும். அதை மறுக்க முடியுமா… ஆனா, உனக்கு உன்னோட வாழ்க்கை தானே முக்கியம். இதுல பிள்ளைங்க எங்கே வந்தாங்க. அப்பா தப்பானவரா இருந்தாலும், அவரை பிரியணும்ன்னு தான் நினைச்சியே தவிர, எங்க வாழ்க்கையை யோசிச்சுப் பார்த்தியா?

“”என்னையும், அக்காவையும் பிரிச்சு, ஒண்ணா வாழ வேண்டியவங்க, ஆளுக்கொரு திசையில்… அப்பா தன் தப்பை உணர்ந்து உன்கிட்டே எத்தனை முறை மன்னிப்பு கேட்டிருக்காரு… அவருக்காக வேண்டாம், எங்களுக்காகவாவது, அவரை மன்னிச்சு ஏத்துக்கணும்ன்னு உனக்கு தோணலை.

“”உனக்கு பிறந்த பாவத்துக்காக, நானும், அக்காவும் இப்படி வாழ்ந்துட்டு இருக்கோம். உன்னோட பிடிவாதம், உன்னை கஷ்டப்படுத்தினவரை, கடைசி வரை துன்புறுத்தி பார்க்கணுங்கிற உன் நினைப்பு, உன் ஆணவம், இதனால நீ இழந்தது, உன்னோட வாழ்க்கை மட்டும் இல்லை… பிள்ளைகளோட அன்பு, பாசம் எல்லாத்தையும் இழந்துட்டு நிக்கிறே. உன்னை என் தாயாக என்றுமே என்னால ஏத்துக்க முடியாது.

“”தாய்மைக்குரிய பண்புகளே இல்லாமல், மன்னிக்கும் தன்மை இல்லாமல், மனதில் எல்லார் மேலேயும் வெறுப்பை சுமந்துகிட்டு, பாசத்தை காட்டேறேன்னு நீ சொல்றதை என்னால நம்ப முடியலை. சரி… நான் கிளம்பறேன்.”
அவள் அருகில் கூட நெருங்காமல் வெளியேற, அவன் சொன்ன வார்த்தைகள் நெஞ்சை சுட, மனம் குமுறி முகத்தை மூடி அழுதாள் கல்பனா.

“உணர்ந்துட்டேன்; நான் பண்ணின தப்பை உணர்ந்துட்டேன். என் பிள்ளையை என்கிட்ட இருந்து விலக்கி வச்சிருந்த நான், தாயாக இருக்கவே அருகதை இல்லாதவள்…’

தன் தோளை தொடும் கைகளை பற்றியபடி கண் திறந்தா. சரண் தான் நின்று கொண்டிருந்தான்.

“”சரண்… என்னை மன்னிச்சிடுப்பா. வாழ்க்கை என்னங்கிறதை எனக்கு புரிய வச்சுட்டே. தப்பை உணர்ந்து, திருந்தி வந்தவரை நான் மன்னிச்சிருந்தால், இன்னைக்கு உன்னோட வெறுப்பை சம்பாதிக்கிற நிலை வந்திருக்காது. என் பிள்ளை எனக்கு கிடைச்சிருப்பான். அதை நான் உணராமல் போயிட்டேன்…”

“”அம்மா அழாதே… உன்னை இப்படி பேசினதுக்கு, நீ தான் என்னை மன்னிக்கணும்… நீயும், அப்பாவும் ஒண்ணு சேரணும். உங்க ரெண்டு பேர் நிழலில், நானும், அக்காவும் சந்தோஷமா இருக்கணும். அதுதான் என் ஆசை… நிறைவேத்தி வைப்பியாம்மா?”

மகனை தழுவிக் கொண்டாள்.

“”உடைஞ்சு போன என் கால் மட்டும் ஒண்ணு சேரலை. உடைஞ்சு போன எங்க ரெண்டு பேர் வாழ்க்கையையும் நீ ஒண்ணு சேர்த்திட்டே… போய், அக்காவையும், அப்பாவையும் வரச் சொல்லு சரண்…”

விழிகளில் பாசத்தை தேக்கி பார்க்கும் அம்மாவை, அணைத்து முத்தமிட்டான் சரண்.

– ஜனவரி 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *