கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 9, 2012
பார்வையிட்டோர்: 11,721 
 
 

கார்மழைக்காலம்… மழையற்றுப் போனதால் வறட்சியின் கொடூரம் எங்கும் வெயிலோடு தகித்தது. இவன், நடந்தே ஊரைவிட்டு வெகுதூரம் வந்திருந்தான். செருப்புக் காலில் புழுதி மேலெழும்பியபடி இருந்தது. இருமருங் கிலும் ஆவாரஞ் செடிகள் பூத்திருந்தன. அதன் மஞ்சள் பூங் கொத்தை கருந்தும்பிகள் வட்டமடிக்கும் ரீங்கரிப்பு மெல்லிசாய் கேட்டது. எதிரில் ஆள் அரவமே இல்லை. குறுங்காட்டு வெளிகள் ஏகாந்தமாய்க் கிடந்தன. இவன் நடந்தபடியே இருந்தான்.

தொலைதூரத்தில் திடீரென கதுவேலி கூட்டம் கெக்கலித்தது. அதனைத் தொடர்ந்து ஆட்களின் சீழ்க்கை ஒலியும் கேக்கைச் சப்தமும் கேட்கத் துவங்கியது. இவன் பின்னால் திரும்பிப் பார்த்தான். நாய் ஒன்று வேகமாக ஓடி வந்துகொண்டு இருந்தது. ஆட்கள் சப்தமிட்டபடி அதைத் துரத்திக்கொண்டு வந்தார்கள். இவனுக்கு அது மசை நாய் எனத் தெரிந்துவிட்டது. இவன் கீழே குனிந்து இரு கைகளிலும் கல்லை எடுத்து, நாய் அருகில் வந்ததும் தாக்குவதற்கு தயா ரானான். தாவி ஓடி வந்துகொண்டு இருந்த நாய், இவன் பாதையை வழிமறித்து நிற்பதைக் கண்டதும் பத்தடி தூரத்தில் திடுக்கிட்டு நின்றது. அதற்குள், துரத்திக்கொண்டு வந்தவர் களிலிருந்து ஒருவன் சப்தமாகக் கத்தினான்… ‘‘மசை நாயிதா… யோசிக் காதே… ஒரே போடா… போட்டெறி…!’’

இவன், தோதாக நின்றுகொண்டு குறிபார்த்தான். நாய் சட்டென பக்கவாட்டில் நகரத் திரும்பியது. இவன் கல்லை விட்டெறிந்தான். குறி தப்பிவிட்டது. ஆவாரஞ் செடிகளுக்குள் புகுந்து அல்லைப் புறத்தில் ஓடிய நாய், கொறங்காட்டு வேலியோரம் போய், கிளுவை வேலி முட்களுக்குள் தலையை நுழைத்துப் போராடி மறுபுறம் போய்விட்டது.

இவன் மேற்கொண்டு அங்கு நிற்காமல் நடக்கத் துவங்கினான். பொழுது உச்சிக்கு ஏறி, வெயிலின் தாக்கம் அதிகமாயிற்று. பழையபடி பாதை நிசப்தம் பூண்டது. பாம்புத் தாரை போயிருந்தது. வண்ணார்கள் கரம்பை மண் எடுத்த குழியில் செம் பூத்து உட்கார்ந்திருந்தது. இவன் மேடேறினான். இறக்கத்தில் இருந்தது மாமா ஊர்.

ஊருக்குள் பெரிய வீடு மாமாவினுடையது. வெளிநடை சாத்தியிருந்தது. இவன் கதவைத் தள்ளி, திறந்து முன் வாசலுக்குப் போனான். ஆசாரத்துத் திண்ணையில் உட்கார்ந்து முறத்து அரிசியில் கல் பொறுக்கிக்கொண்டு இருந்த மாமா பெண், இவனைக் கண்டதும் எழுந்து உள்ளே போய், சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்தாள். உள் வீட்டில் இருந்து அத்தை வந்ததும் இவன் மாமா வைப் பற்றிக் கேட்டான். மாமா பட்டி நாயைத் தேடிப் போயிருப்ப தாகச் சொன் னாள் அத்தை.

‘‘ஆட்டுக் குட்டி, கோழி யெல்லாம் புடிக் குதுன்னு கட்டியே வச்சிருந்தோம்… முந்தாநேத்து எப்படியோ தும்பக் கழட்டி நழுவிக்கிட்டு ஓடிருச்சு..!’’

இவனுக்கு மசை நாயின் ஞாபகம் வந்தது. உடனே கேட்டான்…. ‘‘நாய் என்ன சாயல்?’’

‘‘கருவாயன்!’’

‘‘மசை புடிச்சு எங்க வூர்ல சுத்துது… அடிக்கத் துரத்தி னோம். சிக்கல..!’’

அத்தையின் முகம் மாறியது. இவன் திண்ணை எறப்புத் தூணில் சாய்ந்து உட்கார்ந்த வாறே யோசித்துக்கொண்டு இருந்தான். மாமாவிடம் பெண் கேட்டு வந்திருப்பதை நினைத்த போது இவனுக்கு ஒரு கணம் பயம் எழுந்தது. சமயம் நகர்ந்துகொண்டே இருந்தது.

வெகுநேரம் கழித்து வந்த மாமா, இவன் எதிரில் வந்து உட்கார்ந்தார். மாமா பெண், உடனே மசை நாயைப் பற்றி மாமாவிடம் சொன்னாள். மாமா பதில் பேசவில்லை. அவசரமாக எழுந்து கிளம்பினார். இவனையும் கூப்பிட்டார். இவன், மாமா புல் லட்டில் பின்னால் ஏறி உட்கார்ந்து கொண்டான்.

இருவரும் பேசிக்கொள்ளவே இல்லை. இறக்கத்தில் திரும்பியதும், மாமா புல்லட்டை நிறுத்தினார். தொலைவில் மதியம் போலவே ஆட்கள் மசை நாயைத் துரத்தி ஓடி வந்துகொண்டு இருந்தார்கள். இவன் அவசரமாக புல்லட்டிலிருந்து இறங்கி னான். கீழே குனிந்து கற்களைப் பொறுக்கி, மசை நாயை அடிப்பதற்குத் தயாராக எதிர்கொண்டு நின்றான். மாமா அதே இடத்தில் புல்லட்டை ஸ்டேண்ட் போட்டு நிறுத்திவிட்டு, ஓரமாகப் போய் நின்றுகொண்டார்.

இவன் மசை நாயை எதிர்கொண்டு ஓடி, மசை நாயை நெருங்க பத்தடி தூரம் இருக்கும்போது நின்றான். மசை நாயும் இவனைப் பார்த்து நின்றது. இவன், குறி பார்த்து கல்லை வீசினான். முதல் அடியே மசை நாயின் கெண்டைக் கால் பகுதியில் விழுந்தது. மசை நாய் பற்கள் தெரிய உறுமிக்கொண்டு, இவனை நோக்கி ஓடி வந்தது. இவனுக்குத் திக்கென்றது. தடுமாறிப் போனான். நல்லவேளையாக, மசை நாய் இவனைக் கடந்து விலகி, பாதையில் மாமா நின்ற திசையில் ஓடியது. இவன் பின் தொடர்ந்து ஓட ஆரம்பித் தான்.

மசை நாய் மாமாவை நெருங்க சில அடி தூரமே இருந்தபோது, யாரோ ஒருவன் வீசிய கட்டுத்தடி மசை நாயின் பின்னங் கால் பகுதியைத் தாக்கியது. பலமான அடி. கால் ஒடிந்து போயிருக்க வேண்டும். மசை நாய், இடுப்போடு தரையில் உராய்ந்து இழுத்தபடி மேலும் ஓட முயன்றது. அதால் முடிய வில்லை.

இவன், துரத்திக்கொண்டு வந்தவர்களிடமிருந்து கட்டுத்தடி ஒன்றை வாங்கி, முன்னே வந்து, மசை நாயின் இடுப்பில் ஒரே போடாகப் போட்டான். துரத்திக்கொண்டு வந்தவர்களில் ஒருவன் கையிலிருந்த தடியால் மசை நாயின் தலையில் ஓங்கி அடித்தான். நாய் ஒருமுறை புரண்டது. அதன்பிறகு, நாயிடம் சலனமேயில்லை. அதன் மூக்கு, வாய் பகுதிகளிலிருந்து ரத்தம் கசிந்தது.

துரத்திக்கொண்டு வந்த கூட்டத்துக்கு தலைமை தாங்கிய சித்தப்பா இவனைக் கூப்பிட்டுச் சொன்னார்… ‘‘மசை நாய நாரத்தான் மரத்தடியில பொதைச்சா, மரம் நல்லா காய் புடிக்குமாம்பா..! நானே நாயக் கொண்டுப்போயிப் பொதைச்சுக் கறேன்!’’ இவன் பதில் பேசவில்லை.

சிறிது நேரத்தில் அந்த இடம் வெறுமையாயிற்று. மாமா, புல்லட்டைத் திருப்பி கிளம்ப ஆயத்தமானார். சூரியன் மறைந்து, வெளிச்சம் மட்டுமே இருந்தது. மாமா, தூரத்தில் போய்க்கொண்டு இருந்த கூட்டத் தைப் பார்த்தபடியே பேசினார்… ‘‘பழைய பகைய மனசுல வெச்சு, அநியாயமா பட்டி நாய அடிச்சுக் கொன்னு போட்டானுக… சண்டாளப் பாவிக!’’

இவனுக்கு சுருக்கென்றது. போன பஞ்சாயத்துத் தேர்தலின்போது மாமாவும் சித்தப்பாவும் எதிரெதிர் அணியில் நின்றார்கள். கடுமையான போட்டி. முடிவில் மாமா ஜெயித்து பஞ்சாயத்து பிரசிடென்ட் ஆனார். அன்றிலிருந்து அடிக்கடி, சண்டை, சச்சரவு என இரு ஊர்களுக்கும் ஆவதேயில்லை.

‘‘கேக்க மறந்துட்டேனே… மத்தியானம் வூடு தேடி வந்தீங்க… ஏதாவது சோலியா…?’’

‘‘ஆமாம் மாமா… வூட்டுல உக்காந்து பேச வேண்டிய சோலி… நான் போயிட்டு நல்ல நாள் பாத்து வாரேன்.’’

‘‘புரியலை..!’’

‘‘நம்ம வித்யாவுக்கு வயசாயிட்டுப் போகுது… அதான்!’’

‘‘ஏதாவது ஜாதகம் கொண்டுவந்திருக்கீங் களா..?’’

‘‘இல்ல… ஜாதகம் வாங்கிட்டுப் போகலா முன்னு இருக்கேன்…!’’

‘‘மாப்பிள்ளை யாரு?’’

‘‘நாந்தான்..!’’

‘‘மூணு தலக்கெட்டா நம்ம குடும்பத்துக்கு நல்ல உறவு இருக்கு… அதைக் கெடுத்திட மாட்டீங்கன்னு நெனைக் கறேன்…!’’ மாமா பேசும் தொனியே மாறியிருந்தது.

‘‘அப்ப… என்னைவிட வித்யாவுக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்துருவீங்களா?’’

‘‘நான் மாப்பிள்ளை பார்க்கறேன்.. இல்ல, எம் பொண்ணைப் பாழுங் கெணத்துல புடிச்சுத் தள்றேன்; அது என் சொந்த விசயம்..!’’

மாமா, புல்லட்டை உதைத்துக் கிளம்பிப் போனார். புகையோடு, பின் சக்கரத்துப் புழுதியும் சேர்ந்து இவன் முகத்தில் அறைந்தது. இவன் மன செல்லாம் கனத்துப் போயிருந்தது. மாமாவிடம் இன்று கல்யாணப் பேச்சை எடுத்திருக்கவே கூடாது என நினைத்தான். பின்பு, திரும்பி இறக் கத்தில் நடந்தவன், நேராக வீட்டுக்குப் போகாமல், தோட்டத்துக்குப் போய் கிணற்றுமேட்டு தொளைவாரிக் கல்மீது உட்கார்ந்து யோசிக்கத் துவங்கி னான். எதிர்காலமே சூன்யமாகி விட்டது போலத் தோன்றியது.

இரு வாரங்கள் கடந்திருந்தன. அன்று வெள்ளிக்கிழமை. இவன் மறுபடியும் புறப்பட்டு மாமாவின் ஊருக்குப் போய், ஊர் எல்லையில் இருக்கும் மாகாளியம்மன் கோயில் ஒற்றைத் தடத்தில் நின்றுகொண்டான். மாமா பெண், அம்மனுக்கு தீபம் போட தனியாக வரும் சந்தர்ப்பத்துக் காகக் காத்திருந்தான்.

இருட்டுவதற்குச் சற்று முன் மாமா பெண் சைக்கிளில் வந்தாள். இவன் எழுந்து சென்று, தடத்தை வழிமறித்து நின்றான். இவன் கிட்டத்தில் வந்ததும் மாமா பெண் சைக்கிள் சட்டத்தில் இறங்கிக் காலூன்றினாள். ஒருவித பயம் கலந்த மிரட்சியுடன் இவனை ஏறிட்டாள். இவன் சுற்றி வளைக் காமல் நேராக விஷயத்தைப் பேசி னான்… ‘‘என்னைக் கலியாணம் பண் ணிக்கிறதுல உனக்கு இஷ்டந் தானே?’’

மாமா பெண் பதில் பேசவில்லை. மௌனமாக தலை கவிழ்ந்து நின்றாள். இவனே மேலும் கேட்டான்…. ‘‘பதில் சொல்லு!’’

மாமா பெண் நிமிர்ந்து இவனைப் பார்த்தாள். கண்களிலிருந்து நீர் வழிந்தது. நடுங்கும் குரலில் பேசினாள்… ‘’எதா இருந்தாலும் அப்பாகிட்டே பேசுங்க..!’’

ஊர்த் தடத்திலிருந்து யாரோ பேசியபடி வந்துகொண்டு இருந்தார் கள். மாமா பெண் மேற்கொண்டு நிற்காமல் சைக்கிளில் ஏறிக் கிளம்பிப் போனாள். அவள் கண்ணிலிருந்து மறைந்த பிறகு, இவனும் கிளம்பி ஊருக்கு வந்தான்.

மாமாவும் பெண்ணுக்குத் தீவிர மாக மாப்பிள்ளை தேடிக்கொண்டு இருந்தார். ஒரு சிலர் வீட்டுக்கு வந்து பெண் பார்த்துப் போனதாகக்கூடத் தகவல் வந்தது. இவனுக்கு மனசே சரியில்லை. எந்நேரமும் எதையோ பறிகொடுத்தவன் போல் இருந்தான். தகுதிக்கு மீறி ஆசைப்பட்டுவிட்டதாகக் கூட சில தருணங்களில் தோன்றியது. ஊருக்குள்ளும் விஷயம் கசிந்து, சிலர் மெள்ளக் கேட்க ஆரம்பித்துவிட் டார்கள்.

காற்றடங்கி மழைக்காலம் ஆரம்பித்தது. ஆனால், மழை மட்டும் இறங்கவேயில்லை. மதியத்தில் உக்கிரம் கண்டு தேங்கிய முகில்கள், சாயங் காலத்துக்குப் பின் கலைந்து வானம் தெளிவடைந்து ஏமாற்றிக்கொண்டு இருந்தது. ஐப்பசி பிறந்தும் ஒரு பொட்டுத் துளி நிலத்தில் விழவில்லை. சித்தப்பா தலைமையில் ஊர் சனங்கள் ஒன்றுகூடி, மழைச் சோறு எடுத்துக் கொடும்பாவி இழுத்தனர். ஆனால், மாமாவின் ஊருக்குள் கொடும்பாவி நுழைய அனுமதிக்க வில்லை. மறுதினம் போட்டிக்கு மாமாவின் ஊர்க்காரர் களும் கொடும்பாவி கட்டி மழைச் சோறு எடுத்தனர். கொடும்பாவியை இவன் ஊர் வரை இழுத்துக்கொண்டு வந்து ஆட்டம் போட்டுப் போயினர்.

மூன்றாம் நாள், கொடும்பாவிக்குக் கொள்ளி போட்டுவிட்டு ஊர் திரும்பி வரும்போது சித்தப்பா இவனை இருளில் தனியே அழைத்துப் போய் சொன்னார்… ‘‘நாளைக்கு அந்த ஊருல மூணாம் நாள்… ராத்திரி கொடும் பாவிக்குக் கொள்ளி போடுவானுக… அப்போ ஊருக்குள்ள ஒரு ஆம்பிளைப் பயல் இருக்க மாட்டான்… நான் என்னோட ஆளுகள தொணைக்கு அனுப்பறேன்… உம் மாமன் பொண்ணக் கடத்திடு! கல்யாணம் முடிஞ்சுட்டா… எல்லாம் ஒண்ணுக்குள்ள ஒண்ணா போயிருவீங்க..!’’

மறுநாள் இருட்டியதும், இவன் சித்தப்பாவின் ஆட்களோடு காரில் கிளம்பினான். மாமா ஊரின் எல்லையை ஒட்டிய ஒரு இட்டேரியில் மறைவாக காரை நிறுத்திவிட்டு, இவன் மட்டும் மாமா ஊரைப் பார்த்து காட்டுத் தடத்தில் நடந்தான்.

ஊரைச் சுற்றிக் கொடும்பாவி இழுக்கும் ஆரவாரமும், மழைச் சோறு எடுக்கும் பெண்களின் பாடலும் தெளிவில்லாமல் காற்றோடு வந்தது. இவன் தடம் பார்த்து நடந்தான். மர நிழல்கள் பயமுறுத்தின. வானில் முகில்களே இல்லை. விண்மீன்கள் நிறைந்துகிடந்தன. இவன் ஊரின் முன் பகுதிக்கு வந்து, இலைகள் அடர்ந்த ஒரு வேம்பின் கிளையில் ஏறி உட்கார்ந்துகொண்டான். இவனுக்கு மனசுக்குள் ஒரே பயமாக இருந்தது. திட்டம் கொஞ்சம் பிசகினாலும் அவ்வளவுதான்… உயிர் காலி! முதல் ஜாமம் கடந்துகொண்டு இருந்தது.

ஆட்கள் கொடும்பாவியை தலைவாசலுக்கு இழுத்து வந்தார்கள். ஊர்ப் பெண்கள் கொடும்பாவியைச் சுற்றிலும் கூடி நின்றார்கள். ஒரு கிழவி கொடும்பாவியின் தலைமாட்டுக்கு வந்து, ஒப்பாரியைத் துவங்கி மாரடித்தாள். மற்ற பெண்கள் அவளுக்குப் பின்பாட்டுப் பாடி, மாரடித்தார்கள்.

எல்லோரும் கிளம்பிச் சென்று ஊர் அடங்கியதும், மரத்திலிருந்து இவன் கீழே இறங்கினான். குளிர்ந்த காற்று வீசியது. சேந்து கிணற்றை ஒட்டி மறைவாக நடந்து, வீதியில் நுழைந்து மாமா வீட்டுக்குப் போனான். வெளிநடை சாத்திக் கிடந்தது. மெள்ளத் தட்டினான். அத்தை வந்து கதவைத் திறந்தாள். அகால வேளையில் இவன் நிற்பதைக் கண்டதும் திடுக்கிட்டுக் கேட்டாள்… ‘‘என்னப்பா இந்நேரத்துல… அம்மாவுக்கு ஏதாச்சும்…?’’

இவன் பதில் பேசவில்லை. ஆசாரத்து திண்ணையில் நின்றிருந்த மாமா பெண் இறங்கி வாசலுக்கு வந்தாள். இதுதான் சரியான சந்தர்ப்பம் என முன்னே சென்று மாமா பெண்ணின் கையை எட்டிப் பிடித்தான். மாமா பெண் சுதாரிப்பதற்குள் தரதரவென்று வீதிக்கு இழுத்து வந்தான். அத்தைக்குப் புரிந்து கத்த ஆரம்பிப்பதற்குள், திமிரும் மாமா பெண்ணைப் பிடித்த படியே சட்டென வெளிநடையைச் சாத்தித் தாழ் வைத்தான்.

பின், மாமா பெண்ணை இழுத்துக்கொண்டு ஓடினான். அவள் முரண்டுபிடித்தாள். ஆனாலும், இவன் வெகு சிரமப்பட்டுப் பின்புறத்து வழி வரை இழுத்துக்கொண்டு போனான். இன்னும் இருபதடி தூரம் போய்விட்டால், ஊரின் பின்புறத்து வழி வந்துவிடும். சித்தப்பாவின் ஆட்கள் காரில் தயாராகக் காத்திருப்பார்கள்.

ஆனால், அங்கு கார் இல்லை. மாமா ஊர்க்காரர்கள் சிலர் கையில் கம்புடன் ஓடி வந்துகொண்டு இருந்தார்கள். இவனுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. மாமா பெண்ணை விட்டுவிட்டுத் திரும்பிப் பார்க்காமல் வீதியில் வந்த வழியே ஓடினான். கம்பு ஒன்று இவன் காலடியில் வந்து விழுந்தது. ஒரு கல் தலைக்கு மேலே போய் முன்னால் போய் விழுந்தது.

இவன் சட்டென நின்று திரும்பிப் பார்த்தான். துரத்திக் கொண்டு வந்தவர்கள் அன்று மசை நாயைத் துரத்தி வருவது போலவே ஓடி வந்துகொண்டு இருந்தார்கள். இருளிலிருந்து மாமாவின் குரல் கேட்டது… ‘‘உட்ராதே… ஒரே போடா போட்டெறி… மத்ததை நான் பாத்துக்கறேன்..!’’

பளீரென மின்னல் சொடுக்கி இடி இடித்து, பெருந் துளியாய் மழை விழ ஆரம்பித்தது.

வெளியான தேதி: 27 டிசம்பர் 2006

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *