வழக்கம் போல தன் மருமகள் மங்களம் அதே பூக்காரியிடம் பூ வாங்குவது கண்டு துணுக்குற்றாள் கோமதி.
ஏம்மா மங்களம்! எவ்வளவு அழகா மங்களம்னு உனக்கு பேர் வைச்சுருக்காங்க! இந்தப் பேருக்காகவே உன்னை என் மருமகளா ஏத்துக்கிட்டேன்! நீ என்னடான்னா இத்தனை பேர் இருக்க, ஒரு விதவைப் பெண் கிட்டயே பூ வாங்குறியே!
அவளுக்கு உதவி பண்ண வேணாம்னு சொல்லல! ஆனா.. அவகிட்ட பூ வாங்குறது அவ கண் பட்ட மாதிரி ஆயிடும்! என்றாள் மென்மையாக!
தலையில் பூவை வைத்தப்படியே சொன்னாள் மங்களம் “கண்டிப்பாக படாது அத்தே! மத்தவங்க கிட்ட பூ வாங்குனா அவங்க கவனம் முழுவதும், முழம் போடுறதுலயும், காசை பேரம் பேசி வாங்குறதுலயும் தான் இருக்கும்.
ஆனா இவங்க தன்னை மாதிரி இல்லாம, நம்ம கையால பூ வாங்குனவங்க நல்ல இருக்கணும்னு மனசுக்குள்ள வேண்டிக்கிட்டு கொடுப்பாங்க! அவங்க வேண்டுதலோட சக்தி எவ்வளவு இருக்கும்னு அவங்களோட இழப்பே சொல்லும்! அதனாலதான் அவங்க கிட்டயே வாங்குறேன்!
ஒரே விஷயத்தை வேறு கோணத்தில் பார்க்கும், தன் மருமகளை நினைத்து ஆச்சர்யம் அடைந்தாள் கோமதி.
– ப.உமாமகேஸ்வரி