மகளின் வருகை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: November 22, 2019
பார்வையிட்டோர்: 5,975 
 

(இதற்கு முந்தைய ‘மானசீகத் தேடல்’ கதையை படித்தபின் இதைப் படித்தால் புரிதல் எளிது)

வீரியமுள்ள மாத்திரைகள் கொடுக்க ஆரம்பித்து சில நாட்களாகியும் சபரிநாதனின் ரத்தக்கொதிப்பு குறைவேயில்லை. டாக்டர் கவலையாகி விட்டார். இப்படியே நீடித்தால் ஹாஸ்பிடலில்தான் சேர்க்கவேண்டும் என்று சொல்லிவிட்டுப் போனார்.

செத்தாலும் சாவேனே ஒழிய ஹாஸ்பிடலில் அட்மிட் ஆகமாட்டேன் என்று படுக்கையை இழுத்திப் போர்த்துக்கொண்டார் சபரிநாதன். . அட்மிட் அனால் அவரைக் கவனித்துக்கொள்ள இந்த ராஜலக்ஷ்மி சவத்தையும் அல்லவா கூடவே வைத்துக்கொள்ள வேண்டும்!

இருக்கிற வம்பில் அந்தப் புது வம்பையுமா விலைக்கு வாங்க வேண்டும்? சபரிநாதன் தீர்மானம் செய்துவிட்டார். எவ்வளவு சீக்கிரம் மரகதத்திடம் போய்ச் சேர்ந்துவிட முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் போய்ச் சேர்ந்துவிட வேண்டும்… உயிரைக்கூட சுமந்து கொண்டிருக்க முடியவில்லை அவரால்.

படுக்கையில் சுருண்டு கிடந்த அவரின் காதுகளுக்குப் புதிய செய்தி வந்து சேர்ந்தது. மோட்டார் பைக்கிற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யபட்டுவிட்டது. சுருண்டு கிடந்த சபரிநாதன் நிமர்ந்து உட்கார்ந்தார். குற்றவாளியை போலீஸார் கண்டுபிடித்து விடக்கூடிய சாத்தியம் எதுவும் இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. இருந்தாலும் குற்றவாளிக்கு உரிய பீதி அவர் மனதுக்குள் உயர் அழுத்த மின்னோட்டமாக பெரும் அதிர்வுடன் ஓடிக்கொண்டிருந்தது. அவரின் சிந்தனையும் ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு மேல் நகர மறுத்தது. ஏதோவொரு பொறிக்குள் சிக்கிவிட்டாற் போலவே இருந்தது. குளிக்கும் அறைக்குள் நுழைந்து அழுதுகூடப் பார்த்துவிட்டார். ஊஹும்… பொறி திறக்கவே இல்லை.

படுக்கையில் படுத்துக்கிடந்து என்ன கண்டோம் என்ற சுய இரக்கத்தில் எழுந்து வீட்டுத் திண்ணையில் போய் உட்கார்ந்தார். ‘அப்பாடா’ என்று இருந்தது. உடம்பில் வெளிக்காற்று பட்டதுமே சுகமாக இருந்தது. விசாரணைக்கு வருகிற போலீஸ் தன்னை விசாரித்தால் தான் என்ன சொல்ல வேண்டும் என்றுகூட சபரிநாதன் மனதில் கொஞ்சம் கஷ்டப்பட்டு யோசனை செய்து வைத்துவிட்டார்.

ராஜலக்ஷ்மியை பழிவாங்க அவளை விதவையாக்க வேண்டும் என்பதற்காக தான் ஒன்றும் சாகவேண்டியதில்லை என்ற மனமாற்றத்தில் கொஞ்சம் நிமிர்ந்தும் உட்கார்ந்தார். எரிந்துபோன சுப்பையாவின் மோட்டார் பைக்கை குற்ற உணர்ச்சியே இல்லாமல் ரசித்துப் பார்த்தார்.

அப்போது தூரத்தில் வேறொரு மோட்டார் பைக்கின் சத்தம் கேட்டு சபரிநாதன் சுவாரஸ்யமே இல்லாமல் திரும்பிப் பார்த்தார். அவரின் பார்வை ஸ்தம்பித்தது. சுப்பையா கம்பீரமாக புத்தம்புது ஹீரோ ஹோண்டாவில் மிகக்குறைந்த வேகத்தில் வந்து கொண்டிருந்தான். அவன் பின்னால் ஆரவாரக் கூச்சலுடன் சின்னப் பையன்கள் வேறு ஓடிவந்து கொண்டிருந்தார்கள். நிசப்தம் கலைந்து கிராமமே குதூகலத்தில் திளைத்தது.

சும்மா இருப்பாளா காந்திமதி? புது மோட்டார் பைக்கிற்கு கற்பூர ஆரத்தியே எடுத்துவிட்டாள்! ராஜலக்ஷ்மிகூட சபரிநாதனின் முதுகுக்குப் பின்னால் வந்துநின்று முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளாமல் புதிய மோட்டார் பைக்கை பார்த்துப் பார்த்து ரசித்தாள். சுப்பையா இப்படியொரு புத்தம்புது மோட்டார் பைக்கில் வந்து இறங்குவான் என்பதை சபரிநாதன் எதிர்பார்க்காததால், கொஞ்சம் சூடு தணிந்து போயிருந்த அவருடைய உச்சந்தலை மறுபடியும் தகிக்க ஆரம்பித்து விட்டது. யாரோ ஒருத்தர் தேங்காய் கொண்டுவந்து புது பைக்கிற்கு திருஷ்டி சுற்றி ‘சிதர் தேங்கா’ வேறு போட்டார். சபரிநாதனின் மனம் வேகமாக கட்டுடையத் தொடங்கிவிட்டது. கோபப்பொறி கண்களில் தெரிய சுப்பையாவைப் பார்த்து, “இப்ப என்னத்துக்காக மாப்ள இப்படி குடுகுடுன்னு ஓடிப்போய் புதுசா ஒரு பைக்கை வாங்கிட்டு வந்திருக்கீங்க?” என்றார்.

“ஸாரி மாமா… பைக் இல்லாம என்னால இருக்க முடியாது.”

“இதுவும் தீ பத்தி எரிஞ்சா அப்பவும் புதுசு வாங்குவீங்களா?”

“எரியும்போது பாக்கலாம் அதை”

“எரியுது எரியாமப் போவுது… அதைப்பற்றி எனக்கு ஒண்ணுமில்லை மாப்ள. அநியாயத்துக்கு ஊரோட நிம்மதி போவுது. உங்க நிம்மதி என் நிம்மதி எல்லாம் போவுது. எனக்கு ஏறின ரத்தக்கொதிப்பு இன்னும் இறங்கலை. அதுக்குள்ளே புதுசு வாங்கிட்டு வந்து நிக்கீங்க. இது ஒண்ணும் நல்லா படலை.”

“உங்க அக்கறைக்கு மிக்க நன்றி மாமா. புது பைக்குக்கு எதுவும் வராது என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு. அதுவும் இல்லாம இப்ப போலீஸ்லயும் சொல்லியாச்சு. கண்டிப்பா குற்றவாளியை கண்டுபிடிச்சிடறதா சொல்லியிருக்காங்க.” சுப்பையா இதை வேண்டுமென்றே உரத்த குரலில் சொன்னான். சபரிநாதனுக்கு, சுப்பையா தன்னை மிரட்டிப் பார்ப்பதாக தோன்றியது! உடனே கோபம் பீறிட்டுக்கொண்டு வந்தது அவருக்கு.

“எங்க ஊரு போலீஸ்காரனைப் பத்தி என்கிட்டையே நீங்க சொல்றீங்களா, எழுதி வச்சுக்குங்க, காந்திபடம் போட்ட ரூபா நோட்டுல! போலீஸ்காரன் வந்து எரிஞ்சு போன உங்க மோட்டார் பைக்கை சனீஸ்வரனை சுத்தறமாதிரி நாலு சுத்து சுத்திட்டு, பிரியாணி வாங்கித்திங்க உங்ககிட்டயே துட்டும் வாங்கிட்டு அவன் பாட்டுக்குப் போய் சேருவான்! தீ வச்சவனை கண்டுபிடிக்கப் போறதில்லை எவனும்…”

“அவங்க வர கொஞ்சம் முன்னே பின்னே ஆகும். ஆனா கண்டிப்பா வரத்தான் போறாங்க. நாயை வேற அழைச்சிகிட்டு வரப் போறாங்க! மோப்பம் பிடிச்சே கண்டுபிடிக்கப் போவுது அது!”

நாய் வரப்போகிறது என்று கேள்விப்பட்டதும் சபரிநாதன் திடுக்கிட்டுப் போனார்! அவரின் மேட்டு விழிகள் கொஞ்சம் நிலைகுத்தின! அவருடைய மனக்கண் நாயின் பக்கம் தலையைத் திருப்பியது. ஒரே வினாடியில் வேற்றுமையாகி விட்ட சபரிநாதனின் பார்வையை கவனித்தபடியே சுப்பையா புதிய மோட்டார் பைக்கின் ஸ்டாண்ட் போட்டான்.

அப்போது கொஞ்சம்கூட எதிர்பாராமல் கையில் சின்ன சூட்கேசுடன் சுகுணா வந்து கொண்டிருந்தாள். “அட நம்ம பொண்ணு” என்று மகளை வரவேற்கிற மனநிலையில் சபரிநாதனும் இல்லை. “அடடே என் பெண்டாட்டி” என்று உற்சாகத்துடன் சுகுணாவை வரவேற்கிற நிலையில் சுப்பையாவும் இல்லை. இதை உணர்ந்து கொண்டேதான் சுகுணா சூட்கேசை சபரிநாதன் வீட்டுத் திண்ணையில் வைத்தாள்.

“என்ன சுகுணா ஒரு போன் பண்ணியிருந்தா புது பைக்கில் நானே ஜங்க்ஷன் வந்து உன்னை பிக்கப் பண்ணியிருப்பேனே…”

“உங்க பழைய பைக் எரிஞ்சுபோன விஷயத்தை அடுத்தவங்க மூலமா கேள்விப்பட்டு உடனே கிளம்பி வரேன்…”

சபரிநாதனுக்கு வேண்டாத விருந்தாளியாக திடீரென வந்து நின்ற மகளைப் பார்க்கவே பிடிக்கவில்லை! அவளால் வந்த வினைதானே எல்லாம்! “வா சுகுணா” என்று வெறும் உதட்டளவில் வரவேற்றார்.

“என்னப்பா எப்படியிருக்கீங்க? பாக்கறதுக்கு என்ன ஆளே ஒருமாதிரி இருக்கீங்களே?”

“ஏன் கிறுக்கனைப் போல இருக்கேனா?” இடக்காகக் கேட்டார்.

“ஒடம்பு எதுவும் சரியில்லையா உங்களுக்கு?”

“வயசானவனுக்கு என்ன வரும்? ரத்தக்கொதிப்புதான். தலையைத் தூக்க முடியாம கெடக்கேன்.”

“நீ உள்ளபோய் அப்பாகிட்ட பேசிட்டிரு. நான் உன்னை அப்புறமா பாக்கிறேன்.”

“ஏன் நீங்க இன்னிக்கி ஆபீஸ் போகலையா?”

“மாப்ள எங்கே ஒழுங்கா ஆபீஸ் போறாரு? அதைத்தவிர மத்த எல்லாம் செய்யறார்…”

“என்னங்க… அப்பா என்னவோ பூடகமா சொல்றாரு?” நிஜமான அக்கறையுடன் சுகுணா கேட்டாள்.

“பின்னே, ஆபீஸ் போய்ட்டு வர்ற அமைதியான சூழ்நிலையா இருக்கு இந்த ஊர்ல?” சுப்பையா திருப்பிக் கேட்டான்.

“என்ன நீங்க இப்படிச் சொல்றீங்க?”

“பின்ன என்ன.. நீயே பாரேன் என் பழைய பைக்கை.”

சுகுணா அவன் காட்டிய திசையில் பார்த்தாள். புத்தம் புதிய மோட்டார் பைக்கும்; எரிந்து நாசமாகிப்போன மோட்டார் பைக்கும் அருகருகே நிற்பதைப் பார்த்ததும் சுகுணா அதிர்ந்து போனாள்.

“என்னப்பா இது நம்ம ஊர்ல இப்படியொரு அநியாயம்?”

“என்னைக் கேட்டா?”

“என் பைக்குக்கு யாரோ தீ வச்சுட்டாங்க சுகுணா, இப்பத்தான் புது பைக் வாங்கிட்டு வந்தேன். ஆபீஸ் போயாகணுமே…”

“என்னங்க இது அநியாயமா இருக்கு… என்ன நடக்குது இங்கே! எனக்கு ஒண்ணுமே புரியலை…”

“போலீஸ்ல புகார் குடுத்தாச்சி சுகுணா. சீக்கிரமே குற்றவாளி யார்ன்னு தெரிஞ்சிடும். தெரிஞ்ச அப்புறம்தான் எனக்கு ஆபீஸ்ல கவனம் போகும். சரி நீ உள்ள போ…” சுப்பையா வேகமாகத் தன் வீட்டிற்குள் சென்றான். காதலி ராஜலக்ஷ்மி, மனைவி சுகுணாவை நன்றாகக் கவனித்துக் கொள்வாள் என்கிற நினைப்பே அவனுக்கு இனித்தது. சுகுணாவின் அதிர்ந்த பார்வை மோட்டார் பைக்கின் மேலேயே இருந்தது.

“வா சுகுணா உள்ள போய் பேசலாம்.” சுகுணா சூட்கேசை எடுத்துக்கொண்டு குழம்பிய மனதுடன் வீட்டுக்குள் சென்றாள். ஆசையுடன் கணவனைப் பார்க்க வந்த இனிமை அவளுள் கலைந்துவிட்டது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *