கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 29, 2014
பார்வையிட்டோர்: 13,471 
 
 

ஶ்ரீலஷ்மி, அந்த அப்பார்ட்மென்ட்ற்கு புதிதாய் தன் பிள்ளை மற்றும் கணவர் சுகந்தனுடன் வந்து குடியேறியிருந்தாள். அவளது கணவரது பணி மாற்றல் காரணமாய் மிச்சிகன் மாநிலம் டெட்ராய்ட் நகரத்திலிருந்து, பென்சில்வேனியாவிலிருந்த ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்திற்கு புதிதாய் வந்திருந்தார்கள்.

சில நாட்கள் ஹோட்டலில் தங்கி இருந்து அருகிலிருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்புகளில் ஏதேனும் காலி மனைகள் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்டிருந்தார்கள். சுகந்தனின் அலுவலகம் இருக்கும் சாலையிலேயே அவர்களுக்கு அப்பார்ட்மென்ட் கிடைத்தது. அந்த வார இறுதியில் குடியேற முடிவு செய்து அப்பார்ட்மென்டில் ஏதேனும் செப்பனிடும் வேலைகள் இருக்கின்றனவா என்று பார்க்கச் சென்று இருந்தார்கள்.

அப்போது, அங்கு வசித்து வந்த ஓர் தமிழ்க் குடும்பத்தினரைக் கண்டனர். அவர்கள் தாங்களாகவே வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். அருகில் ஓர் தமிழ்க் குடும்பம் வசிப்பதை அறிந்த ஶ்ரீலஷ்மிக்கு மிகுந்த மகிழ்ச்சி. நம் தாய்மொழியில் பேசி உறவாடி மகிழ நம் தேசத்தைச் சேர்ந்தவர் அருகில் உள்ளனர் என்று எண்ணி மகிழ்ந்தாள்.

ஒரு வாரத்திற்குப் பின், அவர்கள் அங்கு குடியேறினர். அவ்வப்போது சந்திக்கும் வேளைகளில், அந்தப் பக்கத்து வீட்டுத் தமிழ்ப் பெண் ஶ்ரீலஷ்மியுடன் நன்றாகவே பேசினாள். அதன் பின் வந்த பண்டிகை நாளொன்றில் இருவருமாய் சேர்ந்து பலகாரம் செய்து பரிமாறிக் கொண்டார்கள்.

சில நாட்களில், அவர்கட்கு சில நல்ல நண்பர்கள் கிடைத்தனர். அனைவரும் வாரத்திற்கு ஒருமுறை தங்கள் பிள்ளைகளுடன் ஒன்று கூடி பேசி, பிள்ளைகட்கு நண்பர்கள் வட்டத்தினை ஏற்படுத்திக் கொடுத்தனர்.

அவர்களும், அருகிலிருக்கும் இந்தியக் கடைகள், அங்கு விற்கும் பொருட்களின் தரம், மலிவான விலையில் தரமான பொருட்கள் கிடைக்கும் இடங்கள், அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும் கோயில்கள், குடும்பச் சுற்றுலா செல்ல ஏதுவான இடங்கள் போன்றவற்றை எல்லாம் விவாதித்தனர்.

ஶ்ரீலஷ்மிக்கு ஓர் நல்ல நட்பு வட்டம் பக்கத்து வீட்டுப் பெண்ணின் மூலம் கிட்டியதில் மிக்க மகிழ்ச்சி.

ஓர் ஊரிலிருந்து வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகும் போது, அவர்கள் போகும் ஊரில் இருக்கும் நல்ல அப்பார்ட்மெண்ட்கள், அருகில் அத்தியாவசியத் தேவைகட்கான கடைகள், போக்குவரத்து வசதிகள் போன்றவற்றை இணையத்தில் செயல்படும் மன்றங்கள் (forums) வாயிலாக அறிந்து கொள்வது ஶ்ரீலஷ்மியின் வழக்கம்.

அப்படித்தான் அவள் இம்முறையும், ஃபோர்ட் வாஷிங்டன் நகரத்தினை பற்றி அறிந்து கொள்வதற்காக ஓர் மன்றத்தில், தனது சந்தேகங்களை ஓர் பதிவாகப் போட்டிருந்தாள். அந்த மன்றத்தின் இணைய பக்கத்தில் அவளது பதிவிற்கு வந்திருந்த பதில்களைப் அவ்வப்போது பார்த்துக் கொள்வாள்.

அவ்வாறு ஒரு சமயம் பார்த்துக் கொண்டிருந்தவள், அந்தப் பக்கத்து வீட்டுப் பெண் அவளது பதிவுகட்கு, பதிலளித்திருப்பதைக் கண்டாள். பக்கத்து வீட்டுப் பெண் அவளுடன் தனது மின்னஞ்சல் முகவரியை பகிர்ந்து கொண்டதினால், ஶ்ரீலஷ்மியால் அவளை அந்த மன்றத்தில் எளிதில் அடையாளம் கண்டு கொள்ள முடிந்தது.

அடுத்த முறை சந்தித்த போது, அப்பெண்ணிடம், “எனது கேள்விகட்கு நீங்கள் இணைய மன்றத்தில் பதிலளித்திருந்தீர்கள். மிக்க நன்றி” என்றாள். அதன் பின், ஶ்ரீலஷ்மி அதை மறந்து விட்டாள்.

சில நாட்கள் சென்றன. ஶ்ரீலஷ்மிக்கு பக்கத்து வீட்டுப் பெண்ணின் போக்கில் மாற்றம் தெரிந்தது. அவள் முன் போல் தன்னிடம் பேசுவதில்லை என்பதை உணர்ந்தாள். அவளது பாராமுகம் ஶ்ரீலஷ்மிக்கு வருத்தமாய் இருந்தது. அவளுக்கு ஏனோ மனதே சரியில்லை.

நாம் யாரையும் எந்த விதத்திலும் துன்புறுத்தியதோ, தொந்தரவு செய்ததோ கிடையாதே….நம்மையும் அறியாது அவரை கஷ்டப்படுத்தி விட்டோமோ?? நம்மை அவர்களுக்கு பிடிக்கவில்லையோ?? என்றெல்லாம் மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டிருந்தாள் . நேரில் போய்க் கேட்டுவிடலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். அலுவலகத்திலிருக்கும் தன் கணவனைத் தொலைபேசியில் அழைத்து, தன் மனக் குமுறலைக் கொட்டித் தீர்த்தாள்.

அன்று மாலை, அவர்களது தோழிகளில் ஒருவரை சந்தித்தாள். வழக்கமான விசாரிப்புகள், பேச்சுகளின் போது அவர், “ உங்களது பக்கத்து வீட்டுப் பெண், நீங்கள் அவரது ப்ரைவசியில் தலையிடுவதாக குறைபட்டுக் கொள்கிறாரே. நீங்கள் இணைய மன்றத்தில் அவரது பதிவுகளை எல்லாம் தேடித் தேடி படிப்பதாகவும் குறை கூறுகிறாரே. என்ன நடந்தது? “ என்றார்.

அப்போது தான் ஶ்ரீலஷ்மிக்கு என்ன நடந்திருக்கும் என்பது புரிந்தது. சிரித்துக் கொண்டாள். அவரிடம், “ அவர் இணைய மன்றமொன்றில் இங்கு இருக்கும் இந்தியக் கடை பற்றியும், அங்கு பொருட்களின் தரம் பற்றியும் பதிவிட்டிருந்தார். அதை பார்த்ததாக அவரிடம் கூறினேன்.அதைத் தான் அவர், அவரது ப்ரைவசியில் நான் தலையிடுவதாக உங்களிடம் கூறியிருக்கிறார்.சாதாரண விஷயத்தை பெரிது படுத்துகிறார்” என்றாள் ஶ்ரீலஷ்மி.

“ஓ…இதுதானா விஷயம்.இதிலென்ன இருக்கிறது?” என்று சிரித்தார் அந்த தோழி.

பக்கத்து வீட்டுப் பெண்ணின் பாராமுகத்திற்கான காரணத்தை உணர்ந்து கொண்ட ஶ்ரீலஷ்மி மனதினுள் சிரித்துக் கொண்டாள். இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டாள்.

– டிசம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *