கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,968 
 
 

மையக்கரு
கடுமையான நோயினால் உயிருக்காக போராடிக்கொண்டிருக்கும் நோயாளி தான் இறந்தால் பிள்ளைகள் கஸ்டப்படப் போகிறார்கள் என்று வருந்துவதை குடும்பததைப் பிரிந்து வாழும் ஒருவர் கண்டதும் தனது முடிவை மாற்றி குடும்பத்துடன் சேர்ந்து வாழத் தீர்மானிக்கிறார். ஒருவரின் பிள்ளைப் பாசம் இன்னொருவருக்குப் போதனையாக அமைகின்றது.

கதை

அன்று ஒரு ஞாயிற்றுக் கிழமை.

ஞாயிற்றுக் கிழமைகளில் காந்தனின் வீட்டில் எல்லோரும் கொஞ்சம் அதிகமாகத் தூக்கம் செய்து பிந்தி எழும்புவது வழமை. நேரம் காலை 10 மணியாகி விட்டது. இவனுக்குச் சிறிது நேரம் முன்பே கலா எழுந்து சமையலறையில் காலைச் சாப்பாடு செய்து கொண்டிருந்தாள். இவர்கள் குடியிருப்பது பதினான்கு மாடிகள் கொண்ட ஒரு கொண்டோமேனியம். இதில் ஏழாவது மாடியில் கடந்த நான்கு வருடங்களாகக் குடியிருக்கிறார்கள். காலைக் கடனை முடித்துக் கொண்டு ஹோலுக்குள் வந்த காந்தன் யன்னல் அருகே சென்று திரைச்சீலையை விலக்கி வெளியில் பார்த்தான்.

கடந்த மூன்று நாட்களாகத் தொடர்ச்சியாகக் கொட்டிய பனிமழையால் எங்கும் கும்பல் கும்பலாகப் பனித்திடல்கள் காணப்பட்டன. சின்னஞ் சிறு மலைகளாக வெண்ணிறத் திடல்கள் கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. “போக்குவரத்திற்கு எவ்வளவு இடைஞ்சல் கொடுத்தாலும் பனி தரும் அழகு ஒரு தனி அழகுதான்” என்று தனக்குள் நினைத்துக் கொண்டான். பனி தரும் இயற்கை அழகுக்கு முடி வைத்தாற்போல் தூரத்தே “ரொறன்ரோ சிஎன் ரவர்” தெரிந்தது. இது 553 மீற்றர் உயரமுடைய ஒரு கண்காணிப்புக் கோபுரம். பிரசித்தி பெற்ற இந்தக் கோபுரத்தை வீட்டில் இருந்து பார்க்க முடிவது ஒரு பெரும் பேறு என்று காந்தன் எண்ணுவதுண்டு.

“மெயின் ரோட்டுக்கள் எல்லாம் கிளீன் பண்ணிட்டாங்கள் போலத் தெரியுது” என்று கலாவைப் பார்த்துச் சொன்னபடி சமையலறைப் பக்கம் வந்தான் காந்தன்.

“கலா! இன்றைக்குத் தான் கொஞ்சம் வெளிச்சுக் கிடக்குது. வெளி வேலைகளை முடிக்க வேணும்” என்றான்.

கலாவும் பதிலுக்கு “ஓமப்பா நிறைய வேலை இருக்குது. பிள்ளைகளை எழுப்புங்கோ. நீங்களும் கெதியாய்க் குளிச்சிட்டு வெளிக்கிடுங்கோ”.

“கோயிலுக்கும், கடைகளுக்கும் தானே போகவேணும்” என்றான் காந்தன்.

“நல்லாயிருக்குது உங்கள் ஞாபக சக்தி. இன்றைக்கு இரண்டு கோயிலுக்குப் போக வேணும். வழமையாகப்; போகின்ற அம்பாள் கோயில். பிறகு சிவன் கோவிலுக்குப் போய் கிரக அர்ச்சனையும் செய்ய வேண்டும். எல்லாருக்கும் கிரக நிலை சரியில்லை” என்று கலா சொல்லிக்கொண்டிருக்க “சரி சரி கோயிலுக்குப் போட்டுக் கடை அலுவல்களையும் முடித்துக் கொண்டு வருவம். அப்ப இன்றைக்குச் சாப்பாட்டைக் கடையிலை வாங்குவம்” என்றான் காந்தன்.

“நான் இன்னும் முடிக்கவில்லை. கொஞ்சம் கேளுங்கோ!. பிள்ளைகளையும் கூட்டிக் கொண்டு கோயிலுக்குப் போய் விட்டு அவையை வீட்டில் இறக்கி விட்டிட்டு மிச்ச அலுவல்கள் பார்க்க வேண்டும். அவைக்கு நிறைய “கோம் வேர்க்” இருக்காம். அவைக்குப் பகல் சாப்பாடும் செய்யிறன். எங்கடை சீதேவி அம்மான்ரை அந்தியேட்டி கந்தசாமி கோவில் மண்டபத்திலை இருக்குது. நாங்கள் அங்கே சாப்பிடலாம். பிறகு கடை அலுவல்களையும் கவனிப்போம்;.” என்று கூறி முடித்தாள் கலா.

“பெரிய லிஸ்ட்டே வைச்சிருக்கிறியள். சரி உங்கடை அலுவல்களை முடித்திட்டு என்ரை அலுவலைப் பார்க்கிறன்” என்றான் காந்தன். “கொஞ்ச நேரம் உங்கடை அலுவல்களைப் பாருங்கோ. ஆனால் மாலை ஆறு மணியளவில் திரும்பப் போகவேணும்.” என்று கலா சொன்னதும் பொறுமை இழந்தவனாய் “பிறகென்ன வேலை. இது சரிவராது” என்று கடும் தொனியில் சொன்னான் காந்தன்.

“எங்கடை பெரியப்பான்ரை மகன் குமாரை ஐசியு விலை வைச்சிருக்கினமாம். நிமோனியா வந்து கடுமைப் படுத்திப் போட்டுதாம். சரியாப் பயப்பிடினம். அவருக்குச் சின்னக் குழந்தைகள் வேறு. நாங்கள் இன்னும் போய்ப் பார்க்கவில்லை. இரண்டு நாளாய்ப் போச்சுது. செத்த வீடும் ஒன்று கிடக்குது. எங்கடை ஊர் ஆட்கள். நான் யாரும் போற ஆட்களோடை போறன். நீங்கள் ஆஸ்பத்திரியாலை வந்து உங்கடை வேலையைப் பாருங்கள்” என்றாள் கலா.

கலா செத்த வீட்டுக்கு வேறு யாருடனும் போறன் என்று சொன்னதே பெரிய விடயமாகப் பட்டது காந்தனுக்கு. ஒரு கதையும் சொல்லாமல் குளியலறைக்குள் போய் விட்டான். ஒவ்வொருதராக குளித்து வெளிக்கிட்டுத் தயாராக ஒரு மணி நேரம் போய் விட்டது.

*******************

இல்லத்தரசி கலாவின் எண்ணப்படி கோயில், கடை, அந்தியேட்டி என்றெல்லாம் ஓடி ஓடி முடித்து விட்டாயிற்று. மாலை ஆறு மணிக்கு காந்தனும், கலாவும் வைத்தியசாலைக்கு குமாரைப் பார்க்கச் சென்றார்கள். குமாரை உடனே போய்ப் பார்க்க வில்லையே என்று கலா கவலைப்படும் படியாக நான் நடந்து கொண்டு விட்டேனே என்ற கவலை காந்தனுக்கு இருக்கத்தான் செய்தது. குமாரின் தந்தையார் பற்றி கலா அடிக்கடி சிவாப் பெரியப்பா அது செய்தவர், இது செய்தவர் என்று உயர்வாப் பேசுவதும் காந்தன் கவலைப் படுவதற்கு ஒரு காரணமாக இருந்தது. காந்தன் வீட்டில் இருந்து புறப்படுவதற்கு முன் பேசி வைத்தவாறு காந்தனின் நண்பன் குணாவின் வீட்டுக்கு முன்னால் காரை நிறுத்திவிட்டு தொலைபேசியில் குணாவை அழைத்தான். ஏற்கனவே தயாராக இருந்த குணா “சரி நான் வருகிறேன்” என்று சொல்லிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தான். ஏற்கனவே குணாவும் தங்களுடன் வருகின்றார் என்பதை அறிந்திருந்ததால் கலா காரின் பின்புறத்திலேயே அமர்ந்திருந்தாள். குணா காரில் ஏறும்பொழுது “என்ன சமையல் வாசனை மூக்கைத் துளைக்குது” என்று கேட்டாள் கலா. “இன்று பிரியாணி செய்தேன். எனது சமையல் என்றால் சும்மாவா” என்று குணாவும் நகைச்சுவையாகப் பதில் சொன்னான்.

*****************

ஹம்பர்வலி வைத்தியசாலையில் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டிருந்த குமாரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்தது. நாங்கள் போகும் பொழுது குமாரின் சகோதரர் ரூபன் அங்கு குமாருக்கு அருகில் நின்றார். குமார் வாயால் எதுவும் பேசக் கூடிய நிலையில் இல்லை. ஆனால் விழிப்பாகத்தான் இருந்தார். குமாரின் நிலையைப் பார்த்ததும் கலாவின் கண்களில் இருந்து பொலு பொலுவென கண்ணீர் வழிந்தது. குமாரின் தலையைத் தடவியவாறு “எப்படி அண்ணா இருக்கிறீர்கள்” என்றாள் கலா. அங்கு நின்ற ரூபன் கலாவுக்கும், காந்தனுக்கும் குமாரின் உடல்நிலை பற்றி விளக்கமாகக் கூறினான். “அண்ணி இப்பதான் குழந்தைகளையும் கூட்டிக் கொண்டு வீட்டை போகிறா. அவ நேற்று இரவு நித்திரை கொள்ளவேயில்லை. நான் தான் பேசிக் கொஞ்ச நேரம் நித்திரை கொண்டு விட்டு வாங்கள் என்று அனுப்பி வைத்தேன்.” என்று ரூபன் கூறியதும் “பரவாயில்லை நான் ரேவதியுடன் இன்று தொலைபேசியில் கதைத்தேன்” என்று கலா பதிலளித்தாள். உற்றுக் கேட்டுக் கொண்டிருந்த காந்தன் குமாரின் கையைப் பற்றி குமார் பயப்பட வேண்டாம். உமக்கு எல்லாம் சரியாய் விடும் என்று சொல்லிக் கொண்டு தன் சட்டைப்பையில் இருந்து ஒரு விபூதி பைக்கற் இனைத் திறந்து “புட்டபர்த்தி விபூதி கொஞ்சம் இருக்கு. பூசி விடுகிறன். உங்களுக்கு நல்லது.” என்று சொல்லிக் கொண்டு விபூதி பூசக் குமாரின் தலைப்பக்கமாக வர குமாரும் தலையை அசைத்து நன்றியுடன் பார்த்தான். விபூதி பூசியதும் காந்தனின் கையை தனது கையை உயர்த்திப் பற்றிக் கொண்டு குமார் ஏதோ சொல்ல முயற்சித்துப் பேச முடியாமல் திணறினான். குமாரின் படுக்கையருகில் அவனது இரண்டு குழந்தைகளின் படங்களும் இருந்தன. குமார் தனது மற்றக் கையால் குழந்தைகளின் படத்தைத் தொட்டுக் காட்டியபடியே விம்மி விம்பி அழுதான். குமார் பேசுவதற்குச் சிரமப்படுவதைக் கவனித்து விட்டு ரூபன் எழுதும் பலகையை எடுத்து குமாரிடம் கொடுத்தான். குமார் எழுதுபலகையில் “என் குழந்தைகளுக்காக நான் வாழ வேண்டும். நான் இல்லா விட்டால் அவர்கள் கஸ்டப்படுவார்கள்” என்று எழுதிக் காட்டினான். உடனே காந்தனும், கலாவும் “குமார் அண்ணா நீங்கள் கவலைப்படாதீங்க. உங்களுக்கு ஒன்றும் நடக்காது” என்று ஒரே நேரத்தில் சொல்லிக் குமாரின் கையைப் பற்றி ஆறுதல் கூறினார்கள். குணாவும் அமைதியாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு அமைதியாக இருந்தவன் “குமார் ஒன்றுக்கும் யோசியாதீர்கள். நீங்கள் கவலைப் படாமல் இருந்தால் விரைவாக வீட்டை போகலாம்” என்று ஆறுதல் கூறினான். தம்மால் முடிந்தவரை குமாருக்கு ஆறுதல் வார்த்தைகள் பேசிவிட்டு காந்தன், கலா, குணா மூவரும் அங்கிருந்து புறப்பட்டார்கள்.

காரில் ஏறியதும் கலா குணாவைப் பார்த்து “இன்றிரவு தோசை சுடுவதற்கு மா புளிக்க விட்டிருக்கின்றேன். எங்களோடு வீட்டை வாங்கோ. நீங்கள் சாப்பிட்ட பிறகு காந்தன் உங்களை இறக்கி விடுவார்” என்றாள். குணா “நான் பலமுறை சாப்பிட்டிருக்கிறேன் தானே. இன்று நான் வீட்டுக்குப் போகிறேன். இரவுச்சாப்பாடு வீட்டில் போதியளவு இருக்கிறது” என்று கூற “இல்லை எப்படியும் குணா நீ வரவேண்டும்” என்று காந்தன் கூற குணாவும் “நீங்கள் இருவரும் இனி விடமாட்டீர்கள். சரி வருகிறேன்” என்று சம்மதம் தெரிவித்தான்.

சற்று நேரம் காரினை ஓடிக்கொண்டிருந்த காந்தன் வழமையான உரையாடல் ஒன்றும் வரவில்லையே என்ற ஆச்சரியத்துடன் குணாவைப் பார்த்தான். குணாவின் முகம் மிகவும் வாட்டமாக இருந்ததுடன் அவனது கண்களில் இருந்து கண்ணீர்த்துளிகள் வடிவதைக் கண்டதும் “என்ன குணா. எதற்கு கவலைப்படுகிறாய். அழுகிறாய் போலிருக்கு” என்று காந்தன் கேட்டான். அவசரம் அவசரமாக கண்களைத் துடைத்த குணா “ஒன்றுமில்லை கண்ணில் தூசி விழுந்து விட்டது போல” என்று கூறிச் சமாளிக்க முனைந்தான். கலாவும் “ என்ன குணா அழுகிறாரா? ஆச்சரியமாய் இருக்குது. சொல்லுங்கோ குணா என்ன பிரச்சினை. நாங்கள் உங்கள் மனது புண்படும்படி ஏதாவது சொல்லி விட்டோமோ” என்று கேட்க “ஐயோ அப்படி ஒன்றும் இல்லை” என்றான் குணா. இதற்கே மேல் குணாவை ஏதும் கேட்டு தொல்லை கொடுக்க விரும்பாமல் காந்தனும், கலாவும் அமைதியாகி விட்டார்கள்.

****************************

வீட்டுக்குத் திரும்பியதும் பிள்ளைகள் ஓடிவந்து வரவேற்றார்கள். “குணா அங்கிள் எப்படி இருக்கிறீர்கள்” என்று குணாவைப் பார்த்து கேட்க குணாவும் “ஹலோ நீலா ஹலோ நீனா நான் சுகம் நீங்கள் எப்படி” என்று பதிலளித்துக் கொண்டான். கலா பிள்ளைகளைப் பார்த்து “ஹோம் வேர்க் முடிஞ்சுதா என்று கேட்க இல்லையம்மா இன்னும் செய்து கொண்டிருக்கிறோம்” என்று சொல்லி விட்டுத் தமது அறைகளை நோக்கி ஓடினார்கள். கலா சமையலை கவனிக்கத் தொடங்கினாள். ஆனால் கலாவும் இடைக்கிடை ஹோலுக்குள் வருவதும் போவதுமாக இருந்ததோடு குணாவின் உரையாடலைக் கேட்டபடி தான் இருந்தாள். காந்தன் குணா வையும் அழைத்துக் கொண்டு வீட்டு ஹோலில் உட்கார்ந்தார்கள். குணாவின் மனநிலையை நன்கு உணர்ந்தவனாகக் காந்தன் “சரி குணா இப்ப சொல்லு. ஏன் கவலைப்படுகிறாய்” என்று கேட்க குணா சிறிது நேரம் அமைதியாக இருந்து விட்டு “காந்தன் நான் எனது மகனைப் பிரிந்து இனியும் வாழ விரும்பவில்லை” என்றான். காந்தனும் “நல்ல முடிவுதானே. அதுக்கு ஏன் கவலைப்படுகிறாய்” என்று கேட்க “மாலதியின் ஆத்திரப் போக்கால் பிரிந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது. என்னிலும் நிறைய பிழைகள் இருக்குது. மாலதி திரும்பி வந்து என்னோடு வாழ விரும்பியும் எனது பிடிவாதக் குணம் இடம் கொடுக்கவில்லை. எங்களின் சண்டையால் எனது மகன்தான் பலிக்கடா ஆக்கப்பட்டிருக்கிறான். இன்று குமார் தனது பிள்ளைகளுக்காக வாழ வேண்டும் என்று சொன்னதும் எனது பிடிவாதம் இருந்த இடம் இல்லாமல் போய் விட்டது. எனது மகனுக்காகவாவது நான் மாலதியுடன் சேர்ந்து வாழத்தான் வேண்டும்” என்று தனது மனக்கவலை எல்லாத்தையும் கொட்டித் தீர்த்தான். குணாவின் பேச்சைக் கேட்டதும் காந்தன் மகிழ்ச்சியுடன் கலாவைக் கூப்பிட்டு “கலா இஞ்சை வாரும். மாலதிக்குச் சொல்லும். நாளைக்கு குணா அவர்களை வந்து கூட்டி வருவார். நாங்களும் வாறம் என்று சொல்லும்” என்று சொன்னான். கலாவும் குணாவைப் பார்த்து “நீங்கள் நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள். நாங்கள் இதுக்குத்தான் காவல் இருந்தோம். மாலதியும் நல்ல பிள்ளை. அவள் செல்லமாய் வளர்ந்தவள். கொஞ்சம் முற்கோபம் இருக்கு.” என்று சொன்னாள். உடனே அவசரப்பட வேண்டாம் “மாலதி என்னிடம் மன்னிப்பு கேட்டு எவ்வளவு மன்றாடியும் மாட்டேன் என்று சொல்லிப் போட்டேன். இப்ப அவள் என்ன சொல்வாளோ” என்று சொல்ல கலா பதிலுக்கு “இல்லை குணா உங்கள் இருவரைப் பற்றியும் நமக்குத் தெரியும். உங்களை விரைவில் சேர்த்து வைக்கிறோம் என்று ஏற்கனவே மாலதிக்குச் சொல்லி வைத்திருக்கின்றோம். மாலதி நீங்கள் எப்ப வந்து கூப்பிடுவீர்கள் என்று காத்துக் கொண்டு தான் இருக்கிறாள்.” என்று சொல்லி விட்டு அவசரமாக மாலதியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டாள். மாலதியின் சம்மதத்தையும் கலா பெற்றுக் கொண்டதும் குணா எழுந்து காந்தனைக் கட்டித் தழுவியதோடு கலாவையும் பார்த்து நன்றி கூறினான்.

திட்டமிட்டபடி காந்தன், கலா, பிள்ளைகள், குணா எல்லோரும் இரண்டு கார்களில் சென்று மாலதியையும், குணாவின் மகன் றீகனையும் அழைத்துக் கொண்டு திரும்பினார்கள். குணாவையும், மாலதியையும் சேர்ப்பதில் குமாரின் பங்களிப்பு எவ்வளவு உயர்ந்தது என்று தமக்குள் பேசிக்கொண்டார்கள். குமார் விரைவில் சுகமாக வேண்டும். நாளைக்குத் திரும்பவும் குமாரைப் போய்ப் பார்க்க வேண்டும் என்றும் முடிவு எடுத்தார்கள். மறுநாள் காந்தன், கலாவுடன், குணாவும், மாலதியும் சேரந்து போய் குமாரைப் பார்த்தார்கள். குமார் விரைவில் சுகமாக வேண்டும் என்ற பிரார்த்தனை எல்லோர் மனதிலும் ஆழமாக எழுந்தது.

(யாவும் கற்பனை)

ஆக்கம் – நன்றி கனடாத் தமிழ் எழுத்தாளர் இணையம் ( சங்கப்பொழில் 2016 இற்காக எழுதியது).

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *