கதையாசிரியர்:
தின/வார இதழ்: குங்குமம்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 18, 2017
பார்வையிட்டோர்: 12,542 
 

ரகுவோடு கல்யாணம் முடிந்து, உமா புகுந்த வீட்டுக்கு வந்தாயிற்று. புறப்படும் முன் அவள் அம்மா சொன்னதை மறுபடி நினைத்துக்கொண்டாள்.

‘‘முதலில் சாமி படத்துக்கு விளக்கு ஏத்தி நமஸ்காரம் பண்ணும்மா…’’ – மாமியார் பார்வதி சொன்னாள்.

உமா ஒரு நிமிடம் தயங்கி நின்று, ‘‘பழக்கம் இல்லேம்மா… கையைச் சுட்டுக்குவேன். வெறுமனே நமஸ்காரம் மட்டும் பண்றேன்.’’ – பதிலுக்குக் காத்திராமல் பூஜையறைக்குப் போனாள் உமா. ஏதோ சொல்ல வந்த கணவர் சிவராமனைக் கையமர்த்தினாள் பார்வதி.

தன் அறைக்குப் போன உமா, நைட்டிக்கு மாறி கீழே வந்தாள். சிவராமன் கண்கள் சிவந்தன. ‘‘என்ன இது, பகல்லயே நைட்டியா?’’ – கேட்ட சிவராமன் வாயை சட்டென்று மூடினாள் பார்வதி.

இதோ… ஒரு மாதம் ஆகிவிட்டது உமா வந்து! அவளது ஒவ்வொரு செய்கையும் சிவராமனுக்கு எரிச்சல் தந்தது. மனைவிக்காக பொறுத்துக்கொண்டார்…

‘‘வீட்டிலேயே இருந்தா, மனசு அவ பண்ற தப்பு மேலேயே இருக்கும். வாங்க கோயிலுக்குப் போலாம்…’’

தங்கள் பக்கம் திரும்பியே பார்க்காத உமாவிடம் சொல்லிக் கொண்டு சிவராமனுடன் புறப்பட்டாள் பார்வதி.

வீட்டுக்குத் திரும்பி வாசலில் கால் பதிக்கும்போது உள்ளிருந்து வந்த பேச்சுக்குரல் இருவரையும் நிற்கச் செய்தது.

‘‘உமா, ஒரு மாசத்துல ஏதாச்சும் சாக்கு கிடைச்சுதா?’’ – உமாவின் தாயார் வந்திருக்கிறாள் போல… அவள்தான் பேசினாள்.

‘‘இல்லேம்மா…’’

‘‘இதோ பார் உமா… நான் புகுந்த வீட்டுக்குப் போன புதுசுல என் மாமனார், மாமியார்கிட்டே பணிஞ்சு நடந்து, அதனால பட்ட கஷ்டம்…. அப்பப்பா! தனிக் குடித்தனம் போக உங்க அப்பாவை சம்மதிக்க வைக்க ஆறு வருஷம் ஆயிடுச்சி. அந்தக் கஷ்டம் நீ படக்கூடாதுன்னுதான் முதலிலேயே ஆரம்பின்னு சொன்னேன். ரகு இப்பதான் உன் பேச்சைக் கேட்பார்… நாளாக நாளாக, கஷ்டம்.’’

‘‘நான் என்ன செய்யட்டும்… எல்லாம் பண்ணிப் பார்த்துட்டேன்… அத்தை அசைஞ்சு கொடுக்கல… என்ன செய்யச் சொல்றே?’’

சிறிது நேரம் மௌனம்.

‘‘இப்படி இருக்கும் உமா… எனக்காக வெயிட் பண்றாங்கன்னு நினைக்கிறேன். என்னைப் பார்த்ததும் பொரிஞ்சு தள்ளப் போறாங்க பார். அப்படிச் சொன்னா, அதையே சாக்கா வச்சு ஆரம்பி… ‘கோள்’ சொல்றீங்களான்னு கேளு…’’ – சம்பந்தியம்மா குரலில் சாணக்கியத்தனம் தெரிந்தது.

பார்வதி, சிவராமனைப் பார்த்து மெல்லச் சிரித்தாள்.

‘‘இப்போ புரிஞ்சுதா… ஏன் நான் மௌனமா இருந்தேன்னு? இப்ப ரீயாக்ட் பண்ணினா நம்ம பையன் நமக்கில்ல. பொறுத்துப்போம்… எல்லாம் சரியாயிடும்’’ என்றாள் கணவனிடம் ஆதரவாக!

பார்வதியைப் பெருமையாய்ப் பார்த்தபடி, கதவைத் திறந்து கொண்டு உள்ளே போனார் சிவராமன்.

‘‘வாங்க சம்மந்தியம்மா! எப்ப வந்தீங்க? சௌக்கியமா?’’ – செயற்கைப் புன்னகையுடன் உட்கார்ந்தார் சோபாவில்.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *