பொறுக்க ஒரு ‘தம்’

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 7, 2013
பார்வையிட்டோர்: 8,616 
 

“ரகு நான் புகைக்கிறதை நிறுத்தப் போறேன்டா..” –என்றேன்.

“”நிறுத்திக்கோ,. அதுக்கென்ன இப்ப. பெரிய கம்பசூத்திரமா அது. இடம் மழமழன்னு இருக்கணும், ஃபேன் சுத்தாம பார்த்துக்கணும்,. இல்லேன்னா காத்துல சாய்ஞ்சிடும்”.

“”அடத்தூ ரொம்பத்தான்யா. எதையும் சொந்தமா சொல்லாதே. காப்பிஸ்ட்டு. நான் சிகரெட் புடிக்கிறதை நிறுத்தப் போறேன்,
நிறுத்தப் போறேன்”.

“”அப்பிடி போடு. இப்படியே நூறு தடவை சொல்லு.இந்த வார்த்தைக்கு உங்கிட்ட எதனா அர்த்தம் இருக்காய்யா. எனக்குத் தெரிஞ்சே இது பத்தாவதோ, பதினொண்ணாவதோ தடவை..”

“”இல்லய்யா, இந்த தடவைதான் ஃபைனல்”.

பொறுக்க ஒரு 'தம்'“”ஃபைனல்ன்ற வார்த்தைக்கு முன்னே எத்தனை இருக்கு.ஃபர்ஸ்ட் ரவுண்டு ஃபைனல், செகண்ட் ரவுண்டு ஃபைனல், தேர்டு ரவுண்டு ஃபைனல், குவார்ட்டர் ஃபைனல்,செமி ஃபைனல்”.

“”யோவ் நான் சீரியஸô சொல்றேன்”

“”சரி..சரி. அப்ப நானும் சீரியஸô டிப்ஸ் தர்றேன் கேட்டுக்கோ. வழக்கமா டெய்லி ரெண்டு பாக்கெட் புடிக்கிறீயா அப்ப ஆறு பாக்கெட் வாங்கிடு. ஒரே நாள்ல மூணு பாக்கெட்டை ஊதித்தள்ளு. சாயங்காலம் பாரேன், மாரெல்லாம் எரியும், தொண்டை கமறலெடுக்கும்,உள்ள என்னவோ பண்ணும். புகைக்கிறதை நெனைச்சாலே குமட்டும். அத்தோட நிறுத்திக்க”.

“”மிச்சம் மூணு பாக்கெட்?”..

“”பார்த்தியா சிகரெட் புடிக்கிறதை விட்டுட்றவனுக்கு ஏன்யா இந்த கவலை. அத்த எங்கிட்ட குடுத்துட்டுபோய்க்கிட்டேயிரு”.
ரகு கெடக்கிறான் காட்டான். நான்.ஏன் விடப்போறேன்னு உங்க கிட்ட சொல்றன் சார். கொஞ்சநாளா மார்ல லெப்ட் சைடுல சுருக் ..சுருக்னு குத்துது சார். ஒரு நாள் விடியற நேரம் புகைஞ்சி புகைஞ்சி இருமல் வந்துச்சி. காரித் துப்பினா சளியில லேசா ரத்தம் இருந்துச்சி.. பயந்திட்டேன். டாக்டர்கிட்ட போவ பயமா இருக்கு சார். அவர் பாட்டுக்கு ஹார்ட்ல அடைப்பு இருக்கு, லங்ஸ்ல கேன்சரா இருக்குமோன்னு டவுட்டா இருக்குன்னு சொல்லிட்டா. பயத்தில செத்தே போயிடுவேன் சார். சாருமதி, சரண்யா, ரெண்டு பெண்ணுங்க எனக்கு. பெருசு எய்ட்த் படிக்குது, சின்னவ சிக்ஸ்த். பெரியவளை நல்லா படிக்க வெக்கணும். சின்னவளுக்கு மெடிசன். இது எங்க கனவு. இப்ப போய் எனக்கு ஏதாவதுன்னா. என் ஒய்ஃப் பாரதிக்கு என்னை மிரட்றது ஒண்ணு மட்டும்தான் சரியாத் தெரியும். வேற ஒரு மண்ணும் தெரியாது. ஏடிஎம் ல பணம் எடுக்கிறது கூட புரியாது. இந்த நிலையில் விட்டுட்டுப் போனா ஐயோ. அதான் முதல்ல புகைக்கிறதை நிறுத்துறதுன்னு முடிவு பண்ணிட்டேன். இருபது வருஷ பாத்தியதை முடியுமான்னு தெரியல. முடியணும். அது இல்லேன்னா ஒரு வேலையும் ஓடாது. என் ஒய்ஃப் பாரதி இதுக்காக எத்தனை நாளு அழுது சண்டை போட்டிருப்பா.
முதல் கட்டமா “புகைக்கிறதை நிறுத்துவது எப்படீ’ ன்ற புஸ்தகத்தை வாங்கி ஒரு ஓட்டு ஓட்டினேன். சூயிங்கம் ஒரு டஜன் வாங்கி வைத்துக் கொண்டேன். புக்ல சொல்லியிருக்கு. இரண்டாவதா புகைக்கிறதை தொட மாட்டேன்,புகைக்கிறதைதொடமாட்டேன்னுதினசரிபாராயணம் மாதிரிநூறு தடவையாவதுசொல்லிக்கிட்டிருக்கேன். பாக்குப் பொட்டலம் மெல்லுகிறேன், நிறைய தண்ணீர் குடிக்கிறேன். இவ்வளவுக்கு அப்புறமும் காலையில எந்திரிக்கும் போதே இந்த கேடுகெட்ட புத்தி சொல்லுது } நேரா போயி கிருஷ்ணா விலாஸ்ல ஒரு ஸ்ட்ராங் காபி, அப்படியே கிங் சைஸ் சிகரெட் ஒண்ணு. பொறுக்க நிதானமா ஒரு தம். ச்சீ நெனைப்பை துடைச்செறிஞ்சேன்.துடைக்க துடைக்க வந்துக்கிட்டேயிருக்கு சார். இனிமேல் காபிக்கு டாடா. அந்த நேரம் பதிலுக்கு சூயிங்கம். ஆனா ஒரு புண்ணியமும் இல்ல. உள்ளே சுருசுருன்னு இருக்கிறது குறையல சார். வேலை மேலயே புத்தி ஓடல. திரும்பத் திரும்ப புத்தி சிகரெட் மேலதான் போவுது.. வாய் நமநமன்னு அலையுது..

அடுத்ததா எந்தெந்த இடங்கள்ல நான் வழக்கமா நின்னு தம் அடிப்பேனோ அந்தப் பக்கமே தலை காட்டக் கூடாதாம். பங்க் கடை, கிருஷ்ணா விலாஸ் வாசல், கூட்ரோடு புளியமரத்தினடி, எல்லப்பன் டீக்கடை, காபி பார், எங்கயும் போறதில்லை, நிறுத்திட்டேன். நாலாவதா கூட சேர்ந்து தம் அடிக்கிற ஃப்ரண்ட்ஸ் சகவாசத்தையெல்லாம் கட் பண்ணணுமாம்.ஏகப்பட்ட பேர் இருக்கான்க. எல்லாரையும் நிர்தாட்சண்யமா கட் பண்ணிட்டேன். என்ன ஓசி டீ உலகநாதன் தான் ஏமாந்து போவான்..அஞ்சாவதா பார்க்கிற எல்லார்கிட்டேயும் நான் சிகரெட் புடிக்கிறதை நிறுத்திட்டேன்னு சொல்லி வைக்கணுமாம். அப்பத்தான் நாளைக்கு விரதம் தோத்துப் போனா எல்லாரும் காரித் துப்புவாங்கல்ல. அதை நெனைச்சி தொட தயங்குவோமாம். ஓகே. டன். முக்கியமா வழக்கமா போய் நிக்கிற கடைக்காரனிடமும் சொல்லி வெச்சிட்டேன். சே கேட்ட எல்லாரும் ப்..ப்..ப்..ப்..பூ..பூ.. ன்னு நக்கலா சிரிச்சிக்கிட்டே போறானுங்க சார்..

“”என்னாங்கடா”

“”எத்தனை மணிநேரமா விட்டுட்டீங்கன்னு சொல்லலியே தலைவா”.

ஆஹா அப்படி இப்படீன்னு வெற்றிகரமா பத்து நாள் ஓட்டிட்டேனே.. கொடுமையான பீரியட். உள்ளே புகை பிடிக்கிற நினைப்பு கொடுக்கிற குடைச்சல் தாங்கவே முடியல. ஒரு கட்டத்தில புகை இல்லாம என்னால வாழவே முடியாதோன்னு தோண ஆரம்பிச்சிடுச்சி சார்… இந்த பத்து நாளா ராத்திரில ஒரு மூணு மணி நேரந்தான் தூங்கியிருப்பேன். மிச்சநேரமெல்லாம் அதே நெனப்புத்தான். அடிக்கடி வேர்த்துக் கொட்டுகிறது.. நாள் முழுக்க வாய் நமநமன்னு.
அப்பப்ப.

வாழ்க்கையே சூன்யமா தெரியுது…நேற்று ராத்திரி பாருங்க தூக்கமே இல்லை. உள்ளே குடையுது. மனசை டைவர்ட் பண்ணணும். டெக்ல இளையராஜா மெலோடிஸ் போட்டு கேட்க ஆரம்பிச்சேன். நிலாவே வா முடிஞ்சி, மன்றம் வந்தத் தென்றலுக்கு வரும்போதே மனசு
ஒன்ற மறுத்துவிட்டது.. வீடியோவில ஆங்கில பட கேஸட், ஊஹும். சீக்கிரம் தூக்கம் வரும்னு வயிறு முட்ட தண்ணி குடிச்சேன். எதுவும் வேலைக்கு ஆவல. இதை படிக்கிற உங்களுக்கு இதெல்லாம் ஓவர் மாதிரி தெரியும். ஆனா தொடர் பழக்கத்தை ட்ராப் பண்றப்ப இந்த மாதிரி எக்ஸ்பீரியன்ûஸ நிச்சயம் கிராஸ் பண்ணுவாங்க… எதுக்கு இந்த வாழ்க்கைன்னு கூட தோண ஆரம்பிச்சிடுச்சி..நோநோ..இதுக்கு மேல தள்ளி போடக்கூடாதுன்னு பக்கத்து தெருவிலிருந்த சைக்கியாட்ரிஸ்ட் டாக்டர்கிட்டே கன்சல்ட் பண்ணச் சென்றேன். வயசான மனுஷன்.

“”வித்ட்ராயல் சிம்ப்டம்ஸ்., நிக்கொடின் வேலை இது. மூணு மாசம் அப்படித்தான் இருக்கும். பேயாட்டம் ஆடும். ரெண்டு மூணு வாரங்களுக்கு உச்சத்தில நின்னு ஆடும். தாக்குப் பிடிக்கணும்.

“”அப்படியெல்லாம் இல்ல டாக்டர்..”

“”புகைப்பிடிப்பதை நிறுத்தறதுக்கு நீ ஏன் மருந்து சாப்பிடக் கூடாது. இந்த விரக்தி சிந்தனைகளை கூட மாத்திரை அடக்கி விட்டுடும்”

“”அட்றா சக்கை இதுக்குக் கூட ட்ரக்ஸ் வந்திடுச்சா. நான் ரெடிசார். எனக்கு இது சீக்கிரம் ஒழியணும்.. சொல்லுங்க என்ன மருந்து”

“”குட் ஆட்டிடியூட். இதில உன் ஒத்துழைப்புதான் முக்கியம். விடணுங்கிறதில உறுதியா இருக்கணும். பஅஆ.இஏஅசபஐல. (யஅதஉசஐஇகஐசஉ ) . 0.5 ஙஎங. இந்த மருந்து அந்த நெனைப்பையே சுத்தமா ஒழிச்சிக் கட்டிடும்.ஒரு வாரத்துக்கு டெய்லி ஒரு டேப்லெட் சாப்பிடணும்.. அதுக்கப்புறம் டெய்லி காலையில ரெண்டு, ராத்திரிக்கு ரெண்டு. இப்படி பதினோரு வாரம். அந்த பேக்கேஜ் மொத்தம் 315 மாத்திரை”.

“”எப்பா எவ்வளவு செலவாகும் சார்”

டாக்டர் என்னை புழுமாதிரி பார்த்தார்.

“”இதை அமெரிக்காவிலிருந்து தருவிக்கணும் புரியுதா”
அவர் கையில் அதே சாண்டிக்ஸ் மாத்திரை—ஏழு இருந்தது.

“”எனக்கு ஃப்ரீ சேம்பிள் வந்திச்சிய்யா. ஃப்ரீயா தர்றேன் சாப்பிடு. ரெண்டாம் நாள்லயிருந்தே சிகரெட் நெனப்பே வராது,வரக்கூடாது. அனுபவிச்சிப் பார்த்துட்டு வந்து சொல்லு. ஓகே.ன்னா அப்புறம் மாத்திரைக்கு நான் ஏற்பாடு பண்றேன்”

மறுநாள்லயிருந்து ஆரம்பிச்சேன். டெய்லி ஒண்ணு. மொத நாள் ஒண்ணுந்தெரியல. ரெண்டாம் நாள் ஒரு மாதிரி இருந்துச்சி. ப்ரஷர் கூடியிருக்குமோ. பார்த்துக்கலாம். மூணாம் நாள் ஆரம்பிச்சது பாருங்க… தண்ணித் தண்ணியா பேதி, வாந்தி, வயித்து வலி. ஏழெட்டு தடவையிலேயே மயக்கமா தெரிஞ்சிச்சி.அவ்வளவுதான் தெரியும். கண் முழிச்சா ஆஸ்பிட்டலில் படுத்திருக்கேன். கையில குளுகோஸ் ஏறிக்கிட்டிருக்கு. எதிர்ல பாரதி கடுகடுன்னு முறைப்பா உட்கார்ந்திருக்கா.

மறுநாள் நண்பர்களெல்லாம், “”என்னய்யா சிகரெட் போயி பேதி புடுங்கிக்கிச்சாமே”ன்னு நக்கல் பண்றானுங்க. சீச்சீ இனிமே மந்திரத்தில (மாத்திரையில) மாங்காய் காய்க்கிற வேலையே வாணாம்பா. வைராக்கியம் தான் டாப்பு, மத்ததெல்லாம் டூப்பு. அப்படி இப்படீன்னு பயத்தில கொஞ்சம், பேதியில கொஞ்சம்னு இருபது நாளு தள்ளிட்டேன். ஊரு பூரா ராமாயீ.. வயசுக்கு வந்துட்டா. ராமாயீ.. வயசுக்கு வந்துட்டா ன்னு திரும்பத் திரும்ப எதிரொலிக்கிற ரேஞ்சுக்கு என் சிகரெட் பேதி ஊர்பூரா எதிரொலிச்சிக்கிட்டேயிருந்துச்சி. இன்னையில இருந்து சைக்யாட்ரிஸ்ட் அட்வைஸ்படி ஒரேயொரு சிகரெட்டை வாங்கி மேல்பாக்கெட்டில், பார்வையில் படும்படி வெச்சிக்கிட்டேன்.. இது சைக்காலஜி. சிகரெட் கையில இல்லேன்னும் போதுதான் வெறி ஜாஸ்தியா இருக்குமாம். கையில இருக்குதுன்றதிலேயே பாதி திருப்தி வந்துடுமாம். மெதுவா புடிச்சிக்கலாம்னு கூட தோணுமாம். வாஸ்தவந்தான் அப்படித்தான் தோணுது. இது ஒரு தாங்க முடியாத இம்சை சார்.

இன்னைக்கு என் விரதத்திற்கு சோதனையான நாள். சென்னையில் ரோட்டரி சங்கத்தின் ஃபைனல் மீட்டிங் இருக்குது.. நான் மேற்படி சங்கத்தின் பொருளாளர். அய்யோ. இந்த தடவை தப்பிக்க முடியாது ஈவினிங் பார்ட்டி இருக்கு எல்லாம் ஜாலியா இருப்பாங்க. ஊதித் தள்ளுவாங்க. அப்ப கண்டிப்பா

எனக்கும் நெருக்கடி வரும். ஐயோ இத்தனைநாள் கட்டிக் காத்த விரதம் கோவிந்தா ஆயிட்றதான்னு மனசு குத்துது.. அதில்லாம ஆரம்ப நாளை விட இன்னைக்கு பார்த்து அதன் மேல அடங்காத வெறியா வேற இருக்குது. முடியல. என்ன செய்யலாம். சி.பி.நி எ. புஸ்தகத்தை எடுத்தேன். எந்நேரமும் ஏதாவது வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு வேலையில பிஸியா இருக்காப்பல வெச்சிக்கணுமாம். எஸ் அப்பவே மீட்டிங்கில் நானும் பேசறதா பேரு குடுத்திட்டு, அதற்கான தகவல்களைத் திரட்ட ஆரம்பிச்சேன்.. அன்னைக்கு நடந்த ஃபைனல் மீட்டிங் பார்ட்டியில சிகரெட் புடிக்காம என்னால இருக்க முடியல. ஒவ்வொருத்தனும் சிகரெட் புகைய இழுத்து, வேணும்னே கிட்ட வந்து என் மொகத்தில ஊதறானுங்க.

மனசு தத்தளிக்குது. ஒரு வேலை செஞ்சேன். டாக்டர் கொடுத்த ஐடியாதான் இது. புகைக்கிறதை பத்த வைக்காம வெறும் சிகரெட்டை வாயில வெச்சி கொஞ்ச நேரம் சிகரெட் புடிக்கிற மாதிரி காற்றை உள்வாங்கி, உள்ளே நிறுத்தி மூக்கு வழியாக வெளிவிட்டுமனசை ஏமாற்றினேன்…என் வெறி சற்று குறைந்தாற்போல இருந்தது, இந்த டெக்னிக் ஓரளவுக்கு வேலை செய்றமாதிரி தெரியுது. . .

ஆஹா இப்படியே இந்த போராட்டங்களுக்கிடையில் வெற்றிகரமாக இரண்டு மாசத்தைத் தாண்டிவிட்டேன்.. நானா ரெண்டு மாசமான்னு மலைப்பா இருக்குது. அறுபது நாள், அறுபதுஇரண்டு—நூற்றியிருபது பாக்கெட் சிகரெட்டின் புகை நுரையீரலுக்குள் போய்வருவது தடுக்கப்பட்டு விட்டது..அதோட ஒரு பாக்கெட் சிகரெட் எழுபது ரூபா. அப்பப்பா நூத்து இருவது பேக் எட்டாயிரத்து நானூறு ரூபா. புகையாவாம தடுத்தாச்சி.. இனிமேல் பயமில்லைன்னு டாக்டர் சொன்னார். ஆனால் இப்ப கூட சும்மா ஒண்ணு புடிச்சி பார்க்கலாமேன்னு புடிச்சா அவ்வளவுதான் அத்தோட பழைய கதைதான்னு எச்சரிக்கை செஞ்சாரு.. தனியா இருந்தா இப்பகூட அந்த ஆசை வருது. அந்த மாதிரி நேரங்கள்ல நிறைய கதை புஸ்தகங்களை படிக்கச் சொன்னார்.

காலையில் முழிக்கும்போது பாரதி குளிச்சிட்டு தலையில் ஈரத் துணியோடு வந்து என்னெதிரே நின்றாள்.

“”எழுந்து தொலைங்க.. என்னமோ நேத்தெல்லாம் வெட்டி முறிச்சாப்பல ஏழு ஆச்சி, இன்னும் அப்படியென்னா தூக்கம்? ரெண்டு நாளா தோட்டத்தில லைட்டு எரியல லைட்டை மாத்துங்கன்னு கத்தறேன். பாத் ரூம்ல குழாய் ஒழுவுதுன்னு சொல்லி ஏழு நாளு ஆயிட்டது. இந்த வூட்ல ஒண்ணு நடக்குதா. ராத்திரியில பொம்பள ஒரு ஆத்திரம் அவசரத்துக்கு எப்படி தோட்டத்துப் பக்கம் போவா. தெரியவாணா” என்று அவபாட்டுக்கு கத்திட்டு போறா. அவ ரொம்ப சின்ஸியர். தினசரி நான் துயிலெழ சுப்ரபாதம் பாட்றதை ஒரு கடமை மாதிரி செய்வாள். அவளுடைய இந்த பண்புலதான் நான் சாக்ரடீஸ், காரல்மார்க்ஸ் அளவுக்கு உயர்ந்து நிற்கிறேன்.. எப்படி. அவங்களுக்கு வாய்ச்சதும், எனக்கு வாய்ச்சதும், ஒரேமாதிரி தாளிச்செடுக்கிற பொண்டாட்டிங்கதான். நேற்றோடு புகையை நிறுத்தி மூணு மாசம் ஆயிட்ச்சி. எழுந்து உட்கார்ந்து இழுத்து ஒரு மூச்சு விட்டேன். சுவாசத்தில் நிக்கொடின் புகை கலக்காத சுத்தமான காற்று பரவுவதை உணர முடிகிறது.. உள்ளே முழுசும் ஜெயிச்சிட்ட மதர்ப்பு. காபி வேணும்னு பாரதி கிட்ட சொல்லிட்டு, முகம் கழுவி வாயை கொப்பளித்துக் கொண்டு வந்து உட்கார்ந்தேன். இனிமேல் காபியால் என் விரதத்தை ஒண்ணும் அசைக்க முடியாது. செல்லை எடுத்து. நான் புகைக்கிறதை நிறுத்தி நேற்றோடு மூன்று மாசம் ஆயிட்டது.. என்று டைப் செய்து என் நண்பர்களுக்கெல்லாம் மெúஸஜ் அனுப்பிவெச்சேன். உள்ளே நிலை கொள்ளாத குஷி. அப்.ப்.பா எப்படிப்பட்ட போராட்டம் இது.
கொஞ்ச நேரத்திலேயே மெúஸஜ் பார்த்துட்டு ரகு வந்து விட்டான். என் கையைப் பிடிச்சி குலுக்கினான்..

“”என்னடா என்னால நம்பவே முடியலடா..நிஜமாவே புகைக்கிறதை நிறுத்திட்டியா. நீயான்னு இருக்குடா”.

சிரித்தேன்.

“”அ.ப்.ப்.பா எனக்குள்ளே இன்னொருத்தன் இருந்துக்கிட்டு எதிர்த்து போராட்ற மாதிரியே இருந்திச்சிடா. ஒரு கட்டத்தில செத்துடலான்ற எண்ணம் நிறைய இருந்திச்சி…சமாளிச்சேன்,ஜெயிச்சேன். அப்புறம் எப்படியெப்படில்லாம் போராடி ஜெயிச்சேன்னு ஒரு பத்து நிமிஷம் அவனுக்கு சொன்னேன். நீயும் இதே டெக்னிக்கை வெச்சி அந்தப் பழக்கத்துல இருந்து வெளியே வந்திட்றா” என்றேன். பிரமிப்புடன் கேட்டுக் கொண்டிருந்தான்.

“”டேய் உனக்குள்ள இவ்வளவு “வில் பவர்’ இருக்கும்னு நான் நெனைக்கவே இல்லடா. என்னால விட முடியலையே. அஃப்கோர்ஸ் நான் அதுக்காக ரொம்பவும் ட்ரை பண்ணல” என்றான். சிரித்தேன்.

“”மனதிடம் வேணும்டா. நான் சொன்னதை செய்வேன். சொல்லாததையும் செய்வேன்” ரஜினி மாதிரி வெடைச்சிக்கிட்டு சொல்ல, ரகு சிரித்து விட்டான். அப்போதுபாரதி எனக்கும்,ரகுவுக்கும் காபி எடுத்துக் கொண்டு வந்தாள். நான் கப்சிப். அவசரமாய் பேச்சை நிறுத்திக் கொண்டேன்.

“”என்னம்மா உன் புருஷன் நிஜமாவே புகைக்கிறதை விட்டுட்டானா. எனக்கு ஆச்சரியமா இருக்கும்மா”.

“”ஆமாமா “”விட்டுட்டாரு”

செத்தவனுக்கு வெத்தல பாக்கு கொடுத்த மாதிரி ஒரு சுரத்தில்லாமல் சொல்லிக் கொண்டே உள்ளே போனவள் ஒரு பிளாஸ்டிக் டப்பாவைக் கொண்டு வந்து “ணங்’னு டீப்பாய் மேல வைத்தாள்.. நான் எழுந்து கொண்டேன்.

“”ரகு வாடா வெளிய போவலாம்”

“”உட்காருங்க”

அவள் போட்ட அதட்டலில் சுருண்டுக் கொண்டேன்.

“”டப்பாவ திறந்து பாருங்க”

ரகு திறந்து பார்த்து விட்டு அதிர்ச்சியாய் நிமிர, நான் தூரப் பார்வையிலிருந்தேன்.

“”டேய் அடப்பாவி இந்த எழவுக்காடா இம்மா தூரம் பில்டப் குடுத்த? என்ன சொன்ன? சொன்னதை செய்வேன், சொல்லாததையும் செய்வேன். ரொம்ப கரெக்ட். இதுக்கு மேல இந்த டெக்னிக்கை வெச்சி நானும் புகைப்பதை விட்டுடலாமா..த்தூ ..”

“”..ம்..ம்..விட்றா விட்றா விட்றா இதெல்லாம் ஒரு விஷயமா. நான் புகை புடிக்கிறதை வுட்டுட்டேன்னுதானே உனக்கு மெúஸஜ் அனுப்பினேன். வுட்டுட்டனா இல்லையா..,மூணு மாசமா அதை தொடலியே. இனியும் தொடமாட்டேயக்டா. அத பாராட்டுவியா. அத்த வுட்டுட்டு..”

“”இதெல்லாம் ஒரு பொழைப்பாடா. உனக்கு. த்தூ” ரகு துப்பிவிட்டு சற்று தள்ளிப்போய் உட்கார்ந்தான் .

இருங்க..இருங்க சார். புரியுது. உங்களுக்கு சஸ்பென்ஸ் தாங்கல.அப்படி அந்த டப்பாவில துப்புற அளவுக்கு என்ன இருக்குதுன்னு உங்களுக்கு தெரியணும். அதான. சொல்லிட்றேன். முதல்லியே ஒரு சாரி கேட்டுக்கறேன். டப்பாவில அரைகவுளி வெள்ளை வெத்தல, கொஞ்சம் அஜந்தா சுபாரி பாக்கு பொட்டலங்கள்,சுண்ணாம்பு டப்பி, தங்கபஸ்பம் பன்னீர் புகையிலை பொட்டலம். அவ்வளவுதான் சார். இதுக்குப் போய் அலட்டிக்கிறான். இது ஒண்ணும் எனக்கு பழக்கமில்ல சார்… நெனச்சா இந்த செகண்டே வுட்ருவேன். சிகரெட் புடிக்காததினால நமநமன்னு இருக்கிற வாய்க்கு ஒரு மாத்து. பாரதி என்னை முறைச்சிட்டு,

“”கிழிச்சிடுவ..அன்னைக்கு சிகரெட்டுக்கும் இத்தையேதான சொல்லிச்சி இந்த வாயி. ஒரு மாசமா இந்தக் கர்மத்தைப் போட்டுக்கிட்டு, புளிச்..புளிச்னு வூடு பூரா துப்பி வைக்குதுங்க. கழுவி மாளல. ஷர்ட்டு, வேட்டி எல்லாம் வெத்தல கறை. இதுக்கு கொஞ்சம் புத்தி சொல்லிட்டு போங்க”

“இதுக்கு’ன்றது நான் தான்.

“”டேய் இது ஆரம்ப கட்டந்தான். இப்பவே இத்த விட்டுத் தொலைடா”
பாரதி அவசரமாய் வந்தாள். வரும்போதே ரெண்டு கைகளையும் மேலே தூக்கிக் கும்பிட்டுக் கொண்டே..

“”ஐயா சாமி என்ன சொல்றீங்க. இது மாதிரி ஆளு கிட்ட வுட்ருன்னு சொல்லாதீங்க.

வாணாஞ் சாமீ அப்புறம் இதுக்கு பதிலா வூடு பூரா பிராந்தி பாட்டிலா வந்து எறங்கிடும்”.

– செப்டம்பர் 2013

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *