அவளை முதன்முதலாக பார்ப்பவர்கள் அக்கா என்று அழைப்பதா? அல்லது அன்ரி என்று அழைப்பதா என ஒரு கணம் தடுமாறுவார்களோ என்ற ஓர் ஐயப்பாடு அவ்வப்போது என்னுள் விசுவரூபமெடுக்கும். செண்பகவல்லி என்ற அவளது பெயர் மட்டும் அதன் காரணம் அல்ல என்பதுவும் எனக்குத் தெரியும்..
சாய்மானைக் கதிரையில் சாய்ந்திருந்தவரின் நினைவு அவரது மகளைவிட்டுச் சாய்வதாக இல்லை.

தோல் சுருக்கமான பலர் தோள் நெருக்கமாகவே வாழ வழி காட்டுவது ஜாதகம் அல்லவா? உவள் ஏன் உதை உணர்கிறாள் இல்லை? தள்ளாடிய தேகம்.தள்ளாடாத நோக்கம். விட்டு விடாமலும் வாழ்கின்றார்கள். விட்டுக் கொடுக்காமலும் வாழ்கின்றார்கள்.
தேநீருடன் வந்த மகள் மீதான அவரது சிராய்ப்பில்லாத சிரிப்பு ஏதோ சொல்லத் துடிப்பதை காயப்படுத்தாமல் உணர்த்தியது.
“மகிழ்ச்சியின் ரகசியம் சாதகத்தை விரும்புவது என்பது உனக்குத் தெரியாதா மகளே?”
“வெற்றியின் ரகசியம் சாதிப்பதை விரும்புவது என்பது உங்களுக்குத் தெரியும் தானே அப்பா!”
“நாங்கள் தகமையை நாடுகின்றோம். நீங்கள் தலைமையை தேடுகின்றீர்கள். அப்படித்தானே மகள்?”
அகத்தை அகலப்படுத்துங்கள் அப்பா! பயம் வந்து உங்களைப் பிடிப்பதில்லை. நீங்கள்தான் அதைப் போகவிடாமல் பிடித்து வைத்துக் கொண்டு தவிக்கின்றீர்கள். அடுப்போடு வாழ்ந்தது உங்க காலம். நெருப்போடு எழுவது எங்க காலம். மனசு குடுக்காத நம்பிக்கையை வேறு எது குடுக்கப் போவுது? எனது உலகம் என்னிடமிருந்தே தொடங்குகின்றது.
தனது மனதோடு தானே பேசிக் கொண்டாள் செண்பகவல்லி.
மவளே! உன் மனக்குரல் என்னுள் சத்தமாக எக்காளமிடுவது உனக்கெங்கே கேட்கப் போவுது! இளிச்சவாயன் இருக்கிற ஊரில இஞ்சி இனிக்கும் என்பதை நீ உணரும் வேளை உன் வாழ்வில் வராமலா இருக்கப் போவுது?
சாதகம்…சாதகம்…என்கின்றீர்களே அப்பா! நீங்கள் கடைப்பிடிக்கும் சாதகம் வேறு. நாம் கைக்கொள்ளும் சாதகம் வேறு! உங்களுக்கு பத்தும் பொருந்தினால் அது உத்தமம். எங்களுக்கோ அந்தப் பத்தும் பொருந்தினாலும் அது மத்திமம். சரிதானே அப்பா?
சரியா என்றால் முடிவைக் கேட்பது. சரிதானே என்றால் முடிவு செய்துவிட்டுக் கேட்பது. நீ முடிவெடுத்து விட்டுக் கேட்கிறாய்…. உங்களது பொருத்தங்கள் எவை? அதனை ஒருக்கா செவ்வையாகச் சொல்லு பார்ப்பம்?
நாங்கள் எதிர்பார்க்கின்ற பொருத்தத்திலை உயர்ந்த படிப்பு இருக்கும். நிறைந்த சம்பளம் இருக்கும். ஆரோக்கியமான உடம்பு இருக்கும். ஆறடி உயரம் இருக்கும். அதி நவீன போன் இருக்கும். படவரி இருக்கும். சொகுசு மிக்க கார் இருக்கும். இரண்டு வீடுகள் இருக்கும். விடுமுறை காலத்துகந்த ஒரு படகு இருக்கும். உல்லாசப் பயணங்களில் நாட்டம் இருக்கும். இன்னும் இன்னும் இருக்கும்!
“அதனால்தான் உங்களது பெயரை கேட்டால் கூட தமது நினைவில் சற்றுத் தாமதமாக வர வேண்டும் என்ற அளவுக்கு உங்களை மறக்க வேண்டும் என்கின்ற பெற்றோரையும் நான் அறிவேன்.”என்றேன்.
முக நூல்,ஊடலை,புலனம்,கீச்சகம்,அளாவி,பகிரலை,ஆலலை,திறன் பேசி, செறிவட்டை, மின்னூக்கி என எதுவுமே இல்லாமல் எப்படி அப்பா உங்களால் வாழ முடிகின்றது?
சோதிட நம்பிக்கை,பாரம்பரியத்தில் அக்கறை,பெற்றோர் சொற் கேட்டல், பெரியோரிடம் மரியாதை, குன்றாத குணம், ஈர்ப்பு, கீழ்ப்படிவு, கட்டுக்கோப்பு, தெய்வ பக்தி இவை அனைத்தும் இல்லாமல் இப்போது நீங்கள் எப்படி வாழப் பழகி விட்டீர்களோ அப்படித்தான்…
எங்களுக்குச் சாதகமானது உங்களுக்குப் பாதகமாகத் தெரியும். உங்களுக்குச் சாதகமானது எங்களுக்குப் பாதகமாகத் தெரியும். ஒரு சொல்லை அல்லது ஒரு வசனத்தை வெவ்வேறு துறை சார்ந்த இருவர் சொன்னாலே வெவ்வேறு அர்த்தம் வருவது ஆசிரியரான உங்களுக்குத் தெரியாதா அப்பா?
அதுதான் என்ன என்கிறேன்?
தலையிலை ஒண்டும் இல்லை என கட்டுப்போட்டு விட்டு டாக்டர் சொல்வதற்கும், குட்டுப்போட்டு விட்டு ஆசிரியர் சொல்வதற்கும் அர்த்தமே வேறு. அதே போலதத்தான் இதுவும்! ஏற்றுக் கொண்ட மனத்தால் மாற்றிக் கொள்ளவும் முடியும் என்றால் எங்கள் கருத்து வேறு! நீங்கள் கருதுவது வேறு!
மவளே! நாங்கள் பார்ப்பது மாங்கல்யப் பொருத்தம். நீங்கள் விரும்புவதோ மனப் பொருத்தம்.
அப்படிச் சொல்லுங்கள் என்ரை செல்ல அப்பு! ஒருவரிடம் நவீன வசதிகள் கூடிய ‘ஐபோன்15’ இருக்குமெனின் அவர் யோகமுள்ளவர். உன்னத பொருத்தமுள்ள அவருடன் நான் இருப்பேன். இதுவரை ‘ஐபோன்15’ என்ன என்றே தெரியாதவர் எம்முடன் வாழத்தெரியாதவர்.
அடி ஆத்தீ! 1.நட்சத்திரப் பொருத்தம் 2.கணப் பொருத்தம் 3.மகேந்திரப் பொருத்தம் 4. ஸ்திரீகப் பொருத்தம் 5. யோனிப் பொருத்தம் 6.ராசிப் பொருத்தம் 7. ராசி அதிபதி பொருத்தம் 8. வசியப் பொருத்தம் 9.்தாலி (இரச்சு)ப் பொருத்தம் 10. வேதைப் பொருத்தம் என்ற இந்தப் பத்தும் பிரதானம்.
உவை எல்லாம் எமக்கு புராதனம் அப்பா! எங்களுக்கு படவரி இருந்தால் உத்தமம். தூர உணரி,ஒளி உணரி,அசைவுணர்மானி,அதி வேக இணைய வசதி உள்ள திறன் பேசி என்பனவற்றுள் ஒன்று இல்லை என்றால் கூட அது மத்திமம். ஊடலை அற்றவர் எம் முன் ஊடாடதுவது கூட அதமம்.
மகளே! வடிவாகக் கேள்! நட்சத்திரப் பொருத்தம்,கணப் பொருத்தம், யோனிப் பொருத்தம், ராசிப் பொருத்தம்,தாலி (இரச்சு)ப் பொருத்தம் என்ற அடிப்படை ஐந்தும் வாழ்க்கைக்கு அத்தியாவசியம்.
அப்பா! செவ்வாய் தோஷம் உள்ளவர்களுக்கு உங்கள் ஜாதகத்தில் பரிகாரம் உண்டு. ஆனால் பல்வேறு சிறப்பு வசதிகள் இருந்தாலும் நவீன வசதிகள் சற்றே குறைந்த ‘ஐபோன்14’ வைத்திருப்பவருக்குக் கூட எங்கள் ஜாதகத்தில் பரிகாரமே கிடையாது.
போடி பைத்தியம். செவ்வாய் தோஷம் மட்டுமல்ல மாங்கல்ய தோஷம் அல்லது மூல நட்சத்திரம், ஆயில்ய நட்சத்திரம் என்றால் கூட அந்தப் பேச்சே எடுக்க மாட்டம். பிறக்கும் போது லக்கினத்திலிருந்து 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் எதிலாவது செவ்வாய் கிரகம் உள்ளவர் தோஷமுள்ளவர் என்பது விதி்.
பின்னர் 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கும் 35 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கும் சாதகம் பார்க்கத் தேவையில்லை என்ற விதி விலக்கையும் சொல்லிக் கொள்வதும் நீங்கள்தானே என்ரை அன்பான செல்ல அப்பா! இன்னும் ஏன் அப்பா பழைய பஞ்சாங்கமாகவே வாழ்கின்றீர்கள்? கறுப்போ சிவப்போ ஏதோ ஒன்றை பிடிச்சு வரச் சொல்லும் பெற்றோர் நிறைந்த காலம் இது
அப்பா அப்பா இதைக் கொஞ்சம் பாருங்கப்பா! இலையுதிர் கால மரம் அழகாக காட்சி அளிக்கிறது என்றால் வசந்த காலத்தில் அதே மரம் பேரழகாக காட்சியளித்திருக்கும்.
பத்திரிகை ஒன்றைக் காட்டினாள். எனது கவனத்தை திசை திருப்புகின்றாளாம்.
உனக்கென்ன பெரிய பேரழகி என்ற உள்ளுர நினைப்பா? அல்லது ஆகக் குறைந்தது நூறு பேராவது வரிசையாக சுயம்வரத்தில் உனக்காகக் காத்து
நிற்கின்றார்கள் என கற்பனையாக ஒரு மிதப்பா? உன்னை மணம் முடிக்க விரும்பிய எத்தனையோ பேரை அற்ப காரணங்களுக்காக நிராகரித்து விட்டு பின் அவர்களது திருமணத்திற்கு சென்று பரிசளித்துவிட்டுத் திரும்புவாயே! அந்த எண்ணிக்கையாவது உனக்கு தெரியுமா?அல்லது அப்பொழுது ஒவ்வொரு தடவையும் சுட்டு விரலால் ஒரு துளி கண்ணீரையாவது நான் சுண்டிவிடுவதையாவது நீ அறிவாயா?
கேட்க நினைத்தேன். கேட்கவில்லை.
மவளே…உன்னை ஒன்று கேட்பேன் செய்வாயா?
ஜாதகம் பார்த்து கல்யாணம் செய் என்று நிர்ப்பந்திக்காவிடின் எதையும் செய்வேன் அப்பா!
நீ கல்யாணம் கட்டிய பின்பு கடைசி வரை உன்ரை கணவனோடு இருப்பாய் தானே!
– 08-10-2023, யாழ்ப்பாண ஈழநாட்டில் வெளிவந்தது