பொன் மணித்துளிகள்…!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 27, 2021
பார்வையிட்டோர்: 4,545 
 
 

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்துவிட்ட விபத்து…!!!

பெசன்ட் நகரிலிருக்கும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு போவதற்காக பெசன்ட் அவின்யூவில் இளங்கோ பைக்கை ஒடிக்கவும், எதிரில் ராங் சைடில் வந்த ஆட்டோ ஒன்று மோதுவது போல வர, இளங்கோ நிலை தடுமாறி மீடியனில் பைக்கை மோதவும், மங்கை அப்படியே பைக்கின் பின்னாலிருந்து தூக்கி எறியப்பட்டாள்!

ஆட்டோவை சிலர் சூழ்ந்து கொண்டு விட்டார்கள். இளங்கோ நேராய் அவனை நோக்கி வந்தான்.

பின்னாலிருந்து “ஸார், ஸார்..உங்க மனைவி…” என்று கத்துவது காதில் விழவேயில்லை.

ஆட்டோ ஓட்டுனரின் சட்டைக் காலரைப் பிடித்துவிட்டான்.

“டேய். எறங்குடா கீழ. ராங் சைடில வந்து இடிச்சிட்டு உள்ளேயே உக்காந்திட்டு இருக்கியா?”

“கையெடு, எங்க மோதினேன்? டேய்..கீய்ன நடக்கிறதே வேற”

“வண்டிய விட்டு எறங்கு. உன்ன சும்மா விடக்கூடாது”

“ஸார், விடுங்க. அம்மா மயக்கமா கிடக்காங்க. பாருங்க…”

இளங்கோவுக்கு ஏதாவது காதில் விழுந்தால்தானே.

“நா ஓரங்கட்டி நின்னிட்டுதான் இருந்தேன். அந்த அம்மா சவாரிக்கு கையத்தட்டவுமே கிராஸ் பண்ணிட்டேன்”

“எங்க கைய காட்டினாலும் போயிருவீங்களோ? தப்புன்னு வாயில வருதா பாரு. போலீசுல பிடிச்சு குடுத்திட்டுதான் முதல் வேல”

கூடியிருந்தவர் இளங்கோவைத் திட்ட ஆரம்பித்து விட்டார்கள்.

“ஸார், உங்களுக்கென்ன பயித்தியமா. முதல்ல பெண்டாட்டிய பாருங்க. இவன நாங்க பாத்துக்கறோம்…”

இளங்கோவுக்கு கோபம் உச்சிக்கு ஏறியது. “நானா பயித்தியம், டேய் தப்ப ஒத்துக்காத வரைக்கும் உன்ன விடமாட்டேண்டா. எம்பொண்டாட்டிக்கு எதுனாச்சும் ஆச்சு உன்ன வெட்டியே போட்றுவேன். பொறுக்கி நாயே”

ஆட்டோகாரன் இளங்கோவை அடிக்கவே வந்துவிட்டான். நிலைமை மோசமாகவே, அங்கிருந்த சிலர் அவனை மன்னிப்பு கேட்கச் சொன்னார்கள். அவர்கள் கவலையெல்லாம் இளங்கோவின் மனைவி பற்றிதான்.

“தப்புதான் ஸார், மன்னிச்சிடுங்க”

“இரு உன்ன வந்து வச்சிக்கிறேன். உன் வண்டி நம்பர் எங்கிட்ட இருக்கு. தப்பிக்கலாம்னு கனவுல கூட நெனச்சிடாத”

திரும்பி வந்த இளங்கோவுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. மங்கையைக் காணவில்லை. பைக்கை சுற்றி கூட்டம்.

“எங்கப்பா எம்பெண்டாட்டி?”

“ஒரு அம்மா கார்ல தூக்கிப் போட்டுகிட்டு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னாங்க. இந்த சீட்ட உங்க கிட்ட குடுக்கச் சொன்னாங்க”

“அம்மாவா? குத்துக் கல்லாட்டம் புருஷன் நானு இருக்கும்போ அவள தூக்கிட்டு போக யாருக்கு ரைட்டு?”

அந்த துண்டு கடிதத்தில் ‘என்னை மலர் மருத்துவமனையில் சந்திக்கவும். எனது தொலைபேசி எண்’ என்று மட்டுமே எழுதியிருந்தது.

இளங்கோ தன் நண்பன் சிவாவுக்கு போன் பண்ணி சுருக்கமாய் நடந்ததைச் சொல்லிவிட்டு பைக்கை எடுத்துக் கொண்டு போகச் சொன்னான்.நேராய் ஆஸ்பத்திரிக்கு விரைந்தான்.

***

இளங்கோவைப்போல ஒருத்தன் இருப்பானா என்று யோசிப்பவர்கள் அவனுடைய குணாதிசியத்தைப் பற்றி சிறிதேனும் தெரிந்திருக்க வேண்டும் என்றுதான் சொல்லவேண்டும். மங்கையும் இளங்கோவும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான். பெற்றோரின் முழு சம்மதம் கிடைக்காவிட்டாலும் ஒரு வருஷத்தில் இரண்டு பக்கத்திலும் எந்த வித மனக்கசப்பும் இல்லை. ஆனால் அவளுக்கு பிரச்சனையே இளங்கோதான். அவனுடைய பலவீனமே அவனது முன்கோபம் தான். காதலிக்கும்போதே அவள் புரிந்து கொண்டாள். இவனுடன் வாழ்வது அத்தனை எளிதாய் இருக்கப்போவதில்லை என்று…!

அவர்கள் சந்தித்தது ஒரு சூப்பர் மார்க்கெட்டில்தான்.பில்லிங் செக்க்ஷனில் அவள் பின்னால் நின்று கொண்டிருந்தான். அவள் கவுன்ட்டரை நெருங்கும் நேரத்தில் சடாரேன்று அவர்களை முந்திக் கொண்டு ஒரு இளைஞன்,

“மேடம், இந்த ஒரு ஐட்டம்தான், பில் போட்டுடுங்க. சீக்கிரம் போகணும்…” என்று ஒரு பற்பசையை எடுத்து நீட்டினான்.

‘பின்னால் போங்க’ என்று கவுன்டரில் இருந்த பெண்ணும் சொல்லவில்லை. முன்னால் நின்று கொண்டிருந்த மங்கையும் ஆட்சேபிக்கவில்லை. ஆனால் இளங்கோவுக்கு வந்ததே கோபம்.

“ஏய்… மிஸ்டர், நாங்கெள்ளாம் என்ன பூப்பறிக்க வந்தோமா…?? ஒழுங்கா வரிசயில நில்லுங்க”

“ஏய்…அவங்களே சும்மாதானே இருக்காங்க.. உனக்கென்ன பொத்துகிட்டு வருது…??”

அவ்வளவுதான்…. அவனுடைய சட்டை காலரைப் பிடித்துவிட்டான் இளங்கோ…

“என்னடா, செய்யுறது தப்பு. இதுல என்ன மிரட்டுவியா”

பெரிய சண்டையாயிருக்க வேண்டியது, மங்கைதான் அவனைத் தடுத்து சமாதானப் படுத்தினாள். வெளியே வந்து அவனுக்காக காத்திருந்தாள்.

“சின்ன விஷயத்த பெரிசு படுத்திட்டீங்க, இருந்தாலும் எனக்காக குரல் குடுத்ததற்கு நன்றி”

“இதாங்க, உங்களமாதிரி ஆளுங்களோட பிரச்சனையே. அநியாயத்தை அங்கேயே தட்டிக்கேட்க தைரியமில்லை. என்னால அப்படி இருக்க முடியாது”

அவர்களுடைய பழக்கம் தொடர்ந்தது.. மங்கைக்கு அவனுடைய குணம் ஆரம்பத்தில் பிடித்திருந்தாலும் போகப் போக பயத்தையும் சலிப்பையும் தந்தது. தினமும் யாருடனாவது சண்டை. எந்த வேலையிலும் ஆறு மாசத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் வேலையை விட்டு விடுவான். நல்ல வேளை, மங்கைக்கு நல்ல வேலையிருந்ததால் குடும்பம் குழப்பமில்லாமல் போய்க் கொண்டிருந்து. மங்கை மீதும் அவன் கோபம் எப்போது பாயும் என்றே சொல்லமுடியாது, அவன் உடைத்த ரிமோட்டுகள், மொபைல், தட்டுகள், டம்ளர்கள், கணக்கே கிடையாது. எத்தனையோ தடவை அவனை விட்டுவிட்டு போகவேண்டும் என்று தோன்றும், ஆனால் எது அவளை கட்டிப் போட்டதேன்று அவளுக்கே புரியவில்லை. அவனுடைய நேர்மையாயிருக்குமோ?.

அவன் முதல் முதலில் அவளுக்காக சண்டை போட்டது மனக்கண் முன் வந்து போகும்.

***

அன்றைக்கு அவர்களின் மூன்றாவது திருமண ஆண்டு. அவர்கள் திருமண நாளை அஷ்ட லட்சுமி கோவிலில் கொண்டாடுவது வழக்கம். இருவரும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு , கோவிலுக்குப் போய் ஒரு அர்ச்சனை பண்ணிவிட்டு, முருகன் இட்லி கடையில் டிபன் சாப்பிட்டு விட்டு, பீச்சில் காலாற நடந்து விட்டு, ஒரு சினிமா பார்த்த பின் வெளியில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்புவது வழக்கம். மங்கைதான் அந்த பேச்சை ஆரம்பித்தாள்… அவளது போதாத வேளை!

“ஏங்க, அப்படியே நம்ம அப்பா, அம்மாவையும் பாத்திட்டு வரலாமா?”

“பாத்துட்டு?”

“என்னங்க, தெரியாத மாதிரி கேக்கறீங்க. ஆசீர்வாதம் வாங்கத்தான்!”

“அவுங்க என்ன சொல்லுவாங்கன்னு தெரியாதா, ‘என்னம்மா.. ஏதாவது விசேஷமுண்டா’?”

“மங்கை, இதக் கேட்டு கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு. கல்யாணம். உடனே குழந்தை. அப்புறம் காதுகுத்து. பள்ளிக்கூடம், வேற நெனப்பே கெடையாதா?”

“இதிலென்ன தப்பு? அவுங்க காலத்துக்குள்ள பேரக்குழந்தைகளை பார்க்க ஆசையிருக்காதா?”

ஆத்திரத்தில் கையில் இருந்த பைக் சாவியை விட்டெறிந்தான். அது எங்கேயோ போய் விழுந்து விட்டது.

“நாம எங்கேயும் போக வேண்டாம். நீ வேணா போய் அப்பா அம்மா கிட்ட கொஞ்சிட்டு வா”

இது மாதிரி நேரங்களில் மங்கை அமைதியாக அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுவாள். பத்தே நிமிடத்தில் அவன் கோபமெல்லாம் பஞ்சாய் பறந்துவிடும். வாயைத் திறந்தாளோ. அதோகதிதான்.

மங்கை எட்டிப் பார்த்தாள், அவன் சாவியை தேடிக் கொண்டிருந்தான். மங்கைக்கு சிரிப்பாய் வந்தது.

“ஏய், மங்கை. கோவிலுக்கு வரியா, இல்லையா?”

உர்ரென்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கும் கணவனைப் பார்க்க பாவமாயிருந்தது. ஒன்றும் பேசாமல் வண்டியின் பின்னால் உட்கார்ந்தாள். அப்படியே இருந்திருக்கலாம்!

“ஏங்க, குழந்தையில்லைன்னு உங்களுக்கு மனவருத்தம் இருக்குதா?”

வண்டியோட்டும்போது அவன் மனநிலை தெரிந்தும் இந்த கேள்வியைத் கேட்டது எவ்வளவு முட்டாள்தனம் என்று உணரும்போது எல்லாமே கைவிட்டு போயிருந்தது.

***

பத்து நிமிடத்தில் ஆஸ்பத்திரியில் இருந்தான் இளங்கோ.

“இங்க மங்கைன்னு ஒரு ஆக்சிடென்ட் கேசு?”

ரிசப்ஷனிஸ்ட்… ‘ஒரு செகண்ட்…’ என்றவள், “பேர் இல்லை. ஆனால் அரைமணி முன்னால ஒரு பைக் ஆக்ஸிடென்ட் ஆன பெண், மேல இரண்டாவது மாடி ICU 4” என்றாள்.

ஒரே தாவாக இரண்டாவது மாடியில் இருந்தான், ICU முன்னால் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்திருந்த பெண் சட்டென்று எழுந்து நின்றாள். அவளுக்கும் ஏறக்குறைய மங்கை வயசுதான் இருக்கும், படு ஸ்மார்ட்டாக ஆக இருந்தாள்.நேர்த்தியான உடை.

“நீங்க தீபாவா…?”

“நீங்க யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?”

“நான்..நான்.. இங்க அட்மிட் ஆயிருக்கும் மங்கையின் புருஷன் .இளங்கோ!”

“என்னக் கேக்காம நீங்க எப்படி அவளை இந்த ஆஸ்பத்திரியில் சேக்கலாம்?”

“இளங்கோ, நா கூட ஒரு நிமிஷம் யோசிச்சேன். கூட்டத்தில இருக்கறவுங்க சொல்லும்போது! அவரு சண்ட போடறதுல மும்மரமாக இருக்காரு.காதிலேயே வாங்கமாட்ராரு’ன்னு. இப்போ புரியுது இளங்கோ. இந்த வினாடி கூட சாதாரணமா யாருமே கேக்கிற கேள்வி. ‘எம் பெண்டாட்டிக்கு என்ன ஆச்சு… எப்பிடி இருக்கா?’. இந்தக் கேள்வி உங்க வாயிலிருந்து வரும்னு எதிர்பார்த்தேன். சாரி இளங்கோ, ரொம்பவே ஏமாற்றமா இருக்கு நீங்க நடந்துக்கிற விதம்…”

இளங்கோவுக்கு அப்போதுதான் உறைத்தது.

“மேடம், மங்கை..என் மங்கைக்கு என்ன ஆச்சு?”

குமுறி குமுறி அழத்தொடங்கினான்.

“இளங்கோ…பயப்படாதீங்க. மூளைக்குள்ள அடிபட்டு ரத்தம் கசிஞ்சிட்டிருக்கு. நல்லவேளை சரியான சமயத்தில வந்ததால் உயிருக்கு எந்தவித ஆபத்துமில்லை. சிகிச்சை போயிட்டிருக்கு. உக்காருங்க…உங்க கிட்ட கொஞ்சம் பேசணும்”.

இளங்கோ மௌனமாய் அவளுடைய பக்கத்தில் உட்கார்ந்தான். தீபா அவனுடைய கையைப் பிடித்துக் கொண்டாள்.

“இளங்கோ, நா உங்க கிட்ட சாரி எல்லாம் கேக்க மாட்டேன். ஏன்னா நான் உங்கள மாதிரி உணர்ச்சிகளுக்கு அடிமையாகிற ஆள் இல்லை. சரியான நேரத்தில சரியான முடிவெடுக்க என்னை ரொம்ப நாள் முன்னாலேயே தயார் பண்ணிட்டேன். அதுவுமே வாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த ஒரு பாடம்தான். ஒரு மறக்க முடியாத கசப்பான அனுபவம் கற்றுத் தந்த பாடம்”

அதற்குள் கதவைத் திறந்து கொண்டு டாக்டர் ஒருவர் வெளியில் வந்தார்.

“யெஸ் தீபா, பேஷன்ட்டோட உறவினர் யாராவது?”

“டாக்டர், அவங்க புருஷனே வந்திருக்காரு”

“இரண்டு பேரும், தயவுசெய்து என்னுடைய அறைக்கு வாங்க”

“வாங்க இளங்கோ”

“வாங்க. உக்காருங்க மிஸ்.தீபா. நீங்களும் தான்.”

“சரியான நேரத்தில உங்க மனைவிய இங்க கொண்டு வரலைனா இப்போ அவுங்களை நீங்க இழந்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் மிஸ்டர்..”

“இளங்கோ”

“யெஸ் இளங்கோ”

“பேஷன்ட் பேர் கூட எங்களுக்கு தெரியாது”

“மங்கை”

“ம்ம் ம்ம்..மங்கை..”

“மிஸ்டர் இளங்கோ. இவுங்க உங்க மனைவியை சரியான சமயத்தில இங்க கொண்டுவரலைன்னா அவுங்களுக்கு என்ன வேணா ஆயிருக்கலாம். அந்த சரியான நேரத்துக்கு பேர் என்ன தெரியுமா? Golden hour. அடிபட்ட முதல் ஒரு மணி நேரம் பொன்னைப் போல மதிப்பு மிக்கது. அதற்குள் ஆஸ்பத்திரியில் இருக்க வேண்டும். அதை செய்ய முடிந்தால் டாக்டருக்கும் அடிபட்டவருக்கும் அதைவிட பெரிய உதவி எதுவுமேயில்லை. தீபா அதைத்தான் செஞ்சிருக்காங்க. உங்க மனைவி மட்டுமில்ல இளங்கோ. இவுங்க காப்பாத்தி இருக்கும் ஆட்கள் இருபதுக்கும் மேல. இவுங்க அணிந்திருக்கும் அடையாள அட்டையைப்
பாத்தீங்களா?”

இளங்கோ அப்போதுதான் கவனித்தான்.‘தூங்கா விளக்கு’ என்று எழுதியிருந்தது..

“மிஸ்.தீபா. நீங்களே அதைப்பத்தி அவர்கிட்ட சொல்லுங்களேன். எனக்கு பத்து நிமிஷ வேலையிருக்கு”

டாக்டர் ஜேம்ஸ், ஆஸ்பத்திரியின் Chief Neurosurgeon எழுந்து வெளியே போனார்.

“தீபா, என்ன மன்னிச்சிடுங்க, எனக்கே என் மேல ரொம்ப வெறுப்பா இருக்கு. நீங்க செய்த இந்த உதவி என்ன சொல்றதுன்னே தெரியலை”

“இளங்கோ, நிறைய பேர் இதோட முக்கியத்துவம் தெரியாமல்தான் இப்படி கவனக்குறைவாய் இருக்கோம்னு எனக்கு தோணுது. தூங்கா விளக்குன்னா என்ன அர்த்தம் தெரியுமா, அணையும் நிலைல இருக்கிற ஒரு ஜீவனை ஒரு உயிரை பிடித்து வைத்துக் கொள்ளும் சக்தி அதற்கு உண்டு. தூங்காமல் எரிந்து கொண்டே இருக்கும். இந்த அமைப்பு திடீரென்று ஏதோ ஒரு நாள் உருவானதில்லை இதுக்கு பின்னாடி ஒரு கதையே இருக்கு, சோகக் கதை. என் கதை. கேக்க உங்களுக்கு பொறுமை இருந்தால், சொல்ல நான் தயார்”

“தயவுசெய்து சொல்லுங்க தீபா”

***

“இது நடந்து பத்து வருஷம் இருக்கும். முத நாள் நல்ல மழை.தெருவில இன்னும் ஈரம். அன்னைக்கு என்னோடே B.Com. கடைசி பரீட்சை.அப்பா வீட்டுக்கு போற வழில கோவிலுக்கு போலாம்னாரு. பைக்ல மருதீஸ்வரர் கோவிலுக்கு போய்ட்டிருந்தோம்.பின்னாடி வந்த கார் வேகமா வந்ததில ஒதுங்க முடியாம. எங்க வண்டிய இடிச்சிட்டு போய்க்கிட்டே இருந்தது. அப்பா அப்பிடியே தடுமாறி மீடியன்ல மோதி கீழ விழுந்ததில கல்லுல தல அடிபட்டு ரத்தமா கொட்டுது. ஹெல்மெட் வேற போடல. என்னால எந்திரிக்கவே முடியல. கால அசைக்கக் கூட முடியல. கத்தி கத்தி கூப்பிட்டும் ஒருத்தர் கூட நிக்கல. கண்முன்னாடி அப்பா துடித்தது அரைமணிக்குள்ள எல்லாமே முடிஞ்சு போச்சு. அதுக்கப்புறம் என்னோடே ஆசை, கனவு எல்லாம் குழி தோண்டி புதச்சிட்டு அப்பாவோட இன்ஷ்யூரன்ஸ் கம்பெனியில சேர்ந்தேன். இன்னைக்கு Zonal manager. கண்ணு முன்னாடி அந்த காட்சி… அன்னிக்கே தூங்கா விளக்கின் விதை மனசில விழுந்திடிச்சுன்னு நினைக்கிறேன். இன்னைக்கு விருட்சமாய் நிக்குது…”

***

ஒரு நர்ஸ் உள்ளே வந்தாள்…

“டாக்டர் உங்கள ICU வுக்கு வரச்சொன்னாங்க…உங்க மனைவிக்கு லேசா நினைவு திரும்பியிருக்கு”

ICU வாசலில் இளங்கோவும் தீபாவும் காத்திருந்தார்கள். வெளியில் வந்த டாக்டர்,

“இளங்கோ, உங்க மனைவி கொஞ்சம் கண்ணைத் திறந்து பாக்குறாங்க. இன்னும் முழுசா மயக்கம் தெளியல.தொந்தரவு பண்ணாம அஞ்சு நிமிஷம் பாத்துட்டு போங்க. தீபா, நீங்களும் தாராளமா போலாம்”

குழாய்களுக்கு நடுவே தெரிந்த மங்கையின் முகம் அவன் இதயத்தை பிசைந்தது.

“இளங்கோ…இளங்கோ…” மங்கையின் வாய் முணுமுணுத்தது…

குனிந்து அவள் நெற்றியில் முத்தமிட்டான்.அவளுடைய மொத்த உடம்பும் ஒரு வினாடி அதிர்ந்தது.

“மங்கை..ஸாரிடா…!!”

அவளுடைய உதட்டில் ஒரு புன்முறுவல். பத்து நிமிடம் ஒன்றும் பேசாமல் அவள் கையைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

“ஸார், இன்னும் இரண்டு மணி நேரம் கழிச்சு வாங்க. அனேகமாய் மயக்கம் தெளிஞ்சிடும்”

தீபாவும், இளங்கோவும் வெளியில் வந்தார்கள். மறுபடியும் தீபாவின் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்கலங்கினான் இளங்கோ.

“இளங்கோ, மங்கை முழுசா உங்களுக்கு கிடைச்சதுக்கு சந்தோஷப்படுங்க. மற்றதெல்லாம் மறந்திடுங்க. நான் உடனே கிளம்பணும்… அம்மாவும், தம்பியும் கவலைப்பட்டிட்டு இருப்பாங்க. நாளைக்கு காலைல ஆபீஸ் போறதுக்கு முன்னால வருவேன். உங்க கிட்ட நிறைய பேசணும். தினமும் தான் பார்க்க போறோமே. ஒண்ணு மட்டும் சொல்லணும்னு தோணுது. கோபம் என்பது எல்லா மனுஷனுக்கும் வரும். வரணும். இல்லைனா சுரணையே இல்லைன்னு அர்த்தம். ஆனானப்பட்ட எல்லாம் துறந்த முனிவர்களுக்கே கோபம் வந்ததா புராணங்கள் சொல்லுது. துர்வாசர் கோபம் நமக்கெல்லாம் தெரிஞ்சதுதானே. ஆனால் அடிக்கடி காரணமில்லாமல் வர கோபத்துக்கு மதிப்பே இல்லாம போயிரும். யார் வேணாலும் கோபப்பட உரிமை இருக்கு. அது ரொம்ப சுலபம். ஆனால் சரியான நபரிடம், சரியான அளவில், சரியான நேரத்தில், சரியான காரணத்துக்காக, சரியான முறையில் கோபம் கொள்வது என்பது அது மிகவும் கடினமானது. இதை நான் சொல்லவில்லை. பிரபல கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் கூறிய பொன் எழுத்துக்களால் பொறிக்க வேண்டிய வாசகம். நாம ஒவ்வோருத்தரும் பின்பற்ற வேண்டிய அரிய தத்துவம், Let’s try இளங்கோ”

“தீபா, உங்க கிட்ட ஒண்ணு கேக்கணும். என்னையும் உங்க அமைப்பில் சேத்துக்குவீங்களா? எனக்கு அந்த தகுதி இருக்கான்னு தெரியல”

“என்ன இளங்கோ. இப்படி கேட்டுட்டிங்க. உங்களவிட பொருத்தமானவர் யார் இருக்க முடியும். ஆனா மங்கையும் சேர்ந்து வரணும்னு ஆசைப்படறேன். முதல்ல அவுங்களை கவனியுங்க, மத்ததெல்லாம் அதற்கப்புறம் தான். நாளைக்கு பார்ப்போம்…”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *