பொண்ணு பிடிச்சிருக்கு

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 26, 2013
பார்வையிட்டோர்: 10,870 
 
 

அந்தப் பெண்ணை கோவிலில் பார்த்த போதே ராஜேஷ் தீர்மானித்து விட்டான் இவள்தான் தனக்குப் பொருத்தனமாவள் என்று. ரொம்ப நாளாகவே, திருமணமே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தவன் இப்படிச் சொன்னதும் குமரேசனுக்கும் பார்வதிக்கும் ஒரு வகையில் நிம்மதி. இருந்தாலும் பொண்ணு யாரோ ? எப்படியோ ?…. என்று குழப்பத்தில் இருந்தார்கள் அடுத்த வாரம் அந்தப் பெண்ணை அதே கோவிலில் ராஜேஷ் காட்டிய போது அவர்களும் தீர்மானித்து விட்டார்கள் இவள்தான் தங்கள் மருமகள் என்று.

உள் காய்ச்சல்2lகுமரேசன் விசாரித்துப் பார்த்ததில் அந்தப் பெண்ணின் அப்பா ரயில்வேயில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். அம்மா டீச்சராக இருக்கிறார் வீட்டில் இரண்டு பெண்கள் மிகவும் நல்ல குடும்பம் என்பதைத் தெரிந்து கொண்டார். தன்னுடன் வேலை பார்த்த சபேசன் அந்தக் குடும்பத்துக்கு தூரத்து உறவு என்றதும் அவரிடமே எல்லாவற்றையும் விசாரித்தபின் அவர் மூலமே தூது விட்டார்.

சபேசன் போன் செய்து விஷயத்தைச் சொன்னவுடன் மணிவேலுக்கும் பரிமளாவுக்கும் என்ன செய்வது என்றே புரியவில்லை. மூத்த பெண் சித்ரா இப்படி இருக்கும் போது இளைவளுக்கு எப்படி ? ஆனால் சின்னவளுக்கும் 22 வயதாகிறதே ? ஏதாவது வழி செய்துதானே ஆக வேண்டும் ? விஷயத்தைக் கேட்டவுடன் நந்திதா தீர்மானமாக மறுத்து விட்டாள். முதல்ல அக்காவுக்கு ஒரு வழியைப் பார்த்துட்டு அப்புறம் எனக்கு வாங்க என்று உறுதியாக இருந்தாள்.

மூத்த பெண் சித்ரா பாவம். கல்யாணமான இரண்டு மாதத்திற்குள் புருஷனை விபத்தில் பறி கொடுத்துவிட்டு வீட்டோடு வந்தவள்தான். எப்படி இருந்த பெண் ? 24 வயதில் ஒளியிழந்து வாழ்க்கையே இருண்டு போய் உட்கார்ந்திருக்கிறாள். மூன்று பேரும் கலந்து பேசி ஒரே முடிவுக்கு வந்தார்கள். சபேசனுக்கு போன் அடித்து வேண்டாம் என்று சொல்லிவிடலாம்.

கிச்சனில் சமைத்துக் கொண்டே அந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டு இருந்த சித்ரா வேகமாக வெளியே வந்தாள். ஏம்பா ! என்னைய நிம்மதியாவே இருக்க விட மாட்டிங்களா ? நான் இங்க வந்து உங்களுக்கு பாரமா இருக்கிறது போதாதுண்ணு வீட்டில ஒரு நல்ல காரியத்துக்கும் நான் தான் தடையா இருக்கணுமா ? என் வாழ்க்கைதான் இப்படி ஆயிடுச்சுன்னா தங்கச்சி வாழ்க்கைக்கும் நான் தான் முட்டுக்கட்டையா ? நீங்க மூணு பேருமே என்னாலெதான் நிம்மதி இல்லாம இருக்கீங்கன்னு நெனச்சா எனக்கு எப்படிப்பா நிம்மதி கிடைக்கும் ? என்று பொரிந்து தள்ளினாள்.

இல்லம்மா …. என்ற அப்பாவை மறித்து சித்ரா சொன்னாள் ” அப்பா ! என் மனசுக்கு நிம்மதி வேணும்னு நீங்க நினச்சீங்கன்னா சபேசன் மாமாவுக்கு உடனே போன் பண்ணி பொண்ணு பாக்க வரச்சொல்லுங்க. தங்கச்சி நல்ல இடத்துல வாக்கப் பட்டு சந்தோஷமா இருந்தா அவளுக்கு மட்டுமில்லப்பா நம்ம எல்லோருக்கும் சந்தோஷந்தானேப்பா நம்ம எல்லோருடைய பாரமும் குறையும்பா” என்றாள் நிதானமாக.

அக்கா ! என்று தழுதழுத்த நந்திதாவின் கைகளைப் பிடித்து ” அது அது நடக்க வேண்டிய நேரத்திலே நடக்கணும்மா. என்னப் பத்தி கவலைப்படாதே ! கடவுள் எல்லாத்தையும் பாத்துக்குவாரு. எல்லாத்துக்கும் ஏதாவது ஒரு வழி வச்சிருப்பாரு பாரேன். போய் குளிச்சிட்டு டிரஸ் பண்ணு போ ! என்றாள்.

பரிமளாவோ, கடவுளே ! இவ்வளவு நல்ல பொண்ணை இப்படி ஆக்கி வச்சிருக்கியே ? என்று மனதிற்குள் புழுங்கியபடி கண்ணீரை அடக்க முடியாமல் அடுப்படிக்குள் புகுந்து கொண்டாள்.

சித்ரா பரபரப்பானாள். அம்மா ! இந்த ஹாலை நான் கொஞ்சம் ஒழுங்கு படித்திடறேன். நீ வெளியே போய் ஸ்வீட்டெல்லாம் வாங்காதே ! நான் கேரட் அல்வாவும், பால் கொழுக்கட்டையும் பண்ணுறேன். வெங்காய பஜ்ஜி பண்ணிடலாம். பாலை முன்னமே காச்சி வச்சிரும்மா ! அவங்க அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுவாங்க.

சரியாக ஐந்து மணிக்கெல்லாம் ஒரு கார் வந்து நின்றது. குமரேசன், பார்வதி, ராஜேஷ் மூவரும் இறங்கி உள்ளே வந்தார்கள். பெட் ரூமில் நெட்லான் மறைவிலிருந்து சித்ரா பார்த்தாள். தங்கைக்கு ஏற்ற மாப்பிள்ளைதான் என்று சந்தோஷப் பட்டாள். தப்பித் தவறி அவர்கள் கண்ணில் பட்டுவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

உள்ளே வந்து உட்கார்ந்து பரஸ்பர அறிமுகம் முடிந்ததும் மணிவேல் பரிமளாவிடம் “பொண்ணுகிட்ட காபி குடுத்து அனுப்புமா” என்றார். குமரேசனோ “அதெல்லாம் வேண்டாம் டென்ஷன்ல இருக்க பொண்ணு கையிலே காபித் தட்டெல்லாம் கொடுத்தனுப்ப வேண்டாம். சும்மா வந்து உட்காரச் சொல்லுங்க போதும்” என்றார்.

நந்திதா நீல நிறப் பட்டுப் புடவையில் உள்ளே வந்து வணக்கம் சொன்னாள். உட்காரும்மா ! இந்த வருஷந்தான் காலேஜ் முடிச்சயாமா ? சபேசன் சொன்னார்” என்று சில கேள்விகளைக் கேட்டு விட்டு சும்மாவே உட்கார்ந்திருந்தனர். குமரேசன், மீண்டும் “பொண்ணை அனுப்புங்களேன் பாத்துட்டுப் போயிடுறோம்” என்றார். மணிவேலும், பரிமளாவும் புரியாமல் விழித்தார்கள். பார்வதி சொன்னார் “நாங்க மூத்தவ சித்ராவைத்தானே பாக்க வந்திருக்கோம். அனுப்புங்க பாத்துட்டுப் போறோம்” என்றனர்.

அங்கே இருந்த மூன்று பேருமே பேசுவதற்கு வார்த்தை இல்லாமல் தடுமாறினார்கள். இனம் புரியாத மகிழ்ச்சியும், ஒரு வித குழப்பமும் மனதிற்குள் மாறி மாறி வந்து அலையடித்தன. “சித்ராவைப் பற்றி உங்களுக்குத் தெரியுமில்லை ? …. என்று ஆரம்பித்த மணிவேலை, குமரேசன் இடை மறித்தார். உங்க பெண்ணைப் பற்றிய முழு விவரமும் தெரிந்த பிறகு நாங்கள் மூன்று பேரும் பேசி முடிவெடுத்துதான் பொண்ணு பார்க்க வந்திருக்கோம் என்றார்.

சந்தோஷத்தில் என்ன செய்வதென்று புரியாமல் கடவுளே ! கடவுளே ! ஏதாவது நல்லது நடக்கணுமே ! என்று வேண்டிக் கொண்டே பரிமளா பெட்ரூமுக்கு ஓட்டமும் நடையுமாகப் போனாள். பெட்ரூமில் இருந்தே ஹாலில் நடந்த உரையாடல்களைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ராவும் ஒரு வித அதிர்ச்சியில் இருந்தாள்.

சித்ரா ! சீக்கிரம் ஒரு நல்ல புடவையைக் கட்டிட்டு வாம்மா அவங்க உன்னைத்தான் பாக்க வந்திருக்காங்க ” என்றாள் பரிமளா

அம்மா ! எனக்கு வேண்டாம். நான் உங்க கூடவே இருந்துடறேன் “ என்றாள் சித்ரா.

பரிமளாவோ பதற்றத்தில் ” சித்ரா ! சொல்றதைக் கேளும்மா ! கடவுளே பாத்து அனுப்பிச்சிருக்காரு. ஒரு நல்ல புடவையைக் கட்டிட்டு வாம்மா ! அவங்களாம் வெயிட் பண்றாங்க ! என்று கெஞ்சினார்.

அம்மா ! நந்திதாவுக்கே பாத்து முடிச்சுடுங்கம்மா ! எனக்கு வேண்டாம்மா ! இது ஒத்து வராது” என்றாள் சித்ரா கண்ணீருடன்.

அக்கா ! அக்கா ! சொல்றதைக் கேளுக்கா ! ப்ளீஸ் ! எனக்காக வாக்கா ! என்று நந்திதாவும் கெஞ்சிக் கொண்டே உள்ளே ஓடி வந்து சித்ராவின் கைகளைப் பிடித்தாள். நந்திதாவின் பின்னாலேயே பார்வதியும் வந்தாள்.

“தங்கச்சிக்கு பாத்த வரனை எப்படிம்மா திடீர்னு அக்காவுக்கு மாத்தறே” என்று அம்மாவிடம் பாய்ந்தாள் சித்ரா ?

இப்போது பார்வதி சிரித்துக் கொண்டே கேட்டார் ” ஏம்மா ! அக்காவைப் பாக்கணும்னு வந்த எங்களுக்கு நீ மட்டும் தங்கச்சியைக் காட்டலாமா ? என்றவுடன் மௌனமானாள்.

இது ஒத்து வராது ! பின்னாடி பிரச்னை வரும் ! நான் இப்படியே இருந்துடறேன் என்று பழைய பல்லவியையே மீண்டும் பாடினாள் சித்ரா.

பார்வதி மீண்டும் பேசினார் ” சித்ரா ! என் பையன் உன்னை முத முதல்ல பாத்தப்ப நீ கல்யாணம் ஆகாத பொண்ணுன்னு நெனச்சுதான் பாத்தான். நாங்களும் கூட அப்படி நெனச்சுத்தான் பார்த்தோம். அப்பவே எங்க எல்லாருக்கும் உன்னை பிடிச்சுப் போச்சு. உன் மேல ஏதோ பரிதாபப் பட்டோ, இரக்கப்பட்டோ நாங்க இந்த முடிவை எடுக்கலை. உன்னை முழுமையா பிடிச்சதுனாலதான் பொண்ணு கேட்க முடிவு செஞ்சோம். அப்புறமா உன்னைப் பத்தி சபேசன் சார் மூலமா தெரிஞ்சதுக்கப்புறமும் உன் மேல இருந்த விருப்பமோ அபிமானமோ எங்களுக்கு கொஞ்சம் கூடக் குறையல.

பார்வதி மேலும் சொன்னார் “ ரொம்ப நாளா கல்யாணமே வேண்டான்னு இருந்த என் பையன் தனக்கு இப்படி ஒரு பொண்ணுதான் வேணும்னு கேட்டதாலே எங்க வீட்டுல கெஞ்சிக்கிட்டிருக்கோம். ரொம்ப நாளா இருண்டு போயிருந்த தன் பொண்ணுக்கு இப்படி ஒரு வெளிச்சம்தான் வேணும்னு உன் வீட்டில கெஞ்சிக்கிட்டிருக்காங்க ! ரெண்டு வீட்டையும் ஏமாத்திடாதம்மா “ என்றார் ஏக்கத்துடன்.

அமைதியாக தலையைக் குனிந்து கொண்டிருந்த சித்ராவின் முகத்தை உயர்த்தி ” என் வீட்டுக்கு விளக்கேத்த வருவியாம்மா ? என்று கேட்ட போது பொங்கி வந்த கண்ணிருடன் பார்வதியின் தோளில் சாய்ந்தாள் சித்ரா.

குழந்தையைப் போன்ற குதூகலத்துடன் ஹாலுக்கு ஓடினாள் நந்திதா.

Print Friendly, PDF & Email

1 thought on “பொண்ணு பிடிச்சிருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *