பொங்கி அடங்கிய சலனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: September 28, 2017
பார்வையிட்டோர்: 6,215 
 

தலையை சிலுப்பிக்கொண்டேன், கொஞ்சம் எண்ணெய் எடுத்து இரு கைகளிலும் தேய்த்து தலை முடிக்குள் விரலை நுழைத்து மெல்ல தலையை நீவி விடும்போது கண்கள் மெல்ல சொக்கியது. கண்ணாடி முன்னால் நின்று பார்த்தேன்.நாற்பது வயதாகியது போல தோன்றவில்லை, ஒரிரு நரை முடிகள் மட்டும் நெற்றியின் ஓரங்களில் தென்பட்டது, அது ஒன்றும் வயதானவனாக காட்டவில்லை. தள்ளி நின்று பார்த்தேன், நன்றாகத்தான் இருக்கிறேன், அகல்யா என்னிடம் பழகுவதற்கு என்னுடைய தோற்றம் கூட காரணமாக இருக்கலாம், முகத்தில் புன்னகையை வரவழைத்துக்கொண்டு கண்ணாடி முன் நின்று மீண்டும் ஒரு முறை அழகு பார்த்தேன்.

“டாடி” மகள் என் அருகில் வந்து நின்று அவளும் கண்ணாடி முன் நின்று பார்த்தாள். “டாடி இப்பவெல்லாம் அடிக்கடி கண்ணாடி முன்னாடி நிக்கற! ரொம்ப அழகாத்தான் இருக்கே, என்று முகத்தை பழிப்பது போல் காட்டினாள்.மனம் சற்று தடுமாறியது. சும்மாதாண்டா பார்த்தேன்,சமாளித்து, சரி அம்மச்சி டிபன் எல்லாம் எடுத்து வச்சிடுச்சா பாரு, அவளை அனுப்ப முயற்சி செய்தேன், அம்மச்சி அப்பவே டிபன் எல்லாம் எடுத்து டேபிள் மேல எடுத்து வச்சாச்சு,ராமு தான் இன்னும் ரெடியாகல, உன்னை சாப்பிடறதுக்கு கூப்பிடத்தான் வந்தேன், நீ உள்ளே போய் ரொம்ப நேரமாச்சேன்னுதான் வந்தேன், நீ என்னடான்னா கண்ணாடி முன்னு நின்னு அழகு பார்த்துட்டு இருக்கறே, ஏழாவது படிக்கும் பெண் பெரிய மனுசியாய் பேசுவது எனக்கு இப்பொழுது எரிச்சலாய் இருந்தது.இவர்களுடைய அம்மா போன பின்னால் இவர்கள் வேலையை தானே செய்து கொள்வதால் வாய் கொஞ்சம் அதிகமாகி விட்டது, நான்காவது படிக்கும் ராமு இப்பொழுதே பொ¢ய மனுசனாய் பேசுகிறான், எல்லாம் நான் கொடுக்கும் இடம், பல்லை கடித்தாவாறு வெளியே வந்தவன், ராமு “கம் ·பாஸ்ட்” என்று சொல்லி டேபிளில் உட்கார்ந்தேன்.

மாமியார் அமைதியாய் மூவர் தட்டிலும் இட்டிலியை எடுத்து வைத்து என்ன ஊற்ற? என்று முகத்தை பார்க்க எனக்கு அப்பொழுது கொஞ்சம் எரிச்சல் என்றாலும் பல்லை கடித்துக்கொண்டு சட்னி என்றேன். தட்டில் சட்னியை வைத்துவிட்டு குழந்தைகளை கவனிக்க சென்று விட்டார். ராமு அம்மச்சியிடம் ஊட்டி விட சொன்னான், அவர்களும் இட்டிலியை கொஞ்சம் எடுத்து அவன் வாயில் ஊட்ட இவன் வாயில் வாங்கிக்கொண்டு ஏதோ சொல்ல அவர்கள் மூவரும் சிரித்தனர்.பார்த்துக்கொண்டிருந்த எனக்கு கோபம் வந்தது,ராமு என்ன பழக்கம் இது “உனக்கு வயசாகலே”, நீயே எடுத்து சாப்பிடனும்னு தோணாதா? என் குரலில் இருந்த காரம் மூவரையும் சற்று திகைக்க வைத்தது.அதற்குப்பின் அவர்கள் எதுவும் பேசிக்கொள்ளவில்லை, மூவரும் மெளனமாய் சாப்பிட்டனர்.”உனக்கு வயசாகலே” இந்த வார்த்தை எனக்கும்தானே என்று மனது சொன்னதை ஒதுக்கித்தள்ளினேன்.

அலுவலகத்தில் உட்கார்ந்தவன் பார்வை அடிக்கடி அகல்யாவின் டேபிளின் மேலே சென்றது, ஏன் இன்னும் வரவில்லை, ஏதாவது உடம்பு சரியில்லையா, மனது பரபரத்தது, யாரிடம் கேட்பது,ஏதாவது சாக்கில் அவளை பற்றி விசாரிக்க வேண்டும், யோசித்தேன். அலுவலக உதவியாளன் குமாரசுவாமி செல்வது கண்ணில் பட்டது, “இந்தா குமாரசுவாமி, கொஞ்சம் இந்த பேப்பரை நம்ம அகல்யா டேபிள் மேல வச்சிடுங்க, அவங்க வந்து பார்த்து கையெழுத்து போட்டு ஹெட் ஆபிசுக்கு அனுப்பிச்சுடுவாங்க என்று ஒரு பேப்பரை நீட்டினேன். “சார் இன்னைக்கு அகல்யா மேடம் வரமாட்டாங்க” உடம்பு சரியில்லையின்னு லீவு போட்டிருக்காங்க.விசயம் கிடைத்துவிட்டது, அகல்யாவுக்கு என்ன? மனதில் கவலை வந்து சூழ்ந்துவிட்டது.

அகல்யாவின் நினைவால் மாமியார் கட்டிக்கொடுத்த சாப்பாடு. வேண்டா வெறுப்பாக இருந்தது. திறந்தால், சாம்பாரின் மணம் கம கமத்தது, கூடவே முட்டைப்பொறியல், சிறிய பாட்டிலில் ரசம்,தயிர், என வகையாக பிரித்து வைத்திருந்தது. எனக்கு சாப்பிட மனம் வரவில்லை, மனம் அகல்யாவுக்கு என்ன என்று அடித்துக்கொண்டது.”சாமினாதன் சார்” என்ன உங்க வீட்டுல சாம்பாரா” சும்மா கும்முனு வாசம் வருது” உங்க மாமியார் கைவண்ணமா ‘கொடுத்து வச்சவங்க சார் !என்று பக்கத்து சீட் பாலகுரு அருகில் வந்து பேசும்போதுதான் உணர்வு வந்த்து, படக்கென விழித்தவன் போல மெல்ல சிரித்து வைத்தேன். என்ன ஆயிற்று எனக்கு? ஒரு மாசமிருக்குமா அகல்யாவிடம் பழகி, அதற்குள் அப்படி என்ன ஈர்ப்பு அவளிடம்?

மனைவி இறந்து மூன்று வருடங்கள்தான் ஆகிறது, அவளிடம் காதல் கொண்டு விட்டேனா? அவள் வயது என்ன, என் வயது என்ன? இருந்தால் இருபத்தி ஐந்து அல்லது ஆறு இருக்கும், அவள் மீது கொண்டுள்ளது காதல் என்றால் என் நிலைமை என்ன வென்று அவளுக்கு தெரியுமா?மனைவியை இழந்து இரு குழந்தைகளுடன்,மாமியார் உதவியால் எந்த பிரச்சினையில்லாமல் ஒடிக்கொண்டிருக்கிறேன். அப்படி இருக்கையில் அந்த பெண்ணுக்காக இந்த மனம் ஏன் அடித்துக்கொள்கிறது. மாலை வண்டியை அகல்யாவின் வீட்டு முன் நிறுத்தியவன், தடுமாறினேன், என்ன சொல்லி உங்களை பார்ப்பதாக வந்தேன் என்று சொல்வது, இந்த வழியாக வந்தேன், அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு போகலாம் என்று வந்தேன் என்று சொல்லலாம், முடிவு செய்தவன் மெல்ல வீட்டு வாசல் கதவை தட்டினேன். கதவு திறந்துதான் இருக்கிறது உள்ளே வரலாம் என்று குரல் கேட்டது, மெல்ல கதவை திறந்து உள்ளே வந்தேன்.

உள்ளே அம்மா, அப்பாவாக இருக்கவேண்டும், நடுவில் அகல்யா உட்கார்ந்திருந்தாள், அருகே அவளைப்போல சாயல் கொண்ட ஒரு பெண் அமர்ந்திருந்தாள்,அவள் சகோதா¢யாய் இருக்க வேண்டும்,”வாங்க சாமினாதன் சார்” என்ன அதிசயம் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க, எழுந்து வந்தவள், கைகூப்பி வணக்கம் சொல்லி, திரும்பி அப்பா, இவர் எங்க ஆபிசுல என் கூட வேலை செய்யறவரு, ரொம்ப நல்ல மாதிரி, எனக்கு எதுவேணும்னாலும் உடனே வந்து உதவி செய்வாரு, என்று மூச்சு விடாமல் பேசினாள். அதெல்லாம் ஒண்ணுமில்ல சார் இவங்க கொஞ்சம் அதிகமாக சொல்றாங்க, மெல்ல சொன்னேன்.சாரி நிக்க வச்சுட்டே பேசிட்டிருக்கேன் முதல்ல் உட்காருங்க சார், என்றவள் மறுபடியும் ஒரு சாரி எங்க குடும்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தறேன், இவங்க என் அப்பா, ரிட்டையடு மிலிட்டரி, அம்மா ஹவுஸ் ஓனர்,இவ என் தங்கை, ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ்ல பைனல் இயர் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேசன் படிக்கிறா, என்றவள் சார் காப்பி, இல்ல டீ யா என்று கேட்டாள். அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்,சும்மா இந்த வழியாக வந்தேன் அப்படியே உங்களையும் பார்த்துவிட்டு.. என் குரல் தயங்கியது. ஓ தேங்க் யூ சார், இன்னைக்கு நீங்க எங்க வீட்டுல சாப்பிட்டுட்டுதான் போகணும், எங்கம்மா கையால சாப்பிட்டீங்கன்னா ஆயுசு பூரா மறக்க மாட்டீங்க, சொன்னவளை அவள் அம்மா வெட்கத்துடன் சார் இவ இப்படித்தான் எதையாவது சொல்வாள், என்றவள் ஏதேனும் கொண்டு வர சமையலறைக்குள் நுழைந்தாள்.அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம் என்றவனை அவள் அப்பா உட்காருங்க சார் என்று உட்கார வைத்து காப்பி பலகாரங்களை முன்னால் கொண்டு வந்து வைத்தனர், எனக்கு சங்கடமாகிவிட்டது சார் நீங்க எல்லாம் எடுத்துக்குங்க, நான் மட்டும் சாப்பிட்டா எனக்கு வயிறு வலிக்கும் என்று ஒரு ஜோக்கை எடுத்து விட்டேன். எனக்கே ஆச்சரியமாக இருந்த்து, எனக்கு கூட நகைச்சுவையெல்லாம் வருமா என்று, அவர்களும் எந்த விகல்பமுமில்லாமல் என் தட்டிலிருந்து ஆளுக்கொரு ஸ்வீட்டை எடுத்துக்கொண்டனர்.

அகல்யாவின் வீட்டை விட்டு வெளியே வரும்போது ஏழு மணிக்கு மேல் ஆகிவிட்டது. அவர்கள் குடும்பத்தில் அனைவரும் வெளியே வந்து வழி அனுப்பினர்.மனம் இப்பொழுது இலேசானது போல் இருந்தது.முன்னர் இருந்த அந்த ஈர்ப்பு இப்பொழுது இல்லாமல் இருந்தது, நல்ல நட்பு என்பது இவர்களிடம் இருக்கிறது, நான் தான் தேவையில்லாமல் மனதை சலனப்படுத்திக்கொண்டுள்ளேன். யோசித்துப்பார்த்தேன்,இந்த ஒரு மாதத்திற்குள் என் குழந்தைகள் மீது தேவையில்லாமல் கோபப்பட்டிருக்கிறேன், அதற்கு முன்னால் என்னை என் பையனும் பெண்ணும் கிண்டல் செய்துள்ளனர், அப்பொழுதெல்லாம் வராத கோபம் இப்பொழுது வந்ததே, மாமியார், தன்னுடைய தள்ளாமையும் மீறி எனக்காக, என் குழந்தைகளுக்காக எங்களுக்கு சேவகம் செய்து கொண்டுள்ளார்களே, இவர்களையும் எடுத்தெரிந்து, அடிக்கடி இந்த ஒரு மாதத்துக்குள் பேசிவிட்டேனே, அவர்கள் கோபித்துக்கொண்டு தன் மகன் வீட்டிற்கு போயிருக்கலாமே, ஏன் செய்யவில்லை, தாயில்லா குழந்தைகள் தவித்துவிடுமே, என்ற எண்ணம் கூட இருக்கலாம். என் மகள் சொன்னது சரிதானே, இந்த ஒரு மாதத்துக்குள் எத்தனை முறை கண்ணாடி முன் நின்றிருப்பேன்.என் சலனம் அந்தப்பெண்ணுக்கு இல்லையே, நட்புடனே பழகியதை நானாக சலனப்படுத்திக்கொண்டிருந்திருக்கிறேன். நல்ல வேலை இன்றாவது புரிந்து கொண்டேன்.இனி “நான் நானாக” வேண்டும்.

நேரமாகிறது ! வீடு செல்ல வேண்டும், அங்கு அனைவரும் எனக்காக காத்திருப்பார்கள்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *