பைத்தியக்காரி

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: July 30, 2023
பார்வையிட்டோர்: 2,750 
 
 

(1988ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஏ.. சின்னத்தாயி… எம்மவ பள்ளிக்கொடத்துக்குப் போயிருக்கா… மணி நாலாவுது….வானம் இருட்டி தெரண்டுகிட்டு வருது….சித்த போயிட்டு வாரியா”

“வாரம்த்தே… இந்தா ஒரே எட்டுல போய் வாரன்” முடிந்த வரை யார் எந்த வேலையிட்டாலும் “இதோ” என்றுதான் சின்னத்தாயிடமிருந்து பதில் வரும்.

அந்த ஆலங்குளம் கிராமத்தில் சின்னத்தாயியைத் தெரியாதவர் யாருமே இருக்க முடியாது. ஒருவேளை அவள் பெயர் தெரியாத குழந்தைகள் கூடப் “பைத்தியக்காரி” என்றால் புரிந்துகொண்டு பயப்படும். அப்படிப்பட்டவள்.

இவள், விதிவசத்தால் இப்படி ஆனவள். ஆனாலும் நல்ல குணத்தில் இருக்கும் போது அனைவர்க்கும் வேலைக்காரியாய் இருப்பாள். எப்போது புத்தி பேதலிப்பாள் என்பது புரியாது. இதனாலேயே இவளை முன்வாயிலுக்கு வெளியே உட்காரவைத்து வேலைகளைத் தருவர். இவளும் அங்கேயே உட்கார்ந்து வேலைகளைச் செய்வாள்.

முன் கொசுவமும் இல்லாமல் பின் கொசுவமும் இல்லாமல் ஆயிரம் ஓட்டைகள் கொண்ட சேலையைக் கோணல்மாணலாகக் கட்டிக்கொண்டு, முதுகையும் தொடாமல் முடிச்சாய்த் தொங்கும் முடியை கோடலிக் கொண்டை போட்டு குதப்பிய சிவப்பு வாயில் வழிய வழிய நின்று கொண்டு இருப்பவளைப் பார்த்தால் சிரிப்பு வருவதற்குப் பதில் சில நேரம் அனுதாபம்தான் வரும்.

“ஏ…ஆத்தே…இந்தா ஒம்மவளைக் கட்டித் தங்கமா கூட்டியாந்துட்டேன்… நா பெறவு வாரேன்” விசுக்கென்று பொடிநடையாய்க் கிளம்புபவளைப் பண்ணையார் மனைவி, “ஏ…சின்னத்தாயீ… எங்கிட்டு போற… இங்ஙன வாயேன்…இந்த சர்வத்துலயும், வாளிலயும் கொஞ்சம் ஊர்க்கெணத்துலருந்து தண்ணி எடுத்துட்டு வாரீயா…” கட்டளை இடுமுன், பதிலாக, “ந்தா வாரம்த்தா” என்று இவளது வாயிலிருந்து வார்த்தைகள் அவளுக்கு முன் வந்து விழும்.

வாளியும் குடமுமாகப் போனவள், கால்மணி நேரத்துக்குள் இடுப்பில் குடமும், இடக்கையில் வாளியின் சுருட்டிய கயிறும் விலகிய சேலையும் வலக்கையில் வாளித் தண்ணீருமாக நடை நடப்பாள்.

குழந்தைகளைக் குளிப்பாட்டுவதிலிருந்து சமையலுக்கு காய்கறி வெட்டித் தருவது வரை அனைத்தையும் செய்வாள். அப்படித்தான் அன்றும் ராமாயி வீட்டில் நீண்ட புடலங்காயை வெட்டிக் கொண்டிருந்தாள்.

“ஏ…ஆத்தா… எங்காத்தா சடகணக்கா நீண்டுகிட்டுப் போவுதே…!” வெட்டுவதை விட்டுவிட்டு வாயில் கை வைத்து ஆச்சரியப்பட்டவளை,

“எந்தங்கச்சிக்கு நான் வடக்க மெட்ராஸ்ல மாப்ள பாத்து வச்ருக்கேன்…ரெண்டு மாத்தைல திரும்பவும் இங்கிட்டு வந்து அதுபத்திப் பேசி முடிப்பேன்” .அந்த ஊர்த் தலையாரி மகன் சொக்கராசுவின் பாச வார்த்தைகள் உலுக்கி விட்டன என்றே சொல்ல வேண்டும். அவ்வளவுதான்…

அரிவாள்மனை வாசலுக்குப் பறந்தது. வெட்டிய புடலங்காய்த் துண்டுகள் வாசலில் இட்ட கோலத்தில் பூசணிப்பூ போல் அங்குமிங்கும் குத்திட்டு நின்றன. இவள் கட்டியிருந்த நீலநிறப் பருத்திச் சேலை ஒரு கோடி பொத்தலுடன் கிழிசலாகத் தன் நிலை மாற ஆயத்தமானது; தலையை அவிழ்த்துப் போட்டுப் பிசைந்தாள் என்றுதான் சொல்லவேண்டும். இந்நிலையில் சொக்கராசு தெருவில் நிற்க,

“ஏலெய் …கௌட்டுப்பய மவனே …. நீயால எனக்கு மாப்ள பாக்கது…நீ இப்டிச் சொல்லிட்டு, பெறவு வரமாட்டல…ஒன்னய இன்னைக்குத்தான் பிடிக்க முடிஞ்சது” இவள் ஏதோ பேசிக்கொண்டே அவனை நெருங்க, ஒன்றும் புரியாவிட்டாலும் தன்னைக் காத்துக் கொள்ள அவன் ஓட, “ஜல்..ஜல்” என்று கை வளையல்களும்,கால் தண்டையும் ஏக நேரத்தில் சலசலக்க, சலசலத்த மனத்துடன் அவனைப் பின்தொடர்ந்தாள். ஓடினான்; ஓடினாள்; முடிவில் வயல்காட்டு வரப்பிலும் துரத்தினாள்; எப்படியோ, ‘டமால்’ என்று சொக்கராசு வழியில் உள்ள தரைக் கிணற்றில் விழுந்தான்.

அவனைப் போல் தானும் செய்யமுடியாதவள், “வாலெ…மேலே வராமப் போவியா…என்ன…? ஒன்ன இன்னைக்கு மொட்டையன் கோயிலுக்குப் பலி போட்டுட்றேன்…இந்தா அருவா கொண்டு வாரேன்” உறுதி கூறிவிட்டு ஊருக்குள் ஓடினாள்; அவ்வளவுதான் அனைவரும் ஓடினர்.

நேராகக் கடைத்தெருவுக்குப் போனாள்; போகும் வழியில் ஒரு வீட்டில் காயப்போட்டிருந்த ஆடவர் சட்டை ஒன்றை எடுத்து போட்டுக்கொண்டே ஓடினாள்; குழந்தைகள் அப்படி அப்படியே ஓரமாக அருகில் உள்ள வீட்டில் தஞ்சம் புகுந்தனர்; சில வீடுகள் ஏற்கெனவே சாத்தியிருந்தன. வழியில் கிடைத்த கல்லையெல்லாம் பொறுக்கிப் பொறுக்கிக் கைநிறையச் சேர்த்திருந்தாள். அவற்றில் ஒவ்வொன்றாகத் தனியாக நடந்தவர் மேல் எறிந்த வண்ணம் சென்றவள், சாயாக்கடை ஒன்றில் போய் நின்றாள்.

வாழைப்பழக் கடையுடன் ஒட்டிய அந்தக் கடையில் வாழைப்பழத்தை ஒவ்வொன்றாய்ப் பிய்த்துச் சாப்பிட்டாள். பார்த்துக்கொண்டே நின்ற கடைக்காரன் முகத்தில் ஒரு பழத்தால் ஒரு போடு போட்டாள். தோலை எல்லாம் தோள் மேல் போட்டுக் கொண்டு,

“ஏலெய்… கௌட்டுப்பயலே…. ஒரு சாயா போடுல… சீனி நெறய போட்டு ரெண்டு பிசுகட்டயும் உள்ள போட்டுத்தாலெ…” அதிகாரம் செய்தாள். பயந்தபடி எடுத்துத் தந்தவனை ஒரு ‘முறை’ முறைத்துவிட்டுச் சாப்பிட்டாள். அதைப் பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், தன் வாயில் வைத்த டம்ளரை ‘ணங்’ கென்று வைத்துவிட்டு, “கடையா இது? கருமம் பிடிச்சது”- தலையிலடித்தபடி சென்றார்.

“அந்த மனுசன் ஏன் அப்டீ..?” டம்ளரை சாயா ஆடும்படி ஆட்டி ஆட்டி ஆறவைத்தவள் கேட்க, கேட்க, யாரும் காரணத்தை விளக்கமாகச் சொல்லவில்லை. “எதயோ மறந்துட்டாராம்… ஓடுறார்” என்று ஒருவர் வலிந்து கூறியதைக் கேட்டுச் சிரித்தாள். “ஹஹ்ஹாஹ்ஹா….களுக்….” என்று சிரித்து முடித்தவள், “எங்கண்ணனப் போல” என்றாள்.

“என்ன?” என்று சத்தமிட்டு வாயால் கேட்டுப் பல் உடைத்துக்கொள்ள மனமில்லாதவர்கள் சற்று விலகிப்போய்க் கண்ணால் கேட்க, “எங்கண்ணன் முருகையா எனக்கு மாப்ளை பாக்கேன்னு சொல்லி வடக்கப் போனான். வேலை கெடச்ச பெறவும் பய வரல…வாரப்பலாம், அடுத்த மொற அடுத்த மொறன்னான்…எனக்கும் கேக்க வெக்கமா இருந்துச்சு…” சொல்லும்போது அஷ்ட கோணலில் நாணினாள்.

“பெறவு வரவேல்ல…கட்சில கடுதாசில எனக்கு கல்யாணம் ஆச்சு’ன்னு எளுதிட்டான். வருசம் இருவது ஆயாச்சு….. எனக்கு வயசு ஆயிருக்சு…!” இப்படித் தன் சோகக்கதையைக் கூறியவள், “இப்பத்தான் அவன் ஊருக்குள்ள வந்தான்… அவன தொரத்திக் கடசீல மன்னைக் கெணத்துல தள்ளிட்டு வந்துருக்கேன்….பசிச்சுது… அதான் இங்க வந்தேன்…” வீரத்துடன் கூறிய அந்த நாற்பது வயது மங்கையைப் பரிதாபத்துடன் பார்த்தனர், கதை கேட்டவர்கள்; எதுவும் சொல்லவில்லை; விலகினர்.

ஒரு மணி நேரத்துக்குள், கதை ஊரில் பரவியது. ஒரு பொம்மையாக அந்தக் கதைக்கு உருவம் தந்தனர் மக்கள். பாதிப் பேருக்குச் சொக்கராசுவைப் பற்றிப் பயம். அப்படியிருக்கும்போது அவனும் சம்மந்தப்பட்ட இந்தக் கதையைப் பற்றிப் பேசச் சற்று அஞ்சினர்.

கடையில் ஒரு பக்கத்தில் உட்கார்ந்தவள், தன் மேலாடை கலைந்ததைக் கூடக் காணாமல் அப்படியே தலை சாய்த்தாள்; தலைசாய்ந்தவள் எழுந்திருக்க எப்படியும் அரைநாள் ஆகலாம். விஷயம் தெரிந்தவர்கள் யாருக்கும் விரசத்துடன் பார்க்க மனம் துணியவில்லை.

அன்று அவளுக்கு ஓய்வுநாள். அவள் வேலைக்குச் செல்லவில்லை.

வானம் மெல்ல இருட்டியது….மேகங்கள் பலவிதக் கோலங்களில் திரண்டு வந்தன; புழுதிக் காற்று வாரி இறைத்தது; எல்லோரும் ‘உன்னைப்பிடி என்னைப்பிடி’ என்று ஓடினர். வயல் வேலையில் இருந்தவர்கள் தூக்குப்போணியைக் கூட எடுக்க நேரமின்றி ஓடி வந்தனர். மாடுகளும் கூட ஓடி வந்தன. சிறிது நேரத்தில் ‘ஜோர்’ என்று வானத்திலிருந்து மழைக் குழந்தைகள் மண்ணில் ஓடிவந்து விளையாடின.

சின்னத்தாய் தனது குடிசையில் குடிசையில் இருந்து வெளியே வந்தாள். இழுப்பு நோயில் நோய் என்று தெரியாமலே அவதிப்பட்டவள், இருமிக்கொண்டே வாசலுக்கு வந்தாள்.

அவள் வீட்டுமுன் கட்டப்பட்ட மாடு, மழையில் நனைந்து சிலிர்க்க, அதன் கன்றுக்குட்டி, தாயின் கழுத்தின் கீழ், பால் மடியின் கீழ் என்று எங்கெங்கோ ஒதுங்க இடம் பார்த்தது. அப்படி ஒதுங்கிய கன்றைத் தடவிக் கொடுத்துத் தாய்ப்பசு ஆதரித்தாலும், குட்டியை மழையிலிருந்து காக்க முடியாமல் முழுமையாகக் கண் கலங்கியது. முகத்தைத் துடைக்கச் சென்றவள் அதன் அதன் கண்ணீரைப் பார்த்துவிட்டு, கண்ணீர் வடித்தவளாய், மாட்டை அவிழ்த்தாள். “என் செல்லங்களா…. ஒங்களுக்குச் சொல்ல முடியலயேன்னு சொணங்கிப் போயி நிக்கிறீயளா…” தன் ஆதங்கத்தைக் கருணையுடன் வெளிப்படுத்தினாள்.

கன்றுக்குட்டிக்கு உடலெல்லாம் கள்ளமிலா அன்புடன் முத்தம் தந்தவள் மண்மேட்டில் உயரத்திலுள்ள தன் குடிசை வாசலில் அதையும் மாட்டையும் கூட்டிச்சென்று விட்டாள். கன்றுக்குட்டி ஒரே எட்டில் உள்ளே சென்று ஒதுங்கி, “ம்மே….” என்றபடி தொழுவமாகத் தெரிந்த குடிசையில் துள்ளித்துள்ளி வந்தது. அந்த மகிழ்ச்சியில், “டே….ய் கன்னு……நீ இப்பவே இப்டியிருக்கியே….வளந்தா என்ன ஆட்டம் போடுவே!?” தாய்க்கே உரிய பெருமையுடன் சிரிப்புடன் கேட்டாள். கேட்டவள், திடீரெனத் திரும்பிப் பார்க்க, “அடப்பாவமே! வடக்க பட்ணத்திலருந்து வந்தவக குடுத்த சோளி நனயுதே…..” மேட்டிலிருந்து கீழே இறங்க முனைந்தவள், “ம்மோவ்……!” சேறு அவளது கால்பெருவிரலை வழுக்கிவிடக் குதிகால் அதற்கு உதவாத நிலையில், கையோ அருகில் இருக்கும் மூங்கில் தூணைப் பிடிக்க மறந்திட, அவளோ சறுக்குப் பலகையில் வழுக்குவதுபோல் வழுக்கினாள்.

பிடிக்கக்கூடாத இடத்தில் உடல் ‘பிடித்து’க் கொள்ளத் தலை, தரையில் இருந்த படிக்கல்லான கருங்கல்லில் இடித்தது. விழுந்தவள்முன் தென்பட்ட எல்லாமே கிட்டத்துப் பார்வையாக இருந்து பின் தூரத்துப் பார்வையாக மாற, பசுவும்கன்றும்கூட அவ்வாறே ஆகின. நெஞ்சைப் பிடித்துக் கவ்விய இழுப்பு, மூச்சைத் தடை செய்ய…. கண்கள் மலங்க மலங்கக் கிடந்தாள். பக்கத்திலிருந்தும் மழையும் பசுவும் கன்றும் ஒன்றும் செய்ய இயலாது நிற்க, இந்த அப்பாவிக்கு யாரேனும் வருவர் என்ற நம்பிக்கையில் கண்களை வாசல் பக்கம் விட்டன.

– 1988, கண்ணாடி நினைவுகள், முதற் பதிப்பு: ஜூன் 2001, சிங்கப்பூர்.

திருமதி சீதாலட்சுமி B.A., M.A., M Phil., PGDE, Dip in Translation. திருமதி சீதாலட்சுமி தமிழ் நாட்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை, முதுகலை, நிறைநிலை ஆகிய பட்டங்கள் பெற்றவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் மொழிபெயர்ப்பியல் பட்டயம் பெற்றவர். 1990-இல் சிங்கபூருக்குக் குடிபெயர்ந்த பிறகு, தேசியக் கல்விக் கழகத்தில் பட்டத்திற்குப் பிந்திய பட்டயக்கல்வி பயின்றவர். உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்த இவர், தற்போது தேசியக் கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அண்மையில்,…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *