‘உங்கள் எதிர்காலம் உங்கள் கையில் ‘ என்றது போர்டு. பெரிய கை ரேகைப் படம். பக்கத்தில் அவன். ஒரு லென்சுடன். எதிரில் கையை நீட்டிக் கொண்டு ஒருவர்.
“.. குரு மேடு நன்கு உச்சம் பெற்று அமைந்து இருக்கிறது.. . வியாபாரத் துறையில் நல்ல முன்னேற்றம்.. அதிக லாபம்..” என்று சொல்லிக் கொண்டே போனான்.
லக்ஷ்மி கைக்குழந்தையுடன் சற்று தள்ளி நின்று வேடிக்கை பார்த்தாள்
விழித்துக் கொண்டு சிணுங்கிய குழந்தைக்கு ‘ஊம்..ஊம்..’ என்று அவள் வாய் ராகம் பாடியது.
உடல் கசகசத்தது. மனப் புழுக்கம் அதற்கு மேல். ஜோசியன் இதற்குப் பதில் சொல்வானா?
தாலி கட்டியவன் ஒரு மாதமாய் அவளுடன் பேசவில்லை. சின்ன விஷயம். சொல்லி விட்டு போன வேலையை செய்து வைக்கவில்லை. மாலையில் வந்தவன் கேட்டான். பேசாமல் மனசாட்சி உதைக்க தலை குனிந்து நின்றாள்.
அவனுக்கு முணுக்கென்றால் கோபம் வரும். வார்த்தைகள் இரையும்…ஒருமுறை.. மறுமுறை பட்டினி கிடப்பான். அன்று பேசாமல் போய் விட்டான்.
பிறகுதான் அன்று அவன் விதித்த தண்டனை புரிந்தது. ஒரு மாதமாகிறது அவளுடன் பேசி.
‘கோபமா .. எதிரே கூப்பிடு .. நன்றாகத் திட்டு. ரெண்டு அடி வை. பேசாமல் என்னைப் பலவீனப் படுத்தாதே.’ என்று கண்களால் கெஞ்சினாள்.
அவன் குறிப்பறிந்து தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குள் அந்த ஒரு மாத காலத்திலேயே உருக் குலைந்து போனாள்.
கடவுளே இந்தக் கஷ்டம் .. இந்த தண்டனை எப்போது தீரும்.. மறுபடியும் எப்போது மனம் மாறிப் பேசுவான்.. கசகசத்துப் போன ரூபாய் நோட்டுகளைப் பிரித்து நீவி விட்டாள்.
பத்தே நிமிடத்தில் எதிர்காலம் தெரிந்து கொணடவன் விலகிப் போக லக்ஷ்மி அவனெதிரே போய் நின்றாள்.
நிமிர்ந்தவன் அவளைப் பார்த்ததும் திடுக்கிட்டு போனான்.
கையை நீட்டினாள்.
“பலன் சொல்லுங்க.. புருசன் அன்பா நடந்துக்குவாரா.. வாழ்க்கை நல்லபடியா இருக்குமா.. உங்க மனைவியா வரல.. பலன் கேட்கிறவளா வந்திருக்கேன்.. பேசுங்க.. ஏதாவது பேசுங்க.. என்று குரல் உடைந்து அழ ஆரம்பித்தாள்.
மீண்டும் விழித்துக் கொண்ட கைக் குழந்தை இருவரையும் பார்த்து சிரித்தது.
– ஜனவரி 2010