பெருமிதம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: October 8, 2023
பார்வையிட்டோர்: 2,868 
 

அவரை வியப்புடன் பார்க்க ஒன்றுக்கு மேற்பட்ட பல விடயங்கள் அவரிடமிருந்தன.

நகரில் பிரபலமான கண் மருத்துவர் அவர் என்பதுதான் ஏனையவற்றை புறம் தள்ளி இப்போதும் நினைவை நிரப்புகின்றது.

வரவேற்பாளர் தன்னுடன் உரையாடிக் கொண்டிருப்பவரை விட்டுத் தன் கவனத்தை கிஞ்சித்தும் தளர்த்தாமல் – சற்று முன் கதவைத் திறந்து உட்புகுந்த எனக்கு – காத்திருக்க வேண்டிய பகுதியில் சென்று அமருமாறு கண்களால் வழி காட்டினார்.

பின் என்ன நினைத்தாரோ தெரியாது..கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கத்திலிருந்து எட்டிப்பார்த்து … அமர முன் கைளை கிருமி நாசினியால் சுத்திகரியுங்கோ… முகக் கவசத்தை தொடர்ந்தும் அணிந்திருங்கோ என்றார்.

“எனக்கு வயது 70. குளுக்கோமா என்று ஆங்கிலத்தில் சொல்ல வராது. அதனால்தான் இந்த தமிழ் மருத்துவரிடம் வந்தேன். அதற்கு கண் அழுத்த நோய் என்பது தமிழாம். இந்த அழுத்தம் கூட வாயில் வருகுதில்லை. அமுத்தம் அமுத்தம் என்றே வருகின்றது.”

வரவேற்பாளருடன் உரையாடிக் கொண்டிருப்பவரின் குரல் காத்திருப்புப் பகுதிக்குள்ளும் கேட்கின்றது.

இன்னும் இருவரைத் தவிர வேறு எவரும் காத்திருப்புப் பகுதிக்குள் இல்லை. முன்னொரு காலத்தில் ஆகக் குறைந்தது பத்துப் பேரையாவது எப்பொழுதும் அங்கு காணலாம்.அவர்களுக்குள்ளும் ஒருவராவது அறிமுக மானவராக இருப்பார்.

அல்லது அறிமுகம் ஆகும் வகையில் கிட்ட இருப்பார்.

இந்தக் கோரோனோவை நாம் தனிமைப்படுத்துகின்றோமோ இல்லையோ அது நிச்சயமாக எம்மைத் தனிமைப்படுத்து கின்றது.

பார்வைக் குறைபாடு உள்ளவர்கள் அறிந்து கொள்ள வேண்டியவை என்றிருந்த சுவரொட்டியை மூக்குக் கண்ணாடி இன்றியே கண்கள் துழாவின.

கண்ணாடியை அணிந்தவாறே திரும்பவும் நோட்டமிட தோராயமாகத் தெரிந்தவற்றின் மீது கண்கள் எவ்வித உறுத்தலுமின்றி உலவின.

1.உள்ளங்கையில் சுத்தமான தண்ணீரை ஏந்தி அதில் கண்களை வைத்து 10 முறை கண் சிமிட்டுங்கள். அதிலுள்ள தூசு அழுக்கு அழுத்த உணர்வு நீங்கி கண் புத்துணர்வு பெறும். இதை தினமும் செய்து வருவது நல்லது.

2.பார்வைத் திறனை அதிகரிக்க வெள்ளையான சுவரைப் பார்த்து தலையை அசைக்காமல் திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும்.அது போல 5 முறை பயிற்சி செய்தாலே கிட்டப்பார்வை அல்லது தூரப்பார்வை பிரச்சினை சிறிது சிறிதாகக் குறையும். இது போன்ற கண் பயிற்சிகள் பார்வைத் திறனை மேம்படுத்தும்.

3.தினமும் இருவேளையாவது உள்ளங்கைளை வைத்து கண்களைப் பொத்திக் கொண்டு கண்களை மூடியபடி இருக்க வேண்டும். கருவிழியை மட்டும் எந்தளவுக்கு முடியுமோ அந்தளவுக்கு பக்கவாட்டில் பார்க்க வேண்டும். இதுவும் ஒரு கண் பயிற்சிதான். இதனால் தசைப் பகுதியில் ஏற்பட்ட அழுத்தம் குறையும்.

இன்று நேற்றல்ல…இவற்றைத்தானே நீண்ட நெடுங்காலம் ஒழுங்காக கடைப்பிடித்து வருகின்றேன்.

மனது தனக்குத்தானே ஒரு சபாஷ் போட்டுக் கொள்கின்றது.

அடுத்த அறையின் சாத்தப்பட்ட கதவுக்குப் பின்னிருந்து சோம்பேறி கண் என்ற வார்த்தை அடிக்கடி காதுகளை சுறுசுறுப்பாக்குகின்றது.மருத்துவராகத்தான் இருக்க வேணும். யாருக்கோ விளக்கமளிக்கின்றார் போலும்.

சோம்பேறி கண் என்று கூட ஒரு வருத்தம் உண்டா?

குழந்தைகளுக்கு ஒரு கண் பலவீனமடைந்து பார்வை தெளிவில்லாமல் இருப்பின் அதுவே சோம்பேறி கண் எனப்படும். சோம்பேறிக் கண்ணுக்கும் மூளைக்குமான தொடர்பு வலுவிழந்து இருப்பதால் இரு கண்ணும் இணைந்து செயற் படாமல் பார்க்கும் பார்வை குறைவான தரத்தில் தெளிவின்றி இருக்கும். இதற்கு நன்றாக உள்ள கண் மீது கட்டுப் போடப்படும். சோம்பேறிக் கண் மூலமாக மட்டுமே பார்க்கப் பார்க்க பார்வை மேம்படும்.

மருத்துவர் மிகவும் திறமையானவர் என்பதை யாருக்காவது சொல்ல வேண்டும் போலத் தோன்றுகின்றது.

அங்கிருக்கும் மற்றவர்களுக்கும் இப்படித் தோன்றி இருக்குமோ? இருக்கும்.இருக்கும்.

உள்ளுர் வானொலி ஒன்று பழைய திரைப்பட பாடல்களை ஒலிபரப்பிக் கொண்டிருந்தது.

மனிதன் படத்திலிருந்து எம்.எல்.வசந்தகுமாரி குயிலை அழைத்துக் கொண்டிருந்தார்.

வருவார்..வருவார்..என்றே வழி பார்த்தேன். விழி சோர்ந்தேன்…

வரவேற்பாளர் கையில் படிவங்களுடன் வந்தார். என்னிலும் பார்க்க இருபது இருபத்தைந்து வயது குறைவானவராக இருக்கலாம்.

முதலிலை இந்தப் படிவத்தை நிரப்புங்கோ. உங்களைப் பற்றிய விபரங்கள் எழுத வேண்டும். இருக்கிற வருத்தங்களையும் எடுக்கிற மருந்துகளையும் எழுத மறக்க

வேண்டாம். எழுதிய பின் கண்களுக்குச் சொட்டு மருந்து விட வேண்டும்.

ஏற்கனவே வந்து எனக்கு முன் காத்திருந்தவரிடம் பின்னர் சென்றார்.

அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

விழி வேண்டும் என்று வந்தவரா? விழிக்க வேண்டும் என்று வந்தவரா? காதுக்குள் கருவி வைத்திருப்பவரா? தெரியவில்லை!

அவருக்கு முன்பாக என்ன செய்வதென்று தெரியாது ஒரு கணம் தயங்கி நின்ற வரவேற்பாளர் ஒரு முறைக்கு இரு முறை செருமிப்பார்த்தார்.

ஐம்புலன்களில் கண், காது, வாய் மூன்றில் ஒன்றேனும் சிறிதளவாவாது திறப்பதற்குரிய அறிகுறி ஏதுமில்லை.

தனது கைக்கு நோகாமல் தட்டி எழுப்பினார்.

“கண்களில் என்ன வருத்தம்? ”

“சாளேஸ்வரம்!”

“என்ன? ”

“ அதுதான் வெள்ளெழுத்து… பார்வை கொஞ்சம் மங்கல்..”

“மூக்குக் கண்ணாடி, தொடு வில்லை அல்லது விழியொட்டு வில்லை ஏதாவது பாவிப்பவரா?”

கொஞ்சம் அதிகாரம் கேள்வியிலும் – சிடுசிடுப்பு முகத்திலும் தெரிந்தது.

திடுக்கிட்டு எழுந்த அவர் தேவி என்ற பெயர் இலங்கிய மார்பை உற்றுப் பார்த்ததை ஒரு வேளை பிழையாக கருதி விட்டாரோ?

ஆரோக்கியமான கண் பார்வை உடையவர் 200 அடி தூரத்தில் உள்ளதையும் தெளிவாகப் பார்க்க முடியும். எனக்கும் கூட

அவர் ஆறு அடிக்குள் வரும்வரை தேவி என்ற பெயர் மட்டும் என் கண்களில் படவேயில்லை.

டாக்டர்… கிட்டப் பார்வைக்கு என்ன லென்ஸ்..எட்டப் பார்வைக்கு என்ன லென்ஸ்..

மீண்டும் டாக்டரின் அறைக்குள் இருந்து புதிய குரல் தெளிவாகக் கேட்கிறது.

ஓ! உள்ளே இருந்தவர்கள் வெளியேறிவிட்டதையோ.. எமது பகுதியிலிருந்த வயோதிபர் உட்புகுந்து கொண்டதையோ நான் கவனிக்கவில்லை.

கிட்டப் பார்வைக்கு குழி ஆடியும் தூரப் பார்வைக்கு குவி ஆடியும் பயன்படுத்த வேண்டும். கிட்டக் குழி தோண்டி எட்டக் குவி என்ற சொல்லடையை நினைவில் வைத்தீர்களானால் உங்கள் கேள்விக்கான பதிலை ஒருபோதும் மறக்க மாட்டீர்கள்.

டாக்டரின் தெளிவான அழகான விளக்கம் என்னுள்ளும் ஆழமாக ஊடுருவுகிறது.

கிட்டக் குழி தோண்டி எட்டக் குவி!

வாய் மெல்லமாக முணுமுணுத்துக் கொள்கின்றது.

சொட்டு மருந்துடன் மீண்டும் என்னிடம் தேவி வந்தார்.

கையில் வைத்திருந்த சிறு குப்பியை நன்கு குலுக்கியவாறே என்னைப் பார்த்து ஒவ்வாமை ஏதும் இல்லைத்தானே என்றார்.

இல்லை என நான் தலையை ஆட்டினேன்.

தலையை பின்னுக்குச் சாய்தவாறே மேலே முகட்டைப் பார்க்குமாறு கூறினார்.

மருந்தைச் சொட்டினார்.

சிலவேளை இரண்டு நிமிடங்கள் மெல்லிய எரிவிருக்கும். பயப்படத் தேவையில்லை.பின்னர் தெளிவடைந்துவிடும் என்றார்.

மறைந்தார்.

கண்கள் மூடியிருந்தாலும் மனம் மட்டும் விழித்துக் கொண்டது.

பார்வைகளில்த்தான் எத்தனை விதம்? ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை!

அறிமுகமற்றவர்களின் பார்வையில் நாமெல்லோரும் சாதாரணமானவர்கள்.

பொறாமைக்காரரின் பார்வையில் நாமனைவரும் அகந்தையாளர்கள்.

காழ்ப்புக் கொண்டோரின் பார்வையில் நாங்கள் கெட்டவர்கள்.

புரிந்து கொண்டோரின் பார்வையில் நாம் அற்புதமானவர்கள்.

நேசிப்பவர்களின் பார்வையில் நாம் தனிச்சிறப்பானவர்கள்.

சுமார் ஐந்து நிமிடங்களின் பின்னர் பார்வை தெளிவடைந்து விட்டதா எனச் சுய பரிசோதனை செய்து கொள்ள விரும்பினேன்.

அதற்காக வரவேற்பாளரை வரவழைத்து, அவரையா உற்று உற்று பார்க்க முடியும்?

அருகில் இருந்த ஆங்கில சஞ்சிகை ஒன்றின் மீது கண்கள் ஊர்ந்தன.

கண்புரை , உலர்கண் ,கருவிழிபுண் , மாறுகண் , கண்ணீர் பாதை அடைப்பு, இமைத் தொய்வு, கண் நீர் அழுத்த நோய் என அதிலிருந்த கட்டுரைகளின் தலைப்புகளை மொழி மாற்றம் செய்தது மனம்.

எனக்கு முன் வந்தவர்கள் வெளியேறிவிட மேலும் நால்வர் புதிதாக இணைந்திருந்தார்கள்.

அடுத்தது நானாகத்தானிருக்கும்.

அந்த நால்வருள்ளும் இருவர் பதின் வயதினர். காதலராக இருக்க வேண்டும். தம்முள் ஏதாவது சில்மிஷம் செய்து கொண்டே இருந்தனர். முகக் கவசம் ஒன்று ஒருவரின் வலது காதையும் மற்றவரின் இடது காதையும் பரிதாபமாக இணைத்துக் கொண்டிருந்தது. முத்தத்துக்கும் சத்தத்துக்குமாக அதுவும் அடிக்கடி தளர்ந்து போனது.

உனது கண்களை நல்லா ‘செக்’ பண்ணிப் பாருங்கள் என்று டாக்டரிடம் சொல்லப் போகின்றேன்.

ஏன்?

நான்தான் உனது கண்களுக்குள் நிற்பதாக சொல்லிக் கொள்வாயே.. அதனால்…

அவர்களின் அலாதியான பேச்சிலிருந்து ‘நச்’சென்று சில வரிகளிவை!

அவர்களிடமிருந்து டாக்டரை காப்பாற்று என்று அவசரமாக கடவுளுக்கு ‘அப்பிளிகேஷன்’ போட்டது மனது.

மற்ற இருவரும் நடுத்தர வயதினர்.

பதின் வயதின் அலப்பறையை சகிக்க முடியாமலோ கிட்டப் பார்வை காரணமாகவோ புத்தகங்களுக்குள் தங்களின் முகங்களை புதைத்திருந்தனர்.

எவ்வளவு நேரம்தான் அவர்களாலும் அப்படி இருக்க முடியும்?

கண்ணுக்கு இணையான வேறு ஐந்து சொல் நீ சொல்லு ..நான் ஐந்து சொல்கின்றேன்.

புத்தகத்துக்குள்ளிருந்து ஒலித்த ஆணின் குரல் … நயனம் , நேத்திரம் , விழி, சால் , விலோசனம் என தொடர்தது.

சற்று மௌனத்தின் பின் … அரி, முழி, அம்பகம் , கோ, மிழி, அக்கம் , திருட்டி, தாரை என அடுக்கிக் கொண்டே போன பெண் குரலை கொஞ்சம் பொறு .. கொஞ்சம் பொறு .. நீ என்ன எட்டுச் சொல்லிப் போட்டாய் என இடை மறித்தது ஆண் குரல்.

நான் டாக்டர் ஷஹானா.

உங்களுக்கு கண் புரை என்று கருதுகின்றீர்கள். அதனை குணப்படுத்த முடியும். பாதுகாப்பான சிறப்பான சிகிச்சை உண்டு.மேகம் மறைப்பது போன்ற உணர்வு தோன்றுகின்றதா? கவலையே வேண்டாம்.

சிரித்த முகம் , இனிமையான உபசரிப்பு, அன்பான தென்பான வார்த்தைகள் , கனிவான பேச்சு, பாசத்துடன் கூடிய உறவு, பெருமை இல்லா மனம் , புத்திசாலித்தனம் இப்படி பல பண்புகள்.

பிடிப்பதற்கு ஒரு நிமிஷம் போதும் என்று யார் சொல்லி வைத்தார்களோ.. அவர்கள் வாயில் சர்க்கரை போட வேண்டும்.

உங்களுக்கு குளுக்கோமா இல்லை. நீரழிவு இல்லை. வெய்யிலில் வேலை செய்வது இல்லை.வயது 75 என குறிப்பிட்டுள்ளீர்கள். 45 வயதை கடந்தவர்களுக்கு ‘கற்ராக்’ எனப்படும் கண்புரை ஏற்படுவது இயல்பு.கண் லென்ஸில் மாற்றம் ஏற்பட்டால் கண்புரை ஏற்படும். கண்புரை உள்ளவர்களின் கண்களில் உள்ள லென்ஸ் ஊடாக ஒளி செவ்வனே ஊடுருவாது.

நான் நிரப்பிக் கொடுத்த எனது சுய விபரக் கோவையை பார்வையிட்டவாறே தனது அபிப்பிராயத்தையும் கூறிக் கொண்டிருக்கும் டாக்டருக்கு முப்பது வயதுக்குள்தான் இருக்கும்.

முதலில் கண்களை பரிசோதித்துப் பார்ப்போம் என்றவாறே கண் பரிசோதிக்கும் கருவியின் ஒரு புறத்தே என்னை அமர்த்தி அதன் மறு புறத்தில் தான் அமர்ந்து கடகட வென தனது பணியினை முடித்தார்.

பார்வை திறன் பரிசோதனை, விழித் திரை பரிசோதனை, பொது ஆரோக்கிய பரிசோதனை போன்ற வற்றை இந்த மின்னணு ஒளியியல் கருவி மூலம் மேற் கொண்டிருந்தேன்.

மேலும் ஏதோ கூறியது எனக்குக் கேட்கவில்லை அல்லது விளங்கவில்லை.

மங்கலான பார்வை, ஒளியை பார்க்கும் பொழுது கண் கூசுதல் , இரட்டைப்பார்வை, வர்ணங்கள் பேதமின்மை போன்றனவற்றை சோதித்தேன்.கவனமாக கண்களை பராமரித்துக் கொள்கின்றீர்கள். அதனால் கண் தசைகள் வயதுக்கேற்ப வலுவுடன் இயங்கும் தன்மையுடன் சோர்வின்றிக் காணப்படுகின்றன. கண்களில் புரை கிடையாது.எனவே அறுவை சிகிட்சை தேவையில்லை. கடவுளுக்கு நன்றி். கண்ணாடியின் பவரை அதிகரித்தாலே பார்க்கும் திறனின் தரம் மேம்படும். உங்களால் வாகனம் ஓட்ட முடியும். வாசிக்க முடியும்.

புதிய கண்ணாடிக்கான சீட்டை எழுதித்தருகின்றேன். உங்களின் விருப்பம் போல அதனை நீங்கள் இங்கு எம்மிடமும் வாங்கலாம்.அல்லது வேறு எங்காவதும் வாங்கலாம்.இங்கு எனின் வரவேற்பாளருடன் கதையுங்கள். அவரிடமிருந்து மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்ளலாம். உங்களுக்கு பார்வை கோளாறு எதுவுமேயில்லை.

வரவேற்பாளர் தேவியுடன் கதைத்தேன். அவர் காட்டிய அச்சடித்து ஆசைகாட்டிய விதம் விதமான வடிவங்களில் எனக்குப் பிடித்தமான ஒன்றை தெரிவு செய்தேன்.

கண்ணாடியை பெறுவதற்காக அடுத்த வாரம் வருமாறு ஒரு திகதியையும் முழுப்பணமும் செலுத்தியதற்கான ரசீதையும் தந்தார் வரவேற்பாளர்.

அடுத்த வாரமும் வந்தது.அவர் குறிப்பிட்டிருந்த தினமும் வந்தது.

செல்வதற்குத் தயாராகிக் கொண்டிருக்கும் பொழுது மனதில் ஒரு சிறு பொறி – பொறையாகியது!

ஒரு மனிதனுக்கு மதிப்பைத் தருவது எது?

அவனது நல்ல பழக்கவழக்கங்கள்!

டாக்டர் ஷஹானாவும் வரவேற்பாளர் தேவியும் தத்தமது கடமையைத்தானே செய்கின்றார்கள்.

அதற்கான ஊதியமும் பெறுகின்றார்கள்.

அதில் எவ்வித சந்தேகமுமில்லை.

எனது வயதின் அடிப்படையில் வரவேற்பாளர் தேவி மகளெனின் டாக்டர் ஷஹானா பேத்தி!

டாக்டர் ஷஹானாவின் செயல்களும் வார்தைகளும் அவர் மீது தனி அபிமானத்தையும் மரியாதையையயும் மதிப்பையும் ஏற்படுத்தி இதயத்தைப் பெருமிதத்தில் நிறைத்திருந்தது.

அவர்கள் எனக்குச் செய்த சேவைக்கான நன்றியையும் அங்கீகாரத்தையும் எப்படித் தெரிவிப்பது?

சும்மா கையை விசுக்கிக் கொண்டு செல்லாமல் இருவரும் நகரில் பெறக்கூடிய உயர்ரக சொக்கலேட் பெட்டிகளுடன் சென்றேன்.

இயல்பாக கைகளை நீட்டிக் கொண்டே ‘சீ..சீ..உதெல்லாம் நாங்கள் வாங்குவதில்லை..’ என்ற வரவேற்பாளரின் உளவியலைவிட ‘எனக்கு மிகவும் பிடித்தமானது’ என்ற டாக்டரின் உளவியல் இனித்தது.

வார்த்தைதானே வாழ்க்கை.

ஒரு வார்த்தை கொல்லும். ஒரு வார்த்தை வெல்லும்.

அது வெளிவரும் விதத்தில்தான் வெற்றி இருக்கின்றது.

நினைக்கும் விஷயங்களையெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசாமல் அதை செம்மைப்படுத்தி பேசி பாருங்கள்.

வெற்றி நிச்சயம்.

– செப்டம்பர் 2021, அக்கினிக்குஞ்சு

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *