(1957ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
அகலமான ஜரிகை பார்டர் போட்ட சிவப்பு நிற மதுரைச் ‘சிந்தோடி’ தாவணியைத் தன் துணைவிக்குப் பொறுக்கி யெடுத்தபோது அப்துல் காதரின் முகமெல்லாம் மலர்ந்தது.
அதற்காக அறுபது ரூபாயை அலட்சியமாக வீசி எறிந்துவிட்டு, அதன் சரிபாதி விலையில் ஜிமிக்கி போட்ட நாகூர்ப் புடைவையைத் தன் தங்கைக்காக அவன் பேரம் செய்தபோது அவன் முகம் ஏனோ சுளித்து விட்டது! மீதியிருந்த பணத்தில் தன்னைப் பெற்றெடுத்தவள் என்ற தோஷத்தின் காரணமாக ஒரு சாதாரண ‘வாயில்’ புடை வையைத் தன் தாய்க்காக மிக்க அலுப்புடன் வாங்கிக் கொண்டான். இந்த மூன்று பொருள்களையும் ஒரே மூட்டையாகக் கட்டிக்கொண்டு பல்லாவரம் போகும் பஸ்ஸில் ஏறிக்கொண்டான். காலியாக இருந்த பக்கத்து வீட்டில் மூட்டையை வைத்துவிட்டு, நெற்றி வியர்வையை விரலினால் சுண்டிவிட்டான், பஸ் புறப்பட்டது. அப்துல் காதரின் சிந்தனை வேலை செய்யத் தொடங்கியது.
‘ரம்ஜான் குத்பா’ பெருநாள் துரிதமாக வந்துகொண்டிருந்த சமயத்தில் அப்துல் காதர் அவதிப்பட்டது அசாதாரண விஷயமல்ல. என்.ஜி.ஓ. பரம்பரையைச் சார்ந்த அவன். சொற்ப சம்பளத்தில் வீட்டை ஒருவாறு சமாளித்து வந்ததே ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகும். மதினா ‘ஹோட்டல் நாஸ்தா’வையோ காக்கா கடை கரம் ‘சாயா’ வையோ அவன் ஒரு முதல் தேதியாவது அனுபவித்ததை யாரும் பார்த்தது கிடையாது.
ஜுபைதா அவனுக்குப் பீ’வீ’யாக வந்த பிறகு அவன் நிலைமை மோசமாகிவிட்டது. தாயையும், மணமாகாத தங்கையையும் ஆதரித்து வந்த வேளையில், ‘நிக்காஹ்’ செய்து கொண்டதன் விளைவாக மூன்றாவது நபரையும் சமாளிக்கும் பொறுப்பு அவன் தலையில் சுமையாக விழ்ந்தது. நாளடைவில் வீட்டில் நிலவிய சூழ்நிலை அடியோடு மாறத் தொடங்கியது. செலவுகள் மலைபோல் குவிந்தன. எதற்கு எடுத்தாலும் காரணமின்றிச் சள்சள்ளென்று அப்துல் காதர் வீழ்வது சகஜமாகி விட்டது. அவன் குணத்திலும் வடு ஏற்பட்டதைத் தாயும் மகளும் தெரிந்து கொண்டார்கள் ‘பெண்சாதிப் பித்தத்தின் விளைவு என்று முதலில் நினைத்த அவர்கள் நாளடைவில் காலத்தின் கோலம் எம் மொகய்யத்தீனே’ என்ற பாடலின் அடியை நினைவில் கொண்டு பொறுமையுடன் காலத்தைக் கழிக்கலானார்கள்.
பெருநாள் செலவிற்காக அலைந்தபோது எதிர்பாராத இடங்களில் அப்துல் காதருக்குக் கடனாகப் பணம் கிடைத்து விட்டது. அந்தத் தொகை முழுவதையும் பெரு நாளன்று தன் பீவிமேல் கனகாபிஷேகம் செய்துவிட, அவன் துடித்ததில் நியாயம் இல்லாமல் இல்லை. புதிய மணத் தம்பதிகளுக்குள் இந்தவிதமான ‘ஷாஜஹான் ஆசைகள்’ எழுவது உலக இயல்புதானே!
ஆனால், தன் இச்சையைப் பூர்த்திசெய்ய முடியாத வாறு இரு முட்டுக் கட்டைகள் இருப்பதைக் கண்டு அப்துல் காதருக்குச் சற்று ஆத்திரம் வந்தது. ‘ஏதோ நிக்காஹ் செய்து கொண்டோம். சில மாதங்களாவது இல்லக் கிழத்தியுடன் சந்தோஷமாகத் தனியாக கழிப் போமே என்றால், இந்தப் பாழாய்ப்போன நஸீப் – தலைவிதி – இப்படிச் சதி செய்கிறதே?’ என்று எண்ணி, அநேக தடவை அவன் அங்கலாய்த்தது உண்டு. “பணம் கொஞ்சம் கிடைத்தது. நல்ல நாளன்று தன் லைலாவைச் சிங்காரித்து மனமகிழப் பார்த்து ஆனந்த வெள்ளத்தில் நீச்சலடிக்கப் பார்த்தால், கடனாக வாங்கின அந்தப் பணத்திலும் தங்கைக்கும் தாய்க்கும் பங்கு போட வேண்டுமே” என்று ஏங்கியதும் அவன் மனம் ஓலமிட்டது.
இந்தச் சூழ்நிலையிலே தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் தான் பெருநாளுக்கு முதல் நாளன்று சைனாபஜாரில் அப்துல்காதர் நடத்திய ஷாப்பிங்கைப் பற்றி முன்பே சொல்லியாயிற்றே!
ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டையைக் கடந்து விட்ட பஸ்ஸானது சைதாப்பேட்டை ஸ்டாண்டை விட்டுக் கிளம்பினதுதான் தாமதம், “கண்டக்டர். ஸ்டாப் பிளீஸ்!…அட நிறுத்தப்பா…டிரைவர்” என்று பித்துப் பிடித்தவன் போல் அலறினான் அப்துல் காதர்! ‘விஸில்’கள் பறந்தன. எல்லார் கழுத்துக்களும் வெடுக்கென்று திரும்பின. பஸ் தடாலென்று ஸ்தம்பித்து நின்றது.
“துணி மூட்டையைப் பக்கத்திலே வச்சிருந்தேன். யாரோ கிளப்பிக்கிட்டுப் போயிட்டான்!” என்று அப்துல் காதர் தழுதழுத்த குரலில் சொன்னதும், பஸ்ஸில் உட்கார்ந்திருந்தவர்கள் அனைவரும் தங்கள் தங்கள் பைகளைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார்கள்! பெண்மணிகளோ தங்கள் கழுத்துக்களையும் குழந்தைகளின் காதுகளையும் சோதித்துக்கொண்டார்கள். யாரும் அப்துல் காதரைக் கவனித்ததாகக் காணவில்லை!
“காதர் …என்னப்பா நடந்தது?” என்று அவன் தெருவில் வசிக்கும் சிவசாமி, பின் ஸீட்டில் உட்கார்ந்தபடியே பரிவுடன் விசாரித்ததும், அப்துல் காதரின் விழிகளில் நீர் ததும்பியது. நண்பனிடம் ‘கோட்டை’ விட்டதைப் பற்றிச் சொல்லி ஒரு குரல் அழுதான். ‘ரைட்’ என்று கண்டக்டரின் உத்தரவு பறக்கவே, குழப்பமும் பஸ்ஸும் ஒன்று சேர்ந்து பறக்கலாயின.
வீட்டிற்குள் காலடி வைத்ததும் அவன் விழிகள் அவன் மனைவியைத்தான் முதலில் தேடித் துழாவின. ஜுபைதா அங்கே இல்லாததைக் கண்டதும் ஏமாற்றம் அவனை வாட்டியது; நெஞ்சு கனத்தது. அறைக்குள் நுழைந்து தடாலென்று கதவைச் சாத்திவிட்டுத் தொப்பென்று கயிற்றுக் கட்டிலில் சாய்ந்தான். அவன் மனம் படாத பாடுபட்டது. கஷ்டப்பட்டுக் கை நீட்டிக் கடன் வாங்கிய பொருளும் கைவிட்டு நழுவியதை மறுமுறை எண்ணியவுடன் அவன் உடல் வெலவெலத்தது; மதி மருண்டது. தன் மனைவிக்காகச் செலவு செய்த தொகையைக் காட்டிலும் தன் தங்கைக்காகவும் அன்னைக்காகவும் செலவழித்த பணந்தான் அவன் மனக்கண் முன் தனியாக வட்டமிட்டது. நினைவு வலுக்க வலுக்க ஒரு வெறுப்பு உணர்ச்சியும் எரிச்சலும் அவன்பால் எழுந்தன. தாயும் தங்கையும் தன் வாழ்க்கையைச் சீரழிக்கவேதான் தன்னை அட்டை போல் ஒட்டி நிற்கிறார்கள் என்று கூட நினைக்கலானான்!
கதவை யாரோ மெதுவாகத் தட்டும் அரவம் கேட்டது. “ஏதாவது வாங்கி வந்ததைக் கழுகுபோல் கொத்திச் செல்லத் தங்கையோ அல்லது தாயோ கதவைத் தட்டுகிறார்கள்” என்று எண்ணிய அப்துல் காதர், மேல் துண்டினால் முகத்தை மறைத்துக்கொண்டான்.
“என்ன பாய்ஜான்! ரொம்பக் களைச்சுப்போய் வந்திருக்கீங்களே?” என்று பாசத்துடன் கேட்ட தங்கையின் சொற்கள், அப்துல் காதரின் செவிகளில் நாராசம் போல் வீழ்ந்தன.
“என்னை நிம்மதியாகக் கொஞ்ச நாள் நீங்கள் விட்டு வைத்தால் தானே?” என்று அப்துல் காதர் வெடுக்கென்று சொன்னதும், தங்கையின் சாந்தம் பொலியும் வதனத்தில் கவலை ரேகைகள் படர்ந்துவிட்டன. கவிழ்ந்த சிரத்துடன் அறையை விட்டு நீங்கினாள்.
எங்கும் ஒரே அந்தகாரம் சூழ்ந்திருப்பது போல் அப்துல் காதருக்குத் தோன்றிற்று. போர்வையை இழுத்து நன்றாகப் போர்த்துக்கொண்டான்.
“காதர் …. காதர் ….” என்று கனிவுடன் கூப்பிட்டுக் கொண்டே அவன் அருகில் வந்த தாயின் குரலைச் செவிமடுத்தும் அப்துல் காதர் எழுந்திருக்கவில்லை. அவனிடம் நிலைத்து நின்ற விறைப்பும் அலட்சிய மனப்பான்மையும் மங்கியதாகக் காணவில்லை.
“காதர் …எழுந்திரு. கண்ணு! ஏதோ நடந்துடுச்சு. அதை நினைச்சு வருத்தப்பட்டா முடியுமா?” என்று தாய் பகர்ந்ததும் கருந்தேளினால் கொட்டப்பட்டவன் போல் திகிலடைந்தான் அப்துல்காதர்.
“நஷ்டம் வந்தா ஒண்ணு மேலே ஒண்ணா வரும்டா கண்ணு. ‘துனியா’லே (உலகத்திலே) சமாளிச்சுட்டுப் போகணும். அல்லாவோடே தமாஷா அது . நீ வீட்டுக்குத் திரும்பறப்போ, வாங்கிவந்த துணிகளைத் தொலைச்சுட் டேன்னு கேள்விப்பட்டேன்…” என்று தாய் சொன்னதும் அப்துல்காதர் கட்டிலை விட்டு எகிறிக் குதித்தான். அவன் சப்த நாடிகளும் ஒடுங்கிவிட்டன.
“இது உனக்கு எப்படித் தெரியும்?” என்றான் அவன் விழிகளைச் சுழற்றிக்கொண்டு.
“நம்ம தெருமுனை வீட்டு உன் ‘தோஸ்த்’ சிவசாமியோடே அப்பா சொல்லிச்சு. நடந்த விஷயத்தை எல்லாம் சொல்லிட்டு, அவரு இப்போதான் கொஞ்சம் முந்திப் போனாரு” என்றாள் தாய் சாவதானமாக.
பஸ்ஸில் ‘கலாட்டா’ நடந்த சமயத்தில் சிவசாமியிடம் பேசினது அப்துல் காதருக்கு ஞாபகம் வந்தது.
தொடர்ந்தாள் தாய்: “உன்னை விட நானும் உன் தங்கச்சியுந்தான் ரொம்ப வருத்தப்பட்டோம். நஷ்டத்தைப்பற்றி அல்ல; அந்த வேளையிலே உன் மனசு எப்படி வாடிச்சோன்னு நினைச்சுத்தான். இந்தா, இதைப் பிடி” என்று ஒரு காகிதக் கவரை நீட்டினாள்.
“என்னம்மா இது?” என்றான் அப்துல் காதர் ஒன்றும் விளங்காதவனாக.
“பிடியேன் முதல்லே, சொல்றேன்”
அதைப் பெற்றுக்கொண்டான் அப்துல் காதர். “அப்படி இப்படின்னு காசு காசாய் நானும் உன் தங்கச்சியும் இத்தனெ வருஷமாச் சிட்டுக்குருவிகள் போல் சேர்த்து வச்ச பணம் எண்பது ரூபாய் இதிலே இருக்கு. இதை எடுத்துட்டுப் போய் உன் இஷ்டப்படி நல்ல அழகான தாவணியும், ‘சோலி’க்காக வெல்வெட் துணியும் வாங்கிட்டு வந்து உன் பெண்சாதிக்குக் கொடுத்துவிட்டு மறு வேலை பாரு. பெருநாளன்னைக்கு அவள் சந்தோஷமாயிருந்தால் தானே என் மனசும் குளிரும்? சட்டுனு கிளம்பு. கடையைச் சாத்திடப்போறான்” என்று தாய் சொல்லி முடித்ததும் அப்படியே அந்தப் பெற்ற தாயின் பாதங்களில் வீழ்ந்தான் அப்துல் காதர்.
“அம்மா…அம்மா..மன்னிச்சுடு” என்று நாத்தழுதழுக்க உணர்ச்சியுடன் அவனால் சொல்ல முடிந்ததே தவிர மற்ற வார்த்தைகள் அவன் தொண்டையிலே சிக்கித் திக்குமுக்காடின.
‘சுவர்க்கம்’ என்று திருக்குரான் அறிவுறுத்தும் தாயின் அடிகளை இரு கைகளாலும் இறுகப் பற்றிக் கொண்டு பொல பொலவென்று கண்ணீர் பொழிந்தான் மைந்தன்.
– பெருநாள் பரிசு, முதற் பதிப்பு: டிசம்பர் 1957, கலைமகள் காரியாலயம், சென்னை.
– ‘ஆனந்த விகடனில்’ தோற்றமளித்தன.