பெரிய மனசு

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2022
பார்வையிட்டோர்: 3,402 
 
 

தயக்கத்துடன் தன் வீட்டு வாசல் சுற்றுச்சுவர் கதவுத் திறந்துகொண்டு வரும் வாலிபனைப் பார்த்ததும்….

‘யாரிவன்..? யாரைத் தேடி வருகிறான்…?’ வாசலில் காற்று வாங்க உட்கார்ந்திருந்த சேகர் அவனை யோசனையுடன் பார்த்தான்.

ஆள் அருகில் .வந்ததும்…

“யார் நீங்க…? யாரைப் பார்க்கனும்..?” கேட்டான்.

“பொதுப்பணித்துறையில் எஞ்சினியராய் வேலை செய்கிற சேகர் என்கிறது….?” இழுத்தான்.

“அது நான்தான்!”

வந்தவன் சடக்கென்று துணுக்குற்றான்.

“சாரி சார். ஆள் தெரியாம நான்….” தடுமாறினான்.

“பரவாயில்லே?”

“சார்! என் பேர் சிவா..!”

“புது ஒப்பந்தக்காரரா…? வேலை எடுத்துருக்கீங்களா..?”

“இல்லே சார்.”

“அப்புறம்..?

“உ…. உங்க தங்கச்சிக்கு வரன் தேடுறதாய்க் கேள்விப் பட்டேன். அது விசயமா….?”

சேகருக்குள் சட்டென்று ஒரு மின்னல்.

“வாங்க. உள்ளே போய் பேசலாம்.” எழுந்தான்.

இருவரும் வீட்டினுள் சென்றார்கள்.

“உட்காருங்க…”

எதிர் எதிர் நாற்காலிகளில் அமர்ந்தார்கள்.

“விசாலி! ரெண்டு காபி!”

அடுப்படியிலிருந்து எட்டிப் பார்த்த அவள்…..அடுத்து சில நொடிகளில் சிறு தட்டொன்றில் இரு காபி டம்பளர்களுடன் வந்தாள்.

காபி டம்ளர்களை இருவரிடமும் நீட்டினாள்.

சேகர் டம்ளரை வாங்கிக் கொண்டே…

“விசாலம்! காயத்ரி எங்கே..?” கேட்டான்.

“மாடியில…” சுருக்கமாகச் சொன்னாள்.

“ரொம்ப நல்லதாப் போச்சு!” என்று மெல்ல சொன்ன சேகர்…

“இவர் யார் தெரியுமா..? நம்ம காயத்ரி விசயமா வந்திருக்கார்!” மனைவி விசாலத்திற்கு சிவாவை அறிமுகப்படுத்தினான்.

இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கை கூப்பி பரஸ்பர வணக்கம் செலுத்திக் கொண்டனர்.

விசாலம் கணவன் அருகில் வந்து நின்றாள்.

“ம்ம்ம் சொல்லுங்க…சிவா…?” என்று கூறி சேகர் விசயத்தைத் தொடங்கினான்.

சிவா மிகவும் பணிவுடன்…

“சார்! நான் இங்கே தகவல் தொழில் நுட்ப கம்பெனியில் மாசம் 70,000 ரூபாய் சம்பாதிக்கிறேன்” என்றவன் தன் அடையாள அட்டை, சம்பளப் பட்டியலை எடுத்து நீட்டினான்.

வாங்கி பார்த்து திருப்திப்பட்ட சேகர் அவைகளைக் கொடுத்தவனிடம் திருப்பினான்.

“சார்! எனக்கு எந்த கெட்டப் பழக்கமும் கிடையாது. சாமி கும்பிடாதவன். கடவுள் இல்லை. அது வெறும் சிலை வழிபாடு என்பதைத் தெளிவாய்த் தெரிந்தவன். எனக்கு சாதி, மதம் பிடிக்காது. அது மனுசனுக்குத் தேவை இல்லாதது என்கிறது என் அபிப்பிராயம். அதனால் இயற்கையிலே எனக்கு முற்போக்கு சிந்தனை உண்டு. எனக்கு கைம்பெண், விவாகரத்துப் பெற்ற பெண்களைத் திருமணம் செய்து கொள்வதுதான் குறிக்கோள். நீங்க உங்க தங்கைக்கு மறுமணம் செய்ய ஏற்பாடு செய்யிறதாய்க் கேள்விப்பட்டேன். எனக்கு வரதட்சணை சீர்வரிசை எதுவும் தேவை இல்லே. உங்க தங்கையை எனக்குப் பிடிச்சிருந்தால் நான் திருமணம் செய்து கொள்ள சம்மதம்!” வந்த விசயத்தைச் சொல்லி நிறுத்தினான்.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கவனவன் மனைவி இருவரும் சிறிது நேரம் மவுனமாக இருந்தார்கள்.

இரண்டொரு வினாடிகளில்….

“நீங்க என் தங்கையைப் பார்த்திருக்கீங்களா…?” கேட்டான் சேகர்.

“இல்லே…சார்.”

“அவள் தற்போதைய நிலைமை என்ன தெரியுமா…?”

“தெரியாது சார்!”

“உங்களுக்கு அம்மா, அப்பா இருக்காங்களா…?”

“இருக்காங்க…”

“உங்க குறிக்கோள், முடிவில் அவுங்களுக்குச் சம்மதமா…?”

“அவங்களுக்கு மனப்பூர்வ சம்மதம்.”

“அவுங்களையும் அழைச்சி வந்து முறைப்படி கேட்டு இருக்கலாமே…!”

“இங்கே முடிவு தெரிந்து சம்மதம்னு ஒப்புதல் ஆனால் அம்மா, அப்பாவோடு முறையாய் வரலாம் என்கிறது என், அப்பா, அம்மா விருப்பம் சார்.”

சேகர், விசாலம் அவனை மெளனமாக எடை போட்டார்கள்.

“சார்! பொண்ணைப் .பார்க்கலாமா…?”

“பார்க்கிறதுக்கு முன்னாடி கொஞ்சம் பேசிக்கிறது நல்லது…”

சிவா தலையாட்டினான்.

“விசாலம்! போய் காயத்ரி போட்டோவை எடுத்து வா.”

அவள் எழுந்து சென்று உடனே திரும்பி வந்தாள்.

கணவனிடம் கொடுத்தாள்.

“இதுதான் என் தங்கை காயத்ரி!” சேகர் அவனிடம் நீட்டினான்.

வாங்கி சிவா அந்த படத்தில் உள்ளவளை உற்றுப் பார்த்தான்.

“பிடிச்சிருக்கா…?”

“பிடிச்சிருக்கு”

“நேரடியா ஆளைக் காட்டாமல் இது என்ன போட்டோவில் ஆளைக் காட்டி அபிப்பிராயம் கேட்குறீங்கன்னு நீங்க நினைக்கலாம். காயத்ரி புதுப்பெண், முதல் திருமணமில்லே! சீவி சிங்காரிச்சு அலங்காரம் பண்ணிக்கிட்டு வந்து எதிரில் நிற்க. ஏற்கனவே கலியாணம் ஆனவள். வாழ்க்கையை இழந்த விதவை. அதிலும் நாலு மாசம் ,முழுகாமல் வேறு இருக்காள். அவளை அழைச்சு வந்து நீங்க பிடிக்கலைன்னு சொன்னா….மனசு உடைஞ்சிடுவாள். அப்புறம் இந்த ஏற்பாட்டுக்கே சம்மதிக்க மாட்டாள்.!” என்றான் சேகர்.

சிவா எந்த பேச்சும் பேசவில்லை.

“திருமணமாகி ஆறு மாசம் ஆகல. சென்ற மாதம் முதல் நாள் பேருந்து விபத்தில் ஆள் அந்த இடத்திலேயே பலி. வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கும்போதே பேரிழப்பு. எனக்கு மனசு தாங்கலை. ரொம்ப கஷ்டப்பட்டு நானும் என் மனைவியும் சேர்ந்து அவளை மறுமணத்துக்குச் சம்மதிக்க வைத்தோம். வயிற்றில் வளரும் குழந்தை ஒரு பிரச்சனையாய் இருந்தது. நாலு மாதக் கருக்கலைப்பு உயிருக்கு ஆபத்து என்கிறது ஒரு காரணம். அப்படியே விட்டுட்டேன். விதவையைத் திருமணம் செய்து கொள்ள வரும் வரன் கருவைக் காரணம் காட்டி தட்டிக் கழிக்க மாட்டான் என்கிற நம்பிக்கை.” சேகர் நிறுத்தி சிவாவைப் பார்த்தான்.

அவன் முகத்தில் எந்த சஞ்சலம் சலனமுமில்லை.

“இப்போ உங்க விருப்பத்தைச் சொல்லாம்!” என்றான் சேகர்.

“சார்! குழந்தையை என் குழந்தையாய் ஏத்துக்கிட்டு வீண் ஆடம்பரமில்லாமல் திருமண அலுவலகத்தில் சட்டப்படி பதிவுத் திருமணம் செய்து காயத்ரியை மனைவியாய் ஏத்துக்க எனக்குச் சம்மதம்.”என்றான்.

சேகர், விசாலம் மலைப்பின் உச்சிக்குச் சென்றார்கள்.

“சார்! நாமளே பேசி முடிவெடுக்கிறது சரி இல்லே. காயத்ரியையும் வரவழைச்சு நேரடியாய்க் கேட்டுடுங்க. ஒரு வேளை அவங்களுக்கு என்னைப் பிடிக்காமல் போனால் நாம முடிவெடுக்கிறதெல்லாம் வீண்!” என்றான்.

“சரி!” கணவன் மனைவி இருவரும் ஒருசேர தலையசைத்தார்கள்.

உடன் விசாலம் மாடிக்குச் சென்றாள்.

விசாலம், அவளுக்கு நடப்பு எல்லாம் சொல்லி பத்து நிமிடங்களில் காயத்ரியுடன் வந்தாள்.

சிவாவும் அவளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

இருவருக்கும் திருப்தி.

சம்மதம்.

மூன்றாம் நாள் திருமணம்.

காயத்திரியுடன் மாலையும் கழுத்துமாய் திருமண அலுவலகத்திலிருந்து மாலையும் கழுத்துமாய் வெளியே வரும்போது சிவாவிற்குப் பெருமையாக இருந்தது .

“ஏ… இளைஞனே..! என்னைப் போல் வாழ்க்கையை இளம் பெண்ணிற்கு வாழ்வு கொடுங்கள்!’ என்று மனசுக்குள் கூவ துடிப்பு.

அந்த மதர்ப்பில் அருகில் வரும் விசாலம், சேகரைப் பார்த்தான்.

“சிவா! இன்னொரு உண்மை!” என்றான் சேகர்.

“என்ன சார்..?”

“காயத்ரி என் உடன் பிறந்த தங்கை இல்லே. இவள் கணவன் எனக்குக் கீழ் அலுவகத்தில் வேலை பார்த்தான். அலுவலகத்தில் இருந்த நான் ஒரு நாள் வீட்டில் விட்டு வந்து என் இரு சக்கர வாகனத்தை எடுத்து வர அனுப்பினேன். எடுத்து வந்தவன்….வழியில் பேருந்து மோதி பலி. இந்த பாவத்துக்குப் பிராயச்சித்தம்..? இவளை தங்கையாய் ஏத்து மறுமணம் முடிச்சுட்டேன். மனசு திருப்தி!” என்றான்.

‘தான்தான் பெரியவன், பெரிய மனசுக்குச் சொந்தக்காரனென்றால்…இவர்…?!!’ சேகரை நினைக்க…

“நீங்க ரொம்ப பெரிய ஆள் சார்!” சிவா தழுதழுத்து சட்டென்று அவன் கைகளைப் பிடித்து நெகிழ்ந்தான்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *