பெண் பார்த்தல்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 7, 2016
பார்வையிட்டோர்: 10,394 
 
 

“”பொண்ணு கெடைக்கறதே அருந்தலா இருக்கு. இதுல நாம நெனக்கிற மாதிரியெல்லா முடியாது முருகா” என்ற வீரம்மாள், “”நீ கொம்பு ஓவ்வார்த்த சுத்தமில்ல. தண்ணியடிச்சிருக்கியா?” என்று ஒரே மூச்சில் பேசினாள்.

வீரம்மாளின் வீட்டின் வெளித்திண்ணையில் குத்துக்காலிட்டு சுவரில் சாய்ந்து உட்கார்ந்திருந்த முருகன், “”கஞ்சி குடிக்கவே காசக்காணம். காலையிலருந்து சும்மா கெடக்கேன். நீ வேற சும்மாருக்கவன ஆவுகப்படுத்தி விடாத” என்றான்.

“”அந்த மாதிரிதான புரியாம பேசிட்ருக்க. சொன்னா, ஒரு வார்த்தைல அடங்க மாட்டேங்கிறியே”

“”ம் ஒடனே என்னையச் சொல்லு. நேத்தக்கி பொண்ணு பாக்கலாம்னு சொன்ன, இப்ப ஆவாதுங்கற. நா என்னா மென்டலா?” கடைசி வார்த்தையைச் சொல்லும்போது முருகனுக்கு ஆவேசம் வந்துவிட்டது. விரைப்பாக தன்னை நிமிர்த்திக் கொண்டான்.

பெண் பார்த்தல்வேகமாய் முருகனின் பக்கம் வந்த வீரம்மாள், தன் கை விரல்களை மடக்கி அவனது முகத்தில் குத்துவது போலப் பாய்ந்தாள்.

“”ஓங்கி விட்டேன்னா பல்லு பதினாறும் கழண்டு போகும், ஆவாதுன்னா சொன்னேன். ஓம் பொண்டாட்டி கிட்டக்க இருந்து விடுதலப் பத்தரம் எழுதி வாங்கிட்டு வான்னுதான சொன்னே”

முருகனும், வீரம்மாளும் சமையல்

தொழிலில் முனுசாமி மாஸ்டரிடம் வேலை பார்க்கிறார்கள். வீரம்மாள் நாலைந்து வருடமாக வேலைக்கு வருகிறாள். முருகன் இப்போதுதான் ஒரு வருசமாக, போன வைகாசியிலிருந்து ஒப்பந்தமாய் வந்து கொண்டிருக்கின்றான். நிச்சயிக்கப்பட்ட சம்பளம் கிடையாது. விசேஷங்களைப் பொறுத்து உணவுகளின் வகை, அளவு, எத்தனை பேருக்கு சமைக்கிறோம் என்பதைப் பொறுத்து மாறும்.

வேலைத் தளத்தில் அவர்களுக்குள் அவ்வப்போது சண்டை சத்தம் வந்தாலும் வெளியில் வந்துவிட்டால் ஒரே குடும்பம்தான். ஒருத்தரை விட்டு ஒருத்தர் டீ கூட குடிக்க மாட்டார்கள். அதே போல குடும்பத்தில ஏதாவது ஒரு விசேஷம் என்றால் சொந்தக்காரர்களைப் பூராவும் உட்கார வைத்துவிட்டு அ முதல் ஃ வரை அத்தனை வேலைகளையும் தலைமேல் சுமந்து செய்து முடிப்பார்கள். தவிர பண உதவியும் தேவையறிந்து செய்வதில் விட்டுத் தர மாட்டார்கள். இதனாலேயே ஒவ்வொருத்தருடைய அந்தரங்கமும் அடுத்தவருக்கு வெட்ட வெளிச்சமாய் இருக்கும்.

வீரம்மாளுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள். அத்தனை பேரும் கல்யாணமாகி குடும்பங்குட்டியோடு இருக்கிறார்கள். வீரம்மாள் எந்தப் பிள்ளையுடனும் இல்லாமல் தனி வீட்டில் வசிக்கிறாள். புருசன் இளவயதிலேயே வேறு பெண்ணோடு ஓடிப் போனானாம். அன்றிலிருந்து வீரம்மாள் தனிக்கட்டை. ஓங்குதாங்காய் ஐம்பது வயசிலும் தொய்வில்லாத கம்பீரமான உடம்பு.

முருகனுக்கு இருபத்தைந்து வயசு என்று சொல்ல முடியாத நறுங்கிய தேகம். மீசையும் தாடியும் கூட அதிக நீளமில்லாமல் அருகிக் கிடந்தன. எப்போது பார்த்தாலும் சொருகிய விழிகளும், சோகம் வடிகிற முகமுமாக எதாவது ஒன்றை தாங்கியபடியே நிற்பான். ஆனால், வேலை என வந்துவிட்டால் பொதிமாடுதான். சோறு தண்ணி எதையும் தேடமாட்டான்.

“”ஒரு சிகரட்டும், கொஞ்சம் போயலையும் குடுத்தாப் போதும், ஏந்தம்பி இமய மலையவே வெட்டி அள்ளிப் போட்டுருவான்” என்று மாஸ்டர் அவனை அவ்வப்போது தட்டிக்கொடுத்து வேலை வாங்குவார். வேலைக்கு வருகிற போதே யாருக்கும் தெரியாமல் சிகரட்டில் வீரியம் சேர்த்துக் கொண்டு வந்துவிடுவான். அந்த சிறப்பு சிகரட்டை எந்த நேரம் எடுத்துப் பற்ற வைப்பான் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் பற்ற வைத்து நாலு இழுவை இழுத்தால்தான் அண்டா சோற்றை ஒற்றை ஆளாய் கீழே தள்ளிச் சாய்க்க முடியும். ஐநூறு தேங்காயைக் கூட உட்கார்ந்த இடம் மாறாமல் துருவிப் போட முடியும். அதனாலேயே மாஸ்டர் சிகரட் பிடிக்கக் கூடாது என எல்லோருக்கும் கண்டிசன் போட்டாலும், முருகனிடம் மட்டும், “”யாருக்கும் தெரியக்கூடாது, வாசனை யாரும் அறியக்கூடாது. தள்ளிப் போய் குடிச்சிட்டு வரணும்” என்பார்.

முருகனுக்கு கல்யாணம் முடிந்திருந்தது. ஆணும் பெண்ணுமாய் இரண்டு பிள்ளைகள். கல்யாணி போடிமெட்டில் இருந்தாள். எஸ்டேட் வேலைக்குப் போனபோது வீரம்மாளைப் போல அங்கே ஓர் அம்மாள், முருகன் ஒத்தையாய் இமுசைப் படுவதைப் பார்த்து கலியாணியைக் கட்டி வைத்தாள்.

ஆண் வாரிசு இல்லாத குடும்பம், அக்கா தங்கச்சி நாலு பேரு, கலியாணி கடக்குட்டி..

“”இவள கட்டிக்கிட்டா அக்காமாரு அத்தன பேரும் நல்லது கெட்டது அம்புட்டுக்கும் வந்து நின்னு பாத்து செய்வாக” என்று அந்தம்மாள் சர்க்கரையாய் பேசினார்..

பார்த்த மாத்திரத்தில் முருகனுக்குக் கலியாணியைப் பிடித்துப் போனது. கம்பத்தில் குடியிருந்த அம்மாவிடம் சொல்லவில்லை. தேனி, பாளையத்தில் வசிக்கும் அண்ணன், அக்காள்களிடம் கூட கேட்கவில்லை. தாலியைக் கட்டி தனிக்குடும்பமாக்கிக் கொண்டான். அன்றிலிருந்து முருகனுக்கு அண்ணன்மார், அக்காள்களோடு போக்குவரத்து இல்லாமல் போனது. அம்மாவிடம் மட்டும் அவ்வப்போது வந்து போவான். அம்மாவுக்கும் முருகன் வீட்டோடு மாப்பிள்ளையானதில் வெகு வருத்தம்.

“”ஒரு பொட்டச்சி, நேக்கா வல போட்டு ஆம்பிளய தன்னாளாக்கிட்டா. ஒனக்கு அந்த அக்குசு இல்லியேடா” என வரும்போதெல்லாம் கண்ணீர் விடும்.

மருந்து கிருந்து வச்சுட்டாளா? ஒருதரம் மருந்தெடுக்கக் கூட ஆண்டிபட்டிக்குக் கூட்டிப் போனது.

அப்படியெல்லாம் இல்லை என்று காண்பிப்பதற்காகவே கலியாணியைக் கூட்டிக் கொண்டு தேனிக்கு குடிவந்தான். அப்போதுதான் முனுசாமி மாஸ்டர் கிடைத்தார். அவரே ஒன்றிரண்டு வீடுகள் பார்த்துக் கொடுத்தார். எந்த வீட்டிலும் கலியாணியால் மூன்று மாதம் சேர்ந்தபடியாக குடியிருக்க முடியவில்லை. ஒன்று, வீட்டுச் சொந்தக்காரர் சரியில்லை, அல்லது அக்கம்பக்கத்து ஆட்களால் ஓயாத தொந்தரவும் சண்டை சச்சரவும்தான்.

“”நாட்டுக்காரவங்க ரொம்ப மோசமா இருக்காங்க. எங்க மலைலல்லாம் இப்பிடி இல்லப்பா” என்றாள் கலியாணி.

முருகனால் நிம்மதியாக வேலைக்குப் போக முடியவில்லை. அவன் வீட்டிலிருக்கும் போதெல்லாம் அக்கம் பக்கத்தாரோ, வீட்டுக்குச் சொந்தக்காரரோ சத்தமே காட்டுவதில்லை. வேலைக்கென்று கிளம்பிவிட்டால் திரும்பி வருகிறபோது ஒரே புகார்மயம்தான். வேலை என்பது எல்லோரையும் போல காலையில் போய் மதியமோ மாலையோ திரும்புகிற மாதிரி இல்லை. முதல்நாள் போனால் மறுநாள்தான் வர முடியும். அதிலும் சேர்ந்தாற்போல முகூர்த்தம் அமைந்து விட்டாலோ நாலைந்து நாட்கள் கூட வீட்டுப்பக்கம் எட்டிப் பார்க்க முடியாது.

கலியாணியையும் உடன் வேலைக்கு அழைத்து வரும்படி பலபேர் யோசனை சொன்னார்கள். கலியாணியும் வேலைக்காரிதான். போடிமெட்டில் எஸ்டேட் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தவள்தானே? பிள்ளைகள் பிறந்துவிட்டது, நண்டும் சுண்டுமாய் கைப்பிள்ளைகளை மேய்த்துக் கொண்டே நாளை ஓட்டுவது பெரும்பாடு. இதில் வேலைக்கு வருவது சாத்தியமே இல்லை, பிள்ளைகள் ஓடியாடி நடந்து பள்ளிக்கூடம் போன பிறகு வேணுமானால் கலியாணி வருவாள். இல்லாவிட்டால் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வீட்டில் யாராவது பெரியாள்கள் இருந்தால் பிரச்சனை இல்லை.

அப்படியும் கூட முருகன் தன் அம்மாவைக் கூப்பிட்டான். அம்மா கல்யாணம் முடித்ததிலிருந்து இன்றுவரை கல்யாணியுடன் பேசியதில்லை. மகனைக் களவாடிய சிறுக்கி என்ற கோபம்.

மாமியார் மாமனார்களுக்கு இந்த ஊர் ஒத்துக்கொள்ளாதாம். அழுத்திக் கூப்பிட்டதில் முருகனையும் கல்யாணியையும் அவர்கள் மலைக்கு வரச் சொன்னார்கள். அங்கே வந்தால் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடியுமாம். எஸ்டேட் வேலைக்கு ஆள் தேவைப்படுவதாக பாதையை மாற்றி விட்டார்கள். அன்றிலிருந்து விசயம் இன்னும் தீவிரமானது. முன்னெல்லாம் அண்டை வீட்டாரோடு சண்டை என்றால் முருகன் வேலை முடித்துவந்த பிறகு ஒப்பிப்பதும், முடிந்த சண்டையைத் தொடருவதுமாக இருந்த கதை. இப்போது வேலை முடிந்து வந்து பார்த்தால் வீடு பூட்டிக் கிடக்கிறது. பக்கத்து வீட்டில் சாவியைக் கொடுத்துவிட்டு மலைக்கு அம்மா வீட்டிற்கு போய்விடுகிறாள். மேலேயும் கீழேயுமாய் பஸ் ஏறி இறங்கி அலுத்துவிட்டது முருகனுக்கு. மாஸ்டர் வேறு கண்டிசனாய் பேச ஆரம்பித்தார்.

“”இங்க பாரு முருகா. ஒந் நல்லதுக்கு சொல்றே, குடும்பம்னா இழுபறி இருக்கக் கூடாது, எட்டுனா குடுமியப் பிடி. எட்டலியா காலப் பிடிச்சிடணும், அந்தப்பிள்ள இங்கவர பிரியமில்லன்னா நீ மலையில போய் செட்டில் ஆயிரு”

“”மலையில பூச்சிக்கடி ஓவருணே ..மேலுகாலெல்லா ரணமா ஆயிருது”

“”அப்ப அடிச்சு இழுத்துட்டு வா”

முருகன்தான் அடிவாங்கி திரும்பினான். கடைசியாக நடந்த அந்த சம்பவம் வாழக்கையில் மறக்க முடியாததாக ஆகிவிட்டது.

முருகன் தன்னால் மலையில் வந்து வாழ முடியாதென்றான். கலியாணியோ நாலு பெண்களைப் பெற்றும் அனாதையாய் இருக்கும் தன் பெற்றோரை கடைசி காலத்தில் தவிக்கவிட்டு வர மனசில்லை என்றாள். அவர்களையும் தங்களோடு வைத்துக் கொள்வோம் என முருகன் கூப்பிட்டான். ஆனால் தங்களுக்கு வாழ்வும் சாவும் மலையில்தான் என மாமனார் மாமியார் வேர் போட்டுவிட்டனர். கலியாணியும் அசைந்து கொடுக்கவில்லை. நாட்டில் செய்கிற வேலையை காட்டில் செய்யலாமென்றாள். ததும்பத் ததும்ப தண்ணீர் குடித்துவந்து சலம்பிப் பார்த்தான். மருந்தின் மயக்கத்தில் மன்றாடினான். அறிந்த தெரிந்த நண்பர்கள் நாலைந்து பேர்களை கூலிக்கு அழைத்து வந்து கூச்சலிட்டான். வீதியே ஒன்று திரண்டு முருகன் கம்பெனியாரை விரட்டியடித்தது.

“”பொறுப்பான ஆளக்கூட்டிப் போய் பேசணும் முருகா. ங்கொம்மா இருக்கு, ங்கொண்ணே இருக்காகள்ல, வச்சுப் பேசு. அதுக்கும் மீறி அவ அடம் பிடிச்சான்னா ..எனக்கும் ஒனக்கும் ஒத்து வராது. ஆத்தா… ஒவ்வழிய நீ பாரு, எவ்வழிய நாம் பாத்துக்கிறேன்னு எழுதி வாங்கிட்டு வந்துரு. ஊருக்குள்ள ஒரு பொண்ணப்

பாத்து கலியாணம் முடிச்சுருவம் சொன்னேன்ல?”

“”அதுக்கு அவ பத்துக் கலியாணங்கூட பண்ணிக்கடா சாமின்னு வெரட்டிட்டா தெரியுமா?”

வாங்கிய உதையின் வீக்கம் குறையாத கடுப்பில் ஒப்பித்தான் முருகன்.

“”ஆத்தரத்துல பேசுற பேச்செல்லா கணக்குல வச்சுக்க

கூடாது முருகா”

“”பொம்பளைக்கு என்னா அம்புட்டு ஆத்தரம்? நா ஒர்த்தரப் போல அவள வேலைக்கு போகச் சொன்னனா? வெட்டிக்குப் போகச் சொன்னேனா? வீட்ல இருந்து கிருமமா கஞ்சி காய்ச்ச முடியாதா?”

“”அப்புறம் ஏன் வரமாட்டேங்குது?” வீரம்மாளும் கேள்வி எழுப்ப.

“”அதுதே ஏன் வரமாட்றா?” முருகனும் கேள்வி கேட்டான்.

வார்த்தைகள் தீர்ந்து போனவள் போல வீரம்மாள் முருகனைப் பார்க்க, முருகன் தவிப்புடன் பார்வையை தாழ்த்திக் கொண்டான்.

“”என்ன பெரச்சன வீரு, முருகன போட்டு வாங்கிக்கிட்டிருக்க?” பக்கத்து வீட்டுப் பெண்ணொருத்தி இடுப்பில் குழந்தையோடு வந்து கேட்டாள். அக்கம்பக்கமிருந்து இன்னுமிருவர் வந்து குழுமினார்கள்.

“”பொண்டாட்டி வந்து வாழ மாட்டேங்கிதாம், வேற பொண்ணு பாக்கச் சொல்லுது முருகெ”

“”முருகா என்ன ஆளுக?”

“”ஒங்க ஆளுகள்ல கூடப் பாரும்மா” வெடுக்கென முருகன் அந்தப்பெண்ணிடம் கோரிக்கை வைத்தான்.

“”அட.. எங்காளுகன்னா அம்பிட்டு எளக்காரமா?”

“”எந்த ஆளுகள்னாலும் பொண்ணு குடுக்கறதுனா நாலு கேள்வி வரத்தேஞ் செய்யும்? கேள்வியில்லாம வேணும்னா எங்குட்டாச்சும் வீசுனது நாறுனதுகள சேத்து வச்சுக்க”

ஆளுக்கொரு பேச்சுப்பேச முருகனுக்கு தன்மானம் தலைதூக்கியது.

“”ச்சீ..இதுவரைக்கும் நா கட்டுன பொண்டாட்டிக்கி துரோகம் பண்ணதே கெடையாது. அதெல்லாம் பிடிக்காது..”

“”இப்ப மட்டும் என்ன வந்திச்சாம். புருசம்

பொண்டாட்டினா நாலு வாத்த கூட கொறச்சல் இருக்கத்தேஞ் செய்யும். வீரம்மா கத தெரிமா?”

என்று கைப்பிள்ளைக்காரி கேட்க வீரம்மா தன் கதையை தானே சொல்லலானாள்.

“”ஏஞ் சின்னமகளுக்கு ரெண்டு வயசுல எம்புருசன விட்டு வந்தே, முப்பது வருசமாச்சு, தனியா சம்பாதிக்கிறே… எங்க அம்மா குடுத்த வீடு இருக்கு, கடவுள்குடுத்த உசிரு இருக்கு . ரெண்டு பிள்ளைகளையும் ராசாவா ஆக்கி விட்டே, பொட்டப்புள்ளைய கட்டிக்குடுத்தாச்சு. இன்னிக்கும் தனிக்கட்டதே. புருசெ இருந்தாதேம் பொழப்பா.. வீதில எரைய வீசினா எத்தன காக்கா… ச்சீ எதுக்கு அந்த எச்சிக்ளப் பொழப்பு?”

“”ம், ஒனக்கு வாச்ச புருசெ அப்படி, எனக்கு வாச்ச பொண்டாட்டி இப்பிடி?”

“”முருகா..இப்படி விட்டேத்தியா பேசக்கூடாது. ஊத்தப்பல் தேய்க்காத உலுப்பப்பய புருசனா வாச்சாலும் பொம்பள பக்கத்துல வந்து பாய் போட்டு ஒக்காருவா.. காட்டு வேல செஞ்சு கடலு தண்ணியா ஒடம்புல உப்பரிச்சுக் கெடந்தாலும் முத்தங் குடுத்து முந்தானய விரிப்பா ஆனா, ஒன்ன மாதரி போயல வீச்சமும், சாராய நாத்தமுமா மனுசெ வந்தா எத்தினி நாளைக்குத்தே பொம்பள சகிச்சுக்குவா சொல்லு”

“”அப்ப செண்டு போட்டுக்குறணுமாக்கும்” என கேலியாய் சிரித்த முருகன், “”அப்படித்தே ஓம் புருசன வெரட்டி விட்டியாக்கும்?” ஹாஸ்யம் போல கைதட்ட, கைப்பிள்ளைக்காரி பிள்ளையை இறக்கிவிட்டு முருகனுக்கு நேராய் வந்து உட்கார்ந்தாள்.

“”ந்தா.. வீரம்மாவப்பத்தி ஒனக்கு என்ன தெரியும், முப்பது வருசமாகியும் இன்னியும் அடுத்த ஆம்பள துணிய தொட்டுப் பாத்ததில்ல, நீ என்னமோ பத்து நாளு பொண்டாட்டி பக்கத்துல வரலேன்னதும் வேற பொண்ணப் பாருங்கற?”

இறக்கிவிட்ட கைக்குழந்தை முருகனது முதுகைப் பிடித்து எழுந்து பிஞ்சுக் கையால் அவனது கன்னத்தில் அறைந்தது. “அதும் பெண்ணோ’ உற்றுப் பார்த்தான்.

– டிசம்பர் 2014

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *