(இதற்கு முந்தைய ‘தனிமை’ மற்றும் ‘கோணலான பார்வை’ கதையைப் படித்தபின், இதைப் படித்தால் புரிதல் எளிது)
சபரிநாதனுக்கு அடுத்த கல்யாணம் முடிந்து, புதுப் பெண்டாட்டி வருவதற்கு முன்பே தன்னைக் கழட்டி விட்டு விட்டதைத்தான் சிவக்குமாரால் சற்றும் பொறுத்தக்கொள்ள முடியவில்லை.
பழிக்கு பழி வாங்கும் உணர்ச்சியை அவரும் பதிலுக்கு வார்த்தைகளால் கொட்டி விட்டார்.
“என்னைய வேலையை விட்டு திடீர்ன்னு போகச்சொல்லிட்டீங்க; ரொம்ப சரி. ஒங்க சொல்படி நான் இங்கேயே என் மகன்களோட இருக்கேன். நீங்களும் ஒங்க இரண்டாம் கல்யாணத்துக்கு பத்திரிக்கை அனுப்பறதுக்கு மறந்துடாதீங்க. சீக்கிரம் பண்ணிக்குங்க. வயசாகிக்கிட்டே போகுது… கண்டிப்பா நான் ஒங்க கல்யாணத்துக்கு முதல் ஆளா வருவேன்.”
இதற்குமேல் அவரை ஒருத்தன் கிண்டலடித்து விடமுடியாது. அமிலம் பட்டவர் போல் வெந்து தணிந்து கடுப்பாகி விட்டார் சபரிநாதன். அவரின் அத்தனை அகம்பாவமும் அடுப்புக் குழம்பாய்க் கொதித்தன. ஒரு விரலை சொடுக்குகிற மாதிரி சிவக்குமார் அவரை கிண்டலடித்துவிட்டான். இரண்டு பக்க மீசையும் துடித்தது அவருக்கு. வந்த ஆத்திரத்தில் அவரை தூக்கிப்போட்டு இரண்டு மிதி மிதிக்கலாம் போல இருந்தது!
அனால் அப்போது அவரால் முடிந்ததெல்லாம் பாலக்காடு ரயில்வே ஸ்டேஷன் நோக்கி ஒரு ‘தீமிதி’ ஓட்டம் ஓடியதுதான். அதுவும் சும்மா ஓடவில்லை… “ஏலே, நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் கண்டிப்பா அடுத்த கல்யாணம் பண்ணிக்கதாம்லே போறேன். ஆனா போயும் போயும் ஒனக்கு கல்யாணப் பத்திரிக்கை அனுப்புவேன்னு மட்டும் கனவுலேயும் நெனச்சிக்காதலே! இந்த ஜென்மத்ல அது நடக்காது” என்று ஆவேசத்தோடு சிவக்குமாரிடம் முணங்கிக் கொண்டு ஓடினார்.
வீராப்பாக சொல்லிவிட்டு வந்தாரே தவிர, சபரிநாதனுக்குள் ஏகப்பட்ட குழப்பங்கள். கல்யாணம் செய்து கொள்வதென்றால் பெண் எப்படிப் பார்ப்பது? யார் மூலம் பார்ப்பது?
இதைப் பற்றியெல்லாம் யோசித்து முடிவுக்கு வர, சபரிநாதனுக்கு வேறு ஒரு ஏகாந்தமான சூழ்நிலை தேவையாக இருந்தது. தன்னுடைய மாந்தோப்புப் பக்கம் போயிடலாம் என்ற எண்ணத்தில் தெருவில் இறங்கி நடந்தார். நல்லவேளையாக காந்திமதியை அவளுடைய வீட்டுத் திண்ணையில் காணோம். இந்த நேரத்தில் அவள் கண்ணில் படாமல் இருந்தால் தேவலையாக இருந்தது. அவள் இல்லாதது கொஞ்சம் நல்ல சகுனமாகக் கூடத் தோன்றியது.
காவலுக்காக தோப்புக்குள்ளேயே குடிசை போட்டுக்கொண்டு குடும்பத்துடன் வசிக்கும் மாயத்தேவர், சபரிநாதன் உட்கார அவசரமாகக் கயிற்றுக் கட்டிலை எடுத்துப் போட்டான். அவனோடு ஒரு வார்த்தைகூட பேச்சுப் பேசாமல் சபரிநாதன் கட்டிலில் உட்கார்ந்து கொண்டார். அந்தத் தோப்பில் தொடர்ச்சியாக குயில்களின், மைனாக்களின் ஓசைகள் ஒலித்துக் கொண்டிருந்தன. எதிர் மரத்தின் தாழ்ந்த கிளையில் வாலாட்டிக் குருவி ஒன்று வினாடிக்கொரு தடவை வாலை ஆட்டியபடி அமர்ந்திருந்தது.
கட்டிலில் உட்கார்ந்த அடுத்த நிமிடம் சபரிநாதன் நேராக விஷயத்தை யோசிக்க ஆரம்பித்துவிட்டார். எப்படிப்பட்ட பெண்ணாகப் பார்ப்பதென்று முதலில் யோசித்தார். அழகான பெண்ணாகப் பார்ப்பதா? இல்லை அழகுக்கு முக்கியத்துவம் வேண்டாமா? நல்ல வசதியான இடத்துப் பெண்ணாகப் பார்ப்பதா; வசதி இல்லாத ஏழைப் பெண்ணாகப் பார்ப்பதா? தனக்கு வயதாகிவிட்டது. வசதியான வீட்டுப் பெண்ணெல்லாம் இப்போது கிடைக்காது. அதனால் வசதி இல்லாத ஏழைப்பெண் வந்தால் வந்து விட்டுப் போகட்டும். கல்யாணமாகி வந்ததும்தான் பெரிய இடத்து மனுஷியாகி விடப்போகிறாளே! அதே போல வரப் போகிறவள் அழகு சுந்தரியாக இருக்க வேண்டும் என்பதும் கட்டாயம் கிடையாது. மரகதமே அழகில் ரொம்ப ரொம்ப சுமார்தானே? ஆனால் வருகிறவள் அழகாக இருந்தால் ரொம்ப சந்தோஷம்தான்! ஆனால் பெண் கறுப்பாக மட்டும் இருக்கக்கூடாது. சபரிநாதனே நல்ல சிகப்பு நிறம். கறுப்பாக இருந்தால் அவருக்கு பிடிக்கவும் செய்யாது!
இன்னொரு முக்கியமான விஷயம் பெண்ணின் வயது. சபரிநாதனின் மேட்டு விழிகள் அப்படியும், இப்படியும் சஞ்சரித்தன. அவருக்கு வயசாகி விட்டது என்பதற்காக வயசான பெண்ணையே அவர் கல்யாணம் செய்துகொள்ள முடியாது. அது பார்ப்பதற்கு வேடிக்கையாக, சஷ்டியப்த பூர்த்தி மாதிரி இருக்கும். அதனால் குறைந்த வயசுப் பெண்ணாகத்தான் பார்க்க வேண்டும். அவரின் மேட்டு விழிகள் அதிகமாக அலை பாய்ந்தன. முப்பத்தைந்து வயசுப் பெண்? ம்ஹூம் அவ்வளவு வயசு வேண்டாம்! முற்றின முருங்கைக்காய் மாதிரி இருப்பாள். முப்பது வயசு? அதுவும்கூட ஜாஸ்திதான்.
இருபத்தைந்திலிருந்து இருபத்தேழு வயசுப் பெண்ணாக இருந்தால் நான்றாக இருக்கும் என்று தோன்றியது. இதையும் விட குறைந்த வயசுப் பெண்ணாக பார்த்தால் அது ரொம்ப பேராசை என்று தோன்றியது. அவ்வளவு பேராசை அவருக்குக் கிடையாது. ஆனால் ஒரு விஷயத்தில் சபரிநாதன் மிகவும் கறாராக இருந்தார். வரப் போகிறவள் கன்னி கழியாதவளாக இருக்க வேண்டும். இது அவருக்கு ரொம்ப ரொம்ப முக்கியம்.
தவிர, உருவ அமைப்பில் வாழைக்காய் கெச்சல் மாதிரி ஒல்லியாக இல்லாமல், சற்று பூசினாற்போல் வளப்பமாக இருக்க வேண்டும். ஜோடிப்பொருத்தம் நன்றாக அமைந்தால்தான் யோனிப் பொருத்தமும் கூடிவரும். முயங்கும் போது அவரின் வேகத்துக்கு அவள் ஈடு கொடுத்தல் வேண்டும். அதயெல்லாம் முதல் பார்வையிலேயே அளந்து விடுவார் சபரிநாதன்…
விவாகரத்து பெற்றவளாகவோ அல்லது விதவைப் பெண்ணாகவோ இருத்தல் கூடாது. இப்படி நினைத்துப் பார்த்தபோது அவருடைய நினைப்பில் ஏனோ காந்திமதி வந்தாள். மரகதம் இறந்துபோன பிறகு, அவருக்கும் காந்திமதிக்கும் இடையே நடந்துவரும் மெளன நாடகத்தின் பல காட்சிகளை ஒருவித கள்ளத்தனத்தோடும், அலட்சியத்தோடும் நினைத்துப் பார்த்தார். அவை எல்லாமே அவருக்கு இந்த நிமிஷம் ஒவ்வாததாக இருந்தது. இனிமேல் காந்திமதியை நிமிர்ந்து பார்ப்பதில்லை என்று தனக்குள் தீர்மானம் செய்துகொண்டார்.
பல விதமான நினைப்புகளில் மூழ்கி அவர் கடைசியாக கயிற்றுக் கட்டிலை விட்டு எழுந்தபோது, அவருக்கு என்னமோ கல்யாணமே நடந்து முடிந்து விட்டாற்போல இருந்தது. வேத பாடசாலையை அவர் தாண்டிய போது எதிரே முருகபூபதி வந்தார். சபரிநாதனைப் பார்த்து நட்புடன் ஒரு புன்னகையை வீசினார். சபரிநாதனும் பதிலுக்குப் புன்னகைத்தார்.
“அண்ணாச்சி நம்ம தொகுதிக்கு கேண்டிடேட் முடிவு பண்ணியாச்சி.”
“அப்படியா, யாருவே அது?”
“நம்ம முக்கூடல் கோமதிநாயகம்தான்…”
நிஜமாகவே சபரிநாதன் திகைத்துப்போனார்.
“என்னவே இது, அவன் ஒரு சரியான கள்ளத் தோணில்லா.”
“என்ன அண்ணாச்சி பண்ணச் சொல்றீக? அவன்தான் தோணி தோணியா ஏகப்பட்ட பணம் வெச்சிருக்கானே!”
“தோணி தோணியா கிழிச்சான்… எனக்கு தெரிஞ்சி அவன் ‘கள்ளப் பதனி’ குடிச்சிட்டு அலைஞ்ச பய. அவன்ன்லாம் ஒரு கேண்டிடேட்டு. நாடு போற போக்கு சரி கெடையாது. வேற என்னத்தைச் சொல்ல… வரட்டா? சாவகாசமா வீட்டுப் பக்கம் வாவே…”
சபரிநாதனுக்கு முருகபூபதி மேல் ஏற்பட்டிருந்த கோபம் தீர்ந்து போயிருந்தது. வரப் போகிற தேர்தலில் அவரை நிற்கச்சொல்லி இதே… நால்வர் அணி அன்றைக்கு வரப்போய்தானே இரண்டாம் கல்யாணம் என்ற விதை சபரிநாதன் மனசில் தூவப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக முளைக்க ஆரம்பித்தது…?
பாலம் கடந்து படித்துறையை ஒட்டி நடந்து வலப்புறம் ஏறி தெரு முனையில் திரும்பியதுமே சபரிநாதன் பார்த்துவிட்டார்! வீட்டுத் திண்ணையில் காந்திமதி நின்று கொண்டிருந்தாள். ‘இவ ஒருத்தி’ என்ற பெரிய சலிப்பு அவருள் எழுந்தது. சபரிநாதனின் முழங்கால்களைப் பார்க்காமல், அவரின் முகத்தை காந்திமதி கேள்விக்குறியோடு உற்றுப் பார்த்தாள். சபரிநாதனின் முகத்தில் அவளுக்குப் பதில் இருந்தது… ஆம், அவர் அவளை ஏறிட்டுப் பார்ப்பதை முற்றிலுமாகத் தவிர்ந்தார்.