ஏகாம்பரம் முற்போக்குச் சிந்தனைகள் கொண்டவர். பெண்ணுரிமைக்காக வாதாடுபவர். மேடைகளில் முழங்குபவர்.
அன்றைக்கு விடுமுறை தினமாக இருந்ததால், மாலையில் தன் 15, 17 வயதுப் பிள்ளைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு, அருகிலிருந்த மைதானத்துக்குச் சென்று, வியர்க்க விறுவிறுக்க இரண்டு மணி நேரம் ஃபுட்பால் விளையாடிவிட்டு வந்தார்.
ஹால் ஊஞ்சலில் சோகமாக உட்கார்ந்திருந்தாள் அவரின் மகள் சித்ரா.
“என்னம்மா வருத்தமா உட்கார்ந்திருக்கே?” என்று கேட்டார் அன்பாக.
“பெண்ணுரிமை அது இதுன்னு மேடையில நீங்க பேசுறது ஊருக் கான உபதேசம் தானேப்பா?” என்றாள்.
“என்னம்மா இப்படிக் கேட்கறே? நான் மனப் பூர்வமாவே அதை ஆதரிக்கிறேம்மா! உனக்கு ஏன் அதுல சந்தேகம்?” என்றார் புரியாமல்.
“பின்னே ஏம்ப்பா… மதியம் கேரம்போர்டு விளையாட என்னைக் கூப்பிட்ட நீங்க, சாயந் திரம் ஃபுட்பால் ஆட அண்ணன்களை மட்டும் கூப்பிட்டுக்கிட்டுப் போனீங்க?”
வாயடைத்து நின்றார் ஏகாம்பரம்!
– 12th செப்டம்பர் 2007