பூர்ணோதயம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 7, 2023
பார்வையிட்டோர்: 6,619 
 
 

இரயிலில் அன்று நல்ல கூட்டம். First class கம்பார்ட்மெண்ட் கூட நிரம்பி வழிந்தது. “ஹே…இது First class கம்பார்ட்மெண்ட். இறங்கு, இறங்கு…” அவசரமாக ஏறிய ஒரு சிறு பையனை அதட்டி இறக்கி விட்டார் அங்கு நின்று கொண்டிருந்த ஒருவர்.

அவர் தோரணையும், மிடுக்கும் ஒரு அச்சத்தை உருவாக்கியது.

“ம்ஹும். கொஞ்சம் சாதாரணமாக சொன்னால்தான் என்ன ? பாவம் அந்த பையன் தெரியாமல் ஏறி விட்டான். சரி நாம் இறங்க வேண்டிய மாம்பலம் வருவதற்குள் ரெடி ஆகி கொள்வோம்” என்று நினைத்தபடி தன் இடத்தில் இருந்து எழுந்து நின்றாள் அவள். பார்த்தாலே தெரியும் நிறை மாத கர்ப்பிணி. மெதுவே நகர்ந்து வரும்போதே தலை சுற்றியது. சுற்றி இருந்த பெண்கள் கூட்டத்தில் யாரும் இவளை கவனிக்கவில்லை.

“லேசாக மயக்கம் வருவது போல இருக்கே. முடியுமா” என்று யோசித்தவாறே ஒருவழியாக இறங்கி platform-ல் இருந்த பெஞ்ச்-ல் அமர்ந்தாள். என்ன செய்வது என்று தன்னிரக்கம் சூழ தவித்துப்போனாள்.

கண்களை மூடி அமர்ந்து இருந்தவளை ஒரு குரல் “சிஸ்டர் கொஞ்சம் கண்ணை திறங்க” என்று எழுப்பியது. கண்களை திறந்தவள் முன்பு ஒரு வாட்டர் பாட்டில் நீட்டப்பட்டது. “பயப்படாதீங்க; சில்லுனு தண்ணி குடிங்க. கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுவீங்க, குடிங்க” கனிவான குரலுடன் நின்று கொண்டு இருந்தார் இரயிலில் பார்த்த அதே மனிதர்.

தண்ணீரை வாங்கி குடித்து விட்டு அப்படியே முகத்தையும் கழுவிக்கொண்டாள் அவள். “போன ஸ்டேஷன்ல இருந்தே உங்களை நான் கவனித்தேன். நீங்க கஷ்டப்படுவது போல் தோன்றியது. கேட்டு உங்களை மேலும் பதட்டப்பட வைக்க கூடாது என்றுதான் நீங்கள் இறங்கியவுடன் உங்கள் பின்னாடியே இறங்கி விட்டேன். இப்ப பரவாயில்லையா? சொல்லுங்க…நீங்க எங்கே போகணும்? நான் கொண்டு வந்து விடுகிறேன்”.

“ரொம்ப நன்றி Bro. என் கணவர் ரயில்வே-ல வேலை செய்கிறார். அவர் ஆபீஸ்ல இருந்து இங்கு வந்து விடுவார் இன்று என் கணவருக்கு பர்த்டே. முப்பாத்தம்மன் கோவிலுக்கு போகத்தான் நான் வீட்டில் இருந்து கிளம்பி வந்தேன்.”.

“அப்படியா அவர் வரும் வரைக்கும் நான் இருக்கிறேன்.”

“நான் பூர்ண சந்திரன். இந்திய ராணுவத்தில் ஒர்க் பண்ணுகிறேன். அந்தமான்-ல இருக்கேன். இப்போ ஒரு மாத லீவு-ல வந்து இருக்கேன். நாளைக்கு எனது பிறந்த நாள். நண்பர்கள், உறவினர்கள் எல்லோரையும் சேர்ந்தாற்போல் பார்க்கலாம் என்று நாளை ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்து இருக்கிறேன். குடும்பத்தினரை விட்டு தனியே இருக்கும் எனக்கு இந்த சந்தோஷமும் கொண்டாட்டமும் அடுத்து ஒரு வருட காலத்திற்கு இதமாய் மனதில் நிறைந்து நினைவில் இருக்கும் . அது விஷயமாகத்தான் ஹோட்டலுக்கு போய் கொண்டு இருக்கிறேன். உங்களை பார்த்தேன்”.

“என்ன…. நான் அந்த பையனை அதட்டி இறக்கி விட்டதை பார்த்து என்னை மனதிற்குள் திட்டி இருப்பீர்களே. அவன் தெரிந்து ஏறினானோ தெரியாமல் ஏறினானோ. ஆனால் தப்பு என்று தெரிந்த நாம் அதை திருத்த வேண்டும். மற்றொரு விஷயம், இன்னும் ரெண்டு ஸ்டேஷன்ல செக்கிங் வந்தால் அபராதம் தீட்டி இருப்பார்கள். நான் அதிலிருந்து அவனை காப்பாற்றி இருக்கேன் ” என்று சிரித்தார்.

“மிலிட்டரி மென் என்றால் ரொம்ப கெடுபிடிதான். ஆனால் நீங்க மிகவும் friendly ஆக இருக்கிறீர்கள்.”

“கல்லுக்குள் ஈரம்; கல்லும் கனியும் என்று நினைத்தீர்களா..? அடிப்படை குணங்கள் வேறு; பார்க்கும் வேலைக்கான கட்டுப்பாடுகள் வேறு. சொல்லப்போனால் மிலிட்டரி மென் ஆகிய எங்களுக்குத்தான் தாய் நாடு, தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் இவர்கள் மீதான அக்கறை அதிகம் இருக்க வேண்டும். பொறுப்பும் அதிகம். என்னுடைய கடமையைதான் நான் செய்தேன்.”

இருவரும் பேசிக்கொண்டே அமர்ந்திருந்தனர்.

அதோ, ரமேஷ் வந்து விட்டார். அருகில் வந்த கணவரை அறிமுகப்படுத்தினாள். தனக்கு மயக்கம் வந்ததையும், அவர் தக்க சமயத்தில் உதவியதையும் சுருக்கமாக எடுத்து கூறினாள். “ரொம்ப நன்றி சார். உங்களை மறக்கவே மாட்டோம்…” நன்றி கூறினார் அவளது கணவர்.

“அது இருக்கட்டும். யாரையாவது துணைக்கு அழைத்து வந்து இருக்கலாம் இல்லையா?”

“வீட்டில் வேறு யாரும் இல்லை; நாங்கள் இருவர் மட்டுமே. நட்புக்கரம் நீட்டி காப்பாற்ற நீங்கள் வந்து விட்டீர்கள்…” சிரித்தார் அவர்.

“ஓ.கே. பிறந்த நாள் வாழ்த்துக்கள்…”. கை குலுக்கினார் பூர்ண சந்திரன்.

“உங்களுக்கும் எங்களது வாழ்த்துக்கள். ஒரு நாள் முன்னதாகவே தெரிவித்துக் கொள்கிறோம்…” – இது ரமேஷ்.

“ம்ஹும். இது போதாது. நாளைக்கு பார்ட்டிக்கு நீங்கள் கட்டாயம் வர வேண்டும்”. இடம், நேரம் எல்லாம் கூறி அழைப்பு விடுத்தார் பூர்ண சந்திரன். சரி என்று சம்மதம் கூறி விடை பெற்றனர்.


அடுத்த வருடம்; அதே நாள்; Train-ல் விஜியும் ரமேஷும் தங்கள் குழந்தையுடன் பயணித்துக்கொண்டு இருக்கும்போது…..“ஹலோ சிஸ்டர். எப்படி இருக்கீங்க.”. சந்தோஷமாக கூவிக்கொண்டே கம்பார்ட்மெண்ட் கடைசியில் இருந்து ஓடி வந்தார் பூர்ண சந்திரன். ஆசையுடன் குழந்தையை தூக்கி கொண்டார்.

“பரவாயில்லையே தெரியாதவர் என்றாலும் பாப்பா அழாமல் சமர்த்தாக என்னிடம் வந்து விட்டாள்”

“உங்களைத்தான் அவளுக்கு ஒரு வருடம் முன்னாலேயே தெரியுமே” என்று சிரித்தாள் விஜி..

“என்ன ஒரு ஆச்சர்யம். அதே நாளில் மீண்டும் சந்தித்து இருக்கிறோம். போன வருடம் உங்களை பார்ட்டியில் ரொம்ப எதிர்பார்த்து காத்து இருந்தேன். நீங்கள் வரவே இல்லை.” சிறிதே வருத்தமும் கோபமும் சேர்ந்து ஒலித்தது அவர் குரல்.

“அதற்கு இவள்தான் காரணம். மிலிட்டரி மென். உங்கள் பிறந்த நாள் அன்றுதான் இவளும் பிறந்தாள். இன்னும் சொல்லப் போனால் பார்ட்டிக்கு கிளம்பிய நேரத்தில்தான் பிறந்தாள்.”

“மறு நாள்தான் பார்க்க போகிறோம் என்று உங்கள் மொபைல் எண் கூட வாங்க மறந்து விட்டேன். உங்களை தொடர்பு கொள்ளவே முடியவில்லை.”

“அடடே…அப்படியா?. ஆமா, நானும் பாப்பா, பாப்பா என்றே சொல்லி கொண்டு இருக்கேன். குழந்தைக்கு பேர் என்ன?”

விஜியும் ரமேஷும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டே ஒருமித்த குரலில் கூறினர் “பூர்ணிமா” .

கேட்டவுடன் பூரண சந்திரனின் கண்கள் கலங்கின. “நான் இந்த அளவு உங்க அன்புக்கு பாத்திரமானவனா? ரொம்ப சந்தோஷமா இருக்கு” நெகிழ்ந்து போனார் .

“பாருடா….. கல்லுக்குள் ஈரம்; கல்லும் கனியும்”…சிரித்தாள் அவள்

“மிலிட்டரி மென்-குதான் தாய் நாடு, தாய்மார்கள், பெண்கள், குழந்தைகள் இவர்கள் மீதான அக்கறை அதிகம் இருக்க வேண்டுமா? எங்கள் இருவர் உயிரை காப்பாற்றியவர் நீங்கள். எங்களுக்கும் நாட்டை காக்கும் வீரர் மீது மரியாதை, அன்பு, பாசம், அக்கறை, நன்றி எல்லாம் உண்டு Bro.” மூவர் முகத்திலும் புன்னகையே..

“சரி நாளைக்கு பார்ட்டியை எல்லோரும் சேர்ந்து கொண்டாடலாம். அப்பா, பெண், இந்த மிலிட்டரி மாமா எல்லோருக்கும் சேர்த்து மூன்று கேக் வெட்டலாம்..”

“ம்.. அது மட்டுமல்ல…நம் நட்புக்கும் நாளை ஒரு வயதாகிறது இல்லையா.. அதனால் நான்கு கேக் வெட்ட வேண்டும்.”…விஜி.

“ஆனால் முதல் பிறந்த நாளுக்கு, நாளை நீங்கள் வேறு எதுவும் function வைத்து இருக்கிறீர்களா ?”.

“இல்லை. இல்லை. இரண்டு வாரங்களில் குழந்தையின் ஸ்டார் பர்த்டே வருகிறது. அதைத்தான் நாங்கள் கொண்டாட இருக்கிறோம்.” அதுவும் ஆகஸ்ட் 15-ம் தேதி தெரியுமா ? நீங்கள் கட்டாயம் வர வேண்டும்.

“அடடா கேக் – எண்ணிக்கை கூடிக்கொண்டே போகிறதே….. !”

“நட்பாக தொடங்கி உறவாக மலர்ந்த உங்களை எனக்கு அறிமுகப்படுத்திய இந்த பிறந்த நாட்களை நான் என்றும் மறக்க மாட்டேன். “

அடுத்தடுத்து வந்த பிறந்த நாள்களை அவர்கள் சேர்ந்து கொண்டாடினார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா?

அழகான, அன்பான நட்பு ஒன்று அங்கு உதயமானது…பூர்ணோதயம்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *