பூனைத் தாய்!

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: March 12, 2021
பார்வையிட்டோர்: 3,635 
 
 

(கொஞ்சம் நிஜம் கொஞ்சம் கற்பனை….படித்து அழுதால் கதாசிரியர் பொறுப்பல்ல!!)

கண் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த கனகாவின் கனவில் ஏதோ ஒரு காட்சி…. கணவன் ராஜேஷை தேடுவதுபோல்…. அது அவள் கனவை கலைத்து கண் திறக்கச் செய்தது……ராஜேஷ் எங்கே கட்டிலில் காணவில்லையே என எழுந்தமர்ந்து சோம்பலை முறித்தவாரே கழிவறையை நோக்கிப் பார்த்தாள்.

ராஜேஷ் கழிவறையிலிருந்து வெளிவந்து கனகாவைப் பார்த்தான்.

“என்ன அவ்வளவு சீக்கிரம் எழுந்துகிட்ட?….” என்றவாறு கட்டிலில் கனகாவுக்குப் பின்னால் அமர்ந்து அவள் தலையையும் கழுத்தையும் மசாஜ் செய்தான்.

“நீயும் தான் இவ்வளவு சீக்கிரம் எழுந்துகிட்ட….”என்றவள் அவனின் மசாஜில் மயங்கி அவன் கன்னத்தைப்பற்றி வருடினாள்.

இருவரும் அன்றைய கிரஹப்பிரவேச சடங்குகள் முடித்து உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் மதிய உணவு அருந்திவிட்டு கலைந்து போனபின் அசதியில் சுமார் இரண்டு மணிநேரம் தூங்கி எழுந்திருந்தினர்.

“பயங்கர அசதியில்ல?” ராஜேஷ் இப்போது கனகாவின் தோள்பட்டைகளை மசாஜ் செய்தவாறு அவளின் இரு கைகளையும் வருடி உள்ளங்கைகளை பற்றிக்கொண்டு வினவினான்.

“ஆமா…..அன்னிக்கு… கல்யாண நாள் அன்னிக்கு, எல்லா சடங்கும் ஏனோதானோன்னு… ஆடுமாடு மாதிரி இருந்திட்டு கடைசியா பட்ட அதே மாதிரியான அசதியா இருக்கு!” என்றாள் கனகா.

“பாத்ரூம்ல எனக்கும் இந்த நினைப்பு தான்…எத்தனை எத்தனை சடங்குகள்…. சம்பிரதாயங்கள்….ஏனோதானோன்னு பண்ணிக்கிட்டு….இதெல்லாம் தேவைதானான்னு தோணுது…..குருட்டு நம்பிக்கைபோல் தோணுது…”அவள் கழுத்தில் தன் முகத்தாடையை லேசாக அழுத்தி ‘ஓ பாப்பா லாலி’ போல் அவளையும் சேர்த்து அசைத்தான் ராஜேஷ்.

“என்னப் பண்றது?… நம்ம மக்கள் எல்லாரையும் திருப்திப் படுத்தவேண்டியே இதெல்லாம் செய்யறோம்!” சலிப்புடன் பதிலளித்தாள் கனகா.

“ஆமா ….இப்படித்தான் வழிவழியா… காலம் காலமா… பரம்பரை பரம்பரையா பண்ணிக்கிட்டு இருக்கோம்…..இந்த கிரஹப்பிரவேசத்துக்கு பசுமாடு ஒன்னை கூட்டிவந்து வீட்டுக்குள்ள சாணிபோட வெச்சி இருக்கணும்….இங்க சிங்கப்பூர்ல இது பண்ண முடிஞ்சதா?…” ராஜேஷ் சிரித்தான்.

“அது மட்டுமா?….இந்த புரோகிதர் என்ன பண்ணார்?…. மந்திரம் சொல்லிக்கிட்டே…. நடுநடுவுலே ஐபோன்ல யார்கிட்டயோ பேசறார்….’இதோ வந்திடறேன்’னுட்டு…. இங்க சொல்ல வேண்டிய மந்திரத்தையெல்லாம் கிடுகிடுனீட்டு சொல்லிட்டு…. மூன்று மணிநேரம் சடங்கை இரண்டு மணிநேரத்துல சொல்லி முடிச்சிட்டு காச வாங்கிட்டு பறக்கிறார்!!” கனகா கடுப்பாக பேசி ராஜேஷைவிட்டு விலகி அமர்ந்து அவனை எதிர்நோக்கி அமர்ந்தாள். “இன்னும் ஆஸ்திரேலியா அமெரிக்காவுல எங்கோ சிட்டியைவிட்டு தூரத்துல…. ஒரு சின்ன நகரத்துல இருந்தா இந்த சடங்கையே பண்ணியிருப்போமா தெரியல!” என்று மேலும் தொடர்ந்தாள்.

தலைகுனிந்து ஏதோ ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிய ராஜேஷ் சில வினாடிகளில், அவளை பார்த்து ” ஆஸ்திரேலியா சொன்னதும் பிளாஷ்பாக் மாதிரி என் நண்பன் பீட்டருக்கு நடந்த சம்பவம் கண்முன்ன வருது……பாவம் அவன்….உனக்கு ஒரு முறை சொன்னேனே?….காதல் பண்ணி சர்ச் சம்பிரதாயப்படி ஆண்டவன் அருளாலே கல்யாணம் நடந்தது….ஆனா என்ன ஆச்சு?”‘ பேசிய ராஜேஷ் கண்களில் சோகம் தெரிந்தது….”எல்லா சடங்குகள் சம்பிரதாயங்கள் அவன் மதத்துலயும் பின்பற்றியும்….. என்ன ஆச்சு?….பாவம்….அந்த காதல்ஜோடி….கல்யாணம் பண்ணிகிட்ட அன்னிக்கே கார் விபத்துல செத்து போனாங்களே!!…ஐயோ!”

“யார் என்ன பாவம் செய்தார்களோ ஒன்னும் புரியலே!……” சலிப்பாக பேசியவள் அவன் தலையை கோதினாள்.

“ஒன்னுமே புரியல உலகத்துல… ஒன்னுமே புரியல உலகத்துல…என்னமோ நடக்குது….மர்மமா இருக்குது….. ஒன்னுமே புரியல உலகத்துல….. நம்ம கடவுளுங்களுக்கு எல்லாம் மர்மம்னா ரொம்போ புடிக்குமோ?!!” என்றவாறே ராஜேஷ் எழுந்து சென்று இருவருக்கும் காபி போடலானான்.

கனகா எழுந்து சென்று ஜன்னல் திரையை விலக்கி இன்னொரு கொட்டாவிக்கு சுதந்திரம் கொடுத்தவாறு, தன் கண்ணெதிரே நீல வண்ணக் கடலுக்கு மேல் பரந்து விரிந்துகிடந்த வானத்தைப் பார்த்து பூரிப்பும், பிரமிப்பும் அடைந்தாள்…… ராஜேஷ் இந்த அடுக்குமாடி கட்டிடத்தில் நல்லதோர் வீட்டைத் தான் தேர்ந்து எடுத்திருக்கிறான் என்று நினைத்துக்கொண்டாள். அப்படியே அழகை ரசித்துக்கொண்டிருந்தவள், ஒன்று சேர்ந்த மேகங்கள் சில லேசாக மழையை வரவழைத்ததைப் பார்த்து விரைந்து சென்று பால்கனியில் நின்றுகொண்டு எதையோ தேடினாள். அவள் முகம் பிரகாசம் ஆனது….இன்னும் அவள் தேடுவது தெரியாமல் இருக்க….. வானத்தை முன்னும் பின்னும் இரு பக்கமமுமாக தேடி கண்களை உருட்டினாள்.

“என்ன தேடுற?…” என்றவாறு காபியை அவளிடம் நீட்டினான் ராஜேஷ். அங்கிருந்த நாற்காலி ஒன்றில் அமர்ந்து தன் காபியை மெல்லப் பருகினான்.

“இல்ல…..இப்போ இப்படி சாரல் அடிக்குதா?…..கொஞ்சம் வெய்யிலும் அடிக்குதா?…… இந்தமாதிரி நேரத்துல வானவில் அந்த எதிர்புறம் தெரியும் பாருங்க!”….கனகா துறுதுறுவென்று ஒரு ஆனந்தமான சிறுமியை போல் கையசைத்து கையசைத்து பேசியதை ராஜேஷ் புன்முறுவலுடன் ரசித்தான். தகவல் தொழில்நுட்ப பொறியாளனான அவனுக்கு கனகா சொல்வது புரியவில்லை…உண்மைதானா என்பதும் தெரியவில்லை….இயற்கையை அந்த அளவுக்கு நேசிக்க நேரம் போதவில்லை!!.

“உண்மையாவா?” என்று கிண்டல் செய்வதுபோல் அவளை பார்த்தான்.

“பெட்?…என்ன பெட்?…நான் ஜெயிச்சா என்ன கொடுப்பீங்க?” கனகா அவன் பக்கம் திரும்பி வினவி, பின் அவன் அருகே வந்து அவன் மடியில் அமர்ந்து காபி பருகியவாறு தூரமாக கடலையும் வானத்தையும் நோக்கினாள்.

“பெட் தானே?…என்னையே கொடுக்கிறேன்!” என்றவாறு அவள் கன்னத்தில் முத்தமிடஎத்தனித்தான்.

தொலைதூரத்தில்அடி அடியாக வளர்ந்து வந்த அந்த வானவில்லைப் பார்த்துப் பூரிப்பும், பிரமிப்பும் அடைந்தாள் கனகா “வந்திடுச்சு….. வந்திடுச்சு….. அங்கபாருங்க….அங்கபாருங்க….!” கனகா உண்மையிலே துள்ளிக்குதித்தாள். கொஞ்ச நேரத்தில் அந்த வானவில் முழுமை பெற்று பிரகாசமானது…. அத்தோடு நிற்காமல், கூடவே இன்னுமொரு வானவில் ஜோடி சேர்வது போல் எழும்பியதும்… கனகாவின் ஆனந்தத்திற்கு அளவில்லாமல் போய் சிறு நடனமே ஆட ஆரம்பித்தாள்!!

கடல் விரிப்புக்கு முன்னால் எழுப் பப் பட்டிருந்த அந்த இருபத்தெட்டு அடுக்குமாடி சொகுசுக் குடியிருப்பில் விடாப்பிடியாக முயற்சித்து, உச்சி மாடியில் அந்த வீட்டை விலைக்கு வாங்கி நேற்றுதான் குடி புகுந்திருந்தனர்…..அடுத்த நாள் இப்படி ஒரு அற்புதமான இயற்கைக் காட்சியை பார்த்ததும் அவள் உடல் முழுதும் சிலிர்த்தது. வாழ்க்கை முழுதும் இனி இன்ப மயம் தான் என்று துள்ளி கணவன் ராஜேஷை முத்தமிட்டாள்.

இரட்டை வானவில் முழுமையாக பிரகாசமாக தெரிய ராஜேஷ் ஓடிச்சென்று தன் கைபேசியை கொண்டுவந்து அதை படம்பிடித்தான்.

“ராஜேஷ்…. ராஜேஷ்….. நான் கடவுளைப் பார்த்து விட்டேன். நான் கடவுளைப் பார்த்து விட்டேன்….நீ எப்படி ஃபீல் பண்ற?!” என்று தன் மென்மையான கைகளால் அவன் கைகளை பற்றிக்கொண்டு கேட்டாள்.

அந்த மகத்தான இரட்டை வானவில்லை கண்கொட்டாமல் ராஜேஷ் பார்த்தான் “மை காட்.. மை காட்!..’ என்று வியந்து போனான். அந்த வானவில்லைப் பார்த்து அதிர்ந்தும் போனான்.

ஆனால்…. ஆனால்…..அந்த வானவில்லைப் போன்று தான், தன் வாழ்க்கையில் இன்பமும் நிலைத்து இருப்பதில்லை என்று அவன் உணர்ந்த போது மனம் கசந்தது!…….தான் உணர்ந்தது போலவே அவளும் உணர்ந்திருப்பாளோ என்ற குழப்பத்துடன் அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டான்.

“புது வீட்டுக்கு வந்த ராசி… இனியாவது நமக்குக் குழந்தை பிறக்கட்டும்” என்று தொண்டை கரகரக்கக் கூறியவாறே தன் ஆறு வருட தாம்பத்ய வாழ்க்கையை எண்ணிப் பார்த்தான்.

இருவருக்கும் உடலில் எந்தக் குறையும் இல்லை என்பது உறுதி ஆகியும்….. எத்தனையோ கோவில் குளம் சுற்றி யும்….. ஆறு வருடங்களுக்குப் பிறகும் குழந்தை பிறக்கவில்லை. எத்தனையோ உல்லாசப் பயணங்களை மேற்கொண்டு வாழ்க்கையை இன்பமாகத்தான் வாழ்ந்து வந்தார்கள் இருவரும்.

குழந்தை ஒன்றை இன்னமும் பெற்றெடுக்காத குறையை எண்ணி, இவர்களை விட சுற்றமும் நட்பும் தான் அதிகமாகக் கவலைப் பட்டார்கள்!!….. அவர்களின் நச்சரிப்பு தாங்காமல் ஒரு பிள்ளையைப் பெற்று விடத் துடித்தார்கள் இருவரும்.

இரட்டை வானவில்லைப் பார்த்த இந்த ஆனந்தமான தருணத்தில் அவளை மேலும் குஷிப்படுத்த ….”நீ பெட்ல ஜெயிச்சுட்ட!!…வா,…இப்போ நான் என்னையே உனக்கு தரப்போறேன்!…… எனக்கென்னமோ இந்தமுறை நமக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம்னு தோணுது!!….”” என்றவாறு ராஜேஷ் கனகாவை அலாக்காக தூக்கிக் கொண்டு கட்டிலை நோக்கி விரைந்தான்…

இரண்டு மாதங்கள் உருண்டோடின…. கனகா கர்ப்பமானாள்!!

அவர்கள் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை…..பெற்றோர்களுக்கு முதல் குழந்தை தரும் ஆனந்தம் அது…..அதைவிட ஆனந்தம் வேறு உண்டோ?!

அவர்களோடு ஒன்றாக வசித்துவந்த ராஜேஷின் பெற்றோர்களும் முதல் பேரனை எண்ணியெண்ணி சந்தோஷப்பட்டார்கள்…. எல்லா சுற்றமும் நட்புகளுக்கும் நற்செய்தியை தெரிவித்தார்கள்.

“ஏன் ராஜேஷ், வெளி நாட்ல…. Wood (மரம்) Bullock (காளைமாடு) மாதிரில்லாம் பெயர் வைச்சுக்கறாங்க இல்ல?….. அன்னிக்கு அந்த இரட்டை வானவில்லை பார்த்தப்புறம் தான் நான் கர்பமானேன்….. அதனால, நாம நம்ம குழந்தைக்கு வானவில்னு பேர் வைச்சா என்ன?!” ராஜேஷின் மடியில் சாய்ந்திருந்த கனகா யோசனையுடன் கூறினாள்.

கொல்லென்று சிரித்த ராஜேஷ் “அப்படியே வைச்சுட்டாப் போச்சு!… குழந்தைங்களுக்கு பெயர் கொடுக்கிறதுல நாம ஒரு புரட்சியை ஆரம்பிப்போம்” என்று சம்மதம் தெரிவித்தான்…….ஆனால் சட்டென்று ‘வானவில் நிலையற்ற ஒன்று’ என்ற உணர்வு மனதை உறுத்தியது….. அவளிடம் எதுவும் சொல்லவில்லை.

கனகா இந்தியாவில் இருக்கும் தன் பெற்றோர்களுடன் வாரம் இரண்டு மூன்று முறை தவறாமல் தொலைபேசியில் பேசினாள்.

மாதம் தவறாமல், வளர்ந்து வரும் கருவைப் பரிசோதித்துக் கொண்டே வந்தார்கள்…. அம்மாவும் மாமியாரும் சொன்னதையெல்லாம் கடைபிடித்தாள் கனகா.

”உனக்கு பையன் வேணுமா? இல்ல பொண்ணா?” கனகா ராஜேஷை சீண்டினாள்.

“நீயே சொல்லு….. உனக்கு என்ன வேணும்?”

அவர்களின் ஆர்வமான முகத்தைப் பார்த்த டாக்டர், “உங்களுக்குப் பையன் தான்” என்று உறுதிப் படுத்தினார். “ஆனா இதை யாருக்கும் சொல்லக் கூடாது….. சட்டம் தெரியுமில்ல?” என்றவாறு அவர்களை வழியனுப்பி வைத்தார் டாக்டர் விமலா.

அன்று ஊடல் ஒன்று பூகம்பமாக எழும்ப….. நன்றாக சண்டை போட்டுக் கொண்டு பிறகு, அதன் காரணமாக இரவில் இன்ப வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ந்தார்கள்.

ஆறாவது மாதம் சோதனைக்குச் சென்ற போது அவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது!

படுத்துக்கொண்டிருந்த கனகாவின் வயிற்றுக்குள் இருக்கும் ஆறுமாத குழந்தையை ஸ்கேன் மூலம் பற்பல கோணங்களில் கூர்ந்து கவனித்த டாக்டர்….கிட்டத்தட்ட அரைமணி நேரத்திற்குப்பின்… கனகாவின் சோதனை முடிந்த பின் அவர்களை சிறிதுநேரம் வெளியே அமரும்படி கூறினார்.

பிறகு அமெரிக்காவில் இருக்கும் தனது டாக்டர் நண்பர்களை தொடர்புகொண்டு, ஸ்கேன்களை ஈமெயில் செய்து…. கொஞ்சநேரத்தில் அவர்களின் அறிவுரையையும் அறிந்துகொண்டு…. கனகாவை கொஞ்சம் வெளியே காத்திருக்கும்படி கூறி ராஜேஷை மட்டும் அழைத்தார். ஆனால் கனகா விடாப்பிடியாக அவர்களை தொடர, டாக்டரால் மறுக்க முடியவில்லை.

இருவரும் அமர்ந்தபின் அவர்களுக்கு தண்ணீர் வழங்கிய டாக்டர் “ஸ்கேனிங்ல உங்க குழந்தைக்கு ஒரு பிரச்சினை இருக்கிற மாதிரி தெரியுது” என்றார். அந்த ஏசி அறையிலும் டாக்டர் முகம் வியர்த்தார்!.

“என்ன பிரச்சினை டாக்டர்?” இருவரும் பதட்டம் அடைந்து உடல் நடுங்கினார்கள்.

“முதுகுத் தண்டு எலும்புக்குக் கிட்டே ஒரு பெரிய ஓட்டை தெரியது” டாக்டரின் கைகள் லேசாக நடுங்குவதை ராஜேஷ் கவனித்துவிட்டான்….டாக்டர் கைகளைப் பிசைந்தார். “எதனால?…எப்படி?… ஏன் போனமுறை ஸ்கேன் செய்தப்பல்லாம் தெரியல?…ஒன்னும் விளங்களை!….முதுகுத்தண்டு நடுவுல ஒரு ஓட்டை …ஓ மை காட்….எதனால?…எதனால?…அதுலேருந்து கொஞ்சம் நீர்….ஏதோ ஒரு திரவம் கசியுது…..அது இன்னும் பெரிய பிரச்சினையோன்னு ஒரே குழப்பமா இருக்கு” டாக்டரின் குரல் பிசிறியது

‘ஆண்டவா!….எங்களுக்கு ஏன் இந்த சோதனை?’ என்று மனதிற்குள் புலம்பியவனாய் “இதைக் குணப் படுத்த முடியாதா டாக்டர்?” என்று கேட்டான் ராஜேஷ்.

கனகாவுக்கோ அதிர்ச்சி தாங்கமுடியாமல் ‘மயக்கம் வந்துவிடுமோ’ என பயந்தவாறு ராஜேஷின் தோள்மேல் சாய்ந்தாள்…..அவள் கண்கள் குளமாகிக் கொண்டு வந்தது.

டாக்டரும் கொஞ்சம் தண்ணீர் பருகினார். சில வினாடிகள் கழித்து “ஐ அம் வெரி சாரி …..ஓ மை காட்!…எனக்கும் இந்தமாதிரியான கேஸ் முதல்முறை…. எனக்கே மனசு கேட்கமுடியலை!…..ஐ அம் ரியலி வெரி சாரி!… இதை கண்டிப்பாக குணப்படுத்த முடியாது… இது மாதிரி கேஸ்கள் உலக அளவில் அங்கங்கே அப்பப்போ நடந்துட்டு தான் இருக்குன்னு என் அமெரிக்கா டாக்டர் நண்பர்கள் உறுதிப்படுத்தினார்கள்…. முதுகெலும்பில் கையை வைக்க எந்த டாக்டருக்கும் துணிச்சல் வந்ததில்லை!” தலையை ஆட்டி கைகளுக்குள் தன் முகத்தைப் புதைத்துக் கொண்டார் டாக்டர் விமலா.

“நம்ம குழந்தை ஒரு வானவில் தான் கனகா…. பிறந்த கொஞ்ச நாள்லயே செத்துடும்!” அழுகை பீறிட்டு வர அவளை அணைத்துக் கொண்டு சிறுபிள்ளை போல் கேவினான் ராஜேஷ்…. இதுநாள் வரை தன் கணவன் அழுது பார்த்திராத கனகாவுக்கும் அழுகை பீறிட்டுக்கொண்டு வந்தது. மிகச் சத்தம் போட்டு அழ…..நர்ஸ் ஓடிவந்து அவளை தேற்றப் பார்த்தாள்.

அவர்கள் அழுது ஓயட்டும் என காத்திருந்த டாக்டர் பின் மேலும் தொடர்ந்தார் “கொஞ்சம் மனசை தேற்றிக்கொண்டு நான் சொல்றதை கேளுங்கோ …இது ஒரு மிக வினோதமான ஒன்று தான்… சில சமயம் அது சிசுவா உருவானப்பவே உண்டாகியிருக்கலாம்…இல்லை சில சமயம் ஏதாவது அடிபட்டு / அதிர்ச்சி ஏற்பட்டுகூட சமீபத்துல நிகழ்ந்து இருக்கலாம்….”

‘அன்று அந்த ஊடல்…. பின்பு இரவில் இன்ப வெள்ளத்தில் மூழ்கி மகிழ்ந்தோமே?…. அதனால் சிசுவுக்கு அடிபட்டு இருக்கலாமோ?’ ராஜேஷுக்கு சந்தேகம் எழுந்தது…..ஆனால் சொல்ல தெம்பு வரவில்லை.

“இதுக்கு இன்னதுதான் காரணம்னு ஊர்ஜிதமாக சொல்ல முடியாது…. அதனாலே….. நீங்க ஏதேதாவது நினைச்சு கவலைப்படாதீங்க… இப்போ அடுத்து என்ன செய்யணுமோ அதைப் பற்றி பேசுவோம். இந்தமாதிரியான நேரத்துல மனப் பலம் மிகவும் முக்கியம். கருவுல இருக்கிற குழந்தையை ஆபரேஷன் செய்ய முடியாது…அதனால அதை சுகப் பிரசவம் ஆகும்படி தேவையான எல்லாத்தையும் செய்யவேண்டியது அவசியம்……புரிஞ்சுதா கனகா?” டாக்டர் கனகாவின் இரு கைகளையும் பற்றிக்கொண்டு தேற்ற முயன்றார்.

“பிறந்தப்புறமாவது சரி செய்யலாம்தானே?” கனகா பித்துபிடித்ததை போல் டாக்டரை வினவினாள்.

அந்தக் கேள்வியால் தலை குனிந்த டாக்டர்… ராஜேஷை நோக்கினார் “என் அமெரிக்கா டாக்டர் நண்பர்கள் சொன்னதின்படி…. இந்தக் கேள்வியை நானும் கொஞ்ச நேரம் முன்னாடி அவங்ககிட்ட பேசும்போது கேட்டேன்…. அவர்களாலும் சரியா சொல்ல முடியாதுன்னு சொல்றாங்க…”

“அட் லிஸ்ட் 5௦% சான்ஸ்??” ராஜேஷுக்கும் பைத்தியம் பிடிக்கும் போலிருந்தது.

இந்தமாதிரியான இக்கட்டான தருணத்தில் தான் டாக்டர் கூற வேண்டிய அந்த ஒன்றை டாக்டர் விமலாவும் கூறினார்…..”…உங்க கடவுள்களை பிரார்த்தியுங்கள்…. ப்ரே யுவர் காட்ஸ்….அவர் தான் காப்பாத்தணும்!”

ராஜேஷுக்கு திடீரென்று எப்படி எதற்கு கோபம் வந்தது என தெரியவில்லை…. மேசையை உடைக்குமளவுக்கு வலது கையால் ஓங்கி அடித்து வெடித்தான் “என்ன கடவுள்?…என்ன கடவுள்?…எந்த கடவுள் காப்பாத்துவார் சொல்லுங்க?…எங்கே அந்த கடவுள்?…நாம என்ன பாவம் செஞ்சோம் இப்படி நம்மை கஷ்டப்படுத்தறார்?…. ஒன்றே குலம்!??….ஒருவனே தேவன்!??…. ஹூம்??….எல்லோரும் அவன் பிள்ளைகள்…. ஆமாவா?…. ஆமாவா?… அப்படின்னா அவன் என்ன பைத்தியமா??…சாடிஸ்ட்டா?? (Sadist) ….எல்லாம் அவனின் லீலைகள்னா இது எல்லாம் பித்தலாட்டம் தானே? இந்த குழந்தை பிறக்கணும்னு எத்தனை கோயில் குளம் போனோம் தெரியுமா?… எதுக்கு இப்போ இப்படி குழந்தை பாக்கியமும் கொடுத்து இப்படி சாகடிக்கணும்?….நாம என்ன பாவம் செஞ்சோம்?….இல்ல இந்த பிஞ்சு குழந்தை தான் என்ன பாவம் பண்ணிச்சு?” ராஜேஷ் மண்டையில் அடித்துக்கொண்டு புலம்பினான்.

ராஜேஷின் புலம்பல் கொஞ்சம் ஓய்ந்தபின், டாக்டர் எழுந்து வந்து கனகாவின் தோள்மேல் கைகளை வைத்து “இந்த குழந்தை என்னமோ ஒரு அபூர்வ பிறவின்னு தோணுது…ஸ்கேன்ல பார்த்ததிலிருந்து தெரியுது…. இந்த குழந்தை அவ்வளவு அழகா …தங்கம் மாதிரி இருக்கு!…பிறந்ததும் நீங்களே பார்த்து பூரிச்சு போவீங்க..” டாக்டர் விமலா அவர்களை திசை திருப்பி சோகத்தை மறக்கடிக்க முயன்றார்.

“ஆனா எத்தனை நாட்களுக்கு அவனை பார்த்து பூரிச்சு மகிழமுடியும் டாக்டர்?….எத்தனை நாட்களுக்கு?” கனகா பயத்தினாலும் சோகத்தினாலும் உடல் நடுங்கிக்கொண்டே இருந்தாள்.

தலைமேல் கைவைத்துக்கொண்ட டாக்டர் விமலா, “ப்ச்…..அபார்ஷன் பண்ணவும் இனி முடியாதும்மா …நீதான் தைரியமா இருந்து உன் குழந்தையை பெற்று எடுக்கணும். நான் தர மாத்திரைகளை தவறாம சாப்பிடுவது மிக முக்கியம்”…டாக்டர் சொல்லி முடிக்கும் முன் கனகா மயக்கம் வந்து ராஜேஷ் மேல் சாய்ந்தாள்.

***

கனகாவின் பிரசவ காலத் துணைக்காக ஏழாவது மாதத்தில் அவள் அம்மா இந்தியாவிலிருந்து வந்து சேர்ந்தார். மகளின் வயிற்றில் வளர்ந்து வரும் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள கதியை அம்மா தன் வீடு வந்து சேர்ந்ததும் அழுதவாறு சொல்லிக் கதறினாள் கனகா.

அதைக் கேட்டறிந்த அவள் அம்மா பதறியவாறு, “உனக்கு ஞாபகம் இருக்கா? அந்த பூனைக் குட்டி?…. அந்த பூனைக் குட்டி?…. நீ அந்த பூனைக்குட்டிக்கு செஞ்ச பாவம் தான்டீ இது….. அதோட வினை தான்டீ இது!!” என்று தலையில் அடித்து கொண்டு அரற்றினாள்.

“என்னம்மா சொல்றீங்க?…நான் என்ன பாவம் செஞ்சேன்?…நான் என்ன பாவம் செஞ்சேன்?…”

***

அப்பொழுது கனகாவிற்குத் திருமணம் ஆகவில்லை. . நல்ல விதமாகக் கல்லூரிப் படிப்பை முடித்துக் கொண்டு. தகுந்த வேலையில் சேர்ந்து கை நிறைய சம்பாதிக்க ஆரம்பித்திருந்தாள்.

அண்ணன், தம்பி அக்கா, தங்கை என்று எல்லா உறவும் சூழ இருந்த அந்தக் குடும்பத்தில் ஆனந்தத்திற்கு எல்லையே இல்லாமல் இருந்தது. தரை மட்டத்திலேயே அவர்களின் வீடு அமைந்திருந்ததால் ஓடியாடும் விளையாட்டெல்வாம் வீட்டின் எதிரே இருந்த புல்வெளிப் பரப்பு வரை சென்றது.

ஒரு நாள் வீட்டிற்கு வெளியே இருந்த காலணிகள் வைக்கும் மரப் பெட்டிக்கு கீழே புத்தம் புதிதாக பிறந்திருந்த மூன்று பூனைக் குட்டிகள் ஒன்றோடு ஒன்று உரசிக் கொண்டு ‘மியாவ், மியாவ், மியாவ்’ என்று கத்திக் கொண்டிருந்தன. பசியால் கத்துகின்றன என்பது தெளிவாக தெரிந்தது. அருகே அதன் தாய்ப் பூனையும் இல்லை.

கனகாவுக்கும் அவள் கடைக்குட்டித் தம்பிக்கும் அவற்றைப் பார்த்ததும் ஒரே கொண் டாட்டமாக இருந்தது. இரண்டு மூன்று நாட்கள் கழித்தும் தாய்ப் பூனை வராததால்…. பெற்றவர்களும் மற்ற சகோதரர்களும் திட்டுவதைக் காதில் வாங்கிக் கொள்ளாமல்…..இருவரும் அந்தக் குட்டிகளை வளர்க்க ஆரம்பித்தார்கள்.

மூன்றில் இரண்டு ஒரு வித வண்ணக் கலவையிலும் மற்றொன்று வேறொரு கலவையிலும், பார்த்தாலே தூக்கிக் கொஞ்சவேண்டும் போல் துறுதுறுவென இருந்தன.

கனகாவின் அம்மா நாள்தோறும் “பூனைகளை வீட்டில் வளர்க்கக் கூடாது” என்று அவர்களை அடிக்காத குறையாக கூறி வந்தாள்…ஆனால் அவர்கள் அதை சட்டை செய்யவில்லை. ஒரு வாரம் கழித்து, அம்மா அவைகளை அப்புறப் படுத்தவில்லை என்பதால் அதற்கான உணவு தயாரிப்பதை நிறுத்தினாள். அன்றைய தினம் கனகா தன் தம்பியுடன் மதியம்வரை சாப்பிடாமல் புரட்சி செய்தாள்.

சாயங்கால நேரத்தில் கனகாவின் அத்தை ஒருத்தி அவர்கள் வீட்டிற்கு வர, அவள் மூலம் கனகாவிற்கு புத்திபுகட்ட நினைத்தாள் அம்மா.

“ஆமாம் கனகா, பூனையை வீட்டில் வளர்க்கிறது அனாவசிய பிரச்சினையை உண்டாக்கும்….. அதோட மயிர் தரையில் விழுந்து கிடக்கும்…நாம சாப்பிடற உணவுல அது கலக்கலாம்…அலர்ஜி ஏற்படலாம்…எதையாவது திருடி சாப்பிடும்….இங்கே அங்கே அசிங்கம் பண்ணித்தொலைக்கும், அதை சுத்தம் செய்யணும்…இதெல்லாம் தேவையா?… இன்னொன்று மிக முக்கியம், என் தாத்தா சொல்லக் கேட்டிருக்கேன்…அதாவது, ஒருவேளை அதை நீ சாவும்படி ஏதாவது செஞ்சா அந்த பாவம் உன் குழந்தையை பாதிக்கும்…..இது நம்ம நம்பிக்கைம்மா….வேண்டாம் விட்டிரு, என்ன?” அத்தை சொல்லிப் பார்த்தாள்….மசியவில்லை!!

“ஏன்…. ஊர்ல யாரும் பூனையை வளர்க்கலையா?…மேல்நாட்ல அதை சர்வ சாதாரணமா வளர்க்கிறாங்களே?!….ஏன் நம்ம ஹிந்துக்கள் மட்டும் இப்படி எதை எடுத்தாலும் அதை இதை சொல்லி மூடநம்பிக்கையை வளர்க்கறீங்க?…..இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் இப்படியே வாழப்போறீங்க?…போங்க அத்தை போங்க!” என்றாள் கனகா.

பூனைகளின் சேட்டை பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருந்தது. அப்பளத்தை கொஞ்சம் தூக்கிப் பிடித்தால், சர்க்கஸ் போல் தாவி பிடித்து சாப்பிட்டது! …. இன்னும் பல சின்னச்சின்ன வித்தைகள் செய்ய, நாட்கள் குதூகலமாய் நகர்ந்தன.

அதன்பின் அப்பாவும் கொஞ்சம் சொல்லிப்பார்த்தார் ….ஊஹூம்!!… மசிவதாக தெரியாததால், அவரும் சில நாட்கள் கழித்து அறிவுரை கூறுவதை நிறுத்தியதில்லாமல் … அவர்களோடு சேர்ந்து பூனைகளின் சேட்டைகளை ரசிக்கவும் ஆரம்பித்தார்….அவரும் ஒரு சில வித்தைகளை பூனைகளுக்கு சொல்லிக்கொடுத்தார்!!. ஓடிப்பிடித்து விளையாடுவது…..ஒளிந்துகொண்டு தேடிப்பிடித்து விளையாடுவது போன்ற விளையாட்டுகள் பூனைகளுக்கும் செமையாக பிடித்திருந்தன!

ஒரு மாதம் கழித்து ஒரு நாள் காலை…. மழை பெய்து கொண்டு இருந்ததால்…. நேரம் போனது தெரியாமல் துாங்கிப் போன கனகா, திடீரென்று விழித்தெழுந்தாள். நேரமாகிவிட்டதே என்ற பதட்டத்தில் ஓடி ஓடி காலைக் கடன்களைச் செய்தாள்…. அந்த அவசரத்தில் திடீரென்று குறுக்கே ஓடி வந்த பூனைக் குட்டியை……ஏதோ பெருச்சாளியோ வேறு சின்ன புது மிருகமோ திடீரென்று பாய்ந்து வந்தது போல் பயமடைந்து…. என்னவென்று தெரியாமல் எட்டி உதைத்துவிட்டாள்…… அவ்வளவுதான்……

அந்தப் பூனை வலியில் துடிதுடித்து இறந்த காட்சி, கனகாவையும் அவள் தம்பியையும் ஓலமிட்டு அழவைத்தது….அதைப் பார்த்த அப்பாவும் கொஞ்சம் கண் கலங்கினார்…என்ன ஆயிற்று என்று ஓடிவந்த அம்மா தன் தலையில் அடித்துக் கொண்டு “இதற்குத்தானே ஆரம்பத்திலிருந்து சொன்னேன்…வேண்டாம் வேண்டாம்னு…. கேட்டீங்களா?…ஐயோ ஆண்டவா இப்போ என்ன செய்யறது?” என்று தரையில் அமர்ந்து அழாமல் புலம்பித்தள்ளினாள்

“அம்மா நான் என்னபண்ணேன்?…அதுவா குறுக்கே ஓடிவந்து……”

“பேசாதடி நாயே!…” அம்மா கனகாவை அதட்டி பேச்சை முறித்தாள்.

கால்களை உதைத்துக் கொண்டு, வலி வேதனையால் ‘மியாவ் …. மியாவ்…. மியாவ்….’ என்று துடிதுடித்து இறந்ததை பார்த்ததில் கனகாவும் அவள் தம்பியும் அன்று முழுக்க சாப்பிடவில்லை.

அப்பா இறந்துபோன பூனையை அருகே இருந்த குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டு மீதி இரண்டு பூனைக் குட்டிகளை ஒரு பையில் போட்டுக் கொண்டு அவர் வேலைக்கு சைக்கிளில் போகின்ற வழியில்…. சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில்….. மனித நடமாட்டம் இல்லாத பகுதியில்…. விட்டுவிட்டு போனார்.

என்ன நடந்தது என்று அறியாத அந்த இரு பூனைக்குட்டிகள் புதிய இடத்தை மோப்பமிட்டுக் கொண்டே ஓடியது.

“எங்கே விட்டிங்க அந்த இரண்டு பூனைகளை?” மாலையில் அப்பா வீடு திரும்பியதும் வழி மறித்து கேட்டாள் கனகா. அழுது அழுது அவள் கண்கள் படு சோகமாக தெரிந்தது…..அவள் தம்பி நெருங்கி வந்து அப்பாவை சோகமாக பார்த்தான்.

கொஞ்சம் கண் கலங்கிய அப்பா “இனி அதுங்க எங்கயாவது… அதுங்க பாட்டுக்கு சந்தோஷமா இருக்கட்டும்….இனிமே பூனைகளை வளர்க்க வேண்டாம்….போங்க, போய் சாப்பிட்டு படுங்க..” என்று உருக்கமும் அதட்டலும் கலந்த குரலுடன் சொல்லிவிட்டு நகர்ந்தார்.

ஆனால்… ஆனால்….இரண்டு நாட்கள் கழித்து அந்த இரு பூனைகள் துள்ளிக்கொண்டு பரம சந்தோஷத்தில் கனகாவை தேடி திரும்பி வந்துவிட்டன!! கனகாவும் அவள் தம்பியும் இரண்டு நாட்களாக சோகத்தில் ஆழ்ந்திருந்தார்கள்…இப்போது அவை எப்படி வீடு தேடி, தங்களை தேடி வந்துள்ளன என்பதை வியந்து, பாச உணர்வுகளால் குதித்தெழுந்து அவைகளை வாரி அணைத்து முத்தமழை பொழிந்தனர்.

“நாய்க்கு தான் மோப்பசக்தி அதிகம்னு தெரியும்……பூனைகளுக்குமா?” வியந்தார் அப்பா.

அம்மாவோ “இனி இதுகளுக்கு சாப்பிட ஒன்னும் தரமாட்டேன்” என்றாள். எனினும் கனகாவும் தம்பியும் தங்கள் உணவிலிருந்து மிச்சம் செய்து அந்த இரு பூனைக்குட்டிகளை தொடர்ந்து வளர்த்தனர்.

சில மாதங்கள் கழித்து அவை மெல்ல மெல்ல வெளி உலகை ஆராய்ந்து இவர்களை விட்டுப் பிரிய நேர்ந்தது….ஆனால் என்றைக்காவது எங்கேயாவது கனகாவையோ அவள் தம்பியையோ பார்த்தால் ஓடி வந்து உரசிவிட்டுப் போகும்….அதன்பின் வேறு எந்த பூனைகளைக் கண்டாலும் அவை தான் வளர்த்த பூனைகளோ என்று மனம் தடுமாறி கொஞ்ச நேரம் அவைகளுடன் சிநேகம் பழகினார்கள்…..

சில வருடங்கள் கழித்து கனகா திருமணம் செய்து கொண்டு சிங்கப்பூர் சென்று வாழலானாள்.

***

பல வருடங்கள் கழித்து அம்மா நினைவுபடுத்தியதும் இப்போது அவையனைத்தும் கனகாவின் கண் முன்னே ‘பிளாஷ் பாக்’ ஆனது.

“அது எதிர்பாராம நடந்தது தானேம்மா?. அது செத்ததுக்காக நான் எத்தனை நாள் அழுதிருக்கேன்னு எனக்குத் தான் தெரியும்.. நான் ஒரு பாவமும் பண்ணலையேம்மா. என் குழந்தைக்கு ஏம்மா இப்படி ஆகணும்?” கனகாவிற்கு வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியவில்லை.

“நான் செஞ்சது பாவம்னா…..அதுவும் தெரியாம செஞ்சது பாவம்னா…ஆடு மாடு கோழி கறியெல்லாம் சாப்பிடறாங்களே??…அதெல்லாம் பாவமில்லையாம்மா??” கனகாவின் இந்த கேள்விக்கு அம்மாவிடம் பதில் இல்லை!!

சில நாட்கள் கழித்து கனகாவுக்கு வளைகாப்பு விழா நடந்தேறியது…. மற்றொரு சடங்கு சம்பிராயதம் என்று மனம் அலுத்துப்போனதுதான் மிச்சம்!

இரண்டு மாதங்கள் கழித்து, சொல்லி வைத்த மாதிரி….. டாக்டர் குறித்த நாளில் கனகாவிற்கு சுகப் பிரசவம் ஆனது.

எதை சாதிக்க வேண்டும் என்று அந்தக் குழந்தை பிறந்துள்ளது என்று யாருக்கும் தெரியவில்லை. அந்தக் குழந்தையைப் பார்த்தவர்கள் அதன் அழகில் சொக்கிப் போனார்கள்….டாக்டர் சொன்னது போலவே தங்கம் போல் இருந்தான் வானவில்…. ஆம் வானவில் என்கிற பெயர், விழா ஏதுமின்றி, குடும்பத்திற்குள் தாங்களாகவே சூட்டினர்….வானவில்……சில தினங்களில் மறையப் போகும் வானவில்!

பாடுபட்டுச் செதுக்கிய அந்த ஜீவனை ஏன் பாழாக்க நினைக்கிறான் ஆண்டவன் என்று டாக்டர் உட்பட எல்லோர் மனத்திலும் தோன்றியது…. வந்து பார்த்த சில உற்றார் உறவினர் நண்பர்கள், வெளிப்படையாகவே அந்த ஆண்டவனை சபித்துவிட்டு வானவில்லை பார்த்து அழுதுவிட்டுப் போனார்கள்.

குழந்தையின் முன் தோற்றம் ‘அந்த முருகனின் அவதாரமோ’ என்று எண்ண வைத்தது. ஆனால் அதே குழந்தையின் முதுகில் இருந்த அந்த ஓட்டையையும், அதிலிருந்து திரவம் கசிந்து கொண்டே இருப்பதையும் பார்த்தவர்கள் நொடிப் பொழுதில் அழுதார்கள்.

அந்த நிலையிலும் அவ்வப் பொழுது வானவில் ஏதோ கனவில் கண்கள் மூடியவாறு சிரித்தான்!!…அதைப் பார்த்தவர்கள் தாங்கள் சிரிப்பதா அழுவதாவென புரியாமல் தவித்தனர். “நான் சிரிக்கிறேன்.. சிரிக்கிறேன் சிரிப்பு வரலே …..நான் அழுகிறேன்… அழுகிறேன் அழுகே வரலே!” மனதில் கண்ணதாசனின் பாட்டை பாடிக் கொண்டான் ராஜேஷ்.

திரவம் வெளியாகும் பகுதியில் எப்படி பாண்டேஜ் போடவேண்டும் என்று சொல்லிய டாக்டர், ஏதோ ஞானம் வந்தவர் போல் “வானவில்லை பார்த்தால் ஏதோ அழகு தேவதையை பார்ப்பது போல் இருக்கு எனக்கு…அவனுக்குன்னு ஏதோ ஒரு பிறவிப்பயன் இருக்கும்…இவனை பார்க்கிற நம்ம எல்லோருக்கும்கூட ஏதோ ஒரு வாழ்க்கைப் பாடம் இருக்கலாம்….மனச திடப் படுத்திக்கிட்டு ஜென்மஜென்மமா தெரிஞ்சோ தெரியாமலோ செஞ்ச பாவத்துக்கெல்லாம் மன்னிப்பு கேளுங்க…இந்த பிஞ்சுக் குழந்தையும் வலியில்லாம ஆண்டவனிடம் போய் சேர பிரார்த்தனை பண்ணுங்க…..வாட் எ ஏஞ்சல் சைல்ட்!” என்று கூறி , சிறிதாக வானவில் நெற்றியில் முத்தமிட்டு அவர்களை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வழியனுப்பி வைத்தார். பிறகும், மனம் கேளாமல் ஓரிரு முறை அவர்கள் வீட்டிற்கு சென்று அந்த வானவில்லை….. இல்லையில்லை அந்த அழகு தேவதையை தரிசித்து வந்தார் டாக்டர் விமலா.

வானவில்’ இரண்டு வாரம்தான் வாழ்ந்தான். ஆனால் அந்த இரண்டு வாரத்தில் ஒரு குழந்தையால் தாய்க்குக் கிடைக்கக் கூடிய எல்லா ஆனந்தமும் கனகாவிற்குக் கிடைத்தது.

கனகா வானவில்லுக்கு கொடுத்த தாய்ப்பால் எல்லாம் ஒரு பங்கு மட்டும் அவன் உடலுக்கும் மீதி பெரும்பங்கு அந்த முதுகெலும்பு ஓட்டைவழியாக திரவமாக வெளியேறியது.

வானவில் அடிக்கடி கைகால்களை சின்னதாக உதறிக் கொண்டிருந்ததால்… வலியாலோ புரியவில்லை…. வானவில் கடைசி நாளன்று கைகால்களை சின்னதாக உதறிக்கொண்டு சாகும் போது யாருக்கும் அவன் சாகிறான் என்று நினைக்கவில்லை…..அந்த உதறல் நின்றபின்….வேறு அசைவுகள் ஏதும் இல்லாதபோது தான் வானவில் மறைந்தது புரிந்தது…….அவன் உதட்டில் ஒரு சின்ன புன்னகை!!…..

கனகாவிற்கு அன்று அந்த பூனைக்குட்டி செத்தது மனக்கண் முன் தோன்றி பாடாய் படுத்தியது….. அழுகை பீறிட்டு வர….தாங்கமாட்டாமல் மயங்கிப் போய் சரிந்தாள்.

***

வானவில் மறைந்து இரண்டு வாரம் இருக்கும். ஜன்னல் வழியாகக் கீழே குழந்தைகள் விளையாட்டுத் திடலில் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் கனகா….. போரடித்ததால் வெளியே சென்று மரத்தடியில் போட்டிருந்த இருக்கையில் அமர்ந்து யோசித்துக் கொண்டிருந்தாள்,

திடீரென்று கால்களில் பஞ்சு போன்று ஏதோ உரச, பார்த்தால் படு அழகான இரண்டு பூனைக்குட்டிகள்!….. பிறந்து ஓரிரு நாட்களே ஆகி இருந்த பூனைக்குட்டிகள்…. சந்தோஷத்தில் துள்ளியபடி அதைக் கையில் எடுத்துக் கொண்டு வீட்டிற்கு போனாள் கனகா.

ஆனால் அவள் அம்மாவோ கண்ட படி திட்ட ஆரம்பித்தாள். மாலையில் ராஜேஷ் வந்து பேசியதையும் கனகா எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்தப் பூனைகளை குழந்தை போல வளர்க்க ஆரம்பித்தாள். இரண்டு பூனைக் குட்டிகளும் அவளோடு நன்றாக ஒட்டிக் கொண்டது.

ஒரு நாள் வீட்டில் பால் தீர்ந்து விட்டது. ராஜேஷ் வெளி ஊருக்குச் சென்று இருந்தான். பால் இல்லாததை யாரும் கவனிக்கவில்லை. நள்ளிரவில் பூனைகள் பசியில் ‘மியாவ் …. மியாவ்…. மியாவ்….’ என்று கத்த ஆரம்பித்தது.

பசியில் பூனைகள் கத்துவதைப் பார்க்கப் பார்க்க கனகாவிற்குத் தாங்க முடியவில்லை. ‘மியாவ் …. மியாவ்…. மியாவ்….’ வெளியில் போயும் வாங்கி வர முடியாது.

‘மியாவ் …. மியாவ்…. மியாவ்….’ சத்தம் கொஞ்சம் கொஞ்சமாக “அம்மா…. அம்மாவ்…அம்மாவ்’ என்பது போல் ஒலிக்க…..திடீரென உணர்ச்சி வசப்பட்டவள் தன் மார்பில் பால் சுரப்பதை உணர்ந்தாள். அழுகை கொந்தளித்து வர, பூனைக் குட்டிகளைக் கையில் துாக்கி, அதன் தலையைக் கோதிவிட்டவாறு… ரவிக்கையை பாதி திறந்து இரு மார்பகங்களில் தன் தாய்ப்பாலை கொடுக்க ஆரம்பித்தாள்.

பூனைச் சத்தம் கேட்டு எழுந்து வந்த அவளது அம்மா, இந்தக் காட்சியைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனாள்.

“என்ன கண்றாவி இது?” என்று கத்தி பூனையைப் பிரித்து வீட்டிற்கு வெளியே துாக்கி எறிந்தாள். கதவைத் தாழிட்டார்.

கனகா வெகு நேரம் சண்டை போட்டுப் பார்த்தும் அம்மா அவள் பேச்சைக் கேட்பதாக இல்லை.

“நீ இப்போ அதை உள்ளே விடலைன்னா நான் இங்கேர்ந்து குதிச்சு செத்துடுவேன்” என்று மிரட்டிய பின் வேறு வழியில்லாமல் கதவைத் திறந்தாள். காத்திருந்தது போல் பூனைக்குட்டிகள் கனகாவின் மேல் பாசமாக பாய்ந்தது. கனகாவின் தாய்ப்பாலை பருகியவாறு அவைகள் கனகாவை அன்புடன் பார்த்தபோது…. வானவில் தான் தன்னிடம் பால் பருக வந்ததுபோல் உணர…..கனகா ஒருவகை யோகநிலைக்கு இழுக்கப்பட்டாள்…..அவளின் தலை உச்சி முதல் பாதங்கள் வரை…..பேரானந்தம் என்பார்களே…அதுபோல் முதுகுத்தண்டு வழியாக மூளை வரை பாய்ந்து பாய்ந்து அவளை நிலைக்குத்தச் செய்தது.

மறு நாள் காலை ராஜேஷ் வந்ததும் நடந்ததைக் கேள்விப் பட்டான். கனகா குளித்துக் கொண்டு இருந்த போது பூனைகளைத் தூக்கிக் கொண்டு காரில் வெகு தூரம் போய் விட்டு விட்டு வந்தான். கணவனின் அந்த செயலைக் கொடுமையானதாக சொல்லி, கண்டபடி திட்டினாள் கனகா.

“வாயில்லா ஜீவனுக்கு ஒரு வேளை தாய்ப் பால் கொடுத்தது தப்பா? இனிமே நானும் எதையும் சாப்பிட மாட்டேன்….. இப்படியே செத்திடறேன்” என்று அடம் பிடித்தாள்.

பச்சைத் தண்ணீர் கூட அருந்தாமல் கனகா வாடுவதைக் கண்ட ராஜேஷ், விடிந்ததும் அந்தப் பூனையை எப்படியாவது கண்டு பிடித்துக் கொண்டு வந்து விடலாம் என்று நினைத்தான். கனகாவிடமும் சொன்னான். அவள் அவன் மடியில் சாய்ந்து அழுதவாறே உறங்கினாள்.

மறு நாள் காலை ராஜேஷ் வாசல் கதவைத் திறந்ததும் அதே பூனைகள் “மியாவ்… மியாவ்….அம்மா….அம்மாவ்…அம்மாவ்’ என்று கத்தியபடி உள்ளே ஓடி வந்தன. வீட்டிற்குள் ஓடி கனகாவின் மடியில் எம்பிக் குதித்து தஞ்சம் புகுந்தன.

‘என்ன ஒரு மோப்ப சக்தி!’ என்று வியந்தான் ராஜேஷ்!

‘என்ன ஒரு தாய்ப் பாசம்!’ என்று கண் கலங்கினாள் கனகாவின் தாய்.

அதன் பின் அந்தப் பூனைக்குட்டிகள் கனகா என்கிற தாய்க்கு சேயாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். கனகாவின் பேச்சையும் சைகையையும் எளிதில் புரிந்து கொண்டு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தது.

ஆம் அது பூனைத் தாயாகிப் போன கனகாவின் மற்றொரு வானவில்…….. இரட்டை வானவில்!!

***

பின்குறிப்பு: ராஜேஷ் வீட்டில் எப்போதும் பால் பாக்கெட் இருப்பதை ஊர்ஜிதப்படுத்தி கனகாவிடம் பூனைகளுக்கு தாய்ப் பால் கொடுப்பதை மட்டும் தவிர்க்கும்படி வேண்டிக்கொண்டான்…. ஆனால் அதை அவள் பின்பற்றுகிறாளா என்று வேவு பார்க்க விரும்பவில்லை!!

Print Friendly, PDF & Email

1 thought on “பூனைத் தாய்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *