புலி சகோதரர்கள்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 10, 2018
பார்வையிட்டோர்: 16,272 
 
 

மச்சப்புலி, மோட்டார்பைக்கை ஸ்டுடியோவின் வாசலில் நிறுத்திவிட்டு, எதிரே இருந்த டாஸ்மாக் கடையைப் பார்த்தார். கடைக்குப் பக்கத்தில் இருந்த கூரை வேயப்பட்ட கட்டடத்தினுள் கூட்டமாக இருந்தது. மெர்க்குரியின் வெளிச்சம் அவரது கண்களைக் கூசவைத்தது. சிகரெட் புகைப்படலம் வெளிச்சத்தின் ஊடே அலைஅலையாக நகர்ந்தபடி இருந்தது. கட்டடத்தின் இருளுக்குள் மஞ்சள் நிறம் திட்டுத்திட்டாகப் படிந்திருப்பதுபோல தெரிந்தது. கும்பலாக ஆட்கள் வெளியேறுவதும், புதிதாக ஆட்கள் கடைக்குள் நுழைவதுமாக இருந்தனர். இரண்டு பேர் பாட்டிலை வாங்கி, தங்களது இடுப்பில் செருகிக்கொண்டு சென்றனர்.

மச்சப்புலி பிளாட்பாரத்தில் இருந்து ரோட்டைக் கடந்து, டாஸ்மாக் கடை வாசலுக்கு வந்தபோது, அவரைத் தள்ளிவிட்டு ஒருவன் வேகமாகச் சென்றான். அவன், இரண்டு கைகளிலும் ரத்தப்பொரியலை, தட்டு நிறைய வைத்திருந்தான். கருநிறத்தில் இருந்த ரத்தப்பொரியலை மச்சப்புலி பார்த்தார். அவருக்கு நாவில் எச்சில் ஊறியது. வெங்காயமும் பச்சைமிளகாயும் கலந்து பதமாக வறுத்தெடுத்த பொரியலை, சூடாக இட்லிக்குத் தொட்டுச் சாப்பிட வேண்டும் என நினைத்துக்கொண்டார். பிளாஸ்டிக் தட்டை ஏந்திக்கொண்டு சென்றவனை அழைத்தார்.

‘ஏய் தம்பி… இங்கே வாப்பா.’

அவன் திரும்பிப் பார்த்துவிட்டு நின்றான். ‘என்ன?’ என்பதுபோல தலையை ஆட்டினான். மச்சப்புலிக்கு, அவன் தன்னைத் தெனாவெட்டாகப் பார்ப்பது பிடிக்கவில்லை. அவனை முறைத்தபடி, ‘இங்கே வாடா. கூப்பிட்டா வர மாட்டீயா?’ என்றார். அவன் பயப்படாமல் அவரை நோக்கி நடந்து வந்தான்.

‘என்னா?’ எனக் கேட்டான்.

மச்சப்புலி, தன்னை அடிப்பதுபோல அவன் வருவதைப் பார்த்துப் பயந்து பம்மினார். அவனிடம், ‘ரத்தப்பொரியல் எங்கே வாங்குனே?’ எனக் கேட்டபடி தட்டில் இருந்து சிறிது எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். கசப்பாகவும் ஜில் என்றும் இருந்தது. இன்னொரு தடவை தட்டில் கை வைக்கப்போனபோது அவன், அவரது கையைத் தட்டிவிட்டான்.

‘முன்னாடி கடையிலே வெச்சிருக்காங்க’ என முறைப்பாகச் சொல்லிவிட்டு உள்ளே சென்றான். அவன் சென்றதும் பிளாட்பாரத்தில் யார் கடை போட்டிருக்கிறார்கள் எனப் பார்த்தார். வெளிச்சத்தில் அவருக்கு ஆள் அடையாளம் தெரியவில்லை. கடைக்குள் சென்று, தனது வாடிக்கையான இடத்தில் அமர்ந்துகொண்டார். சற்று முன்பாகக் குளித்து இருந்ததால் வியர்க்கத் தொடங்கியது. இன்னமும் கண்களும் உடம்பும் இடத்துக்குப் பழகவில்லை.

மச்சப்புலி, முகத்தில் அரும்பிய வியர்வையைத் துடைத்துக்கொள்ள கைக்குட்டையை எடுத்தார். முகத்தில் தடவி இருந்த பவுடரை ஒற்றி எடுக்காமல், வியர்வைத்துளிகளை மட்டும் ஒத்திக்கொண்டார். மச்சப்புலி, தனது அண்ணனுக்குப் பிடித்த மஞ்சள் சில்க் ஜிப்பாவை உடுத்தி வந்திருந்தார். அவரது அண்ணன் ஒண்டிப்புலியுடன் குடும்ப விஷயம் பேசவேண்டும் என்றால் இங்கு வந்துவிடுவார்.

ஒண்டிப்புலியும் மச்சப்புலியும் இருதாய் பிள்ளைகள். அவர்களது அப்பா முத்துசாமிக்கு இரண்டு மனைவிகள். மூத்த தாரத்துக்குப் பிறந்தது ஒண்டிப்புலி. பெரியபட்டி அப்பத்தா, தனது மகள் இறந்ததும் முத்துசாமியிடம் இருந்து தனது பேரன் ஒண்டிப்புலியைத் தூக்கிக்கொண்டு வந்துவிட்டாள். பஞ்சாயத்துக்கு யாரும் அவள் முன்பாக நிற்கவில்லை. வெட்டரிவாளும் வேல்கம்புமாக அவள் ஆட்களை நிறுத்திவைத்திருந்தாள். பெரியபட்டி அப்பத்தா வீட்டில் 10 பேர் தயிர் கடைவதும் பால் பீய்ச்சுவதும் மாட்டுக்குத் தீவனம் வைப்பதுமாக இருப்பார்கள். தயிர் கடைகிற மத்து, ஓர் ஆள் உயரத்துக்கு சுவரில் சாய்ந்து நிற்கும். முத்துசாமியால் அவர்களை மீறி தனது பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வர முடியவில்லை. மறுகல்யாணம் செய்துகொண்டார். சின்னாத்தா பிள்ளைகளுக்கு மூவர். மூத்தது மச்சப்புலி, இரண்டாவது ‘வெங்கட்டண்ணா’ என்கிற ஒச்சப்புலி, மூன்றாவது ‘வீரப்புலி’ என்கிற குட்டி.

முத்துசாமி இறந்துபோன பிறகு அப்பத்தாவோ, ஒண்டிப்புலியோ சொத்தை வாங்க சண்டை போடவில்லை. தன்னிடம் இருக்கும் சொத்து ஒண்டிப்புலியின் ஏழு தலைமுறைக்கும் போதும் என அப்பத்தாள் சொல்லிவிட்டாள். முத்துச்சாமியின் சொத்துக்களை சின்னாத்தாவால் நிர்வாகம் செய்ய முடியவில்லை. குட்டி, லாட்ஜில் ரூம் போட்டு தினமும் சீட்டு விளையாடுவதும், வண்டி கட்டிக்கொண்டு கூத்தியாள் வீட்டுக்குப் போய் வருவதுமாக இருந்தான். சொத்தை தண்ணீராகக் கரைக்கிறான் என மச்சப்புலி தினமும் சண்டை போட்டுக்கொண்டு வந்தார். சின்னாத்தா ஒவ்வொருவருக்கும் பெண் பார்த்து, கல்யாணம் செய்துவைத்து சொத்துக்களைப் பிரித்துக்கொடுத்தாள். வீராயீயைக் கல்யாணம் செய்துவைத்து, மச்சப்புலியின் பெயருக்கு மேற்கு வீட்டை எழுதித் தந்தாள்.

‘மேற்கு வீடு ராசி இல்லாத வீடு’ என வீராயீ வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். அதை அவர் கேட்டுக்கொள்ளவில்லை. தென்னந்தோப்பும்

10 பால் மாடுகளும் வாங்கி வியாபாரம் செய்தார். அவருக்கு பெரியபட்டி அப்பத்தாவைவிட காசு பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற வேகம் இருந்தது. தன்னால் ஒண்டிப்புலியைப்போல காலேஜுக்குப் போய் படிக்க முடியவில்லை என்றாலும், அவர்களைவிட சொத்துக்களை வாங்கிப் போட்டுவிடவேண்டும் எனப் பாடுபட்டார். ஒண்டிப்புலி என்ன செய்தாலும், உடனே தானும் செய்து அவரைப்போல பேர் வாங்கிவிட வேண்டும் என்கிற பைத்தியக்காரத்தனம் மச்சப்புலியின் ரத்தத்தில் ஊறியிருந்தது.

அப்பத்தா இறந்ததும் ஒண்டிப்புலி குடிப்பதையும் புகைப்பதையும் நிறுத்திவிட்டார். உடனே மச்சப்புலி தானும் குடிப்பதையும் புகைப்பதையும் நிறுத்திவிட்டார். சிவப்பு கலர் ஹோண்டா வண்டி ஒன்று வாங்கி, ஒண்டிப்புலி டவுனுக்குள் வந்து-போனார். மச்சப்புலியும் பசுமாட்டை விற்று, சிவப்பு கலர் ஹோண்டா வண்டி ஒன்றை வாங்கி ஓட்டினார். மச்சப்புலியால் வாங்க முடியாததாக இருந்தது, ஒண்டிப்புலி கட்டியிருந்த ‘ரைக்கோ’ கடிகாரம் மட்டும்தான். ரைக்கோ கடிகாரத்துக்காக எங்கெங்கோ அலைந்தார். சிங்கப்பூர்க்காரர்களிடம் சொல்லிவைத்தார். ஆனால், அவரால் வாங்கிக் கட்டிக்கொள்ள முடியவில்லை. இருந்தபோதிலும் மச்சப்புலிக்கு, ஒண்டிப்புலி சாவதற்குள்ளாக தானும் ஒரு நாள், ஒரு பொழுதாவது ரைக்கோ கடிகாரத்தை கட்டிக்கொண்டு, அவர் முன்பாக நிற்கவேண்டும் என்பதுதான் தீராத ஆசை.

மச்சப்புலி மணியைப் பார்த்தார். ஸ்டுடியோ வாசலை எட்டிப் பார்த்தார். இன்னமும் ஒண்டிப்புலியின் ஹோண்டா வண்டி வரவில்லை. ஒண்டிப்புலி வருகிற நேரம் கடந்துகொண்டிருந்தது. தாமதமாகும் ஒவ்வொரு நிமிடமும் மச்சத்துக்குப் பதற்றத்தை உண்டாக்கியது. மச்சம் வீட்டில் இருந்து புறப்படும்போது ஒரு முடிவாகத்தான் இருந்தார். அதற்கு ஏற்றாற்போல அவரது மனைவி வீராயீயும் சொல்லி அனுப்பியிருந்தாள்.

‘ஒத்த மனுஷனுக்கு அம்புட்டு சொத்து எதுக்கு? கேட்டா, ‘எனக்குப் பிறகு எல்லாம் உனக்கும் ஒம் புள்ளைகளுக்கும்தான்’னு சொல்றாரு. எனக்கு அவரு மேலே இருந்த நம்பிக்கை எல்லாம் எப்போவோ போச்சு மாமா. சொத்து அம்புட்டையும் உங்க பேருக்காச்சும், இல்லை என் பேருக்காச்சும் எழுதி வாங்குறதுக்கு ஏற்பாடு செய்யுங்க. ஏற்பாடு செய்யாம வீட்டு வாசப்படியை மிதிக்காதீங்க. உங்களுக்குக் காரியம் சாதிக்க துப்பு இல்லைன்னா சொல்லுங்க. எங்க வீட்டு ஆளுங்களை அனுப்பி எழுதி வாங்கிட்டு, ஆறு குளம்னு தூக்கிப்போடச் சொல்றேன். கோர்ட்டு… கேஸை நாங்க பார்த்துக்கிறோம்.’

‘மனுஷன் படுத்துக்கிட்டா பீ, மூத்திரம் அள்ளிப்போடுறதுக்கு நான் வர மாட்டேன். பொண்டாட்டி பிள்ளை இல்லாத மனுஷனுக்கு அத்தம்தொண்டி வீடு எதுக்கு… இல்லை எதுக்குனு நான் கேட்கிறேன்? எழுதிக் குடுத்துட்டு, ஊத்துற கஞ்சியைக் குடிச்சிட்டு இருக்கவேண்டியதுதானே. சாகிற தொண்டியும் அந்த வீட்டிலேயே இருக்கிறதுக்கு என்னா கொள்ளையா வந்துச்சு. சொத்து கைமாறட்டும். அப்புறம் இந்த நடுப்பட்டிக்காரி யாருனு காட்டுறேன். இத்தனை நாள் சோறாக்கிப்போட்டு, வண்ணாத்தி மாதிரி துணி வெளுத்துப்போட்டு, முதுகு தேய்ச்சுவிடாத குறையா அவனுக்கு எல்லாம் செஞ்சிருக்கேன். இரண்டுலே ஒண்ணு கேட்டுட்டு வந்திரு’ எனக் கோபமாகப் பேசினாள்.

வீராயீ பிறந்த வீட்டுக்காரர்கள் இதை எல்லாம்

அஞ்சாமல் செய்யக்கூடியவர்கள். ‘சொத்து அப்பத்தா வழி உறவுக்காரர்களுக்குச் சென்றுவிட்டால், எந்த கோர்ட்டிலும் கேஸ் போட்டு ஜெயிக்க முடியாது’ என வக்கீல்கள் சொல்லிவிட்டார்கள். நடுப்பட்டி அப்பத்தாளின் வீட்டை இரண்டு சேட்டுகள் விலைக்குக் கேட்டார்கள். கோடிக்கணக்கில் தருவதாகச் சொன்னார்கள். ‘டவுனுக்கு நடுவுல இருக்கிற வீட்டை இடிச்சு, காம்ப்ளெக்ஸ் கட்டி வாடகைக்கு விட்டா நல்ல காசு வரும். நீங்க மாட்டைக் கட்டி, பாலைப் பீய்ச்சுறேன்னு வீட்டை ஒண்ணும் இல்லாம வெச்சிருக்கீங்க’ என அவர்கள் கேலி செய்தார்கள். ஒண்டிப்புலி அவர்களை விரட்டினார். இந்த வீட்டைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? ஒத்தைப் பொம்பளை சம்பாதிச்சு கட்டி காப்பத்தின பூமி என்பது யாருக்குத் தெரியப்போகிறது!

நான்கு வருடங்களுக்கு முன்பு, சொத்து சம்பந்தமாக ஒரு முடிவு வந்துவிடும் என எதிர்பார்த்தார்கள். மச்சப்புலியின் மகள் வெண்ணிலாவுக்குத் திருமணம். ‘புலி வீட்டுத் திருமணம்’ என பேனர் ஃபிளெக்ஸை தெரு முழுக்க வைத்து, அலப்பரையாகக் கொண்டாடினார்கள். வெண்ணிலா, திருமணம் முடிந்து போகும்போது பெரியப்பாவிடம் விபூதி வாங்கிக்கொண்டாள். அழுத கண்களோடு அவரது கையைப் பிடித்துக்கொண்டாள். ‘பெரியப்பா… நீங்களும் என்கூடவே வந்திருங்க. என்கூடவே இருங்க’ என அழத்தொடங்கினாள். ஒண்டிக்கும் அழுகை வந்துவிட்டது. ஒண்டிப்புலி அவள் மேல் பிரியமாக இருந்தார். கண்களைத் துடைத்துக்கொண்டு, விபூதியை அவளது நெற்றியிலும் மாப்பிள்ளையின் நெற்றியிலும் பூசிவிட்டார்.

‘திருப்பூட்டு அன்னைக்கு அழக்கூடாது கழுதை. கண்ணைத் துடை கழுதை. சந்தோஷமா இரு. இந்தா இருக்கிற ஊருக்கு வர்றதுக்கு எவ்வளவு நேரமாகப்போகுது. மச்சப்புலியும் நானும் தினமும் சாயங்காலம் வந்துடுறோம். நீ போ சாமி’ என வழியனுப்பினார். அன்று தனது சொத்து சம்பந்தமாக ஏதாவது பேசுவார் என எதிர்பார்த்திருந்தனர். ஆனால், எதுவும் பேசாமல் ஊமைக்கொட்டான் மாதிரி இருந்தார். ‘வெண்ணிலாவுக்கு வளைகாப்பு முடிந்து, பிள்ளை பெற்று, காது குத்தி, மொட்டையும் எடுத்தாகிவிட்டது. இன்னமும் ஒண்டி தனது சொத்துக்களை உயில் எழுதிவைப்பது சம்பந்தமாக எதுவும் பேசாமல் இருக்கிறாரே…’ என வீராயீயிக்கும் அவளது பிறந்த வீட்டுக்காரர்களுக்கும் கோபம் வந்தது.

மச்சப்புலி டாஸ்மாக் கடையில் தான் அமர்ந்திருந்த ஸ்டூல் கிடுகிடுவென தீடீரென ஆடுவதை உணர்ந்து எழுந்து நின்றுகொண்டார்.

‘இந்த ஸ்டூலு ஆடுது தம்பி. வேறே ஏதாவது ஸ்டூலு இருந்தா மாத்திக் கொடுங்க’ என அவனிடம் கேட்டார்.

‘எல்லா ஸ்டூலும் அப்படித்தான் அண்ணே இருக்கு. பார்த்து உட்காருங்க’ என அவன் சொல்லிவிட்டுச் சென்றான்.

மச்சப்புலி தனக்கு எதிரே இருந்த ஸ்டூலில் போய் உட்கார்ந்து சரிபார்த்தார். கச்சிதமாக இருந்தது. அண்ணன் வந்து உட்கார்ந்து கொண்டால், நாற்காலி ஆடாமல் இருக்கும் என நினைத்தார்.

மச்சப்புலியின் செல்போன் ‘அச்சம் என்பது மடமையடா… அஞ்சாமை… திராவிடர் உடமையடா’ எனப் பாட்டுப் பாடியது. எடுத்துப் பார்த்தார். வீராயீ அழைப்பது தெரிந்தது. பேசினார்.

‘மாப்பிள்ளையும் வெண்ணிலாவும் வந்திருக்காங்க. ரவைக்கு பணியாரத்துக்கு ஊறவெச்சு ஆட்டணும். கருப்பட்டியும் பச்சரிசியும் வாங்கிட்டு வாங்க. அவங்க இப்போ ஒண்டி வீட்டுக்குப் போயிருக்காங்க. அங்கே எதையும் சாப்பிடாதே… சாப்பிடாதே. ஆமா சொல்லிட்டேன்’ என போனை கட் செய்தாள்.

வெண்ணிலாவும் மாப்பிள்ளையும் ஞாயிற்றுக்கிழமைதோறும் பிள்ளையைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ஒவ்வொரு வாரமும் வெண்ணிலா கவுச்சி எடுத்து, குழம்பு வைத்துக்கொண்டு வந்துவிடுவாள். போன வாரம் கோழிக் குழம்பு வைத்து, கொண்டுவந்திருந்தாள். ஒண்டிப்புலி வீட்டில்தான் எல்லோருக்கும் ராத்திரிச் சாப்பாடு. சாப்பாடு முடிந்து ஊருக்குப்போக நடுராத்திரி ஆகிவிட்டது.

ஒண்டிப்புலி வெற்றிலைப் போட்டுக்கொண்டு, பாட்டுப்பாடி சந்தோஷமாக இருக்கிற நேரம் அது. அவர்கள் போன பிறகு, வீடு வெறுச்சோடிப்போய் அவர் மட்டும் தனியாக இருப்பார். அப்போது அவருக்கு, தான் கல்யாணம் செய்துகொள்ளாமல் இருப்பது வேதனையான விஷயம் என்பது நினைவுக்கு வரும்; கண்ணீர் வடிப்பார். அவரது கண்ணீரைத் துடைத்துவிடுவதற்கு அங்கு அப்போது யாரும் இருப்பது இல்லை.

ஒண்டிப்புலி, ‘கல்யாணம் வேண்டாம்’ என சொல்லிவிட்டார். அப்பத்தாள் இறந்ததும், அவருக்குக் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்தார்கள். பெண் வீட்டுக்காரர்கள் மாட்டுவண்டியில் வரும்போது அச்சாணி முறிந்து, ஆற்றுப்பாலத்தில் வண்டி கவிழ்ந்துவிட்டதை சகுனத்தடையாகக் கருதி பெண் கொடுக்கவில்லை. அதற்குப் பிறகு வேறு ஒரு பெண் பார்த்தார்கள். கல்யாணம் சுமூகமாக நடந்தது. வாண வேடிக்கை, மூன்று நாள் சாப்பாடு, பாட்டுக் கச்சேரி, நாதஸ்வரம்-தவில் வாசிப்பு என அமர்க்களமாக இருந்தது. அன்று இரவு மணப்பெண் அவருடைய காலில் விழுந்து அழுதாள். தான் ஏற்கெனவே ஒருவனுக்கு மனதளவில் வாக்கப்பட்டு, இப்போது வயிற்றில் அவனது

உசிரைச் சுமந்துகொண்டிருப்பதாகவும் சொத்துக்கு ஆசைப்பட்டுத்தான், இந்தக் கல்யாணத்துக்குத் தன்னைச் சம்மதிக்க வைத்தார்கள் என ஒப்பாரி வைத்தாள்.

அந்தப் பெண்ணின் தலையில் இருந்த பூ வாடுவதற்குள்ளாக, அவளை பிறந்த வீட்டுக்கு டாக்ஸி வைத்து அனுப்பிவைத்தார். ஒண்டிப்புலி பிறகு பெண் பார்ப்பதை நிறுத்திவிட்டார். கல்யாணம் வேண்டாம் என, பால் மாடு வளர்ப்பதிலும் மாட்டுக்கு வைத்தியம் செய்வதுமாக, தனது அப்பத்தாளைப்போல மாறிவிட்டார். அவருக்கு அதுதான் பிடித்திருந்தது. தினமும் காலையில் எழுந்து பெரியகோயிலுக்குப் போய்வருவார். சாயங்காலம் தனது நண்பர்களைப் பார்க்க ஒயின் ஷாப் பக்கம் போய்வருவார்.

டாஸ்மாக் கடைக்குள் ஏரியா கவுன்சிலரும் அவருடன் சேர்ந்து சுற்றிக்கொண்டிருக்கும் இரண்டு பேரும் ‘அலப்பரையாக’ வந்து உட்கார்ந்தனர். அவர்கள் டேபிளில் உட்கார்ந்ததும், அவர்களைச் சுற்றி ஆட்கள் கூடிவிட்டனர். ஒரு டேபிளில் நால்வர் உட்கார்வதற்கு பதிலாக, 10, 15 ஆட்கள் சுற்றி அமர்ந்திருந்தனர். கவுன்சிலர் எழுந்து ‘அண்ணே… வணக்கம்’ என மச்சப்புலியைப் பார்த்துச் சொன்னார். மச்சப்புலி பதிலுக்கு வணக்கம் சொன்னார். கவுன்சிலர் சொல்லியதன் பேரில் மச்சத்துக்கு ஒரு ரத்தப்பொரியல் தட்டு வந்தது. பொரியல் சூடாக இருந்தது.

‘சும்மா சாப்பிடுங்க அண்ணே…’ என கவுன்சிலர் அவரை உற்சாகப்படுத்தினார்.

கவுன்சிலர், போதை தலைக்கு ஏறி மப்பாக இருந்தார். தான் அமர்ந்து இருந்த ஸ்டூலை எடுத்துக்கொண்டு மச்சப்புலியின் அருகே போட்டுக்கொண்டார். ‘அண்ணே, உங்களுக்கு ஆஃப் பாட்டில் சொல்லட்டா?’ எனக் கேட்டார்.

‘நான் குடிக்கிறது இல்லை பாண்டி’ என மச்சப்புலி சொன்னதும், கவுன்சிலர் ‘பைபாஸ் செய்துட்டீங்களா அண்ணே?’ எனக் கேட்டார்.

‘ஒண்டிப்புலி அண்ணே குடிக்கிற நிறுத்தினதும் நானும் நிறுத்திட்டேன் பாண்டி. அண்ணே, அப்பத்தா செத்ததுக்குப் பின்னாடி குடிக்கிறது இல்லைங்கிறது உனக்குத் தெரியாதா?’

‘அப்படியாண்ணே…’ என்ற கவுன்சிலர், ‘அண்ணே, பெரிய வீட்டை விக்கிறதுக்கு ஏற்பாடு செய்யுங்க. பார்ட்டி ரெடியா இருக்கு. ‘ரெண்டு சி’க்கு இப்போ பணம் ரெடி’ எனச் சொன்னார். மச்சப்புலி ஒன்றும் பேசவில்லை. கவுன்சிலர் எழுந்து அவரது டேபிளுக்குச் சென்றார். கவுன்சிலர் சென்றதும் அங்கு இருந்த டேபிளில் குடித்துக்கொண்டிருந்தவர்களை வேடிக்கை பார்த்தார்.

அப்பத்தா உயிருடன் இருக்கும்போது ஒண்டிப்புலி குடித்து, ஆடிப் பாடி, தெருவை அலம்பியது எல்லாம் உண்மைதான். ஒண்டிப்புலி அப்போது காலேஜ் படித்துக்கொண்டிருந்தார். அவருக்கு கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரிய வேண்டும் என ஆசை. அப்பத்தாவிடம் சொல்லியபோது அவள், ‘நான் ஒனக்கு காலேஜ் கட்டித் தர்றேன் ஒண்டிப்புலி. நீ எதுக்கு வேலைக்குப் போறே?’ எனக் கேட்டாள்.

ஒண்டிப்புலி குடித்துவிட்டு வந்தால் அப்பாத்தா விளக்குமாத்தை எடுத்துக்கொண்டு வந்து விரட்டுவாள். அப்பத்தா இறந்துபோன தகவல் அவருக்குக் கிடைத்தபோது, கல்லூரில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார். அப்பத்தாவை அடக்கம் செய்துவிட்டு வீட்டுக்கு வருவது வரை அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் உறங்கிவிட்டார். உறங்கி எழுந்ததும் பசி எடுத்தது. சாப்பிடுவதற்கு ஒன்றும் இல்லை. இழவு வீட்டுக்கு வந்திருந்தவர்களுக்குக் கொடுத்த ஓலைப்பெட்டிப் பொரி இருந்தது. வேறு ஒன்றும் வீட்டில் இல்லை. குடிப்பதற்கு தண்ணீர்கூடப் பிடித்து வைத்திருக்கவில்லை. அவருக்கு அழுகையாக வந்தது. தான் இனிமேற்பட்டு யாரிடம் போய், ‘சோறு போடு’ எனக் கேட்க முடியும்? யாரிடம் போய், ‘பசிக்கிறது’ என நிற்க முடியும்… என நினைத்தவுடன் அவருக்கு வந்த அழுகையை அடக்க முடியவில்லை. அப்பத்தா தன்னை மகன்போல இத்தனை நாளும் வளர்த்திருக்கிறாள். ஒரு தாயைப்போல தானும் அவளுடன் வாழ்ந்திருக்கிறோம் என்பதை நினைத்து இரவு எல்லாம் குடித்தார். குடித்துவிட்டு போதையில் தனது காலேஜ் நோட்டு புத்தகங்களைத் தூக்கி எறிந்தார். நோட்டுகளும் புத்தகங்களும் ரோட்டுக்கு வந்து விழுந்தன. அவரது சின்னாத்தாக்காரி, அதை எல்லாம் எடுத்துக்கொண்டு போய் அடுப்பு எரித்துவிட்டாள்.

மறுநாள் காலையில் போதை தெளிந்து, பக்கத்து வீட்டுக்காரர்களிடம், தெரிந்தவர்களிடம், ரோட்டில் இருந்தவர்களிடம் தனது கல்லூரிப் பாடப் புத்தகங்களைப் பற்றி கேட்டார். யாருக்கும் தெரியவில்லை. அவளது சின்னாத்தாக்காரி, ‘படிக்கிற எருமைக்கு அக்கறை இருக்கணும். குடிச்சிட்டுக் கிடந்தா இப்படித்தான் இருக்கும். வளர்ப்பு அப்படி. பெத்த ஆத்தா வளர்த்திருந்தா இப்படியாகுமா?’ என முந்தியை விரித்து ஆட்டிக்கொண்டு பேசினாள்.

அன்றில் இருந்து ஒண்டிப்புலி மதுவைக் கையில் தொடுவது இல்லை. சின்னாத்தாக்காரி பேசியதற்காக இல்லை. பதிலாக அப்பத்தாளை யாரும் இனிமேற்பட்டுப் பேசக் கூடாது என்பதற்காகக் குடியை நிறுத்தினார். ஆனால், தினமும் தனது நண்பர்களைப் பார்க்க, அவர்கள் வழக்கமாகச் செல்லும் ஒயின்ஷாப்புக்குச் செல்வார்.

மச்சப்புலி ஸ்டூலில் இருந்து எழுந்து நின்றார். கை எண்ணெய்ப் பிசுபிசுப்பாக இருந்தது. ரத்தப்பொரியல் தின்ற கையைக் கழுவிவிட்டு வெளியே வந்தார். வெண்ணிலாவையும் அவளது மகள் மீனாட்சியும் பார்த்த பிறகு ஒண்டிப்புலி கடைக்கு வர மாட்டார். மச்சப்புலி, ஸ்டுடியோவுக்கு முன்பாக நிறுத்திவைத்திருந்த ஹோண்டாவை எடுத்துக்கொண்டு, அவரது வீட்டுக்குப் புறப்பட்டார். மச்சப்புலிக்குப் பயமாக இருந்தது. வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை வருகிறவள், ஏன் தீடீரென வியாழக்கிழமை வந்திருக்கிறாள் என யோசித்தார். அவருக்கு எதுவும் புலப்படவில்லை. ஒண்டிப்புலியின் அருகிலேயே இருக்கவேண்டும் என நினைத்தார். ஹோண்டாவை வேகமாக ஓட்டிக்கொண்டு சென்றார்.

ஒண்டிப்புலியின் வீட்டு முன்பாக ஹோண்டாவை நிறுத்திவிட்டு, கதவைத் திறந்தார். செம்பட்டை நாய் வாலை ஆட்டிக்கொண்டு வாசற்படியைத் தாண்டி வந்து நின்றது. மச்சப்புலியைப் பார்த்ததும் அவரைச் சுற்றியது. வாசற்படியில் ஏறி தெருவை தற்செயலாகத் திரும்பிப் பார்த்தார். தெருவுக்குள் வெங்கட்டண்ணாவும் அவனுடன் இரண்டு ஆட்களும் வேகுவேகுவென நடந்துசென்றார்கள்.

ஒண்டிப்புலி வீட்டின் முன் அறையில் பிரம்பு நாற்காலியில் சாய்ந்து, பழைய பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருடைய கால்மாட்டில் வெண்ணிலாவும் மீனாட்சியும் அமர்ந்திருந்தனர். மாப்பிள்ளை அவர்களுக்கு எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்து இருப்பது தெரிந்தது. மச்சப்புலி அவர் அருகே சென்றார். தாழம்பூ குங்குமத்தின் வாசம் ஜம்மென வந்தது. கிருதாவுக்கு மை தடவி, இளந்தாரியைப்போல பார்ப்பதற்கு அழகாக இருந்தார். ஒண்டிப்புலி சில்க் ஜிப்பாவை இழுத்துவிட்டு, தனது ரைக்கோ கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தார்.

”நீ சரியா ஒன்பது மணிக்கு வந்துருவேன்னு இப்போதான் சொல்லி வாயை மூடுனேன்… நீயே வந்துட்டே. உனக்கு ஆயுசு நூறு’ என்றார் ஒண்டிப்புலி.

மச்சப்புலி சிரித்துக்கொண்டார்.

‘மீன் குழம்பும் இட்லியும் கொண்டுவந்திருக்கேன் பெரியப்பா. முதல்ல சாப்பிடுங்க. நீங்க பசி பொறுக்க மாட்டீங்க. கை கழுவிவிட்டுவாங்க’ என வெண்ணிலா அவரை அவசரப்படுத்தினாள்.

ஒண்டிப்புலிக்கு மீனாட்சியுடன் சிறிது நேரம் பேசி விளையாட வேண்டும் என ஆசையாக இருந்தது. அப்பத்தாள் அவரிடம், ‘உனக்கு பொம்பளைப் புள்ளை பிறந்தா மீனாட்சினு பேர் வைடா ஒண்டி. நம்ம குடும்பத்திலே யாருக்கும் மீனாட்சினு பேர் இல்லை’ எனச் சொல்லியிருந்தாள். அப்பத்தாளின் ஞாபகத்துக்காக வெண்ணிலாவின் மகளுக்கு ‘மீனாட்சி’ எனப் பெயர் வைத்தார் ஒண்டி. தனது குடும்பத்தில் அப்பத்தாளே திரும்பவும் பிறந்திருக்கிறாள் என நினைத்துக்கொண்டார். அவர் எழுந்து கை கழுவுவதற்காகப் பின்பக்கமாக நடந்தார். அவருடன் மச்சப்புலியும் சென்றார்.

‘அண்ணே, வெங்கட்டண்ணா இந்தப் பக்கமா அலையுறான். நான் இப்போ பார்த்துட்டுத்தான் வர்றேன்’ எனச் சொன்னார். வெங்கட்டண்ணாவின் பெயரைக் கேட்டதும் ஒண்டிக்கு நெஞ்சு பதைத்தது. அவன்தான் குட்டியை, சொத்துக்கு ஆசைப்பட்டுக் கொன்றவன்.

குட்டி வழக்கம்போல லாட்ஜில் ரூம் போட்டு, போதையில் சீட்டு விளையாடிக்கொண்டிருந்தான். அவனுடன் விளையாடுபவர்கள் அனைவரும் அவனுடன் படித்தவர்கள்; பழகியவர்கள். அன்று வெளியூர்க்காரர்கள் சிலர் புதிதாக ஆட்டத்தில் சேர்ந்திருந்தார்கள். வெங்கட்டண்ணா சொல்லி அவர்கள் லாட்ஜுக்கு வந்திருந்தனர். ஆட்டம் ராத்திரி வரை இழுத்துக்கொண்டுபோனது. ஒருகட்டத்தில் குட்டியின் ஸ்நேகிதர்கள் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றதும் வெளியூர்க்காரர்கள் குட்டியைச் சுற்றிக்கொண்டனர். வம்பு பேசி, மறுவிளையாட்டுக்கு அவனை அழைத்தார்கள். ‘ஜெயித்த பணத்தைப் பிரித்துவிட்ட பிறகு மறுவிளையாட்டு விளையாடுவது வழக்கம் இல்லை’ எனச் சொன்ன குட்டியுடன் சண்டை போட்டார்கள்.

வெளியூர்க்காரர்கள் சோடா பாட்டிலை உடைத்து, அவனது வயிற்றில் குத்திவிட்டு ஓடிவிட்டார்கள். அவனைக் காப்பாற்ற முடியவில்லை. அவனது சம்சாரம் ஏழு மாத கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவள் பிறந்த வீட்டுக்குப் போய்விட்டாள். ஒண்டிப்புலியும் பஞ்சாயத்துக்காரர்களை வைத்து அவளுக்குச் சொத்தை வாங்கித்தர எவ்வளவோ முயற்சிசெய்தார். வெங்கட்டண்ணா கடைசிவரை சொத்தைத் தரவில்லை. சொத்தை விற்று, காசாக்கி, அவனும் வீராயீயும் பங்கு போட்டுக்கொண்டார்கள். குட்டியின் மனைவி பத்திரம் பதிவான நாளில் மண் எடுத்து, காறித்துப்பி, சாபம் போட்டாள். அவள் சின்னாத்தாக்காரி இறந்ததற்குக்கூட இந்தப் பக்கம் எட்டிப்பார்க்கவில்லை.

‘ஒச்சுவுக்கு இன்னமும் சொத்து ஆசை போகலை.”

‘அப்படி எல்லாம் சொல்லாதே ஒண்டிப்புலி. நான் இருக்கிற வரைக்கும் எதுவும் நடக்கவிட மாட்டேன்’ என மச்சப்புலி கண்ணீர் வடியச் சொன்னார்.

‘கண்ணைத் துடை. மாப்பிள்ளை முன்னாடி கெம்பீரதையா இருக்கணும். செரச்சிட்டு, மீசை மசிருக்கு மை தடவுனா என்னாடா? நிமிர்ந்து நில்லுடா. அலமாரியிலே டபுள் புல்லட் ரைஃபிள் இருக்கு. அதை மீறியா இந்த வீட்டுக்குள்ளே ஒருத்தன் நுழைஞ்சிற முடியும்?

நுழைஞ்சாலும் உசிரோட திரும்பி வாசலுக்குப் போக முடியுமா?’ என வாசலைப் பார்த்தார். செம்பட்டை நாய் வாலைச் சுருட்டிக்கொண்டு ஓர் அடியாளைப்போல நின்றிருந்தது. அவர்கள் இருவரும் முன் அறைக்கு வந்தார்கள்.

வெண்ணிலா சாப்பிடுவதற்கு தட்டில் இட்லியை வைத்தாள். மீன் குழம்பை ஊற்றினாள். அயிரையைத் தனியாகத் தட்டின் ஓரம் எடுத்து வைத்தாள். ஒண்டிப்புலிக்குப் பார்த்ததும் மேற்கொண்டு பசி கூடுதலானது. ஒரு தட்டு மட்டும் இருந்ததைப் பார்த்ததும் ஒண்டிக்கு என்னவோபோல் இருந்தது.

‘அவங்க ரெண்டு பேருக்கும் இட்லியை வைக்கவேண்டியதுதானே?’ என வெண்ணிலாவைப் பார்த்துச் சொன்னார். வெண்ணிலா மழுப்பலாகச் சிரித்தபடி பதில் பேசாதிருந்தது, ஒண்டிக்கு என்னவோ போல் இருந்தது. ‘இத்தனை நாளும் வெண்ணிலா பிள்ளை தனியாகத் தன்னைச் சாப்பிடவைத்தது கிடையாதே. இன்று ஏன் செய்கிறாள்?’ என செம்பட்டைக்கு ஜாடை காட்டினார்.

வாசலில் இருந்த நாய் குலைத்துக்கொண்டு வீட்டுக்குள் வந்து நின்றது. நாய் சாப்பாட்டுத் தட்டையும் குழம்பு வாளியையும் நோட்டம் போட்டது. ஒண்டிப்புலியை நாய் பலமுறை காப்பாற்றியிருக்கிறது. புதிய ஆள் அரவத்தைக் கண்டு தெருவைக் கூட்டிவிடும். இந்தச் சொத்துக்கு ஆசைப்பட்டு தன்னைப் பலி போடுவதற்குத் தயங்காதவர்களை அவர் தினமும் பார்க்கிறார். எப்போது தன் உயிருக்கு ஆபத்து வரும் என அவரால் அனுமானிக்க முடியவில்லை. பின்வாசலைப் பார்த்தார்; யாரும் இல்லை. தெருவிலும் யாரும் இல்லை. பிறகு எதற்காக நாய் குரைக்கிறது என நாயின் முகத்தைப் பார்த்தார். பிறகு மீன் குழம்பில் இட்லியைப் பிசைந்து நாய்க்குப் போட்டார். வெண்ணிலா, ‘அதுக்குப் போய் போடுறீங்களே பெரியப்பா…’ எனச் சங்கடப்பட்டுக்கொண்டாள். ஒண்டிப்புலி, ‘விடும்மா… அதுவும் நம்மளைப்போலத்தான். என்கூடவே இருக்குது…’ என அவளைச் சமாதானப்படுத்தினார்.

நாய் முகர்ந்து பார்த்து தின்னத் தொடங்கியது. மேலும் இரண்டு மூன்று வாய் இட்லியைப் பிட்டுப்போட்டார். மீனையும் இட்லியையும் தின்றுவிட்டு வாசலுக்குச் சென்றது. வாசலில் அமைதியாக அமர்ந்துகொண்டது. நாய் நக்கிச் சாப்பிட்டுவிட்டு வாலை ஆட்டிக்கொண்டதும் அவருக்கு நிம்மதியானது. ஒண்டிப்புலி குழம்பை ருசித்தார். காரமும் புளிப்பும் சரியாக இருந்தன. குழம்பு கசப்பு எடுக்கவில்லை. ஒண்டிப்புலி, தனக்குத் தட்டில் பரிமாறுவதையும் கவனித்தார். உயிர் பயம், கண் முன்பாக இருக்கிறவர்களைச் சந்தேகம் கொள்ளச்செய்தது. ஒண்டிப்புலி மீனாட்சியைத் தூக்கி தனது மடியில் உட்காரவைத்துக்கொண்டார்.

வெண்ணிலா தனது மகளை அவரிடம் இருந்து வாங்கிக்கொண்டாள்.

‘தாத்தா சாப்பிட்ட பிறகு நீ அவருக்கிட்டே போ’ எனச் சொன்னாள். பிள்ளையைத் தன் கணவனிடம் கொடுத்தாள்.

போனவாரம் குடும்பத்துடன் அனைவரும் அமர்ந்து கோழிக்குழம்பும் சுடுசோறும் சாப்பிட்டார்கள். அப்போது மீனாட்சி அவருடைய மடியில்தான் அமர்ந்திருந்தாள். ஒண்டிப்புலி ஊட்டிவிட்டார். நாட்டுக் கோழிக்கறியைப் பிதுக்கி, நசுக்கி, சோற்றுடன் பிசைந்து கொடுக்கக் கொடுக்க அவள் ஆசையாகச் சாப்பிட்டாள். ‘இன்று ஏன் தன்னிடம் இருந்து வெண்ணிலா வாங்கிக்கொண்டாள்?’ என யோசனையாக தட்டில் கை வைத்தார். அவருக்குச் சாப்பிடுவதற்கு மனமே இல்லை. மச்சப்புலியின் கண்களையும் ஏதும் அறியாத அவரது முகத்தையும் பார்த்தார்.

‘மீனாட்சிக்கு மீன் குழம்பு சேர மாட்டேங்குது பெரியப்பா. அவளுக்கு ஊட்டிவிடாதீங்க. அவளுக்கு எங்க அப்பா மாதிரி… மீன் குழம்பு சாப்பிட்டதும் வயித்தோட்டமாயிருது’ எனச் சொன்னாள்.

‘எனக்கும் தட்டிலே இட்லியை வையி வெண்ணிலா. நானும் அண்ணன்கூட சாப்பிடுறேன்’ என மச்சப்புலி சொன்னார்.

‘நீங்களும் உங்க மாப்பிள்ளையும் வீட்டுக்குப் போய் சாப்புடுங்க. அங்க கோழிக் குழம்பு வெந்துக்கிட்டு இருக்கு. உங்களுக்குத்தான் மீன் குழம்பு ஆகாதுனு தெரியும்ல. அப்புறம் எதுக்கு அது மேலே ஆசைப்படுறீங்க?’ எனக் கேட்டாள்.

‘மாமா… எங்க ஊருல தென்னந்தோப்பை குத்தகைக்கு வாங்குறேன். பத்திரம் எழுதி, கொண்டுவந்திருக்கேன். சரிபார்த்து நீங்க சாட்சி கையெழுத்துப் போடணும்’ என ஒண்டிப்புலியிடம் சொன்னார் மாப்பிள்ளை. பேச்சு தடம் மாறி, வேறு பக்கம் போகிறது என்பதை அறிந்த ஒண்டிப்புலி, ‘சரி மாப்பிள்ளை’ எனச் சொன்னார். தான் மட்டும் சாப்பிடுவது அவருக்கு மனதில் வேறு சிந்தனையை ஓடச் செய்தது.

‘இன்னமும் இட்லியும் மீன் குழம்பும் இருக்கு. மெள்ளமா சாப்பிடுங்க’ எனச் சொன்னாள் வெண்ணிலா. ஒண்டிப்புலிக்கு அப்படியே கண் கலங்கிவிட்டது. அப்பத்தாளும் இப்படியாகத் தான் சொல்வாள். ‘மெள்ளமா சாப்பிடு… மெள்ளமா சாப்பிடு’ எனத் தட்டு நிறைய வைப்பாள். ‘எங்க அம்மா இருந்திருந்தாக்கூட இம்புட்டுச் சோத்தைப் போட்டு என்னையை வளர்த்திருக்க மாட்டாளே…’ என மனதுக்குள் அப்பத்தாளை நினைத்துக் கலங்கினார்.

வெண்ணிலா, தூக்குவாளியில் இருந்த இட்லியை எடுத்து அவருக்கு வைத்தாள். ஒரு இட்லி வெள்ளையாகவும், இன்னோர் இட்லி பழுப்பு நிறத்திலுமாக இருந்தது. தூக்குவாளிக்கு அடியில் பழுப்பு நிறத்திலான இட்லிகளே அதிகமாக இருந்தன. ஒண்டிப்புலி அதைக் கவனிக்கத்தான் செய்தார். பழுப்பு நிறத்திலான இட்லியைப் பிட்டு வாயில் போட்டுக்கொண்டார். அவருக்குத் திடுக்கென இருந்தது. வேறு ஏதோ ருசி. வேறு ஏதோ பதார்த்தத்தை ருசித்த நாக்கு தீயைக் குடித்ததுபோல துடித்துச் சுருண்டுகொண்டது. தண்ணீரைத் தேடியது.

‘இட்லித் துணி கலருதான் பெரியப்பா… வேற ஒண்ணும் இல்லை’ என அவரைச் சமாதானப் படுத்தினாள் வெண்ணிலா. அவருக்குத் தட்டு நிறைய அயிரையை வைத்தாள். மேலும் பழுப்பு நிறத்திலான இரண்டு இட்லியை வைத்தாள். அவரை, ”சாப்பிடுங்க… சாப்பிடுங்க…” எனச் சொன்னாள். அவர் சிரித்துக்கொண்டார்.

‘எதுக்குச் சிரிக்கிறீங்க… பெரியப்பா?’

ஒண்டிப்புலி எதுவும் பேசவில்லை. அமைதியாகச் சாப்பிட்டார். ‘சொல்லுங்க பெரியப்பா. எதுக்குச் சிரிக்கிறீங்க?’ என வெண்ணிலா கேட்டாள். ஒண்டிப்புலி சந்தோஷமாகச் சாப்பிட்டு முடித்து எழுந்தார். கை கழுவிக்கொண்டு வந்தார். மாப்பிள்ளையிடம் இருந்த பத்திரங்களை வாங்கி வாசித்துப் பார்த்தார். எல்லாம் சரியாக இருந்தன. அவர்கள் ஒத்திக்குக் கொடுத்த பணத்தின் விவரம், எந்தத் தேதியில் இருந்து மூன்று வருடங்களுக்கு ஒத்தி காலம் என எல்லா விவரங்களையும் எழுதி, டைப் செய்திருந்தார்கள்.

‘மாப்ள… எல்லாம் கரெக்ட்டா இருக்கு. கையெழுத்துப் போட்டு பணத்தைக் கொடுத்துற வேண்டியதுதானே?’ என்றார்.

‘மாமா நீங்க ஒரு சாட்சிக் கையெழுத்துப் போட்டீங்கனா எனக்கு ஒத்தாசையா இருக்கும்.’

‘சாட்சி கையெழுத்துக்கு என்ன… கொண்டாங்க கையெழுத்துப் போடுறேன்’ என பேனாவைத் திறந்து, சாட்சி இடத்தில் கையெழுத்துப் போட்டார். வரிசையாக மூன்று நான்கு பத்திரங்கள் வந்தபடி இருந்தன. மீனாட்சி அவரது முதுகில் ஏறி மூக்குக்கண்ணாடியைக் கழற்றினாள். ஒண்டிப்புலிக்கு எழுத்தும் பத்திரக் காகிதங்களும் மங்கலாகத் தெரிந்தன. மீனாட்சி, கண்ணாடியைத் தராமல் வாசலுக்குச் சென்று நின்றுகொண்டாள். மாப்பிள்ளையும் வெண்ணிலாவும் நீட்டிய காகிதங்களில் அவர் கையெழுத்துப் போட்டார்.

ஒண்டிப்புலி, தான் போட்ட கையெழுத்துக்களை எண்ணிக்கொண்டுதான் இருந்தார்.

18 கையெழுத்துகளுக்கு மேலாகப் போட்டுவிட்டார். அவருக்கு அப்போதே தெரிந்துவிட்டது. 20-வது கையெழுத்தைப் போடும்போது அவரது நாக்கு வறட்சி எடுத்தது; கண்கள் சொருகிக்கொண்டு வந்தன; தாகமாக இருந்தது. ‘யாராவது செம்பு நிறையத் தண்ணீர் கொடுத்தால் குடிக்கலாம்’ எனத் தோன்றியது. வாயைத் திறந்து ‘தண்ணீர்’ எனக்கூடக் கேட்க முடியவில்லை.

பின்வாசலில் சத்தம் கேட்டு மச்சப்புலி ‘யார்றா அது?’ என ஓடினார்.

வெங்கட்டண்ணா நின்று இருந்தான். ஒச்சப்புலி உறுமாலைக் கழற்றி, உதறிக்கொண்டான். அவனது காலடியில் வட்டக்குழி தெரிந்தது. தூக்குவாளியில் எஞ்சியிருந்த மீன் குழம்பையும் பழுப்பு நிற இட்லிகளையும் குழியில் போட்டு மூடினான்.

மச்சப்புலி, ‘டேய் என்னாடா செய்றே?’ எனக் கத்தினார்.

வெங்கட்டண்ணா கத்தியை எடுத்துக் காட்டினான்… ‘நீயும் அவனை ஒண்ணும் செய்ய மாட்டேங்கிறே. எங்களையும் செய்யவிட மாட்டேங்கிறே. சொத்து வேற யாருக்கோ போறதை வேடிக்கை பார்த்துட்டு இருக்கணுமா? அவனைச் சாய்க்கிறதுக்கு கத்தி கபடா எல்லாம் தேவை இல்லை. விஷத்தை வெச்சுட்டோம். உசுரு தன்னாலே பிரிஞ்சுரும்’ எனச் சொல்லியவன், சுவர் ஏறிக் குதித்து வீட்டைவிட்டு ஓடினான். மச்சப்புலிக்கு அழுகை வந்தது. வேகமாக முன் அறைக்கு ஓடி வந்தார்.

வெண்ணிலா குழம்பையும் இட்லியையும் பிசைந்து நாய்க்குப் போட்டிருக்கிறாள். துள்ளலும் கத்தலுமாக வாசலில் சத்தம் போட்டுக்கொண்டிருந்தது. ஈனமான அதன் ஓலத்தை ஒண்டியினால் காது கொடுத்துக் கேட்க முடியவில்லை. வாசலுக்குச் சென்று பார்த்துவிட்டு வரலாம் என எழுந்து நடக்க எட்டு வைத்தார். அப்படியே முழங்கால் சருக்க, நாற்காலியில் விழுந்தார்.

‘உன்னை நம்பி வெச்ச பாசத்திலே எனக்கு விஷத்தை வெச்சுக் கொண்டுவந்தியா?’ என வெண்ணிலாவைப் பார்த்துக் கேட்டார்.

வெண்ணிலா பதில் எதுவும் பேசவில்லை. பத்திரங்களுடன் வாசலை நோக்கிச் சென்றுகொண்டிருப்பது தெரிந்தது. அவளுக்குப் பின்பாக மாப்பிள்ளையும் மீனாட்சியும் நடந்துகொண்டிருந்தனர். ஒண்டிப்புலிக்கு காதுகள் அடைத்துக்கொண்டுவந்தன. அவரது உதடுகள் உலர்ந்தன. உடம்பு, ஒடிந்துகிடக்கும் புளியமரத்து விறகுத் துண்டைப்போல இருந்தது. காற்றுக்கு ஒடிந்து அசையும் கிளையின் சத்தத்தைப்போல மூச்சுவிடுவது கேட்டது. மச்சப்புலி அவர் அருகில் உட்கார்ந்துகொண்டார். ஒண்டிப்புலி கண்களைத் திறந்து அவரைப் பார்த்தார். தனது கையில் இருந்த ரைக்கோ கடிகாரத்தை அவரிடம் கொடுத்தார். மச்சப்புலிக்கு அழுகை வந்தது.

‘அண்ணே…’ என வாய்விட்டுக் கதறினார்.

‘ஒச்சு கையிலே சாகிறதுக்கு, நான் வளர்த்த புள்ள கையாலே செத்திடலாம். பாசம் விஷமா போச்சுடா’ எனச் சொன்னார். ஒண்டிப்புலி முன் அறையில் இருந்த அப்பத்தாளின் புகைப்படத்தைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டார். பிறகு, கண்களை மூடிக்கொண்டார்.

மச்சப்புலி, அவரது கால் அடியில் நெடுநேரம் அமர்ந்திருந்தார். விடியற்காலையில் அவர் உயிரும் பிரிந்திருந்தது. ரைக்கோ கடிகாரத்தின் முட்கள் அசையாது நின்று இருந்தன!

– செப்டம்பர் 2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *