புலத்தில் ஒருநாள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 8,684 
 

“முருகா, அம்மனே, சிவனே, வட்டுவினியானே இந்த பஸ் எல்லாவிடங்களிலையும் நிக்காமல்…யாரும் ஏறாமல்,இறங்காமல் நேரேபோய்; கடசி பஸ்ரொப்பில் நிக்கவேணும். ம்…ம்… இதுக்கிள்ளை யாரே ஒண்டு பெல்லை அடிச்சிட்டுது, இறங்கப்போகுது போலை.  நான் நேரத்துக்குப் போய் சேர்ந்த மாதிரித்தான். சரி இறங்கிறதாவது கதவருகிலுள்ள சீட்டில் இருக்கிறதாக இருக்கவேணும். கடவுளே எம்பெருமானே அப்பதான் பஸ் நின்றவுடனை இறங்கி ஓடலாம்”

மணிக்கூட்டைபார்ப்பதும் கடவுளை வேண்டுவதுமாய் கலவரப்பட்டுக் கொண்டே இரு க்கிறாள் ரதி. அவள் நினைத்ததுபோல் ஒரு முதியவர் கதவண்டை ஆசனத் தில் இருந்து இறங்குகினார்.

“கிளடு கொஞ்சம் கெதியா இறங்கினால் பஸ்சை எடுக்கலாம் எல்லே”

மனதுக்குள் முனகிக் கொண்டாள் ஏதோ தான் தான் பேருந்துச் சாரதிபோல் அரக்கப் பரக்க அவள். கிளவி இறங்குவதற்கு முன் ஓடிப்போய்….. இல்லை பறந்துபோய் அவரின் ஆசனத்தில் அமர்ந்து கொண்டாள். ஏதோ அவசரம் அவளுக்கு.

அவள் இறங்குமிடம் வந்ததும் தோள்பையைத் தூக்கிக் கொளுவிக்கொண்டு குதத்தில் குதிக்கால் அடிபட ஓடத்தொங்குகிறாள். மணிக்கூட்டைப் பார்த்தபின் ஓட்டம் இன்னும் அதிகரிக்கிறது. இவள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றியிருந்தால் நிச்சம் முதலிடம் இவளுக்குத்தான். சரியாக 5மணிக்கு 2நிமிடங்கள் உள்ளது. நேரத்துக்கு வந்த நின்மதியில் ஒரு பெருமூச்சை எறிந்துவிட்டு சிறுவர்நிலையத்தின் படலையைத் திறக் கிறாள்.

மகள் 9மாதக்குழந்தை குழந்தை பேபியை ஊழியர்கள் தயாராக வைத்திருந்தார்கள். அவர்களுக்கும் என்ன அவசரமோ 5மணிக்கு நிலையம் பூட்டவேண்டும். இல்லை யென்றால் ரதி 800குரோண்கள் அபராதம் கட்டவேண்டும். அவள் உழைத்ததில் முக் கால்பங்கு அபராதமாகப் போய்விடும். குழந்தையின் முகம் பார்த்த இன்பத்தில் தன் களைப்பு, இளைப்பு, அனைத்தையும் மறந்து தூக்கி அவளை தள்ளுவண்டியினுள் போட்டுக்கொண்டு நடக்கத் தொடங்குகிறாள். இங்கே எல்லாம் வண்டிக்குள்தான். பிறக்குமுன்னரும், பிறந்தபின்னரும், வாழும்போதும் மரணித்தபோதும் வண்டிக்குள் தான் எம்வாழ்வு.

தோள்பையில் இருந்து ஒருபாடல்….விழுந்தடித்துக் கொண்டு பையைத்திறக்கிறாள். தொலைபேசியில் பாடல் கணவன் கூப்பிடுகிறார்
“கலோ….! எங்கையப்பா நிற்கிறியள்”

“இஞ்சை ரவிக்கிலை மாட்டுப்பட்டுகொண்டன். மூத்தவனை புட்போலுக்குக் கூட்டிக் கொண்டு போகவேணும் வெளிக்கிட்டு நிக்கச்சொல்லு….எனக்கு ரீ ஒண்டையும் போட் டுவை. வந்தகையோடை குடிச்சிட்டு ஓடவேணும்”

“ம்… நான் இரண்டாவதையும் எல்லே கூட்டிக்கொண்டு வரவேணும் அவன் பள்ளிக்கூடம் விட்டு 2மணித்தியாலம் வெளிலை விளையாடிக் கொண்டு நிற்கிறான். மூத்தவனின்ரை கழுத்திலை முதல் முதலாய் இண்டைக்குத்தான் வீட்டுத்திறப்பைக் கொழுவி விட்டனால் அவன் வீட்டை வந்திருப்பான் நீங்கள் ஒருக்கா அடித்துச் சொல்லிவிடுங்கோவன்.”

“இஞ்சை நீ ஒருவிசயத்தை விளங்கிக் கொள்ள வேணும். கார் ஒடிக்கொண்டு ரெலிபோன் பேசினால் பைன் அடிப்பாங்கள். உழைச்ச சம்பளம் அப்பிடியே போயிடும் பிறகு தின்னக்குடிக்க ஒண்டும் இருக்காது”

“சரி சரி அதுக்கு ஏன் சீறுகிறியள்…சரி நானே அடித்துச் சொல்லுறன்…வரேக்கை மரக்கறியாவது வாங்கிக்கொண்டு வாருங்கோவன் இண்டைக்கு வெள்ளிக்கிழமை”

“எடி..டி…யோய் உனக்கு மட்டைக்குள்ளை ஏதாவது இருக்கா. நான் வாகனநெரிசலுகி ள்ளை மாட்டுப்பட்டுப் பிச்சுப் பினைஞ்சு  கொண்டு இருக்கிறன். கண்டறியாத மரக்கறி யாம் மரக்கறி. ஒண்டும் இல்லாட்டி நோவேயியன் மாதிரி பாணைத் திண்டுபோட்டுக் கிடவுங்கோ”

“நான் பாண்தின்னுவன் நீங்கள் ஒகேயா…? சமைச்சாலும் அதுசரியில்லை இதுசரி யில்லை. என்று நொட்டையும் நொடியும்…ம் பாணாம் பாண்”

“இப்ப என்னை எப்படியாவது வைன் கட்டவைக்கவேணும் எண்டு தீர்மானித்துவிட்டாய் போலை. சமைக்கிறது எண்டால் சமை இல்லை எண்டால் எங்காவது போய் துலை” என்றவன் தொலைத்தொடர்பைத் துண்டித்துக் கொள்கிறான். தள்ளுவண்டிக்குள் இருந்து தாயைப் பார்த்து சிரிந்தது குட்டிச்செல்வம். குழந்தையின் சிரிப்பினில் இறைவனைக் காண்பது என்பது இதுதானா?

இரண்டாவது மகனையும் அழைத்துக்கொண்டு கடையிலும் சாமான்களையும் வாங்கி தள்ளுவண்டியில் கீழ்தட்டில் போட்டுக் கொண்டு, மீதியை பிள்ளையுடன் வைத்து வண்டியைத் தள்ளிக் கொண்டு வீடுக்கு வருகிறாள். விடிய 6மணிக்கு எழும்பி வீட்டுக்குள் ஓடத்தொடங்கியவள் வெளியில் 7மணிக்கு ஓடினாள். வேலைமுடித்து வீடு வரும் நேரம் இப்போ 6மணி. பிள்ளைகள், கணவன், வேலை இதுதான் இவர்களின் சுற்றித்திரியும் செக்கு. ஏதோ உலகத்தைச் சுற்றி ஓடியகளைப்பு அவளுக்கு ஆனால் ஓடியதோ தங்களைச் சுற்றி மட்டுமே.  வேலைக்கு என்று 12மணித்தியலங்கள், தூங்க 8 மணித்தியாலங்கள் மீதி 4மணித்தியாலங்களுக்குள்தான் எமக்கென உள்ளது. இதற்குள் தான் சமையல், சாப்பாடு, வீடு கூட்டல் கழித்தல் பெருக்கல், மலசலம் கழித்தல் சண்டைபிடித்தல் எல்லாமே. உழைத்தது மிஞ்சுகிறதா? மிஞ்சுவது என்ன? களைப்பு, இளைப்பு, நின்மதியின்மை மனவேதனை, உலைச்சல், சண்டை சச்சரவு நோய், துன்பங்கள், கடன்கள், அபராதங்கள் மட்டுமே.

வீட்டுக்குள் போக முயன்றவளை தபால்பெட்டி கூப்பிடுகிறது

“என்ன மறந்துபோய் போகிறாய் திரும்பி வரபோகிறாயா போகும் போது என்னைத் திறந்து பார்த்துவிட்டுப்போ” யன்னல்வைத்த பெண்களின் இரசவிக்கைகோல் திறந்து காட்ட விரும்புகிறது தபால்பெட்டி

பெட்டியைத் திறந்தால் நல்லவார்த்தை சொல்ல ஒருகடிதம் கிடையாது. ஈமெயில் வந்த பின் கடிதம் யார் எழுதுகிறார்கள். எல்லாம் கட்டவேண்டிய காசுகளைக் கேட்டும்  அறுவை, நிலுவை என ஏராளம். ஒருகடிதம் மட்டும் கண்ணைக் குற்றியது எடுத்து உடைத்துப் பார்க்கிறாள்.

அவளுக்கு எல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது. தன்னைச்சுற்றி என்ன நடக்கிறது என்று அறியமுடியவில்லை. ஆனால் உலகமே சுற்றியது அப்படியே படியில் இருந்து விட்டாள்.

சின்னவன் தங்கையின் தள்ளுவண்டியைப் பிடித்தபடி

“அம்மா என்னம்மா? அம்மா…?……அண்ணா ஓடிவா அம்மா ஒருமாதிரியாக இருக் கிறா ..ஒடிவா…”

அண்ணனும் ஓடிவருகிறான். தகப்பனும் நல்லவேளை வந்து சேருகிறார்..

“என்னடியப்பா இதிலை கிடக்கிறாய். எழும்பு…எழும்பு….சாப்பிட்டனியே…. சாப்பாடு கொண்டு போவாய் சாப்பிடமாட்டாய். நான் கிண்டிக் கேட்கவேணும் வேண்டும்”எரிந்து கொள்கிறான்.

“அப்பா…அம்மா இந்தக்கடித்தைப் பாத்துபோட்டுதான் மயங்கினவ”

தகப்பன் கடிதத்தை எடுத்துப்பார்த்துவிட்டு அவரும் அப்படியே படியிலேயே குந்தி விடுகிறார். கடிதம் பொலிசில் இருந்தது
“-பலதடவைகள் எச்சரிக்கைக் கொடுத்தும் வாடகைப்பணம் கட்டாத காரணத்தினால் எதிர்வரும் வெள்ளிக்கு முன்னதாக வீட்டைக் காலிசெய்யவேண்டும்.-”

ஒருவாறு தன்னைச் சுதாகரித்துக் கொண்டு மனைவியையும் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு வீட்டினுள் செல்கிறான்.

“டேய் தம்பி மூத்தவன் இண்டைக்கு புட்போலும் இல்லை ஒரு மயிரும் இல்லை போய் படி”

படிப்பு என்ன பிள்ளைக்குத் தண்டனையா? தலையைக் குனித்தபிள்ளை மறுபேச்சுப் பேசவில்லை

“அப்பா உதவிவேணுமா அப்பன்” மூத்தவன்

“சாமானுகளை கொண்டுபோய் வைக்கிற இடத்திலை வை. பிறகு எனக்குக் கறிகாய் பிச்சு வெட்டித்தா நான் சமைக்கிறன். அம்மா கொஞ்சம் றெஸ் எடுக்கட்டும். சின்னவன் ….நீ தங்கைச்சியைப் பாத்துக்கொள்”

சமைக்கத் தொடங்கிவிட்டான். சமையலறைகளில் ஆண்களைக் காண்பது மகிழ்ச்சி தான். சோபாவில் கோலில் இருந்தபடி

“என்னப்பா செய்கிறது. வெள்ளிக்கிழமைக்கு முன் வெளிலை போகவேணுமாம்”

“சத்தம் போடாமல் இரு இன்னும் 7நாள் கிடக்கிறது தானே”

“நீங்கள் இப்பிடி இப்பிடித்தான் நாட்களைக்கடத்தி இப்ப இந்த நிலைக்கு வந்து நிக்கிறம். கட்டவேண்டிய 8000குரோண்கள் 80000 ஆய் வந்து நிக்குது”

மௌனம்…பதில் இல்லை… சமையலுக்கு வேண்டியவற்றை எடுத்துக் கொண்டிருந்தான்

“அப்பாபாhhh…” மூத்தவன் அலறினான்..

“டேய் என்னடா…என்னடா…” பதறிப்போகிறார் தந்தை.

இரத்தம் ஓடிக்கொண்டிருந்தது. வெங்காயம் நறுக்கும் போது விரலையும் சேர்த்து நறுக்கிவிட்டான். விரலுக்கு இறுக்கமாகக் கட்டைப்போட்டுவிட்டு கையை தலைக்கு மேலே தூக்கி வைத்திருக்குமாறு பணித்தபின் தந்தையின் கார் அவசரசிட்சைக்காகக் காற்றாய் பறந்தது. டீரி டீரி…காரின் பின்னால் பொலிஸ்சின் நீல ஒலியுடனான சமிஞ்சை. காரை நிறுத்தினான். பொலிஸ் சாரதி அத்தாட்சிப்பத்திரத்தை பார்த்த பின்னர் அதில் இரண்டு ஒட்டையை அடித்துவிட்டு, 5000குரோன்களையும் அபராதமாய் எழுதிக்கொடுத்தார்கள். பிள்ளைக்கு அவசரம் என்று மகனைக் காட்டியபின்னரும் அவர்கள் இரங்குவதாக  இல்லை. துண்டை வாங்கி கட்டவேண்டிய திகதியைப் பார்த்தான் இன்னும் 3கிழமை இருக்கிறது. சம்பளம் வர 4கிழமையாவது ஆகுமே. வங்கிக்;கடன், கார்கடன், சிறுவர்நிலையத்துக்குக் கட்டவேண்டிய காசும் அத்துடன் நிலுவையில் உள்ளது. இப்படி அப்படியென அவனின் 5மாதச்சம்பளமே போதாது.

இளைப்போட்ட பின் அவசரசிகிட்சை நிலையத்தை விட்டுக்கு வருவதற்குப் 11மணி ஆகிவிட்டது. மற்றப்பிள்ளைகளும் மனைவியும் சோபாவிலேயே நித்திரையாகி விட்டார்கள். இவர்களுடன் மேசையில் கட்டவேண்டிய கட்டணங்களும் தூங்கிக் கொண்டிருந்தன. அத்துடன் தானும் கொண்டுவந்த அபராதத்தை அவற்றுடன் போட்டுவிட்டு சோபாவில் சாய்ந்து கொள்கிறான்.

சரியாக இரவு ஒருமணி இரதியின் கைத்தொலைபேசி தொணதொணக்கிறது. திடுக்கிட்டு  எழுந்தவள் தொ.பே தேடியெடுத்துக் கொண்டு பேசத்தொடங்கினாள்

“கலோ கலோ”

“மச்சாளா? நான் சிறிலங்காவிலை இருந்து கதைக்கிறன். அண்ணையின்ரை மொபிலுக்கும் எடுத்தனான் வேலைசெய்யுதில்லை”

“காசு கட்டினால் தானே வேலை செய்யுறதுக்கு. அண்ணையோடை கதைக்கப் போறியே குடுக்கிறன்”

“இல்லை…அண்ணை சீறிவிழும்…நீங்கள் ஒருக்கா திருப்பி அடிக்கிறியளே”

“என்ரை போணுக்கும் காசுகட்டேல்லை எப்ப வெட்டுவாங்களோ தெரியாது. வந்த விசயத்தை சுடுக்கமாய் சொல்லன்”

” சொந்தக்காரர், மாமா, மச்சான், சகோதரங்கள் எல்லாம்…”

“என்ன செத்துப்போச்சினமே?” ஏற்கனவே உள்ள கடுப்பில் இப்படிக் கேட்டாள் இரதி

“இல்லை எல்லாரும் 2000ஈரோ போடினம்…” தயங்கித் தயங்கி

“எதுக்கு…?” ஆச்சரியத்துடன் வாயைப் பிளந்தாள்

“எங்கடை வாழ்க்கைச் சொலவுக்கும்.  மகளுக்கு சாமத்தியச்சடங்கும் செய்யவேணும். அடிக்கடி காசுகேட்காமல் வருசத்துக்கு ஒருதடவையாக ஒருதொகை…..அதுதான் உங்கடை பங்குக்கு…” என்று இழுத்தாள் சிறீலங்கா மைத்துணி

“ரீ…ரீ…..ரீரீ.. தொலைபேசி கட்டணம் கட்டாத காரணத்தினால் தொலைபேசித் தொடர்பு துண்டிக்கப்படுகிறது.”

“கலோ….கலோ… ம் இதுவும் போச்சு”

– 07.03.2015

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *