கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: December 25, 2011
பார்வையிட்டோர்: 15,417 
 
 

அந்த  வார்த்தையை சுகு யாரிடமிருந்து கற்றுக் கொண்டாள் என்று தெரியவில்லை. பள்ளியிலிருந்து வீடு வந்ததும் சப்தமாக சொல்லத் துவங்கினாள். அதை சொல்லும் போது அவளது முகத்தில் சந்தோஷம் கொப்பளித்து கொண்டிருந்தது. கைகளை விரித்தபடியே அவள் புர்ரா என்று கத்தும் போது அவளை காண்பதற்கே விசித்திரமாக இருந்தது. என்ன சொல் அது என்று புரியாமல் திரும்பி பார்த்தேன்.

சுகு உற்சாகமாக புர்ரா புர்ரா என்று கத்திக் கொண்டிருந்தாள். அவளது உற்சாகத்திற்காக ஒரு நிமிசம் அதை அனுமதித்த என்னால் திரும்ப திரும்ப கத்துவதை சகித்து கொள்ள முடியாமல் இருந்தது. கோபமான குரலில் என்னடி இது என்று கேட்டேன். அவள் அதற்கும் புர்ரா என்று கத்தினாள். உன்னை தான்டி கேட்குறேன். யார் கிட்டே இதை கத்துகிட்டே என்று கேட்டதும் அவள் உதட்டை கடித்தபடியே பேசாமல் இருந்தாள்.

அர்த்தமில்லாமல் உளறக்கூடாது புரிஞ்சதா என்று சொன்னதும் தலையாட்டிக் கொண்டு என் அறையிலிருந்து வெளியேறி போனாள். வாசலை கடந்த போது புர்ரா என்ற சப்தம் மறுபடி கேட்டது

தினமும் சுகு பள்ளியிலிருந்து எங்கள் இருவருக்கும் முன்பாக வீடு திரும்பி வந்துவிடுகிறாள். நான் வீடு வருவதற்கு ஐந்தரை மணியை கடந்து விடும். அதுவரை இரண்டு மணிநேரம் அவள் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளியோடு பேசிக் கொண்டோ, தன்நிழலோடு விளையாடிக் கொண்டோ தானிருக்கிறாள். சில நேரங்களில் அதை காணும் போது குற்றவுணர்ச்சி மனதில் உருவாகிறது. அதை வளரவிடாமல் ஆளுக்கு ஒரு இடத்தில் வேலைக்கு போவதால்  இதை தவிர்க்க முடியாது என்று சுயசமாதானம் செய்து கொள்வேன்.

என் மனைவி ஆவடியில் உள்ள பன்னாட்டு வங்கி பிரிவில் வேலை செய்கிறாள். எனது அலுவலகமோ தரமணியில் உள்ளது. இரண்டுக்கும் நடுவில் மின்சார ரயில் வசதி உள்ள இடமாக வேண்டும் என்பதற்காக சில வருசங்கள் இருவரும் நுங்கம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தோம். அங்கே தான் சுகு பிறந்தாள். ஆரம்ப நாட்களின் சந்தோஷத்தை தாண்டி சுகு எங்கள் இருவருக்குமே எரிச்சலூட்டும் பொருளாக மாறியிருந்தாள்.

அவளை கவனிப்பதை இருவருமே தவிர்க்க முடியாத ஆனால் விருப்பமில்லாத வேலையை போலவே உணர துவங்கினோம். சில நாட்கள் இரவில் சுகு அழும்போது உறக்கத்தில் பாலுôட்டும் மனைவியின் முகத்தை பார்த்திருக்கிறேன். அதில் கருணையோ, அன்போ எதுவுமிருக்காது. எப்போது பால்குடித்து முடியும் என்று பொறுமையற்று காத்திருப்பவளின் சிடுசிடுப்பே நிரம்பியிருக்கும்.

அந்த சிடுசிடுப்பிற்கு இன்னொரு காணரம் இருந்தது. சுகுவின் அழுகையை மீறி நான் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தது. சுகு எனது குழந்தை என்றபோதும் உறக்கத்தில் அது அழுவதை என்னால் தாங்கிக் கொள்ள இயலவில்லை. சில நாட்கள் தலையணையை வைத்து முகத்தை பொத்திக் கொண்டுவிடுவேன்.
உடல்நலமற்று சுகு வீறிட்டு மருத்துவமனைக்கு கொண்டு போகும் இரவில் தூங்கமுடியாதபடி அவள் என்னை படுத்தி எடுப்பதாக மனதிற்குள் கடுமையாக திட்டியிருக்கிறேன்.

குழந்தையை புரிந்து கொள்ள முடியாமல் நானும் மனைவியும் மாறிமாறி கத்தி சண்டையிட்டிருக்கிறோம். எதுக்காடி நீ பிறந்து என் உயிரை எடுக்குறே என்று ஒரு நாள் என் மனைவி சுவரில் தலையை முட்டிக் கொண்டு கத்தியபோது அவளை காண்பது எனக்கு பயமாக இருந்தது. குழந்தைகள் உண்மையில் விருப்பமானவர்கள் இல்லையா? தொல்லைகள் தானா?  எனக்கும் குழப்பமாக இருந்தது. அரிதான ஒன்றிரண்டு நிமிசங்களில் மட்டுமே சுகுவை காண்பது எனக்கு சந்தோஷமாக இருந்தது. சுகு எங்கள் ஆற்றாமையோடு தான் வளர்ந்தாள்.

அவளது பிறந்த தின கொண்டாட்டங்களில் கூட எங்கள் இருவர் முகத்திலும் மறைக்க முடியாதபடி விருப்பமின்மை படர்ந்திருந்ததை புகைப்படங்களில் காணமுடிகிறது. அதை மறைக்க நாங்கள் இருவருமே அதிகம் நடிக்க கற்று கொண்டோம். சுகுவை மாறிமாறி முத்தமிடுவதை இருவரும் செய்த போது நானும் என் மனைவியும் ஒருவரையொருவர் முத்தமிட்டு கொள்வதை நிறுத்தி பல மாதகாலம் ஆகியிருந்தது ஏனோ என் நினைவில் எழுந்து அடங்கியது.

திருமணமான சில மாதங்களிலே முத்தமிடுவது அபத்தமான செயல்போலாகியிருந்தது. அதை காபி குடிப்பதை போல எந்த சுவாரஸ்யமற்ற செயலாக நாங்கள் மாற்றியிருந்தோம். குறிப்பாக அவளது கேசங்கள் மீது ஏனோ எனக்கு அசூயை உருவாகிக் கொண்டேவந்தது. முகத்தில் வந்து விழும் அவளது கேசத்தை விலக்கும் போது அதை பிடுங்கி எறிந்துவிடலாம் போன்ற ஆத்திரம் உருவாகி எனக்குள்ளாகவே அடங்கிவிடும்.

சமீபமாகவே சுகுவை பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே பழவந்தாங்கலுக்கு மாறியிருந்தோம். இதனால் என் மனைவி இரண்டு ரயில்கள் மாறி அலுவலகம் செல்ல வேண்டியிருக்கிறது. நான் அலுவலகத்திற்கு பைக்கில் சென்றுவிடுவதால் அதிக நேரம் எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் வாரத்தில் மூன்று நாட்களாவது சுகுவின் காரணமாக நாங்கள் சண்டைபோட்டுக் கொள்வதுண்டு.

சுகுவிற்கு எங்கள் சண்டையும் கூச்சலும் பழகிப்போயிருந்தது.
நாங்கள் சண்டையிடும் நாட்களில் சுகு எளிதில் உறங்குவதில்லை என்பதை கண்டுபிடித்திருக்கிறேன். சுகு உறங்கினால் மட்டுமே நானும் மனைவியும் உடலுறவு கொள்ள முடியும். அதுவும் பின்னிரவாகிவிட்டால் மறுநாள் வேலைக்கு போவதில் சிக்கல் உருவாகிவிடும். எங்கள் இச்சை அவள் மீது கோபமாக பலஇரவுகள் மாறியிருக்கிறது.

போர்வையை அவளது முகத்தில் போட்டு உறங்குடி என்று அழுத்தியிருக்கிறோம். சில நிமிசங்கள் அவளது கண்கள் மூடிக் கொண்டிருக்கிறோம். பிறகு அவள் பாதி கண்ணை திறந்து வைத்தபடியே குளிர்சாதன இயந்திரத்தில் மினுங்கும் எண்களை முணுமுணுத்த குரலில் எண்ணிக் கொண்டிருப்பாள்.

சுகுவிற்காக நாங்கள் கண்டுபிடித்த வழி இரவு விளக்கில்லாமல் அறையை முழு இருட்டாகிவிடுவது என்று. சில நாட்கள் அது எங்களுக்குள்ளே விசித்திரமான அனுபவமாக இருந்தது. அது எங்கள் படுக்கை அறை என்பது மறந்து பூமியின் ஆழத்தில் இரண்டு புழுக்கள் ஒன்றோடு ஒன்று இணைந்து கொண்டிருப்பது போன்று தோன்றும்.

சுகு இருட்டிற்குள்ளும் விழித்துக்கொண்டிருக்க பழகியிருந்தாள். அவள் கண்கள் இருளை கடந்து பார்க்க பழகியிருந்தன. அவள் உதடுகள் உறங்க மறுத்து எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. நாங்கள் அவளது முணுமுணுப்பினை சட்டை செய்வதேயில்லை. அவள் குரல் தானே ஒயும்வரை விட்டுவிடுவோம்.

சுகு ஆரம்ப வகுப்புகளை கடற்கரையை ஒட்டியிருந்த ஆங்கிலப்பள்ளியில் படித்தாள். அந்த பள்ளியின் அருகில் கடல் இருந்தது.. பசுமையான மரங்கள் அடர்ந்த பள்ளிக்கூடம். சுவர்கள் ரோஸ் வண்ணம் தீட்டப்பட்டிருந்தன. கண்ணாடி கதவுகள், மீன்தொட்டிக்குள் நீந்தும் மீன்கள் போன்று இயல்பான துள்ளலுடன் நடந்து திரியும் சிறுமிகள். ஒரு அறை முழுவதும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள். பொம்மைகள். பள்ளியிலே மதிய உணவு தந்துவிடுவதால் சுகுவை கவனிப்பதற்கு நாங்கள் அதிகம் மெனக்கெடவில்லை

ஒரு நாள் கூட அவள் வகுப்பறைக்குள் போய் நான் பார்த்ததேயில்லை. ஏன் அப்படியிருந்தேன் என்று இன்று வரை எனக்கு புரியவேயில்லை.

சுகு பள்ளிக்கு போவதற்கு தயக்கம் காட்டவேயில்லை. அவள் தன்னுடைய அம்மா  அலுவலகம் கிளம்புவது போன்று பரபரப்பாக பள்ளிக்கு கிளம்புவாள். தானே குளித்து உடைகளை மாற்றிக் கொண்டு அம்மாவை போலவே லேசாக ஈரம் படிந்த தலையுடன் முகத்திற்கு திட்டு திட்டாக பவுடர் அப்பிக் கொண்டு நின்றபடியே சாப்பிட பழகியிருந்தாள். அப்படி சுகுவை காண்பது தன்னை பரிகசிப்பது போல என் மனைவி உணர்ந்திருக்க வேண்டும். ஏன்டி நின்னுகிட்டு சாப்பிடுறே.. உட்காரு என்று அழுத்தி பிடித்து உட்கார வைப்பாள்.

சுகுவின் முகம் மாறிவிடும். நீ மட்டும் நின்னுகிட்டு சாப்பிடுறே. நான் சாப்பிட்டா என்னவென்று கேட்பாள். சனியன் ஏன்டி உயிரை வாங்குறே. உன்னோட சண்டை போட்டுட்டு இருந்தா. ஆபீஸ் அவ்வளவு தான் என்று அவசர அவசரமாக டிபன் பாக்ûஸ பைக்குள் திணித்து கொண்டிருப்பாள்.  சுகுவை பள்ளி பேருந்தில் ஏற்றி அனுப்பி வைப்பது எனது வேலை. அது வரும்வரை நானும் சுகுவும் மாடி ஜன்னலில் நின்றபடியே பார்த்துக் கொண்டிருப்போம்

சுகு சாலையில் செல்லும் வாகனங்களை எண்ணிக் கொண்டிருப்பாள். அவள் என் மகள் தானா என்று ஏனோ சந்தேகமாக தோன்றும். பள்ளி பேருந்தை கண்டதும் தாவியோடுவாள். பேருந்தில் ஏறியபிறகு கையசைப்பதோ, விடைபெறுவதையோ ஒரு நாளும் அவள்  செய்வதேயில்லை.

என் மனைவியும் அப்படிதானிருக்கிறாள். அவள் வீட்டின் படியை விட்டு வெளியேறியதும் என் உலகிலிருந்து அவள் துண்டித்து போய்விடுவதை கண்டிருக்கிறேன். ஒரு நாளிரவு மின்சார ரயிலில் தற்செயலாக அவள் தன் அலுவலக பெண்களுடன் சிரித்து பேசிக் கொண்டு வருவதை கண்டேன். யாரோ முன் அறியாத பெண்ணை போலிருந்தாள். அவள் கையில் ஒரு வேர்கடலை பொட்டலம் இருந்தது. அவள் வயதை ஒத்த இரண்டு பெண்கள் அருகில் உட்கார்ந்திருந்தார்கள். நான் அந்த ரயிலில் வருவேன் என்பதை அவள் எதிர்பார்த்திருக்கவில்லை.

அதிகம் பரிச்சயமில்லாத ஒரு நபரை பார்த்து சிரிப்பதை போல மெலிதாக என்னை பார்த்து சிரித்துவிட்டு தோழிகளுடன் முன்போலவே  பேசிக் கொண்டிருந்தாள். அவளை பார்க்கையில் புதிதாக யாரோ ஒரு பெண்ணை பார்ப்பது போலிருந்தது. என்னோடு அவள் பேச முயற்சிக்கவோ, எனக்காக எழுந்து கொள்ள முயற்சிக்கவோ இல்லை. மாறாக அவளது உலகிற்குள் எனக்கு இடமில்லை என்பதை உணர செய்பவள் போல அந்த பெண்களுடன் விட்ட சிரிப்பை தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அந்த பெண்கள் இறங்க வேண்டிய ரயில் நிலையம் வந்ததும் எழுந்து கொண்டார்கள். அவளது அருகாமை இருக்கைகள் காலியாக இருந்தன. ஆனால் நான் உட்கார வில்லை. அவள் உட்காரும்படியாக சொல்லவும் இல்லை. வேண்டும் என்றே வேறு ஒரு இருக்கை தேடி உட்கார்ந்து கொண்டேன். அவள் ரயிலை விட்டு இறங்கும்வரை என்னோடு பேசவேயில்லை.

பிளாட்பாரத்தில் நடக்கும் போது காய்கறி வாங்கிக் கொண்டு போக வேண்டும் என்று என்னிடம் சொன்னாள். இருவருமாக நடந்து காய்கறி மார்க்கெட்டினுள் போனோம். மங்கிய மஞ்சள் வெளிச்சத்தில் எல்லா காய்கறிகளும் ஒரே நிறத்திலிருந்தன. அவள் ஒரு கேரட்டை ஒடித்து என்னிடம் தின்னும்படியாக தந்தாள். மாட்டிற்கு கேரட் போடுவது ஏனோ நினைவிற்கு வந்தது. அவளோடு சண்டையிடுவதற்கு அந்த ஒரு காரணம் போதுமானதாகயிருந்தது.

காய்கறி கடை என்பதை மீறி அவளோடு சண்டையிட்டேன். அவள் பொது இடம் என்பதை மறந்து அழ துவங்கினாள். அவள் அழுவது எனக்கு பிடித்திருந்தது. அதற்காக தான் நான் சண்டையிட்டேனோ என்று கூட தோன்றியது. மறுநிமிசம் நான் அவளை சமாதானம் செய்வது போல அவளது ஹேண்ட்பேக்கை என் கையில் எடுத்து கொண்டேன். விடுவிடுவென அவள் நடந்து முன்னால் செல்ல ஆரம்பித்தாள். நிச்சயம் அன்று இரவு சமையல் கிடையாது என்று எனக்கு தெரியும்.

வழியில் இருந்த உணவகத்தில் நான் அவளுக்கும் சுகுவிற்குமாக சேர்ந்து உணவு வாங்கி கொண்டேன். வீட்டை அடையும்  போது சுகு அடிவாங்கி கொண்டிருந்தாள். நான் அதை கண்டு கொள்ளாதது போல உணவை சமையற்கட்டில் வைத்துவிட்டு படுக்கை அறைக்கு திரும்பியிருந்தேன். சுகு அன்றிரவு முழுமையாக உறங்கவில்லை என்பதை மறுநாள் அவள் கண்கள் வீங்கியிருப்பதில் இருந்து கண்டு கொள்ள முடிந்தது.

சுகுவிற்காக தான் விடுமுறை எடுத்துக் கொள்ள போவதாக என் மனைவி சொன்னாள். மறுநாள் முழுவதும் தாயும் மகளும் உறங்கியிருந்தார்கள். மாலையில் நாங்கள் மூவரும் கடற்கரை சென்றோம். இனிமேல் சுகுவை கவனிப்பதற்காக நாங்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி உறுதிமொழிகள் எடுத்து கொண்டோம். கடற்கரை மணலில் சுகு விளையாடவேயில்லை. அவளுக்கு கடலின் சப்தத்தை கேட்பது மட்டுமே பிடித்திருந்தது.

என் மனைவி அப்போது தான் சுகுவை வேறு பள்ளிக்கு மாற்றிவிடவேண்டும் என்பதை பற்றி சொன்னாள். ஒன்றாம் வகுப்பிலிருந்து பள்ளி இறுதிவரை ஒரே பள்ளியில் படித்தாள் மட்டுமே அவளது அறிவு வளரும் என்று தன்னோடு வேலை செய்யும் கலைவாணி சொன்னாதாகவும் அவள் பிள்ளைகள் அப்படிதான் படிக்கின்றன என்றாள். எனக்கும் அது சரியென்றே தோன்றியது.

நாங்கள் சுகுவிடம் பள்ளிமாறுவதை பற்றி பேசவோ கேட்கவோயில்லை. எந்த பள்ளியில் சேர்ப்பது என்பதை முடிவு செய்து நாங்கள் இருவரும் அலைந்து திரிந்து வரிசையில் நின்று ஆள் பிடித்து பிரெஞ்சும் ஆங்கிலமும் போதிக்கும் அந்த புகழ்பெற்ற பள்ளியில் இடம் பிடித்து முதல்வகுப்பில் சேர்த்தோம்.
சுகு அந்த பள்ளிக்கு அழைத்து போன முதல்நாள்  வீட்டிலிருந்து கொண்டு போன மதியஉணவை சாப்பிடவேயில்லை. வகுப்பறையில் அவள் அர்த்தமில்லாத சொற்களை கத்திக் கொண்டிருக்கிறாள் என்று ஒரு முறை அவளது டயரியில் வகுப்பாரிசிரியை எழுதி அனுப்பியிருந்தாள்.

என்ன சொற்களை கத்துகிறாள் என்று கேட்காமலே அவளுக்கு அடி விழுந்தது.

அதன்சில நாட்களுக்கு பிறகு அவள் வீட்டில் முதன்முறையாக டியாங்கோ. டியாங்கோ என்று கத்துவதை என் மனைவி தான் கண்டுபிடித்தாள். இப்போ என்னமோ சொன்னயே அது என்னடி என்று சுகுவிடம் கேட்ட போது அவள் உற்சாகமாக டியாங்கோ டியாங்கோ என்று சொன்னாள். அப்படின்னா என்ன அர்த்தம் என்று கேட்டதற்கு டியாங்கோ என்று பதில் சொன்னாள். என்ன சொல் இது. என்ன பொருளாக இருக்கும் என்று புரியúயில்லை.

போதும் நிறுத்து உளறாதே என்று மனைவி அடக்கியதும் அந்த சொல் சுகுவிற்குள் அடக்கிவிட்டது. ஆனால் நாங்கள் எங்காவது அவளை வெளியே அழைத்து கொண்டு போகையில் சப்தமில்லாமல் அவள் இது போன்ற சொற்களை சொல்லிவிளையாடிக் கொண்டிருப்பதை கண்டிருக்கிறேன். அதை எங்கிருந்து கற்றுக் கொள்கிறாள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று மட்டுமே எனக்கு தோன்றிக் கொண்டிருந்தது.

இதற்காகவே ஒரு நாள் அவளை பள்ளியிலிருந்து அழைத்து கொண்டு வரும்போது அவளிடம் யாரெல்லாம் அவளது வகுப்பு தோழிகள் என்று கேட்டேன். யாருமேயில்லை.  வகுப்பில் யாரோடும் பேசவே மாட்டேன் என்று சொன்னாள். எதற்காக என்று கேட்டபோது தனக்கு பிடிக்காது என்று சொல்லிவிட்டு அவள் தனக்கு தானே எதையோ சொல்லிக் கொள்வதை கேட்டேன்.

அன்றிரவு இதை பற்றி என் மனைவியிடம் சொன்ன போது அதற்கும் சுகுவிற்கு அடி விழுந்தது. ஏன்டி ஊமைக்குரங்கா இருக்கே. உடனே நீ பிரண்ட்ஸ் பிடிச்சாகணும் புரிஞ்சதா என்று மிரட்டினாள்

அம்மா சொல்வதை ஏற்றுக் கொள்வதை போல சுகு தலையாட்டினாள். அதன் பிறகும் அவள் இயல்பு மாறவேயில்லை. வீட்டில் அவளை யாரும் கவனிக்கவில்லை என்று தோன்றினால் அர்த்தமற்ற சொற்களை தன் முன்னால் குவித்து அவள் விளையாட துவங்கிவிடுவாள். அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதறி வெடித்து போவதை கண்டு அவளுக்கு சிரிப்பாக இருக்கும். இயந்திரத்தின் குரலில் அந்த சொற்களை அவள் பேசுவதை கூட சில வேளைகள் கேட்டிருக்கிறேன்.

அப்போது எனக்கு பயமாக இருக்கும். ஒருவேளை அவளது மனநலம் பாதிக்கபட்டு இருக்கிறதோ என்று பயப்படுவேன். ஏன் இப்படி அர்த்தமில்லாத சொல்லை உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறாள் என்று கடுப்பாகி கத்துவேன். சுகு அடங்கிவிடுவாள். அந்த சொற்கள் வாயை திறக்காமலே அவளுக்குள் உருண்டு கொண்டிருக்க கூடும்.

இன்றைக்கும் அப்படியொரு சொல்லை தான் கத்தினாள். அதை இதன் முன்னால் எங்கேயோ கேட்டது போலவும் இருந்தது. சுகுவை அருகில் அழைத்து மறுபடியும் அதை சொல்ல சொன்னேன். தயங்கியபடியே புர்ர்ரா என்றாள்.  நீயா கண்டுபிடிச்சியா என்று கேட்டேன். ஆமாம் என்று சொன்னாள். அவளை போலவே நானும் புர்ரா என்று சொல்ல முயற்சித்தேன். அது அவளுக்கு சிரிப்பாக வந்தது.

அப்படியில்லைப்பா என்றபடியே புர்ரா என்று கத்தினாள். அந்த நிமிசம் அவளை எனக்கு ரொம்பவும் பிடித்திருந்தது. அவளை போலவே நானும் கத்த முயற்சித்தேன். ஏதோவொரு கூச்சம் அது போல கத்துவதற்கு எனக்கு வரவேயில்லை. நான் அவளது அர்த்தமற்ற சொல்லை ரசிப்பதை உணர்ந்து கொண்டவள் போல அவள் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு காரில் போவது போல புர்ரா. புர்ரா என்று ஒடிக் கொண்டேயிருந்தாள். அந்த ஒரு சொல் எங்கள் வீடு முழுவதும் உதிர்ந்து கிடந்தது.

இரவில் என் மனைவி அலுவலகம் விட்டு வீடு வரும்வரை அந்த சொல் காற்றில் பறந்து அலையும் சோப்பு குமிழ்கள் போல அலைந்து கொண்டிருந்தன. ஆனால் அவள் வருகையின் போது அவை கரைந்து போய்விட்டன. சுகு ஒடிவந்து என்னிடம் ரகசியமான குரலில் இதை அம்மாகிட்டே சொல்லாதே. அடிப்பா என்றாள். எங்கள் இருவரையும் பார்த்த மனைவி என்ன திருட்டுதனம் பண்ணுறீங்க என்று கேட்டாள்.

நான் பதில் பேசவில்லை. எழுந்து போய் அவளை முத்தமிட விரும்பி அருகில் இழுத்தேன். சுகு இதை காண விரும்பாதவள் போல வேடிக்கையாக கைகளால் முகத்தை மூடிக் கொண்டாள். என் முகத்தை விலக்கியபடியே கடுகடுப்பான குரலில் நானே அலுத்து போய் வந்திருக்கேன். நீங்க வேற ஏன் உயிரை எடுக்குறீங்க என்று  சொன்னாள் மனைவி. என் முகம் சிடுசிடுப்பேறி மாறியது.
அவசரமாக குளியல் அறைக்குள் போய் கதவை பூட்டிக் கொண்டேன். ஆத்திரமாக வந்தது. ஏதாவது செய்ய வேண்டும் போலிருந்தது. கண்ணாடி முன்பாக நின்று கொண்டு புர்ரா..  என்று கத்தினேன்

கத்த கத்த  மனதில் இருந்த கோபம் வடிந்து போய்க் கொண்டிருந்தது.  எனக்கு சுகுவை அந்த நிமிசத்தில் ரொம்பவும் பிடித்திருந்தது. நானும் அதை போன்ற சொற்களை நிறைய கற்று கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மறுபடியும் கண்ணாடி முன்பாக புர்ரா என்று சப்தமிட்டேன்.

என் முகத்தை அப்படி காண்பது எனக்கே விசித்திரமானதாக இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *