அவன் பெயர் பார்த்தசாரதி.
பி.ஈ படித்திருக்கிறான். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் ஜூனியர் இஞ்சினியர். நந்தனத்தில் அலுவலகம்.
அவன் மனைவி வந்தனா. ஓஎம்ஆர் ரோடில் ஒரு பிரபல மல்டி நேஷனல் ஐடி கம்பெனியில் ப்ராஜக்ட் மானேஜர். பி.ஈ, எம்.பி.ஏ. படித்திருக்கிறாள். அடிக்கடி அலுவலக விஷயமாக அமேரிக்கா பறப்பவள். மிகவும் துடிப்பானவள், கெட்டிக்காரி.
ஜாதகம் மிக நன்றாக பொருந்தியிருந்ததால் இருவருக்கும் பெரியவர்களால் நிச்சயிக்கப்பட்டு இரண்டு வருடங்களுக்கு முன் சிறப்பாக திருமணம் நடந்தது. நங்கநல்லூரில் வீடு.
வந்தனா தன் வீட்டு சமையலறையில் அனைத்தையுமே வாங்கிப் போட்டிருக்கிறாள். கேஸ் ஸ்டவ்; மைக்ரோவேவ் ஓவன்; ரைஸ் குக்கர்; இண்டக்ஷன் ஸ்டவ்; காபி மேக்கர்; சப்பாத்தி மேக்கர்; ப்ரெட் டோஸ்டர்; சான்ட்விச் மேக்கர்; எலெக்ட்ரிக் கெட்டில் என ஏகப்பட்ட சாதனங்கள் இருக்கின்றன. ஆனால் வேண்டிய அளவு ப்ளக் பாயின்ட்ஸ் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு பாயின்டிலும் எப்போதும் செல்போன்கள் தொங்கிக் கொண்டிருக்கும்.
வந்தனாவுக்கு தான் கணவனைவிட அதிகம் படித்திருக்கிறோம்; அவனைவிட அதிகம் சம்பாதிக்கிறோம் என்கிற கர்வம் சற்று தூக்கலாகவே உண்டு. அதை அவ்வப்போது கணவனிடம் நேரடியாக காட்டிக்கொள்வாள்.
ஆனால் பார்த்தசாரதி அவைகளை பெரிது படுத்த மாட்டான். வந்தனாவை மிகவும் அட்ஜஸ்ட் செய்துகொண்டு, ஒரு அடக்கமான கணவனாக தன்னை சந்தோஷத்துடன் நிலை நிறுத்திக்கொண்டான்.
வந்தனா வாரத்தின் ஐந்து நாட்கள் கம்பெனிக்காக மிகவும் உழைப்பாள். எப்போதும் லேப்டாப்பும், மொபைலுமாக அமெரிக்காவுடன் சஞ்சரிப்பாள். அதனால் இரவு வெகுநேரம் கான்காலில் இருந்துவிட்டு பிறகுதான் தூங்குவாள். அவள் எப்போது தூங்குவாள் என்பது பார்த்தசாரதிக்கு தெரியாது.
அவன்தான் காலையிலேயே எழுந்து, வீட்டை சுத்தப்படுத்தி, காபி போட்டு அவளை எட்டு மணிக்கு எழுப்புவான். அவள் உடனே குளித்து; கணவன் செய்துவைத்த டிபன் சாப்பிட்டு; ரெடியாகி ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வரும் கம்பெனி காரில் கிளம்பிச் சென்று விடுவாள். அவள் போனபிறகு சமையலறையில் பார்த்தசாரதிதான் சமைப்பான். எல்லாவற்றையும் சமைத்து வைத்தவுடன் மெதுவாக குளிக்கச் சென்று தன் அரசாங்க உத்தியோகத்துக்கு பத்து மணிக்கு கிளம்பிச் செல்வான்.
பார்த்தசாரதிக்கு மனைவிமேல் கொள்ளை ஆசை இருந்தாலும், அதிக வேலைப் பளுவால் வந்தனாவுக்கு கலவியில் அடிக்கடி ஈடுபட நேரம் கிடையாது. அதனால் அவர்கள் பண்ணும் கலவிகூட வந்தனா ஆரம்பித்து வைத்தால்தான் உண்டு. அவளுக்கு பெரும்பாலும் ஞாயிறு விடிகாலையில்தான் மூடு வரும். அம்மாதிரி சந்தர்ப்பங்களை நழுவ விடாமல் பார்த்தசாரதி சாமர்த்தியமாக பயன்படுத்திக்கொள்வான்.
ஞாயிறு விடிகாலைகளில் அவனை நெருங்கி உரசிக்கொண்டு படுத்தபடி கட்டியணைப்பாள். பிறகு அவனது கைகளை எடுத்து தன் மீது ஆசையுடன் படர விட்டுக்கொள்வாள். அவன் தூக்கத்தில் இருந்தாலும், அவளின் அழகிய மேடு பள்ளங்களில் அவன் கைகள் மெத்தென உரசுவதால் அவன் வீரியமாக உயிர்த்து எழுந்து விடுவான். அவனது புலன்கள் உடனே விழித்துக்கொண்டு உடம்பு புடைக்கும். கற்பனையான தன்னுடைய சுற்று வேலைகளால் அவளை கெட்டிக்காரத்தனமாக தன் ஆளுமைக்குள் உடனே கொண்டு வந்துவிடுவான் பார்த்தசாரதி.
அவ்வளவுதான்…. உடற் கிளர்ச்சியில் “பார்த்தா, பார்த்தா…” என்று வந்தனா ஈனமாக முனக ஆரம்பித்துவிடுவாள்.
காலை ஒன்பது மணிக்குத்தான் இருவரும் மெதுவாக எழுந்திருப்பார்கள்.
அதன் பிறகு அன்று முழுவதும் பார்த்தா சமைக்க வேண்டியதில்லை. எல்லாமே ஸோமாட்டோ (zomato) ஆப்பில் ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொள்வார்கள். அந்த மாதிரி ஞாயிறுகளில், பார்த்தாவுக்கு அன்றே வந்தனாவுடன் போனஸாக அடுத்த சந்தர்ப்பமும் கிடைக்கும்.
அன்று முழுதும் அவன் வந்தனாவின் ஆண்மகன்.
அன்று திங்கட்கிழமை…
அலுவலகத்தில் இருந்தவனுக்கு அப்பா போன் செய்து, அம்மாவுடன் வருகிற சனிக்கிழமை காலை நெல்லை எக்ஸ்பிரஸில் அவனைப் பார்க்க வருவதாகவும், திங்கள் மாலை திரும்புவதாகவும் சொன்னார்.
பார்த்தசாரதி ரொம்ப சந்தோஷப்பட்டான். அப்பாவைவிட அம்மா மேல் அவனுக்கு பாசம் அதிகம்.
அம்மாவின் பொறுமையும்; நிதானமும்; சிக்கனமாக குடித்தனம் நடத்தும் அழகையும் பார்த்தசாரதி தன் திருமணத்திற்கு முன்புவரை, அருகிலிருந்து பார்த்தவன். அம்மாவுக்கு கூடமாட இருந்து உதவி புரிந்தவன்.
அம்மா பாவம் தன் வாழ்நாளின் பெரும் பகுதியை விறகு அடுப்பிலேயே கழித்தவள். விறகு மண்டிக்கு அவன்தான் அப்பாவுடன் போவான். மண்டியின் ஈரப்பத பச்சைய மர வாசனை அவனுக்கு மிகவும் பிடிக்கும். மூக்கை உறிஞ்சி உறிஞ்சி அந்த வாசனையை ரசிப்பான். அங்கு பெரிய பெரிய மரத்தின் உருளைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். அவைகளை ஒருத்தன் சளைக்காமல் கோடாலி வைத்து எப்போதும் பிளந்து கொண்டே இருப்பான்.
“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.
குண்டு என்பது ஒரு எடையின் அளவு. கடைக்காரரும் விறகை அள்ளி எடுத்து தராசில் வைப்பார். அது குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசைவிட பெரிதாக இருக்கும்.
“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க, போன தடவையே எதுவும் சரியா எரியலே” என்பார் அப்பா.
“கொஞ்சம் காய வச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.
இதே உரையாடல்கள் ஒவ்வொரு தடவையும் அலுக்காமல் அரங்கேறும்.
பார்த்தசாரதி கருடாழ்வார் மாதிரி அவனுடைய இரண்டு கைகளையும் நீட்டிக்கொள்ள, அதன் மேல் ஒரு சாக்கை விரித்துவிட்டு, விறகுகளை அப்பாவும் கடைக்காரரும் அடுக்கி வைப்பார்கள். அவனுடைய கைகள் வலிக்கும். அதேபோல் அப்பா கைகளை நீட்டியதும் கடைக்காரர் அப்பாவின் கைகளில் சாக்குப்போட்டு விறகுகளை ஏற்றுவார்.
கஷ்டப்பட்டு விறகுகளை தூக்கிச்சென்று வீட்டின் பின்புறம் போட்டால், “விறகு ஒரே ஈரம்” என்பாள் அம்மா.
அதன்பிறகு அவைகளை மறுபடியும் தூக்கிச்சென்று மொட்டை மாடியில் காயப்போட வேண்டும். நல்ல வேளையாக காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.
விறகு அடுப்பு வினோதமாக இருக்கும். மண் அடுப்பு. அதன் மீது சாணி பூசி மெழுகி வீபூதி பட்டையாக பூசப் பட்டிருக்கும். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும். அடுப்புக்குப் பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு வட்டமான ஒரு துவாரத்தில் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து இந்த அடுப்புக்கு சூடு இலவசமாக வரும். அம்மா இதை கொடி அடுப்பு என்பாள். பொதுவாக ஈயச் செம்பில் ரசம் செய்யத்தான் அம்மா இதைப் பயன் படுத்துவாள்.
சமைக்கும்போது சதா சர்வ காலமும் அடுப்பு பக்கத்திலேயே அம்மா அமர்ந்திருப்பாள். அவனுக்கு ஏனோ ஜெகன்மொகினி பேய்தான் ஞாபகம் வரும்.
அவ்வப்போது அடுப்பு அணைந்து விடும். உடனே புகைமூட்டம் கண்களை எரியச் செய்யும். அப்போது ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும். “டேய், வந்து கொஞ்சம் அடுப்பு ஊதுடா” என்பாள் அம்மா.
அந்த அம்மா இப்போது மகனின் தனிக்குடித்தனத்தை பார்க்க வருகிறாள். தன் வீட்டின் மாடர்ன் சமையலறையைப் பார்த்து கண்டிப்பாக அதிசயிப்பாள்.
அன்று இரவு, வந்தனாவிடம் தன் பெற்றோர்கள் சனிக்கிழமை வரும் விஷயத்தைச் சொன்னான்.
வந்தனா, “அப்படியா… ரொம்ப சந்தோஷம், நாம அவங்கள நல்லா கவனிச்சு அனுப்பணும் பார்த்தா” என்றாள்.
அவன் சிறிது தயக்கத்தோடு, “அவங்க நம்முடன் இருக்கும் மூன்று நாட்களும் நீதான் வீட்டை சுத்தம் செய்து, சமையலும் செய்யணும்…” என்றான்.
வந்தனா, “கண்டிப்பா பார்த்தா… பெரியவங்க யார் வீட்டுக்கு வந்தாலும் நான்தான் சமையல்… கிச்சன் இன்சார்ஜ். வீட்டையும் தினசரி சுத்தப்படுத்தி, நம்ம அம்மா, அப்பாவுக்கு வித விதமா சமைச்சுப் போட்டு அவங்களை நான் அசத்தி விடுகிறேன்…. இந்தியாவின் மண்டே அமெரிக்கால சண்டேதான். . அதனால நான் மண்டே லீவு போட்டு விடுகிறேன். அன்று மாலை நானே அவர்களை ஸ்டேஷன் கூட்டிச்சென்று ரயில் ஏற்றி விடுகிறேன். அதுக்கு அப்புறம் இருக்கவே இருக்கிறது நம்முடைய ரொட்டீன் வாழ்க்கை…” என்று சொல்லிச் சிரித்தாள்.
பார்த்தசாரதி பாசமான மரியாதையுடன் வந்தனாவை அதிசயமாகப் பார்த்தான்.
கணவன் மனைவிக்குள் நல்ல புரிதல் ஒன்றே வாழ்க்கையின் அடிப்படை தத்துவம் என்று சந்தோஷித்தான்.