அந்த மளிகைக் கடை, கல்லாவில் உட்கார்ந்திருந்த சந்திரா, தன் கணவன் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் கேட்கும் பொருட்களை தராசில் எடை போட்டு நிறுத்துக் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவள் முகத்தில் ஒருவித இறுக்கம் பரவத் தொடங்கியது. வாடிக்கையாளர்களில் சிலபேர், முணுமுணுத்தபடி பொருட்களை வாங்கிக் கொண்டு போவதைக் கவனித்தாள்.
‘ஊகும், இவர் தேற மாட்டார் போலிருக்கே..?!?’ என்று நினைத்தவள், கணவனிடம்,’நீங்க போய் கல்லாவுல் உட்காருங்க, நான் கொஞ்ச நேரம் வியாபாரத்தைப் பார்க்கிறேன்…!’ என்று சொன்னாள்.
அவளிடம் பொருள்களை வாங்கிக் கொண்டு போகிறவர்கள், மகிழ்ச்சியோடு போவதைக் கவனித்தான் அவன். அவள் கேட்டாள், ‘என்ன ஏதாவது புரிஞ்ச்சுதா?’
அவனோ, ‘ எல்லாம் பொம்பளைனா இளிப்பானுக..!’ என்றான் விரக்தியாக.
‘ஆம்பிள்ளை இளிப்பான்… சரி, பொம்பளையும் சிரிச்சுட்டே வாங்கிட்டுத்தானே போறா..?! நீங்க, பொருளை எடை போட்டுக் கொடுக்கும்போது, தராசு தட்டில் அதிகமாய்க் கொட்டிவிட்டு, எடையைச் சரியாக்க, பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாய் பல தடவை எடுக்கறீங்க, நான் அப்படிச் செய்யலை, பொருளைக் கொஞ்சமாகப் போட்டுவிட்டு, எடையைச் சரியாக்க, திரும்பத் திரும்ப தராசு தட்டில் கொஞ்சம் கொஞ்சமாப் போட்டுட்டே இருக்கேன்..!
எப்பவுமே போட்டதை எடுத்துட்டே இருந்தா, யாருக்கும் எரிச்சல்தான் வரும்..! கூடக் கொஞ்சம் போட்டுட்டே இருந்தா, சந்தோஷமா இருக்கும். எப்பவுமே, வாழ்க்கையில, அடுத்தவங்களுக்கு சந்தோஷம் வரா மாதிரி நடந்துக்கறதுதான் வெற்றியின் ரகசியம் !’ என்றாள். அவனுக்கும் புரியத் தொடங்கியது.
– 06.12.2006