கதையாசிரியர்:
கதை வகை: தொடர்கதை
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: August 19, 2023
பார்வையிட்டோர்: 4,784 
 
 

அங்கம் நான்கு | அங்கம் ஐந்து | அங்கம் ஆறு

ராணி போனபிறகு, வாசல் கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள் துளசி. அப்பா சாய்மனையில் படுத்துக்கொண்டு, ஜன்னலுக்கு வெளியே எதையோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். எதிரே திறந்தவெளி முற்றமும், அப்பெரிய வீட்டின் நாற்சதுர வராந்தாக்களும், வலது கரை மூலையில் ஒளியை காட்டும், சிறிய ஜன்னலுமாய், புற உலகை மறைத்துத் தோன்றும், இங்கிதமற்ற அழகு போல், நிழலில் மறைந்து போய் கிடந்தன. தன்னுள்ளே, ஆழ்ந்து புதைந்த, அவர் கண்களே வெறிச்சோடிப் போன மாதிரி, அந்த நிழலின் ஆகிருதியான இருட்டைக்கண்டு, ரசிக்கிற அவரைப் பார்த்துத் துளசி எதையோ நினைத்துக் கொண்டு, பெருமூச்செறிந்தாள்.

பிரத்தியட்ச உலகம் தனக்குதானே வாழ்ந்து மறைந்து போகிற உண்மைகளுடன், அதன் ஏக சாயலாக அவரில் மறைந்து கிடந்த அந்தப் பொய்மை, அவளுக்கு வெட்கமாக கூட இருந்தது. எனினும் அவரின்

மகளாகப் பிறந்துவிட்ட குற்றத்தால், அப் பொய்யை அவள் ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டிருக்கிறாள்.

அவளின் காலரவம் கேட்டு, அவர் பிரக்ஞை வந்தவராய் திரும்பிப் பார்த்தார்.

‘என்னப்பா! வரவர பார்வையே மங்கிங்கொண்டு வருகிறது. இருட்டிலே வேறு இருந்து நிழலையே பார்த்துக் கொண்டிருந்தால், இருக்கிற ஒளியும் போய் விடும். நீங்கள் கண்ணை மூடி விட்டால் நான் என்ன பண்ணுவேன்?’

அவளுடைய இந்த வார்த்தைகளின் கனம், இரு பொருள் பட, அவருக்குப் புரிந்த மாதிரி, அவளை நம்பிக்கையற்றுப் பார்த்துக்கொண்டே, சோகம் கவிந்த ஈனமான குரலிலே அவர் கேட்டார்.

‘சாவு ஒன்றுதான் நிச்சயமாக இருக்கு, நினைச்சதை சாதிக்க முடியாமல்? வண்டிச்சக்கரமே, முறிஞ்சு போய் கிடக்கு அது குடை சாய்ந்து போனபின், ஒளியைத் தேடுறதிலே என்ன லாபம்? இருள் இனித்தான் வரப்போகுதே?’

‘அப்பா! ஏதோ யோசனையிலே, நான் தெரியாமல் சொல்லிவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கோ!’

‘யாரோ வந்த மாதிரி இருந்ததே?’

‘ம்! ஒர் அருமையான பிறவி! யாரென்று புரியவில்லை. தடம் மாறி வந்திருக்கிறாள், எங்கட ஊர்தானாம். ஏழாலை மத்தியிலே தேவி கோவிலுக்குப் பக்கத்திலேதான், அவள் வீடு இருக்கிறதாம். எத்தனையோ காலப்பழக்கம் மாதிரி, ஒட்டிக் கொண்டு போற அவள் அன்பு, எவ்வளவு தெய்வீகமாக இருக்கு, ஆனால் பாவம் நேரிலே பார்த்தால், மனம் உடைந்து போகும். எவ்வளவோ மாற்றங்களிடையே, அவள் தனித்து நிற்கிறாள்.

ஏழையானாலும், நோயாளியானாலும், சாசுவதமாய், அவள் என் மனதிலே, அழியாமல் இருப்பாள், ஏனென்றாள் அன்பு சாகிறேலை, நான் அவளிலே விசாகனையே கண்ட மாதிரி இருக்கு, கேவலம் வெறும் பொய்க்காக எங்கடை சதை, அழுகிக் கொண்டிருக்கு, அப்பா! விசாகன் மறுபடியும் வருவான். இந்த வீட்டு வாசலிலே, இப்பதான் ஒளி பூத்த மாதிரி இருக்கு உங்களுக்கு தெரியுமல்லே! ஒளியைத்தேடி, அலைகிற எங்கட புத்தியை செருப்பால் அடிக்க வேணும் பசியிலும், வாழ வேணுமென்ற வெறியிலும், எங்கட ஆத்மாவே திரிந்து போச்சு! ஆனால் இச் சிறுமியோ, நெஞ்சிலே ஓட்டையை சுமந்து கொண்டு, பளிச்சென்று நிற்கிறாள்!’.

‘என்ன ஓட்டையா?’

‘ஓமப்பா நாளைக்கு வருவாள், காட்டுகிறன். இப்ப எழும்பி வாங்கோ, சாப்பிட்டுவிட்டு பாயை விரிக்க வேணும்!’

‘நித்திரை எங்கே வருகுது!’

அவள் அதை செவிமடுத்தவாறே, நிறைய யோசித்துக் கொண்டே, உள்ளே போனாள், கீழே படி இடறிற்று. கல்லும் மண்ணுமாய், பூமி பரந்து வியாபித்து கிடக்கிறது. இது யாருக்கு சொந்தம் என்று புரியாமலே, என்ன நினைப்பு? பெருமை வந்தால் எல்லாம் மறந்து போகிறது.

‘நான் யார்? எனக்கு என்ன சொந்தம் இருக்கு? சீ! மனித உறவை நினைத்தாலே வெறுப்பாக இருக்கு! அப்படி நினைக்கிறதே, பாவத்தை சுமக்கிற மாதிரி இருக்கு. நான் கழன்று, பிரிந்துபோன ஒரு தனி விழுது, எனக்கென்ன பயம்? எனக்கென்ன கவலை?’

கிணற்றுடிக்குப் பக்கத்திலே, சிறிது தூரம் தள்ளி ஒரு வேம்பு, இன்னும் தலை சாயாமல் நிற்கிறது. பழைய கிழட்டு வேம்பானாலும் துளசி அதற்கு உயிர் இருப்பதாக நம்பகிறாள். அதைப் பார்க்கிறபோதெல்லாம் அவளுக்கு ஒரு சிரஞ்சீவிக் கனவு ஞாபத்திற்கு வருகிறது, வாழ்வின் அவலங்களுக்கிடையே, குரூரம் வெறிச்சுப்போகாமல், நித்திய களையுடன் நிற்கும் அபூர்வ மனிதர்களைப்போல், வந்து வாழ்ந்து மறைந்து போகாமல், நிற்கும் விசாகனின் சத்தியக்கதைக்கு, அதுவே ஜீவ ஒளியாக, இன்னும் புகழ் மங்காமல், வாழ்கிறது. உயிர் தவிர, வேறு ஒன்றும் அறியாத துளசிக்கு, அதைப் பார்க்கிற போதெல்லாம், பெருமையில், உடல் சிலிர்த்துப் போகும். அதனுடன் மானசீகமாகவே, அவள் பேசிக்கொண்டிருப்பாள்.

சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்துவிட்டுச் சிறிது நேரம், அவள் அங்கே வந்து உட்காருவது வழக்கம். இரவில் பெரும்பாலும் அப்படித்தான் நடக்கிறது, வேம்பை யார் கவனிக்கப்போகிறார்கள்? அதன் சில்லென்ற காற்றுப்பட்டாலே, மனம் இறக்கை கட்டிப் பறக்கும். அவளுக்கும், அந்த மரத்திற்கும் என்ன உறவு?

நல்ல நிலாக்காலம். சுந்தரத்திற்கு சாப்பாடு கொடுத்து விட்டுச் சிறிது நேரம், அவள் தூக்கம் வராமல், அங்கே வந்து உட்கார்ந்து கொண்டாள்.

அப்பவெல்லாம், விடுமுறைக்கு டவுனிலேயிருந்து விசாகன் வரும்போது, இந்த வேம்பிலே ஏறி நின்று எத்தனை தடவைகள், விளையாடியிருப்பான். மளமளவென்று கால் சறுக்காமல், உயர உச்சிகிளைக்கே போய்விடுவான். கீழே நிற்கிற துளசி, பெரியப்பா பெரியம்மா எல்லோரையும், கீழே குனிந்து பார்த்து கைதட்டுவான். பூக்களை பறித்துக் கிளையோடு போடுவான்.

வேப்பம்பூ வடகம் என்றால், அவனுக்குக் கொள்ளை ஆசை. பூக்களை காம்புகளோடு, சிறுசிறு கட்டுகளாகக் கட்டி, அம்மா அவற்றை முற்றத்தில் பாய் போட்டுப் பரப்பிக் காய விடுவாள். அவை நன்றாகக் காய்ந்த பின்பே, வடகம் போடுவாள். அந்த வடகப் பொரியலும், புட்டும் தயிரும் சேர்த்துச் சாப்பிட்டு ருசி கண்ட, அவன் அதை நினைத்தே, நீண்ட நாட்களுக்குக் கிராமத்திலே தங்கி விடுவான்.

வீட்டிற்கு போனால், இவ்வளவு ருசியாக அவனுக்குச் சமைத்துப் போட, யார் இருக்கிறார்கள்? மம்மிக்குச் சமையலே வராது. சமையலுக்கென்று, ஒரு வேலைக்காரி இருப்பதோடு, விசாகனின் அக்கா ஆஷாவுக்குக் கூட ஓரளவு சமையல் தெரியும். நரேந்திரனுக்கு அடுத்தது, அவள்தான். கடைக்குட்டி விசாகனுக்கு அவர்களோடு வேறுபட்டு நிற்கிற மாறுதலான குணங்கள். டவுன் ஆடம்பரங்களோடு, வாழ்கின்ற மம்மியுடன், ஒட்டுதலற்ற, கிராமத்து உயிர் வாழ்க்கையையே, சதா தன் கண்ணில் கனவு கண்டு கொண்டிருக்கிற, அவனின் இந்த அபிரிதமான, அன்பு மேலிடுகின்ற, தனிப்போக்கு, மம்மிக்கு எரிச்சலையே ஊட்டியது.

அவளுக்குத் தமிழே சரியாக வராது. நுனி நாக்கால் அழகாக ஆங்கிலம் பேசுவாள். கிராமத்து பட்டிக்காட்டுத்தனங்களை, அவள் வெறுக்க நேர்ந்தாலும், இவள் மணக்க நேர்ந்த தென்னவோ, அசல் கிராமத்தானைத்தான். குகதாசன் சித்தப்பா, எஸ்ரேட்டில், துரைக்கு அடுத்த அதிகாரியாகப் பணிபுரிந்து, ஓய்வு பெற்றவர். மம்மியிடம், அவருக்கு அளவு கடந்த பயம் கூட உண்டு. பரம சாதுவான அவர், வாய் திறந்து, அதிகம் பேசவும் மாட்டார்.

அவர் அவளுடைய அனுமதியுடன் அடிக்கடி துளசி வீட்டிற்கு வந்து போவார். பிள்ளைகள் வர மம்மி அனுமதிப்பதில்லை. அதையும் மீறிக்கொண்டு விசாகன் மட்டும், ஜன்ம சாபல்யம் தீர்த்து விடுகிறமாதிரி, அங்கு வந்து சேர்ந்திருக்கிறான். அந்த அழகிய, எளிமையான கிராமத்தை பார்த்தபிறகு, அவனுக்கு எல்லாமே, மறந்து போயிற்று.

வேம்பிலே ஏறினால், முழுக் கிராமத்தையுமே, கண் குளிரத் தரிசிக்க முடிகிறது. வேம்பிலே கம்பீரமாக சாய்ந்து நின்றவாறே, புல்லரித்துப் போய், ஒருநாள் அவன் சொன்னான்.

‘துளசி கேளும். இஞ்சை நின்று பார்த்தால் சிகரம் வைத்த மாதிரி இருக்கு! இதுக்குச் சோடிக்க வேண்டாம். என்ன அழகான இடம். எனக்கு இது நிறையப் பிடிச்சிருக்கு. நான் சதா இங்கேயே சுற்றிக் கெண்டிருப்பேன். பெரிய மனிதனாகி இந்த ஊருக்கு உழைப்பேன். மம்மி வந்து கூப்பிட்டாலும் போகமாட்டேன். உன்னோடு இருந்துவிடப் போறேன். அவன் சொன்ன மாதிரியே செய்தான் விடுமுறை முடிந்த பின்னும், அவன் போகவில்லை. கடைசியில் நரேனண்ணாதான், வந்து அவனை அடித்து,

இழுத்துக் கொண்டு போனார், அதன் பிறகு, அவன் இந்த கிராமத்தை தேடி, வரவேயில்லை.

அவனில்லாமல், பாழாய் போய்விட்ட, வெறும் கிராமத்தைப் பார்க்கத் துளசிக்கு மனம் எரிந்தது. மனிதர்கள் இப்படித்தான், கிராமத்தை விட்டு, மறைந்து போவார்கள். அவர்கள் எதைத் தேடிப் போகிறார்கள்?

அவள் நிலவிலே குளித்துக்கொண்டிருந்த அந்த வேம்பை ஆசையோடு நிமிர்ந்து பார்த்தாள், நிலவுதான் வேம்பை மாற்றியதா? எத்தனை யுகமாக நின்று, சரித்திரம் கண்ட வேம்பு! அது நிலவிலே பெருமை பெற்றதென்றால், யார் நம்புவர்கள்.

‘வெறும் மரம்தானே என்று மனிதன் நினைப்பான். எனக்கோ அது சன்னிதானம் மாதிரி இருக்கு! உயரத்தில், விசாகன் எப்பவும் நிற்கிற இந்த இடம்! கிளைகளிடையே, ஒளி விட்டுச் சிரிக்கும் அவன் முகம்! என்றுமே அழியாமல், எங்கள் கிராமத்தின் பழம் பெருமையிலே, ஊறிக் கிளை விட்டுப் போன, ஒரு சாசுவத சத்தியப் பிழம்பாகவல்லவோ, அது இருக்கு’

‘விசாகன் இந்த மண்ணை உறிஞ்சிவிட்டு, எங்கே போய்விட்டான்?’ எங்கு போனானென்று யாருக்குத் தெரியும்’.

அதன் பிறகு நாலைந்து மாதமாய், அவன் துளசி வீட்டிற்கு வராமல் போகவே, ஒரு நாள் அவள் அவனைத் தேடிக் கொண்டு, அப்பாவோடு டவுனுக்குப் போனாள். அவளின் ஊரிலிருந்து, எட்டு மைல் தொலைவில், அந்தப் பென்னம் பெரு நகரம், முற்றவெளிக்குச் சமீபமாக, இரண்டாம் குறுக்குத் தெருவில், விசாகனின் வீடு இருந்தது. தெருவோடு சேர்ந்த வீடு, படியிறங்கினால் தெருதான் வேம்படிப் பள்ளிக்கூடம், மத்திய கல்லூரி, கிட்ட இருப்பதால், நடந்தே போய்விடலாம்.

அந்த டவுன் வாசனையே, துளசிக்குப் புதிது, அவள் கிராமத்துப் பாமரத்தனங்களோடு, பிறந்து வளர்ந்த ஒரு பட்டிக்காட்டுச் சிறுமி, நாகரீக வாசனையே அறியாதவள் விசாகனின் வீட்டில் கால் வைத்ததுமே, அவள் பிரமித்துப் போனாள். அதன் ஒன்று திரண்ட, நாகரீக மேல் போக்கான, ஆடம்பரச் சூழ்நிலை, தான் இதுவரை அறியாத ஒரு காட்சி மயக்கமாக, அவளுக்குப்பட்டது, பெரிய ஹாலில், மம்மி சாய்மனையில் படுத்துக்கொண்டு பேப்பர் வாசித்துக் கொண்டிருந்தாள். அவர்களின் கலவரம் கேட்டுப் பேப்பரை விலகிக் கண்ணாடி ஊடாக, அவர்களின் நிழல் கண்டு, மனம் கசந்தது போல், முகம் கறுத்தாள். எனினும் சுதாரித்துக் கொண்டுவிட்ட பாவனையில் போலியாகச் சிரித்துக் கொண்டே, அரை மனதோடு அவர்களை வரவேற்றாள்.

அதற்குள் விசாகனே வந்துவிட்டான். உண்மையில் அவன் கூட, எவ்வளவோ மாறித்தான் போயிருந்தான். துளசியிடம் சரியாக முகம்

கொடுக்க விரும்பாமல், ஓர் அந்நியன் போலவே நடந்து கொண்டான், அவனது இந்தப் பாராமுகம், துளசிக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது. அவளுக்குத் தான் அப்போது பேசியதெல்லாம் நன்றாக நினைவிருந்தது.

‘என்ன விசாகன்! மறந்திட்டியே?’

‘ம்! நான் நரேனண்ணாவோடு லண்டனுக்கு போகப்போறன். நிறையப் படிப்பெல்லாம் படித்து, அங்கு என்ன வேலை பார்க்கப்போறன் தெரியுமா? நரேனண்ணா மாதிரி நானும் ஒரு என்ஜினியராக்கும். வெளிநாட்டுக்குப் போனால் தான், நிறையக் காசு உழைக்கலாம் என்று மம்மி சொல்லுது. இஞ்சை நான் இருந்தால், வேண்டாதவர்களோடு சேர்ந்து கெட்டுப் போய் விடுவேனாம். உங்கட கிராமமே கூடாதாம். அங்கே வந்தால், அழுக்கு மண் ஒட்டிக் கொள்ளுமாம். நான் அங்கு இனி வரப்போறதில்லை. சீக்கிரம் லண்டனுக்குப்போய், பெரிய ஆளாய் வந்திடுவேன்.

துளசிக்கு அந்த வயதில், அவ்வளவாக ஞானம் இல்லாவிட்டாலும், ஒன்று மட்டும் புரிந்தது.

மிகவும் குழந்தைத்தனமாகக் கள்ளம் கபடமற்றுஇ அவளின் அந்தக் கிராமத்தையே, சுற்றிச் சுற்றி விளையாடித் திரிந்த வெள்ளை உள்ளம் கொண்ட விசாகனா இப்படியெல்லாம் பேசுகிறான்? இப்போது அவன் கண்களில் வெளிச்சம் காட்டி, நிழல் கொண்டு நிற்கிற அந்த வெளிநாட்டு உலகம், அவளுக்கு வெறும் பிரமையாகவேபட்டது. இயற்கையோடு ஒன்றிப் போய், சொந்த மண்ணிலே பெருமை கொண்டு வாழ முடியுமென்ற, மகத்தான உண்மையையே, கறை படுத்திக் காலால் எட்டி உதைத்துவிட்டுப் அவனின் இந்த திசை மாற்றப்பட்டுவிட்ட திரிபு நிலை, அவளுக்கு பெரும் ஏமாற்றத்தையே அளித்தது.

அவன் இப்படி மாறிப்போகுமளவிற்கு, அவனை மாற வைத்தது எது? வெளிநாட்டு பணமோகம் தான். அவனை இப்படி மூளைச்சலவை செய்து, திசை திருப்பிவிட்ட மம்மி இன்னும் அந்த வெற்றிக்களிப்பிலேயே, மிதந்து கொண்டிருப்பதாகத் துளசிக்கு உணர்வு தட்டியது. அவளை நிமிர்ந்து பார்க்கவே மனம் கூசியது. விசாகனுக்கு நேர்பதிலாக, ஏதாவது சொல்ல வேண்டுமென்று தோன்றியது, நீண்ட நேர யோசனைக்குப்பிறகு தயங்கியபடியே அவள் சொன்னாள்.

‘எனக்கென்ன! உன் இஷ்டம். யாரும் விலங்கு போட்டு, உன்னை கிராமத்திற்கு இழுக்கேலை. நீயாகவே வந்தாய், பிரிந்து போறாய்! எப்பவாவது ஒருநாளைக்கு என்னைத் தேடிக்கொண்டு, வந்து நிற்கத்தான் போகிறாய்!.

‘இல்லை நான் வரமாட்டேன்’

இதற்கு பிறகு அவள் பேசவில்லை.

லண்டனுக்கு போன விசாகன் திரும்பவேயில்லை. அவன் கதி என்னவாயிற்று என்று யாருக்குமே தெரியவில்லை. அவன் மீது உயிரையே வைத்திருந்த துளசிக்கு, எல்லா வகையிலும், அவனை இழந்தது மகத்தான சோகமாகவே மனதை வருத்திக் கொண்டிருந்தது. அவன் விட்டுச் சென்ற, தன் கிராமத்தின் நாகரீகக் கறைபடியாத இயல்பான காட்சித் தடங்களைக் கண் நிறையப் பார்க்கும் போதெல்லாம். அவனையே உயிருடன் கண்டு தரிசிக்கிற மாதிரி, அவள் புல்லரித்துப் போகிறாள். அந்தப் பிரமைகளையெல்லாம் மறந்து, யதார்த்த நிலையில், தான் தவிர்க்க முடியாமல் சந்தித்து வரும் குழப்பம் மிகுந்த மனித உறவும், ஜீவன் இழந்து வரும் வாழ்வின் குறிக்கோளற்ற, மாற்றங்களும், அவளுக்கு மிகவும் வேதனையளிக்கக் கூடிய சத்திய சோதனைகளாகவே தோன்றின.

இதன் நடுவில், ஒரு சிரஞ்சீவிக்கனவாக, அந்தக் கிராமத்தின் பழம் பெருமைகளிளெல்லாம், மறைந்து நின்று ஒளி வீசு கின்ற விசாகனின் முகத்தைக் கற்பனையில் நினைத்துப் பார்க்கிறதே, அவளுக்குச் சிறிது ஆறுதலை அளித்தது. அந்தக் கிராமத்தை விட்டு மறந்து போய், ஒரு புது வாழ்க்கையைத் தொடங்க வேண்டும் என்ற, அவசியம் கூட அவளுக்கு வர வில்லை. சாபத்தீட்டாக வந்து கலந்து விலகிப் போய்விட்ட திருமண உறவும் வேரோடு கழன்று, புரையோடிப் போய் விட்டது மிஞ்சி நிற்கிற தனது சத்தியத்திற்கு, இந்தக்கிராமமே தகுமென்று, அவள் அதையே ஒரு பாடமாகப் பெருமிதத்துடன் நினைவுகூர்ந்து வந்தாள். அதுவும் சுவாலை கொண்டு பெருந் தீயாக எரியத் தொடங்கிவிட்டது. அந்தத் காலாக்கினியின் வேகம், அதுகூட அவளை என்ன செய்துவிட முடியும்?

அவள் இதையெல்லாம் பொருட்படுத்தாமல், ஓங்கி எரிந்து, கருகிப் போய்விடுகின்ற காலத் தீட்டினிடையே, அதையும் எரித்துப் புனிதமாக்கவல்ல, தானே ஒரு சத்திய நெருப்பாய், இன்னும் விசாகனுக்காகவே யுகத்தை மறந்து காத்துக் கொண்டிருந்தாள். இதற்கிடையில் அவனின் மாற்றுக் குறையாத, ஒரு தேஜஸ் மிகுந்த நிழல் போல இப்போது, புதிதாக ராணி வந்து, அவளுடன் ஒட்டிக் கொண்டிருந்தாள். அவளுக்குப் புதுத்துணை கிடைத்த மாதிரி இருந்தது. தன்னை மிகவும் நம்பிக்கையுடன் ஏற்று, அன்பு காட்டும் அவள், ராணியின் கண்களுக்கு ஒரு தெய்வமாகவே தோன்றினாள்.

இப்போதெல்லாம் அடிக்கடி அவள், துளசியின் வீட்டிற்கு வந்து போகின்றாள். துளசிக்கு உதவியாகத் தானே முன்வந்து, சிறுசிறு வேலைகளைக்கூடச் செய்து தருகின்றாள். அவள் வந்தபிறகு, துளசிக்கு வேலைப்பளு குறைந்து விட்டாலும், நித்திய நோயாளியான அவளிடம் வேலை வாங்குவது மனிதாபிமானமேயில்லாத ஒரு பாவச்செயலென்று, துளசி தனக்கே உரித்தான கருணை மனதுடன், நினைவு கூர்ந்தாள்.

ராணி சொன்னால் கேட்டால்தானே ஒரு நாள் அவள் அப்படித்தான், தன் இஷ்டத்துக்குக் கடைக்குப் போய் வரும் வழியில், நீண்ட தூரம் அவசரமாகப் பாரம் சுமந்து நடந்து வந்ததால், நெஞ்சு வலித்தது. அந்த வலியைத் தாங்கிக் கொண்டே, அவள் மிகவும் கஷ்டப்பட்டு வீடு வந்து சேர்ந்தாள். பிறகு தன்வசமிழந்து, நெஞ்சு வலி பொறுக்க முடியாமல் கொண்டு வந்த சாமான் பையை அப்படியே தரையில் போட்டு விட்டுக் கீழே விழுந்து படுத்து விட்டாள். இதைப் பார்த்து விட்டு மனம் பதறிக் கொண்டு ஓடிவந்து அவளின் தலையைத் தூக்கித் தன்மடியில் படுக்க வைத்து, நெஞ்சைத் தடவியவாறே கேட்டாள் துளசி.

‘யார் இதையெல்லாம் உன்னைச் செய்யச் சொன்னது? வெறும் உறவோடு நின்றிருக்ககூடாதா? எதற்கு இந்தக் கஷ்டமெல்லாம் உனக்கு? உனக்கு ஏதாவது நேர்ந்து விட்டால், நானல்லவா பழி சுமக்க வேணும்’

ராணி அவள் அன்பிலே வலி மறந்து விட்டவளாய், முகத்தை நிமிர்த்தி, அவளின் விழிகளைச் சந்தித்தவாறே, மெல்லிய குரலிலே வருடிக் கொடுப்பதுபோல், சொன்னாள்.

‘ஐயோ அக்கா! வேலை செய்வதே எனக்குப் பழக்கமாய் போச்சு, வருத்தம் கூடினாலும் என்னால் சும்மா இருக்க முடியேலை. உங்களைப் பார்த்தால் பாவமாக இருக்கு. துணையில்லாமல் கஷ்டப்படுறியளே என்று நினைத்தேன். செய்யாமல் இருக்க முடியலை. அதுதான்…’ என்று மேலே தொடர முடியாமல் நிறுத்தினாள்.

‘கஷ்டத்திலேயும் பாரம் சுமக்க நினைக்கிறதே பெரிய காரியம், நமக்கெல்லாம் கஷ்டத்தைக் கண்டால் பயமாக இருக்கு! சுகத்தைத் தேடி, நிம்மதியில்லாமல், அலைந்து கொண்டிருக்கிறோம், ஆனால் மூச்சுப் பிரிகிற, கடைசி நேரத்திலேயும், நீ பாரம் சுமக்க நினைக்கிறியே, உன்னை நினைக்க நான் பெருமைப்படுகின்றேன். இதெல்லாம் அவ்வளவு லேசிலே வராது. கஷ்டங்களிருந்தும், பிரச்சினைகளிலிருந்தும் விடுபட்டுச் சுகமாக இன்பம் கண்டு இருக்கவே மனிதன் விரும்புகின்றான். இப்படித் தனித்து ஒதுங்கி விடுகிறது அவன் மனதில், பிறர் துன்பம், கண்ணீர் எல்லாம் வெறும் நிழலே. ஆனால் நீயோ, விசாகன் வழியில் என்னையே ஜெயிச்சிட்டாய். இப்பேர்ப்பட்ட உன்னைச் சுமக்கத்தான், இந்த மண் கொடுத்து வைக்கேலை புண்ணிய சீலத்தின் கதையே அப்படித் தான் பாவம்தான் நின்று வேரறுக்கும், சரி. களைத்துப் போனியே, மௌ;ள எழுந்து இரு, நான் தேனீர் கொண்டு வாறன்’

அவள் நிலைத்து விழித்த பார்வையுடன் எழுந்து சுவரோடு சாய்ந்து உட்கார்ந்து கொண்ட போது வெளியிலே சைக்கிள் மணி கேட்டது.

‘துளசி தபால் போலிருக்கு போய் வாங்கு! என்றார் சுந்தரம் சாய்மனையில் படுத்தபடியே

‘யார் கடிதம் வந்திருக்கு?’

அவள் அதை வாங்கிப் படித்து முடித்துவிட்டு, உணர்ச்சி மேலீட்டினால், புல்லரித்துப்போன முகத்தை நிமிர்த்திச் சந்தோஷமாக அவரை ஏறிட்டுப் பார்த்தவாறே சொன்னாள்.

‘அப்பா! சொன்னால் நம்பமாட்டியள்! நான் இதை எதிர்பார்;த்துத்தான் இருந்தேன். எங்கடை இந்தக் கிராமம் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்க வேண்டும். உங்களுக்குத் தெரியாதப்பா. இது எரிந்து போன கிராமம் ஏதோ விருத்தி, முன்னேற்றமென்பது, உங்கடை கண்ணுக்கு மட்டுமென்ன! எல்லோருக்குமே அது வேறுவிதமாகப்படலாம். இந்த மண்ணுக்கு என்ரை அருமையான கிராமத்திற்கு என்ன குறை என்று நீங்கள் கேட்டகலாம். நான் அதைச் சொல்ல வெட்கப்படுகிறன். நான் உயிரில்லாத வெறும் நிழல் என்றாலும், இதைச் சொல்கிற, ஆன்மீக ஞானம் எனக்கு இருக்கு, உண்மை என்ன தெரியுமா? இது யாருடைய கடிதம்? நரேனண்ணாதான் போட்டிருக்கிறார். விசாகன் நாளைக்கு வாறானாம். அவன் வந்த பிறகுதான் எல்லாம் விடியும், விடியிறதென்ன, சாபமே நீங்கப் போகுது! பாருங்கோ!

என்ன சாபம் என்று யாருக்குத்தெரியும்? துளசி இதைச் சொல்லிவிட்டு, ராணிக்குத் தேனீர் கொண்டுவர, உள்ளே போய்விட்டாள். சுந்தரம், வெறுமனே தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார். தார் போட்டுச் செப்பனிடப்படாத மிகவும் கரடு முரடான அந்தக் குச்சொழுங்கையை மேவிக் கொண்டு, அவர் கண்களுக்குத் தெரியும், அந்தக் கிராமம், புகழ் இழந்து பொலிவற்று நிற்பதுபோல் பட்டது.

உள்ளே போய்த் தேனீரும் கையுமாகத் திரும்பி வந்த துளசி, ராணியிடம் அதைப்பருக கொடுத்து விட்டு, மீண்டும் அவளே பேச்சைத் தொடர்ந்தாள்

என்னப்பா! பேசாமல் இருக்கிறியள்? விசாகன் நாளைக்கு வாறானாம்! நாளை என்பது வெறும் கனவு அவன் எப்ப வந்து சேருவான் என்று தெரியேலை. ஆனால் கப்பல் ஏறி விட்டானாம். எங்கடை ஊருக்குத் தான், நேராக வருவானாம். இது மட்டுமில்லை, இனிமேல் எங்களுடனேயே இருந்து விடப் போறானாம்.

அவள் சூள் கொட்டினாள்

‘அதை யார் கண்டது? அவன் வாறதே சந்தேகமாக இருக்கு! அப்படி வந்தாலும் எங்களைத் தேடி வருவானென்று என்ன நிச்சயம்? இப்ப அவன்

பெரிய மனிதனல்லே!’ அவர் பெருமூச்செறிந்துவிட்டு சற்றுக் காரமாகவே சொன்னார்.

‘யார்தான் இப்ப பெரிய மனிதராகிவிட வில்லை? வெளிநாட்டுக்குப் போனால், பணமாய் கொட்டுகிறது. அதை அடைந்துவிட்டால், எல்லோருமே பெரிய மனிதர்கள்தான், நானும் நீங்களும், பின்வாங்கி, நிற்பதனால், இதெல்லாம் பொய்யாகிவிடுமா? சரி இருக்கட்டும். அடடா! ராணியை மறந்து போனேனே! இருக்கிறியே ராணி?’

‘இருக்கிறேனக்கா! என்று பதில் வந்தது’

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *