புதிதாய் மலர்ந்தான்..

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 13, 2024
பார்வையிட்டோர்: 3,114 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

அலைபேசியில் தொடர்ந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. எதையும் சட்டை பண்ணாமல் ஆழ்ந்து உறங்கிக்கொண்டு இருந்தான் சோழன்.

“இவன் என்ன பண்றான் இவ்ளோ நேரம். மணி ஒன்பது ஆகுது. இன்னும் எந்திரக்கல. கேஸ் அடுப்பில் சமைத்துக்கொண்டே புலம்பினாள் சகுந்தலா.

“டேய் போன் அடிக்குதுல.. எந்திரிடா” அதட்டினாள் சகுந்தலா.

“ஞாயித்துக்கிழமை கூட நிம்மதியா தூங்க முடியல்” முனுமுனுத்துக் கொண்டே எழுந்தான்.

“என் செல்லம்ல… முகத்த அலம்பிட்டு வாப்பா… டீ போட்டு வச்சுருக்கேன்.”

“ம்…ஏம்மா இன்னைக்கு லீவு தானே…”

“போன வாரம் பதினொரு மணிக்குத்தான் எந்திரிச்ச… நான் கேட்டேனா… என் மகனோட என் மகனோட வேலை அப்படி. ஆறுநாளும் அலையுறான். தூங்கட்டும்னு விட்டர்றேன்.’

“இன்னைக்கு என்னம்மா ஆச்சு உனக்கு….” தேங்காய் பூ துண்டால் முகத்தை துடைத்துக்கொண்டு இருந்தவனின் தலையை மெதுவாக வருடிக் கொண்டே இப்படி சொன்னாள்….

“பக்கத்து வீட்டு சின்னம்மா ஆயாளுக்கு வயித்தே வலிக்குதாம்பா… காலைல இருந்து பத்து தடவைக்கும் மேல தாத்தாவும் ஆயாவும் வந்துட்டு வந்துட்டு போறாங்கப்பா.. பத்து மணிக்கு டாக்டர் வந்துருவாரு கூட்டிட்டு போயிட்டு வாயா. அவங்களுக்கு நம்மள விட்டா யாரு இருக்கா…

“அந்தக் கெழவன் கூட்டிப் போக வேண்டியது தானே…சளிப்புடன் கூறிய அவனைத் தடுத்து…

“அப்புடி சொல்லாதப்பா. அந்த தாத்தாவுக்கும் வரவர கண்ணுத் தெரியலையாம். ஓம் மேல ரொம்பவும் பாசமா இருப்பாங்கய்யா…”

“ஆமா… பெரிய பாசம்… இந்த மாறி வேலைக்கு ஆள் வேணும்ல அதான்…”

“நம்ம தாத்தா பாட்டியா இருந்தா கூட்டிப் போக மாட்டியா…”

“எனக்குத்தான் தாத்தா பாட்டியே இல்லையே…”

“அப்டினா அம்மாவுக்கும் அப்பாவுக்கும் உடம்பு சரியில்லனா இப்படித்தான பண்ணுவியாப்பா…’

“அம்மா..அப்படி சொல்லாதம்மா… சாப்பிட்டு கூட்டிப் போறேம்மா..

“அம்மா..அப்பா எங்க..”

“கறி வாங்கப் போனவர இன்னும் காணோம்யா…”

“அம்மாடி… பேரன் எந்திரிச்சுட்டானா.. சின்னம்மா ஆயாவின் உரிமைக்குரல் இதயக் கதவை தட்டியது…

“எந்திரிச்சுட்டான் அத்தை… உட்கார்ந்து இருங்க… கிளம்பி வர்றான்…”

“அம்மா போயிட்டு வர்றேம்மா…” சளிப்புடனே கிளம்பினான்.

“வண்டிய பாத்து ஓட்டிக்கிட்டுப் போயா…” கொஞ்சி அனுப்பினாள்.

சின்னம்மா ஆயா… வண்டியின் கைப்பிடியை இறுக பிடித்துக்கொண்டாள்.

இருசக்கர வாகனம் பயணமானது.

“சாகப்போற காலத்துல நம்ம உசுர எடுக்குது. பத்துகிலோ மீட்டர் போகனும்..வண்டி என்ன தண்ணிலயா ஓடுது…” முனுமுனுத்துக் கொண்டே ஓட்டினான்.

“ராசா… ஆசுபத்திரில எங்கிட்டும் எங்கிட்டும் போயிடாம பக்கத்துல இருந்து மருந்து மாத்திரை வாங்கிகுடு ராசா…”

“ம்… வாங்கித் தர்றேன். கொஞ்சம் பேசாம வா ஆயா…”

“கோபிச்சக்காத ராசா…’

“காலைல பாண்டி ஏழெட்டு தடவைக்கும் மேல போன் பண்ணிருக்கான்… போன எடுத்திருந்தா அவன் கூட சாந்தி தியேட்டருக்கு படத்துக்குப் போயிருக்கலாம்…”

“ராசா தூக்கித்தூக்கிப் போடுதுயா… மெதுவா போயா… பாவிப் பயலுக ரோடு போட்டு அஞ்சாறு மாசம் கூட வரல. அதுக்குள்ள டோப்ப டோப்பயா எடுத்துக்கிட்டு பல்லக்காட்டுது. என்ன மாறி கெழவி கெட்டயெல்லாம் இதுல ரெண்டு தடவ போனா சீக்கிரம் போயி சேர்ந்துருவோம். சொல்லிச் சிரித்துக்கொண்டாள்.

பதிலுக்கு அவனும் சிரித்துக்கொண்டான்.

தேரைவிட கொஞ்சம் வேகமாக வந்த வண்டி மருத்துவமனை வாசலில் நின்றது.

“ஆயா… இங்கே உட்கார்ந்து இருங்க.. டோக்கன் வாங்கிட்டு வந்தர்றேன்”

“யாரு அது உங்க பேரனா…” பேச்சு வந்த திசையில் திரும்பினாள்

“ஆம. ஆத்தா.. ஏம்புட்டு பேரன்தான். உனக்கென்னத்தா பண்ணுது…”

“குளிர் காய்ச்ச… ஏம்புட்டு ஆம்பள இப்பத்தான் விட்டுட்டு டீ குடிக்க போயிருக்குது” என்ற காத்தாயி பாட்டியை நெற்றியில் தொட்டுப் பார்த்தாள்.

“என்ன ஆத்தா… நெருப்பா கொதிக்குது… எதும் சாப்டியா…”

“இல்லத்தா”

“இரு வந்தர்றேன்”

பக்கத்தில் டீக்கடைக்குச் சென்றவள் பண்ணும் டீயும் வாங்கி வந்து கொடுத்தாள்.

“ஏம்புட்டு வயசுதான் உனக்கு. இருந்தாலும் நீ எனக்கு தாயிமாறி…” கண்கலங்கினாள் காத்தாயி

“இதுக்கு எதுக்கு ஆத்தா அழுகுற… உங்க ஆம்பள எங்க இன்னும் காணோம்”.

“அவரு போயி அஞ்சாறு வருசம் ஆச்சு. மயன் மருமவ பேரப்புள்ளைக இருந்து என்ன பண்ண நானாதான் வந்தேன்…”

“ஆயா… நமக்கு ஆறாவது டோக்கனு”

“ராசா… உங்க ஆயாவ நல்லா வச்சுக்கயா… எனக்கும் தான் ஒரு பேரன் இருக்கான்… நல்லா இருக்கட்டும்.. இந்தக் காலத்து பிள்ளைங்களுக்கு வெளையாட்டுத்தான் எல்லாமே. ஒன்ன மாறி புள்ளைய பாக்குறதே பெரிசுயா. நீ நல்லா இருக்கனும்யா..”

அப்போது கண் கலங்கினாள் சின்னம்மா ஆயா..

மூனா நம்பர் டோக்கன் கூப்பிட்டதும் எழுந்தாள் காத்தாயி…

“ராசா.. இந்த ஆயாவ டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயா… இந்த டீ கிளாச கொடுத்துட்டு வந்தர்றேன்…”

“சரி ஆயா… உன்னைக் கூட்டி வந்ததே பெருசு… இதுல வேற… மத்த கெழவிகளுக்கும் பாக்கனுமா” மனசுள்ளேயே அலுத்துக்கொண்டான்.

சிறிது நேரம் கழித்து

“ஆறா நம்பரு ரெடியா இருங்க…”

“இந்தக் கெழவி எங்க போச்சு. நோட்டமிட்டான் கண்களால்..

“ராசா… நம்மள கூப்புட்டாங்களா.. அந்த ஆயா ரொம்ப புலம்பிக்கிட்டே இருந்துச்சு. மனச தேத்தி அனுப்பிவிட்டேன் அதான்யா…”

“சரி.. வாயா…”

டாக்டரிடம் கூட்டிப் போனான். பரிசோதனை செய்தார் டாக்டர்.

“ஆத்தா… மெதுவா குத்துத்தா வயசான உடம்புல… “ம்” வலிக்காம ரத்தம் எடுக்குறேன். லேசா கண்ண மூடிக்கங்க.

“ஆயா அங்க உட்காரு. மருந்து மாத்திரை வாங்கிட்டு வர்றேன்”

“இந்தா ராசா இதுல ரெண்டாயிரம் இருக்கு போயி வாங்கிட்டு வாயா…”

பணத்தைவாங்கி ேபானவன் ரத்தபரிசோதனை, டாக்டர் பீஸ், மருந்து மாத்திரைக்கும் பணம் கட்டினான். ஆயிரத்து நானூறு ரூபாய்… வந்தது.

“கெழவிக்கு என்ன தெரியவா போகுது. பெட்ரோல் போடநூறு ரூபா வச்சுக்குவோம். ஆயிரத்து ஐநூறுனு கணக்குச் சொல்லிக்குவோம்”.

“ஆயா… மருந்து மாத்திரை இந்தா இருக்கு. மீதி ஐநூறு ரூபாயும் வச்சுருக்கேன். பைக்குள்ள வையிங்க…”

“சரி ராசா…

வண்டி தயாரானது.

“ஆயா.. அஞ்சு நாள் கழிச்சு வரச் சொன்னாங்க” வண்டியை இறுக பிடித்துக்கொண்டாள்.

“ராசா.. அந்த பழ சூஸ் கடைக்கிட்ட நிறுத்துயா…”

கெழவிக்கு சூஸ் கேட்குதாக்கும். அலுத்துக்கொண்டான்.

“தம்பி ஆப்பிள் சூசு ஒன்னு போடுப்பா…”

“கொய்யால… ஆப்பிள் சூசு கேட்குதா”

“ராசா.. இந்தாயா.. உனக்கு தாயா..”

“காலைல நீ சரியா கூட சாப்பிடலையா. இந்த கெழவிக்காக ஒன்னோட வேலைய விட்டுட்டு வந்திருக்க… நீ எங்க வீட்டு சாமியா…”

ஆப்பிள் சூசு அவன் தொண்டைக் குழிக்கு கீழே இறங்க மறுத்தது.

“இந்தாயா.. நூறு ரூபா பெட்ரோல் போட வச்சுக்கய்யா.. வண்டி சும்மாவா ஓடுது”

“பரவா இல்ல ஆயா…

“என் பேரன் தாயா நீயும்.. வாங்கிக்க …”

மனம் உறுத்தியது. உடம்பு பொசுக்கென்று வேர்த்தது.

“என்ன ராசா… மொகம் வாட்டமா இருக்கு.”

“ஒன்னுல்ல ஆயா.. காசவச்சுக்க திரும்பிக் கொடுத்தான்.”

ஆயாவோட நல்ல மனசு நமக்கு தெரியாம போச்சே…

காத்தாயி பாட்டி எதிரே வந்து சென்றாள்.

“ஆயா…” உண்மையாக அழைத்தான்.

“என்ன ராசா…”

“தாத்தாவுக்கு என்ன பழம் பிடிக்கும்”

“ஆரஞ்சு பழம்னா உசுருயா…”

“உங்களுக்கு அந்தப் பழம் பிடிக்காதா..”

“இந்தக் கெழவிக்கு சாத்துக்குடிதானய்யா புடிக்கும்.. அதெல்லாம் சாப்பிட்டு வெகு நாளாச்சுய்யா.. அவரு நல்லா இருந்தா எனக்குப் போதும்யா.”.

“இரு ஆயா.. வர்றேன்..” பழக்கடைக்கு போயி வந்தான்.

“என்ன ராசா இது..”

“உங்களுக்குத்தான் ஆயா”

“இவ்ளோ பழம்.. ரொம்ப காசு வந்துருக்குமே ராசா…”

“விடுங்க ஆயா.. நா உங்க பேரன் இல்லையா..”

“ராசா..எம்புட்டுப் பெரிய வார்த்தை கேட்டுப்புட்ட..” அவன் கையை பிடித்துக்கொண்டு கண்ணீர் வடித்தாள்.

அவனது கைகள் தானாய் துடைக்கத் தொடங்கியது அவளது கண்களை.

வீட்டுக்கு வந்த சின்னம்மா ஆயா… சகுந்தலாவிடம் மட்டுமல்ல.. எல்லோரிடமும் சொல்லிச் சொல்லி ஆனந்தப்பட்டாள்.

புதிதாய் மலர்ந்தவனாய் சின்னம்மா ஆயாவின் முகத்தையே ஆச்சரியமாய் பார்த்துக்கொண்டிருந்தான்.

உண்மையும் உறவும் அவனுள் வளரத் தொடங்கியிருந்தது.

– முதல் பரிசு (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 2015, இனிய நந்தனம் பதிப்பகம், திருச்சி.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *