பிரிவுபசாரம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 11, 2021
பார்வையிட்டோர்: 2,183 
 
 

(1953ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

சித்திரை மாதத்து உச்சி வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது. அந்த வெய்யிலின் அகோரத்தில் அச்சுற்றுப்புறம் யாவுமே, நேர்மையற்ற விமர்சனத்தைச் சகித்துக் கொள்ள மாட்டாத எழுத்தாளனின் இதயத்தைப்போல வெந்து புழுங்கிக் கொண்டிருத்தது. தெருவிற் சொறி நாய் கூடப் போகவில்லை; காகங்கூட ஆகாயத்திற் பறக்கவில்லை. இந்த மகாமசான அமைதியில் ஊர்க்கோடியிலிருந்த அந்த வீட்டினுள்ளே சுவரோரமாக இருந்த கட்டிலில் செபமாலைக் கிழவி படுத் துக்கொண்டிருந்தாள். மூப்புத்தட்டி முதிர்ந்து, பஞ்சுப் பெட்டி போல நரைத்திருந்த அவள் தலையும், காலம் கீறிக் கீறிச் சுருக்கம் விழுந்து ஒட்டிப் போய்க் கிடந்த அவள் கன்னங்களும், பழஞ்சீலை போலத் துவண்டு கிடந்த அவள் உடலும் அந்தக் கட்டிலுக்குப் பாரமாயிருத்ததோ அல்லது அந்தக் கட்டில் தான் அவளுக்குப் பாரமாயிருந்ததோ! எல்லா உபாதைகளையும் படுக்கையிலேயே சாந்திப்படுத்திக்கொண்டு அலங்கோலமாக அருவருப்பூட்டிக்கொண்டு அவள் படுத்துக்கொண்டிருந்தாள்.

அறை முழுவதும் பொருட்கள் இறைந்து கிடந்தன. அரைத்த குளிகை அம்மியிலேயே இருந்தது ; பழஞ் சீலைகள் குவிந்து மலையாகக் கிடந்தன. ‘சம்மூலத்தோடு’ பிடுங்கிவந்த மூலிகைகளெல்லாம் அங்கும் இங்கும் சித றிக் கிடந்தன. அந்த வீடே கால தூதனின் வருகைக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுவிட்டதாய் சிருட் டிகளிலெல்லாம் தன்னைப் பிரதிபலித்துக் கொண்டிருககும் கலைஞனைப்போல அங்கு கிடந்த எல்லாப் பொருட் களும் மரணத்தை அதன் வருகையைப் பிரதிபலித்துக் கொண்டிருந்தன.

கட்டிலினருகே பால்குடி மறக்கடித்த குழந்தையைப் போல ஏங்கிக்கொண்டு நின்ற அவள் இளைய மகன் அருளப்பா, அம்மாவின் சூம்பிச் செயலிழந்து கிடக்கும் கைகளைப் பிடித்து நாடி பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் செல்லப்பாவின் முகத்தைப் பரிதாபகரமாகப் பார்த்துக்கொண்டிருந்தான்.

கிழவி இன்னமும் வாழவேண்டும் என்பதை அவளே விரும்பவில்லை. அவள் படுக்கையில் விழுந்தும் பத்து நாட்களாகி விட்டன. கணத்துக்குக் கணம் சாவதைத் தான் அவள் விரும்பிக்கொண்டிருந்தாள்! ஏன்? செத் துக் கொண்டுதான் இருந்தாள். சிற்றாடை கட்டிக் கொண்டு கவலையற்ற சிட்டுக்குருவியாய் மண் வீடு கட்டி மகிழ்ந்தும், பதினைந்தாவது வயதிலேயே ‘அவரைக் கைப் பிடித்து இளமை வெள்ளத்தின் உணர்ச்சிச் சுழிப்பில் நிதானம் இழந்த தெப்பமாய்ச் சுழன்றும், பெற்றுப் பெருக்கிக் கட்டிக் கொடுத்துக் களித்துப் பேரப் பிள்ளைகளையும் பூட்டப்பிள்ளைகளையும் கண்டும் அவள் தன் நெடும் பயணத்தின் அந்தத்திற்கே வந்துவிட்டாள். அந்தப் பயணம் இன்னமும் தொலையாத யாத்திரை யாய் இருப்பதில் எவருக்குமே எந்தப் பயனும் இல்லை.

ஆனாலும் கிழவி இந்தப் பத்து நாட்களாய்ச் செத்துக் கொண்டு தான் இருந்தாள்!

கிழவியின் உதவிக்காக வருத்தம் பார்க்க வந்திருந்த இனத்தவர்கட்கெல்லாம் லுத்துப்போய் விட்டது. ‘நித்தஞ் சாவாருக்கு நித்தமும் அழ’ அவர்களால் முடியவில்லை. அவர்களெல்லாரும் செத்த மாட்டிலிருந்து உண்ணி கழன்றதைப்போல் ஒருவர் பின்னொருவராகப் போய்விட்டார்கள். “என்னத்திற்கும் சாவறுதி காலத்தில் ஓர் பெண்ணடி வேண்டும்” என்ற அனுதாப வார்த்தைகளைச் சொல்லிவிட அவர்களில் எவருமே தவறவில்லை.

கிழவியின் மூத்த மகன் பிலிப்பையாவின் மனைவி அவ்வூரிற்தான் இருந்தாள். அவளுக்கும் கிழவிக்கும் ஏழாம் பொருத்தம். எப்போதோ ஒரு நாள் நடந்த சண்டையில் இந்த நீலி ‘என் கட்டையில் கூட முழிக்கக் கூடாது’ என்று கிழவி ஆத்திரமாகச் சொல்லிவிட்டாள். இதைக் காரணமாக வைத்துக்கொண்டு அவளும் ‘அழுகைச் சத்தங்கேட்டாற் போவோமே’ என்று பேசாமலே இருந்து விட்டாள்.

கிழவியின் உறவினர்கள் எத்தனையோபேர் வெளியூர்களில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தார்கள். சென்ற வருடமும் ஓர் முறை கிழவி இப்படித் தான் செத்துக்கொண்டிருந்தபோது அருளப்பா கிடு கிடென்று எல்லாருக்கும் தந்தி அடித்து விட்டான். வந்தவர்கள் எல்லாரும் கிழவியின் சாவிற்காக ஒரு வாரம் காத்துக்கொண்டிருந்துவிட்டு, பிரயாணக் கஷ்டம், லீவு எடுத்தது. எல்லாவற்றிற்குமாக அருளப்பாவைத் திட்டித் தொலைத்துவிட்டு ஏமாற்றத்தோடு திரும்பிப் போனார்கள். எனவே இம்முறை இரண்டிலொன்று நிச்சயமாகத் தெரிந்தாலொழிய அவர்கட்கெல்லாம் தந்தியடிப்பதில்லை என்று அருளப்பா எண்ணிக்கொண்டான்.

பத்து நாட்கள் கடந்துவிட்டன. வைத்தியர் எதையும் திட்டமாகச் சொல்லவில்லை.

நாடியைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்த வைத்தியர் செல்லப்பாவிற்கு ஏகலைவ பக்தியோடு பூசித்துவரும் தனவந்திரியே வந்தாலும், செபமாலை பிழைக்க மாட்டாள் என்ற உண்மை இப்போது தான் விளங்கிற்று. அவர் அருளப்பாவின் முகத்தைப் பார்க்காமலே ‘உன் வேதக் கடமைகளைச் செய்து கொள்; நான் பிறகு வருகிறேன்’ என்று கூறிவிட்டுத் தன் குடையை எடுத்து விரித்துக்கொண்டு வெளியேறினார். அவருக்கென்ன? நேற்றுத்தான் கிழவியின் பேரிலே ‘சர்வசங்காரக் கொதியெண்ணெயை’ வடிப்பித்துத் தன் அலுமாரியில் வைத்துக் கொண்டார்! வெந்த வீட்டிற் பிடுங்கியது லாபந்தானே!

அருளப்பாவின் கலங்கிய கண்கள் கண்ணீரை வெளியே நெட்டித் தள்ளிவிட்டன! ஒருகணம் செயலற்றுப் போய் நின்றான்! மறுகணம் கோயிலை நோக்கி ஓட்டமாக ஓடினான்.

அருளப்பா கோயிலுக்குட் சென்ற சற்று நேரத்திற் கெல்லாம் சுவாமியார் தன் நீண்ட கால்களை அகலமாகத் தூக்கி வைத்துக்கொண்டு அவ்வூரையே இரண்டு கவடுகளிற் கடந்துவிட எண்ணியவர்போல வேக வேகமாக நடந்தார். அவர் பின்னால் அருளப்பா ஓடிக் கொண்டிருந்தான். கோயிற் கோபுரம் விழுத்தும் குறுகிய நிழலிலே குண்டடித்து விளையாடிக்கொண்டிருந்த

சிறுவர்கள், சுவாமியார் சற்பிரசாதம் கொண்டுபோகிறார் என்றறிந்து முழந்தாட்படியிட்டு நமஸ்கரித்து நின்றனர். ஓட்டை விழுந்த கீற்று வேலியினூடாகச் சுவாமியார் போவதைக் கண்ட பெண்கள் சிலர். அவர் யாருக்கோ அவஸ்தைக்குப் போகிறார் என்று தெரிந்து கொண்டு கைவேலைகளையெல்லாம் அப்படி அப்படியே போட்டுவிட்டுப் பின்னால் எழுந்து ஓடினார்கள்.

அமைதியாக இருந்த அந்த வீட்டிலே சிறிது கலவரம் உண்டாயிற்று! சுவாமியார் செபமாவையின் பொறி களிற் பரிசுத்த தைலத்தைப் பூசி அவளுக்காக மௌனமாகப் பிரார்த்தித்துக் கொண்டு போய்விட்டார். கிழவியின் தலை மாட்டிலே ஏற்றிவைக்கப்பட்டிருந்த இரண்டு மெழுகுதிரிகள் மட்டும் மௌனமாக அழுது வடித்து கொண்டிருந்தன. நலிந்து சுருங்கிக்கிடந்த கிழவியின் கைகளை மார்பின் மேற் கூப்பிவைத்து அவைகட்கிடையிற் சிலுவை ஒன்றைக் கொடுத்துப் பிடிக்கச் செய்து விட்டு, அறைக்குள்ளே அங்குமிங்குமாகச் சிதறிக் கிடந்த பொருட்களை எல்லாம் வெளியே தூக்கிவைத்து அறையை ஒழுங்காக்கிய பின்னர் ரணகளத்திலே குற்றுயிராகக் கிடக்கும் போர் வீரனைத் தங்கள் வயிற்றுட் சமாதியாக்கக் கருதிய பிணந்திண்ணிக் கழுகுகளைப் போல அவள் படுக்கையைச் சுற்றிக் காத்துக்கொண்டிருந்தனர் அங்கு வந்த பெண்கள். அப்பெண்களில் ஒருத்தி சோகக் குரலெடுத்துச் செபித்தாள்: “கருணாம்பர இயேசுவே! இன்று மரிக்கிறவர்கள் பேரில் இரக்க மாயிரும்.”

அந்தச் செபம் முடியுத்தறுவாயில் இன்னொருத்தி அந்த யாழ்ப்பாணத்துப் புலவரின் பாட்டை இசை யோடு பாடினாள் :

நல்ல மரணந் தர வேணும் – அருள்
வல்ல பரனே உந்தன் மனதன்பு கூர்ந்து

அருளப்பா சுவரிற் சாய்ந்தவாறே அறையப்பட்ட சிலை போல் நின்று கொண்டிருந்தான். மடை உடைத்த வெள்ளமாய் அவன் கண்ணீர் பெருகிற்று.

இருட்டிவிட்டது. செபமாலை செத்துக்கொண்டு தானிருந்தாள். அங்கு வந்தவர்கட்கும் அலுத்துப்போய் விட்டது. அவர்களெல்லாரும் ஒவ்வொருவராக வீட்டுக்குப் போகத் தொடங்கினார்கள்.

அருளப்பாவும் வெளியூர்களில் இருந்த தன் இனத்தவர்களுக்கெல்லாம் தந்தி அடித்துவிட்டு அயர்ந்து போய்த் திண்ணையிற் குத்திக்கொண்டிருந்தான். உள்ளே அவன் அம்மா செத்துக்கொண்டிருந்தாள்!

விடிந்தது! இன்னமும் கிழவி செத்துக்கொண்டுதான் இருந்தாள். காலை வண்டியிலே கிழவியின் மூத்த மகன் பிலிப்பையாவும் மற்றும் இனத்தவர்களும் வந்துவிட்டார்கள். பிணம் விழுகிற நாளிலே நல்ல காரியத்திற் குப் போகக்கூடாதே என்று எண்ணிய ஊரவர்கள் அன்றைக்கென்றிருந்த கோடைப் போக விதைப்பை ஒத்தி வைத்துவிட்டார்கள். ஒரு நாட் தண்ணீர் இல்லாவிட்டாலும் ‘தூங்கிக்கொண்டுசாகும்’ வன்பயிரான புகையிலையைப் பயிரிட்டவர்களும், இரண்டாஞ் சாமத் தோடு தண்ணீர் இறைப்பை முடித்துவிட்டுக் கிழவியின் மரணத்திற்காகக் காத்துக்கொண்டிருந்தார்கள். அந்தக் கிராமமே கிழவியின் மரணத்துக்காகக் காத்துக் கொண்டிருந்தது. ஆனாலும் செபமாலை செத்துக்கொண்டு தான் இருந்தாள்!

அன்று இருட்டிய போதும் செத்துக்கொண்டேயிருந்தபோது அந்த ஊரே கிழவியைத் திட்டியது. ‘செய்த கொடுவினைக்கெல்லாம் கிடந்து உத்தரிக்குது’ என்று. கிழவிக்கோ இவைகளைக் கேட்கக் கொடுத்துவைக்க வில்லை! அவள் பிரக்ஞையற்ற நிலையிற் செத்துக்கொண்டுதான் இருந்தாள்!

செபமாலையின் மூத்த மகன் பிலிப்பையாவும் மற்றும் நெருங்கிய உறவினர்களும் தான் வீட்டில் இருந்தார்கள். உத்தியோகம் பார்க்கும் மூத்த மகன் என்ற முறையிற் பிலிப்பையா தன் அன்னையின் பிரேத அடக்கத்திற்கான காரியங்களை இரகசியமாகச் செய்து கொண்டிருந்தான். அவன் மனைவி அதனால் வரும் இலாப நட்டத்தைக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கிழவியின் பிரேத அடக்கத்திற்கு யாரும் ஒரு சதமும் செலவு செய்யத் தேவையில்லை. கழுத்தோடு கழுத்தாக ஒட்டிக்கொண்டு கிடக்கும் அவர் கட்டின தாலிக்கொடியும், புடலங்காய்க்குக் கட்டின கல்லைப் போலக் காதை நீட்டி இழுத்துக் கொண்டு தொங்கும் பழங்காலத்து ‘மேலீடும்’ அவளைப் போல ஐந்தாறு பேரை அடக்கம் பண்ணப் போதுமானதாக இருந்தன. செலவைத் தாங்களே முன்னின்று நடத்தினால் அவையிரண்டையும் தட்டிக்கொண்டு விடலாம் என்று பிலிப்பையாவின் மனைவி எண்ணிக் கொண்டாள்! கிழவிக்குப் பிரக்ஞை வந்து விட்டால், குடியிருக்கும் காணியை இளைய மகன் அருளப்பாவிற்கே மரண சாசனமாகக் கொடுத்து விடுவாளோ என்ற பயமும் அவர்களை உலுப்பிக் கொண்டிருந்தது. இதனால் செபமாலை இப்படியே செத்துவிடமாட்டாளா என்று அவள் ஏங்கினாள். தூரத்து உறவினர்கட்கும் இது தான் ஆசையாக இருந்தது. ஏதாவது ஒரு உரித்தைக் கொண்டுவந்து குடியிருக்கும் காணியிற் கூறு கேட்கலாமல்லவா?

இவர்கள் எவரது மனக்குறையையும் அறியாதபடி கிழவி செத்துக்கொண்டுதானிருந்தாள்!

நடுச்சாமமும் ஆகிவிட்டது. அழுகைச் சத்தம் கேட்டால் போகவேண்டும் என்று அந்த ஊரே விழித்துக் கொண்டிருந்தது. அந்த விழிப்பில் ஊர்க்கோடி இலுப்பை மரத்திலிருந்துவந்த இணைக்கூகைகளின் உறுமலும், சொறி நாயின் ஊளையும் தெளிவாகக் கேட்டன.

வீட்டினுள்ளே கிழவி செபமாலை, ஓடிக் களைத்த பத்தயக் குதிரை போல விரைவாக- விரைவாக மூச்சு விட்டாள். அந்த மூச்சின் சப்தம் கண்ணை அழுத்திக் கனத்துக் கொண்டிருந்த, நள்ளிரவில் அவ்வவ்விடத்திலேயே நித்திரையாகிவிட்ட எல்லோரையும் எழுப்பி விட்டது. அவர்கள் எழுந்து பார்க்கும் போது கிழவி தன் சோர்ந்த கைகளால் படுக்கையைப் பாயைப் பொத்திப் பொத்திப் பிடித்துக் கொண்டு திணறினாள்! அவள் கண்கள் நிலைகுத்திவிட்டன. கால்களும் கைகளும், படுக்கையில் எறிந்த எறிந்த மாதிரியே கிடந்தன. வளவு மூலைக்குள் இருந்த தென்னையிலிருந்து பழுத்த ஓலை ஒன்று சலார் என்ற சப்தத்துடன் விழுந்தது. ‘அம்மா அம்மா’ என்ற இரு அபயக் குரல்கள் உடனே எழுந்தன!

அந்த நள்ளிரவில் ஊரே அங்கு கூடிவிட்டது. அழுகைக்கும் ஒப்பாரிக்கும் குறைச்சலில்லை தான். கிழவி சாகிறாள் இல்லையே என்று குறைப்பட்டுக் கொண்டிருத்தவர்கள் எல்லாம், இப்போது அவள் செத்து விட்டதற்காக ஒப்பாரி சொல்லி அழுதார்கள்!

விடிந்தது. வெளியூர்களில் உத்தியோகம் பார்க்கும் உறவினர்களின் சௌகரியத்திற்காக காலையிலேயே பிரேத அடக்கம் நடைபெற வேண்டியிருந்தது.

பிரேதத்தைப் பெட்டியில் வைக்குமுன், பிலிப்பையா, தன் தாயாரின் கழுத்திலிருந்த தாலிக் கொடியைக் கழற்றினார். மேலீட்டைக் கழற்றும் போது காதுச் சதையுங் கூட வந்துவிட்டது!

மாரடித்து அழுது கொண்டிருக்கையிலும், கிழவியின் மருமகள், தன் கணவனிடமிருந்து நகைகளை வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டாள்!

கிழவியின் இறுதியாத்திரை ஆரம்பமாயிற்று.

உபதேசியாரின் செபத்தோடு, ஊர்க்கதைகளும் ஊர்வலத்தில் ஒலித்தன.

புதைகுழியில் அடையாளத்திற்காக நாட்டவிருந்த மரச்சிலுவையைத் தோளிற் சுமந்தவாறு, அன்று கல்வாரி மலைக்குச் சிலுவை சுமந்து சென்ற புனிதனைப் போல அருளப்பாவும் ஊர்வலத்திற் போய்க்கொண்டிருந்தான்!

– சுதந்திரன்–14-6-53

– தோணி (சிறுகதைகள்), முதற் பதிப்பு: ஜூலை 1962, அரசு வெளியீடு, கொழும்பு.

– ஒரு காவியம் நிறைவு பெறுகின்றது (ஐம்பது சிறுகதைகள்), முதற் பதிப்பு ஒக்டோபர் 1996, மித்ர வெளியீடு, சென்னை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *