பிராயச்சித்தம்

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 11,232 
 

நல்ல ஆழ்ந்த தூக்கத்திலிருந்து அடிக்கடி வரும் அந்த விசித்திரமான கனவை கண்டு கண் விழித்து கட்டிலிலிருந்து எழுந்து உட்கார்ந்தான் சந்திரன். அந்த நள்ளிரவு பெங்களூர் குளிரிலும் உடம்பு பயங்கரமாக வேர்த்துவிட்டிருந்தது. கண்களில் கண்ணீர் வேறு வழிந்து கொண்டிருந்தது. கண்களைத் துடைத்துக் கொண்டே அரையிருட்டில் மணியைப் பார்க்க மணி ஒன்றரை எனக் காட்டியது. அவன் தங்கியிருந்த மேன்சன் நல்ல உறக்கத்திலிருந்தது. சே… என்ன ஒரு பயங்கரமான கனவு… அழகான குழந்தை ஒன்று புதை சேற்றில் முழுகிக் கொண்டே தன் பெட்டி வாயைத் திறந்து கையருகே மணலில் நின்று கொண்டிருந்த சந்திரனைப் பார்த்து, “”என்னைத் தூக்குங்க… என்னைத் தூக்குங்க” என்று கதற சந்திரன் ஒன்றும் செய்யாமல் நின்று கொண்டிருக்க குழந்தை முழுவதுமாக சேற்றில் அமுங்கிவிட்டு சற்று நேரத்தில் அருவமாக வெளி வந்து, “”ஏன் என்னை இப்படி காப்பாத்தாம முழுக விட்டுட்டே? எனக் கூறிக் கொண்டே மேலே போக சந்திரன் அதிர்ச்சியுடனும் கண்ணீருடனும் குழந்தை போன திக்கையே மேலே பார்த்துக் கொண்டிருக்கிறான். போர்வையை விலக்கி எழுந்து பாட்டிலிலிருந்த தண்ணீரைக் குடித்துவிட்டு படுத்த சந்திரனை பழைய நினைவுகள் ஆக்கிரமிக்க ஆரம்பித்தன.

பிராயச்சித்தம்சந்திரன் பிறந்து வளர்ந்து படித்தது எல்லாமே கன்னியாகுமரி பக்கத்திலிருக்கும் ஒரு சிறிய ஊரில்தான். அப்பா சின்ன வயசிலேயே காலமாகிவிட அவனையும் அவனது அக்காவையும் அம்மா கோமதிதான் அங்கிங்கு வேலை செய்து வளர்த்தார். ஒரு சிறிய பரம்பரை வீடும், கொஞ்சம் நிலமும் இருந்ததால் சாப்பாட்டிற்கு கஷ்டம் இல்லை. அக்காவை அதே ஊரில் ஒரு வாத்தியாருக்கு கட்டிக் கொடுத்தாகி விட்டது. சந்திரன் நன்றாகப் படித்து கன்னியாகுமரியிலேயே ஒரு பேங்கிலும் உத்தியோகம் கிடைத்துவிட ஊரிலிருந்து வேலைக்கு தினமும் போய் வந்து கொண்டிருந்தான். சிறு வயது முதல் தாயின் வளர்ப்புதான் என்றாகிவிட்டதால் தாயை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேச மாட்டான்.

கோமதி அம்மாவும் சந்திரனுக்கு எங்கெங்கோ பெண் தேடி கடைசியில் நிறைய சீர் வரிசைகளுடன் சென்னை வாசியான சுதாவைக் கல்யாணம் செய்து வைத்தார். சுதாவும் சூட்டிகையான பெண்தான். பி.எ., பி.எட்., படித்திருந்தும் வேலைக்குச் செல்லவில்லை. சந்திரனும் முதலிரவில் அவளைக் கேட்டுக் கொண்டதெல்லாம் அம்மாவின் மனம் கோணாமல் நடக்கும்படியும், இருவருக்கும் இடையே சண்டை வந்து அவன் நடுவில் நின்று யாருக்கு சப்போர்ட் பண்ணுவது என்ற தர்மசங்கடமான நிலையை மட்டும் தனக்கு ஏற்படுத்தி தராமல் இருக்கும்படியும் கேட்டுக் கொண்டான். அவளும் அப்படிதான் நடந்து கொண்டாள்.

ஏனெனில் வந்த முதல் வாரத்திலேயே சுதா குளித்த கையோடு ஒரு நைட்டி போட்டு வெளியே வர கோமதி அம்மாள் அவளிடம், “”இங்கே பாரும்மா நைட்டி எல்லாம் ராத்திரி படுக்கும்போது போட்டுக்கோ. பகலில் நல்ல டிரெஸ் போட்டுக்கோ” என்று கண்டிப்புடன் கூற, “”சரிம்மா” என்று அவள் ஒரு சுடிதார் மாற்றிக் கொண்டு வர அப்போதும் கோமதி அவளிடம், “”உன்கிட்டே நான் நல்ல டிரெஸ்ன்னு சொன்னது புடவையை” என்று அழுத்திக் கூற தொங்கிப் போன முகத்துடன் சுதா புடவை மாற்றிக் கொண்டு வந்ததை சந்திரன் கவனித்தும் ஒன்றும் சொல்லவில்லை. இரவு நம்மிடம் இது பற்றி பேசினால் அவளைச் சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்று சும்மா இருந்து விட்டான். ஆனால் சுதா இதை பற்றி அவனிடம் கூறவும் இல்லை. பகலில் புடவை தவிர்த்து வேறு உடை உடுத்துவதும் இல்லை.

அதைப் போல் சுதாவிற்கு சந்திரன் வீட்டு சிறிய கைப்பிடி சுவருடன் நிறைய தண்ணீருடன் இருந்த கிணற்றடி மிகவும் பிடித்து விட்டது. ஒரு குழந்தை போல துள்ளிக் கொண்டு அவள் ஒரு நாள் கிணற்றடியில் குளிக்க முற்பட்டவளை கோமதி அம்மாள் அனுமதிக்காமல் உள்ளே பாத்ரூமில்தான் குளிக்க வேண்டும் எனக் கட்டளையிட ஏமாற்றத்துடன் சுதா பாத்ரூமில் குளிக்கச் சென்றாள்.

பழைய நினைவுகளுடனேயே கண்ணயர்ந்து விட்ட சந்திரன் சட்டென்று கண் விழித்து பார்க்கும்போது காலை மணி எட்டு ஆகியிருந்தது. சட்டென்று வாரி சுருட்டிக் கொண்டு எழுந்திருந்து தங்கியிருந்த ரூமை விட்டு வெளியே வந்தான். ஏறக்குறைய மற்ற அறைகளில் தங்கியிருந்தவர்கள் அறையைப் பூட்டிக் கொண்டு கிளம்பிக் கொண்டிருந்தனர். சந்திரனும் சட்டென குளித்து விட்டு உடை மாற்றிக் கொண்டு அறையைப் பூட்டிக் கொண்டு ஆபிஸýக்குக் கிளம்பினான்.

“”சார் … அப்புறம் காபி எடுத்து வரவா?” என்ற பழக்கப்பட்ட சர்வரின் குரலுக்கு தலையாட்டிவிட்டு கை கழுவச் சென்றான். பில்லைக் கொடுத்துவிட்டு வண்டியை கிளப்பிக் கொண்டு குறித்த நேரத்திற்கு பேங்கை அடைந்து தன் சீட்டில் அமர்ந்து வேலையில் ஈடுபட தொடங்கினான். சந்திரன் பெங்களூரில் இருந்த வேறு ஒரு பிராஞ்சில் இருந்து இந்த பிராஞ்சில் ஜாயின் பண்ணி ஏழு மாதங்கள்தான் ஆகிறது.

மேனேஜர் அவன் சீட்டுக்கருகே வந்தார்.

“”வாங்க சார்” என்று ஒரு புன்சிரிப்பை வெளியிட்டவன் அப்போதுதான் அவர் பின்னால் நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தான். அவளுக்கு சுமார் 25 வயதிருக்கும். சிம்பிளாக இருந்தாலும் பளிச்சென்றிருந்தாள்.

“”பை த பை சந்திரன் இவங்க கிரிஜா. ஒரு லாங் லீவுக்குப் பிறகு இன்னிக்கு ஜாயின் பண்றாங்க. இவங்க ஹஸ்பெண்ட் நம்ம பேங்கிலேதான் கிளார்க்கா இருந்தார். ஆனா இவங்களுக்கு கல்யாணம் ஆன கொஞ்ச வருஷத்திலேயே இறந்துட்டார். அவரை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இவங்களுக்கு 2 வயசிலே ஒரு பெண் குழந்தை இருக்கு. இப்ப டெஸ்பாட்ச் செக்ஷன்லே போட்டிருக்கேன்” என ஒரே மூச்சுடன் கூற சந்திரன் கிரிஜாவிற்கு வணக்கம் தெரிவித்துக் கொண்டான். மானேஜர் கிரிஜாவுடன் நகர தன் வேலையில் மூழ்கினான்.

மாலையில் ரூமிற்கு திரும்பிய சந்திரனை எதிர் கொண்ட லாட்ஜ் மேனேஜர் அவனிடம் 2 கடிதங்களை நீட்டினார். ரூமிற்குச் சென்று அவற்றைப் பிரித்து பார்த்தான். அம்மாவிடமிருந்தும் மாமனாரிடமிருந்தும் வரும் வழக்கமான விசாரிப்பு கடிதங்கள்தான் அவை. அவற்றை மேலோட்டமாகப் படித்துவிட்டு டிராயரில் தூக்கி போட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்ததும் சொல்லி வைத்தாற்போல் பழைய நினைவுகள் அவனை ஆட்கொண்டன.

கல்யாணம் முடிந்து சுதா ஊருக்கு வந்த இரண்டு நாட்கள் கழித்துதான் சென்னையிலிருந்து கட்டில் மெத்தை பீரோ முதலான சீர் சாமான்கள் லாரியில் வந்தன. முடிந்தவரை எல்லா சாமான்களையும் இருக்கும் இடத்தில் அடுக்கியும் கட்டில் போட இடம் இல்லை. அதற்குச் சந்திரன், “”தற்காலிகமாக கட்டிலையும் மெத்தையையும் மட்டும் இரண்டு தெரு தள்ளியிருக்கும் அக்கா வீட்டில் போட்டுக் கொள்வோம். அப்புறம் இடம் ஏற்பாடு பண்ணிவிட்டு திரும்ப எடுத்துக் கொள்வோம் என்று கூற சுதாவும் அதற்கு ஒன்றும் சொல்லாமல் தலையசைக்க கட்டிலும் மெத்தையும் அக்கா வீட்டிற்கு சென்று விட்டன. அப்புறம் அவற்றை எடுக்கவே கை வரவில்லை. நாளா வட்டத்தில் சந்திரன் மீதுள்ள முழு உரிமையில் அக்கா வீட்டிலேயே அவற்றை உபயோகிக்க ஆரம்பித்தும் சுதாவால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

சுதா இயல்பிலேயே மிகவும் “அட்ஜஸ்டிவ் டைப்’ என்பதால் வீட்டில் நடக்கும் சிறுசிறு பூசல்களை எல்லாம் சந்திரனிடம் கூறுவதில்லை. அம்மாதான் அவ்வப்பொழுது சந்திரனிடம் சுதாவை பற்றி ஏதாவது கூறிக் கொண்டேயிருப்பாள். சுந்திரன் அதை பொருட்படுத்துவது இல்லை. வாழ்க்கை சீராகத்தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் இரண்டு வருடமாகியும் குழந்தை இல்லாததால் சாடைமாடையாக கோமதி அம்மாள் முதலில் அக்கம்பக்கத்திலும் அப்புறம் சுதாவிடம் நேரடியாகவும் புலம்பத் தொடங்கியதும்தான் குடும்பத்தில் குழப்பம் நிலவ ஆரம்பித்தது.

மாமியாரின் புலம்பலைப் பொறுக்காத சுதா சந்திரனிடம், “”நாம் ஒரு நல்ல டாக்டரிடம் செக்-அப் செய்து கொள்வோம்” என கூற முதலில் அதற்கு மறுத்த சந்திரன், சுதாவின் தொடர்ந்த கெஞ்சல் தாங்காமல் அம்மாவிற்கு தெரியாமல் செக்-அப் செய்து கொள்வோம் என சம்மதித்தான். உடனே மாதாந்திர சாமான் வாங்க செல்வதாகப் பொய் சொல்லிவிட்டு இருவரும் கன்னியாகுமரியில் ஒரு டாக்டரிடம் செக்-அப் சென்றனர். இருவரையும் நன்கு பரிசோதித்து எல்லா டெஸ்டுகளையும் எடுத்த டாக்டர் ரிப்போர்டை படித்து விட்டு சுதாவிடம் ஒரு குறையும் இல்லை என்று சொன்னார். இதனை கேட்டு இடிந்து உட்கார்ந்த சந்திரனை தேற்ற சுதா மிகவும் பிரயத்தனப்பட வேண்டியதாயிற்று. சந்திரன் மட்டும் இவளிடம், “”அம்மாவிடம் இது பற்றி எதுவும் கூற வேண்டாம் நேரம் வரும்போது நானே கூறிக் கொள்கிறேன்” என கூற சுதாவும் அரை மனதுடன் தலையாட்டினாள்.

இடையில் சுதாவின் தங்கையின் இஞ்சினியரிங் படிப்புக்கு பணம் கிடைக்காமல் சுதாவின் குடும்பம் கஷ்டப்படுவதை கேள்விப்பட்ட சந்திரன் தானே முன் வந்து பண உதவி செய்தான். இதனை அம்மாவிடம் சொன்னால் அம்மா ஏதாவது சொல்வாள் என நினைத்துக் கொண்டு சுதா எவ்வளவு வற்புறுத்தியும் கோமதி அம்மாளிடம் இதனைக் கூறவில்லை.

அன்று அவர்களது நான்காவது கல்யாண நாள். சுதாவின் அப்பாவும் வந்திருந்தார். எல்லோரும் கோயிலுக்கு போய்விட்டு வந்தனர். கோயிலில் கூட இவர்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என்பதே அனைவரின் முக்கியப் பிரார்த்தனையாக இருந்தது. கோயிலிலிருந்து வரும் வழியில் சுதாவின் தங்கை படிப்பிற்கு சந்திரன் பண உதவி செய்ததை சுதாவின் அப்பா பெருமையாக கோமதி அம்மாளிடம் உடைத்ததோடல்லாமல் இந்த காலத்தில் இப்படி ஒரு மாப்பிள்ளை கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என நெகிழ்ந்து விட்டார். கோமதி அம்மாளும் தனக்கு தெரியாமல் சந்திரன் இதை செய்துள்ளானே என்ற கோபத்தை வெளிக்காட்டாமல், “”தேவைப்படும்போது உதவுவதற்கு தானே சொந்தம்” என்று மழுப்பிவிட்டு முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டார்.

மறுநாள் விடிகாலையிலேயே சுதாவின் அப்பா ஊருக்குக் கிளம்பிவிட சுதாவை கோமதி அம்மாள் பிலுபிலு என பிடித்துக் கொண்டார். சந்திரன் வீட்டிலிருந்தும் அவனை ஒன்றும் சொல்லாமல் சந்திரனுக்கு விவரமே பத்தாது சுதாதான் அவனைக் கெடுத்து விட்டாள்; ஊருக்கெல்லாம் வாரி கொடுக்கறத்துக்கா என் பிள்ளை உழைக்கிறான் என சுதாவை சரமாரியாக திட்டத் தொடங்கினார். சற்றே பொறுத்த சுதாவும் ஒரு கட்டத்தில் பொறுக்க மாட்டாமல், “”அம்மா நான் அவரிடம் உங்களிடம் சொல்லிவிடுங்கள் என்று தான் கூறினேன். அவர்தான் கேட்கவில்லை. அதுவும் அந்த பணத்தை கடனாகத்தான் கொடுத்துள்ளார்” என்று கூற அதை காதில் வாங்காத கோமதி அம்மாள், உச்ச கட்ட கோபத்தில் “”ராஜா மாதிரி இருக்கற என் பிள்ளைக்கு ஒரு வாரிசு பெத்து தர வக்கில்லை. ஆனா அடங்கி நடக்கற மாதிரி நாடகம் போட மட்டும் கத்துண்டிருக்கே” என உச்ச தாயில் கத்த சுதா ஏதாவது சொல்வான் என்று சந்திரனை பார்க்க அவன் செய்வதறியாது நின்று கொண்டிருந்தான்.

மேலும் தொடர்ந்த கோமதி அம்மாள், “”அந்த கட்டிலை அங்கிருந்து எடுத்து வராத போதே தெரியும். உனக்கு அது என்னிக்கும் உதவப் போறதில்லை” என்று என ஆத்திரத்தில் ஏதேதோ உளறத் தொடங்க இதனை பொறுக்காத சுதா, “”அம்மா விஷயம் தெரியாம ஏதேதோ பேசி மனசை புண்படுத்தாதீங்க” என இடைமறித்தாள். உடனே கோமதி அம்மாள், “”என்ன என்னையே எதிர்த்து பேச ஆரம்பிச்சுட்டியா?” என கத்த சந்திரன் உடனே இடை மறித்து, “”எங்கே தன் குறையை அம்மாவிடம் சுதா சொல்லி விடுவாளோ” என்ற பயத்தில், “”சுதா கொஞ்சம் சும்மா இருக்கியா?” என்று சத்தம் போட்டான். “”இல்லைங்க” என சுதா திரும்பவும் ஆரம்பிக்க அம்மாவை திருப்தி படுத்தும் நோக்கிலும் எப்படியும் சுதாவை சமாதானப்படுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையிலும், “”இங்கே பாரு சுதா, அம்மா சொல்றபடிதான் நீ நடக்கணும். அம்மாவை எதிர்த்து பேசறதாயிருந்தா நீ இங்கே இருக்க வேண்டாம்” என தன்னால் ஒன்றும் செய்ய முடியாத இயலாமையில் கத்தி விட்டான். இதனைச் சற்றும் எதிர்பாராத சுதாஅதிர்ச்சியுடன், “”சரிங்க நான் போறேன். நீங்க நிம்மதியாயிருங்க” என கூறிவிட்டு அழுகையுடனும் ஆத்திரத்துடனும் தோட்டத்தை நோக்கி வேகமாக நகர்ந்தாள். ஓட்டமும் நடையுமாக தோட்டத்திற்கு வந்தவளின் காலை வழியில் தோய்ப்பதற்காக போட்டிருந்த சிறிய கல் தடுக்கிவிட அப்படியே நிலை குலைந்து அரை கைப்பிடி சுவரை தாண்டி பக்கத்தில் இருந்த கிணற்றில் தலை குப்புற விழுந்தாள். சத்தத்தை கேட்டு சந்திரனும் கோமதி அம்மாளும் தோட்டத்திற்கு ஓடி கிணற்றை எட்டி பார்ப்பதற்குள் சுதாவின் உடல் தண்ணீரில் மூழ்கி மணலில் சிக்கிக் கொண்டது. இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வர சட்டென சுதாரித்துக் கொண்ட கோமதி அம்மாள், சுதா கால் இடறி கிணற்றில் விழுந்து விட்டாள் என அலற நீச்சல் தெரிந்தவர்கள் கிணற்றில் உடனே குதித்தும் சுதாவின் உயிரற்ற உடலைதான் மீட்க முடிந்தது.

சந்திரன்தான் சிலையாக உறைந்து விட்டான். சுதாவின் மறைவிற்கு பின்னர் ஓர் இயந்திரம் மாதிரி தன் காரியங்களை செய்யத் தொடங்கினான். யாரோடும் பேசுவதில்லை. அம்மாவிடம் கூட அதிகம் பேசுவதில்லை. நாளடைவில் அந்த ஊரிலேயே இருக்கப் பிடிக்காமல் பெங்களூருக்கு தானே மாறுதல் கேட்டு வாங்கி வந்து விட்டான். அம்மாவின் கடிதம் அடிக்கடி வரும். ஒரு வரியில் தான் நன்றாக இருப்பதாக பதில் போடுவான். மாமனார் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை இவனை வந்து பார்த்து விட்டு இவனது நலம் விசாரித்து விட்டு செல்வார். சட்டென்று பழைய நினைவுகளிலிருந்து மீண்ட சந்திரன் தன்னை அறியாமல் கண்களிலிருந்து வழிந்து கொண்டிருந்த கண்ணீரை துடைத்துக் கொண்டு முகம் கழுவிக் கொண்டு ஒரு டம்ளர் பால் மட்டும் குடித்துவிட்டு படுத்து விட்டான். அன்றும் அந்த கனவு அவனைத் தூங்கவிடாமல் துரத்தியது.

மறுநாள் பேங்கில் நுழைந்தபோதே இருவர் மூவராக ஒன்று கூடி அங்கங்கே தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். சந்திரன் என்ன விஷயம் என்று பக்கத்து சீட் சர்மாவை விசாரிக்க அவன் தமிழும் கன்னடமும் கலந்து கூறிய விஷயம் இதுதான். நேற்று மானேஜர் அறிமுகப்படுத்திய கிரிஜாவின் கணவன் ஒரு பெண் பித்தன். பார்க்க மிகவும் அழகாக இருப்பான். யார் சொல்லியும் கேளாமல் பெண்களை தேடி பல இடங்களுக்கும் செல்வான். கிரிஜாவிற்கும் அப்பா அம்மா கிடையாது. அவன் அழகில் கண்டவுடன் காதல் வசப்பட்ட கிரிஜா அவன் பேச்சிலும் மயங்கி அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். உடனே ஒரு குழந்தையும் பிறந்தது. கல்யாணத்திற்கு பிறகு இரண்டரை வருடங்கள் கிரிஜாவின் கணவன் ஒழுங்காகத்தான் இருந்தான். ஒரு நாள் அவனுக்கு கடுமையான காய்ச்சல் வந்து டெஸ்ட் செய்யும்போது தான் அவனுக்கு எய்ட்ஸ் இருப்பது தெரிய வந்தது. அதற்கு மேல் ஆறு மாதம்தான் அவன் உயிரோடிருந்தான். அதற்கு மேல் கிரிஜா பட்ட துன்பத்திற்கும் உதாசீனத்திற்கும் அளவே இல்லை. குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்குடன் பத்து மாத லீவிற்கு பிறகு இப்போது தான் டியூட்டியில் ஜாயின் பண்ணியிருக்கிறாள். அவளுக்கும் எய்ட்ஸ் இருக்குமோ என்ற பயத்தில் அனைவரும் மேனேஜரிடம் சென்று அவளை வேறு பிராஞ்சிற்கு உடனே மாற்ற சொல்லியும் அல்லது வேலைக்கு வராமல் வீட்டிற்கே சம்பளத்தை அனுப்பும்படியும் கேட்டுக் கொண்டிருந்தனர்.

கிரிஜாவும் வேலையில் சேர்ந்து ஆறு மாதம் ஓடிவிட்டது. ஆனால் அவள் வேலையில் சேர்ந்த நாளிலிருந்தே முன்பு மணிக்கணக்காக அவளிடம் ஓடி ஓடி வந்து பேசுபவர்கள் இப்போது யாரும் அவளிடம் பேசுவது இல்லை. டெஸ்பாட்ச் தபால்களைகூட தூர நின்றே அவள் டேபிளில் தூக்கி போட்டு விட்டு போவார்கள். அவள் தனியேதான் சாப்பிடுவாள். தன் குழந்தையை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக கிரிஜாவும் இந்த உதாசீனங்களை எல்லாம் பொருட்படுத்துவதில்லை. சந்திரன் யாரிடமும் அதிகம் பேசுவதில்லை. கிரிஜாவை எதிரே பார்க்கும்போது ஒரு புன்னகை மட்டும் புரிவான்.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம். சந்திரன் நான்கு தெரு தள்ளி ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டுத் திரும்பும்போது, “”என்ன சார் இந்தப் பக்கம்” என ஒரு வீட்டிலிருந்து குரல் வர திரும்பி பார்த்தால் கிரிஜா தன் குழந்தையுடன் நின்றிருந்தாள். “”இல்லைங்க. இங்க பக்கத்திலே ஓட்டல்லே சாப்பிட வந்தேன். இது தான் உங்க வீடா?”

என அவளிடம் கேட்டான். கிரிஜா உடனே “”ஆமாம் சார். உங்களுக்கு விருப்பம் இருந்தா உள்ளே வந்துட்டு போங்க” என நேரடியாக கேட்க, சந்திரனும் தர்மசங்கடத்துடன் அவள் வீட்டில் நுழைந்தான்.

அவனைச் சந்தோஷத்துடன் வரவேற்ற கிரிஜா, உள்ளே சென்று ஒரு ஸ்பூன் சர்க்கரையை அவனிடம் நீட்டினாள். சந்திரன் ஏன் என்று கேட்க, “”என் வீட்டுக்காரர் போன பிறகு இந்த வீட்டில் என்னையும் என் குழந்தையையும் தவிர முதலில் நுழைந்தவர் நீங்கள்தான். அந்த சந்தோஷம்தான் சர்க்கரை” என கூறினாள். “”ஆபீசில் யாரும் உங்களிடம் பேசுவதில்லையே. அதை எப்படி தாங்கிக்கறீங்க?” என சந்திரன் கேட்க, “”ஆபீசில் மட்டும் இல்லை. எங்கேயும் யாரும் என்னிடம் பேசுவது இல்லை. அதெல்லாம் எனக்குப் பழகி விட்டது. இந்தக் குழந்தை மட்டும் இல்லாதிருந்தால் நானும் எப்பவோ என் உயிரை முடித்துக் கொண்டிருப்பேன். ஊரை சொல்லி குத்தமில்லை. எனக்கும் என் குழந்தைக்கும் கூட எய்ட்ஸ் இருக்கும் என்று எல்லோருக்கும் பயம். ஆனால் உண்மையை சொல்லப் போனால் எங்கள் இருவருக்கும் எய்ட்ஸ் இருக்கிறதா இல்லையா என்று இதுவரை எங்களுக்கு தெரியாது. எல்லோரும் டெஸ்ட் எடுக்க சொல்லி வற்புறுத்தியும் நான் கட்டாயமாக மறுத்துவிட்டேன். எய்ட்ஸ் இருந்தால் இருந்து விட்டு போகட்டும். விதி வரும்போது நாங்கள் இறந்து விட்டுப் போகிறோம். அதற்குள் ஏன் பயத்தில் உயிர் போவானேன். எங்கள் உலகமே தனி. நாங்கள் தான் அங்கே எல்லாம். நான் வேலைக்கு போகும் சமயத்தில் எங்களைப் பற்றி தெரியாத தூரமான ஒரு இடத்தில் உள்ள குழந்தை காப்பகத்தில் குழந்தையை விட்டுவிட்டு வருவேன். மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் நாங்கள் மிகவும் சந்தோஷமாக இருக்கிறோம்” எனப் பொரிந்து தள்ளினாள்.

கிரிஜா, சந்திரனிடம் அவன் குடும்பம் பற்றி விசாரிக்க, “”சந்திரன் அதை பற்றி மட்டும் கேட்காதீர்கள். அது ஒரு பெரிய கதை” என நைசாக அவளிடமிருந்து விடை பெற்று ரூமிற்கு வந்துவிட்டான். லாட்ஜ் வாசலில் நுழையும்போதே அவன் அக்காவிடமிருந்து போன். அம்மாவிற்கு உடம்பு மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவனை உடனே பார்க்க வேண்டும் என விரும்புவதாகவும் கூறினாள். சந்திரன் உடனே மேனேஜருக்கு போன் செய்து ஒரு வாரம் லீவு சொல்லிவிட்டு ஊருக்கு கிளம்பி விட்டான். பஸ் பிடித்து ஊருக்கு வந்து வீட்டில் நுழையும்போதே சொந்த பந்தம் புடைசூழ கட்டிலில் படுத்திருந்த கோமதி அம்மாள் இவனிடம் ஏதோ சொல்ல வாயெடுக்கும்போதே ஒரு வலிப்பு வந்து உடனடியாகத் தன் உயிரை விட்டாள். அதிர்ச்சியில் அழுது கொண்டிருந்த சந்திரன் தன்னை தேற்றிக் கொண்டு அடக்கத்திற்கு ஏற்பாடு செய்தான். காரியம் முடிந்து ஊருக்கு கிளம்பிய உறவினர்கள் அனைவரும் இவனை மறு கல்யாணம் செய்ய வற்புறுத்திவிட்டுச் சென்றனர். இரண்டு உறவினர்கள் அங்கேயே பெண் கொடுக்கவும் முற்பட்டு சந்திரனின் அக்காவை நாடி பேசிவிட்டும் சென்றனர். “”நான் சற்று யோசித்து பதில் சொல்கிறேன்” என அவர்களை அனுப்பிய சந்திரன் ஒரு மாதம் கழித்து மீண்டும் வேலையில் சேர்ந்தான்.

பேங்கில் நழையும்போதே கிரிஜாவின் இருக்கை காலியாக இருந்ததைக் கவனித்த சந்திரன் அதற்குள் அனைவரும் அவனை துக்கம் விசாரிக்க அவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டே தன் வேலையில் ஈடுபட்டான். மாலையில் கிரிஜா பற்றி மேனேஜரிடம் விசாரிக்க “”ஏனோ தெரியவில்லை. பத்து நாட்களுக்கு லீவு லெட்டர்தான் வந்துள்ளது” என கூறி பேச்சை முடித்துக் கொண்டார்.

இரண்டு நாட்கள் கழித்து கிரிஜாவை அவள் தெருவில் சந்திக்க நேர்ந்தபோதுதான் விஷயம் புரிந்தது. அவள் குழந்தையை விடும் காப்பகத்தில் கிரிஜா பற்றிய விவரங்களை யாரோ சொல்லிவிட இனிமேல் குழந்தையை அங்கே விடக் கூடாது என அனுப்பி விட்டனர். அதே சமயம் அவளுக்கு இதுவரை வீடு கொடுத்து ஆதரவு அளித்து வந்த வீட்டு ஓனர் திடீரென்று இறந்துவிட அவருடைய பையன்கள் இவளை உடனடியாக வீட்டை காலி பண்ணச் சொல்லி ஒரு மாதம் டயம் கொடுத்திருந்தனர். வேறு ஏரியாவில் வீடு பார்க்கவும் குழந்தைக்கு வேற காப்பகம் தேடியும் கிரிஜா பத்து நாட்கள் லீவு கேட்டிருந்தாள். இவனை பார்த்த கிரிஜா, “”என்ன சார் இப்ப நம்ம பேங்கிலே எல்லாம் நிம்மதியா இருக்காங்களா? ” என விரக்தியாக கேட்க அதற்கு ஒரு மழுப்பலான புன்சிரிப்பை பதிலாக கூறிவிட்டு சந்திரன் ரூமிற்குத் திரும்பினான்.

இது நடந்து ஒரு வாரம் கழித்து எதேச்சையாக கிரிஜா வீட்டு பக்கம் வண்டியில் வந்தவன் அவள் வீட்டு வாசலில் காணப்பட்ட கூட்டத்தை பார்த்து வண்டியை ஓரம் கட்டினான். கூட்டத்தை விலக்கி எட்டிப் பார்க்க கிரிஜா வீட்டு பாத்திர பண்டங்கள் எல்லாம் தெருவில் இறைந்து கிடக்க நடுவே கிரிஜா மயங்கி விழுந்து கிடப்பதைப் பார்த்து அதிர்ந்தான். கிரிஜாவின் உடம்பில் லேசான காயங்கள் காணப்பட்டன. குழந்தை அவள் பக்கத்தில் அழுது கொண்டு உட்கார்ந்திருந்தது. எல்லோரும் வேடிக்கை பார்த்து கொண்டு நின்று கொண்டிருந்தனரே தவிர யாரும் கிரிஜாவையும் குழந்தையையும் தொடக்கூட இல்லை.

சற்றே கோபப்பட்ட சந்திரன் ஒன்றும் பேசாமல் ஓர் ஆட்டோவை நிறுத்தி கும்பலை விலக்கிக் கொண்டு தானே கிரிஜாவை தூக்கிக் கொண்டு வந்து சற்று தள்ளி உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சேர்த்தான். சற்று நேரத்தில் கண் விழித்த கிரிஜா தான் ஆஸ்பத்திரியில் இருப்பதை உணர்ந்து அருகில் நாற்காலியில் தன் குழந்தையுடன் உட்கார்ந்திருந்த சந்திரனைப் பார்த்து கண்ணீருடன் கை கூப்பினாள். சந்திரன் என்ன ஆயிற்று என கேட்க மெதுவான குரலில் நடந்ததை விவரித்தாள்.

காலையில் இவள் வீட்டிற்கு வந்த வீட்டு ஓனரின் பையன்கள் எப்போது வீட்டை காலி செய்ய போகிறாய்? உனக்கு கொடுத்த கெடு முடிந்து விட்டதே என கேட்க நானும் வேறு இடம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் ஒரு பத்து நாள் டயம் கொடுத்தால் கட்டாயம் காலி பண்ணி விடுவேன் என கெஞ்சியிருக்கிறாள். இவள் முடிக்கவும் உடனே கோபப்பட்ட அவர்கள் இவளைக் கண்டபடி திட்டியதோடல்லாமல் கிரிஜாவை தாறுமாறாக அடித்து ரோட்டில் தள்ளிவிட்டு வீட்டிலிருந்த பாத்திரம் பண்டங்களை ரோட்டில் வீசி எறிந்துவிட்டு வீட்டை பூட்டிவிட்டுச் சென்று விட்டனர். இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அக்கம் பக்கத்தவரும் இவள் இங்கிருந்து போனால் போதுமென்று அவர்களைத் தடுக்கவும் இல்லை. கிரிஜாவிற்கு உதவி செய்ய முன்வரவும் இல்லை.

நடந்ததை இவனிடம் கூறிய கிரிஜா சந்திரனை பார்த்து கைகூப்பி, “”எங்கே போனாலும் இந்த உலகம் எங்களை போன்றவர்களை வாழ விடாது. வளர வளர என் பெண்ணிற்கு மிகவும் சங்கடம். இப்போ நீங்க எங்களை காப்பாத்திட்டீங்க. நான் ஒரு முடிவுக்கு வந்துட்டேன். வெளியே போன மறு நிமிடமே இந்த குழந்தைக்கு ஏதாவது கொடுத்துவிட்டு நானும் உயிரை போக்கிக்க போறேன். இது நிச்சயம்” என்று கண்ணீருடன் அதே சமயம் மிகவும் உறுதியுடன் கூறினாள்.

சற்றே யோசித்த சந்திரன், “”ஒரு முடிவுக்கு வந்தவனாக இங்கே பார் கிரிஜா உனக்கு நம்பிக்கையிருந்தால் நீயும் உன் குழந்தையும் என்னுடன் வாருங்கள். உங்களை நான் காப்பாத்தறேன். இந்த ஊரே வேண்டாம். நான் டெல்லிக்கு பக்கத்தில் எங்காவது மாற்றல் வாங்கிக் கொள்கிறேன். நீ வேலைக்குப் போக வேண்டாம். குழந்தையை நன்றாக பார்த்துக் கொண்டு வீட்டிலேயே இரு. நான் இதை ஒரு பரிதாபத்திற்காக செய்யறேன்னு மட்டும் தயவு செய்து நினைக்காதே. ஒரு பிராயச்சித்தத்திற்காக தான் நான் இதை செய்கிறேன். ஏன் எதற்கு என்ற கேள்வியை மட்டும் என் உயிர் போகிறவரை கேட்காதே. அது போதும் எனக்கு என்று கூறிக் கொண்டே கிரிஜாவின் கைகள் இரண்டையும் பிடித்துக் கொண்டான். ஒரு நொடி விக்கித்துப்போன கிரிஜா தன்னை சுதாரித்துக் கொண்டு சந்தோஷத்துடனும் சம்மதத்துடனும் சந்திரன் கையில் முகம் பொத்திக் அழத் தொடங்கினாள்.

இப்போதெல்லாம் சந்திரனுக்கு இரவெல்லாம் நல்ல தூக்கம். ஏனெனில் கனவுகள் அவனை துரத்துவதில்லை. உறவுகளும் அவனை நாடி வருவதில்லை. அதைப்பற்றி சந்திரன் கவலைப்படுவதும் இல்லை.

– செப்டம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *