கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: February 4, 2022
பார்வையிட்டோர்: 6,064 
 

அவள் கண்மூடி மல்லாந்திருந்தாள். ஜெயராமன் அவள் சேலை விலக்கித் தொப்புளில் முத்தமிட்டான். உடலெங்கும் சிலிரிப்பு பரவியது. மேடான வயிற்றைத் தூக்கியபடி மெல்ல எழுந்தாள். அவன் தலையை மடியில் சாய்த்துக் கோதி விட்டாள்.

‘ஹூம்…இன்னும் ரெண்டு நாள்…அப்புறம் நீங்க கொஞ்சறதுக்கு நம்ப பையன் வந்துருவான்.’

‘ஏன் புள்ளை பொறந்தா வேணான்னுடுவியா?’

‘இல்ல. எனக்குப் பையன்தான் வேணும்.’

‘பொறக்காட்டிப் போனா பெத்துக்கறது, இன்னொரு தடவை.’

‘யம்மாடி ! நம்மால ஆகாது சாமி!’ கண்களை அகல விரித்து ஆயாசம் காட்டினாள். ‘ஒரு தடவைக்கே போறும் போறும்னு ஆயிருச்சு.’

‘இன்னும் பெக்கவேல்ல அதுக்குள்ள என்னடி அலுத்துக்கற?’ அவள் மடியிலிருந்து விலகி எழுந்து அவள் முகம் பார்த்தான். கண்களில் கேலி தெரிந்தது.

‘சுமந்து பார்த்தாத் தெரியுங்க எங்கஷ்டம்.’

ஜெயராமன் ஒன்றும் பேசாது திரும்பி ஜன்னல் வழியே பார்த்தான். போக்குவரத்து வெகுவாக நின்றிருந்தது. கனமாய் இருட்டுப் போர்வை பரவியிருந்தது. நிலவு பனித்துண்டமாய் கரைந்து கொண்டிருந்தது. இரைத்த வெள்ளை ஜல்லிக் கற்கள் மாதிரி நட்சத்திரங்கள் சிதறித் தெரிந்தன. கிர்ரிக், கிர்ரிக் என்று இடைவிடாது தவளைச் சத்தம்.

குறுகலான இரண்டு அறைகள் கொண்ட அந்த வீட்டில் சமையலறை தவிர அவர்களிருந்த அறைதான் அவர்களுக்கு பெட்ரூம், சாமி ரூம் எல்லாம். கட்டிலுக்குப் பக்கவாட்டில் முகம் பார்க்கும் கண்ணாடிக்கு மேல் ஒரு பெரிய ப்ளோஅப் ஒட்டியிருந்தது. பூப்பூவாய்ச் சிரிக்கும் குழந்தைகள் வரிசையாய் ஐரோப்பியன், நீக்ரோ என்ற நிற வித்தியாசமின்றி அமர்ந்திருக்கும் ப்ளோஅப். ஜெயராமன் அதை ஏக்கத்துடன் பார்த்தான். இது மாதிரித் தனக்கும் குழந்தைகள் வேண்டும். என் மாதிரி கறுப்பாய், காயத்ரி மாதிரி சிவப்பாய், ரெண்டு பேர் நிறமும் கலந்து மாநிறமாய்ப் பிள்ளைகள் வேண்டும். வீடு குழந்தைகளால் ரெண்டு பட வேண்டும்.

மணி பதினொன்றடித்தது. ஜெயராமன் அடுக்களைக்குப் போய் ஹார்லிக்ஸ் கலந்து எடுத்து வந்தான். காயத்ரி மெலிதாய்க் கண் மூடியிருந்தவள் இவன் வந்ததும் விழித்துக் கொண்டாள். ஹார்லிக்ஸ் வாங்கியதும் அவளருகில் அமர்ந்தான்.

‘தூக்கம் வரலயா?’

‘நீங்க தூங்கல? நான்தான் சுமக்கறவ, பொழுதினிக்கும் அதையே நினைச்சுக்கிட்டிருக்கேன், நீங்க…ஹக்…’ திடும்மென எதுவோ வயிற்றுக்குள் சிக்கிக் கொண்ட மாதிரி வயிற்றைப் பிடித்துக் கொண்டாள். வயிற்றை அழுத்திச் சுருண்டாள். ஹார்லிக்ஸ் சிதறியது.

‘எ…என்ன ஆச்சு காயத்ரி?’ என்றவன் அவள் வலியில் துடிப்பதைப் பார்த்தவுடன், இது அந்த வலியாய் இருக்குமோ என்ற உணார்வு உறுத்த, கண்களில் சந்தோஷம் மின்னிற்று. ‘இரு. ரிக்க்ஷா கூட்டிட்டு வந்துடறேன்.’

பத்து நிமிடங்களில் ரிக்ஷா பிடித்து அவளை ஏற்றினார்கள். ரிக்க்ஷா ஓட்டி அவசரம் தெரிந்து வேகமாய் வலித்தான். அவள் வயிற்றைப் பிடித்துக் கொண்டு அலறியது ஜெயராமனுக்குத் திகிலை உண்டு பண்ணியது. ‘ இன்னும் இரண்டு நாள் அவகாசம் இருக்கிறதாய் டாக்டர் சொன்னாரே! ஒருவேளை இது அந்த வலியாய் இருக்காதோ என்று சந்தேகித்தான். ரிக்க்ஷா ஓட்டியை விரைவாகப் போகச் சொன்னான்.

சாலையில் மெர்க்குரி வெளிச்சம் மஞ்சள் பூசியிருந்தது. ரிக்க்ஷா முனகும் ஓசை தவிர வேறெதுவும் ஓசை இல்லை. ரிக்-ஷா பார் ஒன்றைக் கடந்த போது பாரிலிருந்தவர்கள் ரிக்க்ஷாவையே உற்றுப் பார்த்தார்கள்.

‘ ஹாவ்..’ என்றலறினாள் காயத்ரி. அலறல் கேட்டு ரிக்-ஷாக்காரன் பிரேக்கிட்டு நிறுத்தினான். ‘தாங்காது சார்! இங்கனயே பிரசவம் ஆயிரும் போலத் தோணுது.’

அவளை இறக்கி, ‘பார்’ வாசலில் பெஞ்சு போட்டுப் படுக்க வைத்தார்கள். ஆண்கள் மரியாதையோடு நழுவினார்கள். அக்கம் பக்கத்து வீடுகளில் சேதி சொல்லப்பட்டு சில பெண்கள் ஓடி வந்தார்கள்.
ஒரு சேலை விரித்து மறைப்பாகக் கட்டப்பட்டது. ‘ ஆம்பளைங்க எல்லாம் அந்தாண்ட போங்க.’ என்றபடி பெண்கள் காயத்ரியைச் சூழ்ந்தனர். ஜெயராமனுக்கு விரல்கள் நடுங்கின. தலை சுற்றும் போல இருந்தது. ‘ காயத்ரி, காயத்ரி ’ என்று மனசு அரற்ற, மறைப்பு விலக்கி உள்ளே போனான்.

பெண்கள் நிமிர்ந்து , ‘ஐயோ! இங்கெல்லாம் வரக்கூடாது. வெளில போங்க, இப்ப முடிஞ்சுரும் ’ என்க,

‘இல்ல, நான் போமாட்டேன். இங்கயே இருக்கேன்…’ உறுதியாய் நின்றான். ‘எனக்குப் பார்க்கணும். எனக்குப் பார்க்கணும்…’ அங்கேயே நின்றான். பெண்கள் எவ்வளவு தடுத்தும் நகரவில்லை.

‘வெளியில வாங்க சார், டாக்டருக்குச் சொல்ல ஆள் அனுப்பியிருக்கு, இப்ப வந்துருவாரு…’ வெளியில் யாரோ குரல் கொடுத்தார்கள்.

ஆனால் டாக்டர் வரும் வரை குழந்தை காத்திருக்கவில்லை. சரியாய் இருபது நிமிடங்களில் உடம்பு முழுக்க ரத்தம் படர்ந்து மேலே திப்பி திப்பியாய் சதைத் துணுக்குகளோடு குழந்தை வெளி வந்தது. ஜெயராமன் அந்த இருபது நிமிட்ங்களும் வயிற்றுக்குள் திகில் விரிய கண்கொட்டாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். காயத்ரியின் ஒவ்வொரு அலறலும் அவன் நெஞ்சில் அறைந்து அவனைக் கொன்று போட்டது. வலி தாங்காது உதறும் அவள் கால்களையும், கைகளையும் பெண்கள் பிடித்து நின்ற கோரம் வன் கண்களைச் சுருக்க வைத்தது. ஆனாலும் விழி விரித்து அவள் வேதனையை நெஞ்சில் வாங்கினான். ‘ஓர் உயிரிலிருந்து இன்னோர் உயிர் பிரிவது இவ்வளவு வேதனையான விஷயமா? இவ்வளவு ரத்த சேதமா! இவ்வளவு ரணமா! தன்னால் இது தாங்கக் கூடியதா? ஐயோ காயத்ரி! நீ எப்படித் தாங்கினாய் இந்த வலியை? நீ எப்படிச் சகித்தாய் இந்த ரணத்தை?’ ஜெயராமன் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.

பெரிய தாம்பாளாத்தில் இளஞ்சூட்டில் நீர் கொண்டு வரப்பட்டு ஒரு பெண்மணி குழந்தையைக் கழுவினாள். நீரில் முக்கி மேலே எடுத்து உதறினாள். கன்னத்தில் நாலைந்து முறை அறைந்தாள். குழந்தை அசைவற்றிருந்தது. உண்மை தெரிந்து போயிற்று.

‘குழந்தை செத்துப் பொறந்துருக்குங்க.’ முன்பின் பார்த்துப் பழகியிராத அந்த அம்மாள் கண்ணில் நீர் பொங்க, முந்தானை பொத்தி அழுதாள். சுற்றி நின்ற பெண்கள் சட்டென்று அழ ஆரம்பித்தார்கள். ஜெயராமனுக்குள் மளுக்கென்று எதுவோ முறிந்தது. உள்ளுக்குள் வெறுமையாய் உணர்ந்தான். கிறுகிறுவென்று தலை சுற்ற, அருகிலிருந்த கம்பத்தைப் பிடித்துக் கொண்டான்.

‘எங்கள் கூடலில் பிறந்த கவிதை அழிக்கப்பட்டு விட்டதா? நாங்கள் மாலையாக்கக் கனவு கண்ட பூ கருக்கப்பட்டு விட்டதா? எனக்குப் பிறந்தது உயிரில்லையா? வெறும் சதைப் பிண்டமா? இவ்வளவு வலியும் ரணமும் பிள்ளை பெறுவதற்குத்தானா? ’ ஜெயராமனுக்குக் குமுறிக் குமுறி அழ வேண்டும் போலிருந்தது. மெல்லத் திரும்பி காயத்ரியைப் பார்த்தான்.

அப்போதுதான் தெளிந்திருந்தாள். முகத்தின் மேல் கூந்தல் படர்ந்திருந்தது. கலைந்த ஓவியம் போலிருந்தாள். கண்ணோரம் பூமொட்டு மாதிரி நீர் கட்டியிருந்தது.

மெல்லச் சென்று அவளருகில் மண்டியிட்டாள். அவள் மீது இரக்கம் பொங்க கூந்தல் விலக்கி நெற்றியில் முத்தமிட்டான்.

‘பரவாயில்லைங்க. நான் இன்னொண்ணு பெத்துத்தரேன், உங்களுக்கு’

‘வேணாம் கண்ணம்மா! எனக்கு நீ போதும், இந்தக் குழந்தை போதும்’ கண்ணீர் பொங்க அவளை அள்ளி அணைத்துக் கொண்டான். அந்தக் குழந்தை அவன் மார்பில் சாய்ந்து கேவிக் கேவி அழுதது.

– 28–02-1993

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *