பிதாமகன்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: April 8, 2024
பார்வையிட்டோர்: 414 
 
 

(2015ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

“ஊதாரிப்பய“ என்று ஓங்கிய குரலில் திட்டிக் கொண்டிருந்தார் ராமசாமி. அவர் குறிப்பிட்ட ஊதாரிப்பய அவர் மகன் கணேசன். பத்தாவது படிக்கிறான். படிப்பில் எந்த சோடையுமில்லை. ஆனால் கையில் தான் காசு நிற்காது. அனாவசியமாக எதுவும் செலவு செய்பவனுமில்லை அவன். கொஞ்சம் சினிமா, அதிகமாக புத்தகங்கள் அவ்வளவுதான்.

இன்று ராமசாமியின் கோபத்திற்கு காரணம் இருக்கிறது. பாட புத்தகம் வாங்கக் கொடுத்த நூறு ரூபாயை மிச்சம் இல்லாமல் செலவு செய்துவிட்டு வந்து நிற்கிறான் கணேசன்.

சாந்தலட்சுமி பெயருக்கேற்றவாறு சாந்தமானவள். எதற்கும் அதிர்வதில்லை அவள். சமையற்கட்டின் வாசற்படியோரம் அவளது ஒரு பாதி முகம்தான் தெரிகிறது. ஓரக்கண் அடுப்பில் இருக்கும் வெண்டைக்காய் தீய்ந்து போகாமல் கண்காணிக்கிறது.

“ஏ ஜடம் கொஞ்சமாவது உணர்ச்சியைக் காட்டு. ஒன் புள்ள இப்படியே போனான் இருக்கறதுக்கு எடம் கூட இல்லாம கஷ்டப்படுவான். தத்தாரி..”

‘என்னடா ஆச்சு’ என்று கண்ணாலேயே கேட்கிறாள் அம்மாக்காரி. கை நிறைய புதுப்புத்தகங்களை எடுத்துக் காட்டுகிறான் கணேசன். கண் இமைகளை லேசாக மூடித் திறக்கிறாள். அட இவ்வளவுதானா என்று அதற்குப் பொருள்.

ராமசாமி, பிள்ளைகளை அடித்து வளர்ப்பதில், நம்பிக்கை இல்லாதவர். ரெண்டொரு சுடு சொற்கள் திருத்த முடியாவிட்டால், அடி மட்டும் திருத்திவிடுமா என்ற கேள்வி அவர் மனதுக்குள் உண்டு. அவருடைய சிறு பிராய அனுபவங்களும் அதற்குக் காரணம். அவருடைய தந்தையாரும் அவரை அடித்ததில்லை. ஏன் இப்போது அவர் திட்டுவது போல், திட்டியது கூட இல்லை. ஆனாலும் அவர் ஒன்றும் வாழ்க்கையில் சோடை போகவில்லை. படித்தார். நல்ல அரசாங்க வேலைக்கான தேர்வில் முதலாவதாக வந்தார். இன்று கை நிறைய சம்பாதிக்கிறார். ஆனால் அவரொத்த பையன்கள் கண்டிப்பின் காரணமாக கையில் பணம் சேர்ந்ததும் கெட்டொழிந்தது அவருக்கு கூடுதல் ஞானத்தைக் கொடுத்திருந்தது. விளையாட்டும் கேளிக்கைகளும் வாழ்க்கையின் ஒரு அங்கம் என்பதை அவர் உணர்ந்தேயிருந்தார். தன் பிள்ளைகளுக்கு உணர்த்தியிருந்தார். ஆனால் அவை அளவு மீறிப் போகும்போதுதான் அவர் கோபப்படுகிறார்.

கணேசன் சரியான புத்தகப் பைத்தியம். புதிதாக ஏதாவது கடையில் தென்பட்டால் வாங்க அவன் கை அரிக்கும். ஆனால் அவன் ஒன்றும் மர்ம நாவல்களையும், பாக்கெட் நாவல்களையும், வாங்குவதில்லை. அவன் வாங்குவதெல்லாம் ஒன்று இலக்கியம் அல்லது பொது அறிவு.

ராமசாமி பல நெறிகளைக் கொண்டவரானாலும் புத்தகம் படிக்கும் பழக்கம் அவரிடம் அறவே இல்லை. அதனால் புத்தகங்களுக்காக செலவழிக்கும் காசு வீண் என்பது அவர் எண்ணம். படிக்கும் எண்ணமிருந்தால் நூலகம் இருக்கவே இருக்கிறது என்பது அவர் கட்சி.

ராமசாமி கோபம் தணிந்து கொல்லைப்பக்கம் போய்விட்டார். கணேசன் டிரங்கு பெட்டிக்குள் புதிதாக வாங்கிய புத்தகங்களை அட்டை போட்டு அடுக்கிக் கொண்டிருக்கிறான். வாசலில் தபால்காரரின் சைக்கிள் மணியோசை கேட்கிறது.

“சார் மணியார்டர்“

காசித்துண்டால் முகத்தைத் துடைத்துக்கொண்டே, ராமசாமி கொல்லைப் புறத்திலிருந்து வருகிறார். கொடுப்பா.. எங்கிருந்து?

நாள் கிழமையென்றால் சாந்தலட்சுமியின் அண்ணன் அவளுக்கு பணம் அனுப்புவதுண்டு.

அதுவாகத்தான் இருக்கும் என்பது அவர் நினைப்பு.

“தம்பி பெயருக்கு வந்திருக்குங்க. டெல்லியிலிருந்து..”

“யாருக்கு கணேசனுக்கா..” அவர் குரலில் ஆச்சர்யம்.

“ஆமாங்க.. தம்பி ஏதோ போட்டியிலே கலந்துகிட்டது போலிருக்கு. அதான் பரிசு அனுப்பியிருக்காங்க..”

வாசலில் நடைபெற்ற உரையாடலை கேட்டு கணேசனே வந்துவிட்டான். இப்போது சாந்தலட்சுமி வாசல் நிலைப்படியில் பாதி முகம் காட்டி நிற்கிறாள்.

“ஓ ஸயின்ஸ் டேலண்ட் எக்ஸாமா?“ என்றபடியே மணியார்டர் பாரத்தை வாங்குகிறான் கணேசன். கையொப்பமிட்டபின் பணத்தை தருகிறார் தபால்காரர்.

ராமசாமியால் நம்பவே முடியவில்லை. ஐநூறு ரூபாய் நோட்டுகள். மொத்தம் பத்து. ஐயாயிரம் ரூபாய். புத்தகங்கள் மூலம் மகன் வைத்த வைப்புத்தொகைக்கான வட்டி.

இப்போதெல்லாம் ராமசாமி நிறைய புத்தகங்கள் படிக்கிறார். டிரங்கு பெட்டியிலிருந்து கணேசனும் சளைக்காமல் எடுத்துத் தருகிறான்.

– மே 2015

– திண்ணைக் கதைகள் – சிறுகதைகள், முதற் பதிப்பு: மார்ச் 2015, வெளியிடு: FreeTamilEbooks.com.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *