(1968 வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)
காமாட்சிக் கிழவிக்கு நீலாம்பரி ராகம் தெரியாது. ஆயினும் அவளது ‘ரோ…ரோ’ சப்தத்தில் இரண்டு குழந் தைகள் கண்ணுறங்கத் துவங்கின. ஒன்று மடியில்; இன் னொன்று வெள்ளைத்துணியால் கட்டிய தொட்டியில். மடிக் குழந்தை அயர்ந்து தூங்கியதும், மெள்ளத்தூக்கி சுவர் ஓர மாக சாக்குத் துண்டு ஒன்றைவிரித்து அதன் மீது கிடத்தி னாள். அது ஒருமுறை தலையைச் சொறிந்துவிட்டு அயர்ந்தது. தொட்டில் குழந்தையிடம் சலனம் இல்லை. தொட்டில் மட் டும் லேசாக ஆடிக்கொண்டிருந்தது.
அந்தப்பிள்ளை மடுவத்தில் சுமார் பன்னிரெண்டு பிள்ளை கள்; மனிதப்பிறவியின் அழகுப்பருவத்தைக் கேலி செய்து கொண்டிருந்தன. ஒழுங்காகப் பராமரித்தால் தங்க விக்ரகம் போல் இருக்க வேண்டியவை. சிவந்து பிறந்தவையுங்கூட, நிறம்மங்கி அழுக்கும் அசட்டையுமாக கண்ட மேனிக்குத் திரிந்து கொண்டிருந்தன.
நடக்க ஆரம்பித்திருந்த குழந்தை ஒன்று அந்த மடுபத் தின் வாசலை நோக்கி தளிர்நடை நடந்து கொண்டிருந்தது. உடல் பாரத்தை கால்கள் தாங்கப் பழகாத நிலையில் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் நின்று நின்று; முன்னும் பின்னுமாக ஆடித் தயங்கித் தயங்கி நடந்து கொண்டிருந்தது.
அதன் நடையழகு ரசிக்கும் நிலையில் காமாட்சிக் கிழவி இல்லை. மூலையில் சுவரோரமாகச் சிணுக்கிக் கொண்டிருந்த இன்னொரு குழந்தை அவளுக்கு ஏற்கெனவே எரிச்சலை மூட்டி விட்டிருந்தது. போதாதற்கு வேறு இரண்டு குழந்தைகள்; ஒன்று தலைமயிரைப் பிடித்து ஆட்ட; மற்றது அலறிக் கொண்டிருந்தது.
தூங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் நிமிர்ந்து கிழவி நேராகப்போய் தலைமயிரைப் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்த சண்டைக் கோழியின் முதுகில் ‘ஒன்று’ வைத்து; ‘சும்மா இருவே! சனியங்க .. புள்ளைகளை தூங்கப் போட ஏலாது’ என்னு கடுகடுத்தாள். வாங்கிக் கட்டிக்கொண்ட குழந்தை விதிர்த்து உட்கார்ந்து, அடியினால் விறுவிறுத்த முதுகை நெளித்தவாறு கிழவியைப் பார்த்து அதன் கீழுதடு நெளிந்து வளைந்தது. கண்கள் குளமாகின.
முணுமுணுத்தவாறு காமாட்சி சிணுங்கிக் கொண்டிருந்த குழந்தையிடம் போய், ‘இஞ்சரே! என்னது? – பொழுது விடிஞ்சா பொழுது போனா நீ சிணுங்கிக் கிட்டே இரு… என்ன பொறப்புகளோ ..! என்று கண்களை உருட்டி விழித் தாள். சிணுங்கல் ஸ்தாயில் கத்தத் துவங்கியது. காலையில் அதனுடைய தாய் குழந்தையை கொண்டுவந்து விடும்போது ‘அம்மாயி! புள்ளே அழுதா குட்டிச்சாக்கிலே விசுக்கோத்து இருக்கு, எடுத்துக்குடு’ என்று கூறியது ஞாபகம் வந்தது. தூண் ஓரமாக ஆணியில் மாட்டியிருந்த சிறிய சிறிய சாக்குப் பைக்குள் கையை நுழைத்து பிஸ்கட் ஒன்றை எடுத்துக் கொடுத்தாள்.
பழைய சிணுங்கல் ஸ்தாயிக்கு இறங்கியது குழந்தை. இந்தப்பிள்ளை மடுவத்து வேலை கிடைத்து இரண்டு வாரமா கிறது. கிழவிக்கி என்னவோ ஒட்டவே இல்லை. இவளுக்கு முன்னால் இந்த வேலையைச் செய்தவளுக்கு தோட்டத்தில் நல்ல பெயர். செக்ரோலில் பெயர் விழவேண்டுமே என்கிற ஒப்புக்காக இல்லாமல் இதைத் தூய திருப்பணிபோல் செய்த அருமையை இன்றும் பிள்ளை உள்ளவர்கள் சொல்லி உருகு வார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்பு அவள் இறந்து விட் டாள். காமாட்சி தலையில் விழுந்தது பொறுப்பு.
சுபாவத்தில் சாமாட்சி பொல்லாதவள் அல்ல. பாம்பு படம் தொங்கும் காதுகளும் ரவிக்கை இல்லாத உடம்புமாக பழைய காலத்து மனுஷி அவள். யாரிடமும் ரொம்பவும் நிதானித்து பேசுவாள். வாழ்க்கைத் துன்பங்களின் அழுத்தம் முகத்தில் சுருக்கமும் விரக்தியுமாக விரவி நிற்கும். அவளைப் பற்றி யாரையாவது கேட்டால், ‘பாவம் ஒருத்த வம்புக்கும் போகாது அப்புராணி’ என்பார்கள்.
பிள்ளை மடுவத்து வேலைதான் அவளை சிடு சிடுப்புக்காரி யாக ஆக்கி விட்டிருந்தது.
அவள் வாழ்க்கை அமைப்பு அப்படி…
கூறைச் சேலையும், மஞ்சட் கயிறுமாக வாழ்க்கைத் துவங் கிய போது தானும் புருஷனும் என்று தனிக்குடித்தனமாக இல்லாமல் அத்தை மாமனோடு புருஷனுன் தங்கை தம்பி என்று ஒரு பட்டாளத்திற்கும் மத்தியில் தான் அவள் வாழ வேண்டி இருந்தது. கொஞ்சம் தொந்தரவு என்கிற அளவில் தான். அப்போது அவள் சிரமம். ஆனால் பிறகு அடுத்தடுத்து குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது அவள் திணறிப்போனாள்.
முதல் குழந்தை பிறந்தபோது இந்த ஒன்னோடு நல்ல படியாக வாழ வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கை யில் அடுத்தடுத்து பிறந்தது. ‘சரி வந்து விட்டது’, வேறு வழி இல்லை தலைப்பிள்ளைக்குத் துணையாக இருக்கட்டும்! என்று தேற்றிக்கொண்ட போது, மூன்றாவது பிறந்தது. ‘கடவுளே! நம் நிலைக்கு இது அதிசமாயிற்றே’ என்று ஏங்கி இருந்தபோது நான்காவது பிறந்தது, அடுத்து ஐந்து..ஆறு..
காமாட்சியின் சுபாவமே மாறிவிட்டது. எந்நேரமும் சிடு சிடுப்பு வெறுப்பு, சின்னக் குற்றங்களுக்கும் விறகுக் கம்பால் பிள்ளைகளை கண்மண் தெரியாமல் அடிக்கும் அளவுக்கு இரக்கம் செத்துவிட்டது. கணவன் பக்கத்தில் நெருங்க முடி யாது. ‘இந்த ஆறு எமன்களை பெத்து அவதிப்படுகிறேனே பத்தாதா? இன்னும் பெத்து நான் சாகனுமா?’ என்று அலறு வாள். நாளடைவில் அவள் அலறல் நிரந்தரச் சுவராக மாறியதும் அவர்கள் வாழ்வு உப்புச் சப்பற்றதாய் மாறியது.
காலம் ஓடியது.
பிள்ளைகள் எல்லோரும் தலையெடுத்து சம்பாதிக்கத் தொடங்கினார்கள்.
ஒன்றன் பின் ஒன்றாய் கல்யாணம் செய்து குடியும் குடித் தனமானார்கள். ஒன்று மாறி ஒன்றாகக் குழந்தைகள் பெற் றார்கள் அவளுடைய மகள்களும் மருமகள்களும் யாராவது ஒருத்தி முறை வைத்தது போல வயிற்றைத் தள்ளிக் கொண்டு நிற்கையில் அவளுக்குத் தாய்மையே வெறுத்து வந்தது. சிறு பருவத்தில் அவள் ஆசையோடு விளையாடும் விளையாட்டு ஒன்று…
கொழுந்துச் சாக்கு அனுப்பும் ஒற்றைக் கம்பியில் கல் லால் ‘ணங் … ணங்… ணங் ….’ என்று நான்கைந்து தட்டு தட்டுவாள் ‘கிண்’ என்று நாதம் பிறந்து, சற்றுநேரம் தொடர்ந்து, பல வினாடிகளுக்குப் பிறகு எத்தனை அடி விழுந் ததோ அத்தனை துள்ளல் துள்ளி மீண்டும் நாதம் தொடரும். மீண்டும் துள்ளும்.
இப்போது வாழ்க்கையும் துள்ளுகிறது. மீண்டும்…மீண்டும் மீண்டும்…
பிள்ளை மடுவத்தில் கூரைக்கு மேலே உய்ய்ய்ய்…….. என்று ஒலி கேட்கத் துவங்கியது. காமாட்சி வெளியே வந்து மேலே அண்ணாந்து பார்த்தாள். நீலவானத்தில் கறுப்பு கோடு கிழித்தது போல செல்லும் ஒற்றைக் கம்பியில் கொழுந்து நிறைந்த சாக்குகள் இரண்டிரண்டாக பவனி வரத் தொடங்கின.
வெய்யில் நேரத்தில் சற்று நேரம் வானத்தைப் பார்த் தது கண்களை இருட்டிக்கொண்டு வந்தது. சிமிட்டிச் சிமிட்டி விழித்தவாறு உள்ளே வந்தாள். பல நிமிடங்களுக்கு பிறகு பிள்ளை மடுவத்துக்கு மேலே செல்லும் ஒற்றையடிப் பாதை யில் பெண்களின் பேச்சுக்குரல் கேட்டது.
மடுவத்திலிருக்கும் குழந்தைகளின் தாய்மார்கள்.
தரையில் உருண்டு கொண்டும் விளையாடிக் கொண்டும் இருந்த குழந்தைகள், தாய்மார்களைக் கண்டதும் வாசலை நோக்கி தவழ்ந்தும் நடந்தும் பறந்தன. இன்னும் சில வினாடி களுள் தாயின் அரவணைப்பில் ஆழ்ந்து விடுவோம் என்பது தெரிந்தும் பரபரப்புத் தாங்காத ஒரு செல்ல அழுகையும் கொஞ்சலுமாக சில நிமிடங்களுக்குள் மடுவம் நிறைந்த மழலை ஓலம்.
சில மணிநேரப் பிரிவுதான்; என்றாலும் தாய்களும் பல நாட்கள் பிரிந்தது மாதிரி தாவி எடுத்து முத்த மழை பொழிந்தார்கள்.
ஒருத்தி குழந்தையின் வயிறு தன் மண்டையில் அழுத்த வைத்து ‘டூர்…ர்… டுர்ர்..’ என்று வேடிக்கைக் காட்டி றாள் இன்னொரு தாய் தன் குழந்தையை ‘பாலு வேணுமா இந்தத் தொப்பைக்கு…பாலு வேணுமா…’ என்று கைகளை முஷ்டியாக மடக்கி ‘இந்தத்தொப்பைக்கு…தொப்பைக்கு…என்று குழந்தையின் வயிற்றில் அழுத்தி அழுத்தி எடுத்த போது குழந்தை தன் இரு கரங்களாலும்; தனது கால்விரல் களைப் பிடித்துக்கொண்டு கெக்கலி கொட்டிச் சிரித்தது.
இந்த அமளியில் கிழவியின் சத்தத்தையே காணவில்லை கொஞ்ச நேரத்திற்குப் பிறகு குழந்தைகளின் சத்தமெல்லாம் அடங்கி, பெண்களின் பேச்சுக்குரல் மட்டும் முணு முணு வென்று கேட்டுக் கொண்டிருந்தபோது; மூலையிலிருந்து ஒரு குரல் ‘அம்மாயி இதென்ன புள்ளை முதுகிலே?’ என்று கிறீச்சிட்டது. தனக்குக் கிடைத்த இடைவேளையில் தேநீர் குடிப்பதற்காக வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த ‘பிளாஸ்க்கை’ எடுக்க கிழவி திரும்பிப்பார்த்தாள்.
சண்டைக் கோழியின் தாய்…
‘என்னடி முதுகிலே?’ …அருகில் போய்ப் பார்த்தாள் குழந்தையின் விபூதிக் கோடுகள் போல மூன்று விரல் அடையாளம் தடித்துக் கிடந்தது. கிழவிக்கு முகத்தில் அசடு தட்டியது. முழங்காலில் கையைக் கொடுத்து ஊன்றிய வாறு குனிந்து ‘புள்ளைகளைத் தூங்கப்போட ஏலாமே இது வும் இன்னொன்றும் சண்டைப் போட்டிச்சுன்னு தட்டி னேன்! ‘ என்று கூறியவாறு வலது கையால் முதுகைத்தடவி விட்டள்
விரல் அடையாளம் கிடக்கும் அளவிற்கு விழுந்த அடி எத்தனை ராட்சதத் தனமான அடியாக இருக்க வேண்டு மென்று எண்ணிய சண்டைக் கோழியின் தாய்க்கு, தான் கூட அப்படி அடித்திருக்க மாட்டோமே என்று எண்ணிய போது உள்ளம் பற்றிஎரிந்தது. அதைவிட அடித்ததைக் கிழவி சாவதானமாக ஒப்புக்கொண்டது மேலும் எரிச்சலை மூட்டியது. ‘புள்ளைகளைக் கண்டிக்க வேண்டியதுதான் ஆனா இப்படி பிசாசு அறையற மாதிரி அடிக்க வேண்டாம், சொல் லிப் புட்டேன்! … என்றாள்.
பேயறைந்தது போல கிழவி நிமிர்ந்து நின்றாள். ‘இஞ் சரு! பூரணம்! … வார்த்தையை ரொம்பச் செலவழிக் காதே… பத்தும் பன்னெட்டு பிள்ளைக ஒரே சமயத்திலே நாயீ மாதிரி அலறையில பார்த்தா தெரியும் – ‘ என்றாள் கிழவி.
‘என்னது நாயி மாதிரியா? …’ என்ற பூரணம் மற்றப் பெண்களைப் பார்த்து ‘கேட்டுக்கிடுங்க கதையை…….. நம்ம புள்ளைக நாயி மாதிரி… கத்துதுகளாம்…’ என்று சாட்சி வைத்து விட்டு ‘அம்மாயி! ஒனக்கு அதுக்குத்தான் சம்பளம் கொடுக்குது. முடியாட்டி வேற வேலைக்கு போறது, அதுக்கு புள்ளைகளை போட்டுக் கொல்லச் சொல்லி இருக்கா? என்றாள்.
‘ஆமா, எல்லாரும் பெரட்டு கலைஞ்சு இப்ப இவுக வந் திருக்காக பெரட்டு கலைக்க… நான் வேறே வேலைக்குப் போறேன். நீ வந்து புள்ளைகளை பார்த்துக்க…’
‘ஏன் முடியாதோ? நான் நல்லாத்தான் பார்த்துக் கிடுவேன் ஓம்மாதிரி பிசாசு அறையற மாதிரி அறைய மாட்டேன்..’
‘இஞ்சே மறுபடி மறுபடி பிசாசு பிசாசுன்னு செல்லாதே .
சூடான ஒரு வாக்கு வாதத்திற்குப் பிறகு பூரணம் ஒரு கையில் குழந்தையும், மறுகையில், சுவரில் தொங்கிய சாக்குப் பையுமாக நீதி கேட்கப் புறப்பட்ட கண்ணகி மாதிரி கிளம்பி விட்டாள்.
மாலையில் காமாட்சிக் கிழவி வேலை முடிந்து வீட்டுக்குப் புறப்படும் போது, பங்களாவிலிருந்து ஓர் ஆள் வந்து ‘ஐயா வரச்சொல்வதாகச்’ சொல்லிவிட்டுப் போனான்.
அவள் எதிர் பார்த்ததுதான்.
கணக்குப்பிள்ளையின் பங்களாவை அவள் சென்றடையும். போது அவர் பங்களாவின் முன்னுள்ள வெளியில் நின்று பேர் போட்டுக் கொண்டிருந்தார். கிழவியைக் கண்டதும் ‘கொஞ்சம் நில்லு’ என்று கையைக்காட்டி விட்டு; பாக்கி யுள்ள ஆட்களுக்கும் பேர் போட்டு முடித்துவிட்டு; செக் ரோலை மூடினார். பின்னர் கிழவிப் பக்கம் திரும்பி! ‘என்ன காமாட்சி, என்னது . காலையில் என்னமோபூரணம் வந்து சொல்லிட்டு போகுது’ என்றார்.
‘அதுவுட்டு பிள்ளையை அடிச்சுப் போட்டேனுங்களாம்’
‘அடிச்சது நெசமா?…’
‘அடிச்சது நெசந்தான் இல்லேங்கல்லே…’
அவள் முடிக்கவுமில்லை, தொடரவுமில்லை, கணக்கப் பிள்ளை அவளைப்பார்த்து ‘அது குத்தந்தானே?..’ என்றார்.
‘பத்துப் பன்னென்டு புள்ளைக இருக்கிற இடத்திலே அடிக்காம பேசாம…’
‘அப்படிச் சொல்ல முடியாது காமாட்சி…’ என்று கணக்கப்பிள்ளை இடையில் குறுக்கிட்டார். ‘நாளைக்கு காயம் படறாப்போல அடிச்சிப் போட்டுட்டு, அப்பவும் இப்படிச் சொல்ல முடியுமா? …’
‘கண்டிக்கிறதுக்கும் ஒரு அளவு இருக்குதில்ல…’
கிழவி சங்கடத்துடன் இடது கையால் வலது பக்கமுழங் கையைத் தடவிக்கொண்டு நின்றாள். ‘சரி சரி … போ … இனி இப்படி ரிப்போட்டு வரக்கூடாது’ என்று கணக்கப் பிள்ளை கூறிவிட்டு நகர்ந்தார். அவர் போன பிறகும் கிழவி நின்ற இடத்திலேயே கொஞ்சநேரம் இருந்து கொண்டு விட்டு, மெல்ல நடந்தாள்.
***
இரவு ஏழு மணியைப் போல காமாட்சிக் கிழவியின் வீட்டு வாசலில் அதுவரை நிலவிய அமைதியைக் கிழித்துக் கொண்டு நாராசாரமாக ஒரு குரல் ஒலித்தது. சண்டைக் கோழியின் தகப்பன்.
கையில் முழு நீளத்துக்கு, திரி சொருகிய பைப்குழாய் பந்தம் தீவட்டி மாதிரி எரிந்து கொண்டிருந்தது. நன்றாக குடித்திருந்தான். வெளிச்சத்தில் கண்களின் சிவப்பு; அறுத்த வைத்த தசைத்துண்டமாக பிதுங்கியது. ‘எங்கே அவுக புள்ளைப்பாக்குற அம்மா … பெரிய் ய் ய் … ய … அம்மா?…’
வீட்டுக்குள்ளிருந்த கிழவிக்கு நெஞ்சு ‘சிலீர்’ என்றிருந் தது. ‘இது என்னடி கூத்து …’ என்று முனகிக்கொண்டாள். உள்ளே உட்கார்ந்திருந்த கிழவியின் மகன் ஒருவன் ‘என் னது?..’ என்று அவளைப்பார்த்தான்.
‘இவ பூரணம்…’ என்று முடிக்காமல் எழும்பி வாசல் புறம் எட்டிப்பார்த்து விட்டு, மகன் அருகில்வந்து அவதான் கங்காணி மக பூரணம் …’ என்றாள்.
‘இனி… என்னவாம் ?…’
‘காலையிலே அவ புள்ளையை அடிச்சுப் போட்டுட்டேன், அதைப் போயி பெரிசா கணக்கப்பிள்ளைக் கிட்டே ரிப்போட்டு பண்ணிப்புட்டா இப்ப புருஷனை ஏவி விட்டிருக்கா ..’ என்றாள் கிழவி முகத்தில் தெரிந்த சங்கடத்தைப் பார்த்துவிட்டு அவன் எழும்பினான். அவன் கையைப் பிடித்துக் கொண்டு “மொட்டையன் குடிச்சிருக்கான். ‘வாயை கீயை குடுக்காதே’ என்று கிசுகிசுத்தாள்.
கிழவியின் மகன் வாசலில் இறங்கி ‘ராசு அண்ணே’, என்னது? …’ என்றவாறு அருகில் சென்றான். போதையினால் கனத்த இமைகளை மூடிமூடித்திறந்தவாறு அவனை உற்றுப் பார்த்தான் ராசு. உடல் லேசாகத் தள்ளாடியது. ‘இஞ்ச பாரு தம்பி, ஒனக்கும் எனக்கும் பேச்சு இல்லே எங்க ஒங்க ஆயா?…’ என்றவாறு வீட்டுக்குள் நுழைய அடி எடுத்து வைத்தான். ராசுவின் கையைப்பிடித்து நிறுத்தி ‘அண்ணே, சும்மா சொல்லு? என்ன விசயம் ? …’ என்றான் கிழவியின் மகன். பக்கத்து வீடுகளிலிருந்து சில முகங்கள் எட்டிப் பார்த்தன.
‘இஞ்ச பாரு, நான் யாரு வம்புக்காவது போறது உண்டா?…’ என்றான் ராசு.
‘இல்லே! … ‘
‘இல்லேல்ல… அது மாதிரி தான் நான் யாருக்கும் பயப்படவுமாட்டேன் தெரியும்லே?’
‘இந்தத் தோட்டத்து தொரை; இல்லாட்டி கணக்கப் பிள்ளை யாருக்கு சரி நெஞ்சைத்தொட்டு நிமிர்ந்தகைதுவள ‘ நான் பயமில்லே’ என்றான்.
‘சரி இப்ப அதுக்கு என்ன? ..’
‘அது ஏன் அந்த பொம்புளை என் புள்ளையை அப்பிடி அடிக்கணும்? அடிக்கச் சொல்லி யார் அதிகாரம் குடுத்தது?’
அவனிடம் போய் தர்க்க வாதம் செய்வதில் எந்தப்பய னும் விளையப் போவது இல்லை என்பது கிழவியின் மகனு குத் தெரியும். அவனுக்குத் நியாயம்தான் பெரிது என்றால் ‘தண்ணி’ போடுவதற்கு முன்பே வந்து கேட்டிருப்பான். நிதானமாக இருந்த போது சாதாரணமாக் இருந்த செயல் இப்போதுதான் அநியாயமாகத் தெரிகிறது.
‘ராசு அண்ணே பத்துப் புள்ளைகளை பாத்துக் கொள்ற எடத்துலே நாலும் தான் இருக்கும் இதை எல்லாம் பெரிசா எடுத்துக்கிட கூடாது. ” என்று கிழவியின் மகன் கூறிக் கொண்டிருக்கையிலேயே ‘டேய் நீயாருடா எனக்கு புத்தி சொல்ல வடுவால் பயலே’ … என்றவாறு அவன் மார்பிலே கையைவைத்து தள்ளினான் ராசு. இதை சற்றும் எதிர்பார்க் காத கிழவியின் மகன் நிதானிக்க முடியாமல் பின்னால் இருந்த தண்ணீர் ‘டிரம்’ மீது விழுந்தான். கண கணவென்று ‘டிரம்’ உருண்டோட, வெளியே கொலையே நடந்து விட்டதுபோல கிழவி அலறிக்கொண்டு வந்தாள்.
சிறிது நேரத்தில் பக்கத்து வீட்டுக்காரர்கள் நான்கு பிடியிலிருந்து திமிற முயன்றவாறு ராசு கத்த; வாசலில் நின்றவாறு நெஞ்சில் அடித்துக்கொண்டு கிழவிஅலற; லயத்து வாசல் ரண களமாகிக் கொண்டிருந்தது. எழும்பி நின்ற கிழவியின் மகன்; ராசுவை முப்பத்திரண்டு பற்களும் கொட்ட அறைவோமா என்று யோசித்துக் கொண்டிருந்தான். அங் கங்கே சுருண்டு கிடந்த இரண்டு மூன்று நாய்கள் திடுக்குற்று எழும்பி நின்று குரைக்கத் துவங்கின.
இரவு ஒம்பது மணியைப்போல, மகனையும் கூட்டிக் கொண்டு கணக்கப்பிள்ளை வீட்டுக்கதவைத் தட்டி: நடந் ததைக் கூறி; ‘இந்த புள்ளைக்காம்பரா வேலை எனக்கு வேண் டாங்க …’ என்று முத்தாய்ப்பு வைத்தாள். நடந்தவற்றால் அவள் கலங்கிப் போயிருந்தாலும், பிள்ளை மடுவத்து வேலை வேண்டாம் என்று சொல்ல, நல்ல ஒரு காரணம் கிடைத் தது பற்றி உள்ளூர சந்தோஷமும் கூட.
கணக்கப்பிள்ளை சற்று நேரம் யோசித்துவிட்டு ‘சரி … போ நான் யோசிச்சு சொல்றேன்! என்று அனுப்பிவைத்தார்.
காலையில் ‘மஸ்டர்’ களத்தில் ஆட்களுக்கு மத்தியில் கிழவியும் நிற்பதைக்கண்ட கணக்கப்பிள்ளைக்கு ஆச்சரியமாக வும், சற்று எரிச்சலாகவும் இருந்தது. ‘நான்தான் யோசிச்சு சொல்றேன்’னு சொன்னேனே அதுக்குள்ளே என்ன இங்க வந்து நிக்கறே? …’ என்றார். கிழவி முழங்கைத் தடவியவாறு ‘எனக்கு ஒருத்த பொல்லாப்பும் வேண்டாங்க … நான்வேற வேலைக்கு போறேன்! என்றாள். ‘இல்லை இல்லை… இல்லை …’ என்று வேகமாக தலையை ஆட்டி மறுத்தார் கணக்கப் பிள்ளை. ‘நேத்து என்னமோ அது ஒன் ‘மிஷ்டேக்’ தான். வேணுமின்னா நான் ராசுவைக் கூப்பிட்டு கண்டிச்சு வைக்கி றேன். நீ புள்ளைக் காம்பிராவுக்கே போ! என்றவாறு ஆட் கள் குழுமி நின்ற பகுதிக்குச் சென்றார். கிழவி நகரவில்லை.
பனி கலைந்தும் கலையாத அந்தக் காலைப்பொழுது தூய் மையாக இருந்தது. கிழக்கு இன்னும் சிவக்கக்கூட இல்லை. உடம்பை ஊடுருவும் ‘கில்’ லென்ற பனிக்காற்றுக்கு இதமாக போர்வையும் கம்பளியுமாக தோட்டத்து ஆண்கள் அனைவ ஆ ரும் அங்கு குழுமி நின்றார்கள்.
கிழவர்கள் ஒரு புறம். நடுத்தர ஆண்கள் இன்னொரு புறம் நாசூக்காக டவலைப் போர்த்தியவாறு நிற்கும் வாலிபர் கள் பிறிதொருபுறம். இந்த ரகங்கள் எதிலும் சேரமுடியாத பொடியன்கள் ஒரு புறமும் நின்ற அவர்கள் அருகில் சென்று ஆட்களை எண்ணி ஒவ்வொரு வேலைக்கெனப் பிரித்துப் பிரித்து அனுப்பிக் கொண்டிருந்தார் கணக்கப்பிள்ளை. கூட்டம் பிரிந்து ரோடு ழியாகவும் குறுக்குத் பாதைகளிலும் சென்றபிறகு தானும் நடக்கத்துவங்கிய கணக்கப்பிள்ளை வெட்ட வெளி யில் ஒற்றை மரம் போல கிழவி நிற்பதைப் பார்த்து விட்டு என்ன?’ என்றார்.
கிழவி ஏதும் பேசவில்லை முகமும் கண்களும் மட்டும் கெஞ்சிக் கொண்டிருந்தன.
ஒருமுறை இருமி விட்டு அவர் சொன்னவைகள் அஸ்தி வாரத்தையே கிடுகிடுக்க வைத்தன. ‘இந்த வருஷம் நாற் பத்தைந்து புள்ளைக இருக்கு பேருபதிய இப்பவே தோட்டத் துலே ஆளு கூட. இத்தனை புள்ளைக்கும் வேலை குடுக்கிறதா இருந்தா ரொம்ப வயசானவங்க நாப்பத்தைச்சு பேரை பென் சனுலே அனுப்பணும் எயசானவங்க யாராருன்னு ‘லிஸ்ட் எடுத்திருக்கு அதுலே ஒன் பேரும் இருக்கு…’
‘இப்ப நீ புள்ளக்காம்புராவிலே நின்னா வழக்கமா நிக் கிற கெழவி’ன்னு சொல்லி இன்னும் இரண்டொரு வருசம் வேலை செய்யலாம். மலைக்கோ இல்லாட்டி இஸ்டோருக்கோ போனா ஒனக்கும் பென்சன் ஆடர் வரும், ஒன் இஷ்டம் போல் செய்யி’ என்று சொல்லி விட்டு நடக்கத்துவங்கினார் கணக்கப்பிள்ளை.
கிழவி மீண்டும் பிள்ளை மடுவத்துக்கே சென்றாள். மழலைக் குரல் நிரம்பி வழிந்த அந்த மடுவத்துக்குள் நுழையும் போது இந்தச் சின்னவைகளுக்கு முன் தனக்கு ஒவ்வொரு முறை யும் தோல்வியே கிடைப்பதை எண்ணி அவள் மனம் பொரு மியது. சுவரில் இருந்த ஆணியில் தன் தேநீர்ப் பையைக் கோத்துக் கொண்டிருந்த போது நடக்க ஆரம்பித்திருந்த குழந்தை முன்னும் பின்னுமாக ஆடியவாறு நடந்து வந்து அவள் சேலையைப் பிடித்துக்கொண்டு ‘பாச்சி … ஆ’ என்று ஏதோ மழலையில் மிழற்றிக் கொண்டிருந்தது.
சேலையிலிருந்து அதன் கைகளை பிடுங்கி குழந்தையை தரையில் ‘தக்’ கென்று உட்கார வைத்துவிட்டு, தொட்டிலை நோக்கி நடந்தாள் காமாட்சி.
உதடுகள் வெறுப்போடு முணு முணுத்துக் கொண்டிருந்தன.
– வீரகேசரி 13-12-68
– ஒரு கூடைக் கொழுந்து, முதற் பதிப்பு: ஏப்ரல் 1980, வைகறை பப்பிளிகேஷன்ஸ், இலங்கை.