கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: June 30, 2021
பார்வையிட்டோர்: 3,588 
 

அறக்காய்ச்சும் வெயில். பங்குனி மாதத்தின் பிற்பாதி. சித்திரை பத்தாம் உதயத்துக்குத் தப்பாமல் பெய்யும் மழைக்கான மேகத்திரட்சிகள் ஏதும் வானத்தில் இல்லை . ஏலத்தில் பிடித்த சமுக்காளம் இழந்த சாயம் போல வானம் வெளிறிக்கிடந்தது. அவிழ்த்தடிப்புக் காலம் ஆனதால் மனம்போல மேய்ச்சலுக்கு விடப்பட்ட மாடுகள் வெயில் பொறுக்க முடியாமல் ஆற்றங்கரையோரம் புன்னைமர நிழலில் ஒதுங்க முற்பட் டன. குட்டையாகத் தெவங்கிக்குழம்பிக் கிடந்த ஆற்றின் ஆனையறுகுப் புதர்களின் ஓரம் எருமைகள் உருண்டு புரண்டு வெயிலுக்கு இதமாக சேற்றுப் பூச்சுமானம் செய்துகொண்டிருந்தன.

கோடை விடுமுறையாதலால் பள்ளிக்கூடம் அடைத்திருந்தது. பள்ளியின் முன்னால் நன்கு வளர்ந்து கவிந்திருந்த ஆலமரம், ஓர் அரச பரிவாரம் தங்குமளவுக்கு குடை கவிழ்த்திருந்தது. பள்ளிக்கூடத்துக்கு முன்னால் தார்ரோடு, கக்கன் மராமத்து மந்திரியாக இருந்த காலத்தில் போட்டது. அதன்பின் நான்கு முறை தார் பாவியதாக ரெக்கார்டுகளில் இருப்பதாகச் சொன்னார்கள். ஆனால் குண்டு குழிகளில் சல்லி வாரிப் போட்டு தார்க்குழம்பு தெளித்ததைத்தான் ரோடு அறியும். ரோட்டை ஒட்டி ஆறு. பள்ளியை எதிர்த்திருந்த படித்துறையில் கொஞ்சம் பள்ளம். முட்டளவு ஆழத்தில் தண்ணீர். தண்ணீரில் அசைவு உண்டா இல்லையா என்று சொல்ல முடியாத நிலையில், வெயில் ஏற ஏற பாசி மிதக்கத் தொடங்கிவிட்டது. எனவே குளிக்க என்று துறையில் யாரும் இல்லை. குடத்தில் தண்ணீர் கோருவதுகூட ஓய்ந்திருந்தது.

பள்ளிக்கூடத்துக்கு சுற்றுச்சுவர் கிடையாது. படிப்புரையில் கொஞ்சம் மனிதர்கள் உட்கார்ந்திருந்தனர். சிலர்துண்டை விரித்துப் படித் திருந்தனர். நான்கு பொடிப் பையன்களும் சுற்றி ஏழெட்டுச் சிறுவருமாய் தாயம் விளையாடிக்கொண்டிருந்தனர். கிழக்கோரம் மண் தரையில், வயிற்றில் குறுக்கே கயிற்றை இறுக்கிக் காளை ஒன்றை சாய்த்துப் போட்டு முன்கால்களையும் பின்கால்களையும் கட்டி, குளம்புகளுக் கிடையில் பலகை செருகி, உளியால் குளம்பைச் செதுக்கி, லாடம் வைத்துப் பார்த்து, மீண்டும் செதுக்கி, லாடம் வைத்து ஆணியால் இறுக்கிக் கொண்டிருந்தார் லாடங்கட்டு ஆசாரி. காளையின் வயிறு இறுகி பொதுமிப் போயிருந்தது. பின்புறம் சாணி பீச்சி இருந்தது. வாயோரம் வெண்ணுரை. காளையின் சொந்தக்காரன் முகத்துப்பக்கம் குத்த வைத்து அமர்ந்து ஒரு கையால் கொம்பையும் மறுகையால் ஒரு கண்ணையும் பொத்திக்கொண்டிருந்தான். தார் பாய்ச்சிய அரை வேஷ்டியும் வட்டக் கட்டுக் கட்டிய தலைமுண்டுமாய் லாடங்கட்டு ஆசாரி ஆணி இறுக்கு வதில் முனைந்திருந்தார். அடுத்த குளம்பைச் சீவி சிறிய லாடமும் முன் வளைந்த பெரிய லாடமுமாய் அடுக்கி, முள்ளாணியால் குத்தி பலகையை அண்டக் கொடுத்து, ‘டடக், டடக்’ என்று தாளம் தவறாமல் தட்டிக்கொண்டிருந்தார். லாட ஆணி ஒன்று வசக்கேடாய் குளம்புக் குருத்தில் பாய, காளை’விறுக்’ கென்று காலை உதறியது. குளம்பில் சற்று ரத்தம் கசிந்தது. ஆணியைப் பற்றுக்குறடால் பிடுங்கிவிட்டு, மறுபடி குருத்தில் படாமல் அறைந்து மறுபக்கம் மடக்கினார்.

லாடங்கட்டு ஆசாரியிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டு காளைச் சொந்தக்காரரிடம் விசாரித்துக்கொண்டு இரண்டு மூன்றுபேர் நின்றார் கள். சில பள்ளிச் சிறுவர்கள் வேடிக்கை பார்த்தனர்.

பள்ளிக்கூட வராந்தாவில் ஏழெட்டுப்பேர் – கல்தூணில் சாய்ந்து கால்களை நீட்டி, சுவரில் சாய்ந்து குத்துக்காலிட்டு, சம்மணம் போட்டு, படுத்துக் கிடந்து – போன பெருவெள்ளத்தில் தடி பிடித்த கதையைப் பேசிக் கொண்டிருந்தபோது, அந்த மனிதர் வெயிலில், மேற்கிலிருந்து கிழக்காக, தார் ரோட்டில் விறுவிறுவென நடந்து வந்தார்.

நல்ல பத்தரை மாற்றுக் கறுப்பு. ஐந்தடிக்கும் குறைவான குள்ளம், முதுகில் லேசானகூனல் வரை பிடிக்க ஆரம்பத்திருந்து. சந்தி சூம்பி இருந் தது. துவைத்துத் துவைத்து முசிந்திருந்த கோடி நிற வேட்டி. மேலே ஒரு சட்டை. தலைமுடி ஒரு கோளாறும் இல்லாமல் கலைந்திருந்தது. வியர்த்து வடிய வந்தவரை, பள்ளிக்கூடப் படிப்புரையில் பேசிக் கொண்டிருந்த நெல்லையப்பன் கேட்டான்.

“எண்ணேன்! எங்க தூரமா போறேரு?” “யாரு? நெல்லையப்பனா? சும்ம… இதுவரை தான்டே…”

“எளவு அதுக்காக விறீல்ணுதாலாபோறேரு… ஆளைக் காணாத்தது மாரி…”

“இல்லடே… நீ படிப்பெரையிலே இருக்கதை நான் காணவா செய்தேன்?”

“இரியும் பின்னே … நிண்ணுகிட்டே பேசுகாரே எளவு!”

“இல்ல… ஒரு அவசரமாப் போணும்… சந்தைவெளையிலே ஒரு ஆளப் பாக்கணும்…”

“எல்லாம் போலாம்… இரியும்… நீரு போகாமத்தான் தாலிகெட்டு நிக்கப்போகாக்கும்… சும்ம கெடந்து பறக்காதேயும் கெடந்து… தம்பிலே… ஓடிப்போயி வடக்குக் கடையிலே ஒரு வெத்திலை வாங்கீட்டு வாடா… அண்ணனுக்கு என்ன போயிலே? யாழ்ப்பாணமா? அங்கு விலாஸா?”

“அணா தா!”

“போடா… அதிய வெளைச்சலு தாலா காணிக்கே… போ… நான் சொன்னம்ணு சொல்லு…”

அரை நிக்கரும் அதிக விளைச்சலுமான அந்தப் பையன் ஓடத் தொடங்கியபோது சட்டைப் பொத்தானைக் கழற்றி சட்டையை உரித்துக் கையில் எடுத்துக்கொண்டு பூணூலை ஆற்றி, அவர் சொன்னார்.

“தம்பி! அப்படியே ஒரு செம்பிலே வெள்ளம் வாங்கீட்டு வாடே. செம்பைத் திரும்பக் கொண்டு தாறம்ணு சொல்லு… இல்லேண்ணா தரமாட்டா .”

“நம்ம செல்லாச்சி வீட்டிலே கேளுலே தருவா… போ… போயி ஒரு எட்டிலே ஓடியா என்னா? ம் முருகா! நீ என்ன பாக்கே? அண்ணாச்சி யாருண்ணா? நீ என்ன எளவைக் கண்டெ?காலேசிலே போயிப்படிச்சாப் போருமா? அண்ணாச்சிக்கு பேரு குத்தாலம். புத்தேரியிலே நம்ம வேலாசாரி இருக்காருல்லா? அவருக்க சித்திக்கு மகன். ஆளு இப்படி இருக்கானேன்ணு பாக்காதே… முத்துமாலை உருட்டினாம்ணா இந்த வட்டாரத்திலே அவனைச் செயிக்க ஆளு கிடையாது. சவம் ஆனா ஒரு கொறளி. ஒரு இடத்திலே இருந்து வேலை செய்யாது. சுபாவம் அப்பிடி. இல்லேண்ணா ஒரு நாளைக்கு முப்பது நாப்பது பாக்கப்பட்ட ஆளாக் கும். இப்பம் மூணு ரூவாய்க்கு ஆறு மைல் அலையான். எல்லாம் தலை யெழுத்து…”

“நெல்லேப்பா… இதாலா உங்கிட்டே ஒரு சீண்ட்றம்… எளவு கூப்பிட்டு வச்சுக்கிட்டு ஆளை கொதவளையை அறுக்கியே!”

“இப்பம் உன்னை நான் என்ன சொல்லிட்டேன்… வட்டாரத்திலே தங்க வேலைக்கு ஒம்ம அடிக்க ஆளுண்டுமா? சொல்லும். ஆனா கெரகம் இருக்க விடாண்டாமா? சரி! தண்ணியைக் குடியும். வெத்தலையை இப்பிடி வைலே…”

செம்புத் தண்ணீரை எட்டிக் கொஞ்சம் மண்தரையில் சிந்திவிட்டு, அண்ணாந்து கடகடவெனக் குடித்தார். வெற்றிலையின் தும்பைக் கிள்ளி நெற்றியின் பக்கவாட்டுப் பொருத்தில் ஒட்டவைத்தார். காம்பை முறித்து எறிந்து விட்டு நரம்பை உரித்தார். முதுகுப்புறம் பதமாகச் சுண்ணாம்பு தீற்றினார். பாக்கை ஊதி, முகர்ந்து, வாய்க்குள் எறிந்தார். வெற்றிலை யைச் சுருட்டி வாய்க்குள் திணித்து, புகையிலையை உள்ளங்கையிலும் சுண்ணாம்பை ஆள்காட்டி விரலிலும் எடுத்துக்கொண்டார்.

“சரி… நான் போட்டா ?”

“போலாம்… கொஞ்சம் நெழல் தாங்கல்லே இருந்து வெசர்ப்பை ஆத்தீட்டுப் போவும்… அண்ணன் பாடிக்கேட்டு எம்புட்டு நாளாச்சு…”

“ஆமா… இப்பம் பாட்டு வருகு ஒனக்கு பாட்டு… காலம்பற குடிச்ச தேயிலையோட நாய் மாரி அலையான் மனுசன்… இவுனுக்கு பாட்டுக் கேக்கணுமாம்.”

“அவ்வளவுதானே! இல்லே அவ்வளவு தானேண்ணேன்! …லே தம்பி! இன்னா இந்தச் செம்பை எடுத்துக்கிட்டு திருஞானம் கடையிலே போயி ரெண்டு சுக்காப்பி, நாலு வடை, நான் சொன்னம்ணு… ஓடிப் போயிட்டு வரணும்… என்ன பாக்க? போடே… நீயும் ஒரு வடை வாங்கிக்கோ… தாயோளி அந்த அப்பனைப் போலத்தான் இவுனும் தலையெடுக்கான்… ஈரெடுக்க பேனு கைக்கூலி… போடெ… ஒளிஞ்சு போ …” |

“குத்தாலண்ணேன்… பிள்ளைகள்ளாம் ஆசைப்படுகாள்ளா? ரெண்டு பாட்டு… கூடுதலு வேண்டாம் … ம் … தொடங்கும்… காப்பி வரும்…”

“ஆளை விடமாட்டேங்கியப்பா எளவு! என்ன பாட்டு வேணும்… அதாவது சொல்லு…”

“தங்கப்பா, சொல்லுடே… என்ன பாட்டு வேணும்?”

“நான் என்னத்தை சொல்லுகது? அவாளுக்கு இஸ்டம் உள்ளதைப் படிக்கட்டும்…”

“ம்… அப்பிடியா? ம்க்கும்.. ம்க்குக்கும்…” பாடுபட்டுப் பணத்தை ஏழைக்களித்திடாமல் தேடிவைத்துப் போவ தேனோ – ஞானத்தங்கமே தேகம் சதமில்லையே – ஞானத்தங்கமே தேகம் சதமில்லையே… சுற்றுச் சலசலப்பெல்லாம் அடங்கிவிட்டது. ஏழெட்டுப் பேர் பக்கத்தில் நெருங்கி வந்து அமர்ந்திருந்தனர். காளையை எழுப்பிவிட்டு விட்டு லாடங்கெட்டு ஆசாரி, கருவிகளைக் கோணியில் சுருட்டிக்கட்டித் தோளில் தூக்கி வைத்துப் புறப்பட்டவர், நின்று கேட்டார்.

“இது தியாகராஜ பாகவதருல்லா? பின்னே ! அவனைப் போல பாட ஆளுண்டா ?”

வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ வெள்ளிமலை
வள்ளலைப் பாடும் வாயால் அறுதலைப்
பிள்ளையைப் பாடுவேனோ எந்தன் சுவாமியைப்……….

“என்ன பாட்டுப்பா இது? எவ்வளவு நாளாச்சு? சாரீரம்ணா அதுல்லா சாரீரம்… நல்லாருக்குடே பேரா! மன்மதலீலையைத் தெரியு மாடே?”

எழுபது வயது தாண்டிய முத்துச்சாமிப் பாட்டாவின் கோரிக்கை. ”மன்மத லீலையை வென்றார் உண்டோ ? என்மேல் உனக்கேனோ பாராமுகம் மன்மத லீலையை வென்றார் உண்டோ ? நின்மதி வதனமும் நீள்விழியும் கண்டு………. பாட்டா இந்தப் பாட்டு கேட்டிருக்கேளா? சுட்டும் விழிச்சுடர்தான் கண்ணம்மா சூரியச் சந்திரரோ ………. “அருமையான பாட்டுல்லாப்பா?” “அதுலே ஒரு எடுப்பு எடுப்பான் பாரும் கோலக் குயிலோசை உனது குரலினிமையடி…”

சுற்றிலும் நல்ல கூட்டம். தூரத்தில் படுத்திருந்தவர்கள்கூட எழுந்து இந்தப் பக்கம் திரும்பி இருந்தார்கள்.

முருகன் கேட்டான். ”அண்ணாச்சிக்கு சிதம்பரம் ஜெயராமன் பாட்டுத் தெரியுமா?”

“தெரியுமா? நமக்கு உசிருல்லா… சோறு தண்ணி வேண்டாமே பாவி பாட்டுண்ணா ! பாட்டா அது? அடேயப்பா!”

குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி காண்பதென்ப தேது?

அதுலே எம்மார் ராதா நடிப்பைப் பாக்கணும்… தாயோளி விள்ளை கையை மடக்கி வச்சுக்கிட்டு காலையும் நொண்டிக்கிட்டு…

நிம்மதி ஏது? எனக்கு நிம்மதி ஏது? செறுக்கிவிள்ள… அது பாட்டு… அது பாட்டு, அது நடிப்பு. இப்பவும் படிக்கானுகளே களுதை கத்துக மாரி… அது என்ன படம்டே? தெய்வப்பிறவியா?

‘அன்பாலே தேடி ஐயன் அறிவுச் செல்வம் தங்கம்’

“சரிண்ணேன்… வடையைத் திண்ணும்… காப்பி ஆறிரும். தம்பிக்கு வெவரம் இருக்குடே! கையோட இன்னொரு தரத்துக்கு வெத்திலையும் வாங்கீட்டு வந்திட்டான் பாத்தேரா?”

“நெல்லேப்பா… நீ ஒரு வடை திண்ணு.” ”எனக்கு வேண்டாம்… அட வேண்டாம்ணா… நீ திண்ணு…”

“ஆங்… என்ன சொல்லீட்டிருந்தேன்… பாட்டுக் கேக்கணும்ணா அந்தக் காலத்திலே கேக்கணும்…

வாராய் நீ வாராய் போகுமிடம்
வெகு தூரமில்லை நீ வாராய்….

“ஓர்மை இருக்காடே…

இப்பம் ஒரு படம்பாத்தேன் பாத்துக்கோ …”

பாலூட்டி வளர்த்த கிளி
பழம் கொடுத்த பார்த்த கிளி
நான் வளர்த்த பச்சைக்கிளி
நாளை வரும் கச்சேரிக்கு…

அதுலே மடக்கி ஒரு பிடிபிடிப்பான் பாத்துக்கோ

செல்லம்மா… என் செல்லம்மா
செல்லம்மா என் செல்லம்மா

“இன்னா பாரு! ஒரு வாடு ஆளுகூடியாச்சு… எவனோ ஒரு கிறுக்கன் பாடுகான் கேப்பம்ணு…”

“சேச்சே… அதொண்ணும் இல்லே… அண்ணன் பாட்டிலே லயிச்சு நிக்கா… பொம்பளையோ கூட தண்ணிக்கொடத்தை இடுப்பிலே வச்சுக் கிட்டு நிக்கா… பாரும்… அண்ணனுக்கு வயசு நாப்பது நாப்பத்தஞ்சு இருக்குமா? இன்னும் சாரீரம் போகல்லே…”

“இப்பம் என்ன சாரீரம்? செத்த சாரீரம்! தம்புடிக்க முடியா? கொண்டாட முடியா? மூச்சுப் பறியமாட்டங்கு…

சந்தனப் பொதிகையில் தென்றெலெனும்
பெண்ணாள்
வந்து வந்து மயக்கி விந்தைகள் புரிகிறாள்
சந்தனப் பொதிகையின்
அல்லிக் கொடியாளுடன்…

“போரும்பா. மூச்சு பறிஞ்சுக்கிடாது”

“அண்ணாச்சி சோமு பாட்டு ஒண்ணு பாடுங்களேன்… மருதமலை மாமணியே…”

“என்னது? சோமு பாட்டா… யம்மாடி… நம்மாமல ஆகாதுப்பா… மூலத்திலேருந்து ரத்தஞ் சாடீரும்… தொண்டையா அது? நல்ல ஆளுடே… ஆளை வேக்காடு வச்சிருவே போலிருக்கே…”

சிறுபையன் ஒருவன் ஓடி வந்து நெல்லையப்பன் பக்கம் நின்றான்.

“யப்பா, ஒன்னை அம்மை கூப்பிடுகா!”

“யாருடா நெல்லேப்பா… உனக்க புத்திர பாக்கியமா? மக்கா எத்தினிடா படிக்கே? ஆறா? ம்… அம்மை சாப்பிடக் கூப்பிட்டு வரச் சொன்னாளோவ்! மணி என்னாச்சு? ரெண்டரை மூனு இருக்கும். சரிடே… நெல்லேப்பா, அப்பம் சாப்பிடப் போ… நான் இனியும் இருந்தா கணக்குத் தீராது… போயிட்டு வாறேன் என்னா! வரட்டுமாடே தம்பி…வாறேன் என்னப்போ !”

கழற்றி மடிமேல் வைத்திருந்த சட்டையைத் துண்டு போல் தோள் மீது போட்டுக்கொண்டு நடந்தார் குத்தாலம் ஆசாரி.

மகன் கையைப் பிடித்துக்கொண்டு வீட்டுக்கு நடக்கையில் அவரையும் சாப்பிடக் கூப்பிட்டிருக்கலாமோ என நினைத்தான் நெல்லையப் பன். ஆனால் கம்மாளன் நம் வீட்டில் சாப்பிடுவானா என்றும் தோன்றியது.

– சதங்கை , 1982

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *