பாவ தகனம்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: January 30, 2016
பார்வையிட்டோர்: 12,219 
 

மனிதர்களுக்குக் கொடுத்த வாக்கைக் காற்றில் பறக்க விடாமல் காப்பாற்றுவதிலும் சத்திய மனோ தர்ம வாழ்க்கை நெறிகளைக் கடைப்பிடிப்பதிலும் அப்பாவுக்கு நிகர் அவரே தான் ஊரிலே அவர் ஒரு பெரிய மனிதனாகத் தலை நிமிர்ந்து நடப்பதற்கு அதுவே முதற் காரணமென்பதை அறிந்து கொள்ளக் கறை படியாத அவரின் வாழ்க்கைப் புத்தகத்தைப் படித்தாலே போதும் அதன் ஒவ்வொரு பக்கத்திலும் இதற்கான அவர் பெற்ற அனுபவங்கள் படிக்கும் போதே உங்கள்: கண் முன்னால் களை கட்டித் தோன்றும் மெய்யறிவு காண்கின்ற அவரின் ஆன்மீக ஞானம் அப்பேர்ப்பட்டது

நான் அறிந்த வரை வாழ்க்கையில் எவ்வளவு தான் சோதனைகள் வந்தாலும் நிலை தடுமாறாத சாந்தி மனதை ஸ்திர புத்தியோடு ஒரு வைராக்கிய தவமாக அவர் கடைப் பிடித்து வருவதைக் காண நேர்ந்த பூர்வ புண்ணிய பலன் மட்டுமே என்னுடையது அவரின் அந்த உயிர் தரிசனமான வாழ்க்கையொளியை முழுமையாகச் சீறு பங்கம் கூட நேராமல் அப்படியே உள் வாங்கிப் பிரதிபலித்துக் காட்டக் கூடிய அளவுக்கு ஒரு முழுமைத் தன்மையை நான் இன்னும் எட்டவில்லையென்பதே என்னுடைய ஒரேயொரு மிகப் பெரிய அளவிலான மனக் குறை

ஆன்மீக மார்க்கமாகச் சிந்தித்தால் மட்டுமே இவ்வாறான மாய நினைப்பொழிந்த முழுமைத் தன்மையை உயிர் பிரகாசமாக எட்ட முடியுமென்பது காலம் கடந்த ஞானமாகவே எனக்குள் பிடிபடலாயிற்று அப்பாவுக்கு நான் ஓரே மகன் எனக்கு மூத்தவளாக தேவகியக்கா இருக்கிறாள் இருவருக்கும் கீழே தம்பி பிரேம் பிரேமானந்தன் என்பது அவன் முழுப் பெயர் சுருக்கமாகப் பிரேமென்று கூப்பிடுவோம்

என்னளவு விஷயங்களைக் கிரகித்துச் சிந்திக்கிற அளவுக்கு அவன் இன்னும் வளரவில்லை அவன் வளர்ந்தால் தான் வாழ்க்கையென்றால் என்ன என்று பிடிபடும் அது பிடிபடாத வரை மேடு பள்ளம் காணாத அந்தச் சுகப் பயணம் இன்ப லாகிரியில் அவனை மயங்க வைத்து அவன் ஒளி படர்ந்த உச்சி வானில் ஏறிப் பறக்கிற மாதிரி அவனின் கண்கள் களிப்புக் கடலில் மிதக்கும் இன்ப இறக்கைகள் அதன் நிழல் கூடத் தீண்டியறியாத வெறுமையுலகம் பிடிபட்ட கணக்கில் என்னுடைய மனநிலை இந்தப் பதினேழு வயதில் வாழ்க்கையின் எதிர் மறையான சூழ்நிலைக்கு முகம் கொடுக்க நேர்ந்து நான் வெகுவாக நொந்து போயிருந்தேன்

தேவகியக்காவை மையமாக வைத்துச் சத்தியத்தையே அதன் புனிதம் கெடச் சாகடிக்கும் ஒரு மிகப் பெரிய சவாலாக அந்தக் கசப்பான வாழ்க்கையனுபவத்தை நான் எதிர் கொள்ள நேர்ந்தது எனது பதின்மூன்று வயதில் மிகவும் களை கட்டி அமர்க்களமாக வீட்டில் நடந்த ஒரு விசேஷம் சரியாகப் பதினான்கு வயதாக இருக்கும் போது அக்கா பருவத்துக்கு வந்ததையொட்டி நடந்தேறிய ஒரு மங்களகரமான சடங்கு அது அப்பா அதைப் பெரிய அளவில் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்

அக்கா என்னை விட ஒரு வயது மூத்தவள் அவளுக்கு மயில் தோகை மாதிரி அத்துணை நேர்த்தியான உடல் வாகு மாநிறம் தானென்றாலும் மெல்லிய கூரான மூக்குடனும் பிரகாசமான ஒளி பொருந்திய கயல் விழி அழகுடனும் பார்ப்பதற்கு ஒரு தேவதை மாதிரி அவள் அவளின் பூப் புனித நீராட்டு விழாவின் போது ஊரே திரண்டு வந்த மாதிரிப் பந்தல் கொள்ளாத கூட்டத்தைக் கண்டு மூச்சுத் திணறுகிற பரவசக் கடல் என்னுள்

இதை வெளிப்படையாக மேளம் கொட்டிக் கொண்டாடுகிற நிலையில் நான் இருக்கவில்லை இயல்பிலேயே நான் மிகவும் கூச்ச சுபாவம் கொண்டவன் நண்பர்களற்ற மனதுக்கு மட்டுமே பிடிபடுகிற தனிமையுலகில் நான் ஒரு ஏகாந்தி போல இருந்து வருபவன் அக்காவின் இரண்டாம் தண்ணீர் வார்ப்புச் சடங்கின் போது அவளருகே சற்றுத் தள்ளிப் பந்தலினுள்ளே கரை ஒதுங்கி நானும் என் தனிமையுமாக நின்றிருந்தேன்

அக்கா மேடையிலே அலங்கார தேவதையாக வீற்றிருந்தாள் எங்கள் பெரிய வீட்டிற்கு முன்னால் முற்றத்தை நிறைத்துக் கொண்டு அந்தப் பந்தல் அதன் ஜோடனைகள் கண் கொள்ளாக் காட்சியாக இருந்தது அப்பாவுக்கு ரெயில்வேயில் வேலை அது ரயில் ஓடின காலமென்றபடியால் தான் அப்பா ஒரு ஸ்டேசன் மாஸ்டராக மல்லாகத்தில் பணி புரிந்து வந்தார் தினமும் நடைப் பயணமாகவே அவர் கடமை செய்யப் போய் வருவார் அவர் சைக்கிள் ஓடி நான் பார்த்ததிலை

அவருக்குச் சுமரான சம்பளம் தான் ஆகவே சேமிப்பு என்று எதுவும் இல்லாத நிலையில் தான் சீட்டுப் பிடித்த காசு போக வட்டிக்குக் கடன்பட்டுத்தான் அக்காவின் மங்கள காரியம் இத்துணை சிறப்பாக நடக்கலாயிற்று இதில் அம்மாவுக்குத் தலை கால் புரியாத மகிழ்ச்சி விருந்து படைக்கிற உற்சாக கதியில் அவள் இயங்குவது வெளிப்படயாகவே தெரிந்தது

நான் இன்னும் பழைய நினைவுகளிலேயே மயக்கம் கொண்டு நின்றிருந்தேன் அக்கா இனி என்னோடு விளையாட வர மாட்டாள் அந்தச் சிறு பிள்ளைத்தனமான உயிர்ப்பு நிறைந்த சகாப்த காவியம் முற்றாக ஒழிந்து போன துக்கம் எனக்கு மட்டும் தான் அக்காவோ அதையே அடியோடு மறந்து போய் விட்ட கணக்கில் இளமைக் கனவு மயக்கம், பிடிபட்ட களிப்புடன் அவள் என்னை விட்டுத் தூர விலகிப் போய் விட்ட வெறுமை தாளாமல் அழுகை கனக்கும் மனதுடன் நான் நிற்கும் போது தான் ஓர் அசிரீரி வாக்காய் சின்ன மாமாவின் குரல் ஒரு சத்தியப் பிரகடனமாய் அவள் முன்னிலையில் ஒலிப்பதை நான் கேட்க நேர்ந்தது

எனக்கு அப்பா வழி மாமா ஒருவர் இந்தச் சின்ன மாமா அம்மாவின் இரத்த சொந்தம் அம்மாவின் தாய் மாமன் அவர் பெயர் சத்திய பாலன் அம்மாவுக்குத் தான் அவர் மாமா முறை எங்களுக்கும் அப்படியே கூப்பிட்டுப் பழகி விட்டது அம்மா மீது அவர் உயிரையே வைத்திருந்தார் அம்மா குழந்தையாய் இருக்கும் போது தோள் மீதும் மடி மீதும் அவளைச் சுமந்து அன்போடு வளர்த்தெடுத்த பாசம் காரணமாகவே அவளோடு உறவு கொண்டாடி மகிழ்வதற்காக அடிக்கடி அவர் எங்கள் வீட்டிற்கு வந்து போவார் சுன்னாகத்தில் அவர் இரும்புக் கடை வைத்திருந்தார் அவருக்குப் பஞ்சபாண்டவர் மாதிரி ஐந்து மகன்கள் ஐவரையும் தன் போலில்லாமல் நன்கு படிக்க வைக்க வேண்டுமென்பது அவரின் வாழ்க்கை இலட்சியமாகவே இருந்தது அவரின் மூத்த மகன் கண்ணன் அவர் விரும்பியவாறே டாக்டருக்கு எடுபட்டுப் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் முதல் வருடம் படித்துக் கொண்டிருந்தான்

அக்காவின் சடங்கு நாளன்று அவன் வராமல் போனது எனக்குப் பெரிய மனக்குறையாகவே இருந்தது வயது வித்தியாசம் எங்களுக்கிடையே நிலவினாலும் நானும் அவனும் நண்பர்களாகவே பழகிய அந்த நாட்களை என்னால் இன்னும் மறக்க முடியவில்லை அவன் படிப்பு முடிந்த பின் ,இந்த நெருக்கமான பாச உறவுகள் ஒரு வேளை வெறும் கனவாகக் கூடப் போய் விடலாம் யார் கண்டது? ஆனால் மாமாவின் மனோநிலை இன்னும் மாறவில்லையென்பதைப் புடம் போட்டுக் காட்டுவது போலவே அன்றைய திருநாளில் அக்காவின் அழகைப் பார்த்து மனம் குளிர்ந்து வாய் தவறி அவர் உதிர்த்து விட்ட பொன் மொழிகளும் அமைந்தன அது எனக்கல்ல அக்காவை வாழ்வின் சிகரத்துக்கே அழைத்துச் செல்கிற மாதிரி அப்போது சத்தியப் பிரகடனமாகத் தன்னை மறந்து அவர் கூறி விட்ட வார்த்தகளின் கனம் அவ்வளவு பெறுமதிமிக்கதாக அக்காவை மட்டுமல்ல என்னையும் உச்சி குளிர வைத்திருக்கிறது இது நடக்குமா?” அப்போது நாங்கள் எல்லோரும் மகிழும்படியாக அவர் என்ன சொன்னார் தெரியுமா?

“தேவகி நீதான் என்ரை மருமகள் இப்பவே சொல்லிப் போட்டன் கண்ணன் உனக்குத் தான் மாப்பிள்ளை “

அவர் அவ்வாறு இன்பலாகிரியில் மெய் மறந்து கூறியதைக் கேட்டுத் தேவர்களே பூமாரி பொழிந்து ஆசீர்வதிக்கிறதை அக்கா கண்டாளோ என்னவோ? நான் உணர்ந்தேன் இது என்னுடைய மிதப்பு உச்சி தொட்டு வந்ததில் ஏற்பட்ட கர்வ மாய வலை உண்மையில் அக்கா என்னை விட ஒருபடி மேலே அவள் நின்ற உச்சி வானம் என் கண் பார்வைக்கு அப்பாற்பாற்பட்டதாய் நான் உணர்ந்த்தேன் அப்போது அவள் மனதில் ஏற்பட்ட எல்லை தாண்டிப் போகும் மகிழ்ச்சி வெள்ளம் வெறும் கற்பனையன்று

மாமா அப்போதைய மனோ நிலையில் முன் யோசனையின்றி அதைக் கூறியிருந்தாலும் அக்கா உட்பட எங்கள் எல்லோருக்குமே அது வேத வாக்குத் தான் கடவுள் அருளிய வேதம் ஒரு போதும் பொய்ப்பதில்லை மாமாவின் வாக்கும் அப்போது அவர் கூறிய நம்பிக்கையூட்டக் கூடிய அலங்கார வார்த்தைகளும் அது போல் பொய்த்துப் போகாதென்பதே எங்களின் மிகப் பெரிய நம்பிக்கையாக இருந்தது

சாகாவரம் பெற்ற சத்திய வாக்குக் கொடுப்பதற்கு அவர் ஒன்றும் கடவுளல்ல மனிதனை விடக் கேவலமான மிருகம் தான் அவர் என்பது காலம் கடந்த ஞானமாகவே எங்களுக்குப் புரிந்தது

மாமாவின் பேச்சை நம்பி அக்காவின் கல்யாணம் ஒரு கடவுள் வரமாக நிச்சயிக்கப்பட்ட நிலையில் கண்ணனையே தனது உலகமாக மனதில் வரித்துக் கொண்டு விட்ட பெருமித நடை மிளிர அக்கா கார் ஏறிக் கல்லூரி போய் வருவது எங்கள் எல்லோர் முன்னிலையிலும் கண் கொள்ளாக் காட்சியாகத் தோன்றி எங்களுக்குப் பரவசம் தருவதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது இது உயிர் திரிந்த வெறும் காட்சி நிழலாகத் தோன்றி அந்தப் பொய் எரிக்கும் சூடு தாங்காமல் நாங்கள் அதிலும் குறிப்பாக என்னுடைய பிறருக்குக் கேடே நினையாத பளிங்கு மனமே முற்றாக நொறுக்கிக் கருகி அழிந்துபோக அப்படியொரு விபரீதச் சூழ்நிலை வருமென்று நான் கனவில் கூட நினைத்திருக்கவில்லை அப்படி எதிர் மறையாகச் சிந்திக்கிற பழக்கம் கொண்டவனல்ல நான் எப்போதும் நல்லதையே நினைத்து பழகியிருக்கிற எனக்கு அந்தக் கசப்பான புது அனுபவம் பெரும் சவாலாகவே அமைந்தது

படிப்பு முடிந்து டாக்டர் என்ற முக விலாசமான கெளரவக் களை கொண்ட ஒரு கம்பீர புருஷனாய் ஊருக்குள் கண்ணண் கால் பதித்த நேரம் யாழ் போதனா வைத்தியசாலையில் பணி புரிய அவன் போய் வந்து கொண்டிருந்தான் அடுத்து என்ன அவன் கல்யாணம் தானே அவன் வந்து நீண்ட நாளாகியும் மாமா இது பற்றிப் பேச வராமல் போனதில் எனக்குண்டான ஏமாற்றத்தை விட அக்காவே மிகவும் மனமுடைந்து போனாள் கண்ணன் கூட அவளைத் தேடி வரவில்லை அவளோடு நிச்சயிக்கப்பட்ட அவன் கல்யாணம் உயிர் கொண்டு நிற்பது உண்மையானால் வீட்டிற்கு வந்த நாளன்றே அவன் அக்காவைப் பார்க்க ஓடோடி வந்திருப்பானே

இடையிலே என்ன நடந்ததென்று பிடிபடாத மயக்கமாக இருந்தது நாங்கள் சற்றும் எதிர்பாராத நிலையில் திடீரென்று ஒரு நாள் மாமா முகம் களையிழந்து வீட்டிற்கு வந்த சமயம் அக்கா அவர் கண்களுக்குத் தென்படாத ஒரு மறை பொருள் காவியமாய் அறை யன்னலருகே நின்று வானத்தையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பது கண்கள் இருண்ட ஒரு காட்சி மயக்கமாய் என்னுள் கவிந்து மூடுவதை என்னால் நன்றாகவே உணர முடிந்தது

நீண்ட நாட்களுக்குப் பிறகு அவரைக் காண நேர்ந்த மகிழ்ச்சியுடன் வேறு எதுவும் புத்திக்கு எட்டாமல் அம்மா அவரை வரவேற்பதிலேயே குறியாக இருந்தது எனக்குப் பெரும் ஏமாற்றத்தையே அளித்தது அப்பாவை நிமிர்ந்து பார்த்தேன் அவர் முகத்தில் சலனம் விட்டுப் போன ஒளிக் கண்கள் பிரகாசிக்க எதுவுமே நடவாதது போல அவரின் கம்பீரச் செறிவு கொண்ட அந்த மெளன இருப்பு நிலையைப் புரிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றம் தலை தூக்க என் கேள்விக் கணையை அவர் மீது தொடுத்தேன்

“அப்பா கையில் ஏதோ பத்திரிகை வைச்சுக் கொண்டு மாமா வந்திருக்கிறார் அது ஏன் என்று கூடக் கேக்கத் தோன்றாமல் நீங்கள் இருக்கிறதைப் பார்த்தால் எனக்கு நெஞ்சு கொதிக்குது”

“எனக்குப் பதிலாய் நீயே கேளேன் இப்ப என்ன வந்தது “

“சரி நீங்களே நானாக முடியாது இது என்ரை தார்மீகக் கடமையென்ற பொறுப்பை நினைச்சு ஆன்மீக வாதம் பேசித் தப்பிக்க விரும்பாமல் மாமாவைத் தலை நிமிர்ந்து நேராகவே கேக்கிறன் என்ன இது கையிலை அக்காவின் கல்யாண அழைப்பிதழா?”

“இல்லை இது வேறை “

அப்படியென்றால் உங்கடை நினைப்புக்கு சவால் விட்டுக் கேக்கிறன் என்ன இது ?’

“கண்ணனின்ரை கல்யாணம் வாற மாதம் வைச்சிருக்கிறம் அதுக்கான அழைப்பிதழ் தான் இது விசாகா! மறக்காமல் நீயும் வந்திடு “

“ அது சரி பொம்பிளை ஆர் மாமா? அக்காவை விட நல்ல அழகே “

“ஓம் உன்ரை அக்காவை விட நல்ல வடிவு சிறாப்பர் கந்தசாமியை உனக்குத் தெரியும் தானே அவரின்ரை மகள் தேவியை நீ கூடக் கண்டிருப்பாய் அவ நிறையச் சீதனத்தோடையும் வாறா “

ஓ பிறகென்ன அது தான் அக்காவுக்குச் செய்து கொடுத்த சத்தியத்தையே மறந்து கண்ணனுக்கு இன்னொரு பொம்பிளையா?அப்ப அக்காவை என்ன செய்கிறது? சொல்லுங்கோ மாமா “

“அதை என்னை ஏன் கேக்கிறாய்”

“நல்லாய்க் கேட்டியள் மாமா உங்களிட்டை கேக்காமல் வேறை ஆரிட்டைக் கேக்கிறது இந்தக் கேள்வியை நாங்கள்?. அக்காவைப் பாத்துச் சத்தியம் செய்து அப்ப சொன்னியளே ஒரு வார்த்தை இல்லை தெரியாமல் தான் கேகிறன் அப்ப அக்காவைப் பாத்துப் பெரிசாய் அந்தக் கதை சொன்னியளே கண்ணன் உனக்குத் தான் என்று, வாய் நிறையப் பொய்யை வைச்சுக் கொண்டு நீங்கள் சொன்னதை நம்பி மனசிலை ஆசையை நிறைச்சு வைச்சுக் கொண்டு இருக்கிற அவவை மறந்து போட்டு இன்னொரு கல்யாணமா கண்ணனுக்Ìகு? இதை நடத்த எப்படி மனசு வந்தது உங்களுக்கு? அவ விடுற கண்ணீர் உங்களை நிச்சயம் எரிச்சுப் போடும். இதை நான் இருந்து பாக்கத் தான் போறன் “

“போடா போ பெரிய சத்தியவான் சாபம் போடுறாராம் உன்ரை அப்பாவே இதைப் பற்றி ஒன்றும் சொல்லேலை”

“போதும் நிறுத்துங்கோ மாமா அப்பாவை இதிலை இழுக்க வேண்டாம் அப்புறம் உங்கடை பாவத்துக்குப் பச்சோந்தித்தனத்துக்கு அவரும் துணை போற மாதிரி ஆகி விடும். அவர் இது பற்றி வரிந்து கட்டிக் கொண்டு உங்களோடு சண்டை போடுற ஆளாய் இருந்தால் எனக்கென்ன என்று நான் விலகிப் போயிருப்பேன். எப்பவும் அவர் எதற்காகவும் வாய் திறந்து நான் பார்த்ததில்லை எதிர் மறையாகச் சம்பவங்கள் நடக்கிற போதெல்லாம் வாய் நிறையக் களை கொண்டு பிரகாசிக்கிற சிரிப்பைத் தான் அவர் முகத்தில் நான் பார்த்திருக்கிறன். இப்பவும் அவர் முகத்தில் அதீத களை கொண்டு மின்னுகின்ற இந்தச் சிரிப்பு அக்கா விடயத்தில் கொடுத்த வாக்கை மீறி நிலை தவறிய ஒரு குற்றவாளியாய் உங்களை இனம் கண்டு குமுறுகின்ற தார்மீக வழியிலான அவரின் சத்தியாவேசத்தின் உச்சக் கட்ட வெளிப்பாடே மெளன முத்திரையான அவருடைய இந்தச் சிரிப்பு. கடவுளே நேரில் நின்று கொல்வது போல எங்களின் பார்வைக்கு எட்டாத அவரின் இந்த ஆன்ம பலம் இது தெரியாமல் உங்களின் மிகவும் கீழ்த்தரமான தரங்கெட்ட செயலுக்கு அப்பாவின் வாய் திறவாத இந்த மெளனம் சிரிப்பு துணை போகிற ஓர் அங்கீகாரக் குறியீடு தான் என்று நீங்கள் நம்ப வேண்டாம் உங்கள் கறைகளையே எரிச்சுச் சாம்பலாக்கத் தான் கண்களிலே கண்ணீர் கரிக்க அவருடைய இந்தச் சிரிப்பு” ஒரு பாவியைக் கொல்ல இது போதும்”

உணர்ச்சி முட்டிப் பேசி விட்டு நான் நிறுத்திய போது ஓர் ஆழ்ந்த அமைதி நிலவியது. இதற்கு மேல் பேச எனக்கு வார்த்தைகள் வரவில்லை. அப்பாவைப் பற்றி நான் அறிந்து வைத்திருகின்ற உண்மைகளின் சாரம் பிடிபடாத மயக்கத்தோடு மாமா குரல் வரண்டு கேட்டார்

“விசாகா! தூ வெறும் சிரிப்பு ஆளைக் கொன்று போடுற அளவுக்கு அத்துணை பலம் உண்டா அதுக்கு? என்னைப் பயமுறுத்தத் தானே உன்ரை இந்த வியாக்கியானங்களெல்லாம் வீணாய் மனம் கொதிச்சால் உனக்குத் தான் பாதிப்பு . உன்ரை அக்காவின்ரை கல்யாணம் கண்ணனோடு தான் என்று எப்ப நான் சொன்னனான்? அதை முதலிலை சொல்லு”

“சரிதான் காசைக் கண்ட புத்தி மாறாட்டம் உங்களுக்கு அதைச் சாட்சி கொண்டு நிரூபிச்சு என்ன ஆகப் போகுது எல்லாம் முடிஞ்சு போச்சு இப்ப அக்கா விடுற கண்ணீருக்குக் காலம் பதில் சொல்லும் “

காலமல்ல கடவுள் தான் என்கிற மாதிரி அப்பா மீண்டும் சிரிக்கிற ஒலி மட்டுமல்ல நான் நம்பியிருப்பது போல் ஒப்பற்ற மெளன சாந்நித்யத்தின் உயிர் கொண்ட ஒரு தெய்வீக வரம் போல உள்ளத்தை ஊடுருவி உயிரையே பஸ்மமாக்கி ஒழித்து விட்டுப் போகின்ற அதன் ஒளியும் கண்டு கண் கூசி நிலை சரிந்த மயக்கத்துடன் மாமா என்னை எதிர்த்துப் பேச வராமல் வாசல் பார்த்து நடையைக் கட்டினார் அப்போது அவரைத் துரத்திக் கொண்டு போகிற மாதிரி இருள் கனத்த ஓர் அவலக் குரலாக அக்கா அழுவது மட்டும் தனியாகக் கேட்டது

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *