கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 9, 2023
பார்வையிட்டோர்: 5,464 
 
 

அன்று தீப்பற்றிக் கொள்ளாத ஞாயிற்றுக்கிழமை. பரபரப்பு இல்லை. புரண்டு போத்திக் கொண்டு எட்டு வரை தூங்கலாம். டி.வி. பார்க்கலாம். காயமின்றி ஷேவ் செய்யலாம். மதியம் தூங்கலாம். மாலையில் குளிக்கலாம்.

மனைவி திவ்யா மணக்க மணக்கப் போட்டிருந்த காஃபியைக் குடித்துவிட்டு நாக்கில் இனிப்புச் சுவை குறையுமுன் ஒரு நிக்கோடின் குச்சியையும் தீப்பெட்டியையும் எடுத்துக் கொண்டேன். மொட்டை மாடி அதற்கெல்லாம் வசதியாக இருந்தது.

மாடி செல்லும் முன் பெட்ரூமை எட்டிப் பார்த்தேன். என் ஐந்து வயது கீர்த்தனா கடந்த ஆறு நாட்களுக்கான அதிகாலைத் தூக்கத்தை நிறைவு செய்து கொண்டிருந்தாள். சத்தமில்லாமல் கதவைச் சாத்திவிட்டு மாடிக்கு வந்தேன். முனையைப் பற்றவைத்துக் கொண்டு நுரையீரலை நிரப்பினேன்.

சென்னைக்கு வந்து ஒன்பது மாதங்கள். பிரபலமான கம்ப்யூட்டர் நிறுவனத்தின் கோவை கிளையிலிருந்து சென்னை மெயின் பிராஞ்சுக்கு மாற்றியிருந்தார்கள். இங்கு எல்லாமே புதிது. மக்கள், பேச்சு, வேலை, நடவடிக்கை, நட்பு, ட்ராஃபிக் எல்லாமே… அதிலும் சொந்த வீடு இல்லை என்றால், மாதமொருமுறை ‘TOLET’ போர்டைத் தேட வேண்டியதுதான்.

சிகரெட்டைப் பாதியோடு மிதித்து அணைத்துவிட்டு, ஹால்ஸ் போட்டுக் கொண்டு கீழே வந்தேன். திவ்யா காய்கறி கேரி பேகுடனும் அன்றைய தினசரியுடனும் வந்தாள். பேப்பரைக் கொடுத்தாள்.

“இன்றைக்கு என்ன ஸ்பெஷல்?”

“மீன்… சங்கரா மீனே… கிலோ இருநூறு சொல்றாங்க… அரைகிலோதான் வாங்கினேன்… போதுமில்ல?”

“தாராளமா போதும். கீர்த்துக்குட்டி எழுந்துட்டாளா?”

“இல்லை…” பேப்பரைப் பிரித்து தலைப்புகளை மேலோட்டம் பார்த்தேன்.

“ஏம்மா… கீழே ஒரே சத்தமா இருக்குது… என்னாச்சு?”

வழக்கம் போலத்தாங்க… எதிர்வீட்டு பால்காரம் மாவுக்கும், அவங்க மருமகளுக்கும் சண்டை.

“என்னதான் அவங்க பிரச்னை?”

“மாமியார் வீட்டுல இருக்கிறது மருமகளுக்குப் பிடிக்கலை. என்ன காரணம் காட்டியாவது வீட்டை விட்டு விரட்டிடணும்னு முடிவு பண்ணிட்டா… அதுக்குத்தான் இந்த ஆர்ப்பாட்டம்.”

“வயசானவங்க எங்க போக முடியும். யோசிக்க வேணாம். அந்தம்மாவோட பையனும் கேட்டுக்கிறதில்லையா?”

“என்னத்த கேட்க முடியும். நீங்களே பாத்திங்கில்ல ரோடுன்னு கூடப் பார்க்காம புருஷனை என்ன மாதிரி அசிங்கம் அசிங்கமா திட்டிச்சின்னு.”

“கூடப் பொறந்தவங்க யாரும்… கேட்க மாட்டாங்களா?”

“அந்தம்மாவுக்கு அவர் ஒரே பையன் தான். தவமிருந்து பெத்திருப்பாங்க பாவம். வீடு வாசல்னு சேர்த்து வெச்சி என்ன பண்றது. கடைசி காலத்துல ஒரு வாய் சோறுக்கும் கட்ட துணிக்கும் கலங்குறாங்க.”

மீன் கவரை எடுத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தாள் திவ்யா.

பால்காரம்மா பால் போடும் அம்மா வாகத்தான் எங்களுக்கு அறிமுகமானார். குடிவந்த இரண்டாம் நாள். அதிகாலை ஆறு மணிக்கு காலிங்பெல் ஒலிக்க, சின்னதும், பெரியதுமான பால்பாக்கெட்டுகளுடன் நின்றிருந்தார்.

“தம்பி… இங்க நாலஞ்சு தெருவுக்கு நான்தான் பாக்கெட் போடுறேன். உங்களுக்கும் தேவைன்னா சொல்லுங்க. நாளையிலேர்ந்து கொண்டு வந்து போடுறேன். மாசம் ஐம்பது ரூபாய் சேர்த்துக் கொடுத்தா போதும்” என்றார்.

அதைச் சொல்வதற்குள் இரண்டு முறை வலது இடதுக்குமாக இடுப்புக்குப் பாத்திரத்தை மாற்றிக் கொண்டார். காலம் காலமாகப் பால் போடும் பெண்ணாகத் தெரியவில்லை. ஏதோ வறுமைக்குத் தள்ளப்பட்டு வாழ்ந்து கொண்ட குடும்பத்து முதியவள் போல இருந்தாள்.

கேட்ட பாவனையில் ஐம்பது ரூபாய் விட்டுப் போய்விடக் கூடாதே என்ற கவலை தெரிந்தது.

நான்கைந்து வீடுகள் தள்ளிப் போனால் மளிகைக் கடையிலேயே பால் கிடைக்கும் என்றாலும் அந்த அம்மாவுக்கு மாதம் கொடுக்கும் ஐம்பது ரூபாயில் ஒன்றும் குறையப் போவதில்லை.

“சரிங்கம்மா நாளை லேர்ந்து போடுங்க. முன்னாடியே பணம் அட்வான்ஸ் கட்டணுமா?”

“வேண்டாம்மா. எதிர்த்த மாதிரிதான் என் வீடு. இந்தக் கெழவிய ஏமாத்தி ஓடிப்போயி மாடியா கட்டப் போறீங்க. எத்தனை லிட்டர் தேவைப்படும் தம்பி?”

“ஒரு லிட்டர் போதும்மா. ரெண்டு அரையா போட்டுடுங்க.”

“சரிப்பா. கேட்டுல ஒரு பை மட்டும் கட்டிவைங்க பால் போட்டதும் பெல் அடிக்கிறேன். எப்பவேணாலும் எடுத்துக்கங்க” என்று தொழில் விருத்தியான சந்தோஷத்தில் இறங்கிப் போனார்.

இன்று வரை அவர் பால் போடுவதோடு, மதிய நேரங்களில் திவ்யாவுடன் பேச்சுத்துணைக்கு இருப்பார். மகன், மருமகளைப் பற்றிய மனக்குறைகளைக் கொட்டுவார். அவர் கணவருடனான பிரியம், அவர் இருந்த வரைக்குமான கவனிப்பு எல்லாம் ஒன்று விடாமல் சொல்லுவார். கீர்த்தனாவும் பாட்டி பாட்டி என ஒட்டிக் கொண்டாள். நான் வெளியூர் செல்லும் நேரங்களில் வீட்டில் வந்து படுத்துக் கொள்வார். கீர்த்தனாவைப் பள்ளியிலிருந்தும் அழைத்துக் கொண்டும் வந்திருக்கிறார். வேண்டாம் வேண்டாமென மறுத்தும் கேட்காமல் காய்கறி நறுக்குவது, மீன் சுத்தப்படுத்துவது, கோதுமை அரைத்துக் கொடுப்பது என சின்னச் சின்ன உதவிகளைச் செய்வார்.

ஒருநாள் மகன் குடும்பத்துடன் திருப்பதி சென்றபோது வீட்டில் தனியாகக் குளிர் ஜுரத்தில் முனகிக் கொண்டிருந்த பால்காரம்மாவை திவ்யா தான் ஆஸ்பிடலுக்கு அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்தாள். திரும்பி வந்த மகன் விஷயத்தைக் கேள்விப்பட்டு ஒரு தேங்க்ஸ் கூட சொல்லவில்லை. காப்பாற்றிய கோபமோ என்னவோ.

ஒரு பண்டிகையின் போது அந்த அம்மாவுக்கும் ஒரு நூல் புடைவை எடுத்துக் கொடுத்தேன். கட்டிய அன்று பெரிய ரகளை. வீடுவீடா போய் துணி பிச்சை கேட்குறியா, கட்டிக்கத் துணி எடுத்துத் தரக்கூடவா வக்கத்துப் போயிட்டோம்,” என்று ஒன்றுமில்லாத விஷயத்துக்கு பெரிதாகத் தெருவையே வேடிக்கை பார்க்க வைத்துவிட்டாள் மருமகக்காரி.

அந்த அம்மாளின் ஒவ்வொரு நாளும் நரகமாகத்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. என்னங்க” திவ்யா சமையல் அறையிலிருந்து குரல் கொடுத்தாள்.

சென்றேன்.

“என்ன?”

“எங்கப்பா நேத்து ஃபோன் பண்ணியிருந்தாரு. ஊர்ல இருந்த காட்டை வித்துட்டாங்களாம். அதைப் பங்கு பிரிச்சதுல எனக்கு இருபது ரூபாய் வருதாம். என்ன பண்ணலாம்?”

“உனக்கு என்ன தோணுதோ செய்ம்மா.”

“எத்தனை காலத்துக்கு வாடகை வீட்டிலேயே காலம் தள்ளுறது. நமக்குன்னு சொந்த வீடு, வாசல்னு இருக்க வேணாமா?”

“வேணும்தான். இருபது லட்சத்தை வெச்சிக்கிட்டு சென்னைல வீடு வாங்க முடியாது. வாசல் மட்டும்தான்…”

“உங்க ஆஃபீஸ்ல லோன் போடுங்க. உங்கப்பாகிட்ட பணம் கேளுங்க. ஐம்பது அறுபதுல வாங்க முடியாதா…”

“முடியும்மா… நல்ல ஐடியாதான். முயற்சி பண்றேன்.”

அடுத்த மாதமே பால்காரம்மாவிடமிருந்து அந்தச் செய்தி வந்தது. அவரது மகன் வீட்டை விற்றுவிட்டு மனைவியின் சொந்த ஊரில் செட்டிலாகப் போவதாகக் கூறினார்.

பால்காரம்மாவின் வீடு இருபது ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாக இருந்தாலும், பார்க்க லட்சணமாகத்தான் இருந்தது. திவ்யாவுக்கும் வீடு பிடித்திருந்தது.

நேராக பால்காரம்மாவின் மகனைப் பார்த்துப் பேசினேன்.

“இங்க பாருங்க சார். புரோக்கர்கிட்ட போனா கமிஷனுக்காக விலையை ஏத்தி விட்டு நீங்க விற்க முடியாத மாதிரியும், நான் வாங்க முடியாத மாதிரியும் பண்ணிடுவாங்க. அவங்களுக்குக் கொடுக்கறதை நாம பிரிச்சுக்குவோம். அதனால என்ன விலையோ சொல்லுங்க. கூடக் கொறைச்சி நாமளே பேசி முடிச்சுக்குவோம்.”

பின்னால் நின்றிருந்த மனைவியை ஒருதரம் திரும்பிப் பார்த்துவிட்டுத் தலையாட்டினார்.

பல தொகைகள் பேசப்பட்டு பின் ஐம்பது லட்சம் என முடிவானது. ஒரு நல்ல நாளில் பத்திரப்பதிவும் பணம் செட்டில் செய்வதாகவும் முடிவாயிற்று.

அந்த நேரத்தில் அதைக் கேட்கக் கூடாதுதான் இருந்தாலும் மனம் தாங்காமல் கேட்டு விட்டேன்.

“அம்மா உங்க கூடவே வர்றாங்களா…?”

“இல்லைங்க சார். கிராமத்துல எதுக்கு? நாற்பது வருஷமாய் இங்க பழகிட்டு, திடுதிப்புன்னு புது இடத்துக்குக் கூட்டிட்டுப் போனா அந்தரத்துல விட்ட மாதிரி ஆயிடும். அதனால ஒரு நல்ல முதியோர் இல்லத்துல விட்டுட்டு மாதா மாதம் பணம் அனுப்பலாம்னு இருக்கோம். ஆறு மாதத்துக்கு ஒரு தடவை வந்து பார்த்துட்டும் போகலாம்” என்றார்.

சுவரின் மூலையில் ஒட்டி அமர்ந்திருந்த பால்கார அம்மா முந்தானையில் கண்களை ஒற்றியபடி பேச எதுவுமில்லை என்பது போல இருந்தார்

பேரம் திருப்தியாக அமைந்ததால், பால்காரம்மா மருமகள் கொண்டு வந்து கொடுத்த காஃபியைக் குடித்துவிட்டு வெளியே வந்தேன். தம்பி… தம்பி…” என்று அழைத்தபடி பின்னாலேயே வந்தார் பால்காரம்மா. நின்றேன்.

“இந்த வீட்டைக் கட்ட கொஞ்சநஞ்ச மில்லப்பா. பார்த்துப் பார்த்து இழைச்சிக் கட்டினது. எம்புள்ள விக்கிறேன்னு சொன்னதும் எனக்கு உசுரே போயிடுச்சு. நீங்க வாங்குறீங்கனதும் மனசுக்கு ஆறுதலாய் இருக்கு” சற்று நேர அமைதிக்குப் பின் தம்பி எனக்காக ஒரு உதவி செய்வியா?”

“என்னம்மா செய்யணும் சொல்லுங்க…?”

“இந்த வீட்டுல எம்புருஷனோடு சேர்ந்து சாகத்தான் முடியலை. அவர் வாழ்ந்த இந்த வீட்டுலயாவது கொஞ்ச காலம் இருந்துட்டுக் கண்ணை மூடிடறேனே… எங்கயாச்சும் ஒரு மூலையில இருக்க எடம் கொடுப்பா.”

“கும்பிட்ட அவரின் கையைப் பிடித்துக் கொண்டேன். சரிங்கம்மா” என்று விடுவித்தேன்.

நடந்த அனைத்தும் திவ்யாவிடம் சொன்னேன். மறுப்பு ஏதும் காட்டவில்லை. அத்தோடு இன்னொரு யோசனையும் இருந்தது. செலவோடு செலவாக இரண்டு லட்ச ரூபாயை பால்காரம்மா பெயருக்கு ஃபிக்ஸட் டெபாஸிட் செய்து, அதில் வரும் வட்டித் தொகை, அவருக்கு உதவியாக இருக்கும்படி செய்ய வேண்டும்.

இன்னும் ஒரு வாரத்தில் வீட்டைக் காலி பண்ணிக் கொடுப்பதாக பால்காரம்மா மகன் கூறினார். நினைத்த படியே பால்காரம்மா பெயரில் இரண்டு லட்ச ரூபாயை டெபாஸிட் செய்தேன். பத்திரப்பதிவு, திவ்யா பெயரில் செய்யப்பட்டது. எல்லாம் முடிவடைந்த நிலையில், அன்று காலை பால்காரம்மாவையும் அவருக்கான உடைகளையும் விட்டுவிட்டு அவரின் மகன் குடும்பம் வீட்டுப் பொருட்களை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்பிப் போனார்கள்.

அன்று மதியமே நாங்களும் பால் காய்ச்சிக் குடிவந்தோம். ஒவ்வொரு பொருட்களாக புது வீட்டில் கொண்டு வந்து சேர்த்தோம். கீர்த்துக்குட்டிக்கு சந்தோஷத்தில் துள்ளிக் கொண்டிருந்தாள்.

பால்காரம்மாவுக்கு மாடியென்றால் படியேறும் சிரமம் இருக்கும் என்பதால் ஏற்கெனவே அவர் இருந்த கிணற்றை ஒட்டிய அறையையே ஒதுக்கிக் கொடுத்தேன். தம்பி என் வயித்துல நீ புள்ளையா பொறந்திருக்கக் கூடாதா” என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தார். இரவு சப்பாத்தி சாப்பிட்டு விட்டு அந்த அறையில் போய்ப் படுத்தும் கொண்டார்.

மறுநாள் அதிகாலை கதவு தட்டும் ஓசை கேட்டு நெஞ்சின் மேலிருந்த கீர்த்திக் குட்டியின் கையை விலக்கிவிட்டு எழுந்து வந்து கதவைத் திறந்தேன்.

பால்காரம்மா துணிகள் திணிக்கப்பட்ட பையோடு நின்றிருந்தார்.

“என்னம்மா… பையோடு எங்க கிளம்பிட்டீங்க?”

தலைகவிழ்ந்தபடி சொன்னார்.

“எம் புள்ளைகிட்டேயே போறேம்பா.”

“அவருதான் உங்களை வேணாம்னு விட்டுட்டுப் போயிட்டாறேம்மா.”

“இப்போது என் முகம் பார்த்தே பேசினார். அம்மாவை வேணாம்னு வெறுத்து விட்டுட்டுப் போற பிள்ளைங்க இருக்கலாம்பா… பிள்ளை வேணாம்னு ஒதுக்குற அம்மா இருக்க முடியுமா…”

சட்டையை மாட்டிக்கொண்டு பைக் சாவியுடன் வெளியே வந்தேன்.

கோயம்பேடு பஸ் நிலையத்தில் மருமகளின் ஊரைக் கேட்டு, சிதம்பரம் போகும் பஸ்ஸில் அமரவைத்து ஆயிரம் ரூபாயைக் கையில் கொடுத்தேன். கண்டக்டரிடம் இடம் பார்த்து இறக்கிவிடச் சொன்னேன்.

வீடு வந்தேன். வாயில் ஓரமாக பைக்கை நிறுத்திவிட்டு படியேறப் போனேன். தெருவில் ஐஸ் வண்டி போல் இருந்த மூன்று சக்கர பால்வண்டி கைப்பிடியைத் தள்ளிக் கொண்டு ஒரு வயதான பெண்மணி நின்றாள்.

“தம்பி.”

“என்னம்மா?”

“புதுசா குடிவந்திருக்கீங்க போல… உங்க வீட்டுக்கு நாளைலேர்ந்து பால் போடலாமாப்பா…” என்றார் புன்னகையுடன்.

“உங்களுக்கு எத்தனை பிள்ளைங்கம்மா?” என்றேன்.

கேள்வி அவருக்கு ஆச்சர்யமாக இருந்திருக்கும். சற்று நேரம் உற்றுப் பார்த்தார்.

“அந்தக் கொடுப்பினை எனக்குக் கிடைக்கலேப்பா” என்றார்.

“நாளையிலேர்ந்து எங்க வீட்டுக்குப் பால் போடுங்கம்மா” என்று சொல்லி விட்டுப் படியேறினேன்.

– ஆகஸ்ட் 2012, கல்கி, மூன்றாம் பரிசுக் கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *