பாறைக்குள் பசுஞ்சோலை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்
கதைப்பதிவு: May 6, 2012
பார்வையிட்டோர்: 6,428 
 
 

ராமகிருஷ்ணனால் நம்பவே முடியவில்லை. ‘நம்ம அப்பாவா இப்படி ஒரே வார்த்தையில் ஓ.கே.சொன்னது?”

சமையலறைக்குள் நுழைந்து அம்மாவிடம் கேட்டான், ‘ஏம்மா…அப்பாவுக்கு உடம்பு..கிடம்பு சரியில்லையா?” என்று.

‘ஏன்டா இப்படிக் கேட்கறே?”

‘இல்லை…சினிமாவுக்குப் போக எப்ப பர்மிசன் கேட்டாலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பாரு….ஆயிரத்தெட்டு சந்கேங்களைக் கௌப்புவாரு…கடைசிலே ‘வேண்டாம்”ன்னோ…இல்லை..’இன்னிக்கே போகணும்னு என்ன?…அடுத்த வாரம் போனாக் கெடக்கு போடா…அதுக்குள்ளார அந்தப் படம் ஓடிப் போயிடாது!” என்றோ…சொல்பவர் இன்னிக்குக் கேட்டதும் மறு வார்த்தை கூடப் பேசாமல் உடனே ‘சரி”ன்னுட்டாரே அதான் கேட்டேன் உடம்பு கிடம்பு சரியில்லையோன்னு?”

‘டேய்…அவர்தான் சரின்னுட்டாரில்ல?…அதான் சாக்குன்னு ‘டக்”குன்னு கௌம்புவியா…அதை விட்டுடு…இங்க வந்து நின்னு…”

‘அம்மா…நீ சொல்றதும் சரிதாம்மா…திடீர்னு மனசு மாறி வேண்டாம்னு சொன்னாலும் சொல்லிடுவார்” சிரித்தபடி சொல்லி விட்டு காத்திருக்கும் நண்பர்களைத் தேடிப் பறந்தான் அவன்.

ராமகிருஷ்ணனின் தந்தை சுதர்ஸன் உத்தியோகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர்தான்…ஆனால் கெடுபிடியில் ஒரு மிலிட்டரி ஆபீஸர். நேரப் பயன்பாட்டில் ஒரு நேர்த்தி, உடை உடுத்துதலில் ஒரு கண்ணியம், பேச்சு நடையில் ஒரு பக்குவம், பழக்க வழக்கங்களில் ஒரு பண்பாடு, என்று ஒரு விதக் கட்டுக்கோப்போடு தான் வாழ்வது மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரையும், அவ்வழியிலேயே இட்டுச் செல்ல அவருக்கு உதவுவது அவரது உருட்டலும்….மிரட்டலும்…அதட்டலும்…அதிகாரமும்தான்.

தான் ஒரு கல்லூரி மாணவனாயிருந்த போதும்…ஒரு பள்ளி மாணவனைப் போல் தந்தைக்கு அஞ்சி….அடங்கியே கிடந்த ராமகிருஷ்ணனின் அதிகபட்ச தைரியம் ‘சினிமாவிற்கு” என்றே காரணம் சொல்லி தந்தையிடம் அனுமதி கேட்பதுதான்.

ஆரம்பத்தில் அனுமதி மறுத்த சுதர்ஸன், அதுவே அவன் திருட்டுத்தனமாய் படம் பார்க்கச் செல்வதற்கான காரணமாகிவிட, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாய், ‘அட..சினிமாவுக்குப் போறேன்னு என்கிட்டக் கேட்டா நான் என்ன வேண்டாம்ன்னா சொல்லப் போறேன்?…கேட்டுட்டுப் போக வேண்டியதுதானே?” என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டார்.

இரவு ஒன்பதரை மணியாகியும் சினிமாவிற்குச் சென்ற ராமகிருஷ்ணன் திரும்பாததால் மனைவியிடம் தன் கோபத்தைக் கொட்டினார் சுதர்ஸன், ‘இதுக்குத்தான்…இதுக்குத்தான்..நான் அனுமதி குடுக்கறதேயில்லை…அட..படத்துக்குப் போனோமா…வந்தோமா..ன்னு இல்லாம பசங்களோட சேர்ந்திட்டு எங்காவது ஊர் சுற்றப் போயிருப்பான்!”

பதினோரு மணிவாக்கில் நிதானமாய் வந்து சேர்ந்தவனிடம், வந்ததும் வராததுமாய் கடுப்படித்தார் சுதர்ஸன், ‘ஏண்டா…ஒன்பது மணிக்குப் படம் முடிஞ்சிருந்தாலும்…ஒரு ஒன்பதரை…ஒன்பதே முக்காலுக்கு வீட்டுக்கு வந்திருக்கனும்….இப்ப மணி என்ன?…பதினொண்ணு…இந்த ராத்திரி நேரத்துல எங்கடா போய் ஊரச் சுத்திட்டு வர்றே?”

‘அது…வந்துப்பா….நம்ம..கார்த்தி…இருக்கானில்ல?…அவன்தான்….’அப்படியே… டிபன் சாப்பிட்டுட்டு போய்டுவோம்டா”ன்னு சொல்லி..ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான்!”

‘ஓ…தொரை வெளியிலேயே சாப்பிட்டுட்டும் வந்திட்டாரா?…ஏண்டா…உனக்கு மண்டைல மூளை கீளை இருக்கா?…இல்லையா?…இங்க உனக்குன்னு உங்கம்மா உப்புமா செஞ்சு வெச்சிருக்கா…அதை என்ன பண்றது?…கொண்டு போய்க் கீழே கொட்டறதா?…ஹூம்…ரவை என்ன விலை விக்குதுன்னு தெரியுமா உனக்கு?…க்கும்…அதெல்லாம் உனக்கெங்கே தெரியப் போகுது?”

சினிமாவிற்குப் போய் வந்த சந்தோஷமே வற்றிப் போய் விட, தன் அறையை நோக்கித் திரும்பியவனைப் பார்த்து உச்சஸ்தாயில் கத்தினார் சுதர்ஸன்.

‘ஏண்டா…நான் இங்க பேசிட்டிருக்கேன்…நீ பாட்டுக்குப் போறியே….என்ன நினைச்சிட்டிருக்க உம்மனசுல?” என்றவர் அதே வேகத்தில் மனைவி பக்கம் திரும்பி, ‘ஏய்…பங்கஜம்….எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த உப்புமாவைக் கீழே கொட்டிடாதே…அப்படியே மூடி வை…அதைத்தான் இவன் காலைல சாப்பிடணும்…அப்பவும் மிச்சமிருந்தா…அதையே டிபன்லேயும் போட்டுக் குடு…காலேஜூக்கும் கொண்டு போகட்டும்…”

‘அய்யய்ய…வெங்காயம் போட்டிருக்குதுங்க….கெட்டுடும்!…” அவள் மறுக்க,

‘பரவாயில்லை குடுத்து விடு” இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டு அவர் நகர,

சோகமான முகத்துடன் தன் அறைக்குள் சென்றான் ராமகிருஷ்ணன்.

மறுநாள், காலை ஏழு மணியிருக்கும்,

பாத்ரூம் சென்று விட்டுத் திரும்பிய ராமகிருஷ்ணன் சமையலறைக்குள் பேச்சுக் குரல் கேட்க, எட்டிப் பார்த்தான். அப்பா வழக்கம் போல் பளீரென்ற வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பள்ளிக்குப் புறப்படத் தயாராகியிருந்தார். அம்மா அவருக்கு டிபன் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

‘பங்கஜம்…அந்த உப்புமாவை என்ன செஞ்செ?” கேட்டார்.

‘ம்…நீங்கதானே சொன்னீங்க…’அப்படியே மூடி வை”ன்னு…வைச்சிருக்கேன்!”

‘எங்கே….கொண்டு வா பார்ப்போம்!”

தன் மேல் நம்பிக்கை இல்லாமல்….எங்கே தான் அதைக் கீழே கொட்டியிருப்பேனோன்னு சந்தேகப்பட்டுத்தான் அவர் அதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டவளாய் அவசர அவசரமாய் அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து அவர் முன் ‘வெடுக்”கென்று வைத்தாள்.

ஆனால் சுதர்ஸனமோ நிதானமாய் அந்தப் பாத்திரத்தைத் திறந்து அந்தப் பழைய உப்புமாவைத் தன் பிளேட்டில் கொட்ட,

‘என்னங்க…அவன்தான் அதைச் சாப்பிடணும்னு சொன்னீங்க…இப்ப நீங்க….?”

‘பாவம்டி…பழசெல்லாம் சாப்பிட்டு அவனுக்குப் பழக்கமில்லைடி…ஒரு மாதிரி அருவருப்புப் படுவான்”

மனதிற்குள் சிரித்துக் கொண்ட பங்கஜம். ‘அப்படியா?…அப்பக் காலேஜுக்கும் அதையே குடுத்தனுப்பச் சொன்னீங்களே…அது?” நக்கலாய்க் கேட்டாள்.

‘சேச்சே….வேண்டாம்..வேண்டாம்….மதியமாகும் போது ஒரு மாதிரி நாற்றமெடுக்க ஆரம்பிச்சிடும்…கூட உட்கார்ந்து சாப்பிடற மத்த பசங்க இவனைக் கேவலமாப் பார்ப்பாங்க”

‘அப்ப மிச்சமாயிட்டா….கீழே கொட்டிடவா?”

‘ம்ஹூம்…என்னோட டிபன்பாக்ஸ்ல போட்டுடு…நானே கொண்டு போய் சாப்பிட்டுடறேன்….அங்க நான் தனியாத்தானே சாப்பிடறேன்…யாருக்குத் தெரியப் போகுது?”

மறைவில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் நெகிழ்ந்து போனான்.

‘அப்பா…உங்களைப் பாறைன்னு நினைச்சேன்…அந்தப் பாறைக்குள்ளும் ஒரு பசுஞ்சோலை இருக்கும்னு இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன்”

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *