கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 26, 2023
பார்வையிட்டோர்: 2,785 
 
 

பச்சை வைப்பர் இழைக்கண்ணாடிகள் இருபக்கமும் கூரைகளாய்  வளைந்து இறங்கிய கூடாரம்.  மழைத்துளிகள்  வளைந்த விளிம்புகளில் சிறு பிள்ளைகள் சறுக்கி விழுவது போல விழுந்து வழிந்தன. வெளிமுற்றத்தின் குடை நிழலொன்றில் மழைக்கு ஒதுங்கியபடி அந்தக் கூடாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் தரணிகா. அவள் வந்து பத்து நிமிடங்கள் ஆகியிருந்தன, கீதாஞ்சலி இன்னும் வரவில்லை. மழையின் சாரல்கள் அவளது பயணத்தில் இடையூறு தந்திருக்கக் கூடும் என நினைத்தாள். வானம் காலையில் வெயிலின் பளிச்சிடலோடு சிறிது தகதகப்போடு தான் இருந்தது. நாலைந்து நிமிடங்களுக்குள் திடுமென்று சூழ்ந்த இருண்மையின் நெருக்கத்தை எப்படி விலக்குவது?. அதற்குப் பிறகு சூழ்ந்த சாம்பல் நிறம் சூழலை ஒரு இனிய அமைதிக்குள் தள்ளியது. சிறிய மெல்லிய ரீங்காரத்தில் மழை தூறிப் பெரிதாகி எதிர்பார்க்காத வகையில் இரைந்து கொண்டிருந்தது. அந்தப் பச்சைக் கூடாரத்தின் கீழ் ஒன்றை ஒன்று பார்த்தபடி கல் திண்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. நடுவில் கல் மேசைகள் . மேசைக்கு முன்பிருந்த திண்டுகளில் அமர்ந்தபடி அங்கு வந்தவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தார்கள். உள்ளே ஏதோ பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது போல என நினைத்துக் கொண்டாள். சற்றைக்குள் அவர்களும் கலைந்து உள்ளே போய் விட்டார்கள். அவ்விடம் வெறிச்சோடியது.மழைத் தூறல்கள் வடிந்து   உதிர்ந்தன. காற்று ஈரம் உலர்ந்து வீசியது.

தரணிகா குடை நிழலை விட்டு வெளியே வந்தாள். சுற்றிலும் தெரிந்த பனைகளின் உச்சிகளில் அலங்கார லாந்தர்கள் தொங்கிக்  கொண்டிருந்தன. இரவுகளில் அந்த விளக்குகள் எந்த நிறத்தில் ஒளிரக் கூடும் என அறிய வேண்டும் போலிருந்தது. வெளிகளை  அலைந்து  சுழன்ற  பார்வை இப்போது அந்தப் பச்சைக் கூடாரத்தினுள் திரும்பியது. உள் கூரை முகடுகளில்  தடித்த கயிறுகளால் சுற்றப்பட்ட சக்கரங்கள் நான்கு சங்கிலிகளால் பிணைக்கப்பட்டிருக்க, மையத்தில் மின்னொளிர் விளக்குப் பொருத்தப்பட்டிருந்தது. அந்த வண்டிச் சக்கர முனைகளில் பொருத்தப்பட்டிருந்த ஐந்து கயிற்றுத் துணுக்குகளிலும் மின்குமிழ் பொருத்தும் வகையிலான வால்வுகள் பொருத்தப்பட்டிருந்தன.

அந்த இடத்தின் இயற்கையுடன் இணைந்த அழகை வியந்து ரசித்தவாறே உள்ளே நுழைந்து மழையின் ஈரக்குளிர்ச்சி உறைந்திருந்த கல் திண்டொன்றில் அமர்ந்து வாட்ஸப்பைத் திறந்தாள்.

“பத்து மணிக்கு சந்திக்கலாம்”  கீதாஞ்சலியின் செய்தியில் கூட ஒரு புன்முறுவல் இருந்தது. தரணிகா நேரத்தைப் பார்த்தாள். 

பத்து ஒன்பது.

முகநூலைத் திறக்கலாம் என நினைத்தபோது சற்றுத் தூரத்தில் நீல நிறத்தில் ஒரு ‘வெகா’ வருவது தெரிந்தது. கரு நீல ஹெல்மெட்டோடு ஊதா நிறத்தில் மழைக்கவசம் அணிந்த அந்தப் பெண் ‘வெகா’வை  நிறுத்தினாள்.  

சுற்றுமுற்றும் பார்வையைச் சுழற்றியபின் தனித்திருந்த தரணிகாவை  நோக்கி வந்தாள். மழைக் கவசத்தில்  வீழ்ந்திருந்த நீர்த்துளிகள் இலேசான சிலுசிலுப்பின் அசைவை ஏற்படுத்தின. 

‘சொறி, கன நேரம் காக்க வச்சிட்டன் போல,”  சொல்லிக்கொண்டே  முன்னால்அமர்ந்தாள்.

தரணிகா புன்னகைத்தாள். 

“நான் இப்ப தான் உங்களை முதன் முதல் பாக்கிறேன் எண்டு நினைக்கிறன்  …”

” ஓ, வெரி சொறி, உங்களை எனக்குத் தெரியும். அதுக்காக என்னை   உங்களுக்குத் தெரியும் எண்டு நான் நினைச்சிருக்கக் கூடாது தான்.

ஐ ஆம் கீதாஞ்சலி.”

சற்றே எழுந்து கைகளை முன்னால் நீட்டிக் குலுக்கினாள்.

“பரவாயில்லை. உங்களுக்கு என்னைத் தெரிஞ்சிருக்குது…” சொன்ன போது தரணிகாவின் உதடுகளில் வெறும் புன்னகை ஒன்று எழுந்து மறைந்தது.

”உங்களைத் தெரியாமலா…” உற்சாகமாய்ப் பேசத் தொடங்கிய கீதாஞ்சலி சொற்களை மெல்ல விழுங்கினாள். சிறு குரங்கொன்று  கூடாரத்தின் கூரையில் தொங்கிக் கொண்டிருந்த வண்டிச் சக்கரங்களைப் பிடித்துத் தொங்கி அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தது. 

“என்ன மழையப்பா, வானமே பிச்சுக் கொட்டுற மாதிரியெல்லோ பொழிஞ்சு தள்ளுது,”  கீதாஞ்சலி மழைக் கோர்ட்டில் படிந்திருந்த மழைத்துளிகளை உதறினாள்.

“ம்ம், எதிர்பார்க்கவே இல்லைத்தான், இப்பிடியொரு மழையை…”

சற்று நேரம் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தபடியிருந்தார்கள். மௌனம் கனத்திருந்த அந்த நிமிடத்தைக் குலைத்தபடி தரணிகா கேட்டாள்.  

“சொல்லுங்கோ, என்ன விஷயத்தை நீங்கள் என்னட்டை அறிய வேணும்?” குரங்குக் குட்டி இப்போது சக்கரத்தில் தலைகீழாகத் தொங்கியது.

கீதாஞ்சலி ஒன்றும் பேசாமலே அவளை ஒரு நிமிடம் பார்த்தாள். பின் நிதானித்து ஒற்றை ஒற்றையாய் சொற்களை உச்சரித்துக் கேட்டாள்.

“டிவோர்ஸ் பண்ணுற அளவுக்கு அப்பிடி என்ன பிரச்சினை?”

தரணிகா சட்டென்று சிரித்தாள். சக்கரத்தில் தொங்கிய குரங்குக்குட்டி  திடீரென்று உந்தப்பட்டு அவர்களைப் பார்த்தது. பின் விருட்டென்று அப்பால் போயிற்று.

“இதைக் கேக்கவா வந்தீங்கள்…?” வலிந்து வரவழைத்த புன்னகை அவள் விழிகளில் படபடத்தது.

கீதாஞ்சலி அவளது பதில்களில் உன்னிப்பாக எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.

“நீங்கள் ரிப்போட்டர் தானை, இதெல்லாமுமா உங்கட நியூஸ் பேப்பருக்குக்   குடுப்பீங்கள்?”

“இல்லையில்லை, இது என்ரை பேர்சனல் இன்றெஸ்ட்டிலை கேட்கிறன்”

கூரை விளிம்புகளைத் தாங்கியிருந்த மரத்தீராந்தியில் குரங்குக் குட் டி முன்னும், பின்னுமென அலையத் தொடங்கிற்று.

“ஏன், என்னிலை மட்டும் அவ்வளவு அக்கறை உங்களுக்கு? உலகத்தில எத்தனையோ பேர், எத்தனையோ கல்யாணம், எத்தனையோ டிவோர்ஸ்? என்னிலை மட்டும் அப்பிடியென்ன ஸ்பெஷல் அக்கறை?”

“ஏனெண்டால், நீங்கள் டிவோர்ஸ் பண்ணினவரைத் தான் நான் ‘மறீ’ பண்ணப் போறன்.”

கீதாஞ்சலி அவளைப் பார்த்தபடியே சொன்னாள்.   

தரணிகாவின் விழிகளில் பரவிய ஆச்சரியம் சற்றைக்குள் மலர்ந்து விரிந்தது,

“அட, பிறகென்ன, வாழ்த்துகள் ரெண்டு பேருக்கும்” 

கீதாஞ்சலி எதுவும் பேசவில்லை. அவளையே கூர்ந்து பார்த்தபடியிருந்தாள். தரணிகாவின்  மனதில் என்ன இருக்கிறதென்பது அவள் பேசும்வரைக்கும் புரியவே புரியாது போலிருந்தது.  

“நீங்கள் என்ரை டிவோர்ஸுக்குக் காரணம் அறிஞ்சிட்டுத் தான் அவரைக் கட்டுறதுக்கு முடிவு எடுக்கப் போறீங்களோ, இல்லாட்டி முடிவு எடுத்த பிறகு சஞ்சலப்பட்டு என்னட்ட வந்திருக்கிறீங்களோ?”

“நான் அவரை மறி பண்ண முடிவெடுத்திட்டன், எனக்கு அவரை நல்லாத் தெரியும். அப்பிடி அவரை டிவோர்ஸ் பண்ணுற அளவுக்கு என்ன நடந்ததெண்டு அறிய வேணும் போலை கிடந்தது, அது தான்…” கீதாஞ்சலி வார்த்தைகளை இழுத்தாள்.

“அவனிலை அப்பிடி ஒரு பிழையுமில்லை” தரணிகா மெல்லப் புன்னகைத்தாள்

“என்ன நடந்ததெண்டா, சாதாரணமா அப்பிடி சொல்லுறதுக்கு எதுவுமேயில்லை, ஆனா என்ன நடந்ததெண்டதுக்கு ஒரு பதில் இருக்கத் தானை வேணும்”

“எனக்குத் தெரிஞ்சு ரெண்டு பேரும் விரும்பித் தானை கட்டினீங்கள்”

“விரும்பிக் கட்டினதெண்டதே உண்மையோவெண்டு எனக்கிப்ப சந்தேகமாக் கிடக்குது. அவன் என்னை விரும்பிறான்  எண்டு சொல்லேக்க எனக்கும் வேற தெரிவு ஒண்டும் இருக்கேல்லைத் தானை…”

“மூண்டு வருசத்துக்குப் பிறகு இப்ப என்ன திடீரெண்டு?”

“எதுவும் திடீரெண்டு நடக்கிறதில்லை. எல்லாமே உள்ளுக்குள்ளையே அதுக்கான ஆயத்தங்கள் நடந்து கொண்டு தானிருக்கும். வெளீல  தெரியாட்டிலும் உள்ளை எவ்வளவு இடைவெளி இருந்திருந்தால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்திருப்பம்…”

“இடைவெளியெண்டு என்னத்தை சொல்லுறீங்கள்…?”

“இடைவெளியெண்டு… ம்ம்…. ஒரு உதாரணம் சொல்லுறனே, அந்த மூண்டு வருசத்திலையும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் எனக்குப் பின்னாலை அவனிண்டை கண்கள் சுழண்டு கொண்டே இருந்தது எனக்குத் தெரியும்”

“அப்ப, சந்தேகப் பிறவி எண்ணுறீங்களோ?”

“சந்தேகப்பிறவி…?  ஊஹும்… அப்பிடியில்லை, ஆனா, என்னெண்டு சொல்லுறது?” அவளது முகத்தில் ஒரு சஞ்சலம் அசைந்தது.

“உங்களைக் கோட்ஸிலையிருந்து அவன் எடுக்கேக்குள்ள ஒரு பிரஸ் ரிப்போர்ட்டரா நான் அங்க வந்தனான். அப்ப அவன் உங்களிலை காட்டின கரிசனையும், அக்கறையும் என்னை ஒரு விதத்தில இம்ப்ரெஸ் பண்ணினது. உங்களுக்கு அவன் வாழ்க்கை தரக் கூடும் எண்டு நான் அப்பவே நினைச்சனான். அது உண்மையும் ஆச்சுது…”

“ஆனா, இப்பிடியொரு சந்திப்பு எங்களுக்கிடையிலை வருமெண்டு நீங்கள் நினைச்சேயிருக்க மாட்டீங்கள், அப்பிடித்தானே?”  காந்தள் மலரின் சிவப்பு அவள் வார்த்தைகளில் படிந்தது.  

“ம்ம். உண்மை தான்….” பெருமூச்சு காற்றில் இறங்கியது.

“நான் கூட இப்பிடி ஆகுமென்று நினைக்கேல்லை, டிவோர்ஸ் பண்ணுற ஒவ்வொருத்தரும் தங்கட கல்யாண நாளிலை தாங்கள் டிவோர்ஸ் பண்ணுவம் எண்டு நினைச்சோ கல்யாணம் பண்ணீனம்” 

“இல்லைத் தான். உங்கட நிலைமை, நான் கனவிலையும் நினைச்சுப் பாராதது….”

“இப்பிடி ஆகும் எண்டு நினைச்சிருந்தால் அப்பவே, அவனை ரிஜெக்ட் பண்ணியிருக்கலாம், எல்லாம் அனுபவம் வந்து சொல்லித் தர வேண்டியிருக்கு. சில வேளைகளிலை வாழ்க்கை மேலோட்டமா வாழுற ஆக்களுக்கு நல்லாயிருக்கும். ஒவ்வொண்டையும் நுணுக்கமா ஆராய்ஞ்சு பாக்க வெளிக்கிட்டால் சீ.. எண்டு போகும்”

“சீ எண்டு போற அளவுக்கு, அப்பிடியென்ன அருவெறுப்பு?”

“அதுக்கு, உங்களை மாதிரி வெறுமனே ரிப்போர்ட்டர் வேலையிலை இருந்தால் காணாது. நீங்கள் அப்பிடி, அப்பிடியே என்ரை வாழ்க்கையை வாழ்ந்து பாக்கோணும்”

“அப்பிடியெண்டா ஒரு போராளியாய் நான் இருந்திருக்க வேணும் எண்ணுறீங்களோ…?”

“போராளியாய் இருக்க வேண்டியதில்லை, முன்னாள் போராளியாய் இருந்தால் தான் அது உங்களுக்கு விளங்கும்”

“போராளிகளா இருக்கேக்க உச்சாணிக் கொம்பிலே ஏத்தி விட்டிட்டு யுத்தக் கைதி ஆனவுடனை கீழை தள்ளி விட்டது பற்றிக் கதைக்கிறீங்களோ…?” 

“இதுகளைப் பற்றிக் கதைக்க என்ன கிடக்கு? அது தான் யதார்த்தம். அது தான் நடந்த உண்மை. அப்ப நாங்கள் துவக்கு கொண்டு திரிஞ்ச நேரத்தில சனம் தந்த மரியாதைக்கும் அதுக்குப் பிறகு வெளீல வரேக்க பாத்த அனுதாப, இகழ்ச்சிப் பார்வைக்கும் தான் எவ்வளவு வித்தியாசம். இதை ஜீரணிக்க ஏலாமல் தான் எத்தனையோ போராளிகள் மனம் குன்றிக் கிடக்குதுகள். அது ஒரு பக்கம். அதெல்லாத்தையும் நான் எதிர்பார்த்ததாலை அதை நினைச்சு  வருத்தப்படுறதுக்கெல்லாம் எனக்கு நேரமில்லை. நான் சொல்ல வாறது வேறை, மரீட் லைஃப் எண்ணுறதுக்கும், போராளி லைஃப்  எண்ணுறதுக்கும் புள்ளி போட்டு இணைச்சு வச்சிருக்கிறது பற்றி”

“நான் அறிஞ்ச வரைக்கும், அவன் பெண்களை மதிக்கிறவன், அக்கறை காட்டுறவன், ஒரு இடத்தில கூட அவன் பெண்களை அவமானப்படுத்தி நான் பாத்ததில்லை.”

“அவமானமெண்டா என்னவெண்ணுறது ஆளுக்கு ஆள் வேறுபடும்.. சாதாரணமான ஒரு பொம்பிளைக்கு அவன் ஒரு நல்ல ஹஸ்பண்டா இருப்பான்”

“ஏன் உங்களுக்கென்ன?”

“எனக்குப் பிடிக்குதில்ல”

“என்ன பிடிக்குதில்ல? அவனைப் பிடிக்குதில்லையா? இல்லாட்டி மரீட் லைஃபிலையுள்ள   செக்ஸுவல் ரிலேசன்ஷிப் பிடிக்குதில்லையா?”

“செக்ஸுவல் ரிலேஷன்சிப் வேண்டாமெண்டா நான் கலியாணம் கட்டியிருக்கத் தேவையில்லை”

“அப்ப…”

“நான் ஒரு போராளி, கைது செய்யப்பட்டு நீண்ட நாளா தடுப்புச் சிறையிலே இருந்தவள்….” 

“அதெல்லாம் தெரிஞ்ச கதை தானே…?”

“அதெல்லாம் தெரிஞ்சு கொண்டவரை கலியாணம் கட்டுறது மோசமான சித்திரவதை”

“சித்திரவதையெண்டா…?”

“தடுப்புச் சிறையிலை எனக்கு என்ன நடந்திருக்குமெண்ட கேள்வி…?’

“ஏன், அவன் அதெல்லாம் கேட்டவனோ…?”

“உள்ளுக்குள்ளை உள்ள கேள்வி, கேள்வியாத் தான் வர வேணுமெண்டதில்லையே…?”

“விளங்கேல்லை”

“அவனிண்டை கண்கள் எனக்குப் பின்னாலை என்ரை முதுகைத் துளைக்கிற மாதிரிப் பார்க்கிற பார்வையில எனக்கு அது தெரியுது” 

“அது எப்பிடி, அப்பிடித்தான் நினைக்கிறான் எண்டு தெரியுது?”

“அது தான் நீங்கள் கேட்ட மாதிரி, செக்ஸுவல் ரிலேஷன்ஷிப்புக்குப் போக முதல் அன்பா அணைச்சுக் கொள்ளுவான். அந்த நேரம் எல்லாம் மறந்த நிம்மதி எனக்குள்ளை வாற  நேரம் பாத்து, 

‘நோகுதோ, நான் இப்பிடிப் பிடிச்சால் பிரச்சினை இல்லையோ?”

‘இஞ்சை…. நோவில்லையோ…?’

‘அங்கை தொட்டால் ஏதும் ப்ரோப்ளமோ?’

எண்டு அதிகப்படியா வழியுற அந்த வார்த்தைகளுக்க என்ன கிடக்குது?”

“அதை அப்பிடியான கேள்வி எண்டு ஏன் நினைக்கிறீங்கள். அளவுக்கதிகமான  பாசமாயும் இருக்கலாம் தானை?”

“அளவுக்கதிகமான  பாசமெண்டு நினைச்சா அது வெளி வேசமெண்டு தான் நான் சொல்லுவன். அப்பிடி அவன் கேக்கிற நேரம் எனக்கு உடலெல்லாம் கூசுற மாதிரிக் கிடக்கும். அது உடம்பு வலியில்லை. மனசைக் குத்திக் கிழிக்கிற வலி”

“சில வேளை உங்களுக்கு அந்த மாதிரி நடந்திருந்தா, உங்களுக்கு கஷ்டம் தரக் கூடாதெண்டு அவன் நினைச்சிருக்கலாம் தானை.”

“சில வேளை அப்பிடி நடந்திருந்தா,… சில வேளை அப்பிடி நடந்திருந்தா… அப்பிடித்தான் அவங்கள் நடந்தவங்கள் எண்டு காட்ட வேணும் எண்டது தான் இஞ்சை உள்ள தமிழ்த் தேசியவாதிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் விருப்பம் போல கிடக்கு…”

“அப்ப, அப்பிடி நடக்கேல்லை எண்ணுறீங்களோ…?”

“நான் அவங்களைத் தூய்மையானவங்களா ஒருக்காலும் சொல்லேல்லை, அவங்கள் மோசமானவங்களும்  இருந்தாங்கள், நல்லவங்களும் இருந்தாங்கள், அதை மாதிரி, வதை பட்ட பெண் கைதிகள்  இல்லாமலில்லை. சில இடைவெளிகளுக்குள்ளாலையும், பெரிய கைகள் தலையீட்டாலையும், நல்லவங்களிண்டை பார்வை பட்டதிலையும் வெளீல வந்த கைதிகளும் இருக்கீனை, அது, அவரவர் விதியோ, இல்லாட்டி, புத்திசாலித்தனம், தந்திரம் எண்டு எதை வேணுமெண்டாலும் சொல்லிக் கொள்ளலாம். இதுக்குள்ளை நீ எந்த வகையெண்டு தயவு செய்து என்னைக் கேக்க வேண்டாம். கைது செய்யப்பட்டு தடுப்பு முகாமுக்குள்ளை அல்லல்பட்ட போராளிப் பெண்களிண்டை ஒரு பிரதிநிதி தான் நான். நான் சீரழிக்கப்பட்டிருக்கலாம், இல்லாட்டி போன மாதிரியே திரும்பி வந்திருக்கலாம். ஆனா, அந்தப் பார்வை, முதுகைத் துளைக்கிற  அந்தப் பார்வை ஜீரணிக்க முடியாமலிருக்குது என்னாலை”

தீராந்தியில் தாறும் மாறுமாய்த் தாவிக் கொண்டிருந்த குரங்குக் குட்டி இப்போது சலித்துப் போய் வெளியே மரத்தில்தாவியது.

“என்னைப் பொறுத்தவரைக்கும், அவன் உங்களிலை அதிகப்படி அக்கறை காட்டினவன். தான் எவ்வளவு அக்கறை காட்டியும் தன்னை நீங்கள் புரிஞ்சு கொள்ளேல்லை எண்டு சொன்னவன்”

“புரிஞ்சு கொள்ளாதது ஆர், எண்ணுறது நீங்கள் நல்லா யோசிச்சாத் தெரியும். ஒரு காலத்திலை, போராட்டம், போராட்டம் எண்டு அதுக்காகவே சகலத்தையும் குடுத்து, கடைசில பயங்கரமான தோல்வியோட நிக்கிற வலி, அதுக்குப் பிறகான வாழ்க்கை, அதை ஏற்க முடியாத அவமானம், எல்லாத்துக்குள்ளேயிருந்தும் வெளீலை வந்து இழந்து போன வாழ்வை இனியாவது வாழுவம் , சாதாரண எளிய பெண்ணுக்கு கிடைக்கிற  வாழ்க்கையாவது கிடைக்கட்டும் எண்டு எல்லா இறுக்கங்களையும் கரைச்சு இளக ஆரம்பிச்சால் அந்த நேரம் பாத்து, ‘ அவங்கள் சரியாக்  கஷ்டப்படுத்தினவங்களோ?, ‘நல்லா வருத்திப் போட்டாங்கள் போல’, நான் மெல்லமாத் தொடட்டுமோ’ எண்ட விசர்த்தனமான கதைகள். என்ன தான் நடந்தா என்ன? நடக்காட்டி என்ன? புருசனோட ஒரு பொம்பிளை சேர நினைக்கேக்க வேற அவமானங்களைப் பற்றிப் பேசுறது அவளுக்கு இழைக்கிற துரோகம் எண்டு அவனுக்குத் தெரியாதோ?”

“தமிழருக்கு இழைக்கப்படுற அநீதியாலை அவன் கொதிச்சுப் போய் இருக்கிறான்”

“இல்ல, தெரியாமல் தான் கேட்கிறன், இப்ப இவ்வளவு கொதிச்சுப் போய் இருக்கிறவர் அப்ப நாங்கள் போராடின நேரம் எங்கை போனவர்? வந்திருக்கலாமே எங்களோட போராட…”

“அதில்லை, அவர் சொன்னதை நான் சொன்னன்”

“அவர்…. ஓ, நீங்கள் அவனை  ரீமேரேஜ் பண்ணப் போறீங்கள், என்ன?”

“எனக்கு அவனைத் தெரியும், உங்களையும் தெரியும். ரெண்டு பேருக்குமிடையில என்ன பிரச்சினை எண்டு அறிய நினைச்சன்”

“உங்களுக்கு அப்பிடி ஒரு பிரச்சினை வரவே வராது, அவன் உங்களுக்கு நல்ல ஹஸ்பண்டா இருப்பான்” தரணிகா இறுக்கம் தளர்ந்து புன்னகைத்தாள்.

“ஆனா, எனக்கு என்னைத் தொடர்ந்து வந்து கொண்டேயிருந்த அந்தப் பார்வை பிடிக்கேல்லை. அப்பிடி ஒரு பார்வை என்ரை முதுகுக்குப் பின்னாலை உறுத்திக் கொண்டிருக்கத் தக்க படி அந்த உறவைக் கொண்டு இழுக்க என்னாலை முடியேல்லை. அதை விடத் தனியாவே இருந்திடலாம்.”

“ஆனா, உங்கட எதிர்காலம்…?”

“அது எப்பவோ போச்சுது, பொது வாழ்விலை ஈடுபட வேணுமெண்டு எப்ப நினைக்கிறமோ, அப்பவே எங்கட தனிப்பட்ட விருப்பு, வெறுப்பிலை   இருந்து வெளீல வந்திட வேணும்., நான் வந்திட்டன்.  ஆனா, பொது வாழ்விலையிருந்து ஒரு காலமும் எங்கட சொந்த வாழ்க்கைக்குத் திரும்ப ஏலாது, அப்பிடியொரு பார்வை, அவனிட்டை இருந்து மட்டுமில்ல, வேறை எங்கை, எங்கயோவிருந்தெல்லாம் வருது. அந்தப் பார்வை என்னை வாழ விடாது. அவனுக்கு என்ரை வாழ்த்துக்களை சொல்லி விடுங்கோ. இன்னும் ஒண்டை நான் சொன்னதாய் சொல்லுங்கோ. ஒரு பெண் ‘ரேப்’ பண்ணப்படுறதை விடப் பயங்கர வலி, அதுக்காகப் புருஷன் நடந்து கொள்ளுற விதம், அது ஆத்திரம், ஆவேசமாய் இருந்தாலும் சரி,அனுதாபம், அவமானம் எதுவெண்டாலும் சரி, எல்லாம் ஒண்டு தான்….”

வெளியே உக்கிரமான இருள் படரத் தொடங்கியது. மழையின் சீற்றத்துளிகள் வீச்சுடன் கீழிறங்கின. கூடாரத்துக்குள்ளிருந்து மரத்தில் தாவிய குரங்குக் குட்டி கண்களில் சிக்கவேயில்லை.

– நன்றி: https://solvanam.com, Issue 275, ஜூலை 24, 2022

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *